New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம் என்றால்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
வேதம் என்றால்
Permalink  
 


வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலும் ஒரு வேதவியாசர் தோன்றி வேதத்தை நான்கு பகுதிகளாகப் பகுப்பார். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகளைக் கொண்டது. நான்கு வேதங்கள்:- ரிக், சாம, யஜுர், அதர்வண. நான்கு பகுப்புகள்:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

No automatic alt text available.

|| வேதங்களும் மற்ற மதநூல்களும் ஒன்றா?

வேதங்களை மற்ற மதங்களின் மதநூல்களோடு ஒப்பிடுவது அறியாமை ஆகும். வேதங்கள் வெறும் அதை செய்யவேண்டும்; இதை செய்யக்கூடாது எனவும், இதை செய்தால் நரகம்; அதை செய்தால் சொர்க்கம் என்றும் பேசவில்லை. மாறாக வேதங்கள் மிக ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய கருத்துகளை எல்லாம் நமக்கு அளிக்கின்றன. வேதங்கள் எந்த மதகுருவையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்டவையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. ’அபௌருஷேயம்’ காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.

முதலாவது வேதமான ரிக் வேதம் மிக முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.

|| ரிக் வேதம்

பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட மிக அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம். இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் ரிக்வேதத்தை 12,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அது காலவரையற்றது. எப்போதும் இருந்தது. அதை ரிஷிகள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்துள்ளனர். ரிக்வேதம் இறைதுதிகளை உள்ளடக்கியது. ’ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தில் 33 தெய்வங்களைப் (11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள்) போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆவர். வேதஞானம் இல்லாதவர்கள் 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்பதை 33 கோடி தெய்வங்கள் எனக் கருதி இந்துதர்மத்தைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள். ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதம் 10 மண்டலங்களை உடையது. 1028 மந்திரங்களும், 10,600 வரிகளையும் உடையது. ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.

|| சாம வேதம்

சாம வேதத்தை (The Veda of Song) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது. சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது. ”ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால், சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால், சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது. சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.

|| யஜுர் வேதம்

யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள்ளுணர்வுகளை தட்டியெழுப்பவும், மனத்தை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிக துல்லியமாக வரையறுத்துக் காட்டுகின்றது. யஜுர்வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்கள் ஆவர். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல்முறைகளையும் யஜுர்வேதம் விளக்குகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது. நெஞ்சகத்திலே தீமூட்டி ஞானம் எனும் வேள்வியை வளர்த்து, அகங்காரத்தை அதிலிட்டு, மெய்யுணர்வு எனும் அமுதைப் பெறுவதே ஆன்மவேள்வி எனக் கூறப்படுகின்றது.

|| அதர்வண வேதம்

இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும், சில தாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது. அணுகுண்டை தவறான செயல்களுக்கு உபயோகிப்பதால் அதை சில நாடுகளில் தடை செய்துள்ளனர். அதேபோல், அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது என்பதற்காக அவற்றை தடை செய்து விட்டனர். ஆனாலும் அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இராவணன் நான்குவேதங்களையும் கரைத்துக் குடித்த பிராமணன் ஆவான். அவன் அதர்வண வேத ஞானத்தை தவறான நோக்கத்தில் உபயோகித்தான். அதனால் அவனுக்கு அவனே அழிவைத் தேடிக் கொண்டான். அதர்வண வேதத்தை நெருப்புடன் ஒப்பிடலாம். நெருப்பை நன்மையாக பயன்படுத்தினால் சமைக்கலாம், குளிர் காயலாம். அதே தவறாக உபயோகித்தால் ஒரு வீட்டையே கொளுத்தலாம்.
|| வேதத்தின் நான்கு பிரிவுகள்

ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

*சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை.

*பிரம்மாணம் என்பது யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது. 

*ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது. 

*உபநிடதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ’வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்துதர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இவை தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் ஆகும்.

|| நான்கு பிரிவுகள் – நான்கு வகைகள்

வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. பிரம்மச்சரிய (மாணவன்) நிலைக்கு சம்ஹிதைகள், கிரஹஸ்தம் (இல்லறத்தான்) நிலைக்கு பிரமாணம், வனப்பிரஸ்தம் (தவம் புரிபவன்) நிலைக்கு ஆரண்யகம், சன்னியாசம் (துறவி) நிலைக்கு உபநிடதம்.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம். சம்ஹிதையும் பிரமாணமும் - கர்ம காண்டங்கள் அல்லது சமய சடங்குகள் பற்றியவை. ஆரணயகம் - உபாசனைக் காண்டம் அல்லது தியானத்திற்குரியவை. உபநிடதம் - ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard