New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் -- ர.ரதி


Guru

Status: Offline
Posts: 24625
Date:
தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் -- ர.ரதி
Permalink  
 


தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

E-mailPrintPDF

ஆய்வு: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

இலக்கண இலக்கியங்களுக்கு உரை என்பது காலத்தின் தேவை. அவை வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதோடல்லாமல், ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்றாற் போல் அவற்றை நகர்த்தவும் செய்கின்றன. ஆகவேதான் தி.சு. நடராசன்அவர்கள், “அவை ஒன்றில்லாது இன்னொன்று இயங்கா” (உரையும் உரையாசிரியர்களும்) என்னும் தன்மையில் உரைகளின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றார். தமிழ் இலக்கண, இலக்கிய மரபில் ஒரு காலகட்டம் வரை உரையின்றி சூத்திரத்தாலேயே பொருள் விளக்கம் பெறும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. இதனை,  ”உரையின்றி சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு” (தொல். மரபியல், உரைவளம், ப.154) என்று பேராசிரியர் மரபியலுக்குக் கூறும் உரை வாயிலாக அறிய இயலுகின்றது. ஆனால் கால இடைவெளி அச்செயல்பாடு தொடர்ந்து நிகழ்வதற்குத் துணை நிற்கவில்லை. ஆகவே பழைய இலக்கண, இலக்கியங்கள் குறிப்பாக 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை என்றே கூறலாம். இதன் காரணமாக 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த ஆசிரியர்கள் பழைய இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆகவே இக்கால கட்டத்தில் மிகுதியான உரை நூல்கள் தோன்றலாயின. ஆயினும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தை “உரையாசிரியர்களின் காலம்” என ஆய்வாளர்களால் அடையாளப்படுத்துவது நோக்கத்தக்கது. காரணம் ஆரம்பத்தில் அரும்பத உரை என்ற தன்மையில் தோன்றிய உரையின் செல்வாக்கு, பின் குறிப்புரை, விளக்கவுரை என்ற தன்மையில் வளர்ச்சி பெற்று வளர்ந்த வரலாற்றை நமக்குக் கிடைத்த உரைகளின் வரலாறுகள்  தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய வளர்ச்சியின் உச்சகட்ட நிலையினையே ”உரையாசிரியர்களின் காலம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

நமக்கு இன்று கிடைக்கின்ற தொன்மையான இலக்கணப் பிரதி தொல்காப்பியம். இது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபுக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்று. ஆயினும் அது பல்வேறு வளர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக நம்மிடையே உலவி வர முக்கிய காரணமாக இருப்பது எது? ஒன்று பல்வேறு கருத்துப் புலப்பாட்டு முறைக்கு இடம் தரும் அதன் விரிந்த தன்மையும், மற்றொன்று கோட்பாட்டடிப்படையிலான கல்வி வளர்ச்சிக்கு இடம் தரும் அதன் புத்தாக்கத் தன்மையுமேயாகும். இந்த அடிப்படையில் அதற்கு எழுதப்பட்ட உரைகள் பற்றி குறிப்பிடும் போது, ”தொல்காப்பியருக்குப் பின் மொழி வளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை பிற்காலத்தவருக்குத் தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பொருள் அறிவதில் இடர்பாட்டை உண்டாக்கின. இந்த இடர்பாட்டினைக் களையும் வகையில் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையிலும், அதனுள் கூறப்படும் இலக்கணக் கூறுகளை இலக்கிய, வழக்கு மேற்கோளைக் கொண்டு விளக்கும் நோக்கிலும் உரைகள் எழுந்தன”(தொல்காப்பிய ஆய்வின் வரலாறு,ப.3) என்று கோ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் அதன் நோக்கத்தையும், காரணத்தையும் தெளிவுபடுத்துகின்றார்.

உரைகளின் இன்றியமையாமை
எல்லா மொழிகளிலும் இலக்கண நூல்களை விட இலக்கிய நூல்களே அதிகமாக இருக்கின்றன. ஆனால் தமிழில் இலக்கண நூல்களுக்கே உரைகள் அதிகமாகத் தென்படுகின்றன. இவை இலக்கிய நெறிகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய புரிதல்களுக்கு உரைக்கல்லாக நின்று சிறப்பு செய்கின்றன. ஆகவேதான்,”இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரையென்னும் கயிற்றால் பிணித்த உயிர்காலம்”     (ஆ.கோ, ப.407) என்று வ.சுப. மாணிக்கம் சிறப்பிக்கின்றார். ஆயினும் ஒரு சமூகத்தில் தோன்றக்கூடிய மாற்றங்களை உள்வாங்கியவாறு இலக்கிய பிரதிகள் ஒவ்வொரு காலச்சூழலிலும் வெளிவருவது போன்று இலக்கண நூல்கள் வெளிவருவது இல்லை. இருப்பினும் வெளியான ஒன்றிரண்டு இலக்கண நூற்களை பல்வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய, அதாவது இலக்கியங்கள் ஆற்றக்கூடிய பணியினை உரைகளே ஆற்றுகின்றன எனலாம். அவ்வாறாயின் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்றாற்போல் இலக்கணங்கள் உருவாகமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

”ஒரு நாட்டுக்கு ஒரு காலத்து அரசியலமைப்பு வகுப்பர். காலந்தோறும் சில மாற்றங்கள் வரும்போது, விளக்க வகையாலோ புதிய சட்டத்தாலோ திருத்தங்கொள்வர். இவ்வாறல்லாது அடிக்கடி அரசியலமைப்பு வகுக்கும் வழக்காறில்லை. அப்படி இருப்பின் அந்நாடு நாடெனப்படாது. அதுபோல மொழிக்கு இலக்கண நூல்களும் அடிக்கடி தோன்றுவதில்லை. தோன்றிய இலக்கண நூல் பன்னூறாண்டுக்கு இடம் கொடுப்பதாக அமைய வேண்டும். இங்கன் அமைந்தது நம் தொல்காப்பியம். அதனாற்தான் இடைச்சங்கத்தில் எழுந்த தொல்காப்பியம் கடைச்சங்கத்திற்கும் உரிய நூல் என்று இறையனார் அகப்பொருளுரை மொழியும்”  (மேலது,ப.410) என்ற வ.சுப.மாணிக்கனாரின் கூற்று, அவற்றின் முக்கியத்துவம் நூல்களின் அளவில் இல்லை அவை கூறும் கருத்துக்களின் செறிவிலேயே உள்ளது என்பதை  புலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றது. ஆகவேதான் அத்தகைய செம்மாந்த பிரதியின் ஊடாட்டத்தை காலம் கடந்தும் மறுவாசிப்புக்குள்ளாக்கும் கருவியாக உரைகள் செயல்பட்டு, தனது தளத்தை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.

சொல்லதிகார உரை பெருக்கத்திற்கான காரணங்கள்
மொழிக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் விளங்கக் கூடியது சொற்கள். ஒவ்வொரு காலச் சூழலுக்கேற்றாற் போல் இச்சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க இயலாததாகின்றது. இவ்வாறு சொல்லிலும், அதன் பொருளிலும் ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொரு காலகட்டங்களிலும் மொழியின் பரப்பை விரியச் செய்கின்றன. அதே வேலையில் அம்மாற்றம் பொருள் புரிதலில் சில முரண் போக்குகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய மாற்றங்களினின்று மூலத்தின் தன்மையை சரியாக புரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டுதல் என்பது அவசியமானதாகின்றது. அவ்வேலையை இலக்கணத் தளத்தில் உரைகள் நிகழ்த்துகின்றன. ஆனால் மூலத்தை புரிந்து கொள்ளுதல் என்பதினின்று தன்னுடைய அறிவை வெளிக்காட்டுதல், புலமையை வெளிக்காட்டுதல், தம்முடைய சமயத்திற்கேற்றாற் போன்று மூலத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தல், தம் காலத்து நிலவும் அரசியலை மூலத்தோடு பொருத்திக் கூறல் என பல்வேறுபட்ட தன்மைகளும், தருக்க வாதங்களும் ஒரு மூலத்திற்கு எண்ணிறந்த உரைகளைத் தோற்றுவிக்க மூலக்காரணங்களாகி விடுகின்றன.

மேலும் உரை கூறும் முறைமைகளில் புகுத்தப்படும் மரபுகள் உரைப் பரப்பை இன்னும் விரிவுபடுத்துகின்றன. ஒரு காலகட்டம் வரை வடமொழிச் சார்பு, சமய அரசியல் சார்பு, இன்றைய நிலையில் கொள்கை, கோட்பாட்டு உருவாக்கம் இவற்றின் அடிப்படையில் தோன்றிய கருத்து விளக்க நிலைகள், பொருள் புலப்பாட்டு முறைகள், மீள்வாசிப்பு நிலைகள் என உரை கூறுதலில் மாறுபட்ட தன்மைகளை நிகழ்த்துவதற்கு உரைகள் இடம் கொடுப்பதால் உரைப் பெருக்கம் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றது.

சொல்லதிகார உரையாசிரியர்கள்
சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார் என ஐவரது உரைகள் மட்டுமே கிடைக்கின்றன. இதில் சொல்லுக்கு மட்டுமே உரை எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக சேனாவரையரும், தெய்வச்சிலையாரும், பழைய உரைக்காரரும் விளங்குகின்றனர். கல்லாடனார் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் கிடைத்திருப்பினும், இவர் நூல் முழுமைக்கும் உரை எழுதியதாகத் தெரிகிறது என்பர். இதில் ”சொல்லுக்கு சேனாவரையம்” என்னும் வழக்கு பிற உரைகளினின்று இதனை வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றது. மட்டுமல்லாது சேனாவரையரின் உரை தோன்றுவதற்கு முன்னும் பின்னும் உள்ள உரைகள் இதன் முன் செல்வாக்கிழந்த நிலையினை மு.வை.அரவிந்தன் அவர்களே சுட்டிக் காட்டுகின்றார்.

தொல்காப்பிய சொல்லதிகார உரையாசிரியர்களுள் தெய்வச்சிலையாரும் சிறப்பிடம் பெற்றவராகவே விளங்குகிறார். பிற உரையாசிரியர்களினின்று வேறுபட்டு, நூற்பாக்களுக்கு புது விளக்கம் அளிப்பதில் வல்லவர். ஏனைய உரையாசிரியர்கள் சொல்லதிகாரத்தில் சொல்லைத் தனிமொழி, தொடர்மொழி என்று பகுத்துக் கூறியுள்ள போதிலும், தொடர்மொழி இலக்கணமும், தனிமொழி இலக்கணமும் எந்தெந்த இயல்களில் விளக்கப்படுகின்றன என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டிய பெருமை தெய்வச்சிலையாரையே சாரும். மேலும் அவரது விளக்கவியல் முறைகள் மொழியியல் சிந்தனைக்குக் கால்கோள் இடும் விதத்தில் அமைந்திருப்பது அவரது உரைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

சொல்லதிகார உரையாசிரியர்களின் உரைத் தன்மைகளை மனதில் கொண்டு செ.வை.சண்முகம் அவர்கள், ”இளம்பூரணரும் கல்லாடரும் முழுவதும் ஒத்தக் கருத்தினராயும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் ஒரே கருத்தினராயும் தெய்வச்சிலையார் மட்டும் மாறுபட்ட கருத்தினராயும் காணப்படுகிறார்கள். உண்மையில் சில இயல்களில் கருத்தை விளக்குவதில் சேனாவரையர் இளம்பூரணரிடமிருந்து மாறுபட்டாலும் அவர்களின் சொல்லதிகார அமைப்புக்குரிய பாகுபாட்டின் அடிப்படை ஒன்றேதான். தெய்வச்சிலையாரின் அடிப்படைதான் மாறுபட்டது” (சொல்லிலக்கணக் கோட்பாடு,ப.34) என்கிறார்.    இங்கு சிலப்பதிகாரத்திற்கு அரும்பத உரையினும் அடியார்க்கு நல்லார் உரை சிறப்பு பெற்று விளங்குதல் போலவும், திருக்குறளுக்கு தருமர் உரையினும் பரிமேலழகர் உரை சிறப்பு பெற்று விளங்குதல் போலவும் தெய்வச்சிலையார் உரையை காலமாற்றத்தின் பல்வேறு செயல்பாடுகளை உட்கொண்ட சிறந்த உரையாக குறிப்பிட இயலும். பழமை மரபைப் போற்றும் நிலையில் இது அதற்குள் இனங்காண இயலாமல் போயிருக்கலாம். இருப்பினும் தெய்வச்சிலையார் உரை புதுமை மரபை உட்கொண்ட செம்மாந்த தனிப்பிரதி என்பதில் ஐயமில்லை. ஆகவே இவ்விரு பிரதிகளும் ஒவ்வொரு நூற்பாவிற்கும் எத்தகைய தன்மைகளில் பொருள் கோடல்களை நிகழ்த்தியிருக்கின்றன என்பதன் மூலமாக அதன் நுட்பான நிலைகளை இன்னும் விரிவான தளத்தில் புரிந்து கொள்ள இயலும்.

பொருள்கோடல் நிலைகள்
பிற்காலத்தில் மொழிக்கு உண்டான வளர்ச்சி மற்றும் நெகிழ்வுத்தன்மை, அதனால் தோன்றிய மாற்றங்கள் போன்றவை தொல்காப்பிய நூற்பாக்களை அறிந்துகொள்வதில் இடர்பாட்டை ஏற்படுத்தின. இதனைத் தீர்க்கும் வகையிலும், தொல்காப்பிய நூற்பாக்களைத் தெளிவுபடுத்தும் நிலையிலும் உரையாசிரியர்களின் உதவி இவ்விடத்தில் இன்றியமையாத ஒன்றாக முன்னின்றது. ஆனால் இவ்வாறு உருவான உரைகள் ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியினின்று உருவாக்கப்பட்டவை. இது அக்காலச் சூழல், வழக்கு போன்றவற்றினின்று உரையாசிரியர்கள் பெற்ற அனுபவத்தின் பிழிவாகவும், தங்களுக்கு இலக்கியத்தில் இருந்த ஆழ்ந்த புலமையை வெளிக்காட்டும் விதத்திலும் அமைந்திருந்தன. ஆகவே அவ்வாறு உருவாக்கம் பெற்ற இவை, வெறும் நூற்பாக்களுக்கு விளக்கம் சொல்லுதல் என்ற நிலையினின்றும் வேறுபட்டு, திறனாய்ந்து ஒவ்வொறு கூறுகளையும் நுட்பாக வெளிக்காட்டும் ஆய்வுரைகளாகவும் கருதப்பட்டன. ஆக அத்தகைய உரைகளில் ஒவ்வொரு உரையாசிரியர்களும் எத்தகைய முறையியலைக் கையாண்டு உரை கூறியிருக்கின்றனர் என்பது நோக்குதற்குரியதாகும்.

அந்த வரிசையில் உரையாசிரியர்களின் பொருள்கோடல் நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு அவர்களை, ஒப்பீட்டு நிலையிலும் அணுக வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.  பொதுவாக, “நவீன இலக்கிய விமர்சனம், வாசகன் பிரதியினுள் எந்தப் பக்கத்தின் வழியாகவும் உள் நுழைந்து பல்வேறு விதமான பொருள்கோடல்களை உருவாக்குவதற்கான சாத்தியங்களை அளிக்கிறது. ஏறக்குறைய உரை மரபும் பிரதியின் உள்நுழைவதற்கான வெவ்வேறு திறப்பினை உருவாக்குகிறது” (சங்க இலக்கிய உரைகள்,ப.47) அந்தவரிசையில் பிரதியின் ஒவ்வொரு திறப்பினையும் உரையாசிரியர்களின் உரைகள் எவ்வாறு வெளிக்கொணர்ந்திருக்கின்றன என்பது நோக்குதற்குரிய ஒன்றாகும். அதில் இங்கு ஒரு சில நிலைகள் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகின்றன.

சொற்களைப் பொருள் கொண்ட நிலைகள்:
ஆக்கம் என்பதற்கு ஆதல் எனப் பொருள் கொண்டிருக்கின்றார் இளம்பூரணர். கிளவி என்பதற்கு சொற்கள் எனக் குறிப்பிடுகின்றார். ஆக கிளவிகள் பொருள்மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து என்கிறார். சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் ஆக்கம் என்பது அமைத்துக் கொள்ளுதல் எனக் குறிப்பிடுகின்றனர். கிளவி என்பதற்கு சொற்களை எனக் கூறுகின்றனர். அவ்வாறு கிளவியாக்கம் என்பதற்கு வழுக்ககளைந்து அமைத்துக் கொள்ளுதல் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் தெய்வச்சிலையாரோ ஆக்கம் என்பதற்குத் தொடர்ச்சி எனப் பொருள் கொண்டிருக்கின்றார். கிளவி என்பதற்கு சொற்களது எனப் பொருள் கூறுகின்றார். ஆக கிளவியாக்கம் என்பதற்கு சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருள் மேலாகும் நிலைமையை விளக்குவது எனக் குறிப்பிட்டிருக்கின்றார். கல்லாடனார் கிளவி என்பதற்கு சொல் என்றும், ஆக்கம் என்பதற்கு சொற்கள் பொருள்கண் மேலாமாறு எனக் குறிப்பிட்டு, சொற்கள் பொருள்கண்மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர் பெற்றது என்கிறார். பழைய உரைக்காரர், கிளவி என்பதற்கு சொல் என்றும், ஆக்கம் என்பதற்கு அமைத்துக் கோடல் என்றும் பொருள் கூறி, சொற்களை அமைத்துக் கொள்ளப்பட்டமையின் கிளவியாக்கம் என்னும் பெயர் பெற்றது என்கிறார். இத்தகைய கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு, ‘கிளவியாக்கம்’ என்பது சொற்சேர்க்கையாகிய வாக்கிய அமைப்பு பற்றி பேசுகின்றது என ஆதித்தர் குறிப்பிடுகின்றார்.(கிளவி.உரைவளம்,ப-22)

நூற்பாக்களை இயலுக்கு இயல் தொடர்புபடுத்துதல்:
இரண்டாம் வேற்றுமைக்குரிய ‘ஐ’ என்னும் வேற்றுமைச் சொல், வினையே வினைக்குறிப்பு ஆகிய அவ்விரண்டு முதற்கண்ணும் தோன்றும் என்கின்றனர் உரையாசிரியர்கள். வினை, வினைக்குறிப்பு என்பன ஆகுபெயர் என்கிறார் சேனாவரையர். இவை செயப்படுபொருளுக்கு ஆகி வந்தமையின் ஆகுபெயராயிற்று என்கிறார். நச்சினார்க்கினியரோ, “வினை வினைக்குறிப்பு என்பன ஈண்டு ஆகுபெயர்; அம்முதல் நிலைகளாற் பிறந்த அச்சொற்களை யுணர்த்தினமையின்” என்கிறார். செயப்படுபொருளை வடநூலார் கொள்கைப்படி இயற்றப்படுவதும், வேறுபடுக்கப்படுவதும், எய்தப்படுவது எனச் செயப்படுபொருள் மூன்றாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார் சேனாவரையர். அதற்கு விளக்கமும் தந்துள்ளார். இயற்றுதலாவது முன் இல்லதனை உண்டாக்குதல். உதாரணமாக வீட்டைக் கட்டினான் என்பதாகும். வேறுபடுத்தலாவது முன் உள்ளதனைத் திரித்தல். அதாவது வீட்டை இடித்தல். எய்தப்படுதலாவது இயற்றுதலும் வேறுபடுத்தலும் இன்றித் தொழில் பயனுறும் துணையாய் நிற்றல். வீட்டை அடைந்தான், வீட்டைக்கட்டினான் என்பது போன்ற உதாரணங்களைக் கொள்ளலாம்.  நச்சினார்க்கினியரும் இதே கருத்தினரே ஆவர். தெய்வச்சிலையாரோ, வினையென்பது செயல். வினைக்குறிப்பென்பது அவ்வினையினால் குறிக்கப்பட்ட பொருள், அஃதாவது செயப்படுபொருள் என்கிறார். முதல் என்பதனை வடநூலாசிரியர் காரகம் என்பராம். அஃதாவது தொழிலை யுண்டாக்குவது. அது பல்வகையினை உடையது. செய்வானும், செயலும், செயப்படுபொருளும், கருவியும், கொள்வானும், பயனும், காலமும், இடமும் என. 

“வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலங் கருவியென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழின்முத னிலையே” (சொல்-109) 


என முதனிலை எட்டு என வேற்றுமை மயங்கியலில் உள்ள நூற்பாவோடு சேர்த்து இந்நூற்பாவிற்கு(சொல்-72) விளக்கம் கூறியிருக்கின்றார். அவற்றுள் இது செயப்படு பொருள் மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான் என்பது செயப்படு பொருள்மேல் வந்தது. வனைதலைச் செய்தான் என்பது செயன்மேல் வந்தது எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

உரையாசிரியர்களின் மறுப்பும் ஏற்பும்:
ஒரு குறிப்பிட்ட உரையாசிரியர் கருத்தை ஒரு காரணம் கருதி ஒரு உரையாசிரியர் மறுப்பதும், மறுத்த உரையாசிரியர் கருத்தில் காரணம் சரிவர அமையாத போது, வேறொரு உரையாசிரியர் காரணத்தைக் கூறி மறுப்பு பொருந்தாது எனக் காட்டுவது கருத்தியல் நிலைபாடுகளை பரந்த தளத்தில் வைத்து புரிந்து கொள்ள முயன்றதையே காட்டுகின்றது.

”பலவயி னானும் எண்ணுத் திணை விரவுப் பெயர்
அஃறிணை முடிபின செய்யுளுள்ளே” (சொல்-49)


என்பது, உயர்திணை, அஃறிணை கலந்து எண்ணப்பட்ட பெயர், செய்யுளில் பெரும்பான்மையும் அஃறிணைச் சொல் கொண்டு முடியும். அதாவது பெரும்பாலும் அஃறிணை முடிபே கொள்ளும் எனவே சிறுபான்மை உயர்திணை முடிபும் கொள்ளும் எனவும் பெறலாம். இவ்வுரை அனைவருக்கும் உடன்பாடாகும். 

உ.ம்- “பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை    (புறம்-335)


இது திணை விரவாது அஃறிணையான் முடிந்ததாகும். இவ்வெடுத்துக்காட்டை சேனாவரையர் மறுக்கிறார். ஆனால் சேனாவரையரை நச்சினார்க்கினியர் மறுத்து இளம்பூரணரை ஏற்கின்றார். சேனாவரையர் ‘இந்நால்வருமல்லது’ என வந்திருக்க வேண்டும் என்பார். காரணம் பாணன் முதலாயினாரைக் குடி என்று குறிப்பிடுதலினால் குடிக்கேற்ற தொகை கொடுத்திருக்க வேண்டும் என்பார்.  நச்சினார்க்கினியரோ குடியைச் சுட்டி நில்லாது பால்காட்டி நின்றது எனக் காட்டியிருக்கின்றார். கல்லாடனார், பழைய உரைக்காரர் முதலானோரும் இவ்வுதாரணத்தையே காட்டுவர். மேலும், திணை விரவி வந்து அஃறிணை முடிவு கொள்ளுதலும் உண்டு.

உ.ம்- “பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவியெனுமிவரைக் கைவிட்டு” (சிலம்பு.21:53-54)


இவ்வுதாரணத்தை சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் காட்டுவர். அதுபோல சிறுபான்மை உயர்திணையானும் முடியும்.

உ.ம்- “அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்” (நாலடி.151)


என்பதாகும். இவ்வாறு உயர்திணையும் அஃறிணையும் விரவி அஃறிணை முடிவு கொள்ளுதல் பெரும்பான்மை. உயர்திணை முடிவு கொள்ளுதல் சிறுபான்மை. உயர்திணையே எண்ணி அஃறிணை முடிவு கொள்ளுதலும் உண்டு என்னும் இம்மூன்று கருத்துக்களையும் பார்க்கும் போது திணை விரவி எந்த வினையினாலும் முடியலாம் என்பதை அறிய இயலுகின்றது. மேலும் உரைகளின் மறுப்பும் ஏற்பும் கருத்துக்களின் உண்மையான நிலைபாட்டைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ள உதவுகின்றது. 




__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் -- ர.ரதி
Permalink  
 


தருக்கவியல் அடிப்படையிலான உரைவேறுபாடு:
”எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”    (சொல்-152) என்பதில், இந்த ஒரு சூத்திரத்திற்கு மட்டுமே இளம்பூரணர் பதவுரை கூறியிருக்கிறார். ஏனையவை யாவற்றிற்கும் பொழிப்புரை கூறியுள்ளார். சொல் பற்றிய பொது இலக்கணத்தைப் பெயரியலில் கூறக் காரணம், ‘ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே’(சொல்- 1) என கிளவியாக்கத்தில் கூறியது இரண்டு திணைப் பொருள்களையும் சொற்கள் உணர்த்தும் என்பதாகும். இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் பொருள் உணர்த்தும் என்னும் வரையறை பெறவில்லை. ஆகவே கிளவியாக்கத்தில் பொதுவாகக் கூறி அதனைப் பெயரியலில் சிறப்பாக விளக்குகின்றார். மேலும் இச்சூத்திரத்திற்குப் பொருளுரைக்கும் போது, ‘எல்லாச் சொல்லும்’ என்பதற்குப் பெயர், வினை இடை, உரி ஆகிய நான்கு சொல்லும் என இளம்பூரணரும் சேனாவரையரும் கூற, தமிழ்ச் சொல் எல்லாம் என நச்சினார்க்கினியரும் கல்லாடரும் கூறத் தெய்வச்சிலையார் மட்டும் உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் எனப் பொருளுரைத்திருக்கிறார். அதோடு ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது பெரும்பான்மை பற்றியது என்றும் உரைத்திருக்கின்றார். அதற்கு அவர் கூறும் காரணம், அசைநிலை, இசைநிறை, ஒரு சொல்லடுக்கு என்பன பொருள் உணர்த்தும் என்னாது குறித்தன என்றதனால், அவை சார்ந்த பொருளைக் குறித்தன எனக் கொள்ள வேண்டுமாம். பெரும்பான்மை பற்றிக் கூறியது என்பது, ‘இவ்வூரார் எல்லாம் கல்வியுடையர்’ என்னும் போது, ‘கல்லாதாரும் சிலர் உளராயினும் கற்றார் பலர்’ என்பது குறித்து நின்றது போல என உதாரணம் காட்டுகின்றார். ஆனால் இக்கருத்து பொருந்துமாறு இல்லை என சேனாவரையர் குறிப்பிடும் போது தொடர் மொழி பொதுவாக மெய்ப்பொருள் குறிப்பனவும், பொய்ப்பொருள் குறிப்பனவும் என இரு வகைப்படும். அதில் பொய்ப்பொருள் குறிப்பனவும் பொருள் உணர்த்துவனவே ஆகும் என்கிறார். யாமை மயிர்க்கம்பலம், முயற்கோடு என்பன பொய்ப்பொருளாகிய அவற்றின் இன்மையைக் குறித்து நின்றது ஆதலின் அவையும் பொருளுணர்த்தினவே ஆகும் என்கிறார். இதற்குத் தொடர் நிலைச்செய்யுள்களில் வரும் இல்லோன் தலைவனை உதாரணம் காட்டுகின்றார். இல்லோன் தலைவன் கிளவித்தலைவனாவான். இவன் பாட்டுடைத்தலைவன் அல்லன். 

உ.ம்- தஞ்சைவாணன் கோவை, திருக்கோவையார். உள்ளோன் தலைவன் எனப்படுவது இராமாயணத்தில் வரும் இராமன் போன்றோனாவான். தாம் சார்ந்த சொற்களின் பொருளை உணர்த்தியும், அச்சொற்களை அசைத்து நிற்றலின், அசை நிலையும் பொருள் குறித்தனவாம் என்கிறார் நச்சினார்க்கினியர். அவ்வகையில் ‘ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்’(சொல்-269) என்பது முன்னிலையில் அசைச் சொல்லாய் வந்து பொருளுணர்த்தும் என்பதாகும். உ.ம்- கேண்மியா. இதில் ‘மியா’ என்பதில் ‘யா’ என்பதே அசைச்சொல் என வே.வேங்கடராசலு செட்டியார், டாக்டர் இசரயேல் போன்றோர்கள் குறிப்பிடுகின்றனர்(இடை.உரைவளம்,ப-117).  ’வியங்கோள் அசைச்சொல்’(சொல்-268) இங்கு இதுவும் இடம் முதலாகிய பொருள் குறித்து வந்ததேயாகும். உ.ம்- ‘மாயக்கட வுட் குயர்கமா வலனே’ என்பதில் ’உயர்க’ என்னும் வியங்கோட்கண் ’மா’ என்னும் சொல் அசைநிலையாய் வந்தது. அதுபோல,

”யாகா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉ
மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி” (சொல்-274)


என்னும் சூத்திரம் அசைக்கும் இடைச்சொற்களைத் தொகுத்துக் கூறுகின்றது. உ.ம்- ‘யா பன்னிருவர் உளர் போலும் மாணாக்கர் அகத்தியனார்க்கு’ என்பதில் ‘யா’ வந்துள்ளது. இவை போல பிறவும் மூன்றிடத்திற்கும் உரியவாய்க் கட்டுரைச் சுவைபட வருதலின் பொருள் குறித்தனவேயாம்.  சொற்கள் ஓசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டுதலின், இசைநிறையும் பொருள் உணர்த்தியது என்கிறார் நச்சினார்க்கினியர். மேலும் ஒரு சொல்லடுக்கும் விரைவு, துணிவு முதலிய பொருள் குறித்து வரும் எனத் தெரிதலானும், இசைநிறை, அசைநிலை, ஒரு சொல்லடுக்கு என்பனவும் பொருள் குறித்து வரும் என்றலே பொருத்தமுடைத்தாம்(சொல்,தெய்.விளக்கவுரை,ப.43)என்கிறார் கு.சுந்தரமூர்த்தி அவர்கள். இவ்வாறு அனைத்து சொற்களும் பொருளுணர்த்தும் என்பதை உரையாசிரியர்கள் உரை வழி தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.

உரையினின்று கோட்பாடு:

இளம்பூரணர் கூறிய உரைவிளக்கத்தினைக் கருவியாகக் கொண்டு(சொல்.17), நன்னூலார் வழக்காற்றினை இலக்கணமுடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூன்றுவகையாகப் பகுத்து, இம்மூன்றுடன் தகுதி வழக்கில் குறிப்பிட்ட  வகைமைகளான இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்னும் இம்மூன்றினையும் கூட்டி,

“இலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉ வென்றாகும் மூவகை யியல்பும்
இடக்கர டக்கல் மங்கலங் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்” (நன் -267)

என நூற்பாவாக்கியுள்ளார். இது உரைகளினூடான கோட்பாட்டு வளர்ச்சியையே காட்டுகின்றது.

தொல்காப்பிய விதி மாறுபாடு:
தொல்காப்பியர் ஒரே கருத்து பற்றி இரண்டு இடங்களில் வெவ்வேறு விதமாக எடுத்துரைப்பதை உரையாசிரியர்கள் இனங்கண்டு விளக்கியுள்ளனர். அவ்வகையில்,

”ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே”    (சொல்-276)

என்னும் இந்நூற்பாவிற்குத் தெய்வச்சிலையார் நீங்கலாக ஏனைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒருவிதமாக உரை கண்டனர். இவர் மட்டும் வேறுவிதமாகப் பொருள் காண்கின்றார்.

‘ஈரளபிசைக்கும் இறுதியிலுயிரே’ என்பதற்கு இரண்டு மாத்திரையுடையதும், மொழிக்கு ஈறாகாததுமான ‘ஒளகாரம்’ எனப் பொருள் உரைத்தனர் ஏனை உரையாசிரியர்கள். இதில் நச்சினார்க்கினியர் ’ஈரளபு   இசைக்கும்   இறுதிஇல்   உயிரே’ என்பது தொல்காப்பிய விதிகளுக்கு உடன்பாடன்று. காரணம்  இரண்டு மாத்திரையை  இசைக்கும்  ‘உயிர் ஒள  எஞ்சிய இறுதியாகும்’ (மொழி மரபு. 36) என்று குறிப்பிட்ட தொல்காப்பியரே, ‘கவவோடியையின்  ஒளவுமாகும்’ (மொழி. 37) என்று குறிப்பிட்டிருக்கின்றார். உ.ம்- கௌ  வௌ என மொழிக்கு ஈறாய் நிற்கும் எனக் காட்டப்பட்டுள்ளது. அதனை இவ்விடத்தில் எடுத்துக்காட்டி ஏனை உரையாசிரியர்களோடு ஒன்றுபடுகின்றார். ஆனால் தெய்வச்சிலையாரோ, இத்தொடருக்கு இரண்டு மாத்திரையாகி ஒலிக்கும் உயிர்களுள் இறுதியாகிய ‘ஒளகாரம் அல்லாத உயிர்கள் என நேர்மாறாகப் பொருள் கொள்கின்றார்.

ஈரளபிசைக்கும் இறுதியில் உயிர்கள் ஆறாகும். அவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ என்பனவாகும்.  இவ்வாறு ஆறு   உயிர்களை   எடுத்துப்   பல   பொருள்களை  உரைக்கிறார். இவ்வாறு உரைப்பதனால் தெய்வச்சிலையாரின்    களம்    விரிவதோடு,    தமிழில்   வழங்கும் குறிப்பிடைச்  சொற்கள்  பற்றிய  செய்திகளையும் விளக்குகிறது. பேச்சுவழக்கில்   பயன்படும்   பல்வேறு   உணர்ச்சிகளை  வெளிப்படுத்தும் இக்குறிப்பிடைச்  சொற்கள்   பற்றிய  தொல்காப்பியச் சிந்தனையையும் இங்கே நாம் அறிய முடிகிறது. ஒளகாரம்  மட்டுமே எனக் கொண்டால், மற்ற  ஆறும்  குறிப்பிடைச்  சொற்களாகப்  பயன்படுவது பற்றி அறியமுடியாது போகும்.  ஒரு  நிறைவற்ற  பகுதியாக  இது நின்றுவிடும். ஏகார, ஓகாரங்கள்   சொற்களோடு    சேர்ந்து   தேற்றம்,   வினா  போன்ற பொருட்களைத்  தருவதை  விளக்குகிற  ஆசிரியர் இங்கு அதே ஏகார ஓகாரங்களும்   பிறவும்  தனித்து   நின்றும்,  வாக்கியத்தின்  முதலில் நின்றும்   உணர்ச்சிப்  பொருள்களை   வெளிப்படுத்துந்  தன்மையை விளக்குகிறார்  எனல்  வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, தெய்வச்சிலையார்  உரை  தமிழில்   அன்று  தொட்டு  இன்று  வரைத் தொடர்ந்து  வழக்கில் இருந்துவரும் குறிப்பிடைச்  சொற்களை  எடுத்து விளக்குவதால்    சூத்திரமும்    உரையும்   மிகு    பயனுள்ளனவாக இருக்கின்றன. மேலும், தமிழ் மொழியமைப்பின்  வரலாற்றுத்  தொடர்ச்சியையும் காட்டுகிறது எனச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார் இராம சுந்தரம் அவர்கள்.(இடை.உரைவளம்,ப.147)

இவ்வாறு உரையாசிரியர்களிடையே ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வதன் மூலமாக நூற்பாக்களின் பல்வேறுபட்ட கருத்தியல் நிலைகளை விளங்கிக் கொள்ள இயலும். மேலும் ஒவ்வொரு சொல்லையும் பொருளையும் எத்தகைய தன்மைகளில் எல்லாம் அணுக முடியும் என்னும் படிப்பினையை உரையாசிரியர்களின் உரைகள் வாயிலாகப் பெற இயலும். மேலும், மரபின் நிலைத்த தன்மையையும், அதன் மாற்றங்களையும் விரிவான தன்மையில் விளங்கிக் கொள்ள உதவும். இவ்வாறு இது தொடர்பான  ஒரு சில விஷயங்களே மேலோட்டமாக இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அவ்வகையில் இது தொடர்பான விரிவான ஆய்வுகள், தொல்காப்பிய சொல்லதிகார உரை தொடர்பான பல்வேறு கருத்தியல் சிந்தனைகளை பரந்துபட்ட அறிவுத்தளத்தில் வெளிக்கொணர உதவும் என்பதில் சந்தேகமில்லை.

துணைநூற்பட்டியல்
1.ஆய்வுக் கோவை, வ.சுப.மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1971.
2.இலக்கண வரலாறு, இரா. இளங்குமரன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1990.
3.இடையியல் உரைவளம், ஆ.சிவலிங்கனார்(பதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,டி.டி.டி.ஐ, தரமணி, சென்னை,1986.
4.உரைகளும் உரையாசிரியர்களும், தி.சு.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013.
5.உரை மரபுகள், டாக்டர் இரா.மோகன்,நெல்லை ந.சொக்கலிங்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1985.
6.உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்,1968.
7.கிளவியாக்கம் உரைவளம், ஆ.சிவலிங்கனார்(பதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,டி.டி.டி.ஐ, தரமணி, சென்னை,1982.
8.சங்க இலக்கிய உரைகள், அ.சதீஷ், அடையாளம், சென்னை, 2008.
9.தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, கோ. கிருட்டிண மூர்த்தி, சென்னைப் பல்கலைக் கழகம், 1990.
10.தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1974.
11.தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.

rathi.r1988@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard