New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்
Permalink  
 


தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்

தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்

தி.க.வும், வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

சுயமரியாதை இயக்கம் தொடங்கி திராவிடர்கழகம் வரை பெரியாரின் கொள்கைகளை தன் பாடல்வரிகளால் தமிழர்களை தட்டியெழுப்பியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரியார் வலியுறுத்திய ‘திராவிடர்’ எனும் அடையாளத்தை அவர் ஆதரித்து எழுதி வந்த போதிலும் ‘தமிழர்’ எனும் அடையாளத்தோடு புதிய கட்சி ஒன்றை தொடங்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களான அறிஞர் அண்ணா அவர்களும், பன்மொழிப்புலவர் அப்பாத்துரை அவர்களும் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

11.8.45இல் பேராயக்கட்சிக்கு பாடுபட்ட கவிஞர் நாமக்கல் இராமலிங்கனார் அவர்களுக்கு பேராயக்கட்சி சார்பாக ரூ10,000 பொற்கிழி வழங்கப்பட்டது. அப்போது நாமக்கல் கவிஞரைப் போலவே திராவிட இயக்கத்திற்குப் பாடுபட்டு வரும் கவிஞராகிய பாரதிதாசனுக்கும் பொற்கிழி வழங்கிடும் எண்ணம் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களுக்கும் ஏற்பட்டது.

அதன்படி 28.7.1946 ஆம் ஆண்டு அண்ணா அவர்களின் முயற்சியால் திராவிட இயக்கக் கவிஞனாகிய பாரதிதாசனுக்கு நிதியளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்துக் கட்சியினர் பங்கேற்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி நீதிக்கட்சியின் முன்னாள் தலைவரும் சென்னை மேயருமாகிய N.சிவராஜ், பொதுவுடைக்கட்சியைச் சேர்ந்த ப.சீவானந்தம், முன்னாள் நீதிக்கட்சியை சேர்ந்த கி.ஆ.பெ.விசுவநாதம், பேராயக்கட்சியை சார்ந்த செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அந்த விழாவில் பெரியார் மட்டும் திட்டமிட்டு கலந்து கொள்ள வில்லை. அதற்கான காரணத்தை அப்போது தன்னைச் சந்தித்த சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ஆசிரியர் சாரங்கபாணி என்பவரிடம் பெரியார் தெரிவித்துள்ளார். அப்போது “பாரதி தாசனுக்கு என்ன வந்தது? இரண்டுப் பாட்டுப் பாடிவிட்டால் புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. யாரை கேட்டுக்கிட்டு அண்ணாதுரை இப்படியெல்லாம் செய்யுறாரு?” என்று அவரிடம் புலம்பியிருக்கிறார். (1)

நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அறிஞர் அண்ணா அவர்களால் பாரதிதாசனுக்கு ரூ25000 பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து அன்றைய நாளேடுகள் வரலாறு காணாத வகையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியிட்டன.

அந்நிகழ்ச்சி முடிந்து தன்னிடம் பாரதிதாசன் கூறியதாக அண்ணா அவர்கள் 12.8.1968 அன்று மு.வரதராசனார் படத்திறப்பு விழா ஒன்றில் கூறியதை அப்படியே தருகிறோம். “பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுத்தான பிறகு குதிரை வண்டியிலேறி திருவல்லிக்கேணிக்கு தங்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது தந்தை பெரியாரிடத்தில் எனக்கும், பாரதிதாசனுக்கும் மனத்தாங்கல். அப்போது பாரதி தாசன் என்னிடம் சொன்னார். “நீ கொடுத்திருக்கிற இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாம் தமிழர்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம். நீயும் நானும் நடத்தலாமென்றும்” கூறினார். (2)

அடுத்து, திராவிட இயக்கத்தாரால் போற்றப்படும் அப்பாத் துரையார் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் தன்னிடமும் இதே கருத்தை பாரதிதாசன் கூறியதாக தெரிவித்துள்ளார். அண்ணா தனிக்கட்சி தொடங்கி விட்ட காலம். 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டிலே நாவலர் சோமசுந்தர பாரதியார் தி.மு.க. பெயரை மாற்றி தமிழர் முன்னேற்றக்கழகம் என்று பெயர் சூட்டும் படி வேண்டு கோள் விடுத்தார். பாரதி தாசனும் அக்கருத்தை ஆதரித்துப் பேசினார். அண்ணாவோ திராவிடத்திற்கு ஆதரவாகவே பேசினார். தி.மு.க.வில் தமிழுக்கென்று தனிக்குழுமம் அமைக்கும் கோரிக்கையையும் நிராகரித்தார். அப்போது பாரதிதாசன் என்னிடம் சொன்னார். “நமக்குத் தி.க.வும் வேண்டாம். தி.மு.கவும் வேண்டாம். தமிழர்க்கென்று தனிக்கழகம் ஒன்று அமைப்போம். நீ வந்து விடு!” என்று சொன்னார். (3)

பாரதிதாசன் உயிர் மூச்சாகிய தமிழ், தமிழர் எனும் அடையாளத்தோடு கட்சி தொடங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறாத காரணத்தாலோ என்னவோ தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் (1958க்குப் பிறகு) நாம்தமிழர் இயக்கம்- சி.பா.ஆதித்தனார், தமிழ்த் தேசியக் கட்சி- ஈ.வெ.கி.சம்பத், தமிழரசு கழகம்- ம.பொ.சிவஞானம் மற்றும் திராவிடர் கழகத்திற்கு “தமிழர் கழகம்” என்று பெயர் சூட்டுமாறு போராடிய அண்ணல் தங்கோ ஆகியோரோடும் நெருக்கமாக உறவு கொண்டிருந்தார்.

ஒரு முறை அண்ணல் தங்கோ அவர்கள் தனது நண்பராகிய இராம.தமிழ்ச்செல்வனை அழைத்துக் கொண்டு சென்னை தி.நகர் இராமன் சாலையில் உள்ள பாரதிதாசன் வீட்டிற்குச் சென்றார். அப்போது “வா! அண்ணலே” என்று கூறியபடி அவரை பாரதிதாசன் தழுவினார். அப்போது திடீரென எதிர்பாராமல் அண்ணல் தங்கோவை முத்தமிட்டார். அப்போது பாரதிதாசன் “அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்” என்று கூறியுள்ளார். (4)

திராவிட இயக்க அரசியலில் இருந்து கொண்டே தமிழ்த்தேசிய அரசியலை பாரதிதாசன் முன்னெடுத்ததையும், இறுதிக் காலத்தில் திராவிடமே தமிழ்த்தேசியத்திற்கு தடைகற்கள் என்பதை அவர் உணர்ந்ததையும் மேற்குறித்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழ்த்தேசியமே தமிழருக்கு விடுதலையை பெற்றுத் தரும் என்கிற புரட்சிக் கவிஞரின் தீர்க்கப் பார்வையை என்னவென்பது! ஆம்! இது தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காலம். இந்திய, திராவிட மாயை ஒழிந்து தமிழகத்தில் இனி தமிழ்த் தேசியமே வெற்றி பெறும் என்பதை புரட்சிக்கவிஞரின் நினைவு நாளில் உரத்துச் சொல்வோம்!

நன்றி:
1. இனியன் சம்பத் பதிப்பகம் வெளியிட்ட “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்.

2. முருகு இராசாங்கம் எழுதிய “பாரதிதாசன் பொற்கிழி” நூல்

3. கவிஞர் முருகு சுந்தரம் எழுதிய “பாரதி தாசன் ஒரு பல்கலைக் கழகம்” தொகுப்பு நூல்.

4. செ.அருள்செல்வன் எழுதிய “தூய தமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோ” நூல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்
Permalink  
 


திராவிடம் மறுத்த பாரதிதாசன்

திராவிடம் மறுத்த பாரதிதாசன்

திராவிடம் மறுத்த தமிழ்த்தேசியப் பாவலன்!

திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். அவர் தன்வாழ்நாளின் இறுதிப்பகுதியில் ஒரு தமிழ்த்தேசியராக வாழ்ந்து மறைந்தார் என்னும் உண்மையை திராவிட இயக்கங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அவர் தொடக்கத்தில் ஒரு ஆத்திகராக, ஒரு இந்தியராக வளர்ந்து வந்தார். தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு நாத்திகராக, ஒரு திராவிடராக அவர் தன்னை மாற்றிக் கொண்டார். இதனையே கிளிப்பிள்ளையைப் போல திரும்பத் திரும்ப கூறி வருவது திராவிட இயக்கத்தவரின் வாடிக்கை.

இது உண்மை தான். ஆனால் முழு உண்மையல்ல. பாரதி தாசன் ஒரு நாத்திகராக வாழ்ந்தார் என்பது உண்மை. அவர் திராவிடராக வாழ்ந்தார் என்பது பொய். அதற்கு நிறையச் சான்றுகள் நம்மால் தரமுடியும்.

1952இல் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் “சிறுத்தையே வெளியில் வா” என்ற புகழ்பெற்ற பாடல் உண்டு. அதன் இறுதிப்பகுதியில்
“வாழ்க இளைஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க திராவிட நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே…”
என்று பாடல் வரிகள் இருக்கும்.

1958இல் நாம் தமிழர் இயக்கம் தோற்றுவித்த ஆதித்தனார் அவர்கள் பாரதிதாசன் பாடல்களை “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். அதில் மேற்கண்ட பாடலில் உள்ள திராவிட நாடு என்பது ‘செந்தமிழ் நாடு’ என்று மாற்றப்பட்டது.
“வாழ்க இளைஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க செந்தமிழ் நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே…”

அதேபோல், குடும்ப விளக்கு முதற்பதிப்பு 1950 மார்ச்சில் வெளியிடப்பட்டது. அதில் ‘மக்கட்பேறு’ என்ற தலைப்பில் பாடல் பின் வருமாறு:
“அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்
தமிழ்தரும் தனித்தமிழ் பள்ளி சென்றே
அதோ வருகின்றாள் அங்கைச் சுவடியோடு
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சேரனை நீ யார் என்று கேட்டுப்
பதிலை எதிர் பார்த்திருந்தார்- அவனோ
தன்மார்பு காட்டி நான் தம்பி என்றான்
“திராவிடன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய திராவிட மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!”

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
“….தமிழன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!”

தந்தை பெரியாரிடம் பெருமதிப்பு கொண்டிருந்த போதிலும் பெரியாரின் தமிழ்மொழி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஆங்கிலமொழி ஆதரவு ஆகியவற்றில் கடும் எதிர்ப்பைக் காட்டவும் பாரதி தாசன் தயங்க வில்லை.

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது, “நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!” என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

1949ஆம் ஆண்டு பேராயக்கட்சி ஆட்சியின் போது கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் “எழுத்து சீர்திருத்தம்” எனும் பெயரில் தமிழ் மரபெழுத்துகளை ஒழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1935ஆம் ஆண்டிலிருந்தே தந்தை பெரியாரும் இதனையே தொடர்ந்து வலியுறுத்தி எழுதி வந்தார். அதில் ஆங்கில எழுத்துகளை தமிழில் கலந்து எழுதியதோடு, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலமொழியை முன் நிறுத்தவும் துணிந்தார். இதைக் கண்டித்து பாரதிதாசன் எழுதினார்:
” …எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே! இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!

….எழுத்து திருத்தத்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துகளைச் சீர்திருத்தம் ஆர்வலர்க்கு ஒரு விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்? பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்

ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர் பெரியார் திருத்தத்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்

மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாகவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!

கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்கள் சீர்திருத்தம்?
தோள் விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?

மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கவொரு தகுதியினைப் பெற்றார் போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
(பாவேந்தர் 1.02.1950)

மேற்கண்ட பாடலில் பாரதிதாசன் “எழுத்துச் சீர்திருத்தம்” வேண்டாமென்று வலியுறுத்தியும் தந்தை பெரியார் கேட்க வில்லை. எல்லாம் தெரிந்தவரைப் போலவே தன்னைக் காட்டிக் கொண்டார். பெரியார் தந்த புத்தி போதுமென்று இயக்கம் நடத்தும் வீரமணியும் திருந்திய பாடில்லை. அவர் நடத்தும் ‘விடுதலை’ ஏடு எழுத்து சீர்திருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்து குறியீடுகளை கலந்து அவ்வவ் போது வெளியிட்டு வருகிறது. வீரமணிக்கு துணிவிருந்தால் விடுதலை ஏட்டில் முழுமையாக அந்த கிரந்த கலப்பு எழுத்தில் வெளியிட முடியுமா? வீரமணியால் கூட அதனை படிக்க முடியாது என்பது தான் எதார்த்த உண்மை!

புரட்சிக்கவிஞர் விரும்பிய தமிழ்வழிக்கல்வி தமிழ்நாட்டில் இல்லை, எல்லாம் ஆங்கிலமயமாகி வருகிறது. இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் ஆங்கிலவழிக் கல்வி வணிகம் நடத்தும் வீரமணிக்கு தமிழ் எழுத்தில் கை வைக்கும் துணிச்சல் வந்ததெப்படி?

பாரதிதாசன் பிறந்த இந்நாளில் தமிழை அழித்திடும் ஆரியம்- திராவிடம் செவிப்பறை கிழியும் வரை, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று” சங்கெடுத்து ஊதிடுவோம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard