New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் வாணிகம்-போ. சத்தியமூர்த்தி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
புறநானூற்றில் வாணிகம்-போ. சத்தியமூர்த்தி
Permalink  
 


 புறநானூற்றில் வாணிகம்

E-mailPrintPDF

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -பண்டைத் தமிழரின் வாழ்வியலை இன்றைக்கு எடுத்துக் காட்டும் சிறந்த படைப்பு புறநானூறு ஆகும். புறநானூற்று 400 பாடல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருந்து படைக்கப் பட்டவைகளும் அல்ல.  ஒவ்வொரு பாடலும் தனி மனித உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகும்.  வாழ்ந்த பண்டைத் தமிழரின் பெருமையையும், பண்பாட்டையும் கவிப் புலமை பெற்ற படைப்பாளர்கள் தாங்கள் நேரில் கண்டவற்றைக் கண்டபடியே படைத்த படைப்புகளாகும். எனவேதான் பண்டைத் தமிழ் அக இலக்கியங்கள் போல வருணனையோ, கற்பனையோ இடம்பெறவில்லை. 

  படைப்பாளர்கள் தாங்கள் படைத்த காலத்தில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்பட்ட நிகழ்வுகளைக் கவிதைகளாகப் படைத்திருக்கிறார்கள். எனவேதான் பண்டைத் தமிழர் வாழ்வை உணர்த்துகின்ற கலங்கரை விளக்கமாகப் புறநானூறு விளங்குகிறது.  படைப்பாளர்கள் தாங்கள் கண்டவற்றை மட்டும் படைக்காது, தங்களுக்குள்ளே நிகழ்ந்த வாழ்வியல் நிகழ்வுகளையும் பதிவு செய்து கவிதையாகத் தந்துள்ளனர். எனவே பல பாடல்கள் கையறுநிலைப் பாடல்களாக, அதாவது வறுமையும், வறுமை நீங்க வேண்டுகின்ற பாடல்களாகவும் விளங்குகின்றன. வறுமையைச் சுட்டுகின்ற பாடல்களைப் போல, மக்கள் வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் அமைந்துள்ள உயர்வு நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தெரிவிக்கும் பொழுது மக்களின் வாழ்வுக்கு உயர்வு தருகின்ற நிலையில் அல்லது அரசரின் ஆட்சி சிறப்புற்றிருக்கும் நிலையில் அதற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒன்றான வாணிக நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாணிகச் செய்திகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வாணிகநிலை

  செம்மொழி இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் வாணிகம் பற்றித் தனி ஒரு அதிகாரமாகக் கூறவில்லை என்றாலும், வாணிக அமைப்பைக் குறிப்பிடவே செய்கிறது. அக் குறிப்பு வாணிகத்திற்கு உரிய இலக்கணமாக அமைகிறது.

   ‘‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்" 

என்பது வாணிகம் பற்றிக் குறிப்பிடும் குறளாகும்.  வாணிகம் செய்பவர் கொள்வது மிகையும், கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் வேண்டும் என்ற இலக்கணத்தை இக்குறள் தருவதாகப் பரிமேலழகர் குறிப்பிடுவார். காளிங்கர் இக்குறள் வாணிகம் செய்வார்க்கு உரிய பயனைத் தருவது என்று எழுதுவார். அதாவது உலகத்து வியாபாரம் செய்து ஒழுகுவார்க்கு இம்மையும் மறுமையும் பெறுவதாகிய ஊதியம் ( பயன்) யாதோ? எனின் பிறவாகிய பொருள்களையும், தம்முடையவாகிய பொருள்களையும் போலத் தம் நெஞ்சு அறிய அழிவு சேராது, பாதுகாத்துச் செய்வதாகும் என்று எழுதுவார்.

 எனவே உரையாசிரியர்களின் உரையை நோக்கும் பொழுது, வாணிகத்திற்குரிய இலக்கணத்தையும், வாணிகத்திற்குரிய பயனையும் தருகின்ற இக்குறள், வாணிக நிலையையும் உணர்த்துவதாகக் கொள்ளலாம். அதாவது பண்டைத் தமிழரின் வாணிகம் பொருள்கள் அடிப் படையில் அமைந்துள்ளமையை விளக்குகிறது எனலாம்.  வாணிகத்திற்குரிய செலவாணியாகப் பொன்னோ, நாணயமோ, நாணயத் தாள்களோ செலவாணியாக அமையாது, ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளே செலவாணியாக அமைந்து பண்டமாற்றுப் பொருள் நிலையைப் பண்டைத் தமிழரின் வாணிக அமைப்பு என்பதை உரையாசிரியர்கள் உரை மூலம் அறிய முடிகிறது. குறட்பாவில் பிறவும் தமபோல் என்ற தொடர் பண்டமாற்று முறையைக் குறிப்பிடுகின்ற தொடராகக் கொள்ளலாம்.

பண்டமாற்று முறை

  புறநானூற்றில் இடம் பெற்ற வாணிகம் பண்டமாற்று முறையில்தான் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. பண்டைத் தமிழர்கள் தங்கள் வாழ்வியலை வளப்படுத்த , உற்பத்தி செய்யப் பெற்ற பொருளை விலை கூறி வாணிகம் செய்தமையைப் புறநானூற்றில் காண முடிகிறது. நிலத்தில் உற்பத்தியாகும் பொருள்களை விலை கூறி வாணிகம் செய்துள்ளனர். அத்தகைய பொருள் வாணிகம் பலவகையாக நடைபெற்றிருக்கிறது என்பது பாடல்களின் குறிப்புகளால் அறிய முடிகிறது. குறிப்பாகச் சொன்னால் பண்டமாற்று வாணிக முறைமையே புறநானூற்றில் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறலாம்.

    ‘‘மீன்நொடுத்து நெல்குவைஇ.
     மிசை யம்பியின் மனைமறுக்குத்து" (புறம், பா. 343)

என்ற இப்பகுதியில் மீனுக்கு விலையாக நெல்லைப் பெற்ற பண்டமாற்று முறை குறிப்பிடப் பெறுகிறது.  இப்பண்டமாற்று முறையை அக இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.

   ‘‘வலைவல் பாண்மகன் வால்எயிற்று மடமகள்
    வராஅல் சொரிந்த வட்டிஉண் மனையோள்
    யாண்டுகழி வெண்ணெல் இறைக்கும் ஊர" 
என்றும், 
   ‘‘அஞ்சி லோதி யசைநடப் பாண்மகள்
    சின்மீன் சொரிந்து பன்னெல் வெரூஉம்" 
என்றும், 
 மீனுக்கு விலையாகப் பெற்ற பண்டமாற்று முறையைப் புறநானூறு போலப் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் பிறிதோரிடத்தில் இப்பண்டமாற்று முறை இடம் பெற்றுள்ளது.

  ‘‘வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
     ஒண்ணுதல் விறலியர் ப10விலை பெறுகஎன
     மாடமதுரையும் தருகுவன்"      (புறம், பா. 32)

என்ற இப்பகுதியில் பூவிற்கு விலையாக மதுரை நகர் தரப்படும் என்று குறிப்பாகக் கூறப்பெற்று விறலியரின் பூவுக்கு விலையாக மதுரையில் விளைந்த பொருள் கொடுக்கப் பெற்றமை தெரிய வருகிறது.  இவ்வாறு புறநானூற்று வாணிகம் அதாவது பண்டைத் தமிழர் வாணிகம் பண்டமாற்று முறையில் அமைந்தமையைப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

வாணிகப் பரிசிலன்

  பண்டமாற்று அடிப்படையில் தங்களுடைய புலமை அமைவதாகக் கொள்ளக் கூடாது என்று புலவர்கள் பாடிய செய்தியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 

  ‘‘குன்றும் மலையும் பலபின் ஒழிய
  வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி ஈதுகொண்டு
  ஈங்ஙனம் செல்க தான்என என்னை
  யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்
  காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
  வாணிகப் பரிசிலன் அல்லேன் "  (புறம், பா. 208)

என்ற பாடல் பெருஞ்சித்திரனார், அதியமான் நெடுமான் அஞ்சி தன்னைக் காணாது தந்த பரிசிலை ஏற்க மறுத்துப் பாடிய பாடலாகும்.  இதில் புலமை என்ற அறிவுக்குப் பொருள் என்ற பண்டமாற்றத்தைப் பெறுகின்ற வணிகன் அல்லேன் என்று புலவர் குறிப்பிடுகிறார்;. எனவே இங்குப் புலமைக்குரிய விலைப்பொருள் பரிசுப் பொருளாக அமைந்து பண்டமாற்றுதலைக் குறிப்பிடுகிறது.  எனவேதான் அப்பண்டமாற்றுப் பரிசிலை வாங்குகின்ற வணிகன் தான் இலலை என்று புலவர் குறிப்பிடுகிறார். இது புலவரின் தன்மானத்தை அறிவிக்கின்ற பாடலாக அமைந்து, பண்டமாற்று வாணிகத்தையும் நினைவு படுத்துவாகிய பாடலாகக் கொள்ளலாம். வாணிகப் பரிசு என்ற தொடர் பரிசாகிய பொருளைக் குறிக்கிறது. எனவேதான் பாடலின் இறுதியில் தினை அனைத்து ஆயினும் இனிது என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடருக்கு உரிய பொருள் தினை அளவு சிறிதாகிய பொருள் என்ற கருத்தைத் தருவதால் பண்டமாற்று முறை உறுதி செய்யப் பெறுகிறது.  இந்தப் பண்டமாற்று முறையைப் பிறிதோர் பாடலும் குறிப்பிடுகிறது.

 ‘‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
  அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
 சான்றோர் சென்ற நெறியென
 ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே "  (புறம்,பா.134)

என்ற பாடல் ஆய்அண்டிரனை முடமோசியார் பாடியதாகும்.  இதில் இவ்வுலகில் செய்த ஒரு செயலுக்கு மாற்றாக மேலுலகத்தை அடையும் நன்மை பண்டமாற்றுப் பொருளாக அமைகிறது. அதாவது ஆய் அண்டிரன் தான் கொடுக்கும் கொடைக்குப் பண்டமாற்றாக மறுமையாகிய வீட்டுப் பேற்றனைப் பெறுகின்ற வாணிகன் அல்லன் என்று புலவர் கூறுவதால் ஆய் அண்டிரனின் கொடை என்ற ஒரு நிகழ்வு, மறுமை இன்பம் என்ற பொருளைப் பண்டமாற்று முறையாகப் பெறுவதற்கு அல்ல என்று குறிப்பிடுவதால் இப்பாடல் குறிப்பாகப் பண்டமாற்றுமுறையைக் கூறுவதாகக் கொள்ளலாம்.  எடுத்துக் காட்டப் பெற்ற இரண்டு பாடல்களிலும் வணிகன் என்ற சொல் அமைந்து, பொருள் வணிகத்தைக் குறிப்பிடுகிறது என்பதையும் புறநானூற்றுப் பதிவாகக் கொள்ளலாம். 
 
உப்பு வாணிகம்  

  புறநாநூற்றில் இடம் பெற்றுள்ள  வாணிகத்தில் பெரிதும் இடம் பெற்றுள்ள வாணிகம் உப்பு வாணிகமாகும். இவ் வணிகத்திற்குப் பெரிதும் உதவியது மாடுகள் பூட்டப் பெற்ற வண்டியாகும்.  உப்பு வண்டிகளைப் பற்றிப் பல செய்திகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.  அத்துடன் உப்பு வாணிகம் செய்பவரைப் புறநானூறு உமணர் என்று குறிப்பிடுகிறது. 

  ‘‘எருதே இளைய நுகம்உண ராவே
  சகடம் பண்டம் பெரிதுபெய தன்றே
  அவல்இழியினும் மிசைஏறினும்
   அவணது அறியுநர் யார்என உமணர்
  கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன"  (புறம், பா. 102)

என்ற இப்பகுதியின் பொருள் - வண்டியில் பூட்டப் பெற்ற எருதுகள் இளைமை வாய்ந்தன. வண்டியில் ஏற்றப் பெற்ற பொருளோ சுமை பெரிது.  ஆகையால் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கும் பொழுது , அச்சு முறியாத பாதுகாப்பிற்கு அச்சிற்குப் பக்கத்தில் பாதுகாப்பு அச்சு என்ற சேம அச்சு இணைக்கப் படும் என்ற செய்தி பொருளாக அமைந்துள்ளது.  இதனால் உப்பு வண்டியானது காளைகள் பூட்டப் பெற்றுச் செலுத்தக் கூடியது என்பதும், வாணிகத்திற்கு அடுத்த ஊருக்கு ஒட்டிச் செல்லக் கூடியது என்பதும், நீர்ச்சத்துக் கூடிய உப்பு என்பதால் ஏற்றப்படும் சுமை கடினமாகிறது என்பதும் பெறப்படுகிறது.

  ‘‘பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
   ஈத்திலைக் குப்பை ஏறிஉமணர்
  உப்புஒய் ஒழுகை எண்ணுப மாதோ" (புறம், பா. 116)

என்ற பகுதி பாரிமகளிரின் துன்ப நிலையைக் குறிப்பிடுவதாகும். பாரி வாழ்ந்த காலத்தில் அவனுடைய மகளிர் பறம்பு மலையில் ஏறி வருகின்ற பகைவரின் குதிரைகளை எண்ணினர். ஆனால் பாரி இறந்த பிறகு இப்பொழுதோ ஈச்ச மரத்தின் இலைகள் உதிர்ந்து குவிந்திருக்கும் குப்பை மேட்;டில் ஏறி இருந்து கொண்டு, அவ்வழியே செல்லுகின்ற உப்பு வாணிர்; ஓட்டிச் செல்லும் வண்டிகளை எண்ணுகின்றனர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.  இச்செய்தியால் உப்பு வணிகர்கள் கூட்டமாகச் சென்று வாணிகம் செய்வார்கள் என்றும், அவர்களின் உப்பை ஏற்றிச் செல்லுகின்ற வண்டிகள் ஒன்றொன்றாக எண்ணுகின்ற அளவிற்கு எண்ணிக்கை மிக்கதாக இருந்தன என்பதும் பெறப்படுகிறது.

  உப்பு கடற்கரை நீரில் விளைவதால் கடற்கரையில் மட்டும் உப்பை விற்காது , உப்பைச் சேகரித்து வண்டிகளில் சுமையாக ஏற்றி, மலைநாடு போன்ற இடங்களுக்குச் சென்று உப்பு வணிகர், உப்பு வாணிகத்தைச் செய்தனர் என்பதும் புறநானூற்றில் பதிவு செய்யப் பெற்றுள்ளது.

  ‘‘கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
  ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
  உரனுடை நோன்பகட்டு அன்ன"   (புறம், பா. 60)

என்ற இப்பகுதி உப்பு வண்டி மலைநாடு நோக்கிச் சென்றதையும், பாரம் மிகுந்த உப்பு வண்டியை எருதுகள் இழுத்துச் செல்லும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதனையே புறநானூற்று மற்றொரு பாடலும் குறிப்பிடுகிறது.

 ‘‘கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
 பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து"  (புறம்,பா. 386)

என்ற இப்பகுதியில் உப்பு வாணிகம் செய்வோர் உப்பு விலையை உரக்கக் கூறி விற்பர் என்பதும், உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று விற்பர் என்பதும் பெறப்படுகிறது. உப்பு வாணிகம் சிறந்தது என்பதையும் புறநானூறு பதிவு செய்துள்ளது.

 ‘‘களிறொடு நெழுந்தேர் வேண்டினும் கடவன்
  உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
 கழிமுரி குன்றத்து அற்றே" (புறம், பா. 313)

என்ற இப்பகுதியில் பிறருக்குக் கொடை கொடுக்கக் கூடிய பொருள் தன்பால் இல்லை என்றாலும் பொருளற்ற வள்ளல் ஒருவன் கொடுக்கும் மனம் இருப்பதால் இகழ்ச்சிக்கு உரியவன் அல்லன்.  எதுபோல என்றால் உப்பு விற்கும் வணிகராகிய உமணருக்குப் பெருஞ் செல்வத்தைத் தேடித் தருகின்ற உப்பு விளையும் இடம் அழுக்குடைய கடல்நீர் சூழ்ந்த உப்பங் கழியாக இருந்தாலும், கிடைக்கும் உப்பு சிறந்ததாக அமைவது போல என்று உப்பின் சிறப்பு உவமையாகக் கூறப் பெற்றுள்ளது. இவ்வாறு உப்பு வாணிகம் பற்றிய செய்திகள்  புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

கப்பல் வாணிகம்

   புறநானூற்றில் இடம் பெற்றிருக்கும் உப்பு வாணிகம் போல, நெய்தல் நிலத்தில் சிறப்பிடம் பெறுகின்ற மரக்கல வணிகமும் புறநானூற்றில் பல பாடல்களில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. மரக்கல வாணிகத்திற்குப் பயன்படுத்தப் பட்ட மரக்கலங்கள் பற்றிய செய்திகளைப் பலவாறாகப் புறநானூறு குறிப்பிடுகிறது. அரசர்களின் யானைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மரக்கலம் போன்று பெரிய உருவம் உடையது என்று குறிக்கப் பெறுகிறது.

    ‘‘மறலி யன்ன களிற்றுமிசை யோனே
    களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவம் "   (புறம்,பா. 13)

என்ற இப்பகுதியில் களிறு போன்று மரக்கலம் கண்ணுக்குப் பெரிதாகக் காட்சி அளிக்கக் கூடியது என்று குறிப்பிடுகிறது.  இதனையே புறநானூற்றுப் பிறிதொரு பாடலும் குறிப்பிடும். 

   ‘‘நளிகடல் இருங்குட்டத்து
    வளிபுடைத்த கலம் போலக்
    களிறு சென்று களன் அகற்றவும்"(புறம், பா. 26)

என்று களிற்றுக்கு மரக்கலம் உவமையாகக் கூறப்பெற்றுள்ளது. இந்த மரக்கலம் காற்றினால் செலுத்தப் படுவது என்பதையும் குறிப்பிடுகிறது. கடலில் செலுத்தப் படுகின்ற மரக்கலம் பாய்மரக் கப்பலாக அமைந்தது என்பதையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

      ‘‘கூம்பொடு
  மீப்பாய் களையாது மிசைபபரந் தோண்டாது 
  புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
  இடைப்புலப் பெருவழிச் சொரியும்
  கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ" (புறம், பா. 30)

என்ற இப்பகுதியின் மூலம் மரக்கலத்துக் கூம்பில் மாட்டப் பெற்ற பாயை மாற்றுவதற்கு நேரம் இல்லாது செலுத்தப் படுகின்ற மரக்கலம் என்றும், அதைச் செலுத்துகின்ற பரதவர்கள் அத் தொழிலைத் தவிர வேறு அறிவில்லாதவர்கள் என்பதும், மரக்கலங்கள் மூலம்  பல பண்டங்கள் பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பதும் பெறப்படுகிறது. இத்தகைய மரக்கலத்தைச் செலுத்துவோரின் திறனும் புறநானூற்றில் குறிக்கப் பெறுகிறது.

 ‘‘வளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
 வளிதொழில் ஆண்ட உரவோன் மருக"  (புறம், பா. 66)

என்ற இப்பகுதியில் கரிகாற் பெருவளத்தானின் முன்னோர் மரக்கலத்தை ஓட்டிப் போர் செய்திருக்கின்றனர்.  அவ்வாறு போருக்கு மரக்கலத்தைச் செலுத்தும் பொழுது, காற்று வீசாமல் இருந்திருக்கிறது.  தங்கள் திறமையால் வருணனையும் அழைத்துக் காற்று வீசச் செய்த திறமை உடையவர்கள் என்று குறிக்கப் பெற்றுள்ளது. காற்றைச் சோழன் ஒருவன் ஏவல் கொண்ட செய்தி கலிங்கத்துப் பரணியிலும் குறிக்கப் படுகிறது.

  ‘‘வாதராசனை வலிந்து பணிகொண்ட அவனும்"  
என்ற பகுதி சோழரின் படைக்கலம் ஓட்டும் திறனை வெளிப்படுத்துவதாகும். கடலில் செலுத்தப்படும் மரக்கலம் பல எண்ணிக்கைகளைக் கொண்டது என்பதையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

 ‘‘கடலே கால்தந்த கலன் எண்ணுவோர்
  கானற் புன்னைச் சினைநிலைக் குந்து"  (புறம், பா. 386)

என்ற இப்பகுதியில் கடல் பகுதியானது காற்றினால் செலுத்தப் படுகின்ற மரக்கலங்களை எண்ணுகின்ற மக்களைக் கொண்டது என்றும், அக் காற்றினால் கடற்கரைக் கண் இருந்த புன்னை மரங்கள் நிலை குலைந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.  புன்னை மரங்களை அலைக்கக் கூடிய பெருங் காற்றினால் இயக்கப் பெறுகின்ற மரக்கலங்கள் கடற்கரை வாழ் மக்களால் எண்ணப் பெற்றன என்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மரக்கலங்களைக் கொண்டு வாணிகம் செய்யப் பெற்றது என்பதைக் கீழ்வரும் பாடல் குறிப்பிடுகிறது.

 ‘‘மிசை  யம்பியின் மனைமறுக்குந்து 
  மனைக்குவைஇய கறிமூடையால்
 கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
 கலம் தந்த பொற் பரிசம்
 கழித்தோணியான் கரைசேர்க் குந்து
     மலைத் தாரமும் கடல் தாரமும்"  (புறம், பா. 343)

என்ற இப்பாடற் பகுதியால் நெல்மூட்டைகள் நிறைந்த வீடும், தோணியாகிய மரக்கலமும் பிரித்து அறிய முடியாத அளவுக்குத் தோணிகள் உயர்ந்திருந்தன.  அதுபோல வீட்டில் குவிக்கப் பெற்றிருந்த மிளகு மூட்டைகளும் கப்பல்களால் கொண்டுவரப் பட்ட பொருள்களும் பிரித்து அறிய முடியாதபடி மயக்கத்தைத் தரும் என்றும் மரக்கலத்தில் கொண்டு வந்த வியாபாரப் பொருள்கள் தோணியாகிய படகுகளால் கரைக்குக் கொண்டு வரப்பட்டு, மலைவளம் தந்த பொருள்களும் கடல் மூலம் கொண்டு வரப்பட்ட பொருள்களும் வாணிபம் செய்யப்படும் என்ற செய்தியைத் தருகிறது. இவ்வாறு மரக்கல வாணிகம் பற்றிய செய்திகள் புறநானூற்றில் கூறப்பெற்றுள்ளன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

பிற வாணிகங்கள்

  உப்பு வணிகம், கடல் வணிகம் போன்ற  பெரு வணிகத்தோடு சிறு சிறு வணிக முறைமைகளும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


 கள் வாணிகம்

  புறநானூற்றில் கள்ளை உணவாகப் பயன்படுத்துகின்ற முறைமை காணப் பெறுகின்றது. இந்தக் கள் உணவு சிறப்பு நாட்களில் பெரிதும் பயன்பெற்றது.  இந்தக் கள்ளுக்கு விலையாகப் பண்டமாற்று முறையில் வேற்று நாட்டிலிருந்து கொண்டு வந்த ஆநிரைகளைக் கொடுத்துக் கள்ளினைப் பெற்று உண்ட மகிழ்வுச் செய்தியைக் கீழ்வரும் பாடல் குறிப்பிடுகிறது.

  ‘‘முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
   தெறிப்ப விளைந்த தேங்கந் தாரம்
  நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு" (புறம்,பா. 258)

என்ற இப்பாடற் பகுதியின் பொருள் - முள் பொருந்திய தாளை உடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்ற , நன்கு விளைந்த கள்ளினைக், காந்தாரம் என்ற இடத்திலிருந்து கொண்டு வந்த ஆநிரைகளை விலையாகக் கொடுத்து உண்டனர் என்ற செய்தி இதில் அமைந்துள்ளது. இந்தக் கள்ளை வியாபாரம் செய்கின்றவர்கள் குடங்களில் கள்ளை நிரப்பி, வியாபாரம் செய்துள்ளனர்.

‘‘அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி"  (புறம்,பா..224)

என்ற இப்பகுதியில் குடத்தில் இருந்த கள் குடிக்கப் பெற்றது என்பதால் கள் வைக்கப் பெற்ற மட்கலம் குறிக்கப் பெறுகிறது எனலாம். 

மீன் வாணிகம்

    கள் விற்கப்படும் பொருளாக அமைந்தது போல தூண்டிலால் பிடிக்கப் பெற்ற மீனும் விலைக்கு விற்கப் பட்டு மீன் வாணிகம் நடந்ததைப் புறநானூறு குறிப்பிடுகிறது.  பண்ட மாற்று முறையில் மீன் விற்கப் பட்டு நெல் கொள்ளப் பட்டது முன்பு கூறப்பட்டது.  பிறிதொரு பாடலில் மீன் விற்கப் பட்ட பொருளைக் கொண்டு உணவுப் பொருள்கள்  வாங்கி வந்து புளிங் கூழ் தயாரிக்கப் பட்டது என்பதைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

 ‘‘நெடுங்கழைத் துண்டில் விடுமீன் நொடுத்துக்
  கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்"  (புறம்,பா. 399)

என்ற பகுதி முன்குறித்த பொருளைத் தருகின்ற பகுதியாகும்.  இதில் மூங்கில் குச்சியால் தூண்டில் செய்யப் பெற்று, மீன் பிடிக்கப் பெற்றது என்றும், அது நொடுத்து என்பதால் விற்கப் பெற்றது என்பதும் , பண்ட மாற்று முறைமையால்  உணவுப் பொருள்கள் வாங்கப் பெற்றுப் பாணர் மகள் புளிச்சுவையை உடைய கூழைத் தயாரித்தாள் என்பதும் பெறப்படுகிறது.

கரும்புச்சாறு வாணிகம்

  புறநானூற்றுக் காலத்தில் விளைபொருள்களில் ஒன்று கரும்பு ஆகும். கரும்பினை வெட்டிச் சாறு எடுத்துக் காய்ச்சிக் கரும்புக் கட்டிகளை வியாபாரத்திற்கு உரியதாக ஆக்குகின்ற கரும்பாலை இருந்தமை புறநானூற்றுப் பகுதியால் தெரிகிறது.

 ‘‘கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
  இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்க்ண்"  (புறம், பா. 322)

என்ற இப்பகுதியில் போர் வீரனின் ஊரில் கரும்பைப் பிழியும் ஆலை இருந்திருக்கிறது.  அந்த ஆலையில் எழுந்த ஒலியால் பக்கத்து நீர் நிலையில் உள்ள வாளை மீன்கள் துள்ளிப் பாய்ந்தன என்று கூறப்பெற்றுள்ளது. இந்தக் கரும்பு இயந்திரத்தைப் பற்றிய குறிப்பை அக இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

 ‘‘கரும்பின் எந்திரம் களிற்று எதிர்பிளிற்றும்
 தேர்வண் கோமா" 

என்ற இப்பகுதியில் கரும்பு எந்திரம் குறிக்கப் பெற்றிருப்பது அறியத் தக்கதாகும்.

பூ வாணிகம்

 புறநானூற்றில் பூவினை விலைக்கு விற்கின்ற வாணிகமும் கூறப் பெற்றுள்ளது. 
    
 ‘‘ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
  மாட மதுரையும் தருகுவன்"  (புறம், பா. 32)

என்ற இப்பகுதியில் பண்டமாற்று முறையில் ப10வானது விற்கப் பெற்றுள்ளது என்பது தெரிகிறது. மேலும் வீடுகள் தோறும் பூ விற்கப் பட்டது என்பதும் தெரிய வருகிறது.

 ‘‘எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
 பிறன்மனை புகுவன் கொல்லோ
 அளியள் தானே ப10விலைப் பெண்டே"  (புறம், பா. 293)

என்ற இப்பகுதி கொண்ட பாடல்  ஒருகாட்சியைப் படம் பிடிக்கிறது.  நொச்சி நியமங்கிழார் என்பவர் போர் நிகழும் காலத்தில் அரண் சூழ்ந்த நகருக்குள் செல்கிறார்.  அவர் அந்நகரில் வீரன் ஒருவனின் வீட்டினைக் காணுகின்றார்.  அவ் வீட்டின் முன்னே நிற்கும் பொழுது ப10விற்கும் பெண்கள் அப்பகுதிக்கு வராது, வீரர்கள் அன்றி மற்றவர்கள் வாழும் தெருவிற்குச் சென்று பூ விற்பதைக் கண்டார். அதற்குரிய காரணத்தை அறிந்து வியந்தார்.  காரணம் என்ன என்றால் போர்ப்பறை முழங்கியதால் வீரர் தெருவில் இருந்த வீரர்கள் போருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.  ஆடவர்கள் போருக்குச் சென்றதால் தனித்திருக்கும் போர்வீரர் வீட்டுப் பெண்கள் பூவினைச் சூடமாட்டார்கள்.  எனவேதான் பூ விற்கும் பெண்கள் வீரர் தெருவிற்குள் பூவினை விற்காது பிறர் வாழும் தெருவிற்குள் பூவினை விற்கச் சென்றார்கள் என்ற செய்தியை அறிகிறார். இப்பாடலில் பூ விற்கும் தொழில் கூறப்படுவதோடு, பண்டைத் தமிழ்ப் பெண்களின் பண்பாடும் பதிவு செய்யப் பெற்றுள்ளது.

தயிர் வாணிகம்

  உழவுத் தொழில் செய்யும் உழவர் வீட்டில் இடையராம் கோவலர் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தயிர்ப்பானை நிறைந்திருக்கிறது என்ற செய்தி புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றுள்ளது.  பாடற் பொருள் குறிப்பைப் பார்க்கும் பொழுது, உழவர் வீட்டில் இடையரின் தயிர் பானையில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளதால் தயிர் வாணிகம் இருந்தமை குறிப்பாகத் தெரிகின்றது.

      ‘‘ஆய்மகள்
  தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
  ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்"  (புறம், பா. 33)

என்ற இப்பகுதியில் ஆய்மகள் என்ற சொல் இடையர்; மகளையும், ஏரின் வாழ்நர் என்ற தொடர் உழவர் மகளையும் குறித்து, இரண்டு பெண்களையும் தொழில் அடிப்படையில் குறிப்பிடுவதால் பண்டமாற்று முறைமையில் வாணிகம் நடந்தது பெறப்படுகிறது.

விலை மகளிர்
  
  இத்தகைய உயர்ந்த வாணிகத் துறையோடு மகளிரை விலைபேசி வாணிகம் செய்யும் பரத்தை வாணிகமும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

 ‘‘முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
  விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற"  (புறம், பா. 365)

என்ற இப்பகுதியின் மூலம் விலைமகளிர் உவமையாக அமைந்துள்ளனர்.  தம் அழகை மற்றவர்க்கு விற்கும் மகளிர் போல் பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ, அதாவது மகளிரின் அழகு இருப்பது போல் தோன்றிக் காலம் செல்லச் செல்ல முதுமை அடைந்து அழகு குறையும். அதுபோலப் பாடலைப் பாடிய புலவர் தான் நிலையாக வாழ்ந்தாலும் என்றாவது ஒருநாள் அழிந்துதான் ஆக வேண்டும் என்று நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது. 

முடிவு

  ஒருநாடு வளம்பெற வேண்டுமானால் பொருளாதாரம் மேம்பட்டு விளங்க வேண்டும். பொருளாதாரம் மேம்பட நாட்டில் நிலவும் வாணிகம் சிறப்படைய வேண்டும். பண்டைத் தமிழ் நாட்டில் வாணிகம் சிறந்து விளங்கியிருந்ததைப் புறநானூற்று இலக்கியம் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய படைப்பாளர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்துச் சமுதாயச் சூழலையும், சமுதாய வளத்தையும் தங்கள் பாடல்களில் பதிவு செய்திருப்பதால் அவர்கள் பதிவின் மூலம் அக்கால வணிக வளத்தை அறிந்து கொள்ள முடிகிறது. பண்டைக் காலத்துத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இயற்கை அமைப்பில் பிரித்துக் கொண்டனர். மலை மிக்குடைய இருப்பிடம் குறிஞ்சி என்றும், கடல் வளம் மிக்குடைய இடம் நெய்தல் என்றும், காட்டுவளம் மிக்குடைய இடம் முல்லை என்றும், வயல் வளம் மிக்குடைய இடம் மருதம் என்றும் கொண்டு வாழ்ந்ததால் அந்தந்த நிலப் பகுப்புகளில் கிடைக்கும் பொருள்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று விலைகூறி விற்று வாணிகத்தை வளப்படுத்தினர். அந்த முறையில் புறநானூற்றுக் காலத்து வாணிக முறையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

 புறநானூற்று வாணிக முறைமை பண்டமாற்று வணிகமாகவே நடைபெற்றிருக்கிறது. வாணிக முறையில் ஒரு பொருளைப் பெறுவதற்கு விலையாகப் பொருளற்ற அரசியல் காசுகளையோ அல்லது நாணயங்களையோ பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. விளைந்த ஒரு பொருளை வாங்க மற்றொரு விளை பொருளையே சமமாகக் கொடுத்து அதாவது பண்டங்களை மாற்றிக் கொண்டு வாணிகத்தைச் செய்திருக்கிறார்கள்.

 பண்டமாற்று முறையில் கடல்வாழ் மக்கள் செய்த வாணிக முறைகளே புறநானூற்றில் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன எனலாம். கடல்நீரால் விளையும் உப்பு வாணிகம் அக்காலத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது.  எனவே அதனைப் பற்றிய செய்திகளைப் பல படைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். உப்பை வண்டிகளில் ஏற்றி, மற்ற நிலங்களில் சென்று விலைகூறி வாணிகம் செய்துள்ளனர்.

 உப்பு வாணிகம் மட்டுமன்றிக் கடலில் மரக்கலத்தைச் செலுத்தித் தங்கள் பகுதிக் கடற் பொருளை அடுத்த கடற்கரைப் பகுதியில் விற்று அதனால் வருகின்ற பயனில் அங்கு தாங்கள் சென்ற இடங்களில் கிடைத்த பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்து , தங்களிடத்தில் மீண்டும் வாணிகம் செய்யும் கடல் வாணிகததை மிகவும் சிறப்புறச் செய்துள்ளனர். அச்சிறப்பை வெளிப்படுத்தப் புறநானூற்றுப் படைப்பாளர்கள் கடலில் செலுத்தும் மரக்கலத்தின் சிறப்பைப் பலவாறாகப் படைத்துள்ளனர்.

 இவ்விரு பெருவாணிகங்கள் தவிர மற்ற சிறு வாணிகங்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.  தங்களால் உருவாக்கப் பெற்ற அல்லது விளைவு செய்யப் பெற்ற பொருள்களில் தங்கள் தேவைக்குப் போக எஞ்சியவற்றைப் பண்டமாற்று முறையில் வாணிகம் செய்துள்ளனர்.  பெருநீர் வளம்மிக்கக் கடற்கரைப் பொருளுக்கு மழைநீர் வளம் மிக்க மருதநிலப் பொருள்கள் பண்டமாற்றுதலில் வாணிகப் பொருள்கள் ஆயின.  மீனுக்கு நெல்லும், நெல்லுக்கு மீனுமாக இந்த வணிகம் நடைபெற்றுள்ளது.

 முல்லை நிலத்துப் ப10க்களும் மருத நிலத்துப் பூக்களும் விலைப் பொருளாக விற்கப் பெற்றிருக்கின்றன. பூ வாணிகம் சிறந்து ஒரு நகரத்தையே பெறும் அளவிற்கு விளங்கியமையும் புறநானூற்றுப் பாடல்களால் அறிய முடிகிறது.

 வெற்றிச் சிறப்பைக் கொண்டாட, கிடைத்த இன்பத்தைக் கொண்டாடக் கள் குடிக்கின்ற மரபு தமிழரிடையே இருந்தது.  அதனால் கள் வாணிகமும் புறநானூற்றில் பேசப் பெற்றுள்ளது.  கள்ளினை மண்குடத்தில் சேகரித்து வைத்து, ஒலையால் செய்யப் பெற்ற பாத்திர அமைப்பில் அவ்வாணிகம் நடந்தமையைப் புறநானூறு பதிவு செய்துள்ளது.  அரசர்கள் தங்கள் போர் வெற்றியைத் தந்த வீரக்குடி மக்களுக்குக் கள்ளினை வழங்கியிருக்கிறார்கள்.  அவர்கள் கள்ளுக்கு விலையாகக் கொடுத்தது தாங்கள் பகை நாட்டிலிருந்து கவர்ந்து வந்த ஆநிரைகளாக அமைந்தமையும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

  பண்டைத் தமிழர் சமுதாயத்தில் விளைபொருள்கள் வாணிகத்திற்குப் பயன்பட்டது போல, சமுதாய மகிழ்விற்குப் பெண்மையும் விலை பேசப் பெற்றிருக்கிறது. காமத்தின் மிகுதியால் சிற்றின்பத்தை அனுபவிக்கக் கருதுவோர்க்கு மகளிர் தங்களையே விலைபொருளாகக் கொடுத்துள்ளனர். அத்தகைய விலை மகளிரும் பொன் பொருளுக்குத் தங்கள் உடம்பைப் பண்டமாற்று  முறையாக அனுபவிக்கக் கொடுத்து வாணிகம் செய்தமையும் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பண்டைத் தமிழரின் வாணிக முறை தெரிய வருகிறது.

tamilkanikani@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard