New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை - செ.ரவிசங்கர்,


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை - செ.ரவிசங்கர்,
Permalink  
 


சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை

E-mailPrintPDF

முன்னுரை
முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்' என்னும் தத்துவம் சிலம்பில் உள்ள மூன்று உண்மைகளில் ஒன்று. அதாவது அரசியல் கற்பு ஊழ் கூற்று என்கிற மூன்று பொருள்களை மையமாகக் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரம். அவற்றுள் ஊழ் கற்பு ஆகிய சொற்கள் உள்ளே வந்துள்ளன. ஆனால் அரசியல் என்னும் சொல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளன. ஆனால் அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செயதி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 'கொலைக்களக் காதை வழக்குரை காதை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்படைக் காதை நடுகற் காதை முதலிய காதைகள் அரசனை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்நூலில் அரசியல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. எனவே சிலப்பதிகாரத்தில் 'அரசாடசி' 'அறம்' என்னும் பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது.

மன்னர்களும் அறமும்
 பொதுவாக அனைத்து அறநூல்களும் அரசன் செய்யவேண்டிய செயல்களை அறமாகக் கூறிச் செல்கின்றன. அந்தவகையில் சுக்கிரநீதி அரசன் நீதியோடு இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.

'அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களை யொறுத்தலம் சிறந்த அறங்களாகும். இவ்விரண்டும் நீதியுணர்வின்றி உண்டாகா'. மேலும் நீதியுடைய அரசனை யாவரும் போற்றுவர்ளூ அல்லாதவனை யாரும் போற்றார். 'எவன்மாட்டு நீதியும் பலமும் உள்ளனவோ அவன்பால் திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ளாரனைவரும் ஏவப்படாமலே நல்லன புரியும்படி நீதியைத் தன் நலங்குறித்து மேற்கொள்ளற்பாலன்' என்று மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்கிறது. அது போலவே நீதி தவறிய மன்னன் எவ்வாறான நிலையை அடைவான் என்பதையும் சுக்கிரநீதி விளக்கியுள்ளது.

 நீதியை யிகந்து தன் விருப்பின்படி செல்கின்ற அரசன்; துன்புறுவான். நீதியில்லாத அரசன் மாட்டு அனுகி வினை செய்வோன் வாட்படையின் கூறிய நுனியை நாவால் நக்குபவன் ஆவான் என்கிறது. மேலும், 'அரசனுக்கு நீதிதவறுதலான் எப்பொழுதும் தன் நாடு வேறுபடும்ளூ பலம் வேறுபடும்ளூ அமைச்சர் முதலியோரும் வேறுபடுவர். இங்ஙனமாதல் அவன் ஆளுந்திறனிலனாதலை வெளிப்படத்துவதாகும்' என்று கூறுகின்றது. பொதுவாகவே அரசன் நல்லவனாக இருந்தால் அறக்குணம் உடையவனாக இருந்தால் அந்த நாடு நலம்பெறும். அறம் தவறிய அரசனின் நாடு வளம் பெறுவது கடினம் என்பதைப் பல பாடல்களும் நூல்களும் சான்றாக இருந்து விளக்குகிறது. அந்தவகையில சிலப்பதிகார மன்னர்கள் தமது அறச்சிந்தனையை எவ்வறு வெளிக்காட்டியுள்ளனர் அதனால் ஏற்பட்டவற்றை சிலப்பதிகாரத்தில் மன்னர்களின் தன்மையோடு காணமுடிகிறது.

சிலம்பில் அரசன்
சிலப்பதிகாரத்தில் அரசன் என்பது மூவரையும் குறிக்கிறது. சேர சோழ பாண்டியர் இவர்கள் மூன்று பேரும் பேரரசுகள் என்கிற தன்மையைக் காணமுடிகிறது. அந்த வகையில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் அறம் குறித்த சிந்தனைகளை சிலப்பதிகாரத்தின் வழி காணமுடிகிறது.

மூவேந்தர்களும் தமிழ்நாட்டை ஆண்டு வந்தனர் என்னும் செய்தியை இளங்கோவடிகள் வேனிற்காதையில்

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தன்புணல் நன்னாட்டு
மாடமதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்
அரைசு விற்றிருந்த உரைசால் சிறப்பின் (8.1-5)

என்று பதிவு செய்கிறார். இங்கு முடியுடை வேந்தர்கள் தமிழ்நாட்டை வடக்கே வேங்கட மலையையும் தெற்கே குமரிக் கடலையும் எல்லையாகக் கொண்டு மதுரை உறையூர் வஞ்சி மாநகரங்களைத் தலைநகராகக் கொண்டு அறம் தவறாத ஆட்சியைச் செய்து வந்தார்கள் என்று உரைக்கிறார்.

பாண்டியனின் அறம் பற்றிய செய்தி
 பாண்டிய மன்னன் அற நெறி தவறாமல் ஆட்சி செய்தவன். அவன் தன் நாட்டு மக்களுக்கு எந்த விதமான துன்பமும் தராமல் செங்கோலாட்சியைத் தந்தவன் என்பதை சிலப்பதிகாரம் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எடுத்துரைக்கிறது.

 கட்டுரைக் காதையில் பாண்டிய மன்னனின் செங்கோலாட்சியை மதுராபுரி என்னும் குலதெய்வமானவள் கண்ணகிக்கு எடுத்துக் கூறும் செய்தி பாண்டியனின் அறநெறியை தெளிவாக விளக்குகிறது. கோவலன் இறந்த துயரில் இருக்கின்ற கண்ணகியை நோக்கி,

'மறைநா ஓசை யல்லாது யாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடி தொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்' (23.30-34).

என்று கூறுகிறது. அதாவது எம் வேந்தர் அந்தணர் ஓதும் மறையொலி அல்லது ஒரு போதும் ஆராய்ச்சி மணியின் நா அசைவைக் கேட்டறியாதவன். பகை மன்னர்கள் பொறாமையால் பழி தூற்றுவார்களே அன்றி தன் குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலன் அல்லன் என்கிறது மதுராபுரி தெய்வம். இதன்மூலம் அறநெறி தவறாத மன்னன் பாண்டியன் என்பதை அறியமுடிகிறது.

 மேலும் பாண்டியன் அறநெறியில் நின்ற செய்தியை மதுராபுரி தெய்வம் கதையாகக் கூறுகிறது. கீரந்தை என்னும் அந்தணன் பொருள்தேட தனது மனைவியை வீட்டில் விட்டுச் சென்றுவிட்டான். பாண்டிய மன்னன் இரவில் நகரவலம் போகும்போது கீரந்தை வீட்டில் சத்தம் கேட்கவும் மன்னன் கதவைத் தட்டிவிட்டான். அப்போது அச்சம் கொண்ட அந்தணன் மனைவி 'குடிமக்களுக்கு அரசனுடைய செங்கோலாட்சி காவலாக அமையும் அல்லாது அதனைவிட காவல் வேறு எதுவும் இல்லை' என்று கூறி என்னை இல்லத்தில் விட்டு அகன்றீர் இப்பொழுது அந்த அரச வேலி காவலாக இல்லையோ? எனக் கூறினாள். இதனைக் கேட்ட பாண்டிய மன்னன் வருத்தமுற்று

'நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க் கழுக்கம் இன்மை' (கட்டுரைக் காதை)

என்றது. அதாவது பாண்டிய மன்னன் அச்சொல் கேட்ட வறுத்தமுற்று  சக்கரப்படையையே உடைத்தத் தனது கையினை உடை வாளால் வெட்டினான். இத்தகைய அறநெறியை உடையவன் பாண்டிய மன்னன் என்கிறது.

கோவலன் ஏன் கொலை செய்யப்பட்டான்
அறநெறியில் தவறாத பாண்டியன் ஏன் கோவலன் இறந்துபோகக் காரணமானான் ? என என்னும்போது அது ஊழ்வினையின் பயன் என்பதை

'மண்ணக மடந்தை வான்துயர் கூறக்

காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன்கேள்வன் காரத்தால் - மண்ணில் 
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை' (ஆய்ச்சியர் குரவை)

என்னும் பாடலடிகளில் சிலம்பு எடுத்துக்காட்டுகிறது.

 'கோவலனின் முன் வினையானது முதிர்ந்து வந்து ஊட்டுதலால் அவன் வெட்டுண்டு தரையில் வீழ்ந்தான். முன் செய்த தீவினையால் இந்நில உலகில் ஒரு காலத்தும் வளையாத பாண்டியனின் செங்கோல், கண்ணகியின் கணவனான கோவலனைக் காரணமாகக் கொண்டு வளைந்தது' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதாவது ஊழ்வினைப் பயன்தான் மன்னன் அறம் தவறியதற்குக் காரணம் என்கின்றன இப்பாடலடிகள்.

பாண்டிய மன்னனின் இறப்பு
அறநெறி தவறாத பாண்டிய மன்னன் கண்ணகியின் வார்த்தைகளைக் கேட்டு

மன்னவன் வாய்முதல் தெறித்து மணியே மணிகண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட 
யானோ அரசன் யானே கள்வன் 
மன்பதை காக்கும் தென்புலக் காவல் 
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுளென 
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்' (வழக்குரை காதை)

என்று கூறி மயங்கி விழுந்து இறந்து போகிறான். அதாவது கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்தபோது அதில் இருந்து ஒரு மாணிக்கப் பரல் பாண்டியனின் வாயருகே தெறித்துக் கீழே விழுந்தது. அதனைக் கண்ட மன்னன் 'தாழ்வுற்றக் குடையனாய் தளர்ந்த செங்கோலனாய் 'நீதி தவறிய நானோ அரசன்?' எனக்கூறி மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என்காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே (இனி வரும் பாண்டியன் பரம்பரைக்கெல்லாம் பழியாயிற்றே) எனப் பதறினான். 'என் ஆயுள் கெடுக' என தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இறந்து போனான்.

மன்னன் ஏன் இறக்க வேண்டும்? 'பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட என்பதனால் பொற்கொல்லன் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்பது தெரிந்தும் அவனைப் பிடித்து தண்டிக்காமல் ஏன் பாண்டிய மன்னன் இறந்து போனான் என்பது கேள்வியாக இருக்கலாம். அதற்குக் காரணம் பாண்டிய மன்னர்கள் அறநெறியில் ஆட்சி செய்து எங்கும் புகழ் விளங்கும்படி இருந்துள்ளனர் என்பதை கோவலன் கூற்றாக வரும்,

கருங்கதிர் வேனில் இக்காரிகை பொற அள் 
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் 
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா 
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா 
அரவும் சூரும்இரைதேர் முதலையும் 
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா 
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென 
எங்கணும் போகிய இசையோ பெரிதே' (புறஞ்சேரி இறுத்த காதை)

என்ற பாடலடிகள் தெரிவிக்கின்றன. அதாவது இரவில் மதுரை நோக்கிச் செல்வோம். பகலில் சென்றால் கண்ணகி வெயிலின் கொடுமையைத் தாங்க மாட்டாள். 'அதுவன்றி இரவில் கரடிகளும் புற்றுக்களைத் தோண்டி அச்சம் கொள்ளச் செய்யாளூ வேங்கைப் புலிகளும் மான் இனத்துடன் பகை கொள்ளாமல் அவற்றுடன் விளையாடும்ளூ பாம்புளும் சூர்த் தெய்வங்களும் முதலைகளும் இடியும் என்னும் இவை தம்மை அடைந்தவர்க்குத் துன்பம் செய்யாளூ இவற்றுக்குக் காரணம் செங்கோல் ஆட்சியேளூ இதனால் பாண்டியனின் புகழ் எங்கும் பரவியுள்ளது' என்கிறான்.

அதாவது தென்னவன் அரசியல் நெறி பிறழாமல் இருக்கிறான். அவ்வாறு ஒரு அரசு இருந்தால் இறப்பும் வராது. இயற்கையும் தவறாது. பகுத்தறிவற்ற உயிரினங்களும் அமைதியாக வாழும். மேலும் அரசியல் செழித்த நாட்டில்தான் அமைதி கொழிக்கும். அமைதி தவழும் மண்ணில்தான் மக்கள் அல்லல் இன்றி வாழ்வர் என்று அறம் பற்றிய கருத்தியலைச் சிலப்பதிகாரம் மன்னர்க்குரியதாகக் காட்டுகிறது.

 பொதுவாக 'அறம்' என்பது மானுடத்தின் நலனை நோக்கமாகக் கொண்டது. 'இது சரியான செயல்ளூ இதனால் அனைவரும் பயனடையக் கூடும்ளூ ஆதலால் இதனைச் செய்ய நான் கடமைப்பட்டவன் என்ற அறிவோடும் முழுமனதோடும் முடிவு செய்து செயற்படும் நிலை மனச்சான்று நிலையாகும். மனச்சான்று நிலை அறவுணர்வு வளர்ச்சியின் இறுதி நிலை' என்று வாழ்வியல் களஞ்சியம் கூறுகிறது. இந்த நிலையையே மன்னர்களுக்குரியதாகச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அறநெறி பிழையா பாண்டியன்
 பாண்டிய மன்னன் அறம் பிழையாமல் தன் நாட்டு மக்களை காத்து வருகிறான் என்பதை அடைக்கலக் காதையில் கோவலன் கூற்றாக

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் 
பதியெடு அறியாப் பண்புமேம் பட்ட 
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு' (15.1-6)

என்ற பாடலடிகளில் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். அதாவது நாட்டுக்குப் பல செல்வத்தைத் தருவதும் மக்களுக்கு நிழலாக விளங்குவதும் ஆகிய அருளாட்சி முறையைக் கடமையாகக் கொண்டு சிறிதும் வழுவாது ஆள்பவர் பாண்டியர். அவர்தம் சிறப்புமிக்க செங்கோலாட்சியும் குடையின் தன்மையும் வேலின் வெற்றியும் உலகெங்கும் புகழுடன் விளங்கும் தன்மையுடையன. பாண்டியரின் தலைநகரமான மதுரையோ எனின் அங்குள்ள மக்கள் பிழைப்புக்காக வேறு ஊர் செல்லுதலையறியாதவாறு செல்வத்தாலும் பிறவற்றாலும் மேம்பட்ட சிறப்புடையது' என்கிறான் கோவலன்.

இங்கு நடுநிலைமையில் விளங்கும் பாண்டிய மன்னனின் தன்மையையும் நேர்மையான அரசியல் ஒரு நாட்டை வாழ்விப்பதில் எத்தகைய சிறப்பான பங்கு வகிக்கிறது என்பதனையும் அறியமுடிகிறது. இங்கு கோவலன் கூறுகின்ற 'பதியெழு அறியா' என்னும் தொடர் உற்று நோக்கத் தக்கது. மன்னன் அற நெறியோடு ஆட்சி செய்வதால் தன் நாட்டு மக்கள் பிற நாட்டிற்குப் பிழைப்பிற்காகச் செல்லவில்லை என்பது 'கோவலன் தனது பூம்புகாரை விட்டு பிழைப்பிற்காகப் பாண்டிய நாட்டிற்கு வந்துள்ளான் என்றால் சோழ மன்னன் தன் நாட்டு மக்களை காக்கும் பொறுப்பில் இருந்து அறம் தவறிவிட்டான் என்பதைக் குறிப்பாக உணர முடிகிறது.

 மேலும் சில கருத்துக்களையும் கொண்டுசோழ நாட்டின் நிலையை அறிய முடிகின்றது. அதாவது 'காடுகாண் காதை'யில் கவுந்தியடிகள், கண்ணகி கோவலன் மூன்று பேரும் உறையூரை விட்டு தெற்கு நோக்கி நடக்கலாயினர். அங்கு சிறிது தூரத்தில் மாங்காடு மறையோனைச் சந்திக்கின்றனர். அவன் அவர்களிடம் பாண்டியனின் பெருமையை அவன் குறிப்பிடுகிறான். அப்போது

கோத்தொழி லாளரோடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல 
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் 
தானலம் திருகத் தன்மையில் குன்றி 
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப் 
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் (11.60-66).

என்று கருத்துரைக்கிறான். 'அரசியல் அமைச்சரோடு மாறுபாடு கொண்டு அரசன் தன் போக்கில் செயல்பட அதனால் ஆட்சியையே இழந்து அல்லலுறும் நாடு போல' என்று வெயிலுக்கு உவமை தருகிறார். இங்கு அந்த நாடு யாருடையது மன்னன் யார்? என்பது கூறவில்லை. ஆனால் அது சோழ நாடாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஆட்சியை இழந்து அல்லலுறும் நாட்டில்தான் குடிமக்கள் வேறு நாட்டிற்குச் செல்வர். கோவலன் தன் பிழைப்பிற்காக வேறு நாட்டிற்கு வந்துள்ளான். இவ்வாறாகப் பார்க்கவும் முடியும். ஆனால் இது ஆய்வுக்குரியது. இதனை நாம் அரசியலில் அறம் தவறிய நாடடைக் காட்சிப் படுத்தும் விதமாக இளங்கோவடிகள் அமைத்துள்ளார் என்று கொள்ளலாம்.

மன்னர்களின் அறமற்ற செயல்
இளங்கோவடிகள் அரச குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதனால் அரசர்களின் அறம் பற்றிய கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் கூறிச்செல்கிறார். அதாவது மகளிர்களுக்கு மாலை மயக்கம் தரும். அதிலும் கணவர்களைப் பிரிந்திருக்கும் நேரம் பார்த்து மாலை வந்ததை ஒரு உவமை கொடுத்து விளக்க முற்படுகிறார். அப்போது அறம் தவறிச் செயல்படும் அரசனை மையமாகக் கொண்டு கருத்துரைக்கிறார்.

அரைசு கெடுத் தலம் வரும் அல்லற் காலைக்
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப 
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி 
வலம்படு தானை மன்னர் இல்வழிப் 
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்' (4.8-12).

என்று அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் 'வரிசெலுத்தும் கடமையுணர்ந்த குடிகள் துயரம் கொள்ள அங்ஙனம் வரி செலுத்தாது உட்பூசல் செய்யும் குடிகளுடன் ஒருதலையாக நட்புத் தொடர்பு கொண்டு வெற்றியைத் தரும் படை வேந்தர் இல்லாத நேரம் அறிந்து அவர் நாடெல்லாம் கெடும்படி நலமெல்லாம் கவர்ந்து தம் படையுடன் புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னன்' என்று அறம் தவறிய மன்னனைக் குறிப்பிடுகிறார்.
 
அதாவது மன்னர்கள் போர் செய்யும்போது கூட அதற்கான அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் மன்னன் சில நேரங்களில் அந்த அறத்தைக் கடைபிடிக்காமல் போர் செய்துவிடுகின்றனர் என்கின்றார் இளங்கோவடிகள்.

குடிகள் எதிர்பார்ப்பு
கொடுங்கோல் மன்னனை மக்கள் ஏற்றுக் கொள்ளவது இல்லை. அவனின் ஆட்சி அதிகாரம் வீழ்;ச்சி அடைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியை இளங்கோவடிகள் மிகச் சிறப்பாக பதிவு செயகிறார்.

'கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதிர் அமையம் பார்த்திருந் தோர்க்குப்' (புறஞ்சேரி இறுத்தக் காதை)

இவ்வரிகள் அறம் தவறிய மன்னனை மக்கள் ஏற்றுக்கொள்ளவர் இல்லை என்கிற செயதியை முன்வைக்கிறது அதிகமாக அறநெறியைத் தவறி பிழை செய்த மன்னனை அந்நாட்டில் உள்ள குடிமக்களே மன்னனின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருப்பார்கள். இது நீதிதவறும் மன்னர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் நடைபெறும் நிலை இதனை மிக அழகாக உவமை கொடுத்து இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

குடிமக்கள் பாராட்டு
 நல்ல அறநெறியில்லா அரசனை எதிர்க்கும், அவன் வீழ்ச்சியை எதிர்பார்க்கும் குடிமக்கள் அற நெறிமக்கள் அற நெறியில் இயங்கும் அரசனை வாழ்த்தவும் தவறவில்லை.

'பெரு நில மன்னன் இருநிலம் அடங்கலும் 
பசியும் பிணியும் பகையும் நீங்கி 
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி 
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் 
மூதிர் பெண்டிர்' (இ.வி. எடுத்தக் காதை).

இங்கு மறக்குடி மகளிர் குரவைக் கூத்தினராயத் தெய்வம் ஏறப் பெற்று 'எம்மன்னன் ஆளும் நிலம் முழுவதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழைவளமும் சுரப்பதாக' என வாழ்த்துகின்றனர். இவ்வாறு ஒரு மன்னனை வாழ்த்துவது என்பது அறம் நிறைந்த மன்னனை மட்டும்தான். நல்லாட்சியைக் குடிகளுக்கு வழங்கும் அரசனை மக்கள் பாராட்டுவர் என்பதனையும் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.

முடிவுரை
 சிலப்பதிகாரத்தில் அரசு அறம் என்பது மூவேந்தர்களை மையமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பாண்டிய மன்னனை அதிகமாக மையப்படுத்தி அறம் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் மூவேந்தர்களின்சிறப்பான ஆட்சியைத் தந்தவன் பாண்டியன் என்பதாலும் அவன் ஊழ் வினைப் பயனால் அறம் பிழைபட்டுவிட்டான் என்பதாலும் அவனை மையமாகக் கொண்டு அறம் பேசப்படுகிறது. சோழ மன்னர்கள் இரண்டு தலைநகரங்களை வைத்து (உறையூர், புகார்) ஆட்சி செய்து வந்துள்ளனர். அங்கு பிரிவும் பூசலும்இருந்துள்ளது என்பதையும் இப்பிவினால் அறியப்படுகிறது. சோழ மன்னர்கள் அறம் தவறியதால் நல்லாட்சியைக் கொடுக்க முடியாததால் கோவலன் பிழைப்புக்காக வேற்று நாட்டிற்கு வருகிறான் என்பதை கோவலனின் உரையாடல் மூலம் அறிய முடிகிறது. மேலும் ஒரு அரசனுக்குரிய பொதுவான அறங்களையும் சிலப்பதிகாரம் ஆங்காங்கு சுட்டிச் செல்கிறது.

kailairavisankar@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard