New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்) - பா.பிரபு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்) - பா.பிரபு
Permalink  
 


 தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்)

E-mailPrintPDF

ஆய்வுக் கட்டுரைகள்.- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -நான்கு கால்களையுடைய  விலங்கு நிலையிலிருந்து இரண்டு கால்களாய் மாறிய, உற்பத்திக் கருவிகளை உருவாக்கத் தொடங்கிய மனித சமுதாயம் வேரூன்றிய காலந்தொட்டு, சிறு சிறு குழுக்களுக்கான போராட்டம் தொடங்கி, இன்றைய அறிவியல் வளர்ச்சிப் பெற்ற யுகத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அதிகாரத்திலுள்ள நாடுகள் ஏனைய நாடுகளின் மீது போர் தொடுப்பது வரை, பல்வேறு விதமான மாற்றங்களையும், அழிவுகளையும் இப்புவியுலகில் வாழும் மனித இனம் சந்தித்துக் கொண்டு வந்திருப்பதே வரலாறு. 

புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் இன குழுக்களிடையே ஓயாது  உணவிற்கான போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்துள்ளது. ஒட்டுறவு அடிப்படையிலான உற்பத்தி உறவுகள் பெருகி, தனியார் உடைமை முறை தோன்றி வர்க்கங்களின் தோற்றுவாய்களும் உருவாயின. அவை அடிமையுடைமை அமைப்பை நிறுவி, அரசுத் தோற்றம் உருவாக வழிகோலியது.

வர்க்கச் சமுதாயத்திற்குப் பின்னர் துவக்கத்தில் போர் முறையானது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் மற்றும் இரு வேறு நிலப்பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் போர் புரிந்து வந்தனர். நவீன வளர்ச்சியெனும் யுகமான முதலாம் உலகப் போர் (கி.பி. 1911 – 1915 வரை) வரை, போரில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையும் (சுமார் 85% பேர்) போர்ப்படைப் பிரிவினரே. ஆனால், இரண்டாம் உலகப் போரில்  (கி.பி. 1939 – 1945) போர்ப் படைப் பிரிவினரின் அளவிற்கு ஒப்ப மக்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று ஆயுத எந்திரங்களோடு போர்கள் நிகழ்ந்து வருகிறது.

தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

இத்தகைய பண்டைய நிலவுடைமைச் சமுதாயத்தில் இன்றைய இந்திய நாட்டிற்கு உட்பட்ட தமிழக மாநிலத்தில், முதலில் கிடைக்கப்பெற்ற இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து” வரையறுக்கப்பட்ட நிலப் பகுதியில் பல்வேறு விதமான போர்கள் நிகழ்ந்துள்ளன. 

இத்தகைய போர் முறைகளைத் தொல்காப்பியரின் தொல்காப்பிய இலக்கண நூலின் வழி அறிய முடிகிறது. அதனைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. தொல்காப்பியச் சான்றுகளின் மூலமும் இலக்கண, இலக்கியங்களின் மூலமும் இதனை நன்கு அறிய முடிகின்றன.

புவியின் நிலத் தன்மைகள்
இப்புவி உலகமானது காடு, மலை, சமவெளி, கடல், பாலைவனம் எனும் ஐம்பெரும் பிரிவுகளால் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகைய உலக தன்மைக்கு ஒப்ப பண்டையத் தமிழகம் ஐந்நிலப் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியாய் சிறந்து விளங்கியுள்ளது.

நானிலம், ஐந்நிலம்-கருத்துக்கள்

காடுறை உலகம், மைவுரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம் என இவை “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென; சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். அகம். 5: 5-6) எனும் நூற்பாவின் வழி காடு, மலை, சமவெளி, பெருமணலான கடல் சார்ந்த பகுதி என நால்வகையாக நிலை கொண்டுள்ளது.

“நடுவுநிலைத் தணையே நண்பகல் வேனிலொடு” (தொல். அகம். 11:1) என்று தொல்காப்பியர் 7- திணைகளில் பாலைத் திணையைக் குறிப்பிடுகின்றார். இது முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும், திரிந்து பாலை நிலமாய் மாற்றம் பெற்றது என்பதும், வேனிற் காலத்தில் இது உருவாகும் என்பதும் ஆய்வின் வழி உரையாசிரியர்கள், தமிழாய்வாளர்கள் கூறும் கூற்று ஆகும்.

இவ்வைந்து நிலமுடைய பண்டைய தமிழகத்தில் “பாலை நிலப் பகுதியைத்” தவிர்த்து மற்ற நான்கு நிலப் பகுதிகளிலும் தனித் தனியாகப் போர் முறைகள் நிகழ்ந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பிய “புறத்திணையியல்” எனும் இயலின் மூலம் காண முடிகிறது.

போர் முறைகள்
நானிலப் போர் முறைகளாவன,
1. மலையும், மலையைச் சார்ந்த பகுதிகளிலும் (குறிஞ்சித் திணை) ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலுக்குமான போர்களும்.
2. காடும், காட்டைச் சார்ந்த பகுதிகளிலும் (முல்லைத் திணை) நிலத்தினைக் கைப்பற்றுவதற்கான போர்களும்.
3. சமவெளி, சமவெளி சார்ந்த பகுதிகளிலும் (மருதத் திணை) எயில் காத்தல், எயில் அழித்து நாட்டைக் கைப்பற்றுவதற்கான போர்களும்.
4. மணலும், மணல் சார்ந்த பகுதிகளில் (நெய்தல் திணை, கடல் சார்ந்த நிலம்) இரு பெரும் வேந்தர்களின் வலிமை குறித்த போர்களும்.
ஆகிய நால்வகைப் போர்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பும், பின்பும் பெரும் பகதி நடைபெற்றிருக்கிறது. இதற்கான சமூக பின்புலங்கள் மன்னர் உடைமை அமைப்பில் நிலப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கமும், செல்வ சேர்ப்பும் அதிகாரத்தை நிலைநிறுத்துவதுமே ஆகும். 

“உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு” (ப-17, லெவ் லியோன்டியெவ்) எனலாம். இத்தகைய கட்டமைப்பில் உற்பத்தி கருவிகளின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திக்குப் பயன்படும் பொருட்கள் பிரதானமாகின்றன. இச்சமூக உற்பத்தி முறை வேந்தர்களுக்கு செல்வ பெருக்கத்தை உருவாக்கி சமூக மதிப்பீட்டை அதிகார நிலையை மேன்மைபடுத்தவும் துணை நின்றன. இப்போர்முறை மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த அதிகார வர்க்க முரண்பாடு எனலாம்.

போர் முறை அடையாளங்கள்
குறிப்பாக பண்டையத் தமிழகப் போர் முறைகளில் போரின் துவக்கம் முதல் வெற்றி எரை போர் நிகழ்வை வெளிப்படுத்தும் அடையாளங்களாய் பூக்கள் இருந்துள்ளன.

குறிஞ்சி நிலம்
இந்நிலத்தின் மிக முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பு ஆகும். “செழிப்பான புல்வெளி பிரதேசங்களில் வசித்தக் குடிகள் பயிர்ச் சாகுபடியையும், வேட்டையாடுதலையும் கவிட்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாயினர்” (ப. 34, லெவ் லியோன்டியேவ்) இத்தகைய தன்மையுடைய நிலமாய் குறிஞ்சி நிலம் நிலவியிருக்கிறது.

குறிஞ்சி நிலப் போருக்கான காரணங்கள்
“பண்டைக் காலத்தில் ஒரு நாட்டின் செல்வம் ஆநிரைகளாக அமைந்தன. ஆதலின் பகைவர் நாட்டின் ஆநிரைகளை கவர்ந்து கொள்வதன் வாயிலாக தனது நாட்டின் செல்வத்தைப் பெருக்க முடியும் என்று பண்டைய வேந்தர்கள் எண்ணினர்” (ப. 50, சோ.ந. கந்தசாமி) என்பதன் வாயிலாக மிகச் சிறந்த செல்வமாக குறிஞ்சி நிலத்தினில் ஆநிரைகள் இருந்துள்ளன.

“அரசு என்ற நிறுவனம் வேரூன்றுவதற்கு முன்பு குறுநிலத் தலைவர்கள், மறவர்கள் முதலியோர் அயலார்க்குரிய ஆநிரைகளைக் கவர்ந்தனர் என்பதும், இப்பழக்கம் அரசு நிலைப் பெற்ற பின்னரும் தொடர்ந்திருத்தல் வேண்டும்” (ப. 66, சோ.ந. கந்தசாமி) என்பதும் நோக்கத்தக்கதாகும்.

குறிஞ்சி நிலப் போர்கள்
1.ஆநிரை கவர்தல் (வெட்சி) 2. ஆநிரை மீட்டல் (கரந்தை) 
1.ஆநிரை கவர்தல்

ஆநிரைகளைக் கவர்தலில் ஈடுபடும் பிரிவினர் வெட்சிப் பூ சூடுவது மரபாக இருந்துள்ளது.
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே” (தொல். புறம். 59: 3)

என்று தொல்காப்பியம் வெட்சி குறிஞ்சி திணைக்கு புறனாகும் என்கிறார்.

1.1.குறிஞ்சி நிலப் போரின் பொது இலக்கணம்
“வேந்து விடு முனைஞர் வேற்றுப்புல களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” (தொல். புறம். 60)

“வேந்தனால் விடப்பட்ட முனை ஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக் கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலைமை உடைத்து” (ப. 75, தொல். இளம்.) என்பது வேந்தனால் ஏவப்பட்டப் படைப் பிரிவினர் வேற்று நாட்டினர் யாரும் அறியா வண்ணம் ஆநிரைகளை கவர்ந்து வந்து பாதுகாப்பர் என்பதை அறிய முடிகிறது.

1.2.குறிஞ்சி நிலப் போரில் நிகழும் செயல்பாட்டு முறைகள்
“படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புரடகெட
…………………………………………….
…………………………………………….
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்” (தொல். புறம். 61)

ஆநிரைகளை கவர்தல் பொருட்டு படையானது ஆராவாரத்துடன் வெற்றி குறித்து நற்சொல் கேட்டு, பகை மன்னரின் ஒற்றர்கள் அறியாவண்ணம், தமது ஒற்றல்களால் ஒற்றறிந்து பகை நாட்டினை முற்றுகையிடுவர்.

பகை நாட்டில் அவ்வூராரைக்  கொன்று ஆநிரைகளைக் கைப்பற்றி, ஆநிரைகளை ஓட்டி வரவும், எதிர் படையினர் அவர்களை நோக்கி வர, அவர்களை விரட்டியடிப்பர். பின்னர், ஆநிரைகளுக்கு துன்பம் நேராது தமது ஊருக்கு ஓட்டிக் கொண்டு வந்து மகிழ்ந்து ஆநிரைகளை நிறுத்திப் பங்கிட்டுக் கொள்வர். ஊரிலுள்ள மற்றவர்களுக்கும் ஆநிரைகளை கொடுத்து இறுதியாக கள்ளுண்டு மகிழ்வர்.

பின்னர், கொற்றவையை வணங்குவர் (தொல். புறம். நூ. 62 –ன் கருத்து) இதுவே ஆநிரை கவர்தல்  பாருட்டு நிகழும் போர் முறைகள் என தொல்காப்பிய இலக்கணம் குறிப்பிடுகிறது.

ஆநிரைகளை இழந்த எதிர்ப்படை போர்த்தொடுத்தல்

ஆநிரைகளைப் பறிக்கொடுத்த எதிர்ப்படை அதனை மீட்டல்  பொருட்டும் வெற்றி  பெறும் பொருட்டும் போர் நிகழும். இதனை ‘கரந்தைத் துறை’ என்பர்.

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை
………………………………………
…………………………………….
இருமூன்று மரபில் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே”  (தொல். புறம். 63)

வெளி ஆடுதலின் சிறப்பினை உடைய வெவ்வாய் வேலன் வெறியாடுதலின் போது காந்தளை அணிந்திருப்பான். அத்தகைய சிறப்பிற்குரிய கடவுளை வணங்கி, படையின் மாறுபாடு காண ‘கரந்தை பூ’ சூடி வளள்ளி கூத்து, வீரக்கழல் கூத்து ஆகியன ஆடி, உன்ன மரத்தின் நிமித்தம் பார்த்து ஒப்பிட்டு, திருமாலின் புகழினை அரசன் நிலையோடு சார்த்திக் கூறி ஆநிரைகளை மீட்கும் போரில் பகைவர்களை வென்று நிரை கவராதபடித் தடுப்பர்.

ஆநிரைகளைப் பகைவரிடமிருந்து மீட்டு, வேந்தனின் சிறப்பினைக் கூறி, அப்போரில் தனியொருவனாய் நின்று பகைவர்களை எதிர்த்தவர்களின் சிறப்பைக் கூறி, அவ்வீரனுக்குப்  பிள்ளையாட்டும், போரிட்டு முன்னின்று எதிர்த்த வீரனுக்குப் பரிசளிப்பது, பாராட்டுவது, போரில் இறந்தவர்களுக்கு கல்லெடுத்து, நடுகல் வழிபாடு மேற்கொள்வது போன்ற 21 நிலைகளில் இப்போர் முறை நிகழும் என்பதை தொல்காப்பிய இலக்கணம் விளக்குகிறது.

“ஆநிரைக் கவர்தலைப் போலவே, மீட்டல் தொழிலும் வெட்சிக்குரிய குறிஞ்சி நிலத்தில் தான் நடைபெறுகிறது” (ப. 71, சோ.ந.கந்தசாமி).

பல்லவர் காலத்துக் கல்வெட்டுக்கள் பலவற்றில் (கி.பி. 600 – 900) வெட்சி, கரந்தை வீரர்களின் மறச் செயல்களும், வீரமரணத்தைப் பற்றியும் குறிக்கப் பெற்றுள்ளன. இறந்தவர்களுக்கான நடுகல் வழிபாட்டு முறை சங்க இலக்கிய நூல்களில் (புறம். 260, 263, 329, 365, …) பல இடங்களில் காணப்படுகின்றன.

இறைவனையும், சிறந்தப் போர் வீரனையும், போற்றிப் புகழ்ந்து பாடும் கூத்து முறை மரபு, இப்போர் முறையில் கலை வடிவம் பெற்று “கூத்து கலை மரபு” உருவாகியிருக்கிறது என்பதும் புலனாகிறது.
இப்போரில் மன்னர் அமைப்பின் முழு வளர்ச்சித் தெரியவில்லை. வெட்சிப் படைகள் ஆநிரைகளை கவர்ந்து, ஊரில் நிறுதிதி எல்லோரும் சமமாகப் பங்கிடுவது, ஊரிலுள்ள எனையோர்க்கு கொடுப்பது (கொடை) ஆராயத்தக்கதாகும்.
குறிஞ்சி நிலத்தில் வாழ்வாதாரத்திற்கானவை ஆநிரைகளாக இருந்துள்ளன. இதுவே மிக முக்கிய செல்வமாகவும் இருந்துள்ளது. ஆநிரைகளை ஒரு படை கைப்பற்றுவதும், மற்றொரு படை அதனை மீட்பதுமான போர்களே இங்கு நிகழ்ந்துள்ளது.
முல்லை நிலம் (காடும், காடு சார்ந்த பகுதிகளும்)

எழில் மிகுந்த காட்டு வள சிறப்புடைய நிலப் பகுதி, இயற்கையை எதிர்த்து வாழ்வியலை தொடங்கிய பகுதி எனலாம். மலைக் குகைகளில் மனித இனம் தங்கி, உணவுக்காக காட்டை நோக்கி நகர்ந்து வாழ்வை மேற்கொண்டனர். இம்மனிதர்கள் இயற்கையோடு கடும் போராட்டத்தை சந்தித்தனர். கற்கள், கம்புகளோடு வேட்டையாடுதலையே மிக முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.

அதன் பின்னர், பயிர் சாகுபடி முறையை தொடங்கிய முதல் நிலப்பகுதி முல்லை நிலமே எனலாம். வேட்டைத் தொழில் முதன்மையாக இருந்ததாலும், பயிர் சாகுபடி முறையை தொடங்கி காட்டை அழித்து கழனியாக்கினர். இக்கால மன்னர் சமுதாயத்தில் மண் ஆசை காரணமாக இரு பெரும் வேந்தர்களுக்கும் போர்கள் நிகழ்ந்துள்ளன. இதனை முல்லைத்திணை வாயிலாக அறிய முடியும்.

முல்லை நிலப் போரின் பொது இலக்கணம்
இதனை வஞ்சித் திணை என தொல்காப்பியம் கூறுகிறது.
“வஞ்சி தானே முல்லையது புறனே 
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் 
அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித் தன்றே” (தொல். புறம். 64)

வஞ்சித் திணை முல்லை நிலத்திற்குப் புறனாக அமைகிறது. மண் ஆசை காரணமாக வேந்தன் ஒருவன் மற்றொரு வேந்தன் அஞ்சுமாறு போர் புரிந்து அழித்தல் என்று இவ்விலக்கணம் உணர்த்துகிறது. 

முல்லை நிலப் போரில் நிகழும் செயல்பாட்டு முறைகள்
இப்போர் முறைகள் 13 செயல்பாட்டு அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
“இயங்கு படை அரவம் எரிபரந் தெடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
……………………………………
……………………………………
அழிபடை தட்டோர் தழிஞ்சியோடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே”  (தொல். புறம். 65)

படையானது போரொலியுடன் எழுந்து, எதிர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துதலும், விளக்கம் எய்திய படையின் பெருமையும், கொடைத் தன்மையும், பகைவர்களைக் கொன்ற வெற்றியும், வேந்தனால் சிறப்பெய்திய வீரன் தானே புகழ்ந்துக் கொள்ளுதலும், பகைவரைப் பொருளாக மதியாது செலுத்திய பேராண்மை நிலையும், விசை கொண்டு வரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவன் தாங்கிய நிலையும்.

திரட்சிப் பொருந்திய பெருஞ்சோற்று நிலையும், வென்றோர் பக்கம் உள்ள விளக்கமும், தோற்றோர் பக்கம் தோய்வு கூறுதலும்,  காற்றவையை புகழ்ந்து வெற்றிச் சிறப்பினைப் பாடும் கொள்ளவள்ளைப் பாட்டும் (கொற்றவள்ளை-தோற்றக் கொற்றவன் அளிக்கும் திறை. இளம். ப. 93:புறம். 284).

எதிர்ப் படையினர் தம் படையாளரின் மீது ஏவப்பட்ட அம்பு, வேல் முதலியனப்பட்டு அழிந்தவர்களையும் தாம் (வேந்தர்) நேரில் சென்று பொரு கொடுத்து வினாவுதல், தழுவிக் கொள்ளுதல் ஆகிய மிகப் பெருஞ் சிறப்பினையுடையவாகிய 13 துறைகள் வஞ்சித் திணைக்குரியதாகும். 

இதன் மூலம் இரு படை நிகழ்வுகளும் விளக்கப்படுகின்றன. வேற்றுப் படையினர் விடும் படைக் கருவிகளை தம்பால் தடுத்து புண்பட்டுக் கிடந்த வீரனைத் தழுவிக் கொள்ளுதல் (தழிஞ்சி) சிறப்பிற்குரியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்) - பா.பிரபு
Permalink  
 


எதிர்ப் படையால் வீழ்த்தப்பட்டு ஆழிவுற்றவர்களை நேரில் சென்று  ஆறுதல் கூறி, பொருட்கள் தந்து வினாவித் தழுவிக் கொள்ளுதல் முறையும் இப்போர் முறையில் நிகழ்ந்திருக்கிறது. பெருஞ்சோற்று நிலையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு அமைந்த போர் முறை முல்லை நிலப் பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.

இப்போர் முறை படையெடுத்துச் சென்ற வேந்தனின் வெற்றியை குறிப்பிடுகின்றது.

மருத நிலம் (வயலும் வயல் சார்ந்த இடமும்)
மனித சமுதாயத்தின் மாபெரும் வளர்ச்சிக்கான தளமாக மருத நிலம் அமைந்திருந்தது. விவசாய உற்பத்தி உறவு செழுமையடைந்த கைவினை, தொழில் நுட்பம் பெருகிய, கோட்டை கொத்தளங்களும் உடைய நிலப் பகதியாய் உழைப்பின் பரிணாமம் மேம்பட்டிருந்தன.

“விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிக்கப்பட்டது. இரண்டாவதாக பெரிய உழைப்புப் பிரிவினையாகும். இதனால் பண்டமாற்றக்கு விரிவான அடித்தளம் தோற்றுவிக்கப்பட்டது. கைவினைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் யாவும், அல்லது அனேகமாய் யாவும் பரிவர்த்தனை (Exchange) செய்யப்பட்டன.” (ப. 34, லெவ் லியோண்டியெவ்)
என்ற கூற்றிற்கு ஏற்ப மனித சமுதாய வளர்ச்சிப் படிநிலையில் உற்பத்திக் கருவிகள் உற்பத்தி உறவுகள் மாறுபடத் தொடங்கின. பண்டமாற்று முறைகள் விரிவடைந்தன. இச்சூழலில் பொருளுற்பத்தியின் தேவை பெருக, மக்கள் மீது மன்னர் சமுதாயம் உழைப்பை திணித்தன.

இந்நிலவுடைமை பகுதியில் பொருள் குவிப்பும் செல்வ மிகுதியாலும் வேந்தர்களுக்கிடையே முரண்பாடு தோன்றி செல்வத்தைக் கவர்தல் பொருட்டு போர்கள் பல நிகழ்ந்துள்ளன.

மருத நில போரின் பொது இலக்கணம்
“உழிஞை தானே மருதத்துப் புறனே
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப” (தொல். புறம். 66)

உழிஞைத் துறை மருத நிலத்திற்க புறனாக அமைகிறது என்பறும், ஒரு வேந்தனை எதிர்த்து அவன் மதிலை முற்றுகையிடுதலும், இருந்த வேந்தன் விட்டுக் கொடுக்காமல் காத்தலும் ஆகிய இரு நிலைமைகளை உள்ளடக்கியது மருத நிலத்தில் நிகழும் போர் மரபு என்று கூறுவர் என்பது இந்நற்பாக் கூறம் விளக்கமாகும்.

“மதிலை வளைப்பது, முற்றுகையிடும் போர்த் தொழிலுக்கு உழிஞை என்பது ஒரு குறியீடு. முற்றுகையிடும் வேந்தனைப் புறத்தோன் என்பர். மதிலைக் காக்கும் பொருட்டு உள்ளிருந்து போர் புரிபவனை நொச்சி வேந்தன் என்றும், அகத்தோன் என்றும் சுட்டுதல் புறத்திணை மரபாகும்.” (ப. 163, சோ.ந.கந்தசாமி).

மருத நிலப் போரில் நிகழும் செயல்பாடுகள்
இப்போரில் 21 துறைகள் அமைந்துள்ளன. இவற்றில் முதலில் கூறப்படுகிற திணைத்துறை 8 ஆகும். இவற்றில் 1 மட்டும் நொச்சித் திணைக்கு உரியதாகும்.
“கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
…………………………………………..
…………………………………………..
சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே” (தொல். புறம். 68)

வேந்தனை மதியாமலும், அவனது ஆணையை இகழ்ந்தும் நிற்கும் வேந்தனை எதிர்த்து, நினைத்ததை முடிப்பேன் எனக் கூறம் வேந்தனது சிறப்பும், தொன்மையான மதிலைச் சுற்றி உழிஞை வீரர்கள் பரவி நிற்றலும், தோல் படையினது பெருமையும் ஆகிய நிகழ்வுகள் உழிஞைத் திணைக்கண் நிகழும்.

செல்வ மிகுதியோடு இருக்கும் அகத்தோனாகிய (நொச்சி வேந்தன்) வேந்தன் சிறப்பும், அவ்வேந்தனின் போர்த் தொழிலால் வருந்திய நிலையும், பகை வீரர்கள் பலரையும் தான் ஒருவனாக நின்று எதிர்த்துப் போரிடும் மறவரின் பேராற்றலையும் மதில் சுவரில் உள்ளிருக்கும் (நொச்சியான்) நிலையினையும் இந்நூற்பா எடுத்தியம்புகிறது.

மதிலின் உள்ளே இருந்தவன் தம் மதில் அழியத் தொடங்கியதும், புறத்தே உள்ளவனுடன் தான் ஒருவனே தனியாக போர் செய்யும் (குற்றுழிஞை) நிலையும், வெகுண்டு வருகின்ற புறத்தோராகிய நொச்சி வீரர்களின் வருகையினை ஒரு பொருட்டாக மதியாது அகத்தோராகிய நொச்சி வீரர்களின் மதிலரனின் மாண்புக் கூறுதல் உட்பட்ட மேற்கூறிய செயல்பாடுகளை உள்ளடக்கியது.

உழிஞைக்கு கூறும் மேலும் பல துறைகள்
“குடையும் வாளும் நாள்கோள் தோன்றி
மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச்
…………………………………………..
………………………………………….
தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப” (தொல். புறம். 69)

நாள்மீன்களையும், கோள் மீன்களையும் ஆராய்ந்து நட்பு, ஆட்சி, உச்சம், பெற்ற ஓரையில் நல்ல நட்சத்திரத்தில் தனது கொற்றக் குடையினையும் வெற்றி வாளையும் உழிஞை வேந்தன் போர்முனை நோக்கி செலுத்துவான்.
மதிலின் மீது நன்குப் பொருந்துமாறு அமைந்த ஏணியின் மீது ஏறி நின்று, அகத்தோனும் புறத்தோனம் போர் செய்வதும், உழிஞையர் தம் படையைச் செலுத்திப் புறத்திற் போரிடலன்றி, நொச்சியர் படையை வென்று புறமதிலைக் கைக் கொண்டு உள்ளே உள்ள மதிலையும் வளைத்த வினை முதிர்ச்சியும், முற்றுகைக்குட்பட்ட அகத்திலுள்ளோன் வீழ்ந்த நொச்சியு, மாறுபாடாக நொச்சியின் புறத்தே உழிஞையான் வீழ்ந்த புதுமையும், கிடங்கின்கண் உளதாகிய போரில் வீழ்ந்தப் பாசியும், ஊரின் நடுவே நடைபெறும் போரினை விரும்பிய பாசி மறனம்,

மதிலின் மீது ஏறி நின்று போர் செய்வதற்குப் பரந்து சென்றோரின் நிலையும், மதிற் போரில் ஒருவனை ஒருவன் கொன்ற, அவன் முடிக்கலம் முதலியன கெசாண்டு இறந்துபட்டவன் பெயராலே முடிபுனைந்து நீராடும் மங்கலமும், வெற்றி பெறுவதற்குப் பயன்பட்ட கருவியான வாளினை மண்ணு மங்கலம் பொருந்த வாளினை நீராட்டுதலும்,

“தொகைநிலை” – (1) “உழிஞையர் மதிலழித்தமையால் மற்றுமுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிழ்ந்தபடியடைதல்” (இளம். 264) (2) “வாளுக்கு நீராட்டியப் பின்னர் வென்றவன் படைகட்கெல்லாம் சிறப்பு செய்தற் பொருட்டு ஒருங்கு வருவனத் தொகுத்தல்” (புலியூர்கேசிகன், ப. 300) ஆகிய மேலும் 12 வகை நிலைகள் மருத நில போர் செயல்பாடுகள் ஆகும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இதன்மூலம் “மாற்று வேந்தனின் மதிலை அழித்து செல்வத்தைக் கவர்தல், முற்றுகையிட்டு வெற்றி பெறுதல் ஆகியன முதன்மை நோக்காக கொண்டு இப்போர் முறையில் நிகழ்ந்துள்ளது.
வேந்தர்களின் தலைநகராய் விளங்கியப் பகுதியில் மதிற்சுவரமைந்த கோட்டைகள் அமைந்திருந்தன. நாட்டின் செல்வம் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் இவை இருந்துள்ளன.

“மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம்” என்பது வெற்றியை சொல்வது மட்டுமின்றி மதிலைப் பெறுவதோடு, அப்பகை மன்னனின் முடிகலத்தைப் பெறுதலை சுட்டுகிறது என்றும், இகல் செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிகலம் முதலியவற்றை வென்ற வீழ்ந்த வேந்தனின் பெயராலேயே முடிபுனைந்து நீராடும் மங்கல நிகழ்ச்சியையும் இத்துறை சுட்டுகிறது” எனக் கூறும் இளம்பூரணர் கருத்து நோக்கத்தக்கதாகும். இது திறத்தாருக்கும் பொதுவானது என்றும் கூறுவர். இப்போர் உழிஞைத் திணையினரின் வெற்றிச் சிறப்பினையே பெரும்பகுதி சுட்டுகிறது.

நெய்தல் நிலம் (மணலும் மணல் சார்ந்தப் பகுதியும்)
கடல் சார்ந்த மணல் நில வாழ்வியல் முறை முற்றிலும் மாறுபட்டதாகும். மீன் பிடித்தலும், உப்புத் தயாரித்தலும் முதன்மை தொழில்களாக இந்நிலப் பகுதியில் அமைந்துள்ளன. பண்டமாற்று முறை செழிப்புற அமைந்த பகுதியாய் பின்னர் நெய்தல் நிலமே அமைந்தது. இதற்கு உதாரணம் அகழ்வாய்வின் வழி ஆராய்ந்த காவிரிப்பூம்பட்டினமே.

நெய்தல் நிலப் போரின் இலக்கணம்
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் 
சென்றதலை அழிக்கும் சிறப்பிற் றென்ப” (தொல். புறம். 70)

தும்பைத் திணையானது நெய்தல் நிலத்திற்க புறனாக அமையும். மைந்து பொருளாகப் படையெடுத்து வந்த வேந்தனை அழிக்கும் சிறப்புடைய தன்மையுடையது தும்பைத்திணை என்பர் உரையாசிரியர்கள்.
மேலும் உரையாசிரியர்கள் இப்போரை ஏனைய மூன்று நிலத்துப் போர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். (1) வெட்சித்திணைப் புறத்துப் பிறந்த தும்பைத் திணை. (2) வஞ்சி புறத்துத் தும்பை. (3) உழிஞை புறத்துத் தும்பை ஆகியனவாம்.

நெய்தல் நிலப் போரின்  சிறப்பியல்புகள்
நெய்தல் நிலப் போரின் சிறப்பாய் தொல்காப்பியம் குறிப்பிடுகிற காட்சி மிகக் கொடுமையான காட்சியாகும். அவை,
“கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் 
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே” (தொல். புறம். 71)

பகைவரால் எறியப்பட்ட அம்பும், வேலும் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து பாய்தலால் உயிர்போகிய மறவனின் உடலானது, தனது மறப் பண்பினால் பூமியில் விழாது, அட்டையானது (நீர் வாழ் உயிரி தனது உடல் இரண்டும் கூறுபட்ட விடத்தும் இயங்குவது போல நின்று ஆடிய ஒப்பற்ற சிறப்புடைய இலக்கணத்தை உடையது என்பது உரையாசிரியர்கள் கருத்தாகும்.

நெய்தல் நில போரின் செயல்பாடுகள்
இந்நிலப் போர் நிகழ்வுகளை 12 செயல்பாடுகளில் தொல்காப்பியம் விளக்குகின்றது.
“தானை யானை குதிரை என்ற
………………………………
……………………………...
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்” (தொல். புறம். 72: 1-4)

பகைவர்கள் அஞ்சும்படியான காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என்னும் முப்படை நிலையும், வேற்போரில்  மிக்கு நின்ற வேந்தனை பகைவர் பலர் வளைத்துக்  கொண்ட போது, அரசுக்குத் துணையுடையவன் ஒருவன் தன் செயலை விட்டுவிட்டு வேந்தன் மாட்டு விரைந்து சென்று பகைவரின் வேல்களை வீசியெறிகிற நிலையும் (தார்நிலை), இருபக்கத்துக் தலைவர்களும் தம்முள் போரிட்டு இறந்துபடுகிற நிலையும், ஒருவன் மற்றொருவனை படையின் முன் புகுந்து நின்று எதிர்த்த நிலையும், மறவனின் கையிலுள்ள படைக் கருவிகள் தீர்ந்தவிடத்து உடல் வலிமையினாலே போரிடும் நிலையும்,

யானையில் வரும் பகைவனை எதிர்த்துக் கொன்று, அவனுடன் போரிடும் படை மறவர்களின் பெருமையான நிலையும், யானையுடன் இறந்து போன பகை வேந்தனை வென்ற வேந்தனின் மறவர்கள் குழுமி நின்று ஆடும் ஆட்டமும், வாள் போர் முற்றி இருபெரு வேந்தரும் தாமும் தம் படையும் அழிந்த நிலையும்,

“செருவகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ
……………………………………………
…………………………………………...
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே” (தொல். புறம். 72: 5-9)

போரில் தன் தலைவன் பகைவரின் வஞ்சகத்தாலி கொல்லப்பட்டான் என்று சினந்து போரிட்டு புகழ் பெற்ற நிலையும், வஞ்சகத்தால் கொல்லப்பட்டான் தன் தலைவன் எனக் கருதி பலரையும் வெட்டி வீழ்த்திய தன்மையும் ஆகியன உட்பட 12 துறைகளை (செயல்களை) உள்ளடக்கியது தும்பைத் திணைக்கண் நிகழும், நெய்தல் நில போர் முறையாகும்.

இதில் நெய்தல் நில வேந்தனின் படைச் சிறப்பும், வீரச் சிறப்பும், இப்போரில் நெய்தல் நில வேந்தன் வஞ்சகத்தால் கொல்லப்படுகிறான் எனும் செய்தியையும் தொல்காப்பியம் குறிப்பாக வெளிப்படுத்தியுள்ளன.
படை மறவர்களில் சிறப்பாய் தனியொருவனாய் எதிர்த்து நின்ற பெருமையும், இருபடைத் தலவர்களும் மரணம் எய்திய நிலையையும், வேந்தன் வஞ்சகத்தால்  காலைக்களத்தில் கொலையுண்டு கிடக்க கோபம் கொண்ட மறவர்கள்  எதிர் படையில் உள்ள பலரையும் வெட்டி சாய்க்கின்ற நிலையினையும் நெய்தல் நிலப் போரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவுரை
பண்டைய தமிழகம் மன்னர் சமுதாய கட்டமைப்பு முறையோடு தெளிவாக நிலை கொண்டிருந்தது. இக்கால சூழலில் வேந்தர்களுக்கிடையேயான முரண்பாடுகள் பல போர்களை தோற்றுவித்தன என்பதை அறிய முடிகிறது.
ஒவ்வொரு நிலப் பகுதிகளிலும் வெவ்வேறு விதமான போர் முறைகள் நிகழ்ந்துள்ளன. குறிஞ்சி நிலப் போரில் ஆநிரைகளை கவர்ந்து வெற்றி பெறுகின்ற வேந்தன் சிறப்பும், அதனை மீட்டு பெருமை கொள்ளும் வேந்தன் சிறப்புமாக இருபெரும் வேந்தரின் வெற்றி சிறப்பினை உணர்த்துகிறது. முல்லை நிலப் போரில் மண் ஆசைக் காரணமாக படையெடுத்துச் சென்ற வேந்தனின் சிறப்பையே பெரும்பகுதி குறிப்பிடுகின்றது. மருத நிலப் போரில் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற வேந்தனின் சிறப்பையே பெரும்பகுதி வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலப் போரில் நெய்தல் நில வேந்தனின் சிறப்பு, அவன் படைச் சிறப்பு முதன்மையாக் கூறி பின்னர் படையெடுத்து வந்த வேந்தனின் வஞ்சகத்தால் நெய்தல் நில வேந்தன் கொல்லப்படுகிறான் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய போர் நிகழ்வுகளின் மூலம் குறிஞ்சி நிலப் பகுதியில் இரு பெரு வேந்தரும் வெற்றி பெற்றதாகவும், முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப் பகுதிகளில் படையெடுத்துச் சென்ற வேந்தனே வெற்றி பெற்றுள்ளதாகவும் தொல்காபிய இலக்கணம் வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது. இத்தகைய தொடக்க கால போர் முறைகளின் வழி தொன்மை சமுதாயமாய் தமிழகம் நிலவியிருந்ததும், பொருளுற்பத்தி பெருகி வளர்ச்சி பெற்ற சமுதாயமாக நிலை கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. மேலும் தொடக்க கால மனித வரலாற்று பின்புலங்கள் தமிழக நிலப் பகுதியில் நிலவியிருக்கலாம் என்பதையும் உணர முடிகிறது. இத்தகைய போர் முறைகள் அதிகாரத்தை நிலை நிறுத்தவும் செல்வங்களைப் பெருக்கவும், அதிகார வர்க்கத்தில் உள்ளோர் பலனைடையவுமே நிகழ்ந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இச்செயல்பாட்டினை மையமாகக் கொண்டே அன்று முதல் இன்று வரை நிகழ்ந்து வருகின்ற போர்கள் அனைத்தும் இவ்வாறாகவே, இக்காரணத்தின் அடிப்படையிலேயே அமைந்து வருகின்றன என்பதே போர் முறைகளின் வரலாறு எனக் கருதலாம்.

சான்றெண் விளக்கம்
1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், மு.ப. 1953.
2. புவலியூர் கேசிகன் (உ.ஆ), தொல்காப்பியம்.
3. லென் லியேண்டியெவ், அரசியல் பொருளாதாரம், மு.ப. 1975.
4. சோ.ந. கந்தசாமி, புறத்திணை வாழ்வியல், 1994.
5. ஞா. மாணிக்கவாசகன், புறநானூறு, மு.ப. 1998.

baluprabhu777@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard