New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 26. ஈ.வெ.ரா-வா பெரியாரா?


Guru

Status: Offline
Posts: 24625
Date:
26. ஈ.வெ.ரா-வா பெரியாரா?
Permalink  
 


 போகப் போகத் தெரியும் – 26

August 10, 2009
சுப்பு rss_icon16.jpg

 

ஈ.வெ.ரா-வா பெரியாரா?

sivaji-and-mgrநான் திராவிடக் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை. பெரியாருடைய கொள்கைகளையும் அண்ணாவுடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சியில் நான் உறுப்பினராக இருந்ததில்லை. எனது குடும்பம் தேசபக்தி உள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்.

அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மெலும் குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிகுந்தவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித்தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக்கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

’புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல் செய்து தாருங்கள்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள் (1956). அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு சேலத்தில் படப்பிடிப்புக்காக நான் சென்றுவிட்டேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அண்ணா அவர்கள் அதிகமாகப் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா வைத்தார். நான் சேலத்திலிருந்து எனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘இன்று விழா நடக்கிறது யாராவது அழைப்பு கொடுத்தார்களா?’ என்று கேட்டேன். ‘இல்லையென்று’ கூறினார்கள் என் தாயார்.

உடனே அந்த நேரமே சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னைக் கூப்பிட வருவார்கள் என்று வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கூப்பிட வரவில்லை. மாலை ஆறு மணி அளவில் பாராட்டுக் கூட்டம் நடக்கிறது. அப்பொழுதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்தக் கூட்டத்தில் மேடையேற்றி கௌரவிக்கிறார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நாந்தான். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களை அந்தக் கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள். பல நாட்கள் நான் வருத்தமாக இருந்தேன். ஒரு நான் என்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார்.

அவர் என்னிடம் வந்து, ’சிவாஜி பாய், ஏன் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் திருப்பதி போய் வரலாம்’ என்றார்.

நான் ‘சாமி கும்பிடும் மனோநிலையில் இல்லை. எனக்கு எதற்கு திருப்பதி’ என்றேன். நான் கோவிலுக்குள் அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்போது பயங்கர மழை. சாலை முழுவதும் வெள்ளம் இருந்தாலும் எப்படியோ திருப்பதி சென்றடைந்தோம்.

நான் திருப்பதியிலிருந்து மாலையில் சென்னை வந்தேன். ‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தினத்தந்தியில் தலைப்புச்செய்தி வந்தது. வரும்போழுது ரோடு முழுவதும் பார்த்தால் என்னைப் பற்றி ‘திருப்பதி கணேசா, கோவிந்தா’ என்று எழுதியிருந்தார்கள்…

நான் அந்த வாசகங்களையெல்லாம் படித்துக் கொண்டே வந்தேன். அப்பொழுது பீம்சிங் கூறினார். ‘கவலைப்படாதே கணேசா, அப்படித்தான் எழுதுவார்கள், நீ உயர்ந்த நடிகன், எதைப்பற்றியும் கவலைப்படாதே’ என்றார்.

யார் ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று எழுத வைத்தார்களோ அவர்களுடைய மனைவி மற்றும் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்போது திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறார்களே. எல்லாமே போலியாக இருக்கிறது.

என்றைக்கு என்னைக் கேலி செய்தார்களோ அன்றே திருப்பதி ஆண்டவன் கண்விழித்துப் பார்த்து அருள்புரிந்துவிட்டார். நான் நடித்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ’மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், அம்பிகாபதி, உத்தமபுத்திரன்’ போன்ற படங்கள் அப்போதுதான் வெளிவந்தன.

– சிவாஜி கணேசன் / பக்கம் 130 -136 எனது சுயசரிதை.

திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர். அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.

ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை. பத்துவருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார். முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.

வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த வசன நிர்வாகிகளின் வழக்கமல்லவா?

நாம் 1925 க்குப் போகலாம்.

சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினைக்குப்பிறகு ஈ.வெ.ரா கையிலெடுத்தது ‘வகுப்புவரி பிரதிநிதித்துவ முறை’. வகுப்புகளின் ஜனத்தொகைக்கு ஏற்றபடி அரசுப்பணிகளில் இடமளிக்க வேண்டும் என்பதே ‘வகுப்புவரி பிரதிநிதித்துவ முறை’

உத்தியோக விவகாரங்களில் ஈ.வெ.ரா வின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்த சிலர் சமயரீதியாக பிராமணர்களை எதிர்க்கவில்லை. மதச்சடங்குகளில் பிராமணர்களுக்கிருந்த முதன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஆலோசனையின்படி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் குடமுழுக்கை நடத்திய பி.டி ராஜன் இப்படிப்பட்டவர்.

மற்றொரு தரப்பினர் பிராமணர்களுக்கான உயர்நிலையை நிராகரித்தனர். இவர்கள் சைவ வேளாளர்களில் ஒரு பகுதியினர். இவர்களால் துவக்கப்பட்டதுதான் தனித்தமிழ் இயக்கம். இவர்களிடம் நாத்திகம் இல்லை, மறைமலை அடிகள் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் இந்த வகை.

rk_shanmugam_chettyபல்வகையான அணிகள் இருந்தன; கட்சிகளிடையே கறார்தன்மை இல்லை. காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக நீதிக்கட்சித் தலைவர்களான ஆற்காடு ஏ. இராமசாமி முதலியார், கோவை ஆர்.கெ. சண்முகம் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காங்கிரசில் சட்டசபை நுழைவை ஆதரிக்கும் சுயராஜ்ஜியக் கட்சியினரும் இதற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டவர்களும் இருந்தனர்.

சேரன்மாதேவி விவகாரத்தில் ஈ.வெ.ராவுக்கு ஆதரவாக இருந்த திரு.வி.க ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு’ ஆதரவு தரவில்லை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்னை நகராட்சியால் வழங்கப்படும் நீருக்கு வரிபோடக்கூடாதென்று நீதிக்கட்சியைச் சேர்ந்த பி.டி. தியாகராயர் கூறினார். இதை நீதிக்கட்சி நிறுவனரான டாக்டர். நாயர் கடுமையாக எதிர்த்தார்.

1923 நவம்பரில் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் நீதிக்கட்சியின் அமைப்பாளரான டாக்டர் நடேச முதலியார் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். கட்சித்தலைமை அவரை தொடர்ந்து அலட்சியம் செய்தது.

சென்னை திருவல்லிக்கேணி பெரியதெருவில் இருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இவரது பரம்பரையினரால் இப்போது நிர்வகிக்கப்படுகிறது.

பிரமணரல்லாதார் நடத்திய தஞ்சை மாநாட்டில் காந்திஜியால் நிறுவப்பட்ட கதர் அமைப்புகளின் கண்காட்சி நடந்தது. நூல் நூற்போருக்கான போட்டியும் நடத்தப்பட்டது.

நீதிக்கட்சியின் முன்னனித் தலைவர்களாக இருந்த ஓ. கந்தசாமி செட்டியார், எம்.சி.ராஜா போன்றோர் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தவிர, தெலுங்கர் தமிழர் வேற்றுமையும் அங்கே இருந்தது.

நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி. பன்னீர்செல்வம் ஈ.வெ.ரா வின் நாத்திகக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் புனித தெராசாவுக்கு கோவில் கட்டிய கத்தோலிக்க கிறித்துவர். கத்தோலிக்கர்களால் நெருக்கப்பட்ட பன்னீர்செல்வம் ஈ.வெ.ரா வை விட்டு விலகினார்.

பொதுவுடமைவாதியான ம. சிங்காரவேலர் 1925 இல் சென்னை யானைகௌனி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ஞானகோபால் நாயுடுவைத் தோற்கடித்தார்.

பன்மொழி அறிஞரான தெ. பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாரிப்பேட்டையில் காங்கிரஸ்வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேதாந்தப் பயிற்சி பெற்ற தெ. பொ. மீ. முற்போக்களரான சிங்காரவேலனோடு இணைந்து செயல்பட்டார். ’நகராட்சிப் பள்ளிக்கூடங்களில் மதங்களைப் பற்றி சொல்லக்கூடாது’ என்ற தீர்மானத்தை சிங்காரவேலர் கொண்டுவந்தபோது தெ. போ.மீ அதை ஆதரித்திருக்கிறார்.

கட்சிச் சார்பைவிட, தனிப்பட்ட கருத்துக்களே வலிமையோடு இருந்ததாக இந்தச் சான்றுகளால் நாம் அறிகிறோம்.

இனி, ஈ.வெ.ராவின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தைப் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

இதற்காக இரா. நெடுஞ்செழியனின் ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் :

1920 இல் திருநெல்வேலியில் நடைப்பெற்ற மாகாணக் காங்கிரசு மாநாட்டின் தீர்மானக் குழுவில் பெரியார் அவர்கள் வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆறு வாக்குகள் வேறுபாட்டில் தீர்மானத்தை நிறைவேறச் செய்தார். ஆனால் திறந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய திரு. எஸ். சீனிவாச அய்யங்கார் ‘இது பொது நலத்திற்குக் கேடு பயக்கும் தீர்மானம்’ என்று சொல்லி அந்த தீர்மானத்தைத் திறந்த வெளி மாநாட்டில் கொண்டுவர அனுமதி மறுத்துவிட்டார். – பக். 378.

1923 ஆம் ஆண்டில் மாகாணக் காங்கிரசு மாநாடு சேலத்தில் நடைபெற்றபோதும் பெரியார் அவர்களின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவான தீர்மானத்தை எதிர்த்துப் பலர் பெருங்கலவரம் செய்தனர். – பக் 379.

1924ஆம் ஆண்டில் மாகாணக் காங்கிரசு மாநாடு பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் தலைமையின்கீழ் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அந்த ஆண்டில் பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பெரியார் அவர்களின் வகுப்புவாரித் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு என்றே திரு. எஸ். சீனிவாச அய்யங்காரும் பிற காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்களும் பல பேர்களைக் கூட்டிக்கொண்டு மாநாட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பெரியாரின் தீர்மானத்தை எதிர்த்தனர். பக். 379

1925ல் மாகாணக் காங்கிரசு மாநாடு காஞ்சிபுரத்தில் தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள் தலைமையின்கீழ் நடைபெற்றது. அந்த மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து அது பற்றி விவாதம் நடத்தி அதனை நிறைவேற்றிவைக்க வேண்டும் என்று பெரியார் இராமசாமி அவர்கள் வாதாடினார். காங்கிரசின் பார்ப்பனத் தலைவர்களின் தூண்டுதலின் பேரில் திரு. வி.க அவர்கள் அந்தத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கமறுத்து அதனை நிறுத்திவிட்டார். – பக். 381

‘இந்தக் காங்கிரசில் நான் இருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. இனி இந்தக் காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்வேலை’ என்று முழங்கிவிட்டுத் துண்டைத்தூக்கி தோளிலே போட்டுக்கொண்டு கைத்தடியையும் கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு பெரியார் காஞ்சிபுர மாநாட்டுப் பந்தலை விட்டு வெளியேறினார். – பக். 381

நெடுஞ்செழியன் எழுதியதைப் பார்த்தோம். இதற்குப் பதிலாக காங்கிரசின் தரப்பை அறிந்துகொள்ள ம. பொ. சிவஞானம் எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழகம் / முதல் தொகுதி’ என்ற புத்தகத்தைப் பார்க்கலாம்.

1925ல் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அந்த மாநாட்டிலே அணி பிரிந்து போராடினர் தமிழ்நாட்டுத் தலைவர்கள். – பக். 597.

திரு. சி. என். முத்துரங்க முதலியார் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து மாநாட்டை நடத்திவைத்தார். திரு.வி. கல்யானசுந்தர முதலியார் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சியில் அமைதி நிலவியது. திரு. சி.என். முத்துரங்க முதலியார் தனது வரவேற்புரையில் ஜஸ்டிஸ் கட்சியைப் பலமாகக் கண்டிக்கும் பாகம் வந்தபோது பிரதிநிதிகளில் சிலர் அதிருப்தி காட்டி ஆட்சேபித்தனர். ஆம் விடுதலை வீரர்களுடைய பாசறையிலே பிரிட்டிஷாரிடம் விசுவாசமுடைய ஜஸ்டிஸ் கட்சியைக் கண்டிப்பதை ஆட்சேபிப்பவர்களும் இருந்தனர்.

காஞ்சியில் கூடிய தமிழ் மாகாணக் காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் நடவடிக்கையில் முன்னணித் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அது, இருவகைப்பட்டதாக இருந்தது. ஒரு வகை சட்டசபைப் பிரவேசத்திற்குக் காங்கிரசே பொறுப்பேற்க வேண்டுமென்று திரு. எஸ். சீனிவாச ஐய்யங்கார் முன்மொழிந்த தீர்மானம் பற்றியது. மற்றொரு வகை அப்போது ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையாகக் கருதப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஏற்க வேண்டுமென்றுகோரி ஈ.வெ.ரா. ராமசாமியார் முன்மொழிந்த தீர்மானம் பற்றியது… – பக் . 598 599

திரு. எஸ். சத்தியமூர்த்தி அசல் தீர்மானத்தை அதரித்துப் பேசினார். ‘ஐய்யங்காரின் அசல் தீர்மானம் நிறைவேறினால் ஜஸ்டிஸ் கட்சியாகும் மிதவாதிகளும் காங்கிரசில் வந்து சேரமாட்டார்கள்’ என்றார் திரு எஸ். ராமனாதன். ‘எல்லோரும் வருவதற்கு இங்கே என்ன சமராதனையா நடக்கிறது’ என்று ஐயர் கேட்டார்.

அடுத்து ஈ.வெ. இராமசாமியார் கொடுத்திருந்த தீர்மானத்தின் காரணமாக காஞ்சி மாநாட்டிலே புயல் வீசியது.

இத்தீர்மானம் ஏற்கனவே விஷயாலோசனைக் கமிட்டியால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருந்தும் 25 பிரதிநிதிகளின் கையொப்பத்தைப் பெற்று, பகிரங்க மாநாட்டிலே ஈ.வெ.ரா தன் தீர்மானத்தை முன்மொழியவும் எஸ். இராமநாதன் வழிமொழியவும் முயன்றனர்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி. கலியானசுந்தரனார் ‘தீர்மானம் ஒழுங்கற்றது’ என்று கூறி அதைப் பிரேரணை செய்வதற்கு அனுமதி மறுத்துவிட்டார். தலைவரின் தீர்ப்பை எதிர்த்து ஈ.வெ.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார். அவரைப் பின்பற்றி திரு. எஸ். இராமநாதனுள்ளிட்ட வேறு சிலரும் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். – பக். 600, 601

சட்டசபை பகிஷ்காரத்தையும், அரசுடன் ஒத்துழையாமையையும் கடைப்பிடித்து வந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமை பற்றிய தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பதற்கே சந்தர்ப்பமில்லாததால் அது ஒழுங்கற்றது என்று சொல்லித் தள்ளப்பட்டது – பக். 602.

’அரசுப் பதவியே கூடாது என்பதுதான்’ ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படை. அன்றைய நாளில் அதுதான் காங்கிரஸின் கொள்கை. ஆகவே, காங்கிரஸ் மாநாட்டில் வேலை வாய்ப்பில் வகுப்புரிமை பற்றி பேசமுடியாது என்பதுதான் அரசியல் நெறி.

பின்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டு, ராஜாஜி முதலமைச்சரானார். அப்போது வகுப்புவாரி அரசாணை அமல்படுத்தப்பட்டது என்பதை மறக்கக்கூடாது.

ஈ.வெ.ரா-வின் பிடிவாதத்திற்கு தார்மீகமான அடிப்படை எதுவும் இல்லை. அரசியல் வரலாற்றை ஆராய்பவர்களுக்கு அவருடைய போர்க்குணம் புரியாமலிருக்கலாம்.

புரியவைப்பதற்காக ஒரு குடிகாரனை அறிமுகம் செய்கிறேன். அந்தக் குடிகாரனை டாக்டரிடம் அழைத்துவந்தார்கள். ’ஏம்பா குடிக்கறே?’ என்று கேட்டார் டாக்டர். ’அதெல்லாம் உங்களுக்குப் புரியாதுங்க’ என்றான் அவன்.

’பரவாயில்ல சொல்லுப்பா’ என்றார் டாக்டர்.

‘எனக்கு ஒரு கவலை இருக்குங்க’ என்றான் குடிகாரன்.

‘என்ன கவலை உனக்கு’ என்றார் அவர்.

‘அது ஒரு தனிப்பட்ட பிரச்சனைங்க’ என்றான் அவன்.

‘பிரச்சனையைச் சொன்னாதானே, தீர்த்துவைக்கமுடியும்’

’உங்களால அது முடியாதுங்க.’

’பிரச்சனையைச் சொல்லுப்பா முடியுமா முடியாதான்னு பாக்கலாம்’ என்று கோபமாகக் கேட்டார் டாக்டர்.

’இப்படிக் குடிச்சுக் குடிச்சி வீணாப் போறேனே என்கிற கவலைதானுங்க எனக்கு. அதை மறக்கத்தாங்க குடிக்கிறேன்’ என்றான் அவன்.

டாக்டருக்கு சிகிச்சை தேவைப்பட்டது.

காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா உடனே நீதிக்கட்சியில் சேரவில்லை. அவருடைய அரசியல் பணிகுறித்த விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

இந்தத் தொடரில் ’பெரியார் ஈ. வெ.ரா’ என்று எழுதாமல் ’ஈ.வெ.ரா’ என்று எழுதுவது குறித்து ஒரு அன்பர் என்னிடம் வருத்தப்பட்டுக்கொண்டார். பெரியார் என்ற அடைமொழியை எல்லோரும் ஏற்றுக்கொண்டபிறகு அதைத் தவிர்த்து எழுதுவது முறையல்ல என்கிறார் அவர். அவருக்காகவும் அவரைப் போன்றவர்களுக்காகவும் ஒரு விளக்கம்.

உப்பு சத்தியாகிரகம் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஈரோட்டில் (1930) இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடந்தது. சுயமரியாதை இயக்க மேடைகளில் ‘காந்திஜியை மகாத்மா என்று அழைக்கத் தேவையில்லை’ என்று அப்போது பேசி வந்தார்கள். அப்போதிருந்த சுயமரியாதைக்காரர்களில் சிலர் ஒரிஜினல் சுயமரியாதைக்காரர்கள்.

ஆர்.கே. சண்முக செட்டியார் பேசும்போது பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பிட்டார். உடனே ‘பெரியாரை’ வாபஸ் வாங்குங்கள். ’பெரிய ஆளாவது சின்ன ஆளாவது’ என்று இளைஞர்கள் கூச்சல் போட்டார்கள். ‘காந்திக்கு மகாத்மா வேண்டாம் என்றால் ஈ.வெ.ராவுக்குப் பெரியார் எதற்கு’ என்று இவர்கள் கேட்டார்கள். கோவை அய்யாமுத்து, சாமி. சிதம்பரனார், ஜீவா, மணவை திருமலைச்சாமி போன்றவர்கள்தான் அவர்கள்.

சுயமரியாதை மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு காந்தி பிரச்சினை. எனக்குக் கடவுள் பிரச்சினை. இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசியவர் ஈ.வெ.ரா. சம்ஸ்கிருதத்திற்குப் பதிலாக தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற கருத்து ஈ.வெ.ரா. விடம் சொல்லப்பட்டது ‘மலத்தை தட்டில் வைத்துத் தரவேண்டுமா’ என்று கேட்டார் அவர்.

அர்ச்சனையை ‘மலம்’ என்று சொன்னவரை அடைமொழியோடு புகழ வேண்டுமா?

வாசகர்கள் யோசிக்கவேண்டும்.

மேற்கோள் மேடை:

பிறர் ஏவும் பணி செய்து, பிறர்க்காக உழைப்போரே சூத்திரர் எனில், இந்தியர் எல்லோரும் இன்று சூத்திரரேயன்றி வேறல்லர். ஆராய்ச்சி விவாதம் ஒன்றும் வேண்டாத பிரத்தியக்ஷப் பிரமாணமான உண்மை இது. – நாவலாசிரியர் அ. மாதவையா / பஞ்சாமிர்தம் என்ற மாத இதழ் / 1925.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard