New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 6. ஐயப்பன்மாரின் அதிர்வேட்டு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
6. ஐயப்பன்மாரின் அதிர்வேட்டு
Permalink  
 


 போகப் போகத் தெரியும் – 6

January 12, 2009
சுப்பு rss_icon16.jpg

 

ஐயப்பன்மாரின் அதிர்வேட்டு

களவு, பொய், காமம், சினம் முதலான எல்லாக் குற்றங்களையும் ஒழித்தவர் அப்பூதி அடிகள்; வலிமை வாய்ந்த இல்லற வாழ்க்கையில் நின்றவர் அவர். வீட்டில் உள்ள முகத்தல் முதலான அளவைக் கருவிகளும் மைந்தரும் பசுக்களுடனே எருமைகளும் மற்றுமுள்ள எல்லாமும் திருநாவுக்கரசு நாயனார் திருப்பெயர் சூட்டி அழைக்கும் அந்த ஒழுக்க நெறியில் நின்றவர் அவர்.

1784, பெரியபுராணம் / வர்த்தமானன் பதிப்பகம்

தன்னுடைய பிள்ளைகளைப் பெரிய திருநாவுக்கரசு, சிறிய திருநாவுக்கரசு என்று பெயரிட்டு அழைத்தவர் அப்பூதி அடிகள். வெய்யிலின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தண்ணீர்ப் பந்தல்கள், இளைப்பாறுவதற்கு மடங்கள், நீராடுவதற்குக் குளங்கள் எல்லாவற்றையும் அமைத்தார் அப்பூதி அடிகள். குளத்தின் பெயர் ‘திருநாவுக்கரசு குளம்’, பந்தலின் பெயர் ‘திருநாவுக்கரசு தண்ணீர்ப் பந்தல்’. வேறு பெயரே அவரது எண்ணத்தில் இல்லை.

அப்பூதி அடிகள் அந்தணர். திருநாவுக்கரசர் அந்தணரல்லாதவர். சாதியோ வருணமோ இல்லாத சன்மார்க்க பூமி அவர்களுடையது. அன்பிற் சிறந்தோரை அனைவரும் தொழவேண்டும் என்பதே சிவமதத்தின் சிறப்பு.

பெரியார், பகுத்தறிவு என்று ஆராயத் தொடங்கி பெரிய புராணத்துக்கு வந்துவிட்டேனே என்று யோசிக்க வேண்டாம். காரணம் இருக்கிறது.

பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் எரிக்கச் சொல்லி உத்தரவு போட்டவர் ஈ.வே.ரா.

maraimalai adigalஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார். (தமிழ் – தி.மு.க.- கம்யூனிஸ்ட் / ச.செந்தில்நாதன்).

மறைமலை அடிகளின் நாட்குறிப்பில் (16.06.1928):

திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், ‘தமிழ்நாடு’ ஆசிரியர் திரு. சொக்கலிங்கள் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாயக்கர் நடத்திவரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர்.

என்று எழுதப்பட்டுள்ளது.

எதற்காகப் பெரிய புராணத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்டால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனாரை பிராமணர் ஒருவர் கொடுமைப்படுத்தியதாக ஈ.வே.ரா.வைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் மேடைதோறும் பேசுகின்றனர். இவர்களுடைய கருத்துக்கு ஆதாரம் எது என்று நாம் அறிய விரும்புகிறோம்.

gopalakrishnabharatiஊடகங்களின் கடாட்சத்தால் உருவானதுதான் பகுத்தறிவு இயக்கம் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ‘நந்தனார்’ என்ற திரைப்படம்தான் (எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்தது – 1942) அவர்களுடைய வாதத்திற்கு அடிப்படை. திரைப்படத்துக்கு எது ஆதாரம் என்று பார்த்தால் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனம்’.

ஆனால் சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இல்லாத விஷயத்தை கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிவிட்டார். நந்தனாரை அந்தணர் கொடுமை செய்தார் என்ற செய்தி பெரியபுராணத்தில் இல்லை; அது வெறும் கற்பனை. மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ என்ற நூலைப் பார்க்கலாம்.

சிவபக்தியும் ராமபக்தியும் இருக்கும்வரை தமிழர்களைத் தடம் புரளச் செய்யமுடியாது என்று ஈ.வே.ரா.வுக்குத் தெரியும். கோடானுகோடி மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வழிபட்டுவரும் ராமனைக் கண்டாலே ஈ.வே.ரா.வுக்குக் கசந்தது.

ராமன் என்ற சொல்லுக்கு மகிமை இருக்கும்வரை தன்னுடைய கொள்கை விலை போகாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே “புனிதத் தன்மையைப் போட்டுடையுங்கள்” என்றார்; “மனிதப் பண்புகளை மறந்துவிடுங்கள்” என்றார்.

ஆனால் அவர் கணக்கு தப்பிவிட்டது. காலச்சக்கரம் வேறுவிதமாகச் சுழல்கிறது. பகுத்தறிவுத் தொண்டர்களைத் தேடிப்பார்த்தாலும் தென்படவில்லை. ராமசேது பிரச்சினையில் விமர்சனம் செய்த முதல்வர் கண்டனங்களைப் பார்த்தவுடன் கம்மென்று இருந்துவிட்டார். பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் “ராமரைப் பற்றி விவாதம் செய்யத் தயாரா?” என்று கேட்டார். இதுவரை பதில் இல்லை. இதுதான் இன்றைய யதார்த்தம்.

இதை இப்படியே விட்டுவிட்டு, காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வே.ரா.விடம் போகலாம். அன்றைய நிலையில் காங்கிரசுக்கு மாற்றாக இருந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?

‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரில் திராவிட இயக்கம்’ என்ற நூலில் பி.ராமமூர்த்தி எழுதுகிறார்:

நீதிக்கட்சி – அது தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம்வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரித்து நின்றது. அது ஜமீந்தார்கள் மற்றும் தரகு வியாபரிகளின் கட்சியாக இருந்தது.

(பக்கம் 20)

ஆங்கில அரசுக்கு ஆதரவாக உருவானதுதான் நீதிக்கட்சி என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். நீதிக்கட்சியின் சார்புடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:

சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், சி.நடேசன் ஆகிய பார்ப்பனரல்லாத பெருந்தலைவர்கள் (1916) தோற்றுவித்த இயக்கத்திற்குத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது என்றாலும் அந்த இயக்கம் நடத்தி வந்த ஜஸ்டிஸ் என்ற புகழ்பெற்ற ஏட்டின் பெயரையே கொண்டு அந்த இயக்கத்தை நீதிக்கட்சி என்று பரவலாக எல்லோரும் அழைக்கலாயினர்.

– பக்கம் 19 / திராவிட இயக்க வரலாறு / இரா.நெடுஞ்செழியன்

பிராமணரல்லாதார் இயக்கத்திற்கு அவசியம் இருந்ததா என்று கேட்டால் இருந்தது என்பதுதான் பதில். அன்றைய சூழலில் ஒரு சில காங்கிரஸ்காரர்கள் சாதி உணர்வோடு நடந்துகொண்டனர் என்பதற்கான சான்றுகள் பல உண்டு; உதாரணத்துக்கு ஒன்று.

இந்தியாவிலேயே முதன்முறையாக (1927) ஒரு பெண் உறுப்பினர் சட்டமன்றத்தில் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தக் காலத்தில் இசைவேளாளர் மரபைச் சேர்ந்த பெண்கள் கடவுள் பெயரால் தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. இவர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். நடைமுறையில் இவர்கள் வசதி படைத்தாரோடு தொடர்பு வைத்திருந்தனர்.

satyamurtiடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் (1927) ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ ஏற்படுத்துவதற்காகத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த எஸ். சத்தியமூர்த்தி இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்த்தார். மனித விடுதலையையும் பெண்களின் உரிமையையும் ஆதரித்துப் பாடிய பாரதியின் காலத்துக்குப் பிறகும் காங்கிரஸில் இத்தகைய குரல்கள் ஒலித்தன என்பது குறைபாடுதான்.

முத்துலட்சுமி / சத்தியமூர்த்தி விவாதத்தைத் திராவிடர் கழகத்தினர் தவறாமல் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் தேசிய எழுச்சிக்காகப் பாடிய பாரதியார் கருத்து என்ன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்; ‘ஈ.வே.ரா. தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் தொண்டர்கள் பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்’ என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிடுகின்றனர்.

சத்தியமூர்த்தியைக் காரணம் காட்டி பிராமணர்கள் மட்டுமே சாதி உணர்வோடு செயல்படுகிறார்கள் என்று சாதிக்கிறார்கள் திராவிடக் கழகத்தினர்.

ஆனால் தேவதாசிப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கூட பகுத்தறிவாளர்களின் இந்த வாதம் படுத்துவிடுகிறது. தங்களுடைய பிழைப்புக்கு ஆபத்து என்று கருதிய 7000 தேவதாசிகள் அப்பொழுதே சென்னையில் ஊர்வலம் நடத்தி இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தில் குறுக்குச் சுவர் எழுப்பி பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிரிப்பதே திராவிட கழகத்தின் நோக்கம். இந்தக் காரியம் இன்றுவரை கைகூடவில்லை. ஐயப்பன்மார் போடும் அதிர்வேட்டு முழக்கத்தில் பிரிவினைப் பேச்சு காதில் விழவில்லை.

சத்தியமூர்த்தியைப் பற்றிச் சொல்லும்போது ராஜாஜியைப் பற்றியும் சொல்ல வேண்டும். மத விஷயங்களில் ராஜாஜி ஒரு சீர்திருத்தக்காரர்.

rajajiராஜாஜி என்றழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி சேலத்தில் பிரபலமான வழக்கறிஞர். இவர் 1916ல் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்; 1917ல் சேலம் நகரசபையின் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜியைப் பற்றி எஸ்.எஸ். மாரிசாமி எழுதுகிறார்:

ராஜாஜி, சுவாமி சகஜானந்தாவை சேலத்தில் வரவேற்று சேலம் கல்லூரி முதல்வர் யக்ஞ நாராயண அய்யரை விருந்து கொடுக்கச் செய்தார். இவரும் விருந்தில் கலந்துகொள்ளவே மேல்ஜாதியினர் பரவலாக எதிர்த்தார்கள், ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள்.

ராஜாஜியின் கடும் உழைப்பாலும், பிரசாரத்தினாலும் தமிழ்நாடு கதர் உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்தக் கதரில் மூன்றில் ஒரு பாகம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி சரித்திரம் படைத்தது.

– பீஷ்மர் ராஜாஜி / எஸ்.எஸ். மாரிசாமி

மேற்கோள் மேடை:

பிராமண துவேஷங் காட்டி தேசநலத்தை நாடுவது தேசத்துக்குத் தீங்கு செய்வதையொக்கும். நாம் பிராமணன் மீது எவ்வெக் குற்றங்களைச் சுமத்துகிறோமோ அவ்வக் குற்றங்களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர்.

– ஈ.வே.ரா. / 11.10.1918.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard