பண்டைய தமிழன் தன் வாழ்நாளில் கடைப்பிடித்த அறக்கருத்துகளை இலக்கியங்களில் பதித்து அளித்துள்ளான். அவ்அறக்கருத்துகளைக் கைக்கொண்டு வாழ்வோர் வாழ்வில் மேன்மை அடைவர். சமுதாயம் போற்றும் சான்றோராகவும் திகழ்வர். அவ்வகையில், நற்குணங்கள் குடிகொண்டுள்ள மனிதனாக வாழ்வதற்குக் குறுந்தொகை சில அறக்கருத்துகளை வழங்கியுள்ளது. அவற்றை இக்கட்டுரை விளம்புகிறது.

 அறச்செயல்

தாகமாய் இருப்போருக்குத் தண்ணீரும், பசித்திருப்போருக்கு உணவும் வழங்குவது சிறந்த அறமாகும். நீர் வேட்கையைத் தணிக்கும் இயல்பு கொண்டது நெல்லிக்கனி. இது பாலைநிலத்தைக் கடந்து செல்வோரின் நீர்வேட்கையைத் தணிப்பதனை,

ந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்            (குறுந்.209)

என்ற அடி கூறுகிறது. நெல்லியைப் போன்று மக்களும் பிறருக்குப் பயன்தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதை இவ்வடி புலப்படுத்துகிறது. மேலும் பசித்திருக்கும் தன் பிள்ளைக்கு ஊட்டியபின் எஞ்சியவற்றைத் தான் உண்ணலே அறம் (குறுந். 213) என்ற கருத்தும் குறுந்தொகையில் இடம்பெறுகிறது.

ஈகை

இவ்வுலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழியும் தன்மை கொண்டன. நிலையாமை மட்டுமே நிலைத்து நிற்கும். கால வெள்ளத்தில் அழிந்துபடாமல் தம் பெயர் சரித்திரத்தில் இடம்பெற அரிய பல செயல்களை மக்கள் செய்வர். அழியாத புகழினைப் பெற விரும்புவோர் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் ஈவர். அப்பொருளும் ஈட்டியவன்பால் நிற்காமல் வறியவன்பால் செல்லும். பொருள் ஈந்தவனின் புகழும் நிலைத்து நிற்கும். இதனை,

 நில்லா மையே நிலையிற் றாகலின்

                         நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

                         கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்

                         தங்குதற் குரிய தன்று           (குறுந்.143)

என்ற பாடல் கூறுகிறது. பாரி, ஓரி, ஆய் முதலான வள்ளல்களின் பெயர்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவர்களின் ஈகையால் உண்டான புகழேயாகும். புகழன்றி இவ்வுலகில் இறவாது நிற்பது வேறில்லை என்பதனை,

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

                        பொன்றாது நிற்பதொன்று இல்      (குறள். 233)

எனும் குறளும் எடுத்துரைக்கிறது.

நன்மொழி கூறல்

பிறருக்கு நன்மொழிகளைக் கூறுவதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதனை, நல்மொழிக்கு அச்சம் இல்லை (குறுந்.392) என்று பதிவு செய்கிறார் தும்பிசேர் கீரனார். இதற்கிணங்க, பிறருக்கு அறிவுரை கூறும்முகத்தான் பாடல்கள் அமைந்துள்ளன. தலைவியுடன் இருந்த காலத்தில் அவளின் அமுதம் போன்ற மொழிகளும் குணமும் தலைவனுக்கு இன்பத்தைப் பயந்தன. காமமுடையோர்க்குப் பிரிவு என்பது இல்லாமல் உடனுறையும் பேறு பெற்றால் மகிழ்ச்சி உண்டாகும். எஞ்ஞான்றும் பிரிவின்றி உடனுறைதல் இவ்வுலகில் அரிதானதாகும். அங்ஙனம் பிரிந்தவிடத்து, முன்னர் இன்பம் தந்த அனைத்தும் துன்பத்தைத் தருவதாக அமையும். ஆகவே, அறிவுடையோர் காமநெறியின்பால் சாராமை நன்று என்பதனை,

 அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி

                         அன்ன வினியோள் குணனு மின்ன

                         இன்னா வரும்படர் செய்யு மாயின்

                         உடனுறை வரிதே காமம்;

                         குறுக லோம்புமி னறிவுடை யீரே  (குறுந்.206)

எனும் பாடலில் தனது பட்டறிவினைத் தலைவன் வெளிப்படுத்துகிறான்.

ஒருவன் செய்யும் நன்மை சிறிதாயினும் அச்சிறுநன்மை செய்தவரையும் போற்றுதல் வேண்டும். அங்ஙனம் போற்றுதலே உயரிய குணம் (குறுந்.115) என்று தோழி தலைவனிடத்து மொழிகிறாள். தினை அளவினதாகிய உதவி ஒருவர் செய்யினும் அதன் அருமை அறிந்தவர்கள் அதனைப் பனை அளவினதாகக் கருதுவர் என்பதனை,

  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

                         கொள்வர் பயன்தெரி வார்  (குறள்.104)

என வள்ளுவமும் கூறுகிறது.

நடுவுநிலைமை தவறாமை

குற்றத்திற்குத் தீர்ப்பு வழங்குவோர் நடுநிலைமையோடு நின்று தீர்ப்பு வழங்க வேண்டும். தராசு முள்போல் யார் பக்கமும் சாய்ந்திடாமல் இவர் வேண்டியவர், வேண்டாதவர், உற்றார், உறவினர், நண்பர் என்று பாராமல் உண்மையை ஆய்ந்து தீர்ப்பு வழங்கிட வேண்டும். இந்நடுநிலைமையை உணர்த்தும் பாடல்கள் குறுந்தொகையில் காணப்பெறுகின்றன. இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என நலம்பாராட்டுகிறான் தலைவன். மேலும், தும்பியினை அழைத்து நீ அறியும் மலர்களில் இதனைப் போன்று நறுமணம் உள்ள மலர்களும் உள்ளனவோ? எனவும் கேட்கிறான். அவ்விடத்து, தனக்கு இன்பத்தைத் தருவதைப் பதிலாகக் கூறாமல் உண்மையை ஆய்ந்து அறிந்த ஒன்றினை விடையாகக் கூறு என்கிறான். இதனை,

  காமஞ் செப்பாது கண்டது மொழிமோ    (குறுந்.2)

எனும் பாடலடி உரைக்கிறது. வழக்குகளை விசாரிக்க அக்காலத்தில் அறங்கூறும் அவையமும் இருந்தது என்பதனை,

முறையுடை யரசன் செங்கோ லவையத்து  (குறுந்.276)

எனும் பாடல் புலப்படுத்துகிறது.