தமிழன்பர்களே! தொல்காப்பியர் தம் நூலில் உரைக்கும் ஆறுவகையாக பாவினங்களாவன, 1) அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா. இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாட்டைப் பாடும் பாணர்கள் அருகியதால், அவ்வகையான பாடல்கள் மறைந்துவிட்டன. மருட்பா என்னும் பாவினமோ வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்த கலவை என்பதால், இன்று நிலைத்திருக்கும் வகையின முதல் நான்கே! பாவினங்களைப் பற்றி அறியு முன்பு, இந்த இந்த பாடல்களை இப்படி இப்படி அடிகள் கொண்டு பாடும் ஒரு வரையறை இலக்கணத்தை முதலில் காண்போம். ஓரடியாய்ப் பாக்கள் அமைவதில்லை; அப்படி அமைந்துவரும் அமைப்பு நூற்பா என்று வழங்கப்படுகிறது (எ-கா – ஆத்திசூடி பாவடிகள்)
பாவினங்களில் சிற்றெல்லை:
1)அகவற்பாவின் சிற்றெல்லை: மூன்றடிகள். அதாவது மூன்றுக்கு குறைந்து, இயற்சீர் அமைந்து ஆசிரியத்தளையுடன் வரும் பாடலை அகவற்பா என்று இனம் காணவியலாது. அகவற்பாவின் பாவினங்கள்: இணைகுறள் அகவற்பா, நேரிசை அகவற்பா, நிலைமண்டில அகவற்பா, அடிமறிமண்டில அகவற்பா…. என விரியும்.
2)வெண்பாவின் சிற்றெல்லை: இரண்டிகள். அதாவது இரண்டுக்குக் குறைந்து, வெண்டளை பொருந்த வரும் பாடலை நூற்பா என்றுதான் சொல்ல முடியும். இரண்டடி வெண்பாக்களை குறள் வெண்பா என்று அழைக்கிறோம். குறள்வெண்பாவின் இனங்களாவன; குறாட்டாழிசை, குறள்வெண்செந்துறை.. எனவிரியும். மற்றபடி நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, வெண்கலிப்பா, கலிவெண்பா…. என விரியும்.
3)கலிப்பாவின் சிற்றெல்லை: நான்கடிகளுக்குக் குறையாமல் வரும். கலிப்பாவின் பாவினங்கள்: ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, இயல்தரவிணை, வண்ணக ஒத்தாழிசை, கொச்சகம்… என்று விரியும்.
4)வஞ்சிப்பாவின் சிற்றெல்லை: வஞ்சிப்பாவின் தனிச்சொல், சுரிதகம் இவை நீக்கிக் காணில் இரண்டடியே சிற்றெல்லை. வஞ்சிப்பாவினங்கள்; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா…. என விரியும். இந்த தனிச்சொல் சுரிதகம் போன்ற புரியாத சொல்லாட்சிகளை அந்தந்த பாவினத்தைப் பற்றி அறியும் போது அறியலாம்.
பாவினங்களில் பேரெல்லை:
இவ்வளவுக்குக் குறையாது என்று வரையறுக்கும் போது, எவ்வளவுக்கு மிகாது என்ற வரையறையும் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவ்விதமாக அறுதியிட்டு சொல்ல இயலவில்லை என்றுதான் ஒப்புக் கொள்ள முடிகிறது. பாவலனின் மனமே எல்லை என்போம். ஆனால் சில சில வரைமுறைகளும் இருக்கின்றன. (எ-கா) மூன்றடி வெண்பாவைச் சிந்தியல் வெண்பா எனவும், நான்கடி வெண்பாக்கள் இன்னிசை/நேரிசை வெண்பாக்கள் எனவும், ஏழடி வெண்பாக்களை பஃறொடை எனவும் அதற்கு மேல் கலிவெண்பா எனவும் கூறுகின்றனர். இந்த பேரெல்லையை விளக்கி, “உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை” என்றுரைக்கும் காரிகை கீழே:-
வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்றுஅகவற்கு
எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு; உரைப்போர்
உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண் போதுஅலைத்த
கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையே’
இனி அடியிலக்கணம் பற்றி:
செய்யுள்/ பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் / சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:
1) குறளடி: இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறளடி என்கிறோம்.
(எ-கா) கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்தேன் சிரித்தேன்;
பக்கம்வரத் துடித்தேன்!
இங்கே ஓரடியில் இரண்டே சீர்கள்; எனவே குறளடியாகும்.
2) சிந்தடி : மூன்று சீர்கள் அமைந்த ஓரடியைச் சிந்தடி என்கிறோம்.
(எ-கா) கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்த ஞாபகம் இல்லையோ;
பருவ நாடகம் தொல்லையோ;
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ;
மறந்ததே உன்றன் நெஞ்சமோ?
இங்கே ஓரடியில் மூன்று சீர்கள்: எனவே சிந்தடியாகும்.
3) அளவடி: நான்கு சீர்கள் அமைந்த ஓரடியை அளவடி என்கிறோம்.
(எ-கா) பாரதியின் பாடல்:
வீணையடி நீயெனக்கு மேவுவிரல் நானுனக்கு
பூணுவடம் நீயெனக்கு புதுவயிரம் நானுனக்கு
இங்கே ஓரடியில் நான்கு சீர்கள்: எனவே அளவடி என்கிறோம்.
4) நெடிலடி: ஐந்து சீர்கள் அமைந்த ஓரடியை நெடிலடி என்கிறோம்.
(எ-கா) என்னுடைய கட்டளைக் கலித்துறை பாடல்:
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்
அன்னை யுருவினில் அன்பைப் பொழிந்திடும் அற்புதமாய்
பின்னல் சுழற்றியே கண்கள் சிலிர்த்திடும் பெண்ணழகாய்
என்னில் உறைந்தெனை என்றும் உயர்த்திடும் என்தமிழே!
இங்கே ஒரடியில் ஐந்து சீர்கள்; எனவே இது நெடிலடி என்கிறோம்.
5) கழிநெடிலடி: ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்ட ஓரடியை கழிநெடிலடி என்கிறோம்.
(எ-கா) ஒரு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்:
திருமண மக்கள் நல்ல திருவேந்திப் புகழும் ஏந்திப்
பருதியும் நிலவும் போலப் பல்லாண்டு வாழ்நாள் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும் தமிழும் வாழ்க
இங்கே ஓரடியில் ஆறு சீர்கள்; எனவே இது கழிநெடிலடி என்கிறோம்.
இனி தொடர்ந்து பாவினங்கள்:
தமிழன்பர்களே, சென்ற யாப்பிலக்கண குறிப்புகளில் அசை, சீர், தளை, தொடை, முதலியவற்றைப் பற்றி, ஆரம்ப இலக்கணம் அறிய விரும்புவோர்க்காக, நானறிந்தவரை மேம்போக்காக எடுத்துரைத்தேன். இனி பாக்களைப் பற்றியும் அவற்றின் இனங்களைப் பற்றி ஓரளவுக்குப் பார்ப்போம்.
பாக்கள் என்று வருகையில் பொதுவான வகைகளாவன: (அ) நூற்பா, (ஆ) ஆசிரியப்பா என்ற அகவல்பா, (இ) வெண்பா, (ஈ) கலிப்பா, (உ) வஞ்சிப்பா, (ஊ) மருட்பா. செய்யுள் சூத்திரங்களை நூற்பா என்கிறோம். எந்த பாடலும் ஓரடியில் வருவதில்லை. நூற்பா மட்டுமே சிற்றெல்லையாக (குறைந்த அளவு) ஓரடி பெற்று வரும். அதுபோலவெ மருட்பா என்பது வெள்ளையில் தொடங்கி அகவலில் முடியும் ஒருவகைக் கலவைப் பாடல், ஆக பொதுவாக பயன்படும் வகைகள்: அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றறிக. இவற்றைப் பற்றி அடுத்த குறிப்புகளில் தனித்தனியாகக் காண்போம். அதற்கு முன் பாவின்ங்கள் என்றால் என்னவென்று பார்க்கலாம்.
அந்தந்தப் பாவின் பொதுவிலக்கணங்களைத் தவறாமல் பெற்று வருபவை அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று அறிந்தோம். ஆனால் இவற்றுடன் அந்தந்த பாவின் இலக்கணங்களுடன், கூடவே பல மாறுதல்களும் பெற்று வரும் பாடல்களும் உண்டு. ஆதலால் அவற்றை வகைப்படுத்துவதற்காக நம்முடைய பேரறிவு கொண்ட இலக்கண ஆசிரியர்கள் அந்தந்த பாவின் இனங்கள் என்று பொருள்படும்படி பாவினங்கள் என்று வகைப் படுத்தினர். ஒவ்வொரு பாவின் பாவினங்களும் (அ) தாழிசை, (ஆ) துறை (இ) விருத்தம் என்று மூன்று வகைப்படும். அதாவது:-
1) அகவலின் இனம்: ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்.
2) வெண்பாவின் இனம்: வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்.
3) கலிப்பாவின் இனம்: கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்.
4) வஞ்சிப்பாவின் இனம்: வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்.