தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் தந்த பதிலடி!
“தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது தமிழகத் தமிழர் தலைவர் தாமும்
தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்
தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.
தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
தமிழில் ஏதுளது என்று சாற்றுவர்.
தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
தமிழால் பயன் ஏது என்று சாற்றினர்
தமிழர் வாழத் தக்கவை யான
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்
அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை
அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே
ஆதலால் அழியத் தக்கது தமிழாம்
நாட்டுக் குழைத்த தலைவர்கள்
கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.
இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்
தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!
தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது
தமிழ் இலக்கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது?
வண்டமிழ் இலக்கியம்!
தமிழ் இலக்கியம்,
தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
சான்று : ம.பொ.சி. எழுதிய ‘எனது பார்வையில் பாவேந்தர்’ நூல் மற்றும் பாரதிதாசன் நடத்திய “குயில்” ஏடு 10.1.1961
(1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்கு காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்துப் பேசிய ம.பொ.சி.யை பெரியார் ‘தாய்ப்பால் பைத்தியம்’ என்று பட்டம் சூட்டி அழைத்தார். இதற்கு பதிலடியாக ம.பொ.சி. ‘பரங்கிமொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்’ என்று கட்டுரை தீட்டினார். அப்போது பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பாரதிதாசன் வாளாவிருக்க வில்லை. தமிழைப் பழித்தும் ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் பேசி வந்த பெரியாரை துணிச்சலாக தனது எழுதுகோல் ஈட்டி கொண்டு தாக்கினார். அப்போது எழுதியது தான் மேற்கண்ட கவிதையாகும்.)