முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு
என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் இடம் பெறும் கல்விச் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்; 1330 குறள்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.கல்வி தொடர்பானக் கருத்துக்கள் கல்வி,கல்லாமை,கேள்வி போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
கல்வி என்பதன் பொருள்
மனிதஇனம் தம்முடைய வாழ்க்கைமுறையையும், பண்பாட்டையும், மரபுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுகிறது.உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளங்குவது கல்வி.கல்வி எனும் சொல்லுக்கு பொருள் கூறும் போது,கல்லுதல் என்பதன் பொருள் தோண்டுதல் கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும்,கல்வி என்ற பெயரும் வந்தன.நிலத்தைக் கிளறுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பயன்படுத்துவதாகும் என்கிறார் சித்பவானந்த.( சையத் ஜாகீர் ஹசன், நீதி நூல்களில் கல்வி,ப.3)
மேலும் கல்வி என்பதற்கு அறிவு, கற்றல் ,நூல், வித்தை, பயிற்சி ,உறுதி,ஊதியம், ஒதி, கரணம்,கலை, கேள்வி சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.(பக்.233) திருக்குறளில் 40 ஆவது அதிகாரமாக கல்வி அமைந்துள்ளது.
குற்றம் இல்லாமல் நூலை கல்.
கற்கும் நூல்களை குற்றம்மில்லால் கற்க வேண்டும்.கற்ற பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நடக்க வேண்டும்.இதனை,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக (391)
என்ற குறளின் வழி அறியமுடிகிறது.மேலும் இக்கருத்தையே இனியவை நாற்பது என்ற நூலும் இயம்புகிறது இதனை,
பற்பல நாளும் பழுதி இன்றி பாங்குடைய
கற்றலில் காழினிய இல் (இனி..பா.41:3-4)
என்ற பாடலடியால் அறியலாம்
இரு கண்கள்
கணக்கெண்ணுதல்,எழுத்தறிவித்தல் ஆகிய இரண்டும் மனிதன் நல்லறிவு அடைவதற்கு வழிகாட்டும் இரு கண்கள் போன்றவை என்கிறார் வள்ளுவர் இதனை,
எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு (392)
என்ற குறள் சுட்டுகிறது.
கற்றவரே கண்ணுடையர்
எண்ணும் எழுத்துமே கண்களாவதால் கண்ணுள்ளவர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் கற்றவர்களே மற்றவர்களுடைய முகத்திலிருக்கும் கண்கள் புண்களுக்கே ஒப்பாகும்.இதனை,
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர் (393)
என்ற குறளின் வழி அறியமுடிகிறது.
கல்வியும் மகிழ்ச்சியும்
கற்றறிந்தவர் எப்போதும் அனைவரும் மகிழும்படி மற்றவர்களுடன் கூடிப் பழகி நற்கருத்துக்களை எடுத்துரைப்பர்.தாம் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் பிறர் எப்போதும் நினைத்துப் பார்க்கும் வண்ணம் கூறிப் பிரிவார்கள்
இதனை, உவப்பத்தலைக்கூடி(394)என்றகுறள்உணர்த்துகிறது.கல்வியறிவுவுடைய சான்றோர்கள் கலந்து உரையாடும் போது மிக்க மகிழ்ச்சியடைவர்.கேடில்லாத பழைய கேள்வி ஞானம் உடையவர்கள் தம்முள் மாறுபாடு இல்லாமல் அறிவுக் கூர்மையால் கூடியிருந்து மகிழும் மகிழ்ச்சி இனியது.அவ்வாறு கூடி மகிழ்ந்திருக்கும் தன்மை எவ்வாறென்றால் அகன்ற வானத்தில் தேவர்கள் உறைவதாகிய உயர்ந்த உலகத்தைக் காட்டிலும் இனிதாக இருக்கும்.கல்வியினால் மகிழும் மகிழ்ச்சிக்கு ஈடாகச் செய்வது தெய்வலோகத்திலும் இல்லையெனக் கல்வியின் பெருமையினை,
தவலரும் தொல்கேள்வி தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்போம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி (நாலடி.137)
என்று நாலடியாரும் எடுத்துரைக்கிறது.
ஆசிரியர் முன் தாழ்ந்து பணிய வேண்டும
செல்வர் முன் வறியவர் நிற்பது போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கல்வியைக் கற்றவர் உயர்ந்தவர் அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவர்.இதனை
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர் (395)
என்ற குறள் புலப்படுத்துகிறது.
கற்கும் அளவு அதிகமாக வேண்டும்
கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை எவ்வளவுக்கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊர் ஊறுவதைப் போல் எவ்வளவுக்கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அறிவு பெருகும்.இதனை
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு (396)
என்ற குறளில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கல்லாமல் இருக்க கூடாது
எவ்வளவு படித்தாலும் நல்லது தான் என்பது மட்டுமல்ல,எத்தனை மொழிகளைப் படித்தாலும் நல்லது தான் எந்த நாடும் சொந்த நாடாகும் படியும் எந்த ஊரும் சொந்த ஊராகும் படியும் பல நாட்டு மொழிகளிலும் உள்ள பற்பல நூல்களையும் சாகிறவரையிலும் ஒருவன் படித்துக் கொண்டே இருந்தால் தான் என்ன என்று குறிப்பிடுகிறார்.இதனை
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு (397)
என்ற குறளின் வழி அறியலாம்.
கல்வி ஏழு பிறப்பிலும் துணை நிற்கும்
ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி அவனது ஏழு பிறப்பிலும் சென்று உதவும் தன்மை உடையது.இதனை,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து (398)
என்ற குறள் சுட்டும்.இதே கருத்தையே நாலடியாரும் கூறுகிறது.இதனை,
இம்மை பயக்குமால் ஈயக்குறை வின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து (நாலடி.132)
என்ற பாடலில் கல்வியானது இம்மை மறுமை ஆகிய இரண்டையும் பயன்பட்டு பிறருக்குக் கற்றுக் கொடுப்பதாலும் குறைவடைவதில்லை,மயக்கத்தைப் போக்கும் அருமையான மருந்து கல்வியே. தேவர் உலகத்திலும் காணமுடியாத அரிய மருந்து கல்வி ஒன்றே என்பதை சமணமுனிவர்கள் அறிந்திருந்தனர். இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை பலவகையான செய்திகளையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் இறப்பு முடிந்து மறுபிறப்புக்குச் செல்லும் போது அணிகலனாக விளங்குவது கல்வியறிவே என்பதை,
மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்று
குறியுடையார் கண்ணே யுள (திரிகடு.52)
என்று நல்லாதனார் சுட்டுகிறார்.
கற்றறிந்தவர் கல்வியை விரும்புவர்
தன் இன்பம் அடையக் காரணமான கல்விக்கு உலகம் இன்பம் அடைவதால் கற்றறிந்தவர்கள் மேன்மேலும் அதையே விரும்புவார்கள். இதனை,
தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் (399)
ஒருவரின் அழியாத செல்வம்
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே,மற்ற மணியும் பொன்னும் ஆகிய பொருள்கள் சிறப்புடைய செல்வம் அல்ல இதனை,
கேடுல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடுஅல்ல மற்றை யவை (400)
என்ற குறளின் வழி அறியலாம்.கல்வியின் சிறப்பை நாலடியாரும், சிறுபஞ்ச மூலமும் எடுத்துரைக்கிறது.இதனை,
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல –நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற்
கல்வி அழகே அழகு (நாலடி.131)
என்ற பாடல் கூறுகிறது.
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் -செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்ச.74)
என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.
அவையில் பேசக் கூடாது
அறிவு நூல்களைக் கற்காமல் அறிஞர்கள் கூடிய சபையில் பேசுவது சூதாடும் அரங்கம் அமைக்காமல் வட்டுக்காய் உருட்டி ஆடினார் போன்றது இதனை,
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல் (401)
என்ற குறளின் வழி புலப்படுகிறது. மேலும் கற்றவர் அவையில் கல்லாதவர் பேசுதல் முலை இல்லாதவள் பெண்மையை விரும்பினார் போன்றது இதனை,
கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று (402)
என்ற குறளின் வழி வெளிப்படுகிறது.மேலும் மற்றொரு குறளில் கல்லாதவர்கள் கற்றறிந்த அறிஞர்களுடன் பேசாமல் இருந்தால் அவர்கள் நல்லவர்களாக கருதப்படுவர் இதனை,
கல்லாதவரும் நனிநல்லார் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின் (403)
என்ற குறளின் வழி அறியலாம்.
கற்றவர்கள் கல்லாதவர்களின் சொல்லை ஏற்க மாட்டார்கள்
கல்லாதவர்களின் சொல்லை கற்றவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். அறிவில்லாதவர்கள் ஆகையால் அவர்களின் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.இதனை,
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார் (404)
என்ற குறளின் வழி உணரமுடிகிறது.
கல்லாதவன் தன்னை அறிஞன் என்று கருத கூடாது
கல்லாதவன் தன்னை அறிஞன் என்று மதித்துக் கொள்வது கற்றவருடன் உரையாட அது கெட்டு விடும் இதனை,
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் (405)
என்ற குறளின் வழி காணலாம்.
கல்லாதவர் களர் நிலத்திற்கு சமமானவர்கள்
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர் (406)
என்ற குறளின் வழி கல்லாதவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று சொல்லப்படுவதே அல்லாமல் களர் நிலம் போன்று யாருக்கும் பயன்படமாட்டார்கள் என்கிற கருத்தைப் பதிவுச்செய்துள்ளது.
அறிவற்றவர்கள் பொம்மை போன்றவர்கள்
நுட்பமும், மாட்சியும், ஆராயும் அறிவும் அற்றவனின் இழகும் நலமும் மண்ணால் புனையப்பட்ட பொம்மை போன்றவை என்கிறார் வள்ளுவர் இதனை,
நுண்மான் நுழைப்புலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று (407)
என்ற குறளின் வழி வலியுறுத்துக்கிறார்.
கல்லாதவர் செல்வம் துன்பமானது
கல்லாதவரிடம் உள்ள செல்வமானது கற்றவரைப் பற்றிய வறுமையை விட மிக்க துன்பம் தரும் என்பதை,
நல்லவர்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு (408)
என்ற குறள் எடுத்தோம்புகிறது.
கல்லாமல் இருந்தால் குலம் கெடும்
கல்வியானது கற்றவரை மட்டும் உயர்த்தாமல்,அவர் குடியையும் உயரச் செய்யும் தன்மை கொண்டது. ஆகவே தான் வள்ளுவர்,
தந்தை மகற்காற்றும் நன்றி அவையகத்து
முந்தி இருப்பச் செயல் (67)
என்று நவில்கிறார்.
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (409)
என்ற குறளானது கற்காதவர் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும், தாழ்ந்த குலத்தில் பிறந்தும் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே ஆவார். இக்கருத்தையே நாலடியாரும் எடுத்துரைக்கிறது. இதனை,
தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் காணாய்
அவன்துணையா ஆறு போயற்றே நூல்கற்ற
மகன்துணையா நல்ல நூல் (நாலடி.136)
என்ற பாடலால் அறியலாம்.
கல்லாதவர்களை கற்றவருடன் ஒப்பிடக் கூடாது
விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு மேன்மை உடையவரோ, அவ்வளவு தாழ்ந்தவர் நூலைக் கற்றவரோடு நோக்க கல்லாதவர் என்கிறார் வள்ளுவர் இதனை,
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் (410)
என்ற குறளின் வழி உணரலாம்.
கற்ற நூலை விரித்துரைக்க வேண்டும்
கற்ற நூல்களையும், நல்ல செய்திகளையும் பிறர்க்கு உணரும் படி விரித்துரைக்க இயலாதவர்கள் மணம் இல்லாத பூவுக்கு உவமையாக்குகின்றார் வள்ளுவர்,
இணரூழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்துரை தார் (குறள்.650)
என்ற குறட்பா மூலம் இதனை அறியமுடிகிறது.
முடிவுரை
கல்வி என்பதன் பொருள் பற்றி அறியமுடிகிறது. குற்றம் இல்லாமல் நூலை கல், கற்றவரின் சிறப்பு அறியப்படுகிறது. கல்வியினால் ஏற்படும் மகிழ்ச்சியை அறிய முடிகிறது, கல்லாமல் இருக்க கூடாது, கல்வி ஏழு பிறப்பிலும் துணை நிற்கும், கல்லாதவர்களை கற்றவருடன் ஒப்பிடக் கூடாது,
கல்லாதவர் களர் நிலத்திற்கு சமமானவர்கள், கல்லாதவர் செல்வம் துன்பமானது, கல்லாமல் இருந்தால் குலம் கெடு;ம், அவையில் பேசக் கூடாது, கற்கும் அளவு அதிகமாக வேண்டும், போன்ற கல்வி தொடர்பான கருத்துக்களைப் பற்றி அறியமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1 நாமக்கல் கவிஞர் திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
2 மாணிக்கம் .அ திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
3 நாராயணசாமி .இரா திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098 முதற்பதிப்பு -1997
4 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
5 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
6 பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
7 பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000
8 அகராதி கௌரா தமிழ் அகராதி
jenifersundararajan@gmail.com