என்னுடைய திருப்பதி கல்வெட்டுக் கட்டுரையில் சட்டம் ஒழுங்கு முறை பற்றி நண்பர் செல்வமுரளி தன் வக்கீல் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் (இராஜேந்திர சோழன் திருப்பதியில் சட்டத்தைக் காட்டித் திருத்தியது) அவர்கள் மேலும் இது போன்ற விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்ததாகவும், அவர் தெரியப்படுத்தினார். ஏன் இதைப் பற்றி விரிவாக எழுதக் கூடாது என்று தோன்றியது. இன்றைய நிலையில் நாம் (இந்தியாவில்) அனுபவித்து சட்டம் ஒழுங்கு நிலைமையும் தண்டனை என்பது கூட கேலிக்குரியதாகப் போய்விட்டதையும் நினைத்துப் பார்த்து இக் கட்டுரையை வடிவமைத்திருக்கிறேன்.
ஆகவே இந்த சட்டம் - ஒழுங்கு - தண்டனை இவை சோழர் காலத்தில் எப்படி இருந்தது என்பது நமக்கு முதலில் தெரியவேண்டும். நான் படித்தவரையில் சோழர்களின் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு. ஏன் அது பொற்காலம் என்றால் ராஜ்ய பரிபாலனை என்பது ஏறத்தாழ தர்மத்துக்கு உட்பட்டு இருந்தது. அரசாங்கத்தின் நேர்மை, கிராமம் வரை பரவி இருந்தத்தால், ‘ஊர்’ எனச் சொல்லப்படும் கிராம சபைகள் (இப்போதைய பாணியில் அரசமரத்தடி பஞ்சாயத்து), அந்த அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு தலை வணங்கி நேர்மையான் முறையிலேயே தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்புகளை கல்வெட்டில் பதித்து விட்டு சென்றனர்.
முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். இந்தக் கட்டுரை முழுவதும் கல்வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் அடிப்படையிலேயே எழுதி வருகிறேன். அந்தக் கல்வெட்டு விவரமும் செப்பேடு விவரமும் முடிந்த வரையில் அடிக்குறிப்பாகத் தந்து விடுகிறேன். சில விவரங்கள் குழப்பமானதாகவும் சில விவரங்கள் சில ஜாதிகளுக்கு சாதகமாகவும் இருக்கலாம். ஆனால் இவை அக்காலத்தில் அக்கால சூழ்நிலையை மனதில் கொண்டும், அந்தந்த வகுப்பினரின் தியாகங்கள், நேர்மை, நிர்வாகம், கல்வியறிவு, ஆளுமை இவைகளுக்காகவும் கொடுக்கப்பட்ட சலுகையாகவே அவை காண்பிக்கப்படுகின்றன. அதே சமயத்தின் இந்த சட்டம் - ஒழுங்கு - தண்டனை என்பது பொது மக்கள் அனுபவித்ததை முன் வைத்தது என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவும். ராஜ வம்சத்தினர் சம்பந்தப்பட்ட வரை இந்த சட்டம் ஒழுங்கு சில பலவீனங்களையும், சில நேர்மையான முடிவுகளையும் சந்தித்த நிகழ்ச்சிகள் உண்டு.
போரில் கொல்லப்பட்ட எதிரி நாட்டு மன்னனை தம் கோட்டைக் கொடிக் கம்பத்தில் தலையைச் செருகி பயமுறுத்திய காட்சிகளும் உண்டு. முடிந்த வரை இப்படிப்பட்டவைகளை தவிர்த்து விடலாம் என்றிருக்கிறேன். காரணம் யுத்தத்தில் ஏற்பட்ட மரணங்கள் கொலைகள் இவைகள் குற்றக் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் நேற்றைய தினங்களில் ஈழத்தில் நடந்த யுத்தத்தில் பொது ஜனங்களை இரக்கமின்றிக் கொன்றார்களே, அவை போல கோழைத்தனமான நடவடிக்கைகள் அந்தக் கால கட்டத்தில் இல்லை என்பதை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இருந்திருக்கலாம்.. மிகச் சிறிய அளவே நடந்திருக்கலாம், ஆனால் ஆதாரங்கள் இல்லை.
சரி, ஆரம்பிப்போமா?
சோழர்காலக் கல்வெட்டுகளைப் பார்க்கையில் அவர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்தது ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்கள் என்பதுதான். மதவேற்றுமையின்மை, பிரிவுகளிலும் ஒற்றுமையைக் காண்பித்து சேர்த்து வைப்பது, நாடெங்கிலும் உள்ள ஜனங்களின் வாழ்வாதரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது, பஞ்சம் வரும்போதும் வெள்ளம் வரும்போதும் களத்தில் இறங்கி சாதாரண ஜனங்களைப் பாதுகாத்தது, இவை எல்லாவற்றையும் விட வெகு ஜன வாழ்க்கையில் தொல்லையில்லா வாழ்வும், அப்படியும் மனிதர்கள் திருடர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளர்களாக மாறி தொல்லை தந்த சமயத்தில் அவர்களைத் திருத்த எத்தகைய வழி வகைகளைச் செய்தது என்பதையும் குறித்துக் கிடைத்த கல்வெட்டுகளையெல்லாம் பார்க்கையில் மறுபடி நம் தமிழகத்துக்கு இப்படி ஒரு நீண்டகால நிலையான அரசு கிடைக்குமா என்ற ஏக்கம் வரத்தான் செய்யும்.
ராஜத்துரோகமும் மரணதண்டனையும்:
குற்றங்களிலேயே உயரிய குற்றம் என்பது ராஜத் துரோகம்தான். கொலைக் குற்றம் கூட இதற்கு அடுத்தபடிதான். எதைப் பொறுத்தாலும் ராஜத்துரோகத்தைப் பொறுக்கவில்லை என்பதற்கு எளிதான காரணம், ஆளும் தலைமையை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் என்பதற்குதான். ராஜத் துரோகம் என வரும்போது அன்றிருந்த சில சூழ் நிலைகளை நாம் முதலில் கவனித்தில் கொள்ள வேண்டும். கணக்கிலடங்கா அரசுகள். இந்த சிற்றரசுகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒரு பலமான அரசாங்கத்தின் கீழ் ஆள வேண்டிய சூழ்நிலை. மனிதர் மனங்கள் விசித்திரமானவை. பலவான் பலமாக இருக்கும் வரையில் பயந்துகொண்டே இருப்பவை, அந்தப் பலவான் பலவீனனாகத் தெரியவரும் பட்சத்தில் இதுவரை கண்ட அவனுடைய பலங்களைப் பொடிப் பொடியாக்கிய சிற்றரசர்கள் ஏராளமானோர் இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமாக இருந்தபோது அடங்கி நடந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் என்ற பலமான அரசன் போனபின் தங்களுக்குள் எப்படியெல்லாம் சண்டையிட்டு மாண்டு போய் சுல்தான்களிடம் சரணடைந்தும், ஐரோப்பியர்களின் காலில் விழுந்தும் அழிந்தார்கள் என்பது நேற்றைய செய்திதான்.
ஆனால் பராந்தக சோழன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் மத்திம காலம் (கி.பி 900 முதல்கி.பி 1178-1200 என்று வைத்துக் கொள்வோம்) ஏறத்தாழ முன்னூறு வருடங்களுக்கு தமிழகத்தில் ஒரு தர்ம பரிபாலனமே நடந்துள்ளது.சோழராஜாங்கம் பலத்தை அப்படியே முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டே பாரதத்திலேயே ஒரு உயரிய அரசு என்ற பெயரைப் பெற்றது.
ராஜத்துரோகக் குற்றங்கள் விசாரணை மற்றும் தண்டனை விஷயங்களில் பொதுவாகவே பேரரசர் மூலமாகவே குற்றங்கள் நடந்த அந்தந்தப் பகுதிகளுக்கு உத்தரவு செல்கிறது. சோழர்களின் முதல் முன்னூறு ஆண்டுகளில் அத்தனையாக ராஜத் துரோகக் குற்றங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால் கி.பி. 1200க்கு பிறகு சோழர்கள் ஆட்சியின் கடைசி ஐம்பது ஆண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகள் இந்த ராஜத் துரோகக் குற்றங்களையும் தண்டனையயும் பற்றிப் பேசுகின்றன.
முதல் முன்னூறு ஆண்டுகளில் ராஜத்துரோகம் என்று பார்க்கையில் மிகவும் புகழ்பெற்றது, காட்டுமன்னார் கோயில் (வீரநாராயணபுரம்) அருகே அனந்தீஸ்வரம் கோயிலில் கிடைக்கப்பெற்ற உடையார்குடி கல்வெட்டே ஆகும். இந்தக் கல்வெட்டினை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன். (உபயம் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம்.
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"
. இந்தக் கல்வெட்டுதான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு வித்திட்டது எனலாம். அரசாட்சிக்கு வரவேண்டிய பேரரசர் சுந்தரசோழன் மகனான ஆதித்த கரிகாலனை சிலர் திட்டமிட்டுக் கொன்றுவிட்டனர் (கி.பி. 969/70). இதை ஆதி முதல் அந்தம் வரை விளக்க வந்த கல்கி, அவர் கதையை முடிக்கும்போது யார்தான் கொன்றார்கள் என்பதை சொல்லாமலே விட்டிருக்கிறார். இது கதையாசிரியரின் யுக்தி என பலர் சொன்னாலும், கல்கி தன் கதையில் முடிவு சொல்லாமல் போனது பலருக்குப் பல யூகங்களைத் தந்திருந்தது என்றும் சொல்லலாம். கல்கிக்கு நன்றாகவே தெரியும், கல்கி என்றல்ல, அப்போதே இத் தொடுப்பு கொடுத்த நீலகண்ட சாஸ்திரியாருக்கு, சதாசிவம் பண்டாரத்தாருக்கு இன்னம் பலருக்கும் தெரியும் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பது.. ஆனால் ஏன் இதை கதையில் தெரிவிக்கவில்லை என்றால் இந்தக் கதை முடிந்த கால கட்டத்தில் கொலையாளிகாள் யார் என்பது கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவேதான் கல்கியும் இந்த நியாயத்துக்குத் துணை சென்றிருக்கிறார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு (கி.பி.986/87) செதுக்கப்பட்ட இந்த உடையார்குடி கல்வெட்டும் இதைத்தான் சொல்கிறது. ரவிதாசன் போன்ற பிராம்மணர்கள் (இவர்கள் பாண்டியநாட்டு சதிக்காரர்களாக கல்கி கதையாகத் தெரிவித்திருந்தாலும் அவர்களில் சோழ நாட்டினரும் இருந்தனர் என்பதும், இவர்கள் குடியில் பிராம்மணராகப் பிறந்ததால் அவர்களுக்கு கொடிய தண்டனைகள் அளிக்காது, அவர்கள், அவர்களது சொந்தக் காரர்கள் அனைவருடைய நிலபுலன்களையும் பறித்து, அவற்றை விற்று, அதன் மூலம் பெறப்பட்ட செல்வத்தால் சிவன் கோயில் புண்ணியம் செய்யுமாறு இந்தக் கட்டளை ராஜராஜ சோழனால் அவன் ஆண்ட இரண்டாம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டு அந்த ஆணையை நிறைவேற்றுமாறு வீரநாராயணபுர சதுவேதி மங்கலத்தாருக்கு (பொது அல்லது ஊர் சபை) அனுப்பப்பட்டுள்ளது. சொந்தக்காரர்கள் என வரும்போது குற்றம் செய்யாதவர் அவர்களோடு இருந்தாலும், அவர்களும் குற்றத்துக்குத் துணை போனதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஜராஜ சோழனின் அண்ணனே கொலையுண்டாலும், கொலை செய்தவர் யார், தர்ம நியாயம் என்ன சொல்கிறது என்பதையும் ஆலோசித்துப் பார்த்து இந்த முடிவை மன்னர் எடுத்திருக்கக்கூடும் என்றுதான் சரித்திர ஆராய்ச்சியாளர் பலர் சொல்கிறார்கள். இந்த ராஜத்துரோகமானது பெண்கள் விஷயத்தில் அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டு தண்டனையை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னும் சுவையாக இருக்கும்.ராஜத்துரோகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு அன்னியநாட்டு இளவரசியின் (வடநாட்டு கங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், இவளோடு, இவள் அண்ணனும் இலங்கை மன்னனும் பிடிபட்டிருக்கிறான்) மூக்கை மட்டும் அரிந்து அவளை அவள் நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக ராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்று சொல்கிறது. இது நடந்தபோது ராஜேந்திரசோழரும் அவர் மூத்த மகனான ராஜாதிராஜனும் இணைந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். இது சூர்ப்பனகையின் மூக்கை அரிந்த லட்சுமணனின் செயலோடு ஒப்பு நோக்கவேண்டும் என்று சிலர் சொன்னாலும் குற்றத்தின் ஆழம் தெரியாமல் நாம் எதுவும் சொல்லமுடியாதுதான்.
ஆனால் அக்காலச் சூழ்நிலையில் பெண்களுக்கு, குறிப்பாக சோழதேசத்துக்கு எல்லைக்குட்பட்ட தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மன்னர்கள் நல்ல சூழ்நிலையை வகுத்துக் கொடுத்திருந்தார்கள். இவை வெளிநாட்டு மகளிருக்கு இல்லை என்பதையும் போரில் பிடிபட்டோர் அவர்கள் நிலைக்குத் தகுந்தவாறு சோழ நாட்டில் நடத்தப்பட்டனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ராஜத்துரோகம் யார் செய்தால் என்ன, துரோகம் என்றாலே கடுமையான தண்டனை அவசியம் தேவைதான்.
பொதுவாகவே ஊர் எனும் பொதுச்சபை சோழர் காலத்தில் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது தெரிந்த செய்திதான். இந்த சபையே முக்கியமாக ஊருக்கு ஊர் எல்லா விஷயங்களையும் கையாண்டது. இருந்தாலும் தர்மாசனம் என்றொரு அமைப்பு வகையும் இருந்ததாக செங்கல்பட்டு மாவட்டம் திருவடந்தை கோயிலில் கிடைத்த கல்வெட்டு (SII-XIII – No.87) ஒன்று தெரிவிக்கிறது. தர்மாசனம் மூலம் நீதி நியாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தர்மாசனம் அமைப்பிலோ, அல்லது ஊர் சபையின் முடிவிலோ பேதங்கள் வந்தால் மட்டுமே அரசனின் பிரதிநிதியாக அந்தந்த பிராந்தியத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் நேரடியாகத் தலையிட்டு அரசனின் சார்பாக நீதி வழங்கியதாக பல கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. (ARE 200/1929).
என்னதான் ராஜத் துரோகம் செய்தாலும் யாருக்கேனும் மரணதண்டனை விதிக்கப்பட்டதா என்றால், கிடைத்த கல்வெட்டுகள் மூலம் பார்க்கையில் மரணதண்டனை என்பது அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். அதற்காக மரணதண்டனை என்பதே கிடையாதா என்று கேள்வி எழலாம். மரணதண்டனை அறவே சோழர்களால் ரத்து செய்யப்படவில்லை என்பது, மூன்றாம் குலோத்துங்கன் (1178-1230) காலத்தில் எடுக்கப்பட்ட ‘வேளாளக் குடிக்கு மட்டுமே இந்த தண்டனையிலிருந்து விலக்கு’ (ARE 200/1929) என்ற ஒரு கல்வெட்டுக் குறிப்பிலிருந்து தெரிகின்றது. வேளாளர் குலத்துக்கு பெரும் சிறப்பு ஏற்பட்டிருந்தது சேக்கிழார் பெருமான் போன்ற பெரும்புலவர்களால். மேலும் சிவனடியார்கள் பலரும் வேளாளர் குலத்தினரே. அமைச்சர்கள், வீரர்கள், ஆசிரியர்கள் எனப் பெரும்பான்மையாகவும் மிகவும் செல்வாக்காகவும் திகழ்ந்த வேளாளர் குடிக்குப் பெருமை சேர்க்கவே இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
அதே போல ராஜ துரோகம் நடைபெற்றது என்பது தெரியவரும் பட்சத்தில் சோழ அரசர்கள் அதை நியாயமான முறையிலேயே விசாரித்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வரும். நம் காலத்தில் விசாரணைக் கமிஷன் அமைப்பது போலவே ‘ராஜ ராஜப் பெருவிலை’ என்ற பெயரில் தனி நபரோ அல்லது சில உயர் அரசாங்க அதிகாரிகளோ சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை செய்கின்றனர். விசாரண முடிவை அரசனிடம் சமர்ப்பித்து அதற்கான தண்டனைகளையும் அரசனிடம் தெரிவித்தவுடன் அதற்கேற்றவாறு அரசர்கள் ஆணை பிறப்பிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆணைகள் கல்வெட்டுகளாக பல கோயில்களில் கிடைத்துள்ளன. 1917ஆம் ஆண்டு கிடைத்த தொல்லியல் குறிப்புப்படி இப்படிப்பட்ட வழக்கு ஒன்றை நாம் பார்ப்போம்.
பனையூர் நாட்டு குணாகணாதிமங்கலத்தில் ஒரு தனவந்தர் ராஜத் துரோகம் செய்ததை நிரூபித்து ராஜராஜப்பெருவிலைக் குழுவினர் மூன்றாம் ராஜராஜசோழனிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அவர்கள் ஆலோசனைப்படியே சோழன் அந்த தனவந்தரின் நிலங்களில் ஐந்து வேலி நான்கு மா அளவில் பறிக்கப்பட்டு அவை உடனுக்குடன் விற்கப்பட்டு அதை வாங்கியவர் கையெழுத்தும் பெறப்பட்டு ராஜராஜப் பெருவிலையினர் அந்தப் பணத்தை அரசு பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டதாக இந்தக் கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. (ARE 244/1917).
இன்னொரு கல்வெட்டு (ARE 112/1911) ஒன்று இதே போல ஒரு ராஜத்துரோகக் குற்றத்தை விசாரித்த எட்டு பேர் கொண்ட ராஜராஜபெருவிலையினர் குழு அங்கேயே அவரது நிலங்களை ஏலமாக விடுத்து 33000 காசுகளை அரசு கஜானாவில் சேர்ப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது. இது நடந்த ஆண்டு கி.பி 1250.
இன்னொரு கல்வெட்டு (ARE 506/1918), திருவெண்காடு எனும் ஊரில், இப்படி அரசனுக்கு எதிராக போன ஒருவனின் நிலத்தை, ‘நெறியுடைய மூவேந்த வேளான்’ எனும் பெயருடைய அரசு அதிகாரி பறிமுதல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது நடந்த காலம் மூன்றாம் ராஜராஜனின் 18 ஆம் ஆண்டுக் காலம் (கி.பி.1235).
ராஜத்துரோகத்துக்கு சமமாக கருதப்படும் (அல்லது இன்னமும் ஒருபடி மேலாக) இன்னொரு குற்றம் சிவத்துரோகம். ராஜத்துரோகத்தைக் கூட மன்னர்கள் பொறுத்துக் கொள்வார்கள் போலும், ஆனால் சிவத்துரோகத்தை மட்டும் சகித்துக் கொள்வதாக இல்லை என்பது ராஜராஜ காலன் தொட்டு கிடைத்து வரும் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.
சிவத்துரோகம் எனும் குற்றமாவது கோயில் நிலங்களை அபகரித்தல், நன்கொடையாக அளிக்கப்பட்ட நகைகளையும், பணங்களையும் அபகரித்தல் போன்றவை. இவை மட்டுமல்ல, ஒருவர் ஒரு கோயிலுக்கு எண்ணெய் ஒரு வருடம் ஊற்றுவதாக ஒப்புக்கொண்டு, அவர் அதை செய்ய மறுப்பது, கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தோர் ஒழுங்காக செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியையும், வரிகளையும் செலுத்தாமல் போவது கூட சிவத் துரோகத்தில் வரும். ஒவ்வொரு சமயத்தில் அந்த ஊரை ஆளும் ஊராரே கூட குற்றம் செய்தாலும் கூட கடுமையான சட்ட விதி முறைகளின் படி தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது.
ராஜத்துரோகத்தில் வெறும் நில அபகரிப்பு மட்டுமே தண்டனை என்றால் சிவத்துரோகத்தில் அளிக்கப்பட்ட ஒரு தண்டனையைப் பாருங்கள். அதுவும் மேற்சொன்னபடி ஊராரே சம்பந்தப்பட்ட குற்றம் இது.
காலம்: ராஜராஜ சோழனின் நான்காம் ஆண்டு (கி.பி. 988).
இடம்:படுவூர் நாடு (தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம்)
குற்றவாளி : ஊரார் சபையே
தீர்ப்பு: திருவடந்தைக் கோயிலில் உள்ள ஸ்ரீவராக தேவருக்கு ஒரு நாளைக்கு ஒரு உழக்கு என்ற அளவில் வருடத்துக்கு 90 நாழி எண்ணெய் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் வட்டியாக 20 கழஞ்சு பொன் அரசு அதிகாரியான வள்ளுவநாட்டு துக்கய்யன் சாத்தான் வசூலிக்கவேண்டும், மேலும் இப்படி தவறியதற்கு தண்டனைப்பணமாக நாலரைக் காணம் ஊர் தர்மாசனத்துக்கும் இந்தச் சபை செலுத்தவேண்டும். (SII Vol. - 8, No.87).
தண்டனை, வட்டி இவையெல்லாம் சரி, இந்த ஊரார் செய்த குற்றம் என்ன தெரியுமா.. கோயில் நிலத்தில் வரும் ஒரு குத்தகை பணத்தை எடுத்து தவறுதலாக ஊரார் அரசு கஜானாவுக்கு செலுத்தவேண்டிய நீர் வரியைக் கட்டியதுதான். இங்கே ஒன்று ஆலோசிக்கவேண்டும். பாருங்கள்! ராஜராஜன் காலத்திய சட்டம் மிகக் கறாராக இருந்ததைக் காண்பிக்கிறது. கோயில் என்பது தனி, ஊர் ஆளுகை என்பது தனி என்பதையும், வேலியே பயிரை மேய்ந்தாலும், அது தவறுதலாகவும், சிறிய அளவே ஆயினும் நீதியின் கண் முன்பு நக்கீரர் சொல்வது போல குற்றம் குற்றமே. ஊரார் என்றாலே அரசு அலுவலகர்கள்தானே., அவர்களுக்கே இப்படி ஒரு இழிவான முறையில் தண்டனை என்பதையும் அதுவும் கல்லில் பொறிக்கப்பட்டு எதிர்காலத்தில் எல்லோரும் பார்க்கவேண்டும் என்று எழுதப்பட்ட தண்டனை என்பதையும் பார்க்கவேண்டும்.. இன்றைய ஆட்சியாளரும், கோவில் அலுவலர்களும் இதைக் கவனிக்க வேண்டும்.
ராஜராஜன் காலத்திலேயே அரசு இப்போது இருப்பது போல ‘கோவில் மேலாளர்’ களை பல கோவில்களுக்கு நியமித்தது. இவர்கள் வேலையே கோவில்களைக் கண்காணித்து குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அரசுக்குத் தகவல் அனுப்பவேண்டும். மற்ற்படி கோவில் நிவாகங்களை ’மகேசுவர சபை’ என்றொரு நிர்வாக அமைப்பு கவனித்துக் கொள்ளும். இந்த அரசு கோவில் மேலாளர்கள் மட்டும் தயவு தாட்சண்யமின்றி செயல்பட்டதும் சில கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. கோயில் நிலங்களில் ‘கை’ வைத்த சிலரைப் பிடித்து அவர்களின் மொத்த நிலங்களையும் பறிமுதல் செய்ததும் கல்வெட்டுகளில்குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று, கோயில் சம்பத்துகளைக் காக்கவேண்டிய திருவறை சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி பெருமக்கள் சபை பொன் பாத்திரங்களையும், கோயில் நகைகளையும் தவறாக பயன்படுத்தினர் (only ‘mis-use’ not stealing) என்பதை அறிந்த ராஜ ராஜ சோழனது அலுவலர் சம்பந்தப்பட்ட அத்தனை பேருடைய நிலங்களையும் பறிமுதல் செய்தார் என்பதையும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது (ARE 359/1917).
கோயில் என வரும்போது, குற்றம் செய்பவர் பூசை செய்யும் பிராம்மணர் (இவர்களை சிவப்பிராம்மணர் என அழைப்பர்) ஆயினும் தண்டனைகளினின்று தப்பிக்க முடியாது. இப்படித்தான் ஒரு கல்வெட்டில் (ARE 279/1927) இரண்டு சிவப்பிராம்மணர்கள் அம்மன் நகைகளை எடுத்து தன் கள்ளக் காதலிகளின் கழுத்தில் அலங்கரித்து அழகு பார்த்ததைக் கண்டுபிடித்த ‘மகேசுவர சபை’ முதலில் கண்டித்துத் திருத்தப்பார்த்து அரசனிடம் புகார் செய்தது. மூன்றாம் ராஜராஜனின் 28 ஆவது வருடத்தில் அவனுக்குக் கிடைத்த இந்தப் புகார் மீது விசாரணை செய்து அழைத்து வருமாறு இரண்டு அலுவலர்களை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் இந்த சிவப்பிராமணர்கள் அந்த அரசு அதிகாரிகளையும் அடிக்க முன்வந்ததும், இதனால் கோபமுற்ற மகேசுவர சபையும் ஊர் சபையும் அந்த இருவரையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தியதாக இந்தக் கல்வெட்டு கூறுகிறது. என்ன தண்டனை என்று மட்டும் சொல்லவில்லை.
இந்த அரசன் காலத்திலேயே திருநாகேஸ்வரத்தில் ஒருவர் சுவாமியுடைய ஆடைகளைத் தம் வசம் எடுத்துக் கொண்டார். அத்தோடு இல்லாமல் கோயிலுக்கு என விடப்பட்டிருந்த செங்கற்களை தம் வீடு கட்டப் பயன் படுத்தி இருக்கிறார். விஷயம் வெளியே தெரிய வந்தது. அவ்வளவுதான், மனுஷன் இதுவரை சம்பாதித்த சொத்தெல்லாம் அம்பேல். அவை ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 4000 காசுகளை கோயில் பொக்கிஷத்துக்கு அனுப்பி வைத்த பிள்ளை யாதவராயர் எனும் அரசு அலுவலர் அப்படியே சும்மா போகாமல் மறக்காமல் கல்வெட்டிலும் போட்டு விட்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் அறிந்து கொள்ளச் செய்துவிட்டார். ஒருவேளை இதைத்தான் ’சிவன் சொத்து அபகரிப்பு, குல நாசம்’ என்று சூசகமாகச் சொன்னார்களோ..
இரண்டாம் ராஜராஜன் (1053-62) காலத்திலேயே மகேசுவர சபைக்கு பூரண அதிகாரங்கள் அரசனால் வழங்கப்பட்டிருந்தது. பந்தநல்லூர் பசுபதீஸ்வரம் ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டில் (ARE 115/1932) இந்த மகேசுவர சபையோடு, தேவகண்மீர், பதிபாடுடையோர் (தேவாரம் பாடுவோரை பதிகம் பாடுவோர் எனக் குறிப்பிடுவது இதன் மூலம் தெரிய வரும்), ஸ்ரீகாரணம் செய்வோர் சபை போன்றோர் கலந்த பெரிய சபை, கோயில் சம்பந்தப்பட்ட இந்தக் குற்றங்களை ஆராய்ந்து குறிப்பாக சிவப்பிராம்மணர்கள் தவறு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
சிவத்துரோகம் என்பது சிவன் கோயில் என்றல்லாமல் எல்லா தெய்வங்களின் கோயில்களில் நடக்கும் குற்றங்களுக்கும் பொதுவாகக் கொடுத்த பெயர்தான். ஏகப்பட்ட கல்வெட்டுகள் சின்னச் சின்ன கோயில் குற்ற விஷயங்கள் பற்றி கூடப் பேசுகின்றன. தமிழ்நாட்டில் தெய்வங்களின் ஆலயங்கள் இன்னமும் சீர்மையாகவும், புனிதம் தவறாமலும் இருப்பது நம் எத்தனையோ பேருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் சோழர்கள் மிக மிக அதிகமான முறையில் கோயில்களையும் அதன் புனிதத் துவத்தையும் காத்து வந்தனர். அந்த அரசர்கள் எளிமை, அதிலும் ஆலயத்துக்குச் செல்லும்போது அரையாடையுடன் செல்வது போன்ற சிற்பங்கள் - ராஜராஜசோழனும், அவன் மனைவியும் இப்படித்தான் சென்றதாக ஒரு சிற்பம், அதற்குப் பிறகு சேக்கிழார் பெருமானுடன் இரண்டாம் குலோத்துங்கன் அரையாடையுடன் தில்லை கோயிலில் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதிலும் தெரியும். இப்போதும் எத்தனைதான் அத்து மீறல்கள் ஆட்சியாளர் மற்றும் கோவில் அலுவலர்கள் மூலம் வந்தாலும் சோழர்களின் புனிதத்துவமான தர்மச் செயல்கள் இந்த நாட்களிலும் நம்மைக் காத்து வருகிறது என்றே சொல்லலாம். இனிவரும் நாட்களிலும் நம்மைக் காக்கும்.
இந்த ராஜத்துரோகம், சிவத்துரோகத்துக்கு அடுத்துதான் கொலை, கொள்ளை, திருட்டு, வெட்டு, வரி ஏய்ப்பு இன்ன பிற குற்றங்கள் எல்லாம், அவையும் பார்ப்போமே..
சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு குற்றம் நிகழ்ந்தது. அமெரிக்க அரசாங்கத்து அதிகாரி ஒருவர் தம் பின்னால் தன்னைத் தொடர்ந்த இரண்டு பாகிஸ்தானியரை சந்தேகத்தின் பெயரில் சுட்டுக் கொன்றுவிட்டார். பாகிஸ்தானும் அவரைச் சிறையில் போட்டுவிட்டது. பிறகு நடந்த அரசியல் பேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பேரம் என்பது அந்தக் கொலைக் குற்றம் செய்தவர், ’கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தக்க நிவாரணமும் உதவியும் செய்தால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவர்’ என்று ஒரு சின்ன சட்ட விலக்கு விதிப்படி அவர் அப்படி உதவி செய்ய ஒப்புக்கொண்டால் விடுவிக்கப்படுவதுதான். இதை அந்த அமெரிக்கரும் ‘மிகத் தாராள மனதோடு’ ஒப்புக்கொண்டு உதவிப்பணமும் கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு சுகமாகத் திரும்பினார். இது சமீபத்தில் நடந்ததால் அந்த நினைவுக் குறிப்பிலிருந்து தருகிறேன்.
இது அரசியல் சௌகரியத்துக்காக ஏற்பட்ட ஒரு காரியம் என்பதாலும் அதுவும் அமெரிக்காவின் கோபத்திலிருந்து பாகிஸ்தான் மீள எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சட்ட விலக்கு ஏளனத்துக்குரியதாகப் பத்திரிகைகளால் விமரிசிக்கப்பட்டது. ஆனால் சோழர் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சட்ட விலக்கு இருந்தது. சாதாரண மக்களில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் கொலையுண்டவர் குடும்பத்தைக் காப்பாற்றக் கொலை செய்தவர் எல்லா வகைகளிலும் உதவ வேண்டும். (1970 களில் ‘நீதி’ என்று ஒரு திரைப்படம், சிவாஜி நடித்தது. அந்தப் படக் கதையும் இந்த வகைப் பட்ட சட்ட விலக்கினைக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டதே). சாதாரண மனிதர்கள் என்று வரும்போது இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை சட்டபூர்வமாக நோக்காமல் மனித நலனை மனதில் கொண்டும், பாதிக்கப்பட்டவருக்கு என்ன செய்தால், எப்படி அதை நிறைவேற்றினால், அவர்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஊரார், நாட்டார், தர்மாசனம் போன்ற சபைகள் நெறிமுறையில் செயல்பட்டன.
இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள். அதிலும் ஆட்சியாளர்கள் எப்போதெல்லாம் தங்கள் கட்சியாளர் குற்றம் செய்யும்போதெல்லாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுகிறதோ அப்போதெல்லாம் ஒரே வார்த்தையைக் கிளிப்பிள்ளை போல அடிக்கடி சொல்வர். அந்த வார்த்தை ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்பது. ஆனால் சட்டம் அப்படி முன்வந்து தன் கடமையைச் செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்கள் குறுக்கிட்டு அவர்கள் குற்றத்தை அப்படியே அமுக்கி விடுவர். இது ஆட்சியாளர் செய்யும் தவறு, இடையூறு, தர்மத்துக்கும் சட்டத்துக்கும் எதிரானது,
ஆனால் சோழர் கால விதிமுறைகள் அப்படி அல்ல. கிராமங்கள் அளவில் ஊர், தர்மாசனம், பெரிய ஊர்களில் நாட்டார் என தீர்ப்பாயங்களை அமைத்து அவர்களுக்குப் பரி பூரண அதிகாரமும் கொடுத்து இருந்ததால் அரசு இடையூறு இல்லாமல் செவ்வனே தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் தன் கடமையைச் செவ்வனே செய்தபோது அரசிடமிருந்து எந்தக் குறிக்கீடும் கிடையாது. மாறாக இன்னமும் சீராக நிறைவேற்றும்படிதான் ஆலோசனை கூறும்.
கொலைக் குற்றங்களுக்குக் கூட மரணதண்டனை என்பது ஏன் தரப்படுவது இல்லை என்பது மிகுந்த ஆராய்ச்சிக்குரிய ஒன்று. எந்த குற்றத்துக்கும் மிகப் பெரிய தண்டனை என்பது குற்றம் செய்தவன் தான் செய்த குற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் வருந்தவேண்டும் என்ற ஒரு நீதியும், அத்துடன் இல்லாமல் தான் செய்த குற்றத்தைக் கல்லில் எழுதி கோவில் சுவர்களிலோ அல்லது பொது இடங்களிலோ பொறிக்கப்படும்போது குற்றம் செய்தவன் எப்படியெல்லாம் அவமானப்பட்டு மனதுக்குள் புழுங்குவான் என்பது அனுபவிப்பனுக்குத்தான் புரியும். இப்படிக் கல்லிலே பொறிக்கப்படும் எழுத்துகள் மற்றவர்கள் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கும் ஒரு பாடம் என்பதும் இப்படிப்பட்டவை பொது மக்கள் நலமுடன் வாழ உதவும் என்ற பொதுநல நோக்கையும் நாம் கவனிக்கவேண்டும். சமூகம் என்பதே மக்கள் எல்லோரும் கலந்து ஒற்றுமையாக கூடி குலவி இன்பமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட அமைப்புத்தான்.
பொது மக்கள் என்றில்லை. ஒரு சில சமயங்களில் ராஜ வம்சத்தினரோ, குடும்பத்தினரோ (யுத்தத்தினால் அல்ல) ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அங்கு ஒரு கொலை நிகழும்போது கூட இந்தச் சட்டவிதிகள் நியாயமாக செயல்படுத்தப்படுகின்றன. அரசர்கள் அல்லது மிகப் பெரிய பதவியாள்ர்கள் என வரும்போது, பேரரசனே இப்படிப்பட்ட நீதியையும் தண்டனையும் வழங்குவது உண்டு. இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் சோழ விற்படைத் தலைவன் ஒருவனை நாடாள்வான் எனும் இன்னொரு தலைவன் கொன்று விடுகிறான். சம்பந்தப்பட்ட இருவருமே அரசாங்கத்தில் பெரிய பதவியில் உள்ளவர்கள் எனும்போது அரசனே ஒரு ஆணை பிறப்பிக்கிறான். நடந்ததை ஒரு கல்லிலே பொறித்து, நாடாள்வானுக்கு 96 வெள்ளாடுகள் கோயிலுக்கு நிவந்தம் விட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கிறான் (ARE 227/1904). சரி, 96 ஆடுகள் நிவந்தமென்பது பணக்காரனான அவனுக்கு ஒன்றும் பெரிது இல்லைதான். ஆனால் இங்கே மிகப் பெரிய இழுக்கு என்பது அவன் பெயர் கல்லில் பொறிக்கப்பட்டு ஊருக்கும் எதிர்காலத்துக்கும் இவன் ‘ஒரு கொலையாளி’ என்று தெரிவிப்பதுதான். இந்த அவமானம் ஒன்றே பெரிய தண்டனையன்றோ!
இதைப்போல இன்னொரு கொலை, அதுவும் எதிரிலிச் சோழ சம்புவரையரின் மகனைக் கொன்ற கதை. எதிரிலிச் சோழ சம்புவரையர் சோழ நடு நாட்டின் தலைவர். ராஜாதிராஜ சோழனுக்கும் மூன்றாம் குலோத்துங்கனுக்கும் வலது கையாகத் துணை நின்றவர். அவரது நாட்டில் ஏற்பட்ட ஒரு சண்டையில் அவரது மகன் கொல்லப்பட்டார். மருமகள் ‘சதி’ யில் ஏறி உயிர்த் தியாகம் செய்தார். மகனே கொல்லப்பட்டாலும், தந்தையும், நாட்டாரும் சேர்ந்து கொலைசெய்தவனுக்கு கொடுத்த தண்டனை அவன் ஆயுட்காலம் முழுவதும் அங்குள்ள கோயிலுக்குத் தினமும் விளக்கு ஏற்றிக்கொண்டே இருக்கவேண்டும் (அவன் செலவில்) என்பதையும் கல்லில் பொறித்து விட்டனர் (ARE 162/1932).
சில சமயம் எதிர்பாராதவிதமாக கொலைகள் நடந்துவிட, அவைகளுக்கும் கல்வெட்டு வெட்டி கோயிலில் நிவந்தங்கள் விட ஆணை செய்வார்கள். ராஜேந்திரசோழ நிலகங்கராயன் எனும் தலைவன் கோபத்தால் ஒரு வீரனை வெட்டிச் சாய்த்துவிட்டான். அவனுக்கு அரசனிடமிருந்தே ஆணை வந்தது அவன் பாவத்தைக் கழுவ அங்குள்ள (தற்போதைய மரக்காணம்) பிரமீஸ்வரர் கோயிலுக்கு 128 பசு மாடுகள் நிவந்தமாக வழங்கவேண்டும் என்று (ARE 159/1918) அந்த ஆணையும் கல்லில் பொறிக்கப்பட்டுவிட்டது..
ராமாயணத்தில் தசரதன், விலங்கு என நினைத்து, கண்ணிழந்த தந்தைக்கு தண்ணீர் மொண்டு கொண்டிருந்த ஒரு ரிஷிகுமாரனைக் கொன்றதும் அதற்கு தசரதன் சாபம் பெற்றதும், அந்த சாபத்தால் ராமனைப் பிரிந்தவுடன் இவன் உயிர் போகும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதே மரக்காணத்தில் கிடைத்த கல்வெட்டு இதைப் போன்ற நிகழ்வினை சுட்டுகிறது. அரும்பொந்தர் எனும் ஊரினன் வேட்டையாடும்போது இதைப் போலவே விலங்கு என நினைத்து ஒரு மனிதனைக் கொன்றுவிடுகிறான். ஊரார் இதைத் தீர விசாரித்து நடந்தது ‘எதிர்பாராத ஒன்றுதான்’ இருந்தாலும் தவறு தவறுதான் என்று பிரமீஸ்வரர் கோயிலுக்கு 12 ஆடுகளை தண்டனை நிவந்தமாக விதிக்கின்றனர் (ARE 33/1918). கல்வெட்டிலும் அவன் செயல் ஏற்றப்படுகின்றது. திருவிளையாடல் புராணத்திலும் இது போன்ற செயல், மரத்தின் கீழ் தங்கியிருந்த பிராம்மணன் மனைவி மீது, பறவை மீது ஏவப்பட்ட அம்பு தவறிப் போய், அவள் மீது பட, அவள் இறக்கிறாள், பிராம்மணன் வேடனைக் குற்றவாளியாக பாண்டிய அரசன் முன் நிற்க வைக்க, இறைவன் ஒரு திருவிளையாடல் மூலம், ’விதி’ யின் செயலால் அவன் மனைவி இறக்கிறாள், என்றும் வேடன் குற்றவாளி இல்லை என்பதைத் தெரிவிப்பதாகக் கதை செல்கிறது. ஆனால் இந்தக் கல்வெட்டு இந்த இறைவன் தீர்ப்பை மதிப்பது போல இருந்தாலும் (அதாவது எதிர்பாராத செயல் என ஏற்றுக் கொண்டாலும்) செய்து விட்ட தவறுக்கு தண்டனை உண்டு என தீர்ப்பு சொல்கிறது.
தற்கொலைகள் கூடக் காரணம் கேட்கப்படுகின்றது. தவறுக்குக் காரணமானவர்களை விசாரித்து தண்டனை (கோயிலுக்கு விளக்கு அல்லது ஆடு மாடு நிவந்தம்தான்) அளிக்கப்படுகிறது. கல்வெட்டிலும் குற்றவாளி பெயர் உண்டு. ராஜராஜன் ஆட்சியில் முன்னூரில் நடந்த ஒரு கொலைக்கு, கொலையாளிக்குப் பதில் அவனது மாமா தண்டனையை ஏற்றுக் கொள்வதாக ஒரு கல்வெட்டு அவரால் கோயிலுக்கு நிவந்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு கல்வெட்டு (67/1919). மருமகன் செய்த தவறுக்கு மாமன் தண்டனை அனுபவிப்பதாக இப்போது எந்த மாமனும் முன்வருவாரோ..கொலை நிகழ்வு நடந்தால் அனைத்து மக்கள் மத்தியிலே ஒரு குற்ற உணர்வை உருவாக்குவது மிக மிக அவசியம். ஏனெனில் மனிதரிடையே அடிக்கடி எழும் கோபதாபங்கள். விரோதங்கள், அதர்மச் செயல்கள் இவற்றை மக்கள் தங்கள் கட்டுக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்ற சமுதாய உணர்வின் அவசியத்துக்காக நியாய தர்மத்தை சீராகத்தான் செய்து வந்தது சோழ அரசாங்கத்துக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தர்மாசனங்கள்.
சண்டை என்பது எப்போதுமே தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. அதுவும் இரு ஊர்களுக்குமிடையே சண்டை வந்தால் அடிதடி கொலை வஞ்சம் இவைதான் மிஞ்சும். அப்படியே இரு ஊருக்குமிடையே சண்டை வந்தாலும், பொதுவாக இந்த ஊர் சபைகள்தான் நியாயமான சபைகள் என்ற பெயர் பெற்றதாயிற்றே.. ஆலோசித்து செயல்பட்டு தீர்த்துக் கொள்ளவேண்டாமோ.. ஆஹா.. இப்படியெல்லாம் பிரச்னைகள் சடக்’கென தீர்ந்துவிட்டால் அது ராம ராஜ்ஜியம் என்ற பெயர் பெற்றுவிடுமே. மகாஜனங்கள் விடுவார்களா? உலகம் தோன்றிய முதலே மக்களோடு சண்டையும் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டதே!
உணர்ச்சிவசப்படுதல், ஈகோ இவை போன்றவை அதுவும் இரு ஊருக்கிடையில் எனும்போது அந்தந்த ஊரின் கௌரவம் முன்னிலைப்படுத்துவதால் சம்பந்தப்பட்ட இரண்டு ஊர்களுமே விட்டுக்கொடுக்காதுதான். இரண்டு பூனைகள் ரொட்டித்துண்டுக்காகச் சண்டைபோட்டு நடுவில் குரங்கை வரவழைத்து அவஸ்தைப்படுமே, அதுபோல ஒரு சம்பவம் ஒன்று.:
திருச்சி மாவட்டத்தில் உள்ள இன்றைய திருவெறும்பூர், ராஜராஜன் காலத்தில் எறும்பியூர் என்ற பெயரால் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு, இந்த எறும்பியூர்க்கும், அதன் அண்டை பிரதேசமான ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலம் ஊருக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. எல்லைத் தகராறு என்பதில் எல்லையைத் தாண்டி நிலங்களைக் கைப்பற்றிக் குடியேறுதல், பயிரை வளர்த்தல் அல்லது வளர்த்த பயிரை அழித்தல், அவ்வூர் கால்நடைகளைக் கவருதல், பெண்களை அவமானப்படுத்துதல் இவையெல்லாம் சேர்ந்துதான். சோழர்கள் காலத்தில் இப்படிப்பட்ட வழக்குகளின் விவரங்கள் ஏதோ ஒன்றிரண்டுதான் கல்வெட்டு மூலம் கிடைத்துள்ளன.
இப்படி ஒரு அரியதான வழக்கை நடுநிலையாகத் தீர்க்க அரசன் இவர்கள் சம்பந்தம் இல்லாத மூன்றாம் நாட்டு பிரதிநியான கிள்ளியூர் நாட்டைச் சேர்ந்த வீரநாராயணன் செம்பியன் வடிவேலரை அனுப்பி வைக்கிறார். திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பீபிலிகேஸ்வரம் கோயிலில் ஒரு கல்வெட்டு. இரு ஊர்களிலும் தீர விசாரித்து சம்பந்தப் பட்ட இரண்டு ஊர்களான எறும்பியூர், மற்றும் ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலத்துக்கும் இடையேயான எல்லைகளை வரையறுத்து, அந்தந்த ஊர் சபைகளுக்கும் தண்டனையும் சேர்த்தே விதிக்கப்படுகிறது. நிலவரி, அதற்கு எச்சோறு எனப்படும் தண்டனை வரி, ஸ்ரீகாந்த சதுர்வேதிமங்கலம் தடையில்லாத தண்ணீரை வாய்க்கால் மூலம் எறும்பியூருக்கு உடனடியாக வழங்கவேண்டும் எனவும் உத்தரவுகள் அரசன் பெயரில் போடப்படுகின்றன. மேலும் எந்தந்த நிலங்கள் கேள்விக்குரியதாகவும், ஊர்மக்களின் சண்டைகளுக்குக் காரணமாக உள்ளதோ, அந்தந்த நிலங்களைச் சோழ அரசு எடுத்துக் கொண்டு, ஏலத்தில் விட்டு, அந்த ஏலத்தில் வந்த பணத்தைத் திருக்கோயிலில் ’திருப்பதியம்’ (தேவாரம்) பாடுவதற்கு நிவந்தமாக விடுவதாகவும் கல்வெட்டில் பொறித்துவிட்டனர் (ARE 123/1914) OR SII-13, No.50)
இது சிறிய பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும், இப்போதைய மாநில-நடுவண் அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளப்படவேண்டிய தீர்ப்பு இது. குறிப்பாகக் காவிரிப் பிரச்சினையில் நடுவண் அரசால் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாமல் தீர்ப்பாயங்களில் நீண்ட நெடுங்காலமாக கிடக்கும் காவிரி பிரச்சினை ஒரு உதாரணம். சோழர்களின் அரசு நடுவண் அரசு போன்ற அமைப்புதான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
நிலவரி, நீர்வரிகள் ஏய்ப்பவர்கள் அவ்வப்போது தண்டிக்கப்பட்டது நிறையக் கல்வெட்டுகளில் வருகின்றனர். (வரி ஏய்ப்பது என்பது எக்காலத்து மக்களுக்கும் சகஜம் போலும்). நிலவரியை வசூல் செய்ய அவர்கள் நிலங்கள் அரசுடையாக்கப்பட்டு, பின் அவை விற்கப்பட்டு, நிலவரிகளைக் கழித்து ஏனைய பணம் அவனுக்கு வழங்கப்படும்.ராஜேந்திரசோழனின் கல்வெட்டு (ARE 362/1917) இப்படிக் குறிப்பிடுகிறது என்றால் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் நிலவரி கட்டாமல் ஓடிப்போய்விட்ட ஒருவனின் நிலம் விற்கப்பட்டு கஜானாவில் பணம் சேர்த்ததைப் பற்றியும் சொல்கிறது (ARE 531/1921). நிலவரி ஏய்ப்பாளர்கள் சமயத்தில் சிறைத்தண்டனை கூட அனுபவித்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு (ARE 201,202/1912).
நிலவரி ஏய்ப்போருக்கு முதலில் தண்டம், இந்த மேல்வரி கட்டாவிட்டால் பிறகு நிலத்தை உரிமைப்படுத்தி விற்றல், நில அளவையையும் மீறிய தொகையென்றால் சிறை வாசம் எனச் சட்டங்களை அடுக்காக வரையறுத்து தர்மாசனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அரசு பொக்கிஷத்தைக் காத்தும் வளர்த்தும் வந்தனர். ஆனால் அதே போல வரி வசூலில் அதிகப்படியான செய்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. (ARE 148/1927) அப்படிப்பட்ட அதிக வசூல் செய்யும் கிராம அதிகாரிகள் 5 மடங்கு தண்டம் செலுத்தவேண்டும். ஆகையினால் இவர்கள் அதி எச்சரிக்கையாகவே வசூல் செய்தனர் எனலாம்.ஏனெனில் இப்படி அதிகாரிக்கு ஒத்துழைத்த ஊர் சபையினரும் தண்டனைக்குள்ளான சம்பவங்கள் உண்டு.
திருவாண்டார் கோயிலுக்காக இறையிலியாக (வரிவிலக்கு) விடப்பட்ட நிலத்துக்காக, அந்த ஊர் சபையினரான திருபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் அந்த நிலத்து வேளாண் இடம் வரியை வசூலித்துக் கட்டி விடுகின்றனர். இதை எதிர்த்து அந்த நிலத்து வேளாண் கோயிலில் முறையிட, கோயில் நிர்வாகி (தேவகண்மி) தர்மாசனத்தை நாடுகிறார். தர்மாசனம் ஊர் சபையினரைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பொதுப்பணத்திலிருந்து 25 கழஞ்சு பொன் கோயிலுக்கு தண்டனையாகச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி வரி வசூல் செய்த கணக்குப்பிள்ளைக்கும் ‘வெட்டி’ (இதுவும் ஒரு தண்டனைதான்) யாக வசூல் செய்யப்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் 15 கழஞ்சு பொன் தர்மாசனத்துக்குக் கொடுக்கவேண்டும் என பயமுறுத்தியும், இறையிலி என்ற புனிதத்தைக் காப்பாற்றியது. இந்தக் கல்வெட்டு ராஜராஜனின் 12 ஆவது ஆண்டில், கி.பி.997 இல் பொறிக்கப்பட்டது (ARE 362/1919).
இந்தக் கல்வெட்டிலிருந்து இன்னொரு விஷயமும் நாம் தெரிந்து கொள்கிறோம். சில சமயம் சில செலவுகள் செய்யும்போது இக்கால கட்டத்தில் அழுதுகொண்டே செய்கிறோம். தண்டச் செலவு, வெட்டிச் செலவு என்றும் எரிச்சலாகப் பேசுகின்றோம். இந்த தண்ட, வெட்டி என்ற சொற்கள் சோழர்கள் காலத்தில் செய்த தவறுக்குத் தண்டனையாகப் பிராயச்சித்தப் பணமாகக் காண்கிறோம்.
சில ஊர்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் நில வரிகளை எதிர்த்து அரசாங்கத்துக்கு பிராது செய்தால் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் உள்ள மேலப்பழுவூரில் அகஸ்தியேஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் படி (சுந்தர சோழர் காலம் – (966/67) கரம்பியன் பிரந்தகன் என்பான் அங்குள்ள நகரத்தார் சார்பில், அரசன் பழுவேட்டரைய அடிகளிடம், அதிகரிக்கப்பட்ட நிலவரிகளை ரத்து செய்து, பழையபடி குறைவான அளவில் வரிகள் விதிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்க, உடனே பழுவேட்டரைய மாறவன் கந்தனார் ஒப்புக் கொள்வதாக இந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. (ARE 374/1924 & are 367/1924 or SII-13, NOs.215 and 374). பழுவேட்டரையர் சுந்தர சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் சிற்றரசர்களுக்கும் மேலான நிலையில் விளங்கியது இந்தக் கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பதவி வகித்தபின் கணக்குக் காட்டாதிருந்தவன், இவர்களின் உறவினர்களும், தாயாதியினர்களும் கூட தகுதியற்றவர்கள்
பிறர் மனைவி புணர்ந்தவன்,
கொலை, களவு, பொய், கள்ளுண்ணல் போன்ற நான்கு மாபாதகங்களைச் செய்தவனும் இவற்றுக்கு பிராய்ச்சித்தத்தை செய்திருந்தாலும் தகுதியற்றவனே
ஸாகசக்காரன் மற்றும் உண்ணத்தகாததை உண்பவர்கள் கூட தகுதியற்றவர்கள்.
கி.பி 920 ஆண்டில் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் உத்திரமேரூர்க் கல்வெட்டு உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகளின் ஒரு பகுதிதான் மேற்சொன்னது. குடவோலை மூலம் தேர்தல் நடத்தி ஊர்ச் சபையினர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் சிறப்பான விதத்தை இந்தக் கல்வெட்டு சொல்கிறது.
பாருங்கள். இத்தனை குற்றங்களை தவிர்த்தவர்கள் மட்டுமே தேர்தலில் நின்றிருந்து, அப்படியும் போட்டி மூலமாகவே வெற்றி பெற்று மக்களுக்கு தர்மாசனம் மூலமாகவோ, ஊர்ச்சபை மூலமாகவோ பணியாற்ற வேண்டும். இத்தகையானோர் மட்டுமே குற்றங்களை விசாரிக்கவும், நீதி வழங்கவும், தண்டனை கொடுக்கவும், ஊர் பரிபாலனை செய்யவும் தகுதி பெற்றவர்கள் என வரும்போது நிச்சயமாக இதைச் சாதாரணமாகவே படிக்கும் நமக்கே இவர்கள் மீது நம்பிக்கை வருகிறதல்லவா.. ஆஹா! எத்தனை நீதிமான்கள் அவர்கள் என்று புகழுகிறோம்.. ஏனெனில் இப்போதெல்லாம் உச்ச நீதி மன்றத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆட்சியாளர் சொல்படி ஆடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
இத்தனைக்கும் இவர்களது பதவிக்காலம் முன்னூற்றருபது நாட்கள்தான். பிறகு மறுபடி இவர்கள் போட்டியிடமுடியாது. குற்றங்களே நடக்காத காலம் எப்போதுமே இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் திருக்குறள் போன்ற அற்நூல்களை எழுதி இருக்கவே மாட்டார்கள். ஆனால் சரியான தலைவனும், அவன் கீழ் பணியாற்ற சிறிய கிராமங்களில் கூட நல்ல தலைமையும் தேவை என்பதில் கண்டிப்பாக இருந்தனர்.
ஜாதிக்கலவரங்கள் அப்போதே இருந்தனதான். முதலாம் குலோத்துங்கன் பதவிக்கு வருமுன்பு இப்படிப்பட்ட ஜாதிக்கலவரங்களால் நாடே சீரழிந்து கிடந்தது என்பதை பட்டவர்த்தனமாகவே ‘கலிங்கத்துப் பரணி’ சொல்கின்றது. வட தொண்டை மண்டல மாவட்டங்களில் தோன்றிய வலங்கை இடங்கைப் பிரிவுச் சண்டைகள் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய தொல்லையாக அரசுகளுக்கு மாறியதை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சில செப்பேடுகள் (குண்டூர் மாவட்டம்) சொல்கின்றன. வேலை கொடுப்போர் வலங்கையினர், வேலை செய்வோர் இடங்கையினர் என நாம் பொருள் கொண்டாலும், (இது எந்நாளும் உலகத்தில் எல்லா இடங்களிலும் பெருந்தொல்லை தரக்கூடியதுதான்). ஆனால் இந்த வலங்கையினரிலும் கொஞ்சம் அதிகாரம் மிகுந்தவர்கள் வல வலங்கைஎன்றும், அதிகாரமில்லாதோர் இட வலங்கை யென்றும் மேலும் பிரிந்தனர். புகழ் பெற்ற (Leyden Plates) ஆனைமங்கலச் சிறிய செப்பேட்டுத் தொகுதியைப் பொறித்தவர் அப்படித்தான் தம்மைப் போட்டுக் கொண்டு பெருமை கொண்டார் என்பதை அந்த செப்பேட்டின் கடைசிப் பகுதியைப் படித்தாலே புரியும்.
சந்துவிக்ரிஹகன் ராஜவல்லபப் பல்லவரையரும் அ 050. திகாரிகள் ராஜேந்திர சிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம் எழுதி 051. னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வலவலங்கை வேளைக்காறரில் நிலையுடைய பணை 052. யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவைஎன் எழுத்து
ஜாதிகள், உட்பிரிவுகள் எல்லாமே பாரதநாட்டில் ஆதியாக வருபவை போலத் தோன்றினாலும், நீதி நெறி எனப்பார்க்கும்போது பொதுவாகவே நடுநிலைமையாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் பல கல்வெட்டுகளின் ஆதாரம் மூலமாக தெரியவந்திருக்கிறது.
பேரரசன் ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சி போலத்தான். பொதுமக்கள் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் பேரரசன் எந்த சிற்றரச நாட்டு (மண்டலங்கள்) நீதியிலோ, அல்லது கிராமத்து சபைகள் மட்டத்திலோ தலையிடுவது கிடையாது. அப்படி குறுக்கிட்டபோதும் அரசனின் ஆணை என்பது நீதி தவறுவதை தடுப்பதாகவோ அல்லது மேலும் நியாயம் செய்வதாகவோதான் அமையும். மனுநீதி கண்ட சோழ பரம்பரையில் வந்தவர்கள் நீதி பிறழக் கூடாது என்று நியாய சாஸ்திரத்தில் வெகு நியாயமாக நடந்து கொள்ள ஒவ்வொரு அரசனும் முயற்சி செய்கிறான் என்பதையும் மன்னனின் மெய்க்கீர்த்திகள் பறை சாற்றுகின்றன.
எப்போதுமே தான் சோழநாட்டான் எனப் பெருமிதமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு தம் மக்களை வைத்திருந்த சோழ நாட்டு ராஜாங்கத்தைப் பார்த்து நாமும் பெருமிதப்படுவோம்.
முடிவுரை:
இந்தக் கட்டுரைக்கு முடிவே வராதோ என்ற அளவில் கல்வெட்டுச் செய்திகளும் ஆதாரங்களும் தேடத் தேட நிறைய அளவில் கிடைப்பதைப் பார்த்து நான் சற்றுப் பயந்துதான் போனேன். ஏனெனில் நான் புத்தகமாக எழுத விரும்பவில்லையாதலால் எப்படி எங்கே நிறுத்துவது என்று கூட புரியாமல் முழித்தேன் என்பதையும் இங்கே ஒப்புக் கொள்ளவேண்டும். ஏகப்பட்ட கல்வெட்டுகள் சோழர்களின் நீதிநெறிமுறையைப் பற்றி சொல்லும்போதெல்லாம் கட்டுரை நீடித்துக் கொண்டே போகிறது. களவு, வஞ்சம்,அவமானப்படுத்தல் போன்ற சிறிய குற்றங்களுக்கெல்லாம் கூட கல்வெட்டுகளை வெட்டி என்ன தண்டனை கொடுத்தார்கள் என்பதை சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் தண்டனை முறையைப் பார்க்கும்போது எல்லாமே கோயில் நற்பணிகளுக்கென அந்தத் தண்டனைப் பணத்தைச் செல்விட வழி செய்திருக்கிறார்கள்.
கோவில் வழிபாடுகளை எத்தனை புனிதமாகக் கருதி இருக்கிறார்கள் என்பதை விட ஆன்மீக வழியில் அரசுகள் எத்தனை ஆர்வத்தோடு மக்களைச் செலுத்தித் திருத்தி இருக்கிறார்கள் என்பதாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு பிறவிப் பயன்களை பற்றிய அறிவும், தர்ம சாஸ்திரங்களின் பெருமையும் இலக்கிய நூல்கள் வழியாக மத போதகர்கள் மூலம் போதிக்கப்பட்டன என்பதை நான் இங்கே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சோழர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் அதிகம் எழுதப்பட்டு மிக அதிகமான அளவில் மக்கள் மத்தியில் பரப்பபட்டு வந்தன். ஒரு பெரிய புராணம் என்கிற திருத்தொண்டர் புராணம் போதும். ஒரு செயலுக்கான என்னென்ன பாவங்கள், அதற்கான புண்ணியங்கள் என்ன என்பதையெல்லாம் விளக்கிச் சொல்ல. இவை காரணமாகவும் அரசர்களிடையேயும் சரி, பொது மக்களிடையேயும் சரி, தாம் செய்த குற்றத்துக்கு தண்டனையாக ஆண்டவனிடமே நாம் பரிகாரம் செலுத்தும்போது நம் பாவம் கழிகிறது என்பதோடு வினைப்பயன்களை அடுத்த பிறவிக்கு நாம் எடுத்துச் செல்வதில்லை என்ற உயரிய கண்ணோட்டம் மக்களிடையே இருந்தது.
ஆரம்பத்தில் நான் சொன்ன வரிகள் இதுவே.. சோழர்கள் காலம் தமிழகத்தின் மக்களுக்கு பொற்காலம் என்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு.
எழுத்தும் ஆக்கமும்: திவாகர்
(மேலே உள்ள படம் உத்திரமேரூர் வைகுண்டபெருமாள் கோவில் மதிலில் உள்ள குடவோலை குறித்த கல்வெட்டு - நன்றி ’தி ஹிண்டு’)