New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கபாலீஸ்வரரும் கடற்கரையும்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
கபாலீஸ்வரரும் கடற்கரையும்
Permalink  
 


உயர்ந்த இடங்களில் உயர்ந்த கோவில்கள்.

அண்மையில் “THE MADRAS TERCENTENARY COMMEMORATION VOLUME” (1939) எனும் நூலை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த நூலில் ‘’THE SITE AND SITUATION OF MADRAS”, எனும் கட்டுரையில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில், எழும்பூரில் உள்ள பெருமாள் திருக்கோவில், புரசைவாக்கத்திலுள்ள கங்காதரேஸ்வரர் திருக்கோவில், ஜார்ஜ் டவுனில் உள்ள கந்தசாமி திருக்கோவில் மற்றும் கட்சாலேஸ்வரர் திருக்கோவில் என சென்னையின் முக்கிய கோவில்கள் அனைத்தும் மணல் குன்றுகளில் அமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது. இந்தப் பகுதியில் கடல் பின்வாங்கியபோது விட்டுச் சென்ற BEACH RIDGES மற்றும் SAND DUNES (எக்கர்கள்) ஆகியவையே இந்த மணல் குன்றுகள்/ திட்டுகள் என்பதனை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சிதம்பரம் மற்றும் சீர்காழி கோவில்களும், அந்நாள் கடற்கரை மணல் முகடுகளிலேயே அமைந்துள்ளன என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்தப் பகுதிக்கான புவியமைப்பியல் வரைபடம் நம்மிடம் இருப்பதால் இங்குள்ள மற்ற தேவாரத் திருத்தலங்களையும் இந்த வரை படத்தில் குறித்துப் பார்த்தால் என்ன என்றெண்ணி, சிதம்பரம், சீர்காழியைத் தொடர்ந்து,திருநல்லூர்பெருமணம் (ஆச்சளாபுரம்), திருக்குருகாவூர், திருமுல்லைவாயில், திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கடைமுடி, பல்லவனேஸ்வரம் ஆகிய கோவில்களை வரைபடத்தில் குறித்தேன். இந்தப் பத்துத் திருத்தலங்களும் கடற்கரை மணல் முகடுகளிலேயே அமைந்துள்ளன என்பதை வரை படம் தெளிவாகக் காட்டியது.

No automatic alt text available.

இந்தக் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், அவற்றை சுற்றியுள்ள இடங்களைவிட சுமார் 4 – 6 மீ. அதிக உயரத்தில் இருப்பதை கூகுள் எர்த் பதிமங்களும் காட்டுகின்றன.

மேற்சொன்ன அனைத்தும் காவிரி வடகரைத் தலங்கள். கடற்கரைக்கு அண்மையில் உள்ள தென்கரைத் தலங்கள் பற்றி நாம் இன்னும் பேசவில்லை. இந்தப் பகுதிக்கான புவியமைப்பியல் வரைபடமும் இன்னும் கிடைக்கவில்லை. பின்னர் பார்ப்போம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

வேலைசூழ் வெண்காடு : திருவெண்காடு

கடந்த பதிவில் கடற்கரையருகே இருந்த கலிக்காமூர் கண்டு களித்தோம். இதற்கு வடக்கேயுள்ள சீர்காழி, திருக்குருகாவூர், திருமுல்லைவாயில் எல்லாம் பார்த்தாயிற்று; தெற்கே திரும்பி திருவெண்காடு செல்வோம் வாருங்கள்.

40054225_2086064654745470_70292783085419

தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பட்ட பெருமைக்குரிய திருத்தலம் திருவெண்காடு. திருஞான சம்பந்தர் மூன்று பதிகங்களிலும் திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களிலும் சுந்தரர் ஒரு பதிகத்திலும் இந்தத் திருக்கோவில் பற்றி பாடியுள்ளனர். இவற்றுள் சில பாடல்களில் தேவார காலத்தில் இந்த ஊரின் பூகோள அமைப்புப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் சில இங்கே காண்போம். தேவாரப் பாடல்களுக்குள் புகும் முன், இன்றைய திருவெண்காடு கடற்கரையிலிருந்து ஐந்து கி.மீ. உள்ளே தள்ளி இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.

சம்பந்தரின் இந்தப் பாடலைப் பாருங்கள்

“வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்....”. 2 48 5

பொருள்: கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய...........
அடுத்து மூன்றாம் திருமுறையிலுள்ள சம்பதரின் மற்றுமொரு பாடல்,

“ஞாழலுஞ் செருந்தியு நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய........”. 3 15 4

பொருள்: புலிநகக் கொன்றையும் , செருந்தியும் , நறுமணமிக்க புன்னை மலர்களும் , தாழையும் , குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் ..........

தொடர்ந்து சம்பந்ததரை விடுத்து சுந்தரரிடம் செல்வோம். இவர் பாடிய திருவெண்காட்டுப் பதிகத்தில் ஏழாம் பாடல் தவிர மற்ற எல்லாப் பாடல்களும் “வேலை சூழ்வெண் காட னீரே” என்றுள்ள ஈற்றடி கொண்டே நிறைவுறுகின்றன.

எடுத்துக்காட்டிற்கு முதல்பாடலைப் பார்த்துவிட்டு பின் ஏழாம் பாடலுக்கு செல்லலாம்.

“மடங்க லானைச் செற்று கந்தீர்மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே...” 7 006 1

பொருள்: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து , பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி , .......

நிறைவாக ஏழாம் பாடலிலும் “வேலை சூழ்வெண் காடு” எனும் தொடர் உள்ளதைப் பார்க்கிறோம்.

“விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மை யாளர் வானு ளாரே.” 7 006 10

பொருள்: விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற , கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள , யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை , அவனுக்குத் தொண்டனும் , அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு .........

திருவெண்காட்டிற்கு மேற்கே ஒரு கி.மீ. க்கும் குறைவான தொலைவில் கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனும் தேவாரத் திருத்தலம் உள்ளது. இந்த ஊர் பதிகத்தில் கடற்கரை பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

ஆதலின், தேவார காலத்தில், திருவெண்காடு கடற்கரைக்கு வெகு அண்மையில் அமைந்திருந்தது என அறிய முடிகிறது.
இன்று இங்கிருந்து கடல் ஐந்து கி.மீ. கிழக்கே உள்ளது. 
என்ன ஆயிற்று.....



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 கடற்கரையா.......கபாலிக் கோவிலா .....

இடம் மாறியது எது ?

‘வங்கக் கடல் தந்த கொடை – சென்னை’ பதிவிற்கு நிறைய மறுமொழிகள் வந்துள்ளன. சில அன்பர்கள் தொடர்பிலும் வந்தார்கள். நன்றி.

“இன்று சாந்தோம் தேவாலயம் உள்ள இடத்தில்தான் அந்நாளில் மயிலை கோவில் இருந்தது. அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் தேவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது” என்று சில அன்பர்கள், சற்று கோபமாகவே, வாதிட்டார்கள். இந்தக் கருத்துக்கு ஆதரவாக அவர்கள் முன் வைக்கும் சான்றுகள்:

1. “தேவாரப் பதிகங்களும், திவ்யப் பிரபந்த பாசுரங்களும்,அருணகிரியார் பாடல்களும் கபாலிக் கோவில் கடற்கரையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றன. ஆனால் இன்றுள்ள கோவில் கடற்கரையிலிருந்து உள் தள்ளி இருக்கிறது. ஆதலால், அவர்கள் பாடிய கோவிலும் இப்போதுள்ள கோவிலும் ஒன்றல்ல; அவர்கள் பாடிய கோவில் கடற்கரையில் இருந்தது. அதை இடித்த்விட்டு அங்கே தேவாலயம் கட்டி விட்டார்கள். இப்போதுள்ள கோவில் பின்னாளில் கட்டப்பட்டது.”

இடம் மாறியது கடற்கரைதான்.......கபாலி கோவில் அல்ல என்பதனை அறிவியல் அடிப்படையிலான சான்றுகள் கொண்டு விரிவாக எழுதிவிட்டேன். மேலும் விரிக்கத் தேவையில்லை எனக் கருதுகிறேன்.

2. “தேவாலய சுற்று சுவர்கள் மயிலைக் கோவில் .கல்வெட்டுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளன”

சுற்று சுவர்களில் உள்ள கற்களில் கல்வெட்டுகள் இருக்கலாம், ஆனால் அவை மயிலைக் கோவிலை இடித்து எடுக்கப்பட்டவை என்பதாகு எந்த சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

No automatic alt text available.

 

 

 

 

 

 

 

 

திருக்கலிக்காமூர்

(கடற்கரையில் இருந்த கலிக்காமூர் – தேவாரம் காட்டும் பூகோளம்)

கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, அரிசிலாறு, வெண்ணாறு என கடந்த சில நாட்களாக, ஆற்றங்கரையோரமாகவே இருந்து விட்டோம். சிறிது கிழக்கே சென்று, கடற்கரையோரம் காற்று வாங்கலாம் வாருங்கள்.

திருமுல்லைவாயிலிற்குத் தென்மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் திருக்கலிக்காமூர் என்று தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் ஒன்று உள்ளது. இந்தத் திருக்கோவிலில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் மூன்றாம் திருமுறையில் 105 ஆவது பதிகத்தில் உள்ளன.

இன்றைக்கு அன்னப்பன்பேட்டை எனும் பெயரில் அறியப்படும் திருக்கலிக்காமூர், தற்போது கடற்கரைக்கு மேற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. தேவார காலத்தில் இத்தலம் எப்படி இருந்தது என அறிய சம்பந்தரின் பதிகத்தைப் பார்க்கலாம்.

திருக்கலிக்காமூர் பதிகத்தில் ஆறு பாடல்களில் இந்த ஊரின் பூகோள அமைப்பு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

‘கலிக்காமூரை சுற்றி உப்பங்கழிகள் இருந்தன, கடற்கரையில் வளர்ந்தோங்கிய தாழைகள் இருந்தன. இந்தத் தாழம்பூவின் நறுமணம் அங்கே தென்றலில் கலந்து வீசியது, எந்நேரமும் கடலின் அலையோசை ஒலித்துக்கொண்டே இருந்தது’ என்று ஐந்து மற்றும் ஆறாம் பாடல்கள் சொல்கின்றன. இதோ பாடல்கள்

“வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்” ....(3 105 5)

பொருள்: வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும் , பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர்.......

"துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்....” (3 105 6)

பொருள்: கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு , மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற..........

திருஞான சம்பந்தர் இங்கு சென்றிருந்தபோது உயர் ஓத காலமோ என்னவோ தெரியவில்லை; ‘ வரை போல் திரை ‘, ‘குன்று போல் திரை’ என்று கலிக்காமூரில் வந்த கடலலைகளை வர்ணிக்கிறார். இதோ, கீழ் வரும் பாடல்களைப் பாருங்கள்.

“மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்....” (3 105 1)

பொருள்: பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும் , வயல்களும் சூழ , மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும்.........

“மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும் மிகுக்குங் கலிக்காமூர்.....” (3 105 2)

பொருள்: மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல் , கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற........ ,

“குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்....” (3 105 4)

பொருள்: குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும் , எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில்....

இங்கே சோலைகளும் இருந்தன, வயல் வெளிகளும் இருந்தன என்கிறது முதற்பாடல்.

நிறைவாக, எட்டாம் பாடல் கலிக்காமூரை கடல் சூழ்ந்திருந்த செய்தியை செப்பிச் செல்கிறது.

“ஊரர வந்தலை நீண்முடியா னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாங் கலிக்காமூர்.....” (3 105 8)

பொருள்: ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து , ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு , கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம்.......

இதுகாறும் நாம் கண்டவற்றால், தேவார காலத்தில் கலிக்காமூர் கடற்கரைக்கு அண்மையில் இருந்தது, அங்கே கடற்றாழைகள் இருந்தன, உப்பங்கழிகள் இருந்தன, மலைபோலும் குன்றுகள் போலும் அலைகள் வந்து மோதின, சோலைகளும், வயல் வெளிகளும் சூழ்ந்திருந்தன, என்பன போன்ற செய்திகளை அறிய முடிகிறது. இன்றைக்கு கலிக்காமூரிலிருந்து மூன்று கி.மீ. கிழக்கில் கடல் உள்ளது. தேவாரம் சொல்லும் செய்தி என்ன? 

 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

MADRAS

No automatic alt text available.

வங்கக் கடல் தந்த கொடை – சென்னை

சில அண்டுகளுக்கு முன் திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக் கோயில் சென்றேன். அங்கு திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகம் கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி,
“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”
இதில் வரும் கானல் எனும் சொல்லிற்கு “கடற்கரை சோலை” என்பதே பொருள். (சிலம்பில் வரும் “கானல் வரிகளை” நினைவு கூர்க). மயிலைக் கோவிலுக்கு அருகே கடற்கரை சோலைகள் ; ஆஹா.

அடுத்து மூன்றாம் பதிகத்தில் முதல் வரி
“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்”
ஊர்ந்து வரும் அலைகள் உலா செய்கின்ற மயிலை. அருமை.

சரி, போதும். கபாலியை விட்டு சாரதியிடம் போகலாம் என்று தேவாரத்தை விட்டு விட்டு ஆழ்வார்கள் பக்கம் சென்று திவ்ய பிரபந்தம் படித்தேன். திருமழிசை ஆழ்வாரின் பாசுரம் கண்ணில்பட்டது.

“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம் 
அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை 
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் 
திருவல்லிக்கேணியான் சென்று “
‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா
அல்லிக் கேணியான்’
என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

உயர் ஓததின்போது அலைகள் மயிலையிலும் திருவல்லிகேணியிலும் அலைகள் வந்து சென்றனவாம் , அவை முத்தும் பவழமும் கொண்டு வந்து சேர்த்தனவாம் .

இந்த தேவார , திவ்யப் பிரபந்த வரிகளை பார்க்கும் போது மயிலாப்பூரும் திருஅல்லிக்கேணியும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தொன்றுகிறதே. இன்றைக்கு மயிலையும் திருவல்லிக்கேணியும் கடற்கரையிலிருந்து முறையே 1.4 கி.மீ. மற்றும் 1 கி.மீ. தூரத்தில் உள்ளன. அப்படியென்றால் கடந்த 1200 ஆண்டுகளில் கடல் ஒன்று முதல் ஒன்றரை கி. மீ. பின் வாங்கியுள்ளதா.? ஆம் என்றே சொல்லத் தொன்றுகிறது.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் இளநிலை ஆய்வாளர் பணி தொடர்பாக கிண்டி பொறியியற் கல்லூரிக்கு (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) சென்றேன். அங்கே வடங்களை பதிப்பதற்காக அகழப்பட்ட நீள் குழிகளில் கருப்பு நிற களிமண் இருந்தது. அதில் வெண்மை நிறத்தில் புள்ளி புள்ளியாக ஏதோ இருந்தது. எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்த புவியியல் அறிஞர் ஆரோகியசாமி, “ இவை கிளிஞ்சல் துண்டுகள். பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடல் இருந்தது என்பதற்கு இது அடையாளம்” என்றார். மலைத்துப் போய்விட்டேன்.

அப்போது நான் இந்திய புவியியல் ஆய்வுத்துறையிலி ருந்து பணி ஆணைக்குக் காத்திருந்தேன். என்ன, அப்படியானால் கடல் இந்தப் பகுதியில் கி.மீ. பின் வாங்கிவிட்டதா , இதெல்லாம் எப்போது நடந்திருக்கும் போன்ற பல கேள்விகள் என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டன.

ஆண்டுகள் உருண்டோடின. வடநாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்ததும், கனவில் கடல் வந்தது. நாம் மேலே சொன்ன கடல் பின்வாங்கிய கதைகளை நிரூபிக்க வேண்டுமெனில், புராணம் படித்தால் போதாது. புவியியல் படிக்க வேண்டும்என எண்ணி GSI யின் நினைவேடுகளை (MEMOIRS) புரட்டினேன். 1870 களில் ROBERT BRUCE FOOTE அவர்கள் இந்தப்பகுதியில் தான் செய்த பணியைப் பற்றி எழுதியுள்ள அறிக்கை அந்த நினைவேடுகளில் இருந்தது. அந்த அறிக்கையில் உள்ள சில செய்திகளை கீழே தருகிறேன்.

“சென்னைக்கும் சதுரங்கப் பட்டினத்திற்கும் (SADRAS) இடையே உள்ள கடற்கரை பகுதி, அண்மைக்காலத்தில் உயர்ந்திருக்கிறது”.
“சென்னையின் பல பகுதிகளில் தோண்டப்பட்ட கிணறுகளில் உள்ள படிவப்படுகைகளில் கடல் சிப்பிகள்காணப்படுகின்றன.”

“1819 ஆம் ஆண்டு லண்டன் ஜியலாஜிகல் சொசைட்டியில் வாசித்த அறிக்கையில், பாபிங்க்டன் எனும் அறிஞர், சென்னைபகுதியில் உள்ள கரிய நிற களிமண்ணில் கடற் சிப்பிகள் கிடைக்கின்றன, ஆதலின் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.”

“1832 ஆம் ஆண்டு, கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ. மேற்கேயுள்ள LAND CUSTOM HOUSE இல்தோண்டப்பட்ட இரு கிணறுகளில் 13 அடி ஆழத்திலும் 16 அடி ஆழத்திலும் கிடைத்த களிமண்ணில் கடற்சிப்பிகள் காணப்பட்டன.”
“கடந்த நூற்றாண்டுகளில் மைலாப்பூர் டேங்க் என்றும் லாங் டேங்க் என்றும் அழைக்கப்பட்ட பெரிய ஏரியின் கிழக்குக் கரையிலும், மௌபரீஸ் சாலைப் பகுதியில் அகழப்பட்ட கிணற்றிலும் கடல் சிப்பிகள் கண்டறியப்பட்டன.” (மைலாப்பூர் டேங்க் எங்கே இருந்தது என்பதை படம் காட்டுகிறது.).

“அடுத்து, கடற்கரைக்கு மூன்று கி.மீ. மேற்கேயிருந்த ‘கர்னல் மார்ஷல்’ அவர்களின் தோட்டத்தில்கிணறு தோண்டியபோது ஐந்து அடி ஆழத்திலேயே கடற் சிப்பிகள் தென்பட்டன”.

“தொடர்ந்து, திருமயிலை தெப்பக்குளம், செனோடாப் சாலையில் (இன்றைய டி.டி.கே. சாலை) இருந்த Mr. ‘Ainsle’ யின் இல்லம்,மௌபரிஸ் சாலை இங்கெல்லாம் வெட்டப்பட்ட கிணறுகளிலும் நிறைய கடற்சிப்பிகள் கிடைத்தன. “
“BRODIE’S ROAD இல் உள்ள PAGODA TANK இலிருந்து ஒன்றரை மைல் தெற்கே உள்ள கிணற்றிலும் (இங்கே BRODIE’S ROAD எனக் குறிப்பிடப்படுவது இன்றைய இராமகிருஷ்ண மடம் சாலை; PAGODA TANK என்பது மயிலை தெப்பக்குளம்). 
மத்தியகைலாஷ், மன்றோ பாலம் இங்கெல்லாம் வெட்டப்பட்டகிணறுகளிலும் கடற்சிப்பிகள் கிடைத்துள்ளன.
இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் இராபர்ட் ப்ருஸ் ஃபுட் , இன்றைய கடற்கரைக்குமேற்கே எத்தனைக் கி.மீ. தூரம் வரை கடல் முன்னேறியிருந்தது என சொல்வதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார். கடல் சிப்பிகளின் மிச்சங்களைத் தாங்கிய இந்த படிவங்கள் உருவானபோது கடல் கிட்டத்தட்ட பல்லாவரம் மலையின் கிழக்கு அடிவாரம் வரை இருந்திருக்கக்கூடும் எனக் கருதும் இவர், இன்றைய (கிழக்கு) சென்னை அமைந்துள்ள இடம் , “வங்கக் கடல் தந்த கொடை” என்று பதிவு செய்திருக்கிறார்,

இது இப்படியிருக்க 1950 களில் , விருகம்பாக்கம் பகுதியில் வாயு கசிவு ஏற்பட்ட ஒரு கிணற்றை ஆய்வு செய்த இந்திய புவியியல் துறை விஞ்ஞானி ஜேகப் குரியன் , அது மீதேன் வாயு என்றும் விருகம்பாக்கம்- வடபழனி பகுதி முன்பு கடலை ஒட்டிய சதுப்பு நிலப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்றும் அறிக்கை அளித்துள்ளார்.
இந்நிலையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இந்திரா நகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணறுகளிலும் கடல் களிமண்வெளிப்பட்டதை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்றைக்கு மயிலை மியூசிக் அகடெமிக்கு எதிரே உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் போடும்போது இறங்கிப்போய் பார்த்தேன். களிமண்ணும் மணலும் கலந்திருந்த குழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த சிப்பித் துண்டுகள் கிடந்தன.

தேனாம்பேட்டை சிக்னல் அருகேயுள்ள ஆலையம்மன் கோவிலின் சரியான பெயர் “அலை காத்த அம்மன் கோவில்” என அறிந்து அங்கு சென்று விசாரித்தேன். முற்காலத்தில் அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது; அந்த ஏரியின் அலைகளில் மிதந்து வந்த அம்மன் சிலைதான் இங்கு வழிபடப்பட்டு வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முதியவர், “ சார், முந்தி கடல் இங்க இருந்திச்சாம் , ஒருதடவ அலையெல்லாம்பொங்கி கிராமத்துக்குள்ள வரப்ப இந்த அம்மாதான் ஊர காப்பாத்திச்சாம், அதனாலதான் இந்த சாமிக்கு“அலை காத்த அம்மன்’ னு பேரு என்றார். ஆனால் இவற்றை முழுமையாக நம்புவதற்கில்லை. 
அண்மையில் சென்னை அருங்காட்சியகத்தில் ROBERT BRUCE FOOTE பற்றிய ஆவணப் படவெளியீட்டு விழாவில் பங்கேற்ற என் நண்பர் திரு ஸ்ரீநிவாசன் ( DEPUTY DIRECTOR GENERAL ( RETIRED,) GSI), ( இவர் சென்னையின் பல இடங்களில் துரப்பணபணி செய்தவர்.) அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு,தியாகராய நகர் பகுதியில் MARINE SAND மற்றும் வடபழனி பகுதியில் MAERINE CLAY கிடைத்ததாகத் தெரிவித்தார்.

அண்மையில் சென்னைப் பகுதியின் பழைய வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். (1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது).அதில் அந்நாளில் இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ள பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் ஏரி ஒன்று இருப்பது தெரிய வந்தது. வடக்கு- தெற்காக இருந்த அந்த ஏரியின் அமைப்பு, அது கடல் பின் வாங்கியபோது விட்டுச் செல்லப்பட்ட நீர்ப் பகுதியோ என எண்ணத்தூண்டியது. அண்ணா பலகலைக் கழகத்தை ஒட்டி கிழக்கேயுள்ள கல்வி நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட கடைக்கால் போட்டபோது கடல் சிப்பி ஓட்டுகள் கிடைத்ததாக அங்கு பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

படம்- 1 1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னைபகுதியில் எத்தனை ஏரிகள்

இவற்றையெல்லாம் பார்க்கும்போது
“ THE WHOLE OF MADRAS APPEARS TO BE BUILT ON SUCH BEDS WHICH HAVE BEEN LAID OPEN AT VARIOUS PLACES IN THE EXCAVATION OF WELLS “
என்று ப்ருஸ் ஃபுட் எழுதியுள்ளது சரியென்றே தோன்றுகிறது..இங்கே such beds என்று அவர் கூறுவது, “ BEDS ABOUNDING IN THE REMAINS OF MARINE AND ESTURINE SHELLS OF LIVING SPECIES”.
இந்திய புவியியல் துறை ஆய்வுகளின்படி, பெசன்ட் நகர், அடையாறு, கிழக்கு சைதை , நந்தனம், மயிலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை. தேனாம்பேட்டை, தி. நகர், கிழக்கு அசோக்நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், சிந்தாதிரிப் பேட்டை, எழும்பூர், புரசை, சௌகார் பேட்டை, இராயபுரம், வண்ணாரப் பேட்டை, தொண்டயார்பேட்டை போன்ற பகுதிகளில் கடல்சார் வண்டல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் உத்தேசமாக உருவாக்கப்பட்ட வரைபடத்தை இத்துடன் இணைத்துள்ளேன். கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் வங்கக்கடல் பின் வாங்கியதால்தான் இந்த நிலப்பரப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
‘ஆம் ,வங்கக் கடல் தந்த கொடைதான் நம்ம சென்னை.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தலைப்பு: 'சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு'

Tamilnadu Department of Museums, Department of Archaeology and 'Chennai 2000 Plus' Trust jointly Celebrated Chennai Month function.
https://www.youtube.com/watch?v=8vY2vaW4bTw&feature=youtu.be


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Sannadhi street Kapaliswar Temple. This is a photo of the temple taken in the year 1851 when the main tower was not built. Actually the western tower is the old one. Even in the Mckenzie map of the temple of 1800 the tower is not to be seen. The main tower was built in 1906. Legend says the temple was originally a Muruga temple with Singaravelar as main deity and Lord Siva shrine came later after it was destroyed in 16th century when it was near the sea shore. Even now there is a separate Dwajassthamba for Murugan. The main Dwajassthamba on the west side was gold plated in August 1947. A lot of coconut trees around the temple and low height tiled houses in Sannadhi Street can be seen. The second picture is probably of 1930s after the Gopuram was built and the third the same view now.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

கபாலீஸ்வரரும் கடற்கரையும் .....தொடர்கிறது.

நாம் விட்டாலும் கபாலி நம்மை விடுவதாக இல்லை. நான் ஒரு புவியியல் மாணவன். கொடுத்து வைத்தவன். இயற்கையை ரசிப்பதற்கும் பூமியைப் புரிந்ந்து கொள்வதற்கும் எங்களைப் போல் வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எந்த ஒரு ஆய்வையும் கண்டது கண்டபடிதான் செய்கிறோம். காய்தல் உவத்தல் இல்லை. மதக் கண்ணாடி அணிந்து கொள்வதில்லை. கபாலி மீது கோபமும் இல்லை , கிறித்து மீது காதலும் இல்லை. அறியாமையால், புவியியல் அறியாமையால், வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதே எனும் ஆதங்கம்தான்.

முந்தைய பதிவில்.
”இடம் மாறியது கடற்கரைதான்.......கபாலி கோவில் அல்ல என்பதனை அறிவியல் அடிப்படையிலான சான்றுகள் கொண்டு விரிவாக எழுதிவிட்டேன். மேலும் விரிக்கத் தேவையில்லை எனக் கருதுகிறேன்.” என்று முடித்திருந்தேன். அந்தப் பதிவிற்குப் பிறகு இதற்கான சான்றுகள் வந்த வண்ணம் உள்ளன. 
எனது சீனியர் தேசிகாச்சாரி வாசுதேவன் அவர்கள், அடையாறு காந்தி நகர் கிரிகெட் மைதானத்தில் களிமண்ணில் கடல் சிப்பிகளை கண்டதாக ஆஸ்திரேலியாவிலிருந்து தெரிவிக்கிறார்.

சிந்தாதிரிப்பேட்டையில் அகழப்பட்ட குழாய்க் கிணறுகளில் கடல் சிப்பிகள் அகப்பட்டதாக நண்பர் ஒருவர் எழுதியுள்ளார்.

நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் களிமண் பகுதியிலிருந்து 1935 ஆம் ஆண்டு அர்க்கா எனப்படும் கடல் சிப்பியை மாநிலக் கல்லூரி பேராசிரியர் P.G.DOWIE என்பார் சேகரித்ததாக THE MADRAS TERCENTENARY COMMEMORATION VOLUME (1939) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதலின் சென்னையில் கடற்கரை இடம் மாறியுள்ளது என்பது ஐயந்திரிபுக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது. மயிலாப்பூரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று அறிஞர்களும், தொல்லியலாலர்களும் புவியியல் அறியாத காரணத்தால் முன்பு கோவில் இருந்த இடம் வேறு, இப்போது உள்ள இடம் வேறு என எழுதியுள்ளார்கள். யாரையும் குறை சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் எழுதியுள்ளார்கள் அவ்வளவுதான்.

தொடர்ந்து, 
”சாந்தோம் தேவாலய சுற்று சுவர்களில் உள்ள கற்களில் கல்வெட்டுகள் இருக்கலாம், ஆனால் அவை மயிலைக் கோவிலை இடித்து எடுக்கப்பட்டவை என்பதற்கு எந்த சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தேன். அன்பர் தேவ் அவர்கள் கீழ்காணும் சுட்டியை அனுப்பியுள்ளார். இதை முழுமையாக, ஒருமுறைக்கு இருமுறையாகப் படித்துப் பார்த்தேன். அவருக்கு நம் நன்றி. ஆர்வமுள்ளவர்கள் இந்த சுட்டியில் உட்சென்று காணுங்கள். நிறைய செய்திகள் உள்ளன. https://thamilkalanjiyam.blogspot.com/…/07/blog-post_18.html.

போர்த்துகீசியர்கள் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மயிலைக் கோவிலை இடித்துவிட்டார்கள். 1558 இல் இராமராயர் போரிட்டு அவர்களை அடக்கி கோவிலை புனரமைத்தார் என்று இந்த சுட்டியில் சொல்லப்பட்டுள்ளது. (புனரமைத்தார் என்று உள்ளதே தவிர, புதிதாக வேறு இடத்தில் கட்டினார் என்றில்லை.) இருக்கலாம் இல்லையென்று மறுப்பதற்கில்லை. பின்னர், 1674 ஆம் ஆண்டில் மயிலாப்பூர், கோல்கொண்டா மன்னனால் சிதைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. வேற்று மதத்தாரின் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்படுவது நம் காலத்திலும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது. சாந்தோம் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்ட மயிலைக் கோவிலிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கக் கூடும். ஆனால் இப்போது தேவாலயம் உள்ள இடத்தில்தான் கபாலி கோவில் இருந்து என்பதற்கு இது சான்றாகாது.

எடுத்துக்காட்டாக, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத கோவில் ஒன்றின் சுற்றுசுவர்களில் உள்ள கற்கள் (பிராமணர்கள் அனுமதியுடன்) 1830 களில் கொள்ளிடத்தில் கீழணை கட்டப்பயன்படுத்தப்பட்டன என்று வரலாறு கூறுகிறது (காண்க: படம்). கோவிலின் கற்கள் கீழணையில் இருப்பதால், இங்கேதான் கோவில் இருந்தது என்று கூறிவிட முடியுமா? ( கீழணையிலிருந்து ஆறு கி.மீ. தூரத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம்தான் இந்தக் கோவில் எனக் கூறப்படுகிறது..)

எனவே, மயிலைக் கோவில் இடம் மாறவில்லை, தேவார காலத்தில் இருந்த அதே இடத்தில்தான் இப்போதும் உள்ளது எனும் என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இடம் மாறியது கடற்கரைதான், கபாலி கோவில் அல்ல.

மேலும்,
“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம் 
அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை 
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் 
திருவல்லிக்கேணியான் சென்று “

‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா
அல்லிக் கேணியான்’

என்றெல்லாம் பாடுகிறார் திருமழிசை ஆழ்வார். ஆனால் இன்றைக்கு திருவல்லிக்கேணி கோவில் கடற்கரையில் இல்லை. ஆதலின் இது பழைய கோவில் இல்லை. அது இடிக்கப் பட்டது, இது புதிய கோவில் என்று சொல்ல முடியுமா.

Image may contain: text
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

THE MADRAS TERCENTENARY COMMEMORATION VOLUME (1939 ) நூலில், GEOGRAPHY SECTION இல்,THE SITE AND SITUATION OF MADRAS கட்டுரையைப் படித்துப் பாருங்கள் இணையத்தில் இருக்கிறது. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard