New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலத்தில் புலம் பெயர்வு -பா. சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சங்க காலத்தில் புலம் பெயர்வு -பா. சிவக்குமார்
Permalink  
 


 சங்க காலத்தில் புலம் பெயர்வு

E-mailPrintPDF

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -மக்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, உயிர்க்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுதோ, மக்கள் தங்கள் வசித்த புலங்களை விட்டு வேறு இடத்திற்குச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போரின்போது பல இலட்சம் தமிழ் மக்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இவை போன்ற புலம் பெயர்வு சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. சங்க காலத்தில் புலம் பெயர்வு சங்ககால  மக்களின் புலம் பெயர்வானது, இயற்கைப் பேரிடர், ஆறலைக் கள்வரால் உயிர்க்கும் உடைமைக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அரசாதிக்கப் போரால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

இயற்கைப் பேரிடரால்  புலம் பெயர்ந்த மக்கள்
நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தன் நிலையிலிருந்து திரியும் பொழுது இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றது. தொடர்ந்து பெய்யும் பெருமழையால் உருவான வெள்ளத்தினால் தம் கால்நடைகள் மற்றும் தமக்கு ஏற்படும் துன்பத்தினைக் கண்டு அஞ்சிய கோவலர்கள் தங்கள் பழகிய நிலத்தை விட்டு, வேறிடம் நோக்கிப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது தங்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமின்றி உள்ளம் கலங்கியதை, 

“புலம்பெயர் புலம்பொடு கலங்கி”                                             (நெடுநல். 5) 

என்ற நெடுநல்வாடை வரி புலப்படுத்துகிறது. இவ்வாறு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சூழல்களில் சங்ககால மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஆறலைக் கள்வரால் ஏற்பட்ட அழிவுக்கு அஞ்சி புலம் பெயர்ந்த மக்கள் ஆறலைக் கள்வர்கள் வழிப்போவாரைக் கொன்று பொருள் கொள்வதோடு மட்டுமன்றி ஆயர் புலத்திற்குச் சென்று ஆநிரைகளையும் களவாடிச் சென்றுள்ளனர். தீக்கொள்ளியையும் நீண்டு திரண்ட அம்புகளையும் கையிற் கொண்டவராய், இரவு நேரத்தில் ஆயர்களின் ஊரினுள் புகுந்து, அவர்களைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றபொழுது, எழுந்த ஆரவார ஒலி கொடிய சுரவழி எங்கும் மாறிமாறி ஒலித்தது என்பதனை, அகம். 239ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. இரவில் யாரும் அறியாமல் ஆநிரை கவர்ந்து வருகின்றபோது, அதை அறிந்த ஆயர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆரவாரத்துடன் அக்கள்வரின் பின்னே ஓடிச்சென்று பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை,

“அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழி யோடி”                                (அகம்.7:14-15)

என்ற பாடலின் வழி அறியலாம். இவ்வாநிரை கவர்தல் மற்றும் மீட்டலின் போது ஆயருக்கும் அந்தக் கள்வருக்குமிடையே வன்முறை நிகழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. இக்கள்வரின் பகைக்கு அஞ்சிய மக்கள், தங்கள் வாழ்ந்திருந்த இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி புலம் பெயர்ந்து போயினர். அதனால் முன்பு ஊர் இருந்த இடத்தில் பீர்க்கங் கொடிகள் படர்ந்து பாழ்பட்டு போயிருந்ததை அகம். 167ஆம் பாடல் காட்டுகின்றது. வணிகச் சாத்துகள் வராத பொழுது ஊரினுள் புகுந்து மக்களைத் தாக்கியும் அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்டும் போயிருக்க வேண்டும். எனவேதான் அவ்வூரிலுள்ள மக்கள் எல்லாம் வேறு இடம் நோக்கிப் புலம்பெயர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். ஆறலைக் கள்வரின மறவர்களின் வன்முறைக்கஞ்சி மக்கள் புலம்பெயர்ந்ததை,

“………………………... மறவர்
பல்லூழ் புக்குப் பயனிரை கவரக்
கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து”           (அகம்.377:4-6)

என்பதிலிருந்து அறியலாம். மறவர்கள் ஊரினுள் புகுந்து பசுக்கூட்டங்களைக் களவாடிச் செல்லுகிறபோது  மறவர் - ஆயர் இடையே வன்முறை எழுகிறது. ஆயர்களின் செல்வமான கால்நடைகள்  கொள்ளையிடப்படுதலோடு ஆறலைக் கள்வர்களால் ஆயர்களின் உயிர்க்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, வளமிக்க ஊரில் வசித்து வந்த மக்கள் (ஆயர்கள்) தங்களது சொந்த இடத்தை விட்டு விலகி வேறுபுலம் பெயர்ந்து சென்றனர். அதனால், அவ்வூரிலிருந்த மன்றங்கள் பாழடைந்து விட்டமையையும் அறியமுடிகிறது. அரசாதிக்கப் போரால் ஏற்படும் அழிவுகளுக்கு அஞ்சி  புலம் பெயர்ந்த மக்கள் அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துதல் வேண்டி நிகழ்த்திய போரினால் பாதிப்படைந்த மக்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டு வேறிடம் நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. வேந்தர், வேளிர் முதலானோர் பெருஞ்சேரலிரும்பொறையின் ஆதிக்கத்தை ஏற்று கீழ் பணிந்து நடக்கவில்லையானால் வளமிக்க மருதநிலத்தை விட்டு வரகும் கொள்ளும் விளையும் வன்புலத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதனை,

“ வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅ ராயி னென்மிக்(கு)
……………………………………………
……………………………………………
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே”                       (ப.ப. 75:4-14)

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஆதிக்கப் போர் காரணமாகப் பகை மன்னனின் நாட்டிலுள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மறுசீரமைப்பு செய்தால்கூட சீராக்க முடியாத அளவிற்கு பாழ்பட்டுப் போயிருந்தன. இதனைப் பதிற்றுப்பத்துப் பாடல் 19:16-27 எடுத்தியம்புகின்றது. நீர்நிலைகளிலெல்லாம் தாமரைகளும் ஆம்பல்களும் மலர்ந்து, நெல்வயல்களில் நெய்தல் மலர்ந்து, வளமிக்க வயல்களையும் கரும்புகளையும் கொண்டிருந்த ஊரானது நெடுஞ்சேரலாதனின் படையெடுப்பிற்குப்பின் ஊரிலுள்ள மக்களெல்லாம் உயிருக்குப் பயந்து தம் ஆநிரைகளையும் கலப்பைகளையும் விட்டு விட்டு வேற்று இடத்திற்குப் புலம் பெயர்வு மேற்கொள்ளுமளவிற்கு அரசாதிக்க போர் இருந்துள்ளமையைக் காணமுடிகின்றது.

வேந்தர்களின் படையெடுப்பிற்கு அஞ்சி ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தம் ஊரைவிட்டு வேறிடம் சென்றுவிட்டதால் ஊர் பாழடைந்துள்ள நிலையினை,

“…………………………… விறற்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே”                             (நற்.153:7-10)

என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகின்றன. பகை மன்னர்கள் படையெடுத்து வந்து நாட்டிலுள்ள வளங்கள் அனைத்தையும் கவர்ந்து, அழித்துப் போனதால் அங்கு மக்கள் வாழும் தகுதியின்றி வேறிடம் சென்றுவிட்டதால், பாழ்நிலத்தில் தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்ற ஆண்புறா தன் பெடைக்குக் கொடுக்கும் காட்சியினை,

“………………………………… மன்னர்
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம்”              (நற்.384:4-5)

என்பதன் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

“முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்
வினையழி பாவையின் உலறி
மனையொழிந் திருத்தல் வல்லு வோர்க்கே”                 (அகம்.157:11-14)

என்ற பாடலின் வழி அரசாதிக்கத்தால் நடைபெற்ற போரினால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றமையையும் அதனால் ஊர் பாழ்பட்டு ஊர்ப் பொதுமன்றத்திலே உள்ள பாவை தன் அழகை இழந்துள்ளதும் தெரியவருகிறது. சோழன் நலங்கிள்ளியின் அரசாதிக்கத்திற்கு பயந்து, பகைவர்கள் சேவல் துயில் எழுப்பும் தினைப்புனக் காட்டிற்குப் புலம்பெயர்ந்து சென்றமையை,

“வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் றெவ்வர்………”                                 (புறம்.28:8-10)

என்ற பாடலின் மூலம் அறியலாம். மக்கள் தங்களின் வாழ்விடத்தை விட்டு நீங்கி காட்டிற்குள் புலம் பெயருமளவிற்கு நலங்கிள்ளியின் அரசாதிக்கப் போர் இருந்துள்ளதையே இப்பாடல் புலப்படுத்துகின்றது.

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில், இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட சூழல், ஆறலைக் கள்வரின் வன்முறைக்கஞ்சிய சூழல், அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தை பிற வேந்தர், மன்னர் முதலானோர் ஏற்க மறுக்கும் போது போர் மேற்கொண்டு பகைநாட்டு மக்களின் பொருட்களைக் கொள்ளையிடுதல், நீர், நில வளங்களை அழித்தொழித்தல் போன்ற வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவ்வன்முறைக்கு அஞ்சிய சூழல்களில் தங்கள் வாழ்ந்த வளமிக்க ஊரினையும் தம் செல்வமான கால்நடைகள் முதலாயினவற்றையும் துறந்து வேற்றுப்புலம் நோக்கிப் புலம்பெயரும் அவலநிலைக்குச் சங்ககால மக்கள்  ஆளாகியுள்ளதைக் காணமுடிகின்றது.

துணை நின்ற நூல்கள்
1.    அகநானூறு, கழகவெளியீடு, 2008, 2009
2.    நற்றிணை, கழகவெளியீடு, 2007
3.    பத்துப்பாட்டு பகுதி-2, கழகவெளியீடு, 2008
4.    பதிற்றுப்பத்து, பூம்புகார் பதிப்பகம், 2010
5.    புறநானூறு, கழகவெளியீடு, 2007

 

sivasivatamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard