New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியமும் பெருமித மெய்ப்பாடும் - மீள் பார்வை - போ. சத்தியமூர்த்தி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
தொல்காப்பியமும் பெருமித மெய்ப்பாடும் - மீள் பார்வை - போ. சத்தியமூர்த்தி
Permalink  
 


தொல்காப்பியமும் பெருமித மெய்ப்பாடும் - மீள் பார்வை

E-mailPrintPDF

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -

பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் தனி ஒரு இயல் மெய்ப்பாட்டியல் ஆகும். தமிழ் இலக்கியங்களில் வரும் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எனக் கூறப் பெறுகின்ற சொற்கள் எல்லாம்  உலக வழக்கில் மனத்தினால் உணர முடியுமே தவிர அவற்றிற்கு வடிவு கொடுக்க இயலாது. வடிவம் இல்லாத அப்பொருள்களை மனத்தினால் உணர்வதற்கும் பொறிகள் வாயிலாக மனம் கொள்ளுவதற்கும் உடலில் ஏற்படுகிற மாற்றமே மெய்ப்பாடுகளாகும்.  உலக மக்களின் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய தோற்றங்கள் அதனைக் காண்போர்க்குப் புலனாகும் தன்மையைத் தான் மெய்ப்பாடு என்பர். ஒரு உதாரணமாகப் புலி போன்ற கொடிய விலங்குகளை ஒருவர் காணுகின்ற பொழுது , அவர் மனத்தே நிகழும் அச்சம், அவர் உடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக் குறிகள் அவருடைய அச்சத்தைக் காண்போர்க்குத் தெரிவித்து விடுகின்றன.  இதனையே மெய்ப்பாடு என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுவர்.

மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை என்று பொருள் கொண்டு மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு என விரித்தலும் உண்டு என்பர். 1 தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பின் நான்கு இயல்களுக்கு உரைதந்த பேராசிரியர் , ‘‘மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவது ஓர் ஆற்றான் வெளிப்படுதல்.  அதனது இலக்கணம் கூறிய ஓத்தும், ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் என்றாராயிற்று. " என்பர்.2

 

இம்மெய்ப்பாடுகளைப் புனைந்துரையாக அமைத்துக் கூறப்பெறும் நாடக வழக்கிற்கும் , செய்யுள் வழக்கிற்கும் மிகுதியாகக் கொள்வது தமிழ் இலக்கண மரபாகும். எனவேதான் செய்யுள் வழக்குக்கு உரிய இம்மெய்ப்பாடுகளைச் செய்யுளுக்கு உரிய உறுப்பாகக் கொண்டு, தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் ஓர் இயலாக விளக்குகிறார். இக்கட்டுரை பெருமித மெய்ப்பாட்டிற்குரிய செய்திகளைத் தொல்காப்பியத்தின் வழி மீள்பார்வையில் தருகிறது.

மெய்ப்பாட்டின் வகைகள்

தொல்காப்பியரின் இலக்கணப்படி ,

‘‘பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்

 கண்ணிய புறனே நானான்கு என்ப" (மெய். சூ.1)

என்ற இச்சூத்திரம் மெய்ப்பாடுகளின் வகைகளைக் குறிப்பிடுகிறது.  இச்சூத்திரத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்’‘முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாகினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் , கருதிய பொருள் பகுதி பதினாறு ஆகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு" என்று உரைஎழுதிச் சிறப்புரையில் முப்பத்திரண்டிற்கு விளக்கம் தருகிறார்.

நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், உவகை, சமநிலை, வெகுளி, - இந்த ஒன்பது சுவை எனப்பட்டவற்றுள் வெகுளி ஒழித்து, ஒழிந்த எட்டனையும் கூறுங்கால்,சுவைக்கப் படும் பொருளும் அதனை நுகர்ந்த பொறி உணர்வும்,  அது மனத்துப் பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தால் கண்ணீர் அரும்பலும், மெய்ம்மயிர் சிலிர்த்தலும், முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச்சுவை எட்டோடும் கூட்டி நான்கோடு பெருக்க, முப்பத்திரண்டு என்பது கிடைக்கும்..

இந்த முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளை எட்டாகச் சுருக்கிக் கூறுவதும் இலக்கண நூலார் கருத்தாகும். தொல்காப்பியரும்,

‘‘நாலிரண்டாகும் பாலு மாருண்டே" (மெய் - சூ.2)

என்று குறிப்பிட்டு, எட்டுவகை மெய்ப்பாடுகளை வரையறுப்பார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு எனப்படும்.

இவற்றின் வைப்புமுறை பற்றி உரையாசரியர் குறிப்பிடும் பொழுது, ‘‘இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய விளையாட்டுப் பொருளாவது நகை என்பதால் அதனை முதற்கண் வைத்தார். நகைக்கு மறுதலையாவது அழுகை ஆகலின் அதனை அதன்பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்கும் ஆதலால் அழுகையின்பின் இளிவரலை வைத்தார். தாம்; இளிவந்த நிலையில் தம்மினும் உயர்ந்தவற்றை எண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின் பின் மருட்கையை வைத்தார்.  வியப்பாகிய மருட்கை பற்றியும், அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தார்.  அச்சத்திற்கு மறுதலை வீரம் ஆதலின் அச்சத்தின்பின் வீரத்தை வைத்தார்.  வீரத்தின் பயனாய்ப் பிறப்பது வெகுளி ஆதலின் வீரத்தின் பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலை ஆதலாலும் எல்லாச் சுவைகளிலும் சிறந்தது ஆதலானும் முதலில் கூறிய நகையுடன் தொடர்பு உடையது ஆதலானும் உவகையை இறுதிக் கண் வைத்தார் என்பர். 3

இவ்வாறு மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் வழி உணர முடிகிறது. தொல்காப்பியர் எட்டுவகை மெய்ப்பாடுகளையும் எவ்வாறு பிறக்கின்றது என்று ஒவ்வொன்றையும் விளக்குகிறார

நகை

எட்டுவகை மெய்ப்பாட்டில் முதலில் அமைவது நகையாகும். நகை என்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்றாகும்.  இந்நகையானது எள்ளல், இளமை, பேதமை, மடமை என்பதன் அடிப்படையில் வெளிப் படுவதாகும். இதில் எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகையாடுவதும், பிறரால் எள்ளப் பட்ட வழி தான் நகுதலும் என இரண்டாகும். இளமை என்பது தான் இளமையாகப் பிறரை நகுதலும், பிறர் இளமை கண்டு தான் நகுதலும் என இரண்டாகும். மூன்றாவது அடிப்படையான பேதமை என்பது அறிவின்மையாகும், இது தன் பேதமையால் பிறர் நகுதலும், தான் நகுதலும் என இரண்டாகும். மடமை என்பது ஒருவர் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை விடாது கடைப்பிடித்தல் ஆகும்.  இதனைக் கொடுத்தற் கொண்டு கொண்டது விடாமை என்பர். தன் மடமையால் பிறர் நகுதலும், பிறர் மடமையால் தான் நகுதலும் என இரண்டாக அமையும். இவ்வாறு நகை பற்றிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் தருகிறார்.

அழுகை

அழுகையானது இளிவு, இழவு, அசைவு, வறுமை என நான்கில் அடிப்படையில் பிறக்கும்.  இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியன் ஆதல்.  இழவு என்பது தந்தையும் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றை இழத்தல், அசைவு என்பது பண்டை நிலைமை கெட்டு, வேறொருவரால் வருந்துதல், வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம் எனப்படும். இவையும் தன் கண்ணும் பிறர் கண்ணும் பிறக்கும்.

இளிவரல்

இது இழிபு எனப் பொருள்படும். அதாவது எளியன் ஆதல் என்பதாகும். இது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்ற நான்கில் அடிப்படையில் தோன்றும் மெய்ப்பாடு ஆகும். மூப்பு என்பது வயது முதிர்ச்சியைக் குறிக்கும்.  பிணி என்பது நோயினைக் குறிக்கும்.  வருத்தம் என்பது முயற்சியைக் குறிக்கும், மென்மை என்பது வலியின்மையைக் குறிக்கும்.  இந்த நான்கினால் பிறரைக் காட்டிலும் தான் எளியனாய் விளங்கும் நிலையாகும்.

மருட்கை

இதற்கு வியப்பு அல்லது அற்புதம் என்பது பொருள்.  இது புதுமை,பெருமை, சிறுமை, ஆக்கம் எனனும் நான்கின் அடிப்படையில் பிறக்கும்.  புதுமை என்பது புதியதாய்த் தோன்றுவதைக் குறிக்கும். (அதனால் வியப்புத் தோன்றும்) . பெருமை என்பது பெருமைக்குரியதைக் குறிக்கும்.  சிறுமை என்பது சிறுமைக்கு உரியதைக் குறிக்கும்.  ஆக்கம் என்பது ஒன்று ஒன்றாய்த் திரிந்து தோன்றுவதைக் குறிக்கும்.

அச்சம்

அச்சம் என்பது ஒன்றைக் கண்டு பயப்படுவதைக் குறிக்கும். இது அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்ற நான்கின் அடிப்படையில் பிறக்கும். இதில் அணங்கு என்பது பேய், பூ தம், பாம்பு, பதினெண்கணங்கள், ஆகியோரைக் கண்டால் அச்சம் பிறக்கும். விலங்கு என்பது சிங்கம் போன்ற விலங்குகளைக் கண்டால் அச்சம் பிறக்கும். கள்வர் என்பது தீத்தொழில் கொண்டவர்களைக் கண்டால் அச்சம் பிறக்கும்.  இறை என்பது தந்தையரும், ஆசிரியரும், அரசரும் ஆகியோரைக் கண்டால் அச்சம் கொண்டு வணங்குதல் வேண்டும்.

இவ்வாறு ஐந்து வகையான மெய்ப்பாடுகளைப் பற்றிய செய்திகளைச் சூத்திரங்களாகத் தொல்காப்பியர் தந்து, ஆறாவது மெய்ப்பாடாகிய பெருமிதம் பற்றிய செய்திகளைத் தெளிவாகத் தருகின்றார். அவற்றை இனிக் காண்போம்.

பெருமிதம்

‘‘கல்வி, தறுகண், இசைமை, கொடை எனச்

 சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே"

என்பது பெருமிதம் பற்றிச் சொல்லப்பட்ட சூத்திரமாகும். இச்சூத்திரத்திற்கு இளம்பூ ரணர் உரை ‘‘கல்வியானும் தறுகண்மையானும், புகழ்மையானும், கொடையானும் பெருமிதம் நால்வகைப் படும் என்றவாறு" என்று எழுதி, சிறப்புரையில் பெருமிதமாவது தன்னைப் பெரியவனாக நினைத்தல் என்றும், பிறன் ஒருவனின் மிகுத்த வழி பிறக்கும் மகிழ்ச்சி பெருமிதம் எனவும், உரை எழுதியுள்ளார். மேலும் பெருமிதத்திற்கு வீரம் என்று பொருள் கொண்டு, அதற்குப் புறப்பொருள் வெண்பாமாலையின்  பாடலை உதாரணமாகக் காட்டியுள்ளார்.  எனவே இளம்பூரணரின் எண்ணம் பிறர் ஒருவரைக் காட்டிலும் தான் கல்வி போன்றவற்றில் மிகுந்த திறம் உடைய நிலையில் ஒருவனுக்குப் பெருமிதம் தோன்றும் என்பதாகும்.

இளம்பூ ரணர் இச்சூத்திரத்தில் இசைமை என்பதற்குப் பதிலாகப் புகழ்மை என்ற பாடம் கொண்டுள்ளார். மற்ற உரையாசிரியர்கள் அனைவரும் பெருமிதம் தோன்றுவதற்குக் காரணங்களில் ஒன்றாகப் புகழ்மை என்ற பாடத்தைக் கொள்ளாது , அப்பொருளைத் தருகின்ற இசைமை என்ற சொல்லையே பாடமாகக் கொண்டுள்ளனர். பேராசிரியர் இச் சூத்திரத்திற்கு விரிந்த பொருள் தந்துள்ளார். அவரின் உரை -

‘‘கல்வியும் தறுகண்மையும் புகழும் கொடையும் என்னும் நான்கும் பற்றி வீரம் பிறக்கும் "என்று எழுதியுள்ளார். பெருமிதத்திற்குப் பேராசிரியர் வீரம் என்று பொருள் கொண்டுள்ளார். அவ்வாறு கொண்டதற்குக் காரணத்தையும் விளக்குகிறார். ~இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதம் என்று எண்ணினான் என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேர் எல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும்" என்று கூறியுள்ளார்.5    இதனால் அறிவு, ஆண்மை, பொருள் முதலிய சிறப்புக்களால் மக்கள் எல்லாரோடும் ஒப்ப நில்லாது, உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக் கொள்வது பொருந்தும். இத்தகைய பெருமிதமாகிய வீரம் தோன்றுவதற்கு அடிப்படையான கல்வி என்பது, தவம் முதலிய விச்சை என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார். அதற்கு அவர் காட்டுகின்ற எடுத்துக் காட்டு, ,

‘‘வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறர் முன்னர்

 கல்லாமை காட்டி யவள்"5 (கலி. பா. 141)

என்பதாகும். இப்பகுதி மடலேறுகின்ற தலைவன் தன்னால் காதலிக்கப்பட்ட தலைவியின் பெருமையைக் கூறுகின்ற பகுதியாகும். குற்றமுடைய சொற்களைச் சொல்லாதபடி தங்கள் நாவினால் சொல்ல வல்லவர் முன்னே, சொல்லுதல் வல்லவனாகிய என்னைப் பிறர் முன்னே ஒன்றையும் கல்லாத தன்மையனாகத் தலைவி காட்டினாள் என்ற பொருள் அமைந்துள்ளது.  இதில் சொல்லுதல் வல்லவன் என்று கல்வியின் பெருமிதத்தைத் தலைவன் கூறி மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறான்.

இத்தகைய உரைவழி இன்றைய உலகிலும் கல்வியால் பெருமிதம் ஏற்படுவதை அறியலாம். கற்ற புலவராகிய மோசிகீரனாரைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பெருமதிப்புடன் கவரி வீசிச் சிறப்பித்தான். மோசிகீரனார் கற்ற தமிழ்ப் புலமை தான் தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்றியது.  எனவேதான் அவர் புறநானூற்றில் அவ்வரசனைப் பாராட்டும் பொழுது,

‘‘இவண் இசையடையோர்க்கு அல்லது அவண்

 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை" 6 (புறம்.பா. 50)

என்ற பகுதியின் மூலம் அரசனின் பெருமிதத்தைப் புலவர் பாடிப் போற்றுகின்றார்.  இங்கு கல்வியைப் போற்றியது பெருமிதமாக அமைகிறது. திருவள்ளுவர் கல்வி என்ற அதிகாரத்தில்,

‘‘தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு

 காமுறுவர் கற்றறிந் தார்" (குறள், 399)

என்ற குறளைப் படைக்க, அதற்கு உரை எழுதிய பரிமேலழகர் , உலகு இன்புறுதலாவது இம் மிக்காரோடு தலைப்பெய்து, அறியாதன எல்லாம் அறிந்தோம் என்று பெருமிதம் கொள்வதாகும் என்று எழுதியிருப்பது இம்மெய்ப்பாட்டிற்கு விளக்கமாக அமைகிறது.

‘‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற நம்பிக்கையும் இக்காலத்து உண்டு. தன்னிடத்திருந்த கல்வியின் சிறப்பால் பெருஞ்சித்திரனார் நெடுமான் அஞ்சி காணாது கொடுத்த பரிசிலை மறுத்துப் பெருமிதத்தோடு பாடிய ,

‘‘காணாது ஈத்த இப்பொருளுக்கு யான்ஓர்

 வாணிபப் பரிசிலன் அல்லேன்" 8 (புறம்.பா. 208)

வரிகளும் சான்றாகின்றன. இவ்வாறு பெருமிதமாகிய வீரம் அமையக் கல்வி அடிப்படையாக அமைவது ;சிறப்புடையதாகும்.

அடுத்துப் பெருமிதத்திற்கு நிலைக்களனாக அமைவது தறுகண் ஆகும். இதற்குப் பேராசிரியர் உரை தரும்பொழுது, ‘‘தறுகண் என்பது அஞ்சத் தக்கன கண்டவிடத்து அஞ்சாமையாகும்" என எழுதுவார். இதற்கு அவர் காட்டும் எடுத்துக்காட்டு,

‘‘அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்

 மன்றம் படர்வித்தவள்" 9 (கலி.பா. 141)

என்பதாகும்.  இதன் பொருள் - வெற்றியினை உடைய குதிரையின் மேல் இருந்து போர்த் தொழிலை நடத்துவேனாகிய என்னை, அம்மாவல்லாத மடல் மாவிலே ஏறி அக்களத்தே அன்றி மன்றின் கண்ணே தன்னை உள்ளுவித்தாள் என்பதாகும்.  அதாவது குதிரை ஏற்றத்தில் வல்லவன் என்று தலைவன் தன்னுடைய தறுகண்மையைப் பெருமிதமாகக் கூறி, அத்தகையவனை மடல்மா ஏற வைத்துவிட்டாளே என்று கூறுவதாகப் பாடற் பொருள் அமைந்துள்ளது. குதிரை ஏற்றத்திற்கு அஞ்சாத தறுகண்மை இங்கு குறிக்கப் பெறுகிறது.

அஞ்சக் கூடியவற்றுக்கு அஞ்சாத தன்மை தறுகண்மை என்பதால் பெரிய புராண நிகழ்ச்சியை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தம் உடையதாகும். கண்ணப்பராகிய குழந்தை திண்ணன் தான் வளர்ந்து வரும் நாளில் குழந்தைப் பருவத்தில் எதிரே நிற்கும் புலிக்குட்டிகளை அஞ்சாது அவற்றின் வாயில் தன் கையை வைத்த தறுகண்மையைக் காணமுடிகிறது.

‘‘ஒருபுலிப் பார்வை பேழ்வாய் நுழையெனப் பொற்கை நீட்டப்

பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண்டு ஓச்ச"10

(பெ.புராணம், கண்ணப்ப நாயனார், பா. 23)

என்ற பகுதியும் தறுகண்மையினால் ஏற்படும் மெய்ப்பாட்டினை விளக்குவதாகும்.

இத்தகைய ஆண்மை தறுகண்மையைப் போலப் பெண்மைத் தறுகண்மையையும் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது. பாண்டியன் அவைக்களத்தில் பாண்டிமாதேவி இறந்து வீழ்ந்ததைக் கண்ட கண்ணகி,

‘‘மட்டார் குழலார் பிறந்த பதி பிறந்தேன்

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்

 ஒட்டேன் அரசொடு ஒழிப்பேன் மதுரையும்என்

 பட்டிமையும் காண்புறுவாய்" 11(சிலம்பு,வஞ்சினமாலை,35-38)

என்று கூறிய கூற்றில் தறுகண்மை பற்றிய பெருமித மெய்ப்பாடு காணப்பெறுகிறது. அதிகாரத்தால் தம்மை ஆளுகின்ற அரச குடியைக் கண்டு அஞ்ச வேண்டிய குடிமகள் அஞ்சாது வஞ்சினம் கூறுவது பெண்மையின் பெருமிதத்தைக் காட்டுவதன்றோ.

அதுபோலப் பிறிதோரிடத்தில் சேரன் செங்குட்டுவன் ,கண்ணகிக்குக் கல் எடுப்பதைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ,

 ‘‘வடதிசை மருங்கில் மன்னர்தம் முடித்தலை

 கடவுள் எழுதஒர் கல்கொண்டு அல்லது

 வறிது மீளும்என் வாய்வாளா கில்"12 (சிலம்பு,கால்கோள் காதை,13-15)

என்ற சேரனின் வாய்மொழி தறுகண்மை அமைந்த பெருமித மெய்ப்பாடாக அமைந்துள்ளது. இவ்வாறு பெருமிதம் என்ற மெய்ப்பாடு அமைவதற்குத் தறுகண்மை அடிப்படையாக அமைகிறது.

பெருமித மெய்ப்பாடு தோன்றுவதற்கு மூன்றாவதாக இசைமை என்பது அடிப்படையாகிறது.  இசைமை என்பதற்குப் பொருள் புகழ் என்பதாகும். பேராசிரியர் ‘‘இசைமை என்பது இன்பமும் பொருளும் இழப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை" என்று எழுதுவார். இதற்கு அவர் காட்டும் எடுத்துக்காட்டு,

‘‘கழியாக் காதலர் ஆயினும் சான்றோர்

 பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்" 13 (அகம், பா. 112)

என்பதாகும்.  இப்பகுதி எத்தகைய காதல் உடையவரும் சான்றோரால் பழிக்கக் கூடிய நிலையில் இன்பத்துறை எய்துமானால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பொருளைக் கொண்டதாகும். எனவே புகழ் என்பது பழி இல்லாத புகழாக அமைய வேண்டும் என்ற கருத்து பெருமிதத்திற்கு அடிப்படையாகக் கூறப் பெற்றுள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் வறுமை வந்துற்ற காலத்தில் பழியொடு வந்த பொருளை ஏற்காமைதான் புகழைத் தரும் என்பது பெறப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குவது சேரமான் கணைக்கால் இரும்பொறை , சோழன் செங்கணானுடன் போர் தொடுத்த பொழுது தோல்வியுற்றுக் குணவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்த பொழுது, தண்ணீர்த் தாகத்திற்குப் பழியோடு வந்த தண்ணீரை ஏற்காது இறந்து பட்ட நிகழ்வைக் குறிப்பிடலாம்.

‘‘மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணிய

 தாம் இறந்து உண்ணும் அளவை

 ஈன்மரோ இவ்வுலகத் தானே" 14 (புறம்.பா.74)

என்ற இப்பகுதியில் நாய் போலப் பிடித்துத் துன்பத்தைச் செய்து நட்பில்லாத கேளீர் தரும் தண்ணீரை யாசித்து உண்ணக் கடவேன் அல்லேன் என்று கூறி வயிற்றுத் தீயை ஆற்றுவதற்கு இரந்து உண்ணும் அளவினை வீரமிக்க அரசர்கள் பெறுவார்களோ? என்ற பொருள் இப்பகுதியில் அமைந்து சேரமானின் பெருமிதத்தை உலகறியச் செய்கின்றது.

திருவள்ளுவரும் ,

‘‘ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

 சான்றோர் பழிக்கும் வினை" 15 (குறள், 656)

என்று குறிப்பி;ட்டு, சான்றோரால் பழிக்கக் கூடிய வினையைச் செய்யாதவனே புகழை உடையவன் ஆவான் என்று குறிப்பிடுகிறார்.

பெருமித மெய்ப்பாடு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைகின்ற பண்பு கொடையாகும். கொடை என்பதற்குப் பேராசிரியர் ‘‘உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாயின எல்லாப் பொருளும் கொடுத்தல் " என்று உரை எழுதுவார். இதற்கு அவர் எடுத்துக் காட்டும் உதாரணம் ,

‘‘தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

 தகுதி அஞ்சிச் சீரை புக்க

 வரையா ஈகை உரவோன் மருக" 16 (புறம்.பா.43)

என்பதாகும்.  இதன் பொருள் - தன்னிடத்தே அடைக்கலம் புகுந்த குறிய நடையை உடைய புறாவினது அழிவிற்கு அஞ்சி, தன் அழிவிற்கும் அஞ்சாது துலாக்கோல் முன் புகுந்த கொடை உள்ளம் படைத்தவன் வழியில் வந்த அரசனே என்று சிபிச் சக்கரவர்த்தி தன் உடலையே கொடையாகக் கொடுத்த பெருமிதத்தைக் காட்டுகிறது.

 இந்நிகழ்ச்சியை இளங்கோவடிகளும் குறிப்பிடுகிறார்.

‘‘தேரா மன்னா செப்புவது உடையேன்

 எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

 புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" 17 (வழக்குரை காதை , 50-52)

குறிப்பிடுகிறார்.  பின்னால் வந்த இலக்கியங்களும் ,

‘‘உடல் கலக்கற வரிந்து தசையிட்டும் ஒருவன்

 ஒருதுலை புறவுஒக்க நிறை புக்க புகழும்"18 (பரணி, ராசபாரம்பரியம்,பா.93)

என்றும்,

‘‘புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாக துலைபுக்க

 மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன்"19(கம்ப.,கும்பகர்ணன் வதை, பா. 255)

என்றும் குறிப்பிட்டு, சிபி அரசனின் கொடையால் ஏற்பட்ட பெருமிதத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இந்த நிகழ்வோடு கொற்கைப் பாண்டியனின் நிகழ்வையும் , ஏகலைவன் நிகழ்வையும் ஒப்பிட்டுக் காணும் பொழுது பெருமிதம் தோன்றும்.

இவ்வாறு தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டினைக் கூறவந்த தொல்காப்பியர் பெருமிதமாகிய மெய்ப்பாட்டிற்கு நான்கு நிலைக்களன்களைக் குறிப்பிட, அந்த நான்கு நிலைக்களன்களுக்கும் இலக்கியங்களில் சான்றுகள் அமைய, பெருமிதத்தின் தன்மையை மீள்பார்வை செய்யும் பொழுது அறிய முடிகிறது.  இத்தகைய தொல்காப்பிய இலக்கணம் அமையப் பேராசிரியராகிய உரையாசிரியர் மேலும் ஒரு நிலைக்களத்தைப் பெருமிதத்திற்குக் கொடுக்கிறார். அதாவது, ‘‘சொல்லப் பட்ட பெருமிதம் என்றதனால் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் எனக் கொள்க." என்று குறிப்பிட்டு அதற்கு எடுத்துக் காட்டும் தருகிறார்.

~பல்லிரும் கூந்தல் மகளிர்

ஒல்லா முயற்கிடை குழைக என்தாரே" 20 (புறம்,பா. 73)

இதன் பொருள் - அழகான கருமை நிறம் பொருந்திய கூந்தலைக் கொண்ட மகளிர் என்னோடு கூடுவதால் நான் அணிந்திருக்கும் தாராகிய மாலை வாடட்டும் என்று பெருமித நிலை கூறப்பெறுகிறது.  இதனையே திருவள்ளுவர்,

‘‘தம்மில் இருந்து தமதுபார்த்து உண்டற்றால்

 அம்மா அரிவை முயக்கு" 21(குறள், 1107)

என்று குறிப்பிட்டு முயங்கிய காம இன்பத்தால் பெருமிதம் ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார்.

அதுபோல மற்றோர் இடத்திலும் ,

‘‘தாம்வீழ்வார் வெந்தோள் துயிலின் இனிதுகொள்

 தாரைக் கண்ணான் உலகு" 22 (குறள், 1103)

என்ற குறட்பாவால் காம இன்பமானது தாமரைக் கண்ணான் உலகைக் காட்டிலும் இனிதாக அமையும் என்ற பெருமிதச் சுவையைத் திருவள்ளுவர் காட்டுகிறார். இதனையே சங்க இலக்கியமும்,

‘‘விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்

 அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்

 இரண்டும் தூக்கின் சீர் சாலாவே

 பூப்போல் உண்கண் பொன்போல் மேனி

 மாண்வரி அல்குல் குறுமகள்

 தோள்மாறு படூஉம் வைகலோடு எமக்கே" 23 (குறுந். பா. 101)

என்று காமத்தால் ஏற்படுகின்ற பெருமிதம் கூறப்படுகிறது.

முடிவு

நாடக வழக்கிற்கு இன்றியமையாத மெய்ப்பாடுகளில் ஒன்றான பெருமிதம் என்ற மெய்ப்பாட்டிற்குக் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கும் அடிப்படையாக அமைவது போலக் காமமும் அடிப்படையாக அமைந்து வரும் எனத் தொல்காப்பியத்தாலும், தொல்காப்பிய உரையாசிரியராலும் அறிய முடிகிறது. அத்தகைய பெருமித நிலை பிற்கால இலக்கியங்களிலும் இடம் பெற்றுச் சுவை தந்ததை இக்கட்டுரை மீள்பார்வையில் எடுத்துக் காட்டியதாம்; .

அடிக்குறிப்புகள்

1. கா. வெள்ளைவாரணம், தமிழ்இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், அண்ணாமலைப்

பல்கலைக்கழக வெளியீடு, 1957, பக். 155-156

2. தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்

கழகம், 1985, ப. 8

3..கா. வெள்ளைவாரணம், தமிழ்இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், அண்ணாமலைப்

பல்கலைக்கழக வெளியீடு, ப. 159.

4. பேராசிரியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1985, பேராசிரியர் சுந்தரமூர்த்தி

பதிப்பு, ப. 32

5. கலித்தொகை, பா. 141

6. புறநானூறு, பா. 50, வரி 14-15

7. திருக்குறள், 399

8. புறநானூறு, பா. 208., வரி 6-7

9.  கலித்தொகை, பா. 141

10.பெரியபுராணம், கண்ணப்ப நாயனார், பா. 23

11.சிலப்பதிகாரம், வஞ்சினமாலை, 35-38

12.சிலப்பதிகாரம், கால்கோள் காதை, 13-15

13.அகநானூறு, பா. 112

14 . புறநானூறு, பா. 74

15. திருக்குறள், 656

16. புறநானூறு, பா. 43

17..வழக்குரை காதை , 50-52

18. கலிங்கத்துப்பரணி, ராசபாரம்பரியம், பா. 93

19.கம்பஇராமாயணனம், கும்பகர்ணன் வதை, பா. 255

20. புறநானூறு, பா. 73

21.திருக்குறள், 1107

22. திருக்குறள், 1103

23. குறுந்தொகை, பா. 101

tamilkanikani@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard