New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
Permalink  
 


சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

July 13, 2009
சுப்பு rss_icon16.jpg

 

thanks-vikipedia1சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா?

’நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படி செயல்படு’

என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.

‘இந்திய மொழிகளிலேலே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்.

‘பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் கூறினாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை. அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்’ என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல் (11.18.2.3).

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.

’அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)

‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.

தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.

தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.

பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.

அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்

‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’

என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘

என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.

பண்டிதமணி பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்துகொள்ள சோமலெ எழுதி இன்ப நிலையம் வெளியிட்டுள்ள புத்தகத்தைப் பார்க்கலாம்.

வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர்

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழிஅல்ல என்பதைச் சொல்லி வருகிறேன். இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளால் சமாதானம் அடையாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து கீழே வரும் பட்டியலைப் பார்க்கவும்.

மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….

இவர்களெல்லாம் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர்கள். இவர்களுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்க்ருதத் தொடர்புடையவை.

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் கொண்டவர் முன்னணியில் இருக்கிறார்.

நூற்றாண்டுகளாகத் தனித்தமிழ் இயக்கம் நடந்த பிறகும் இதுதான் நிலைமை.

தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்;

முதல் அமைச்சர் கருணாநிதியின் இருப்பிடமான கோபாலபுரமும், ஜி.கே. வாசனின் ஊரான கபிஸ்தலமும் சமஸ்க்ருதப் பெயர்களே. தொடர்கின்ற மற்ற ஊர்களையும் பாருங்களேன்.

திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது.

தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல்.

சமஸ்க்ருத வளர்ச்சி பா.ஜ.க வுக்கு உதவுமா?

இந்தியக் கலாச்சாரம், சமஸ்க்ருத வளர்ச்சி ஆகியவற்றில் பல்லாண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ‘பாரதிய வித்யா பவன்’ ஒரு காங்கிரஸ்காரரால் நிறுவப்பட்டது. அவர். கே. எம். முன்ஷி.

‘இந்தியாவின் செல்வங்களிலேயே அதிக சிறப்புடையது எது என்று என்னைக் கேட்டால் தயக்கமில்லாமல் நான் சம்ஸ்க்ருதம் தான் என்று சொல்லுவேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு.

மற்றபடி சமஸ்க்ருத வளர்ச்சி இந்தியாவின் எழுச்சிக்கு உதவும், இந்தியாவின் எழுச்சி பா.ஜ,க வுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும், குடியரசுக் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும் கூட உதவும்.

பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்ருத மொழியை ஆதரிப்பதால் பயன் உண்டா?

வாழ்க்கை நமக்கு ஒரு வரப்ரசாதம் என்கிறார் காலை நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் யோகப்பியாசம் சொல்லித்தரும் பெண்மணி. இந்த வரமும் பிரசாதமும் தமிழா, சமஸ்க்ருதமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை.

கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன.

சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது.

சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு.

டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது.

எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது.

ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை.

ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள்.

சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்

‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு’ மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.

முதல் அமைச்சரே மொழி மாற்றத்தை விரும்புகிறார் என்றால் அந்த மொழி, புழக்கத்தில் உள்ளதா, இல்லையா என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

பரிசுப் பொருட்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் பரிசு பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை – ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன். – காமராஜர்.

தமிழர் வாழ்வில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு என்ன?

தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இசைவாக, இணையாக இறைமையாகக் கருதுவது வள்ளுவர் காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் தமிழ் மரபு.

இன்னும் தமிழ்நாட்டில் கவிஞர்களின் கற்பனைச் செழுமைக்கும் எழுத்தாளர்களின் உயர்ந்த சிந்தனைக்கும் வாக்கிய வனப்புக்கும் ஊற்றுக் கண்ணாயிருக்கிறது சமஸ்கிருதம்.

‘புதுக்கவிதையில் சமஸ்க்ருத கூறுகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம்.

சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளுக்கும்; காவ்ய தரிசனங்களுக்கும், தர்க்கம், மொழியியல், மானுடவியல், தாவரையல், அகராதியியல் என்ரு ஆழ்ந்து அறிவதற்கும், கணித நுண்மைக்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும், ஒவ்வாமை, பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சோதிடத் திறமைக்கும் சம்ஸ்க்ருதப் பலகணியைத் திறக்கவேண்டும்.

தென் குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கணபதி ஸ்தபதிக்கு கட்டிடக் கலை தொடர்பான சம்ஸ்க்ருத நூல்கள் பயன்பட்டன என்று அவரே சொல்லியிருக்கிறார்.

தமிழ்ப் பற்றாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் கவிஞர் பாரதிதாசன். அவருடைய கவிதை வரி ஒன்றைப் பார்ப்போமா!

‘’ஊரின நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’

என்ற வரிகளில் ‘பத்திரிகை’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதழ், ஏடு, தாளிகை என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

வற்றாக் கருணையோடு வந்து உதித்த அருட்பிரகாச வள்ளலார் தாம் நிறுவிய பாடசாலையில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயிற்றுவித்தார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் செய்யப்படும் சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தம் கூறுகிறார்.

‘உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒலியன்கள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் நிறைந்து இருக்கின்றன. முள்ளை மலராக்கும் – கல்லைக் கனியாக்கும், காட்டை நந்தவனமாக்கும் வல்லமையை அந்த மொழி பெற்றிருப்பதால் தான் ஆண்டவனுக்கு அர்ச்சனை உரிய மொழியாக உயர்ந்து நிற்கிறது. செம்பில் சிறந்த தெய்வத்தைக் காட்டுகிறது. சீரிய காட்சியைக் காட்டிக் கண்ணீரில் நம்மை நாளும் நனைய வைக்கிறது.’’

தமிழ் என்னும் அமுதத்தால் இறைவனைக் குளிர்வித்தாலும் அது சிறப்புதான். கோயில்களிலிருந்து சம்ஸ்க்ருதம் அகற்றப்படவேண்டும் என்ற கூக்குரல் இப்போது கேட்கிறது அதற்காக சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி சொல்லவேண்டியதாயிற்று.

தமிழர் வாழ்வில் தனியாகப் பிரித்தெடுக்க முடியாதபடி சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் இருக்கிறது.

சம்ஸ்க்ருதம் பிராமணர்களுக்கான மொழி என்று ஒரு கருத்து இருக்கிறதே?

அந்தக் கருத்து தர்ம விரோதமானது என்று ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களே கூறியிருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் நடத்தும் சம்ஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன.

தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.

சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர்.

மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.

காளிதாசன்

காளிதாசன்

இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன்.

வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல.

பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சம்ஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல.

‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல.

பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேலியைச் சுருட்டி வைத்து அந்த இடத்தில் வீதி உருவாகிவிட்டது.

பொதிகை தொலைக்காட்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தும் கீதை சொற்பொழிவுக்கு எல்லாத் தரப்பிலும் நல்ல வரவேற்பிருக்கிறது.

மதுரை நகரில் சின்மயா மிஷன் நடத்தும் கீதைப் போட்டியில் எல்லா வகுப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் தலைவரே ஒரு கிறிஸ்தவர்தான் – டாக்டர். அலெக்ஸ்.

சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று சொல்கிறார்களே?

தமிழுக்கு ஆபத்து சம்ஸ்க்ருதத்தால் வராது. அது வேறு திசையிலிருந்து வருகிறது. ஆபத்தின் பெயர் ஆங்கிலம். அதன் வாகனத்தின் பெயர் சன் தொலைக்காட்சி.

யோசித்துச் சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று பேச வேண்டியவர்

‘திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ என்கிறார்.

நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ள வேண்டும்.

உச்சரிக்கும் முறையினால் ஒரு சமுதாயத்தையே காயடித்துவிடக்கூடிய திறமை தொலைக்காட்சித் தொகுப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு எதிராக ஒர் இயக்கமே நடத்த வேண்டும்.

மற்றபடி சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து இல்லை. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

தமிழ் இலக்கிய மரபில் சம்ஸ்க்ருதத்திற்கு இடமில்லை என்கிறார்களே?

தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் ‘வடமொழி இலக்கணம் நிறைந்த தொல்காப்பியர்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மாணவரான அதங்கோட்டாசிரியர் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்று அழைக்கப்படுகிறார்.

தமிழின் இலக்கண நூல்களிலே மிகத்தொன்மையானது தொல்காப்பியம்; தொல்காப்பியத்திலேயே சமஸ்க்ருதத் தொடர்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.

‘தம்பியோடு கானகம் சென்று இலங்கையை அழித்தவன் ஸ்ரீ ராமன். அவனுடைய மகிமையைக் கேளாதவர்களுக்குக் காது எதற்கு?’ என்று கேட்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள். வால்மீகி ராமாயணத்தை அவர் அறிந்திருக்கிறார்.

மணிமேகலையில் மாதவி சம்ஸ்க்ருதத்தில் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது.

’ஊன்பொதி பசுங்குடையார்’ என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலில் கிஷ்கிந்தா காண்டத்தின் காட்சி சொல்லப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை ‘வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி’ என்று வாழ்த்துகிறார்.

’வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’ என்றார் திரு.வி.க.

‘சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிறார் கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி.

தமிழ்வளத்தையும் தமிழர் நலத்தையும் விரும்புகிறவர்கள் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதில்லை.

எப்படியாவது தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று நோக்கமுடையவர்கள்தான் சம்ஸ்க்ருத எதிரிப்பாளர்கள். நல்லறிவுடையோர் இந்த மோதல் போக்கை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

தமிழர் வாழ்விலும் வழக்கிலும் சம்ஸ்க்ருதம் அன்றும் இன்றும் அழகு சேர்க்கும் அணிகலனாகத் தொடர்கிறது.

மதச்சார்பில்லாத நாட்டில் சம்ஸ்க்ருதக் கல்வி தேவையா?

சம்ஸ்க்ருதத்தை தேர்வுப் பாடமாகக் கற்பிப்பது எந்த விதத்திலும் மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாகாது’ என்கிறது 1994 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

சம்ஸ்க்ருத மொழி என்பது பிராமணர்களுக்கு மட்டும்தான் என்று யாரவது கூறினால் அதை நம்மால் ஒப்புக்கொள்ளவே முடியாது – ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் – ஜெயகாந்தன்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

//உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது. //ம்ம்ம்…காலாவதியான கோட்பாடு இதுதான். மொழிகளின் பரிமாண வளர்ச்சி மிகவும் சிக்கலானது. ஒருவிஷயத்தை சொல்லலாம். சமஸ்கிருதம் எனும் மொழி உருவானது கிமு ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருக்கலாம். அதனுடம் பிராம்மி எழுத்துக்கள் இணைக்கப்பட்டது அதற்கும் பின்னால் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருக்கலாம். முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை. தமிழ் என்கிற மொழி உருவானதும் சமஸ்கிருதம் என்கிற மொழி உருவானதும் ஒரு சில நூற்றாண்டுகள் இடைவெளிகளில் இருக்கலாம். சமஸ்கிருதம் தமிழின் தாய்மொழியாக நான் அறிந்தவரை பாரத ஐதீகங்களில் இல்லை. இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது. இந்த ஐதீகத்தின் மையக்கருவில் ஒரு வரலாற்று உண்மை உள்ளது. பாரத பண்பாட்டுப்புலத்தில் இருந்த மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொதுமொழியே சமஸ்கிருதம். அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல். துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

வள்ளுவன் on November 5, 2009 at 2:06 pm

இங்கு சமஸ்க்ருத்திற்கு எதிராக மறுமொழிகள் பிரசுரித்தவர்கள் எத்தனைபேர் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பார்கள் என்று எனக்கு ஐயம் எழுகிறது. ஏனெனில், கட்டுரை இவ்வளவு தெளிவாக இருக்கையில், எப்படி இவர்கள் இம்மாதிரியான மறுமொழிகளை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. சற்று நேரம் கழிந்தாலும் போகட்டும், எனக்கு தெரிந்த சிலவற்றை இங்க எழுத விரும்புகிறேன்…

//தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.//

தோழர் விஜய் அவர்களே, உங்கள் மறுமொழியின் முதல் பகுதி உண்மையே! ஆனால், தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்களில்கூட சமஸ்க்ருதம் கலந்திருப்பதற்கு என்ன சொல்லமுடியும்? சிறிது ஆண்டுகள் கழித்து ஆங்கில வார்த்தைகள் கூட தமிழ் என்று அறியப்படும் என்று நீங்கள் கூறுவதிலிருந்தே இன்று தமிழுக்கு எதிரி ஆங்கிலம் தானே தவிர, சமஸ்க்ருதம் அல்ல என்பது தெளிவு. மேலும், “திராவிட மொழிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்” என்று கூறுகிறீர்கள். தமிழாவது ஓரளவிற்கு சமஸ்க்ருதத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றிலும் சமஸ்க்ருதம் இரண்டறக் கலந்துவிட்டது. மலையாளத்தை இங்கு சேர்க்க முடியாது. ஏனெனில், மலையாளம் உருவானது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆகும்…

//ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.//

ராம்கோஓபாஆல் அவர்களே, இந்த வார்த்தைகளை வெளியில் சொல்லிவிடவேண்டாம், சொன்னால் தங்களை மனநிலை பாதித்தவர் என்று கூறிவிடுவார்கள். சமஸ்ருதக்தின் பெருமைகள் என்னென்ன என்று இந்து மதத்தை வேருப்பவர்களால் கூட மறுக்க முடியாது. நீங்கள் கருப்புச்சட்டைக்காரர் என்பதனால், இப்படி ஆதாரமற்ற மறுமொழிகளை எழுதுவதில் எனக்கொன்றும் வியப்பில்லை.

//இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//

தமிழ் தெரியுமா உங்களுக்கு? இந்த கட்டுரையை படித்தீர்களா? சும்மா சாமி ஆடுகிறீர்களே! கட்டுரையிலேயே, எப்படி அம்மொழி இன்னும் உயிருடன் விளங்குகிறது என்பதற்கு ஆசிரியர் எவ்வளவு சான்றுகளை அடுக்கியுள்ளார். சார், உங்களைப் பார்த்தால் “சிரிப்பு போலீஸ்” போல உள்ளது!!

//மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள்.//

தயவுசெய்து, அது என்ன ஆதாரம் என்று சொல்கிறீர்களா?? நாங்கள் சமஸ்க்ருதம் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது என்று கனவில் கூட நினைப்பதில்லை!!

//It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.//

திரு.இராஜசுந்தரராஜன் அவர்களே, நீங்கள் சொல்வது சரியே, எப்படி சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் தோன்றியது பொய்யோ, அதே போல தமிழ் சமஸ்க்ருத்தைவிட பழயது என்பதும் அப்பட்டமான பொய்…

//Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism.//

என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழ் இந்து மதத்திற்கு புறம்பானது என்றா? அப்படி சொல்வீர்களாயின், அது உங்கள் அறியாமையே! இந்த தொடரின் மற்ற பகுதிகளை படித்தீர்களா?? படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்!

//Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.//

We give full credit to Tamil as a original language, it is people like you who say that Sanskrit was the language of some unknown nomadic tribes, whom you first said to have invaded, and then migrated, and what now, toured?? Sanskrit is equally great to Tamil! We are not bothered about verbs or nouns, but only of the usage of Sanskrit words in ancient Tamil literature…

//I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.//

ஆஹா, கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்களே, அங்கனமாயின், உங்கள் பெயரை “அழகரசன்” என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே, இதற்க்கு மட்டும் mother தேவையில்லை, wet nurse வேண்டுமா??

//தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.//

அய்யகோ, கால்ட்வெல்லின் சீடர் ஒருவர் வந்திருக்கிறார்! என்ன ஒரு வரலாற்று பொய்… நீங்கள் பாதிரியார்தானே!!

//ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.//

சரி சார், தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உண்மைதான்! ஆனால், சமஸ்க்ருத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, தமிழைப்பற்றி தொன்மையான சமஸ்க்ருத இலக்கியங்கள் பேசவில்லையே, ஏன்? பிறகெப்படி தமிழ் சமஸ்க்ருத்தைவிட மூத்தது?

தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் கீ.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன. மூன்றாம் சங்கப்புலவரான நக்கீரரின் இலக்கியங்களிருந்து அதற்குமுன் இரண்டு சங்கங்கள் இருந்ததை அறிகிறோம். முதல் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரர் குறிப்பிடுகிறார். மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரரும், இதர சைவ நாயன்மார்களும் தங்கள் இலக்கியங்களில் கூறுகிறார்கள். ஆக, தமிழின் தொன்மைக்கு எடுத்துக்காட்டே இந்து மதம்தான்!!!!

மூன்று சங்கங்களையும் சேர்த்தால் 9990 ஆண்டுகள் என்ற கணக்கு வருகிறது. இதனுடன் நாம் பார்த்த வரலாற்று 2000 ஆண்டுகளை சேர்த்தால்கூட தமிழ் 12000 ஆண்டுகள் நீடிக்கின்றன! சமஸ்க்ருதத்தின் தொன்மை எவ்வளவு என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. வேதங்கள் தொகுக்கப்பட்டதே ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னால் என்று அறிகிறோம். ஆனால், இதற்க்கு முன்பே வேதங்கள் எழுதப்படாமல், ஒதியபடியே பின்பற்றப்பட்டன என்பது ஐரோப்பிய வல்லுனர்கள் முதல் ஒப்புக்கொண்டதாகும். ஒரு உதாரணம் தருகிறேன்:- இரண்யகசிபு தவம் செய்தது 36,000 ஆண்டுகள் என்றும், இராமன் அயோத்தியை ஆண்டது 11,000 ஆண்டுகள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.. இதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உங்கள் “இந்துப்பகுத்தறிவு” (இந்துக்களை மட்டும் கேள்வி கேட்கும் பகுத்தறிவு) கேள்வி எழுப்பும். சங்கங்கள் நடந்ததாக சொல்வதும் நக்கீரர், பரணர் மற்றும் நாயன்மார்களின் இலக்கியங்களிலிருந்தே அறிகிறோம்.. எனவே, எப்படி பார்த்தாலும் சமஸ்க்ருதம் தமிழுக்குப் பிறகு வந்த மொழி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு!!

மேலும், முதல் சங்கம் 4440 ஆண்டுகள், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் என்றும் மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள், அதாவது சங்ககளின் காலம் குறைந்துகொண்டே வருவதை கவனிக்கவும். இதே போல, சமஸ்க்ருத யுகங்களும் குறைந்துகொண்டே வருவது:-

சத்ய யுகம்:- 17,28,000 ஆண்டுகள்.
த்ரேதா யுகம்:- 12,96,000 ஆண்டுகள்
த்வாபர யுகம்:- 8,64,000 ஆண்டுகள்.
கலி யுகம்:- 4,32,000 ஆண்டுகள்.

தமிழ் சமஸ்க்ருத “கால எண்ணிக்கையை” எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம்! மேலும், முதலாம் சங்கம் சிவன், முருகன், குபேரன் போன்ற தேவர்களையும் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இங்கு குபேரன் வருவதுதான் அரிது. குபேரனை பிரம்மதேவன் விஷ்றவன் என்ற முனிவரின் பிள்ளையாக படைத்து யட்சர்களின் அரசனாக்கி இலங்கையை ஆளும்படி பிறப்பித்தார் என்றும் புராணங்களும் இராமாயணமும் கூறுகின்றன. விஷ்ரவனுக்கும், கைகேசி என்ற அரக்கீக்கும் பிறந்த நான்கு பிள்ளைகள்:- இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் மீனாட்சி (பின்னாளில் சூர்பனகை). இராவணன் குபேரனை துரத்திவிட்டு இலங்கையை ஆக்ரமைத்தாக கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் நகரம்தான், ஆனால் இராவணன் தமிழனும் இல்லை, திராவிடனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்….

“Early literature from the pre-Pallava dynasty period does not contain any mention of the Sangam academies, although some early poems imply a connection between the city of Madurai, which later legends associate with the third Sangam, and Tamil literature and the cultivation of the language.[6] The earliest express references to the academies are found in the songs of Appar and Sampandar, Shaivite poets who lived in the 7th century.[7] The first full account of the legend is found in a commentary to the Iraiyanar Akapporul by Nakkīrar (c. seventh/eighth century CE).[8] Nakkīrar describes three “Sangams” (caṅkam) spanning thousands of years. The first Sangam (mutaṟcaṅkam) is described as having been held at “the Madurai which was submerged by the sea”, lasted a total of 4440 years, and had 549 members, which supposedly included some gods of the Hindu pantheon such as Siva, Kubera and Murugan. A total of 4449 poets are described as having composed songs for this Sangam.

The second Sangam (iṭaicaṅkam) was convened in Kapatapuram. This Sangam lasted for 3700 years and had fifty-nine members, with 3700 poets participating. This city was also submerged in sea. The third Sangam (kaṭaicaṅkam) was purportedly located in the current city of Madurai and lasted for 1850 years under 49 kings. The academy had 49 members, and 449 poets are described as having participated in the Sangam.[9].
Late legends say that the third Sangam was held on the banks of the sacred Pond of Golden Lotuses in Madurai

There are a number of other isolated references to the legend of academies at Madurai scattered through Shaivite and Vaishnavite devotional literature throughout later literature.[10] The next substantive references to the legend of the academies, however, appear in two significantly later works, namely, the Thiruvilaiyadal Puranam of Perumpaṟṟapuliyūr Nambi, and the better-known work of the same title by Paranjothi Munivar.[11] These works describe a legend that deals mostly with the third Sangam at Madurai, and is so substantially different from that set out in Nakkirar’s commentary that some authors such as Zvelebil speculate that it may be based on a different, and somewhat independent, tradition.[12] In Nambi’s account, the 49 members of the third Sangam led by Kapilar, Paraṇar and Nakkīrar were great devotees of Shiva, numbered amongst the 63 nayanars.[13] Nakkirar himself is said to have later headed the Sangam, and to have debated Shiva. The Sangam is described as having been held on the banks of the Pond of Golden Lotuses in the Meenakshi-Sundaresvarar Temple in Madurai.”

http://en.wikipedia.org/wiki/Sangam …

நக்கீரர் சிவபெருமானிடம் வாதிட்டு அவர் நெற்றிக்கண் தீயில் எரிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திளிர்ந்து இறைவன் எழச்தேய்த நிகழ்ச்சியை திருவிளையாடல் புராணம் நன்றே வலியுறுத்துகிறது…

மேலும், அகத்திய முனிவர் குற்றாலத்தில் இருந்த திருமாலின் சிலையை சிவலிங்கமாக மாற்றி திருக்குற்றாலீஸ்வரர் என்ற கோவிலை உருவாக்கிய நிகழ்ச்சி, சைவம், வைணவம் இரண்டுமே தமிழர்களின் சொந்த மதங்கள் என்பதற்கு ஆதாரம்!!

//உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..//

இது ஒரு ஆதாரமே அல்ல, தமிழுக்கும் குருகுல முறை இருந்திருந்தால், அதுவும் இன்று அப்படித்தான் இருந்திருக்கும்!

//பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )//

இது உங்கள் யூகம்தான் தவிர உண்மையல்லவே.. தமிழர்கள் சமஸ்க்ருதத்தை பயன்படுத்தினர் என்பது உண்மை, ஆனால் தமிழர்கள் மட்டுமே பயன்படுத்தினர் என்பது உண்மைக்குப் புறம்பானது!!

//சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். //

இதுவும் பொய்.. எல்லா வர்க்கத்தினரும் சமஸ்க்ருதத்தை அறிந்திருந்தனர் என்பதற்கு தக்க சான்றுகள் கட்டுரையிலேயே கொடுக்கப் பட்டுள்ளன!!

//௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..//

இரண்டுமே உண்மைக்கு புறம்பானது.. சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுமே எப்படி உருவானது என்பதற்கு இதுநாள் வரையில், தக்க ஆதாரங்கள் இல்லை.. என் அபிப்பிராயம், தொலைந்துபோனதாக சொல்லபடுகின்ற மிகவும் பழமையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்தால், தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் என்ன தொடர்பு என்பது வெளிப்படும்.. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது, ஒவ்வொரு உறுதியான தமிழ் இந்துவுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.. இதைகண்டு அஞ்சவேன்டியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்களும் கிறித்தவ பாதிரிமார்களே!!

இறுதியாக, அய்யா அரவிந்தன் நீலகண்டன் அவர்கட்கு,

//முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை.//

இது உண்மையாக இருக்கலாம்.. ஆனால், இன்னொரு வாய்ப்பும் உள்ளது, இன்னும் தொன்மையான சமஸ்க்ருத கல்வெட்டுகள் “இன்னும் கிடைக்கவில்லை” என்பதற்காக சமஸ்க்ருதம் புதிய மொழி எனக்கூரலாகாதே…

//இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது.//

அய்யா, இது வாடா ஐதீகம் மட்டுமில்லை. தமிழிலும் உள்ளது. அப்பர்பெருமான் “வானவருக்கும் மேலான் காண் வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண் ” என்று இறைவனைப் பாடுகிறார். அதாவது, சமஸ்க்ருதம் தமிழ் இரண்டுமே ஒருசேர உருவானவை என்பதே பாரபட்சமில்லாத ஐதீகமாக உள்ளது…

//அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல்.//

ஆக, வேதங்களின் மொழி சமஸ்க்ருதம் இல்லை என்கிறீர்களா?? நான் தங்களைப்போல அறிஞர் இல்லை. ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் சம்ஸ்க்ருதம் Vedic Sanskrit, Classical Sanskrit என்று இரண்டு வகை உண்டு. முதலில் சொல்லப்பட்ட மொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டவை என்றும், அடுத்தது, புராணங்கள், இராமாயணம், மகாபாரதம், பிரம்ம சூத்ரங்கள், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்கள் எழுதிய உரைகளில் இருப்பதாக சொல்வர்!

//துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.//

எவராலும் மறுக்கமுடியாத உண்மை…

எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது, நான் பிறப்பால் தமிழனும் இல்லை. ஆனால் எனக்கு இந்த இரு மொழிகளையும் ஒன்றுடன் ஒன்று போரிடவைத்து கிறித்தவ, முகமதீய போதகர்கள், மற்றும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட கருப்புச்சட்டைக்காரர்களின் சதியே என்பது புலப்படுகிறது…

நன்றி!



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 Sathish Ramadurai on February 3, 2010 at 8:40 pm

நண்பர் வள்ளுவரே…
எல்லா மொழிகளையும் மதிக்கும் பக்குவம் எனக்கு இருக்கின்றது.. சமஸ்கிருதத்தை தாழ்த்தி பேசுவதாக கருத வேண்டாம்..

சமஸ்கிருதம் தான் எல்லா இந்திய மொழிகளின் தாய் என்று ஒரு கருத்து அவ்வப்போது மொழியப்படுவதால் தான் இந்த விவாதம்..

பிராகிருதம் என்று ஒரு (?) மொழி இருந்ததது அல்லவா..

பொருள்:
பிராகிருதம் – இயல்பான, அசலான, சாதாரண (natural , normal , ordinary ) வழக்கு
சமஸ்கிருதம் – சமைக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட (refined , constructed) வழக்கு

பிராகிருதம், சமஸ்கிருதத்திற்கு முந்தைய ஒன்று என்று கூறப்படுவது பற்றி அறிவோம்..

அந்த இயல்பான பிராகிருதம் ஒற்றை மொழி அன்று.. Sauraseni, Magadhi,Maharashtri , Pracya, Bahliki, Daksinatya, Sakari, Candali, Sabari, Abhiri, Dramili, Odri போன்ற பல பிராகிருத வழக்குகள் இருப்பதாகஇருந்ததாக சொல்லப்படுகிறது..

எனது புரிதல் என்னவென்றால் அந்த பிராகிருதம் என்ற சமஸ்கிருத சொல்லாடல், சமஸ்கிருதம் உருப்பெறுவதற்கு (உருவாக்கப்படுவதற்கு) முன்னால் பாரதத்தில் இருந்த அணைத்து வட்டார வழக்குகளையும், மொழிகளையும் குறிக்கும் ஒரு குறிச்சொல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard