New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை - ப.சு. மூவேந்தன்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை - ப.சு. மூவேந்தன்
Permalink  
 


தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை

E-mailPrintPDF

தொல்காப்பியப் புறத்திணைச் சிறப்பு
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -உலக மொழிகளின் இலக்கணங்கள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே அமைந்திருக்க, தமிழ் மொழியில் மட்டும் பொருளுக்கும் இலக்கணம் கண்டுள்ளமை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எழுத்தும் சொல்லும் உரைத்த தொல்காப்பியம், இவ்விரண்டும் அறிந்தவர்கள் இலக்கியமும் தெளிதல் வேண்டும் என்று கருதியே இலக்கிய, இலக்கணம் கூறும் பொருளதிகாரம் கண்டார். மொழிக்கும், மொழி வழித் தோன்றிய இலக்கியங்களுக்கும் மட்டுமல்லாது, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வியல் நெறிகளுக்கும் இலக்கணம் வகுத்துரைத்தவர் தொல்காப்பியர். எனவேதான், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் ‘சமூக நூல்’ என்றும், ‘தமிழர்களின் நாகரிகக் கையேடு’ என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்தைத் ‘தமிழின் உயிர்நூல்’ என்கிறார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். உலக மொழிகளில் எம்மொழியும் பெறாத தனிச்சிறப்பு பொருளதிகாரத்தால் தமிழ் பெற்றுள்ளது.

அகத்திணை ஏழு என்பதற்கேற்பப் புறத்திணையும் ஏழு எனவே கூறி, அவ்வகத்திணைகளைப் புறத்திணைகளுக்கு இனமான திணைகள் என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

வெட்சி    - குறிஞ்சியின் புறம்
வஞ்சி    - முல்லையின் புறம்
உழிஞை    - மருதத்தின் புறம்    
தும்பை    - நெய்தலின் புறம்
வாகை    - பாலையின் புறம்
காஞ்சி    - பெருந்திணையின் புறம்
பாடாண்    - கைக்கிளையின் புறம்

இதன்வழி தொல்காப்பியப் புறத்திணைப் பகுப்பு அகத்திணைப் பகுப்பின் அடிப்படையிலேயே எழுந்தது என்பதனை அறியலாம்.

தொல்காப்பியப் புறத்திணையியல் போர் பற்றிக் கூறுவதிலும்கூட அறத்தையே பெரிதும் நிலைநாட்ட விரும்புகின்றது. அரசன் வலிந்து போர் செய்தல் இல்லை. தன் மண்ணைக் காக்கவும், தன் அரண் காக்கவும், தன் வலிமையை மாற்றானுக்கு உணர்த்தித் தன் வீரத்தை நிலை நிறுத்தவுமே போர்கள் நடைபெற்றன. காலப்போக்கில் இக்கோட்பாடுகள் நிலை பேற்றையடைய முடியவில்லை. அகம்-புறம் என்ற பகுப்பும், அகப்புறம்-புறப்புறம்-புறஅகம் என வளரலாயின. புறத்திணைகள் ஏழு என்ற நிலையிலிருந்து பன்னிரண்டு எனப் பெருகின. இவற்றுள் பாடாண் திணை குறித்த செய்திகளை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது. பாடாண்திணை
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே”    (தொல்.பொருள். நூ. 1026)

என்று தொல்காப்பியர் குறித்தார். ஏனைய திணைகளை வெட்சி தானே, வஞ்சி தானே என்று குறித்தது போலன்றி, பாடாண் பகுதி என இந்நூற்பாவில் குறித்திருப்பது ஆய்வுக்குரியதாகும். ஏனைய திணைகள் எல்லாம் போர் தொடுப்போர்-அடுப்போர் என இருவருக்கும் உரியதாய் அமைகின்றது. ஆனால் பாடாண்திணை பாடுபவர்-பாடப்படுவோர் என இருவருள் தம் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது. கைக்கிளையும் ஒருதலைக் காமமாதலால் அதற்குப் புறமாகிய பாடாணும் ஒன்றன் பகுதியானது.

புறத்திணை ஏழனுள் இறுதித்திணையாக அமைந்தது பாடாண் ஆகும். கைக்கிளைக்குப் புறனாகிய இத்திணைக்கு அடையாளப்பூ எதுவும் சுட்டப்பெறவில்லை. அதே போன்று கைக்கிளைக்கும் தாவரப் பெயர் சுட்டப்பெறவில்லை என்பது நோக்கத்தக்கது. பாடாண் திணை என்பதன் பொருள் விளக்கத்தைத் தொல்காப்பியர் சுட்டவில்லை. உரையாசிரியர்களே இதற்கு விளக்கம் தர முனைந்துள்ளனர். பிற்காலத்தில் எழுந்த இலக்கண நூலான இலக்கண விளக்கம் என்னும் நூல் பாடாண் திணை என்பதனைக் குறித்து,

“பாடுதற்குரிய ஆண்மகன் தனாது
பாடமை ஒழுக்கம் பாடும் அந்நெறித்தே”    (புறத். நூ. 144)

என்று குறிப்பிடுகின்றது.

பாடாண் திணை பாடு+ஆண்+திணை என்னும் மூன்று சொற்களால் அமைந்தது. வெட்சி முதலிய அறு திணைகளும் தனிநிலைத் திணைகள் என்றும், பாடாண் திணை இவ்வாறு பல திணைகளை நிலைக்களமாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத்திணை என்பார் க. வெள்ளைவாரணனார். பாடாண் - பாடப்படுவோர் மன்னர், வள்ளல், கடவுள் ஆகியோர் ஆவர்.

போர்த்துறையிலும், அன்பின் மிக்க இல்லறத்துறையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையே பாடாண் ஆகும். புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெரும் பண்புகளை ஆளுதல் தன்மையுடைய ஒழுகலாற்றில் இயல்வதே பாடாண். ஏறாண், பேராண், வல்லாண், வேளாண், தாளாண் ஆகிய சொற்களின் அடிப்படையில் அமைந்தது இச்சொல்லாகும். சொற்பொருள் எதுவாயினும் பாடாணுக்குரிய பொருள் புகழ்மொழிப் பாடல் என்பதே. புகழ்தல் பரவுதல் என்பதனோடு அறிவுரை கூறுதல், கொடை, புலவன் பரிசில் கேட்டல், பெற்றுச் செல்லல் போன்றனவும் பாடாணுள் இடம்பெறுகின்றன. தலைவன் புகழ் பொதுப்பொருளாகவும், கொடை சிறப்புப் பொருளாகவும் பாடாணில் கொள்ளப் பெறும்.

வீரம், புகழ், கொடை ஆகியனவற்றில் சிறந்து விளங்குவோரைக் குறித்துப் பாடுவதே பாடாண் திணை என்பது பொருத்தமாகும்.

பாடாண்திணை எட்டுவகை
இளம்பூரணர், கடவுள் வாழ்த்து முதலான எட்டு என்றுரைப்பார். நச்சினார்க்கினியர் பாடாண் திணைக்குரிய பொருட்பகுதி முதலான எட்டினையும் கூறுவர். அவை, கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளை வகை, வசை வகை என்பன.

நச்சினார்க்கினியர், பாடாண் என்பது பாடுதல் வினையையும், பாடப்படும் ஆண்மகனையும் நோக்காது அவனதொழுகலாறாகிய திணையுணர்த்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியையும் வேண்ட ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேறாகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோடொத்தலிற் பாடாண்திணை கைக்கிளைப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளும் சுட்டியொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண்திணையாயினும் ஒருவனை ஒன்று நச்சிக்கூறாமையின் அவர் பெறுபுகழ் பிறரை வேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின் அவை கைக்கிளைப் புறனாகாமை உணர்க.

தம்மின் வேறாகிய ஒருதலைக்காமம்-தலைவன் தலைவியருள் ஒருவர்மாட்டு நிகழும் வேறான ஒருதலைக்காமம். பாடுவோன் விருப்பம் வேறு; பாடப்படுவோன் விருப்பம் வேறு. கைக்கிளையில் தலைவன் விருப்பம் தலைவிபால் உண்டு. தலைவிக்கு விருப்பம் என்பதில்லை. அதனால் பாடாணிலும் கைக்கிளையிலும் தனித்தனி மாறுபட்ட விருப்பம் இருத்தலின் கைக்கிளைக்குப் புறன் பாடாண் ஆயிற்று என்பார் நச்சினார்க்கினியர்.

பாடாணுக்குரிய சொற்பொருள் எதுவாயினும் பாடணுக்குப் பொருள் புகழ் மொழிப் பாடல் என்பதே ஆகும். சங்க காலத்தில் வீரமும், கொடையும் புகழுக்குரிய பொருள்களாகக் கொள்ளப்பட்டன.

பாடாண் - சொற்பொருள்
பாடாண் என்பதனைப் பாடு+ஆண் எனப்பிரிப்பர். பாடு என்பதனை வினைச்சொல் எனக் கொண்டு, பாடப்படும் எனப் பொருள் கூறி, ஆண் என்பதற்கு ஆடவனது ஒழுகலாறு என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். அவரது விளக்கமே இதுவரை பலராலும் பின்பற்றப்படுகின்றது. இதில் பாடு என்பதற்கு முறைமை, செவ்வி, பெருமை, ஒலி, ஒழுக்கம் என்ற 32 பொருள்கள் உள்ளன. ஆண் என்பதற்கு ஆடவர் எனப் பொருள் கொள்வதைவிட ஆளுமை எனப் பொருள் கொள்வது பொருத்தமானதாகும்.

பாடாணுள் தலைவனது புகழ் பாடப்படுவது பொதுப்பொருளாயினும் கொடையே சிறப்புப் பொருள் எனக் கொள்ளலாம்.

பாடும் முறை
வெட்சி, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி முதலிய போர்த்திணைகளின் துறைகள் வாயிலாக மன்னனைப் புகழ்வது போர்த்திணைப் பாடாணாகும். அவ்வாறே அகத்திணை வாயிலாய் மன்னனைப் புகழ்வது அகத்திணைப் பாடாண் ஆகும்.

பாடல் தலைவர்
பாடாணுள் மன்னன், வள்ளல் முதலிய மக்கள் மட்டுமன்றிக் கடவுளரும் இடம் பெறுவர். கடந்தகால வீரர்களின் போர்ச்செயலைப் போற்றிப் பாடும் புகழ்நிலைப் பாடல்களே முதலில் தோன்றியிருந்தன. அந்நிலையிலிருந்து நிகழ்காலச் செயல்களைப் புகழ்ந்து அவர்கள் முன்னர்ப் புகழும் பாடாண் பாடல் தோன்றியுள்ளது. சங்க காலத்தில் போர்த்திணை அடிப்படையில் புகழ் மொழி சிறப்புற்று விளங்கியது.

பாடாண் திணைக்குரிய துறைகள்

1. கொடுப்போரேத்தல்
2. கொடாஅர்ப் பழித்தல்
3. அடுத்தூர்ந்தேத்திய இயல்மொழி வாழ்த்து
4. கண்படை கண்ணிய கண்படைநிலை
5. கடைநிலை
6. கபிலை கண்ணிய வெள்ளிநிலை
7. வேலின் நோக்கிய விளக்குநிலை
8. வாயுறை வாழ்த்து, செவியறிவூஉ, புறநிலை வாழ்த்து

பாடாணுக்கும் கைக்கிளைக்கும் ஒற்றுமைக் கூறுகளாகப் பத்து கூறப்படும். அக, புறத்திணை (போர்த்திணை) அடிப்படையிலும் பாடாண் தோன்றும். பாடாண் இசைப்பாடலாகப் பாடப்பெறும். அகப்பாடல் முறையால் கடவுளைப் பாடுதலும், மக்களைப் பாடுதலும் உண்டு. பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாகக் கொண்டு பாடுவதும் உண்டு. தலைவனது ஊர், உருவச்சிறப்பு ஆகியவற்றைப் புகழ்தல் உண்டு. பாடாண் பாடலில் தலைவன் பெயர் கூறப்படும்.

ஒரு பயன் கருதியே பாடுதலும், பாடப்படுதலுமாக அமைவது பாடாண் ஆகும். இதனைத் தனக்கே உரிய பாடாண், ஏனைய திணைகளுக்கு உரிய பாடாண் என இருவகைப்படுத்தலாம். புலவன் தனக்கு வரும் பரிசை விரும்பியே பாடுகின்றான். புரவலன் தான் புகழப்படுவதையே விரும்புகின்றான். இருவருடைய உள்ளமும் ஒன்றவில்லை. எனவே இது கைக்கிளைக்குப் புறனாயிற்று.

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்

இது ஈவோரைப் புகழ்தலும், ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என மூவகையாக அமையும். பிறரை இழித்துக் கூறுதல் சான்றோர்க்குத் தக்கதன்று, ஆயினும் நன்மக்கள் பயன்பட வாழ்தலும், தீயோர் பயன்படாமல் வாழ்தலும் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவர் என்பதற்காகப் பழித்துக் கூறுவர் எனக் காரணம் கூறுவர் நச்சினார்க்கினியர்.

கொடுப்போர் ஏத்தல் வருமாறு : சான்று :

“தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினோமாகத் தான் பிற
வரிசை அறிதலின் தன்னும்; தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
போற்றார் அம்ம பெரியோர்தம்; கடனே”    (புறநானூறு, பா. 140)

இது நாஞ்சில் வள்ளுவனை ஓளவையார் பாடிய பாடலாகும். செந்நாப் புலவீர்! நாஞ்சில் மலை வீரனாகிய நாஞ்சில் வள்ளுவன் மடமையோன் ஆவான். ஏன்எனின், விறலியர் தோட்டத்திற் பறித்த கீரை உணவுக்குக் கொள்ள வேண்டிக் கொஞ்சம் அரிசி வேண்டினோம். அவனோ பிறர் நிலைமை அறிதலால் தன் தகுதியையும் அறிந்து குன்றம் அன்ன களிறு எமக்குக் கொடுத்தான். அப்படிப்பட்டதான இவ்வளவு தான் கொடுத்தல் வேண்டும் என்று தெரியாத ஈகைக்குணமும் உண்டோ, பெரியோராய் இருப்போர் தம் கடப்பாட்டைக் கைவிட மாட்டார் என்பது அவன் செயல் மூலம் தெரிய வருகின்றது என்ற கருத்தியல் இப்பாடலின்வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கொடார்ப் பழித்தல் வருமாறு : சான்று :

“ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்து ஆகியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்
நோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாண்அலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியற் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை சிறக்க நின்தாளே”    (புறநானூறு, பா. 196)

இது இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடலாகும். இதில், ஒருவனுக்குத் தன்னால் கொடுக்கக் கூடியதைக் கூடும் எனக் கொடுத்தலும், கூடாததை இல்லை என மறுத்தலும் அவன் முயற்சியிடத்து உறவுப் பகுதியாம். கொடுக்க இயலாததை இயலும் என்றலும், இயல்வதை இல்லை என மறுத்தலும் ஆகிய இரண்டும் இரப்பவரை வாட்டுதலாம். அன்றியும் புகழ் குறைபடும் வழியுமாகும். நீ எமக்கு மறுத்தது நின் புகழ் குறைபாடும் வாயில் ஆகுக. இதுவரை யாம் நெடுநாள் காணாத ஒன்றை நின்பால் கண்டேம்; நின் மக்கள் நோயின்றி வாழ்வாராக. யானும் வெயிலெனப் பாராது, பனியெனத் தங்காது என் மனைவியை நினைந்து செல்வேன். நின் ஆயுள் வளர்க என்று கொடாரைப் பழித்து நிற்றலைக் காணலாம்.

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் வருமாறு :

“களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவற் பாணர் உய்ந்தெனக்
களறுஇல வாகிய புல்லரை நெடுவெளிற்
கானமஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்குஇனி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவின்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே”    (புறம். 127)

இது ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியதாகும். இப்பாடலில் ஏத்தப்பட்டவன் ஆய், பழிக்கப்பட்டவர் செல்வர். இப்பாடலில் தன் நாடெல்லாம் பாணர்க்குக் கொடுத்துவிட்டதனால் களிறு இல்லாதவனாகிய புல்லிய அடிமரம் உடைய வெளியிடத்துக் காட்டு மயில் கூட்டத்துடன் தங்கக் கொடுத்தற்கரிய தாலியை மட்டும் அணிந்த மகளிரொடு பொலிவிழந்துள்ளது ஆய்அண்டிரனின் அரண்மனை. சுவைக்க இனிதான சோற்றைப் பிறர்க்கு ஈதல் இல்லாமல் தாமே தம் வயிற்றுக்கு இட்டுப் புகழை நீங்கிய முரசுடைச் செல்வராகிய வேந்தரது அரண்மனை போல் ஆகாது அது என்ற கருத்துப் புலப்படுத்தப்பட்டுள்ளது.

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல், புகழ்ச்சி ஆகிய துறைகள் ஒரு பொருள் குறித்தனவே. இதனை தி.வே. கோபாலையர், “புகழ், கலை வல்லார்க்கும் இரவலர்க்கும் தம் வள்ளன்மையால் வறுமை தீர வழங்கும் வள்ளல்களைப் புகழ்ந்து அவ்வள்ளன்மை கொள்ளாரைப் பழித்துக் கூறும் வாயிலாக ஏனையோரும் ஈத்துவக்கும் இன்பம் பெறச் செய்தல் வேண்டும் என்பதாம்” என்று கூறுகின்றார்.

இயல்மொழி வாழ்த்து
“அடுத்தூர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்து” என்று தொல்காப்பியர் இயல்மொழி வாழ்த்தினைக் கூறுகின்றார். தலைவனது வெற்றியையும் பண்பையும் புகழ்வது இத்துறை ஆகும். தலைவன் எதிர் சென்று அவன் குலத்தோர் செய்தியையும் அவன் மேலே ஏற்றிப் புகழ்ந்த இயல்மொழி வாழ்த்து என்னும் நச்சினார்க்கினியர் கூற்று இயல்மொழி வாழ்த்தின் நிலையைக் கூறுகின்றது. இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை என்றும், அன்னோர் போல எமக்கு நீயும் ஈக என்றும், உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயல்மொழி வாழ்த்து என்பார். புறநானூற்றில் அதிகமான பாடல்கள் இத்துறையில்தான் படைக்கப்பட்டுள்ளன. (58 பாடல்கள்)

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி- தம் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”    (புறம். பா. 9)

இது பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாடலாகும். ஆக்களே ! பார்ப்பன மாக்களே ! பெண்டிரே, பிணியாளரே, புதல்வர்ப் பெறாதோரே நீவிர் யாவரும் நுமக்கேற்ற புகலிடம் சேர்வீராக ! யாம் படையெடுத்து வருவேம் என்று அறப்போர் வழியை விரும்பும் கொள்கையுடைய வீரத்தையுடைய களிற்றுமேல் கொடி நிழலைச் செய்யும் எம் தலைவனும் பொன்னைப் பாணர்க்குக் கொடுத்த முந்நீர் விழவுடைய நெடியோனும் ஆகிய குடுமியானவன் பஃறுளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்வானாக! என்று வாழ்த்துவதை இப்பாடலில் காணலாம்.




__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை - ப.சு. மூவேந்தன்
Permalink  
 


கொடை மடம்
மன்னவனுக்கும் மற்றைய மக்களுக்கும் உரிய இன்றியமையாத பண்பாகக் கொடை பேசப்படுகின்றது. வள்ளுவரும் ஈகை, ஒப்புரவு, நன்றியில் செல்வம் முதலிய அதிகாரங்களில் ஈகையின் உயர்வையும், இவறலின் தாழ்வையும் காட்டுவார். பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்காக அக்காலத்தில் புலவர்கள் எடுத்துரைத்த ஓர் உபாயப் பண்பே கொடைமடம் ஆகும். பொருள் கொடுத்தால் மேலுலகம் செல்லலாம் என்று சமய வாழ்விற்கும் அது வழி வகுத்தது. சமுதாய வாழ்விலும் பிறர்க்குக் கெர்டுத்துப் புகழடைய வேண்டும் என்னும் கொள்கை நிலை பெற்றிருந்தது. எனவே, சங்க காலச் சமுதாய, பொருளாதார, சமய வாழ்வியலில் கொடைப்பண்பு இன்றியமையாத இடத்தைப் பெற்றது எனலாம்.

புறநானூற்றில் 26 பாடல்கள் ஈகைப் பண்பினை மட்டும் எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. ஈகைப்பண்பு புகழப்படும்போது மன்னனது ஈகையை உவமைகளால் விளக்குதல், கொடுக்கப்படும் பரிசில், அதன் அளவு, கொடுக்கப்படும் விரைவு, கொடுக்கப்படும் முறை ஆகியவற்றை விளக்குதல் என்று பல முறையைக் காணமுடிகின்றது.

ஆற்றுப்படை
தலைவனது புகழைப் பாடும் முறைகளில் ஆற்றுப்படைத்துறை சிறப்பிடம் பெறுகின்றது. பரிசில் பெற்ற கலைஞன், பெறவிழையும் கலைஞருக்கு வழி கூறுவது என்பது அக்காலத்து நடைமுறையாகும்.

செவியறிவுறூஉ
நிலையாமை மற்றும் நீதிக்கருத்துக்களாய் அமைவது செவியறிவுறூஉ என்னும் துறையாகும். சங்கச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேட்டைத் தடுக்கும் முகமாக அமைந்தது செவியறிவுறுஉ ஆகும். மன்னன் நெறி தவறியபோது அவனைத் திருத்துவதற்குச் செவியுறையும், அங்கதமும் பயன்படுத்தப்பட்டன. புகழோடும் பொருளோடும் கூடியவை எல்லாம் செவியுறை என்றும், வசையோடும் இசையோடும் கூடியவை எல்லாம் அங்கதம் என்றும் பெயர்பெற்றன. இது உலகியல் உண்மைகளை வலியுறுத்தி நிற்கக் காணலாம்.

இத்துறை பாடாண் திணையுள் அடங்கக் காரணம் குறிப்பிட்ட தலைவன் முன்னர் பாடியதே ஆகும்.

செவியறிவுறூஉ வருமாறு :

“காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட ;காகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே”    (புறநானூறு, பா. 184)


இப்பாடல், பாண்டியன் அறிவுடைநம்பிக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்திப் பாடியதாகும். மா அளவிற்கும் குறைந்த வயலில் விளைந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுக்க உண்ணுமாயின் யானைக்கு அந்நெல் பல நாளுக்கு வரும். அதைவிட்டு யானை தானே தனித்து வயலிற் சென்று உண்ணப் புகின் நூறு வயலாயினும் அவற்றில் விளைந்த நெல்லானது யானையின் வாயில் புகுவதைக் காட்டிலும் யானைக்காலால் மிதிப்புண்டு அழிவதே மிகுதியாகும். அதுபோல அரசன் அறிவுடையவனாய் வரி கொள்ளும் முறையறிந்து கொள்ளின் அவன் நாட்டு வளம் பெரிதாகும். அதைவிடுத்து வரி கொள்ளும் முறையறியாத அதிகாரிகளுடன் அன்பு கெடக் கொள்ளும் உணவை விரும்புவானாயின் அவனும் உண்ணமாட்டான். அவன் உலகமும் கெடும் என்ற கருத்து தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

சங்கப்பாடல்களில் அறக்கருத்துக்களை வலியுறுத்தும்போது இன்னது செய்தால் புகழ் கிட்டும். இன்பம் கிடைக்கும் என்று இம்மைப்பயனைச் சொல்லி வலியுறுத்துவதும் உண்டு. நல்லுலகம் கிடைக்கும் என்று மறுமைப்பயனைச் சொல்லி வலியுறுத்துவதும் உண்டு. எனவே நல்வினைப் பயன், தீவினைப்பயன், சொர்க்கம், நரகம் பற்றிய கருத்துக்கள் அக்காலத்தில் வலுப்பெற்றிருந்தமை புலனாகும்.

வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉம்
வாயுறை வாழ்த்து என்னும் துறை வேம்பும் கடுவும் போல் உள்ள நற்கருத்துக்களைப் பிற்பயக்கும் என்று கூறி விளக்குவது தொல்காப்பியரின் கருத்தாகும்.

“வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும்போல வெஞ்சொல்
தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே”    (நச்சர்.மேற்கோள் விளக்கம் நூற்பா).

வாயுறை என்பது வாய்மை மொழியாகிய மருந்து எனப் பண்புத்தொகையாற் கூறியது. மருந்து போறலின் மருந்தென்றார். ஒருவன் சிறப்புக் கூறி வழுத்தி, அவற்குப் பயன்படக் கூறலின் வாயுறை வாழ்த்தென்றார். என்பது நச்சினார்க்கினியரின் விளக்கமாகும்.

தொல்காப்பியர் கூறும் பாடாண் திணைக்குரிய துறைகளுள் ஒன்று செவியறிவுறூஉ ஆகும்.

“வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉம்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்”    (தொல்.பொருள். நூ. 1036:8-9)

என்று துறையினை மட்டும் புறத்திணையியலில் கூறிய தொல்காப்பியர், அத்துறையின் பொருளமைதிகளைச் செய்யுளியலில்,

“செவியுறை தானே
பொங்கு தலின்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன்எனச் செவியுறுத் தன்றே”    (தொல்.பொருள். நூ.

என்று விளக்குகின்றார். அடக்கமுடன் இருத்தல் வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இத்துறையின் செய்தியாகும்.

வாயுறை வாழ்த்து வருமாறு :

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅது உதுருகெழு குமரியின் தெற்குங்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற்கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்த்
தெரிகோள் ஞமனன் போல வொருதிறம்
பற்றல் இலீயரோ! நின் திறம் சிறக்க
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல்படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவி,
பாசவில் மாக்கட்கு வரிசையில் நல்கி
பணியியர் அத்தைநின் குடையே - முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம்; செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்து கையெதிரே
வாடுக, இறைவநின் கண்ணி -ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
செலியர் அத்தை நின் வெகுளி - வாலிழை
மங்கையர் துளித்த வாள்முகத்து எதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத்து அடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ நிலமிசை யானே”    (புறம். 6)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடியது இப்பாடல் ஆகும். குறையாத ஈகையை உடைய குடுமியே ! பெரும ! இமய மலைக்கு வடக்கும் குமரிக்குத் தெற்கும் கீழ்கடற்குக் கிழக்கும், மேல்கடற்கு மேற்கும் நிலவுலகுக்குக் கீழும் வானுலகிற்கு மேலும் பிறர்க்கு அச்சமும் நின் புகழும் பரவ நிறைகோல் போல் ஒரு பக்கம் சாயாது நடுநிற்பாயாக ! பகைவர் நாட்டில் யானைகளை ஏவி, எயில் வென்று கொண்டு அங்குக் கிடைத்த பொருட்களைப் பரிசிலர்க்கு முறையாகக் கொடுத்து, முனிவர் தொழும் முக்கட்செல்வனாகிய சிவனின் கோயிலை வலம் செயற்கு, நின்குடை தாழ்வதாக. நான்மறை அந்தணர் நின்னை வாழ்த்த ஏந்திய கையெதிரே நின் தலை இறைஞ்சுக. பகை நாட்டில் தீ எரி கொளுத்தலால் உண்டாகும் புகையில் நின் மாலை வாடுக. நின் சினம் நின் மனைவியர் முகத்தெதிரே தணிவதாக. நீ மதியம் போலவும், ஞாயிறு போலவும் நிலமிசை மன்னுக” என செவியறிவுறுத்தலாக அமைந்திருத்தலைக் காணலாம். இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியறிவுறையுங் கூறினான், செவியுறைப் பொருள் சிறப்புடைத் தென்று அவன் கருதி வாழ்தல் வேண்டி.

முன்னது செவியுறை, பின்னது வாயுறை வாழ்த்து. இரண்டும் மருந்துபோல்வதே ஆகும். முன்னது அவிதல் கடன் என்று உலகியல் முறையைப் பொதுப்படக் கூறுவது. பின்னது வெஞ்சொல்லால் இடித்துரைத்து அறிவுறுத்துவது. எனவே இரண்டு துறையும் பொருளால், நோக்கத்தால் ஒன்றுபட்டனவாயினும் கூறும் முறையால் சற்றே வேறுபட்டுள்ளன. மேலும் வாயுறையோடு வாழ்த்தும் இருப்பதும், செவியறிவுறூஉ அவ்வாறின்றியிருப்பதும் குறிக்கத்தக்கதாகும். முறையால் மட்டும் வேறுபட்டுப் பொருளால் ஒன்றிய இவ்விரு துறைகளும் காலப்போக்கில் ஒன்றாக இணைந்துள்ளன.

வாயுறை வாழ்த்து முதலிய மூன்றும் பரிசில் பெறும் நோக்கம் இன்றி, அரசனுக்கு அவன் நலம் கருதிக் கூறப்படுவன என்பதனை அறியலாம்;.

ஆய்வு முடிவுகள்
வீரயுகப் பாடல்கள் அனைத்தும் வாய்மொழி மரபில் இருந்து வந்தவை. வாய்மொழி இலக்கியமாக விளங்கிய கிரேக்கப் பாடல்களைப் போலத் தமிழ் புறத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளமைக்குச் செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, இயன்மொழி வாழ்த்து முதலான பாடல்கள் சான்றாக அமைகின்றன. அவை வேந்தனது ஒழுக்கப் பண்புகளுக்கே முதன்மை தருகின்றன. மன்னவனை இடித்துக்கூறும் நோக்கிலும், அறிவுறுத்தும் நோக்கிலும் அமைந்த பாடல்களால் அக்காலத்தில் புலவர்கள் பெற்றிருந்த சிறப்பினை உணர்வதற்கு இப்பாடல்கள் துணைநிற்கின்றன.

வீரர்களின் போர்த்திறமையையும் பாடலாம். காதல் இன்பத்தையும் பாடலாம். காமப்பகுதியில் மக்களையும் தலைவர்களாகக் கொள்ளலாம். கடவுளரையும் தலைவன், தலைவியாகக் கொள்ளலாம். தலைவன், தலைவியின் இயற்பெயர் குடிப்பெயர் கூறலாம். வேந்தனின் கொடிச்சிறப்பு, அவன் பகைவர் அரணை அழிப்பது, வெற்றிக் கூத்தாடுவது ஆகியனவும் கூறுவது வீரர்களைப் போற்றும் முறையாகும். மன்னர்களின் இயல்பை உள்ளவாறே கூறி வாழ்த்தும் இயன்மொழி (அ) இயன்மொழி வாழ்த்து என்ற துறை பாடாணில் உண்டு. செவியறிவுறூஉ, வாயுறை வாழத்;து போன்றன இவ்வகையினவே. பாடாண் திணை வெறும் புகழ்ச்சிக்குரிய திணையன்று. அரசன் மக்களை நல்வழிப்படுத்தும் அறக்கருத்துக்கள் கொண்ட நல்இலக்கியங்கள் தோன்றுவதற்குரிய திணையாய்த் திகழ்வதாகும். பிற திணைகள் போலத் தனக்கெனத் தனிநிலை பெறாமல் பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவை ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாய் அமைவதால் பாடாண் பகுதி என்றார் என்று விளக்குகின்றார் நா. செயராமன்.

பாடாண் அல்லது புகழுரை என்பது வீரநிலைப்பாட்டின் ஒரு கூறு என்கிறார் தமிழண்ணல். பெரும்பாலும் ஒரு வீரனின் வெற்றி கிடைத்தவுடன் அந்த நேரத்திலே அவன் எதிரிலேயே புகழ்வதாக இருக்கும் இப்பாட்டு. சில சமயம் அவலப் பாட்டு அல்லது கையறுநிலைப் பாடல்கள் கூட வீரர்களின் புகழினை உரைப்பனவாகவும் அமையலாம். இத்தகைய அவலப்பாடல்கள், வீரப்பாடல்களுக்குச் சற்றே முந்தியன என்பார் சி.எம்.பௌரா. திணை என்பது ஓர் ஒழுக்கம் பற்றிய பல நிகழ்வுகள் (துறைகள்) அடங்கிய தொகுதி. அது சங்க இலக்கியப் பாடுபொருள்களில் ஒன்றாக அமைந்தது. பிற்கால இலக்கியங்களிலும் பாடுபொருளாகக் கொள்ளப்பட்ட திணை பாடாண் திணைஆகும். சங்க காலத்தில் பாட்டாளவே அமைந்த பாடாண் பிற்காலத்து நூலளவு எய்திச் சிற்றிலக்கியங்களுக்குப் பாடு பொருளானது. மக்களிடம் பல்கிக்கிடந்த புகழ் உணர்ச்சியே பாடாண் திணைக்குப் பெரியதோர் இடம்தந்தது.

நிலையாமை உணர்வு அறச்செயலுக்குத் தூண்டியது. நிலையாமை உணர்வால் பெறப்பட்ட அறத்தையே பாடாண் திணை பேசுகின்றது. கொடை வீரமே பெரிதும் பேசப்படுகின்றது. பாடாணில் எட்டுத் துறைகள் கொடை பற்றியனவே. அறம் கூறவே இத்திணை அமைந்தது போல் செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து போன்ற துறைகள் காணப்படும். கண்படை நிலை, துயிலெடை நிலை என்பன அரசன் பகையுணர்வின்றி நிறைவாக மன அமைதியுடன் வாழ வேண்டும் என்பதனை உணர்த்துகின்றன. வாகை சூடிய பின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது.

துணைமை நூல்கள் :
1. தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு, 2001
2. தொல்காப்பியப் புறத்திணை உரைவளம், ஆ. சிவலிங்கனார், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை, 1991
3. தொல்காப்பியப் பொருளதிகாரம், தமிழண்ணல் உரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2001
4. ந. செயராமன், சங்க இலக்கியத்தில் பாடாண் திணை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
5. புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1965

psmnthn757@gmail.com

*கட்டுரையாளர் : முனைவர் ப.சு.மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard