அற நூல் என்றால் என்ன என்பதையும், அற நூல் தோன்றிய சூழலையும் முதலில் கூறுகிறது. அதன்பின்னர், திருக்குறள் பெயர்க்காரணம், திருக்குறளின் அமைப்பு, பொருளடக்கம், முதலியனவற்றைக் குறிப்பிடுகிறது. பின்பகுதியில் திருவள்ளுவரின் பெருமை கூறப்படுகிறது. 1.1 அற நூல் மனிதனுக்கு ஒழுக்கம் முதன்மையான பண்பு. ‘ஒழுகு’ என்ற வேர்ச் (root) சொல்லின் அடியாகப் பிறந்தது ஒழுக்கம். ‘ஒழுகு’ என்பதற்கு ‘நட’ எனும் பொருள் உண்டு. எனவே, ஒழுக்கம் என்பது நடத்தை. நல்ல நடத்தையையே அது குறிக்கும். நன்னடத்தையாகிய ஒழுக்கம் என்ற பொருளை அறம் எனும் சொல் உணர்த்தும். 1.1.1 அற நூல்கள் தோன்றிய சூழல் சங்க காலத்தில், மக்களுடைய வாழ்க்கையின் அடிப்படையில் அகஇலக்கியம், புற இலக்கியம் எனப் பாகுபாடு செய்து, இலக்கியங்களைப் படைத்தனர். புறப்பொருளில் ஒன்றான அறத்தின் சிறப்பினைக் கூறும் அறநூல்களை அடுத்த நிலையில் இயற்றினர். அவை அமைப்பு முறையாலும், அறிவுறுத்தும் கருத்துகளாலும் ஒரு தனி இலக்கிய வகையாக உருவாகியது. இவற்றைப் பிற்காலத்தவர்கள் அற நூல்கள் என்று அழைத்தனர். வாழ்க்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் தோன்றுவதற்கு முன்னர், வழக்காற்று ஒழுக்க நெறி (Customary Morality) எனக் கூறப்படும் - மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் நூல்கள் தோன்றின. இவை மூதுரை எனவும், முதுமொழி எனவும், பழமொழி எனவும் வழங்கப்பெற்றன. காலப்போக்கில் அறிவு வளர்ச்சியின் பயனாக இவற்றிலிருந்து வேறுபட்டதும், சிறந்ததும், செறிவுமிக்கதுமான அற நூல்கள் தோன்றின. இவை, சொல்லாலும், பொருளாலும், கருத்தை உணர்த்தும் முறையாலும் மூதுரை அல்லது முதுமொழி ஆகியவற்றிலிருந்து சிறிது வேறுபட்டவை. இவற்றில் கருத்திற்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. 1.2 திருக்குறள் முதியோர் சொல், அல்லது காலத்தால் முதுமை பெற்ற சொல் மூதுரை என்று அழைக்கப்பட்டது. வழி வழியாக வருகின்ற பழக்கத்தைச் சுருங்கிய வடிவத்தில் தருவது மூதுரை. இதை விரிவாக்கி ஒரு வரையறைக்கு உட்படுத்திக் கூறுவது அற நூல் எனலாம். எடுத்துக்காட்டாக வீட்டில் அல்லது சமூகத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும் என்பது நம்மிடையே உள்ள ஒரு பழக்கம். இதைப் “பெரியோர் சொல் தட்டாதே” என முதுமொழி கூறும், இதே கருத்தை, ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்பது அற நூல். அறநூலில் இவற்றைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தும் போக்கு அமைந்திருக்கும். அறநூல்களில் கருத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இயற்றிய புலவர்கள், கற்பனை, அழகியல் (aesthetics) ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அவர்கள், வழக்காற்று ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்டே, தம் கருத்துகளைக் கூறினர். அவற்றில் மனித இனம் முழுமைக்கும் பயன்படக்கூடிய அறக் கருத்துகள் அருகியே காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் திருக்குறள் காணப்படுகிறது. 1.2.1 திருக்குறள் : ஒரு ‘வாழ்வு நூல்’ ‘திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. ஆனால் வாழ்வு நூல் என்பது வள்ளுவர் புதுமையாகக் கண்டது. இது அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. இங்ஙனம் திருவள்ளுவர் வாழ்வு நூலாக எழுதுவதற்குத் தமிழ்ப்பண்பாடே அடித்தளமாகும். தொல்காப்பியத்தில் இதற்கான அடிப்படையைக் காண்கிறோம்’ என்கிறார் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள். (திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம் பக்: 125) எனவே, வாழ்வு நூலாகக் கருதப்படும் திருக்குறள், ஒரு குறிப்பிட்டஇனத்தவர், சமயத்தினர், மொழியினர், நாட்டவர் என்ற எல்லைகளைக் கடந்து மனித குலத்தின் வாழ்வு நூலாகக் காணப்படுகிறது. இந்த உண்மை திருக்குறளை நடுவு நிலைமையுடன் கற்போருக்கு நன்கு புரியும். 1.2.2 பெயர்க்காரணம் தமிழ் மொழியில் உள்ள மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் ‘குறள் வெண்பா’ என்பது பெயர். இதற்குக் குறுகிய வடிவினை உடைய வெண்பா என்று பொருள். இத்தகைய பாடல்களால் இயற்றப்பட்டதால் ‘குறள்’ என்று அழைக்கப்படுகிறது. ‘திரு’ என்பதற்கு உயர்வு, அழகு, சிறப்பு, செல்வம் எனப் பல பொருள் உண்டு. தமிழில் உள்ள சிறந்த படைப்புகளையும், சிறப்புடையோர்களையும், ‘திரு’ எனும் அடைமொழி சேர்த்து அழைப்பது மரபு. திருவாசகம், திருமந்திரம், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர் முதலியன இதற்குரிய எடுத்துக்காட்டுகள். எனவே, சிறப்புக்கருதி, குறுகிய வெண்பாக்களால் ஆகிய குறள் ‘திருக்குறள்’ என அழைக்கப்படுகிறது. 1.2.3 அமைப்பு இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உள் பிரிவுகளை உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று அழைக்கப்படுகின்றன. • அறத்துப்பால் அறத்தின் பெருமையையும், பயனையும் விளக்குவது அறத்துப்பால். • பொருட்பால் பொருளின் சிறப்பையும், அதைச் சேகரித்து, காத்து, வகுத்து வழங்கும் முறைகளையும் கூறுவது பொருட்பால். இதில், சமுதாயம் பற்றிய கருத்துகளும், அரசியல் நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. • காமத்துப்பால் காமத்துப்பாலில் காதலர்களின் அன்பின் வெளிப்பாடும், ஈடுபாடும்,மனப்போக்கும், விழுமியங்களும் சுவையாக விளக்கப்படுகின்றன. • அதிகாரங்களும் பாடல்களும் திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும், இரண்டு அடிகளை (வரிகளை) மட்டுமே உடையதாக இருக்கிறது. • இயல்கள் பால் வகைகளாக அறம், பொருள், இன்பம் என மூன்று பால்களாகத் திருக்குறள் பகுக்கப்பட்டிருப்பதாகக் கூறினோம். இவை ஒவ்வொன்றும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில் அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன. பொருட்பால், அரசு இயல், அங்க இயல், ஒழிபு இயல் என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. இன்பத்துப் பாலில், களவு இயல், கற்பு இயல் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. இவ்வமைப்பைக் கீழே உள்ள படத்தின் மூலம் எளிதில் நினைவு கொள்ளலாம்.
திருக்குறள் - நூல் அமைப்பு
நிலைகள்
கூறுகள்
எண்ணிக்கை
பால்
அறம்
பொருள்
இன்பம்
3
இயல்
பாயிரம்
இல்லறம்
துறவறம்
அரசு
அங்கம்
ஒழிபு
களவு
கற்பு
8
அதிகாரம்
4
20
14
25
32
13
7
18
133
குறள்
40
200
140
250
320
130
70
80
1330
1.2.4 தனித்தன்மை
இது சுமார்2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. மனிதன், மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியல் கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள். இது மனித சமுதாயத்தின் வழிகாட்டி. மனிதர் அனைவருக்கும் பொருந்தும் சமூக நீதிகளை எடுத்துரைக்கிறது. தமிழில் எழுதப்பட்ட திருக்குறளில் ஒரு செய்யுளில் கூடத் தமிழ்நாடு, தமிழர், தமிழ் என்பது பற்றி ஒரு சொல் கூட இடம் பெறவில்லை. எனவே, திருக்குறளை உலகிலுள்ள எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும், அந்த மொழிக்கும், மொழி பேசும் மக்களுக்கும் சொந்தமாகும் பொதுத்தன்மை அதில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி,‘குறள் தமிழ்மறை அன்று; அது தமிழ் தரணிக்குத் தந்த மறை’ என்று அறிஞர், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1.2.5 மொழிபெயர்ப்புகள் திருக்குறளின் பொதுத் தன்மையையும், சிறப்புத் தன்மையையும், அறிந்த இத்தாலி நாட்டுக் கிறித்துவப் பாதிரியார்,ஜோசப்பெஸ்கி எனும் வீரமாமுனிவர். திருக்குறளை முதன் முதலில் கி.பி.1730ம் ஆண்டிலேயே இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். அவரைத் தொடர்ந்து பலரும் ஐரோப்பிய மொழிகளிலும், பிற இந்திய மொழிகளிலும், திருக்குறளை மொழி பெயர்த்தனர் கிறித்தவர்களின் விவிலியத்திற்கு அடுத்த நிலையில், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு.
அரபுமொழி, பர்மியமொழி, சீனமொழி, சப்பானிய மொழி, மலாய் மொழி, சிங்கள மொழி பிஜியன் மொழி
9
ஐரோப்பிய மொழிகள்
அர்மேனிய மொழி, செக்கோஸ்லோ வாக்கியமொழி, டச்சுமொழி, ஆங்கிலம், பின்னிஸ் மொழி, பிரஞ்சு மொழி, செர்மன் மொழி, இலத்தீன் மொழி, போலந்து மொழி உருசியன் மொழி, ஸ்வீடிஸ் மொழி, இத்தாலியன் மொழி
64
(ஆங்கிலம் = 38
செர்மன் = 6)
தகவல்: TRIBUTES AND TRANSLATONS OF TIRUKKURAL - BY K.D. Thirunavukkarasu, Edn: 1986. (இதன் பின்னர் மேலும் பல மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன)
1.2.6 பெருமைகள் ‘குறள் ஒரு சீர்மை உடையது. தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது. ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச் சித்தரித்துக் காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார். மேலும் திருக்குறளின் பெருமையை உணர்ந்த பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஏரியல் (Ariel). ‘திருக்குறளில் மிக அற்புதமான அம்சமாக விளங்குவது அதன் ஆசிரியர், அதனைச் சாதி, மக்கள், நம்பிக்கைகள் என்று வேற்றுமை பாராட்டாமல், மனித குலம் முழுவதற்கும் பொதுமையாகக் கூறியிருப்பதாகும். எனவே திருக்குறள் மனித இனத்தின் சிந்தனையில் முகிழ்த்த சிறப்பும் தூய்மையும் வாய்ந்த இலக்கியப் பெட்டகம்’ எனப் பாராட்டுகிறார்.
2.1.2 இறைமையும் பண்டைத் தமிழரும் பண்டைத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலப்பரப்பையும், வாழ்க்கைச் சூழலையும், தங்கள் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே இறைவழிபாட்டையும் பின்பற்றினர். மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும், காடு சார்ந்த முல்லை நிலத்தையும், வயல் பகுதியாகிய மருத நிலத்தையும், கடலை ஒட்டிய மணல் சார்ந்த நெய்தல் நிலத்தையும், வறட்சியின் காரணமாக மாறி அமைந்த பாலை நிலத்தையும் பின்புலமாகவும், சூழலாகவும் கொண்டு வாழ்ந்தனர். வாழ்ந்த நிலத்திற்கு ஏற்பவே, தாம் வழிபடும் இறைவனையும் அமைத்துக் கொண்டனர். • முருகன் வழிபாடு தமிழில் ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். அழகான இயற்கைக் காட்சி நிறைந்த பகுதி மலையும் மலைச்சாரலும் ஆகும். அந்த அழகை வழிபடும் நிலையில் அந்நிலப்பகுதியின் இறைவனுக்கு ‘முருகன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர். பிற்காலத்தில் காப்புக் கடவுளாகக் காட்டில் வாழும் விலங்கினங்களிடத்திலிருந்து காப்பாற்றும் கடவுளாக வேலை உடைய முருகன் கருதப்பட்டான். பறவைகளிலேயே அழகான மயில் அவனது வாகனமாக அமைக்கப்பட்டது. முருகனின் பெருமை வெளிப்படும் வகையில் பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படை எனும் நூல் இயற்றப்பெற்றது. இன்றைக்கும், அழகு மிகுந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனே தமிழ்க் கடவுளாகக் கருதப்படுகிறான். • பிற இறை வழிபாடு முல்லை நிலத்தினர் திருமாலையும், மருத நிலத்தினர் இந்திரனையும், நெய்தல் நிலத்தினர் வருணனையும், பாலை நிலத்தினர் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தையும் வழிபட்டு வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல். அகத்திணை: 5) (மாயோன் = திருமால், மேய = பொருந்திய, உறை = தங்கும், சேயோன் = முருகன், மை = கருமை, வரை = மலை, பெருமணல் = மணல் பகுதியான கடற்கரை (நெய்தல்) கொற்றவை வழிபாடும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த கொற்றவை நிலையும் அகத்திணை புறனே (தொல்: பொருள், புறத்திணை : 62) (மறம் = வீரம், கடை = முடித்தல்) வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்குத் துடிநிலை என்று பெயர். அந்த வெற்றிக்குத் துணை செய்த தெய்வம் கொற்றவை. அந்தத் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்திட வணங்கும் விழாவுக்குக் கொற்றவை நிலை என்று பெயர். மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து எவை தெரிகின்றன? பண்டைத் தமிழர்களிடையே இறை நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும், பயன் கருதியும் பாதுகாப்புக் கருதியும் இறைவனை வழிபட்டனர் என்பதுவும் தெரிகின்றன. 2.1.3 இறைமையும் சமயச் செல்வாக்கும் பண்டைத் தமிழர்களிடம் சமயங்களுக்கான அடிப்படைத் தத்துவங்கள் இருந்தன. சங்க நூல்களில் இவற்றைக் காணலாம். • பல சமயங்கள் இன்று தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வருகின்றனர். சைவம், வைணவம், பௌத்தம், சமணம், இசுலாம், கிறித்துவம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சமயங்களாகும். சங்க காலத்தில், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகியவை மட்டுமே இருந்தன. இவற்றுள் பொதுமையைக் காணும் நோக்கில், இசுலாமும் கிறித்துவமும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்னரே ஆறாம் நூற்றாண்டில், திருமூலர், ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்!’ (திருமந்திரம்: 2066) (நினைமின் = நினையுங்கள்) என்ற தத்துவத்தை வெளியிட்டார். திருமூலர்க்கு முந்தைய திருவள்ளுவரிடமும் இந்தப் பொதுமைத் தன்மையைக் காண முடிகிறது. இதைத் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ எனும் அதிகாரத்தில் காணமுடியும். அதில் எந்த ஒரு தனி சமயத்தின் பெயரையோ, தனி ஒரு கடவுளின் பெயரையோ குறிக்கவில்லை. இந்த நிலையைத் திருவள்ளுவர், திருக்குறளின் இறுதிவரையிலும் பின்பற்றியுள்ளார். 2.2 இம்மையில் இறைமை காலந்தோறும் இறைமை பற்றிய கருத்துகள் சமயவாதிகளாலும், பிறராலும் பலவிதமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. சூழலுக்கேற்ப மாற்றப்பட்டும் உள்ளன. ஆனால், ‘இறைமை’ பற்றிய வள்ளுவரின் கருத்துகள் நிலைத்த தன்மையைக் கொண்டு எல்லோர்க்கும், எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற வகையில் அமைந்துள்ளன. 2.2.1 அரசருள் இறைமை இறை என்ற சொல்லின் பொருளை முன்பு பார்த்தோம். ‘இறை’ என்பது அரசனையும் சுட்டும். எனவே ‘இறைமாட்சி’ என்ற தலைப்பின் கீழ், அரசனின் கடமைகளையும், சிறப்புகளையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நேர்மையான முறையில் ஒரு மன்னனது ஆட்சி அமையவேண்டும். அத்தகைய ஒரு நல்ல ஆட்சியை வழங்கும் மன்னன் இறைவனாகக் கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், ‘மக்கட்கு இறை’ என்று வைக்கப்படும் ‘முறை’ என்றால், நடுநிலை பிறழாத நல்ல முறையேயாகும். நல்ல முறையில் ஒரு மன்னன் ஆட்சி செய்வானானால், நாடு நலம் பெறும். மக்களும் பாதுகாக்கப்படுவார்கள். இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? இறை அல்லது இறைமை என்பது செயல்படும் அல்லது பயன்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே செயல்தான் முக்கியம். சடங்குகளோ சம்பிரதாயங்களோ முக்கியம் அல்ல என்பது வள்ளுவர் கருத்து. மக்களுக்கு நல்லதைச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும் அரசன் இறைமைத் தன்மை உடையவன். அவனும் இறைவனாகக் கருதப்படுவான். எனவேதான், ‘இறை’ என்று வைக்கப்படும் அல்லது கருதப்படும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். மேற்குறிப்பிட்டவாறு இறைமை பற்றிய தன் கருத்தை இக்குறள் மூலம் வெளிப்படுத்துகிறார் வள்ளுவர். 2.2.2 மனிதருள் இறைமை ஆன்மா வேறு, உடல்வேறு. ஆன்மா அழியாது. உடல் அழிந்துவிடும். இந்த உலகமும் நிலை இல்லாதது, அழியக் கூடியது. எனவே அழிவு இல்லாத வானுலகத்தை, வீடுபேற்றை அடைவதே இவ்வுலக வாழ்க்கையின் குறிக்கோள் என்பது பெரும்பாலான சமயங்கள் தரும் தத்துவங்கள். அதனால் இந்த மண்ணுலக வாழ்க்கைக்கு, அதிலும் குறிப்பாக இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்பர். ஆனால் வள்ளுவர், இத்தகைய மறு உலகச் சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறாக இவ்வுலகத்தில் வாழும் இல்வாழ்க்கைக்குச் சிறப்புக் கொடுக்கிறார். இல்வாழ்க்கை பற்றிப் பல அதிகாரங்களை வள்ளுவர் இயற்றியுள்ளார். காரணம் என்ன? இது இல்வாழ்க்கைக்கு வள்ளுவர் கொடுத்த சிறப்பு. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கை. இதன் வளர்ச்சியான நெறிப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் பல கருத்துகளைக் கூறியுள்ளார். இந்த உலக வாழ்வில், இல்வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய, நல்ல நெறிகளை ஒழுக்கங்களை ஒருவன் பின்பற்றி வாழவேண்டும். அவ்வாறு பின்பற்றி வாழ்ந்தால், அவன் வானுலகத்தில் வாழ்வதாகக் கருதப்படும் இறைவனோடும் சமமாக எண்ணப்படுவான் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். நல்ல நெறிகளைப் பின்பற்றி ஒழுங்காக வாழ்ந்தால் என்ன பயன் கிட்டும்? என்ற வினா எழுவது இயல்பு. அதற்குச் சமயங்கள் ‘இந்த உலக வாழ்விலிருந்து விடுபட்டு, பிறப்பற்ற முழு விடுதலையாகிய வீடுபேறு கிட்டும்’ என்று விளக்கம் கொடுக்கின்றன. ஆனால் வள்ளுவர் சமயவாதிகளின் இக்கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இம்மையிலும் அதாவது இவ்வுலக வாழ்விலும் வீடுபேற்றைப் பெறலாம் என்கிறார். சமயவாதிகள் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தபொழுது ‘வாழ்க்கை வேண்டும், வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று வலியுறுத்தியவர் வள்ளுவர். மேலும் அந்த வாழ்க்கை வாழவேண்டிய முறையில் வாழ்ந்து நிறைவு உடையதாக, இருந்தால் அந்த வாழ்க்கையின் பயன் வீடுபேறு பெறுவதற்குச் சமம்; வீடுபேற்றை இந்த உலகிலேயே, உலக வாழ்விலேயே பெற்று மகிழலாம் என்கிறார் வள்ளுவர். எனவே, வாழவேண்டிய முறையில் வாழும் இல்லறத்தானும் இறைமைத் தன்மை உடையவன். அவனும் இறைவனுக்குச் சமமானவன் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். இந்த உலகில், நிலையற்ற வாழ்க்கை என்று கருதப்படும் இல்வாழ்க்கையிலும்,ஒருவன் தான் ஆற்றவேண்டிய கடமைகளை ஒழுங்காக முறையாக ஆற்றுவானானால், அவனும் இறைமைத் தன்மை உடையவனே என்று வள்ளுவர் கூறுகிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் :50) இம்மை உலகிலேயே விழுமிய பேரின்பத்தை ஒரு மனிதன் பெற இயலும் என்பதே வள்ளுவர் கண்ட இறைமைத்தன்மை. பொதுவாக இந்தியச் சிந்தனை வரலாற்றில், வாழ்க்கை வெறுப்பு என்ற போக்கு நிறையக் காணப்படுகின்றது. ஆனால் அவற்றிற்கு எதிராக வள்ளுவர் செய்த புரட்சி திருக்குறளாக மலர்ந்தது என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. பயில்முறைப் பயிற்சி- I மாணவர்களே, இம்மையில் - இப்பிறப்பில்-இறைமையை எய்தும் நெறி பற்றி வள்ளுவரின் கருத்தைப் படித்தீர்கள். இதோ அந்நெறியை விளக்கும் மற்றுமொரு குறள். இறைமையை அடைய விரும்பும் ஒருவன் செய்ய வேண்டுவன எவை என்பதையும் செய்ய வேண்டாதன எவை என்பதையும் இதில் குறிப்பிடுகிறார். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (குறள்: 280) இங்கு இறைமையை எதற்கு ஒப்பாகப் பார்க்கிறார் வள்ளுவர்? சிந்தியுங்கள். 2.2.3 இல்லற மாண்பில் இறைமை பெண்ணுக்குரிய இலக்கணம் சொல்லும்பொழுது, தன்னையும் (தன் கற்பையும்) தன் கணவனையும், வாய்மையையும் காத்து வாழ்பவளே பெண் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அடுத்த நிலையில் அவ்வாறு தன்னை அதாவது தன் கற்பைக் காப்பாற்றுகின்ற பெண், தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது வாழ்வாளானால், அவள் மழைதரும் மேகத்தைப் பார்த்து, ‘மேகமே நீ இப்பொழுதே மழையைப் பெய்வாயாக’ என்று கட்டளையிட்டால், உடனே மழை பெய்யும்’ என்கிறார் வள்ளுவர். தெய்வந் தொழாஅள் கொழநன்தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை (குறள்: 55) (கொழுநன் = கணவன்) இறைவன் ஒருவனே. அந்த இறைவன் காதலிக்குக் காதலனாய்த் திகழ்கிறான். பின்னர் ஏன் காதலி இரண்டாவது இறைவனை வழிபடவேண்டும் என்பதே வள்ளுவரது வினா என்று குறிப்பிடுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள். எனவேதான் தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழுகிறாள். அத்தகைய பெண்ணின் கற்பின் ஆற்றல் எல்லை இல்லாதது. மழையைக்கூடப் பெய்யச் செய்யும் ஆற்றல் உடையது. இயற்கையையும் ஏவல் கொள்ளும் ஆற்றல் உடையது. • காதலர்களிடையே இறைமை இதில், ஒரு பெண்ணின் கற்பின் திண்மையையும், இல்வாழ்க்கையில், கணவன் மனைவியின் இடையே உள்ள அன்பின் பிணைப்பையும் வெளியிட விரும்பிய வள்ளுவர் அவரது இறைமைக் கோட்பாட்டையும் வெளியிட்டுள்ளார். திரு.வி.கலியாணசுந்தரனார், இக்குறளுக்குக் கொடுக்கும் விளக்கம் இதை மெய்ப்பிக்கிறது. எவர், எவர்; எந்த, எந்த வழியில் தன்னைக் கருதி வழிபட்டாலும், அவர்களுக்கு அவர், அவர் வழியில் நின்று, அருள் புரியும் தன்மை வாய்ந்தவர் இறைவன். இயற்கையிலும், பிற இடங்களிலும் இறைவன் அன்பின் வடிவில் வீற்றிருக்கிறார். எனவே, ‘அன்பே தெய்வம்,’ ‘தெய்வமே அன்பு’ என்று குறிப்பிடுகின்றோம். • காதலருக்குக் காதலன் அன்பின் நிலைகள் பல. அவற்றுள் காதல் சிறந்தது. காதல் இல்லாத உயிர்கள் உலகில் இல்லை. காதல் உயிர்களிடத்தில் இயல்பாய் அமைந்திருப்பது. ஒருத்தியையும் ஒருவனையும் ஒன்றுபடுத்துவது காதல். தம்மை ஒன்றுபடுத்தும் காதலைவிட மலோனதாக ஒன்று இருப்பதாக அவர்களுக்குத் தோன்றாது. அவளுக்கு இவனே எல்லாம். இவளுக்கும் அவனே எல்லாம். எனவே காதலிக்கு இறைவன் காதலன் என்றும் கொள்ளலாம். எல்லா இடத்திலும் தங்கியிருக்கும் அல்லது நிறைந்து இருக்கும் இறைவன் காதலிக்குக் காதலனாகவும், காதலனுக்குக் காதலியாகவும் காட்சியளிக்கிறான். அன்பால் பிணைக்கப்படும் காதலர்களிடையே காணப்படும் காதல் தன்மையையே இறைமை என்கிறார் வள்ளுவர். 2.2.4 சிந்தனைத் தெளிவில் இறைமை சிலர் எப்பொழுதும், எதைப்பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் ஐயம் கொள்வர். தன் நிழலைக் கூட நம்ப மாட்டார்கள். இத்தகையோர் வாழ்க்கையில் மன நிறைவு இல்லாமல் அமைதியின்றி அலைவார்கள். இதற்குக் காரணம் ஒரு பொருளை அல்லது கருத்தைப் பற்றிய முழுமையான அறிவும் (Knowledge), தெளிவான சிந்தனையும், மதிநுட்பமும் இல்லாமையே என்பர் உளவியலாளர்கள். தான், தன் மனத்தில் நினைத்தது சரியானது; இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று எண்ணுகின்றவன் தெளிவான சிந்தனை உள்ளவன். இந்தத் தெளிவான சிந்தனைக்கு அவனது ஆழ்ந்தபுலமையும், மதிநுட்பமுமே காரணம். இத்தகையோன் எந்தவித ஐயமும் இல்லாமல் இதுதான் உறுதியானது சரியானது என உய்த்து அறியத்தக்க ஆற்றல் வாய்ந்தவன். அவன் இறைவனோடு சமமாகக் கருதி மதிக்கப்படுவான் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத் தோடு ஒப்பக் கொளல் (குறள்: 702) (அகம் = உள்ளம், கொளல் = கொள்ளவேண்டும்) ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை முகத்தாலும் கண்ணாலும் உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். 2.2.5 வினைத் திட்பத்தில் இறைமை ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறாது போயின், தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்; நாம் எவ்வளவு முயன்றாலும் வெற்றி கிட்டாது எல்லாம் விதிப்படிதான் நடைபெறும் என அப்படியே சோம்பி விடுவான். வாழ்க்கையில் பலரும் இவ்வாறுதான் தம் முயற்சிகளின் நம்பிக்கையை இழந்து சோர்ந்து விடுகின்றனர். இத்தகைய மனம் படைத்தோரை மனத்திற் கொண்டுதான் வள்ளுவர், ‘சோர்ந்து விடாதே, மன உறுதிகொள் நீ உன் உடலை வருத்தி எவ்வளவு உழைக்கிறாயோ அந்த அளவுக்கு உனக்குப் பலன் கிட்டும்’ என நம்பிக்கை ஊட்டுகிறார். மன உறுதி அளிக்கிறார். உன் உழைப்புப் பாழாகாது. உழைப்பிற்குத் தக்க பலன் கிட்டும். எனவே, தொடர்ந்து முயற்சி செய். உடலை வருத்தி நன்கு உழைக்கக் கற்றுக்கொள் என்று வேண்டுகிறார் வள்ளுவர். இன்றைக்கு உலக நாடுகளில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். உழைப்புத்தான் அவர்களது மூலதனம். இதையேதான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுரையாக வழங்கியுள்ளார். • வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனை வள்ளுவர் வாழ்ந்த காலம், ஊழ் நம்பிக்கை மிகுந்த காலம். எனவே, ‘ஊழ்’ என்று ஓர் அதிகாரத்திற்கே தலைப்புக் கொடுத்துள்ளார். ஊழை விட வலிமை உடையது வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஊழின் பெருவலி யாஉளமற்று ஒன்று சூழினும் தான் முந்துறும்? (குறள்: 380) (வலி = ஆற்றல், யாஉள = எது உண்டு, சூழினும் = சூழ்ந்தாலும், முந்துறும் = முன்னால் வரும்) மேற்குறிப்பிட்டவாறு கூறிய வள்ளுவர், ஊழின் மேல் பழிசுமத்தி, முயற்சி எதுவும் செய்யாமல், தம் வாழ்நாளை வீணாக்கிச் சோம்பியிருக்கும் மக்களையும் நினைத்துப் பார்க்கிறார். சமுதாயச் சிந்தனையாளராகிய வள்ளுவர், மக்களின் இந்த மனப்போக்கை மாற்றவே, இன்றையளவுக்கும் முற்போக்குச் சிந்தனையாகக் கருதப்படும் அரிய கருத்தாகிய, முயற்சியால் ஆகாதது எதுவுமே இல்லை என்ற கருத்தை வழங்கியுள்ளார். வேறு சில இடங்களில் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று றிப்பிட்டுள்ளார். இக்கருத்து உலகளாவியநிலையில் சொல்லப்பட்ட மிக உயர்ந்த ஒரு கருத்து. இன்றைக்கும் முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்ற நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு கருத்து. • தன் முயற்சி தங்கள் வாழ்வு வளம்பெற, கேட்பவற்றைக் கொடுப்பவன் இறைவன். அவன் எல்லாம் வல்லவன். அவன் நினைத்தால் கிட்டாதது ஒன்றும் இல்லை என்று இறைவன் புகழ் பாடி, இறைவனிடமே தம்மை ஒப்புவித்துச் சரணம் அடைந்து, புண்ணியப் பயணம் மேற்கொள்வர். இறை நம்பிக்கை உடையவர்கள். இத்தகைய மனநிலையை மக்கள் பெறுவதற்குரிய காரணம் யார்? சமயச் சிந்தனையாளர்கள். அத்தகைய சிந்தனையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில், ‘தன்முயற்சி’ என்னும் புதிய சிந்தனையை வழங்கியவர் வள்ளுவர். எனவே, இறைவன் மீது பழிபோடாமல், எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று இறைவன் மீது நம் பாரத்தை இறக்கி வைக்காமல், நாமே நம் பாரத்தைச் சுமக்கும், நாமே நமக்குரிய தகுதியை நம் முயற்சியால் பெறும் மனப்பக்குவமே வள்ளுவர் வலியுறுத்தும் இறைமை.
2.3 இறைமையும் வழிபாடும் ‘வள்ளுவர் சமயத்தின் புறத்தோற்றத்தில் தம்மைப் பறிகொடுத்து விடவில்லை. சமயவாதிகளின் தாக்கம் அவரை மயக்கிவிடவில்லை. சமயத்திலிருந்து வள்ளுவர் ஒதுங்கவும் இல்லை. வள்ளுவர் சமயங்களை நன்கு கற்றிருக்கிறார். சமய உண்மைகளை ஊடுருவி நோக்கியிருக்கிறார். சமய உண்மை வள்ளுவருக்குப் புரிந்திருக்கிறது. சமய அடிப்படை வள்ளுவருக்குத் தெரிய வந்திருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார்தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. 2.3.1 அடி வணங்குதல் பணிதல் என்பது எல்லாருக்கும் நல்லது. அதிலும் செல்வர்க்குப் பணிதல் அமைந்தால் அது எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்பது வள்ளுவர் கருத்து. பணிதல் அல்லது அடங்குதல் எல்லா நிலையிலும் ஒருவனுக்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிக் கூறுவதற்கு ஓர் அதிகாரமே அமைத்துள்ளார் வள்ளுவர். அதிலிருந்து பணிதலுக்கு வள்ளுவர் கொடுத்த சிறப்புப் புலப்படும். இறைவழிபாட்டில், அது மிக மிக இன்றியமையாதது என்பதை உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் அடியவன், இறைவனின் தாளை, அதாவது அடியை வணங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். இறைவாழ்த்தில், ‘நல்தாள் தொழாஅர் எனின்’ ‘மாண் அடி சேர்ந்தார்’, ‘வேண்டாமை இலான்அடி’ ‘உவமை இல்லாதான் தாள்’, ‘ஆழி அந்தணன்தாள்’ ‘எண்குணத்தான் தாள்’ ‘இறைவன் அடி சேரார்’ என ஏழு குறள்களில் தாளை வணங்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இவ்வாறு இறைவனின் தாளை வணங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குரிய காரணம் என்ன? பணிதல் வேறு, அடிபணிதல் வேறு. மரியாதைக்காக அல்லது மதிப்புக் கொடுப்பதற்காகப் பணிந்து செயல்படுவது பணிதலின்பாற்பட்டது. ஏற்கனவே சிலரின் இயல்பு எப்பொழுதும் பணிவுடனே அமைந்திருக்கும். அத்தகையோரை, ‘அவர் மிகப்பணிவானவர். அவர் இயல்பு அப்படித்தான்’ என்று குறிப்பிடுவர். ஆனால் அடிபணிதல் என்றால் அது தன்னை முழுமையாக ஒப்புவித்தலாகும். தன்னை முழுமையாக எப்பொழுது ஒப்புவிப்போம்? ஏன் ஒப்புவிக்க வேண்டும்? ஒருவரை முழுமையாக நம்பும்பொழுது அவரிடம் நம்மை ஒப்புவிப்போம்.காதல் வயப்படுபவர்கள் முதல் கடவுளை நம்புபவர் வரையிலும் நம்பிக்கையின் அடிப்படையில் முழுமையாகத் தம்மை ஒப்புவிப்பார்கள். • குகனின் பணிதல் கம்பராமாயணத்தில், காட்டுக்குச் சென்ற இராமனைக் குகன் வரவேற்கும் காட்சியைக் கம்பன் சிறப்பாக எடுத்துரைப்பார். தசரத சக்கரவர்த்தியின் மகன் இராமன் மீது அன்பு கொண்டிருந்தவன் வேட்டுவனாகிய குகன், அவன் இராமன் காட்டிற்கு வந்ததைக் கேள்விப்பட்டு இராமனைப் போய்ப் பார்க்கவேண்டும், தான் அவன்மீது கொண்ட முழுமையான அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மிகவும் விரும்புகிறான். தான் விரும்பும் தேனையும் மீனையும கொண்டு இராமனைச் சந்திக்கச் செல்கிறான். உள்ளமெல்லாம் அன்பில் நிறைந்த நிலையில் இராமனின் முன்னால் குகன் நிற்கும் காட்சியைக் கம்பன் மிக அழகாக எடுத்துரைப்பார். அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன் நல்தவப் பள்ளி வாயிலை நண்ணினான் (கம்ப. அயோத்திய காண்டம்: 37) (நண்ணினான் = அடைந்தான்) கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன், இருண்டகுஞ்சி மண் உறப்பணிந்து, மேனி வளைந்து, வாய்புதைத்து நின்றான் (கம்ப. அயோத்தியாகாண்டம்: 40) (மேனி = உடல், குஞ்சி = குடுமி, வாய் புதைத்தது =இருகையாலும் வாயைப் பொத்திக் கொண்டு) என்று குறிப்பிடுகிறார் கம்பன். • உடலும் உள்ளமும் குகன், தன்னை முழுமையாக இராமனிடம் ஒப்படைக்கிறான். அதற்கு அடையாளமாக, இராமனின் முன் அடிபணிந்து நிற்கிறான். கம்பர் அதனை ‘மண்ணுறப்பணிந்து’ என்று வருணிக்கிறார். • பணிதலின் விளைவுகள் வள்ளுவரும் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தலின் அடையாளமாக, அவனது தாள்களை அடிபணிந்து வணங்கவேண்டும். அவ்வாறு வணங்கினால் அதன் வாயிலாக என்ன என்ன நன்மைகள் வரும் என்று குறிப்பிடுகிறார். வள்ளுவர் சமயத் தொடர்பான புறத்தோற்றங்கள், சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றிற்கும் மலோக அகத்திற்கு அதாவது உள்ளத்திற்கு உள்ளப் பக்குவத்திற்குச் சிறப்புக் கொடுத்துள்ளார். எனவே, தாளை வணங்குதல் என்பது உடலளவிலே, மண்ணுறப் பணிந்து விழுதல் என்று கொள்ள இயலாது. மனத்தளவில் முழுமையாக ஏற்றுக் கொண்ட பின்னரே தாள் பணிய விருப்பம் வரும். எனவே தாள்பணிதல் எனும்பொழுது இறைவனுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் என்ற பொருளிலேயே வள்ளுவர் கையாண்டுள்ளார் என்பது புலப்படும். 2.4 இறைமையும் அறமும் அறத்தினை இறைவனாக உருவகப்படுத்திக் கூறுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து வரும் வழக்கமாகும். பண்டைத் தமிழரும் இம்மரபினைப் போற்றியுள்ளனர். • பண்டைய இலக்கியங்களும் அறக்கடவுளும் தொல்காப்பியத்திலும் அறக்கடவுள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது . அறன் அழித்துரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல் (தொல். பொருள்: 270) என்பதில் அறக் கடவுளைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். புறநானூற்றிலும் அறக்கடவுள் பற்றிய செய்தி உள்ளது. வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும் மன்னனை அறக்கடவுள் போல், நீதி வழங்குவாயாக என்று வேண்டுவதாக ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது. அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து (புறம்: 35) (அன்ன = போல, நாட்டத்து =ஆராய்ந்தால்) என்ற பாடல் வரி இதை மெய்ப்பிக்கிறது. வள்ளுவரும் அறத்தை இறைவனாக உருவகப்படுத்தியுள்ளார். 2.4.1 இன்பமும் அறமும் பண்டைத் தமிழர் அறம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே ருதிப் போற்றினர். ஒழுக்க நெறிக்கு உரிய விதிமுறைகளின் தொகுப்பாகவே அறம் கொள்ளப்பட்டது. இத்தகைய மரபில் வந்தவர் வள்ளுவர். அறத்தோடு வாழ்ந்தால் இன்பம் கிடைக்கும். அந்த இன்பம் நிலையான இன்பம். உண்மையான இன்பம். அறத்திற்குப் புறம்பான வகையில் வரும் இன்பம் உண்மையானது அல்ல. தற்காலிகமானது. எனவே இன்பம், பேரின்பம் என்பது அறத்தால்தான் வரும் என்கிறார் வள்ளுவர். இதனை அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல (குறள்:39) (மற்று = பிற, புறத்த = புறம்பானவை)என்ற குறள் மூலம் குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பொருள் கூறும் சிலர், வள்ளுவரால் இங்குக் குறிக்கப்படும் இன்பம் சிற்றின்பமே என்பர். இந்த உலகத்தில் வாழும் இல்லற வாழ்க்கையிலேயே வாழவேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் தெய்வத்தோடு வைத்து எண்ணக்கூடிய சிறப்பைப் பெறலாம் என்று இன்னொரு குறளில் (குறள்: 50) குறிப்பிடுகிறார். எனவே, இங்கு, இக்குறளில் இன்பம் என்பது இரண்டு வகையான இன்பத்தையுமே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என பாகுபாடு செய்வர். இவற்றில் சிற்றின்பம் என்பது இல்லற வாழ்க்கையில் கிடைப்பது என்றும், பேரின்பம் என்பது வீடு (heaven) பேற்றில் கிட்டுவது என்றும் பொதுவாகச் சமயச் சார்புடையவர்கள் குறிப்பிடுவர். அறத்தோடு வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால், இவ்வுலக இன்பத்தை மட்டும் அல்லாமல், மேல் உலக இன்பத்தை, அதாவது வீடுபேற்றில் பெறும் பேரின்பத்தையும் அடையலாம் என்கிறார் வள்ளுவர். பயில்முறைப் பயிற்சி- III அறத்தோடு வாழச் சொல்வது சரி. ஆனால், ஆமாம், அறன் என்றால் என்ன? இதோ வள்ளுவரின் விளக்கம்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. (குறள்:34) வள்ளுவர் அறத்துக்குக் கூறும் விளக்கம் புரிகிறதா? இந்த நோக்கில் மேற்கண்ட பகுதியில் உள்ள குறளின் பொருளை எண்ணிப் பாருங்கள். 2.4.2 கேடும் அறமும் பிற உயிர்களுக்கு எத்தகைய சூழலிலும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கொள்கை வள்ளுவருக்கு உண்டு. ‘புலால் உண்ணாமை’ என்ற அதிகாரம் அமைத்ததற்கு அடிப்படை வள்ளுவரின் இத்தகைய உணர்வே என்பர். இந்த இயல்பைச் சுட்டிக்காட்டி, இவரைச் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறுவதும் உண்டு. பிறருக்குக் கேட்டைத் தருகின்ற தீமையான செயல்களை, ஒருவன் மறந்தும் மனத்தளவில் கூட எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணினால், அவனுக்குக் கேடு வருமாறு அறக்கடவுள் எண்ணும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள்:204) (சூழற்க = எண்ணாதீர், சூழ்தல் = எண்ணுதல், கேடு = துன்பம்) ஒருவனது எண்ணமே, அவனது செயலுக்குக் காரணமாக அமையும். நல்லதை எண்ணினால் நல்ல செயல்களைச் செய்வான். தீயவற்றை எண்ணுபவன் தீமையையே செய்வான். எனவே, ஒருவன் தன் மறதியில் கூட தீயவற்றை எண்ணக்கூடாது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஒருவனது எண்ணமே ஒருவனை அழித்துவிடும். ‘மனசாட்சி படி நட’ ‘மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை’ ‘இவனுக்கு மனசாட்சியே இல்லை’ என்று அடிக்கடி மனசாட்சியைப் பற்றி நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடுகின்றோம். இதற்கு என்ன காரணம்? நம் மனம் நடுநிலைமையானது, அறவயப்பட்டது. நன்மை எது தீயது எது என்பதை அறியும் ஆற்றல் வாய்ந்த ஒன்று. அதற்கு மாறுபட்டு நடக்கின்ற பொழுதுதான் அடிக்கடி மனசாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்றோம். இந்த மனசாட்சியையே, வள்ளுவர் அறம் என்றும் அறக்கடவுள் என்றும் சுட்டுகிறார். அறவயப்பட்ட மனத்திற்கு மாறுபாடான ஒன்றை, அறத்திற்குப் புறம்பான ஒரு செயலை ஒருவன் செய்வானானால், அவன் மனசாட்சியே அவனைத் தண்டிக்கும். மனம் நம் உள் உணர்வுகளை வெளிப்படுத்தும். நம் செயல்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்ளும். நம்மை முழுமையாக நம்பி இருந்த நண்பனுக்குத் துரோகம் செய்தால், அந்தத் துரோகச் செயல் அடிக்கடி நம் மனக் கண் முன்னால் வந்து நம்மைத் துன்புறுத்தும். அதை மறக்க பலமுறை முயன்றாலும் நம்மால் அதை மறக்க முடியாது நெஞ்சில் ஒரு முள்ளாகக் குத்திக் கொண்டே இருக்கும். நம் மன நிலையே நமக்கு நரகமாக அமையும். தன் செயலுக்குத் தண்டனை அனுபவிக்க வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவன் மனமே அவனுக்குத் தண்டனை வழங்குகிறது. எனவேதான் வள்ளுவர் மறந்தும் பிறருக்குத் தீங்கு நினைக்காதே, அவ்வாறு நினைத்தால், அறவயப்பட்ட உன் மனசாட்சி உனக்குத் தீங்கு கொடுக்கும் என்று எச்சரிக்கிறார். மனசாட்சியின் உருவில் அறக்கடவுள் அமைந்துள்ளது என்பதுவும் வள்ளுவரின் இறைமைக் கோட்பாட்டில் ஒன்று. 2.5 இறைவன் ‘இறை’ என்பதற்கு உரிய பொருளை முன்னர் பார்த்தோம். எங்கும் நிறைந்து நிற்கும் பரம்பொருள் இறைவன் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் என்றால் யார்? அவன் எத்தகையவன் என்பன பற்றி ஒரு குறுகிய எல்லைக்குள் உட்படுத்த முடியாத, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற வகையிலான சிறந்த கருத்துகளை வழங்குகின்றார் வள்ளுவர். 2.5.1 அகரமாயிருப்பவன் இறைவனைப் பற்றிப் பல்வேறு வகையான விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, அவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என்பதாகும். சமஸ்கிருதத்தில் இறைவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று குறிப்பிடுவர். தொடக்கமும் முடிவும் இல்லாத எல்லாம் வல்ல இறைவனே எல்லாவற்றிற்கும் தொடக்கமாக அமைகின்றான் என்கிறார் வள்ளுவர். அகர முதல எழுத்து எல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு (குறள்: 1) (முதற்றே = முதலாவதாக) எழுத்துகள் எல்லாம் அகர ஒலியை முதலாகவும் அடிப்படையாகவும் உடையன. அதைப்போல இறைவனும் உலகத்தின் முதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளான். இக்குறளைப் பற்றிப் பலரும் பலவாறு, தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப விளக்கம் கொடுக்கின்றனர். பகவன் என்பது இறைவனைச் சுட்டாது. பகவு + அன் = பகவன் என்பது பகுத்தறிவு உடையவனையே சுட்டும் என்றும் குறிப்பிடுவர். ஆதிபகவன் என்று சுட்டுவது இறைவனையே என ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தக் குறளை முழுவதுமாக ஆய்ந்து நோக்கும்பொழுதும் வள்ளுவருக்கு இறை நம்பிக்கை இருந்தது என்பது தெளிவு. • தமிழ் எழுத்துகளின் தனிச் சிறப்பு தமிழிலுள்ள உயிர் எழுத்துகள் தனித்து இயங்கும். தனித்தும் பொருள் வழங்கும். மெய் எழுத்து அப்படியல்ல. உயிரைச் சார்ந்தே இயங்கும். உயிர் இல்லாமல் அது தனித்து இயங்காது. தொல்காப்பியர் உயிர், மெய் என்று எழுத்துகளுக்குப் பெயர் சூட்டி இருப்பதே அறிவியல் அடிப்படையில் என்பர். நம் உடலை அதாவது மெய்யை இயக்குவது உயிர். உயிர் இல்லாவிட்டால் இந்த மெய் இயங்காது. உடலின் இயக்கம் நின்றுவிடும். இந்த உடலியல் அடிப்படை உண்மையை மனத்திற்கொண்டே தமிழ் எழுத்துகளுக்குத் தொல்காப்பியர் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் மொழிக்கு உயிராக விளங்கும் எழுத்துகளை உயிர் எழுத்து என்றும் உடலாக (மெய்யாக) விளங்கும் எழுத்துகளை மெய் எழுத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். • பாவாணரும் வள்ளுவரும் மேற்குறிப்பிட்டவற்றை மனத்திற்கொண்டே பாவாணர் இந்தக் குறளுக்கு நயவுரை கூறியுள்ளார். பாவாணரின் உரையின் சாரமே வள்ளுவரின் இறைக் கோட்பாட்டுத் தத்துவம் எனலாம். தமிழ் எழுத்துகளில், அகரம் தனித்து உருவாகவும், பிற உயிர் எழுத்துகளில் நுண்ணியதாய்க் கலந்தும், மெய் எழுத்துகளை இயக்கியும் அருவாக அமைந்திருக்கும் சிறப்புடையது. அகரத்தின் இத்தன்மையை வள்ளுவர் கூறும் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் பாவாணர். அருவாகவும் உருவாகவும் இருக்கும் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பர். உலகின் தொடக்கமாக இருக்கும் இறைவன் தொடர்ந்த உலக இயக்கத்தில் நீக்கமற நிலைத்திருக்கிறான் என்பதே இறைவன் பற்றிய வள்ளுவரின் கோட்பாடு ஆகும். 2.5.2 விருப்பு வெறுப்பு இல்லாதவன் மனிதன் ஏதாவது ஒருவகையில், ஏதாவது ஒன்றின்மீது பற்று வைத்திருப்பான். எனவேதான், வள்ளுவர், இன்னொரு இடத்தில், பற்றுடைய மானிடனே, பற்று அற்றவனாக ஒருவன் இருக்கிறான். அவன் இறைவன். அவன் மீது பற்றுக்கொள். அந்தப் பற்று இந்த உலகிலுள்ள பற்றை அழிப்பதற்கு அல்லது நீக்குவதற்கு வாய்ப்பு அளிக்கும் என்று குறிப்பிடுகிறார். விருப்பு, வெறுப்பு எனும் இயல்பு மனிதனுக்கு உரியது. விருப்பு வெறுப்பு இல்லாத மனிதனைப் பார்ப்பது அரிது. விருப்பு, வெறுப்பு என்ற எல்லையைக் கடந்தவன் யார் கடவுள்தானே? எனவேதான் வள்ளுவர் இறைவன் எத்தகையவன் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுது அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அத்தகைய இறைவனை வழிபடுபவனுக்குத் துன்பம் இல்லை என்று குறிப்பிடுகிறார். வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்:4) (வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால், யாண்டும் = எப்பொழுதும், இடும்பை = துன்பம், இல = இல்லை) தனக்குரிய துன்பங்களை நீக்குவதற்கு யாரை அணுகுவது? யாரை வணங்குவது? இறைவனை. அந்த இறைவன் எத்தகையவன் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் வள்ளுவர். விருப்பு உடையவன் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவான். வெறுப்பு உடையவன் வேண்டாதவர்களைப் பழிவாங்குவான். அவன் மனிதன். ஆனால் இந்த இரண்டும் இல்லாதவன் இறைவன். எனவே அவனிடம் நம் குறைகளை - துன்பங்களை முறையிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நமக்கு நன்மை விளைவிப்பான் இறைவன் என்று இறைமைக்கு விளக்கம் தருகிறார் வள்ளுவர். 2,6 தொகுப்புரை பண்டைத் தமிழருக்கு இறைநம்பிக்கை இருந்திருக்கிறது. சமயங்களுக்கான அடிப்படைத் தத்துவங்களின் வெளிப்பாடாகப் (Off shoot) பிற்காலத்தில ‘ஒன்றே குலம்’, ‘ஒருவனே தேவன்’ என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், ‘அன்பே சிவம்’ ‘அருள்பெருஞ்சோதி’ போன்ற தத்துவங்கள் மலர்ந்தன. இவற்றின் வளர்ந்த நிலை, சமயப்பொறை பற்றிய தத்துவங்களை உருவாக்கின. இத்தகைய தத்துவங்களின் முழுமையை வள்ளுவரின் இறைமை பற்றிய கருத்துகளில் காண இயலும். சிறந்த ஆட்சி வழங்கிய மன்னன், இறையாகப் போற்றப்பட்டுள்ளான்.பெண்களின் கற்பின் தன்மை இயற்கையைக்கூட கட்டுப்படுத்தக் கூடியது. முயற்சியினால் ஊழை இயற்கையைக்கூட கட்டுப்படுத்தக் கூடியது. முயற்சியினால் ஊழையும் வெல்லமுடியும். தமிழ் மக்கள் அறத்தினை இறைவனாக உருவகப் படுத்தியுள்ளனர். விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன், எழுத்துகளின் தொடக்கமாகிய அகரமாயிருப்பான். இத்தகைய கருத்துகளையும் வள்ளுவர் கூறியுள்ளார். 3.1 இல்லறம் தமிழில் ‘இல்‘, ‘இல்லம்‘ என்பவை வீட்டைக் குறிக்கும். இல்லமாகிய வீட்டை அன்பாலும், அருளாலும், தொண்டாலும், தியாகத்தாலும் ஆளுபவள் இல்லாள் என்று அழைக்கப்பட்டாள். இல்லாளாகிய மனைவியுடன் (மனை என்றாலும் இடம் அல்லது வீடு என்று பொருள்) கூடி வாழும் இல் வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறியை ‘இல்லறம்‘ என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். 3.1.1 இல்வாழ்க்கை பற்றிய விளக்கம் இல்லத்திலிருந்து, இல்லாளோடு கூடி வாழும் வாழ்வின் சிறப்பைக் கூறுவது இல்வாழ்க்கை என்று பொதுவாக இல்வாழ்க்கைக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. ‘கற்புடையாளோடு இருந்து, இன்பம் துய்த்துவரும் அற வாழ்க்கையின் இன்றியமையாமையையும், சிறப்பையும் எடுத்துக்கூறுவதுதான் இல்வாழ்க்கை’ என்கிறார் பாவாணர். (திருக்குறள் உரைக் களஞ்சியம் , ப:7) ‘இல்வாழ்க்கை என்பது குடும்பத்திற்காக வாழும் வாழ்க்கை எனவும், உலகுக்காக வாழும் வாழ்க்கை எனவும் இருதிறப்படும் (வகைப்படும்). முதலது பின்னதின் வளர்ச்சிக்கு வழிகாட்டி‘ என திரு.வி.கலியாணசுந்தரனார் குறிப்பிடுகின்றார். இல்வாழ்க்கை இயல்பானது; பெரும்பான்மையானது; உலகம் நடக்க இன்றியமையாதது; துறந்தார்க்குத் துணையானது. இல்லறம், துறவறம் எனும் இருவகை அறத்தினுள்ளும், பொதுவாக ‘அறன்‘ என்று சொன்னால், அது இல்லறத்தையே சிறப்பித்துக் கூறும் என்பது வள்ளுவரது கருத்து. எனவே, இல்லறத்திற்கு விளக்கம் கொடுக்கும் வள்ளுவர். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று. (குறள் : 49) (இல்ஆயின் = இல்லாவிட்டால்) என்று குறிப்பிடுகிறார். பிறர் பழித்துச் சொல்லாத வகையில் அறவழியில் வாழும் வாழ்க்கையே இல்வாழ்க்கை எனப்படும் என்பது வள்ளுவர் இல்வாழ்க்கைக்குக் கொடுக்கும் விளக்கம் ஆகும். ஒளவையாரும் ‘இல்லறமல்லது நல்லறமன்று‘ என்று குறிப்பிடுகின்றார். 3.1.2 இல்வாழ்க்கையின் சிறப்பு திருக்குறளில் இடம்பெற்றுள்ள இல்வாழ்க்கை பற்றிய செய்திகள் முழுமையும் நோக்கும் பொழுது, இல்வாழ்க்கைக்குத் திருவள்ளுவர் கொடுத்துள்ள சிறப்பு புலப்படும். ஆணும் பெண்ணும் குடும்பமாக வாழும் இல்வாழ்க்கை சிறப்புடையதாக அமையுமானால், இல்வாழ்க்கையிலேயே இந்த உலகிலும், வீடுபேற்றிலும் கிடைக்கக் கூடிய எல்லா இன்பங்களும் சிறப்புகளும் கிடைக்கும் என்பது குறள் தரும் இன்றியமையாத கருத்து. எனவேதான், பிறரையும் நல்ல நெறியில் செயல்படச் செய்து, தானும், அறவழியிலேயே இல்வாழ்க்கை வாழ்தல், காட்டிற்குச் சென்று தவம் செய்வதைவிடவும் வலுவானது என்கிறார் வள்ளுவர். இதனை, ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்:48) (ஒழுக்கி = ஒழுகச்செய்து, இழுக்கா = தவறாத, நோற்பார் = தவம்செய்வார், நோன்மை = வலிமை) எனும் குறள் மூலம் வெளிப்படுத்துகிறார். குடும்ப வாழ்க்கையைத் துறந்து வாழ்வதையும், அதன் சிறப்பையும் வேறொரு தலைப்பில் கூறினாலும், இல்வாழ்க்கையே சிறப்புடையதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
4.1 அன்பு வாழ்க்கைத் துணை மீது கொண்ட அன்பும், புதல்வர் மீது கொண்ட அன்பும் இல்வாழ்க்கைக்கு அரண் சேர்ப்பன, அதே போல், சமுதாயத் தொடர்பு கொள்ளும் இல் வாழ்வானுக்கு, ‘அன்பு‘ ஒரு சிறந்த பண்பாக அமைய வேண்டும் என வள்ளுவர் கருதுகிறார். அந்த அடிப்படையிலே வள்ளுவர் தம் கருத்துகளைக் கூறுகிறார். • சமயங்களும் அன்பும் இந்த உலகத்தில் அன்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதனைப் பல சமயங்களும், அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்து சமயத்தில் குறிப்பாகச் சைவ சமயத்தில், அன்புதான் கடவுள். ‘அன்பே சிவம்‘ என்பது அவர்கள் கோட்பாடு. கிறித்தவர்களும், ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்‘ (God is Love) என்று குறிப்பிடுகிறார்கள், இசுலாமும், ‘மனிதனிடம் அன்பு செலுத்துகிறவனுக்கே இறைவன் கருணை காட்டுவான்‘ என்கின்றது. ‘அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்‘ என்பது சமண சமயக் கோட்பாடு. எனவே, அன்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. உலகின் இயக்கமும், உயிர்களின் பிணைப்பும் அன்பினாலேயே அமைந்துள்ளன. அன்பின் பெருமையை உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, அன்பு எத்தகைய தன்மையை உடையது; அது இல்வாழ்வானுக்கு எவ்வாறு பயன்படும் என்பதைச் சுட்டுகிறார். மேலும், இல்வாழ்வான் தான் சார்ந்த சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளும் போது அன்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 4.1.1 அன்பின் எல்லை அன்பு என்பது ஊற்றுப்போல் தானாக வெளிப்படும் ஓர் உணர்வு. ஆள் பார்த்து, பொருள் பார்த்து, அது தோன்றுவதில்லை. அது வெளிப்படுவதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அன்புக்கு எல்லையும் கிடையாது. எனவேதான் வள்ளுவர், அன்பைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். (குறள்:71) (தாழ் = தாழ்ப்பாள் (Lock), ஆர்வலர் = ஆர்வமுடையவர்; புன்கணீர் = புல்லிய கண்ணீர் ; பூசல் = வருத்தம், தரும் = வெளிப்படும்) என்கிறார். ஒருவரது அன்பிற்கு - அதைப்பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் - தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்களைக் காணும் பொழுது, தம்மை அறியாமலே, அன்புடையாரின் கண்கள், சிந்தும் நீரே அவர் உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாருக்கும் தெரியப்படுத்தும் என்கிறார் வள்ளுவர். அன்பு என்பது எல்லையற்ற, கட்டுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்பது அன்புக்கு வள்ளுவர் கொடுக்கும் விளக்கம். அன்பின் பெருமையை உணர்ந்த வள்ளுவர், ‘அன்பு உடையார், எல்லாம் உடையார்‘ என்று கூறுகிறார். அன்பு ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தி, அன்பு, பிறரிடம் விருப்பத்தையும், அவ்விருப்பம் நட்பையும் ஏற்படுத்தும். இத்தகைய அன்பின் பிணைப்பால் இல்வாழ்க்கை எனும் சக்கரம் சுழல்கிறது. இத்தகைய அன்பு சமுதாயத்திலுள்ள பிறரின் நட்பை ஏற்படுத்துகிறது. இதனால் நல்லுறவு கொண்ட ஒரு சமுதாயம் அமைகிறது என்பது வள்ளுவரின் கருத்து. 4.1.2 அன்பிலார் வாழ்க்கை இல்வாழ்க்கையில் அன்பு என்பது எத்தகைய சிறப்பு வாய்ந்த பண்பாகத் திகழ்கிறது என்று கூறிய வள்ளுவர், அன்பு இல்லாதார் வாழ்க்கை எத்தகையது என்பதையும் சுட்டுகிறார். பொதுவாக, உடலிலுள்ள உறுப்புகள் என்று குறிப்பிடும் பொழுது, கண்ணுக்குப் புலப்படுகின்ற உறுப்புகளையே கூறுவது மரபு. கை ஓர் உறுப்பு, கண் ஓர் உறுப்பு என்று சொல்லுகிறோம். இவையெல்லாம் கண்ணுக்குப் புலப்படும் புற உறுப்புகள். ஆனால், கண்ணுக்குப் புலப்படாத அக உறுப்பு ஒன்றையும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். அதனை அன்பு என்று சுட்டுகிறார். கை, கால் போன்ற புற உறுப்புகளைப் போல, அன்பும் ஒர் உறுப்பே அது அக உறுப்பு. உறுப்புகளாகிய கை, கால்கள் பயன்தரும் வகையில், இயங்குவதற்கு அக உறுப்பாகிய அன்பு ஒரு காரணம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். எனவே தான், புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு (குறள்: 79) (புறத்து = புறம்பான, உறுப்பு = அவயம், யாக்கை = உடல், அன்பு இலவர்க்கு = அன்பு இல்லாதவர்களுக்கு) உடலின், புறத்துள்ள உறுப்புகள் கை, கால் முதலியன. அகத்து அதாவது உள்ளத்துள் உள்ள ஓர் உணர்வு அன்பு. அதையே அக உறுப்பு என்கிறார் வள்ளுவர். உறுப்புகளால் உருவாக்கப்பட்ட இந்த உடலில், அகத்து உறுப்பாகிய, அன்பு இல்லா விட்டால், புற உறுப்புகள் என்ன பயனை விளைவிக்கப்போகின்றன? புற உறுப்புகள் அன்பால் இயக்கப்பட்டால்தான் பயனுடைய வாழ்க்கை அமையும் என்கிறார் வள்ளுவர். புற உறுப்புகளே, ஒரு மனிதனின் செயல்களுக்குக் காரணமாக அமைகின்றன. அச்செயல்கள், நன்மையை விளைவிக்கும் அல்லது நல்ல பயனை விளைவிக்கும் செயல்களாக அமைவதற்கு, ஒருவனின் உள்ளத்திலுள்ள அன்பே காரணமாகும் என்கிறார் வள்ளுவர். இல்வாழ்க்கையில் ஈடுபடுகின்ற ஒருவன், தனக்கும் பிறருக்கும் நன்மையை அல்லது பயனை விளைவிக்க வேண்டுமென்றால் அவன் உள்ளத்தில் அன்பு நிறைந்திருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. பிறரிடம் அன்பு இல்லாதவர்கள் சுயநலம் (selfishness) உடையவர்களாக இருப்பார்கள். அவர்களது செயல்கள் பிறருக்குத் நன்மை தராது. எனவே அன்பிலாதார் வாழ்க்கை, தமக்கும் பிறருக்கும் தீமை தருவதாகவே அமையும்.
-- Edited by Admin on Tuesday 25th of July 2023 06:37:50 PM
5:1 துறவு பொதுவாகத் ‘துறத்தல்’ என்றால் ‘விட்டு விடுதல்’ என்று பொருள்படும். பிறர் மீது அல்லது இன்னொரு பொருள் மீது கொண்டிருக்கும் பற்றை விட்டுவிடுதல் அல்லது பற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பதாகும். ‘துறவு’ அல்லது ‘துறத்தல்’ என்பது பற்றிப் பல கருத்துகள், பல விளக்கங்கள், கூறப்படுகின்றன. குறளுக்கு உரை எழுதிய சமயவாதிகள் ஒரு வகையாகவும், பகுத்தறிவுவாதிகள் இன்னொரு வகையாகவும் விளக்கம் தருகிறார்கள். சமயவாதிகள், இல்வாழ்க்கையை விட்டு, விலகி, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத காடுகளுக்குச் சென்று, தனித்து இருந்து, தன்னை ஒறுத்துத் உடல் அசௌகரியங்களை வலிந்து தானே மேற்கொண்டு தவம் செய்வது என்பர். பதவியின் மீது பற்றுக் கொள்ளாத ஒருவர், அதைத்தானாக விட்டு விடுவதையும், துறவு, அல்லது துறத்தல் என்று குறிப்பிடுவர். தனக்கு இருக்கும் மிகுதியான பொருள்கள் மீதும், சௌகரியங்கள் (Comforts) மீதும் பற்று இல்லாதவர்கள், அவற்றை விட்டு விட்டு, தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, குறைந்த அளவுப் பொருட்களுடன் வாழ்பவர்களையும், வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து வாழ்கிறார் என்பர். 5:2 வள்ளுவரின் துறவு விளக்கம் மனத்து அளவில் துறந்து, பற்று இல்லாமல் வாழ்வது, துறவு என வள்ளுவர் கூறுகிறார். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. புறத்தோற்றத்தில் இருப்பதை விட, அகத்துள், மனத்துள் இருக்க வேண்டியதையே எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறார். துறவு என்ற தலைப்பிலும் அதையே கூறுகிறார். 5:2:1 பற்றும் துறவும் பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்று உண்டு.அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு. வாழ்க்கைக்குப் பொருள் முக்கியம். ‘பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை’ என்றே இன்னொரு இடத்தில் வள்ளுவர் குறிப்பிடுவார். எனவே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குப் பணம் தேவை. பணத்தை விரும்பிச் சேகரிக்க வேண்டும். ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது என்பதே வள்ளுவர் கருத்து. குடும்பத்தை நடத்திச் செல்வதற்காகப் பொருளை ஈட்டவேண்டும். ஈட்டிய பொருள், பிறருக்கு உதவுவதற்கே. பொருளைப் பிறருக்கும் உதவுமாறு பயன்படுத்தாவிட்டால், ஒருவன் ஈட்டிய பொருளால் எந்த விதப் பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர். 5:2:2 துன்பத்தை விலக்குவது துறவு ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்தின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான், பொருள் ஈட்டிக் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது. எனவே, பொருள் ஈட்டுவது அவனது கடமை. பொருள் ஈட்டுவது தன் கடமையை நிறைவேற்றுவதற்குத்தான் என்று எண்ண வேண்டும். கடமைக்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணாமல், தனது சுகபோகங்களுக்கு என்று எண்ணுபவனே, பொருள் மீது பற்றுக் கொண்டு, அதை எவ்வழியினாலும் ஈட்டவேண்டும், மிகுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். அவ்வாறு எண்ணிப் பொருளைச் சேகரிப்பவனுக்கு அதனால் தீமை வரும் என்கிறார் வள்ளுவர். பணத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவன் தீய வழியில், ணத்தை ஈட்ட முயலுவான்; குற்றவாளி ஆவான்; அதன் பயனாக வரும் பிற விளைவுகளை எதிர்கொள்வான். உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுக்குக் கூறும் இலக்கணம். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். (குறள் எண்: 341) (யாதனின், யாதனின் = எவ் எவற்றிலிருந்து; நோதல் = துன்புறுதல்; அதனின், அதனின் = அவ் அவற்றிலிருந்து) நீங்கிய பொருட்கள் ஒன்று ஒன்றாகச் சுட்டி, அவை ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய துன்பத்தினின்றும் விடுதல் பெற்றமையைக் குறிக்கத்தான் - ‘யாதனின், யாதனின்’, ‘அதனின் அதனின்’ என்று இரட்டித்துச் சொல்லப் பெற்றுள்ளது. பதவியாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், சுகங்கள் (Comforts/ pleasure) ஆக இருந்தாலும், அவற்றின் மீது பற்றுக் கொள்ளாதீர். பதவியின் மீது பற்றுக் கொண்டால், அந்தப் பதவியே உங்களுக்குத் தீமையாக வரும்; பணத்தின் மீது பற்றுக்கொண்டு அதைத் தனக்கு எனப் பெருக்கிக் கொள்ள விழைந்தால் அப்பணமே உங்களுக்குப் பகையாக மாறும்; சுகங்களை விரும்பி நாடிச் சென்றால், அச்சுகங்களே உங்களுக்கு நோயாக வரும் என்று எச்சரிக்கிறார். எனவே தான் யாதனின் யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன் என்றார். அது சரி. ‘நீங்குதல்’ என்பதன் பொருள் என்ன? பணம் வேண்டாம்; பதவி வேண்டாம்; இவ்வளவு சுகங்கள் வேண்டாம் - என்று எல்லாவற்றையும் மறுப்பதா? அவற்றை எல்லாம் மறுப்பது தான் அறநெறி என்றால் அவ் அறவழியால் இவ்வுலக வாழ்க்கைக்கு என்ன பயன்? 5.2.3 துறவும் உலகியல் இன்பமும் வாழ்க்கை வாழ்வதற்கே. உலகியல் இன்பங்கள் யாவும் துய்ப்பதற்கே ஆம். எனவே துறவு என்பது காவி உடுத்தலோ, காடு தேடிச் செல்வதோ அன்று. துறவு விரும்பும் ஒருவன் செல்வம், வாய்ப்பு, வசதி ஆகியவை தனக்கு இருக்கும் போதே, அவை பற்றிய மனப்பற்றை நீக்கி உலகிடை வாழவேண்டும். தாமரை இலைத் தண்ணீராய் வாழும் துறவு இது. இவ்வாறு மனப்பற்று நீங்கியபின ஒருவன இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய நன்மைகளும் இன்பங்களும் பலவாகும். வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டு இயற்பால பல.(குறள் எண் 342) (வேண்டின் = (துறவை) விரும்பினால்; உண்டாகத்துறக்க = செல்வம், வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இருக்கும்போதே அவற்றின் மீது பற்றின்றித் துய்க்க; துறந்த பின் = அவ்வாறு பற்றுதல் கொள்ளாமல் அனுபவிக்கத் தெரிந்து கொண்ட பின்னர்; ஈண்டு = இவ்வுலக வாழ்க்கையில்; இயற்பால = உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய, உங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய) இதுவே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு ஆகும். புலன்களின் மேல் ஆளுமை செலுத்துங்கள்; புலன்களின் வலையில் சிக்க வேண்டாம். இவ்வுலக வாழ்க்கையை முழுமையாகத் துய்க்க விரும்பினால் துறவினை மேற்கொள்ளுங்கள்; துயரங்களுக்கு ஆட்படாமல் வாழ்க்கை இன்பத்தை அனுபவியுங்கள். அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு.(குறள் எண் : 343) புலன்களை வெல்லுங்கள் (அடல் = வெல்லுதல்); வெல்லுதல் என்பதன் பொருள் கொல்லுதல் அன்று. புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், அவற்றின் தேவைகளை உங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். இன்ப நிகழ்வின் உந்துதலை நாடாதவருக்கு, துன்ப நிகழ்வுகள் உறுத்துதல் இல்லை. 5.2.4 ஆணவம் - துறவுக்குப் பகை ஆகும் பற்றுகள் என்றால், பதவிப் பற்று, பணப்பற்று முதலியவைகள்தானா? இல்லை, இதற்கு மேலும் ஒரு பற்று இருக்கிறது. அது ஒருவன், தன்மீது கொண்டுள்ள பற்று. இந்தப் பற்றுத் தானே, பிற பற்றுகளையும் உருவாக்குகிறது. எனவே, ஒருவன் தன் மீது கொண்ட பற்றாகிய ‘யான்’ ‘எனது’ என்பதை அழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். யான், எனது என்ற இயல்பு உடையவர்களை ‘ஆணவம்’ உடையவன் என்பார்கள். இந்து சமயத்தில், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுன்றன. இவற்றை அழித்தால் தான், ஒருவன் இறைவனை அடைய முடியும். வள்ளுவர் ஆணவத்தைச் ‘செருக்கு’ என்று குறிப்பிடுகிறார். யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள் எண் 346) ஆங்கிலக் கவிஞன் மில்டன் (John Milton) எழுதியது சுவர்க்க நீக்கம் (Paradise Lost). இதில், இயேசுவானவருக்கு எதிராக இருப்பவன் சாத்தான். கடைசிவரையிலும், நான், தான், என்கின்ற ஆணவத்தை அவன் விடவில்லை. அவனுடைய ஆணவத்தின் பயனாகச் சுவர்க்கத்தை விடுத்து, நரகத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பொழுதும், ‘இயேசுவினிடத்தில் அடிமையாக வாழ்வதை விட, நரகத்தில், அரசனாக இருப்பதையே விரும்புகிறேன். இயேசுவுக்கு அடிபணியமாட்டேன்’ என்று ஆணவமாக இருந்தான். ஆணவம் ஒருவனை அழித்துவிடும்; அதனால், யான், எனது எனும் செருக்கை விட்டுவிடுங்கள். (துறந்துவிடுங்கள்). அவ்வாறு செய்வீர்கள் ஆனால் வானவர்களாகிய தேவர்களுக்கும் மலோன வீடுபேறு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர். 5.2.5 உடைமைகள் - மயக்கச் சுழலில் தள்ளும் பற்று வைக்கத்தக்க பொருள் ஒன்றுகூட இல்லை என்னும் நிலையே துறவில் முழுமை தரும். அவ்வாறு இன்றிப் பற்றி நிற்கக் கூடியதாக ஏதேனும் ஒரு உடைமை கருதப்படுமாயின் அதன் வழி பிற பற்றுகள் தொடர ஏதுவாகும்; மீண்டும் புலன்களின் மயக்கத்திற்கு உட்படக் காரணமாகும். இயல்புஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை; உடைமை மயல் ஆகும் மற்றும் பெயர்த்து. (குறள் எண்344) (நோன்பிற்கு = துறவு என்ற தவத்திற்கு; மயல் = மயக்கம்) எனவே, யான், எனது எனத் தன் உடலையும், உடைமைகளையும் கருதி அவற்றின் மீது பற்று வைக்கும் மனச்செருக்கை முற்றாக அகற்றுவீர்களாக, எனக் கூறுகிறார் வள்ளுவர்.
5:3 மயல் தீர்க்கும் மருந்து ‘யான்’ என்ற எண்ணமும் ‘எனது’ என்று குவியும் உடைமைகளும் ஒன்றை ஒன்று தொற்றி வருவன. அவை தாம் சார்ந்த மனிதனை ஆணவ மயக்கத்தில் தள்ளுவன. இந்த மயக்கத்தைத் தீர்க்க மருந்து உண்டா? 5:3:1 பற்றை விடமுடியுமா? பற்றுகளை விடுவது கடினம். ஒரு பற்றை விட்டால், இன்னொரு பற்று வந்து சேர்வது இயல்பு. புகை பிடிப்பதனால் வரும் தீமையை உணர்ந்தவன், இதை நிறுத்திவிட்டு இன்னொரு தீய பழக்கத்தைப் பற்றிக் கொள்கிறான். கேட்டால், ‘அதை மறப்பதற்கு இது’ என்பான். இப்படி, ஒன்றை விட்டு இன்னொன்றிற்குத் தாவிக்கொண்டிருப்பான். இது மனித இயல்பு. எனவே பற்றை எளிதில் விட இயலாது. இவ்வாறு மனிதனால் விட இயலாத பற்றை, ஒருவன் முழுமையாக விட முடியும். அவன்தான் கடவுள். அவன் எல்லாம் கடந்தவன். எனவே எல்லாம் கடந்து உள்ள ஒருவனைக் ‘கடவுள்’ என்று தமிழர்கள் அழைத்து மகிழ்கின்றனர். தமிழில் ‘கடவுள்’ என்பதற்குப் பற்று பாசங்களைக் ‘கடந்தவன்’ என்று பொருள் கூறுவார்கள். அந்தக் கடவுளை வள்ளுவர் ‘பற்று அற்றவன்’ என்று அழைக்கிறார். பற்று அற்றவன்தான், எல்லாவற்றையும கடக்க முடியும். 5:3:2 நோய்க்கு நோயே மருந்தாகுமா! எதன் மீதும் பற்றுக் கொள்ளவேண்டாம் என்று கூறிய வள்ளுவர், ஒருவர் மீது பற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். இது முன்னுக்குப் பின் முரண்தானே? இது என்ன நியாயம் என்று கேட்கலாம். ஆனால் யாரைப் பற்றச் சொல்கிறார் என்பதை அறிந்தால், அதை முரண் என்று கருதமாட்டீர்கள். யாரைப் பற்றச் சொல்கிறார்? பற்று அற்றவனை. பற்று அற்றவன் யார்? கடவுள். அவரை ஏன் பற்ற வேண்டும்? மனிதனுக்கு இல்லாத தன்மை அவரிடம் இருக்கிறது. மனிதனால், பற்றை விட முடியாது, முன்பு கூறியது போல், ஒன்றை விட்டால், இன்னொன்றைப் பற்றுவான். கடவுள் ஒருவரால் தான் பற்றை விட முடியும். எனவே, பற்று அற்றவனைப் பற்றுங்கள். அந்தப்பற்று பிற பற்றை விடுவதற்குத் துணை செய்யும் என்று கூறுகிறார் வள்ளுவர். பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (குறள் எண்: 350) மனிதனுக்கு இயல்பாக இருக்கும் பற்றையும் அதை விடுவதற்குரிய வழியையும் கூறுகிறார். அந்த வழியை இறைவனை அடையும் மார்க்கமாகக் கூறுகிறார். இதில், கடவுள் என்றால் யார் என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். துறவு என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். பற்று அற்ற ஒருவன் இறைவன் என்றும், பிற பற்றுக்களைத் துறந்து, பற்று அற்றவனாகிய கடவுளைப் பற்றுவது துறவு என்றும் எவ்வளவு எளிமையாக விளக்கம் கொடுக்கிறார் பார்த்தீர்களா? 5:3:3 மனிதனும் தெய்வமாகலாம்! கடவுளைப் பற்றிப் பெரிய பெரிய வேதாந்தங்களையும், தத்துவங்களையும் கூறுவார்கள். ஆனால் வள்ளுவர் ‘பற்றற்றான்’ என்று ஒரே ஒரு சொல்லில் கடவுளைப் பற்றிய தத்துவங்களை எல்லாம் அடக்கியுள்ளார். இறைவனைப் பற்றி இதை விட எளிமையான விளக்கம் கொடுக்க முடியுமா? எளிமையாக மட்டுமா இருக்கிறது? பொருத்தமாகவும் இருக்கிறது அல்லவா? இக்கருத்து கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமா பொருந்தும்? இல்லை. கடவுளே இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளுக்கும் பொருந்தும். எப்படி? கடவுளை நம்பாதவர்கள், சில சிந்தனையாளர்கள் மீது அல்லது தலைவர்கள் மீது பற்றுக் கொள்வார்கள். அச்சிந்தனையாளர்கள் அல்லது தலைவர்களின் ஈர்ப்பு அவர்களிடம் ஒரு தீவிரப் பற்றுதலை உண்டாக்கி இருக்கும். அவர்களைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார். நீங்கள் யாரைப் பின்பற்றினாலும் பரவாயில்லை; அவர்களுக்கும் சில தகுதிகள் வேண்டும். அந்தத் தகுதிகள் பதவி, பணம், சுகம், புகழ் முதலியன மீது பற்று இல்லாமை ஆகும். இவ்வாறு உலகபிரகாரமான இப்பற்றுக்களைத் துறந்த பற்று அற்றவர்களையே பற்றுங்கள். அவர்கள் கொள்கைகளைப் பின்பற்றுங்கள் என்று கூறுகிறார். அத்தகைய மனிதன் இறைவனுக்குச் சமமானவன். எனவே, இன்னொரு இடத்தில் சிறந்த மனிதர், ‘வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்று குறிப்பிடுவார். இவை, எதைக் காட்டுகின்றன? வள்ளுவர வாழ்ந்த சமுதாயத்தின் பண்பட்ட உணர்வுகளையும், சிந்தனையின் முதிர்ச்சியையும் காட்டுகின்றன. இச்சிந்தனைகள் தமிழர் பண்பாட்டின் கருவூலங்கள். 5:4 துறவுக்குத் திறவுகோல் தவம் பற்றுகளை விடவும், பற்று அற்றவனைப் பின்பற்றவும் மனப்பக்குவம் வேண்டும். அந்த மனப்பக்குவத்தை எவ்வாறு அடைவது? அதற்கும் வழி சொல்லுகிறார் வள்ளுவர். தவம் செய்ய வேண்டும் என்கிறார். 5:4:1 தவம் எனப்படுவது யாது? பொதுவாகத் தமிழில், ‘தவம்’ என்ற சொல் நோன்பு, ஒறுத்தல், பொறுத்தல், பேறு என இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை வழங்கும். சமயவாதிகள் கூறும் ‘தவம்’ உண்ணா நோன்பு; வெயில், மழை, பனி ஆகியவற்றைத் தாங்குதல்; நீரில் மூழ்குதல், நெருப்பில் நிற்றல், ஆகியவை. ஆனால் வள்ளுவர், ‘தவம்’ என்பதற்கு வேறுவிதமான விளக்கம் கொடுக்கிறார். ‘உலகில் முயற்சியால் வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவம்’ என்கிறார் வள்ளுவர். சமயவாதிகள் ‘தவம்’ என்பதற்குக் கொடுக்கும் விளக்கத்திற்கும், வள்ளுவர் கூறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு பாருங்கள். சமயவாதிகள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வள்ளுவர், உணர்வுகளுக்கு - மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். எனவே, துன்பங்களைப் பொறுத்தலையும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே ‘தவத்தின்’ வெளிப்பாடு என்று குறிப்பிடுகிறார். தவத்திற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம். உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (குறள் எண்: 261) (உறுகண் = தீங்கு) - என்பதாகும். ‘உரு’ என்றால் ‘வடிவம்’ என்று பொருள். தவத்தின் வடிவமே இது தான் என்கிறார் வள்ளுவர். சமயவாதிகள் புற வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வள்ளுவர் அக வடிவத்திற்கு (அகம்: உள்ளம்) முக்கியத்துவம் கொடுக்கிறார். வள்ளுவர் காலத்தில் ‘தவம்’, ‘வேள்வி’ என்ற பெயரில் தவசிகள் உயிர்களைப் பலி இடும் வழக்கம் மேற்கொண்டு இருந்தனர். தம் துயரைக் களைய, பிற உயிர்களைக் கொலை செய்யும் இக்கொடிய வழக்கத்தை எதிர்த்தார் வள்ளுவர். தம் சமகாலச் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக வள்ளுவர் எழுப்பிய புரட்சிக்குரல்களுள் இக்குறளும் ஒன்றாகும். செயல் வீரராய் நீங்கள் காரியங்களை மேற்கொள்ளும் பொழுதுத் துன்பங்களும் கஷ்டங்களும் நேர்வது இயல்பு. அவற்றை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். அது தான் நோன்பு. அது தான் தவம். இப்பக்குவம் அடைந்தவர்க்கு வாழ்க்கையில் துன்பம் என்பது அறவே இல்லாது போகும். 5:4:2 தவத்தின் அடிப்படை - வள்ளுவரும் சமயக் கருத்துக்களும் தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவும், பிற உயிருக்குத் துன்பம் செய்யாத இரக்க உணர்வு அமையவும், மனப்பக்குவம் வேண்டும். இந்த மனப்பக்குவத்தைத் தருவது தவம். அதுவே தவத்தின் அடிப்படை. உலகிலுள்ள எல்லா மதங்களும், சகிப்புத்தன்மை (Tolerance), மனித நேயம் (humanitarianism) என்ற இரண்டையும் வலியுறுத்துகின்றன. பொறை என்பதற்கு ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் காட்டுங்கள்’ என்பதுவும், ‘மனித நேயம்’ என்பதற்கு உன்னைப் போல் பிறரை நேசி (Love thy neighbour) என்பதுவும் கிறித்துவ மதம் கூறும் அறக்கருத்துகள். ஏனைய மதங்களும் இவ்வாறே கூறுகின்றன. மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள் கர்ணனின் மடியில் குரு தூங்கிக்கொண்டிருக்கிறார். வண்டு ஒன்று வந்து அவர்களை சுற்ற ஆரம்பிக்கிறது. வண்டால் குருவின் தூக்கம் கலைந்து விடுமோ என்று அஞ்சுகிறான் கர்ணன். வண்டைத் துரத்திப்பார்க்கிறான்; வண்டு ஓடவில்லை. மாறாக, வண்டு கர்ணன் தொடையைத் துளைக்க ஆரம்பிக்கிறது. குருவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காகக் கர்ணன், வண்டால் ஏற்பட்ட துன்பத்தைச் சகித்துக்கொள்கிறான். ‘உற்றநோய் நோன்றல்’ என்பதற்கு கர்ணன் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. ஒருவன் தன் கடமையைச் செய்யும் பொழுது நேரும் துன்பங்களை சகித்துக் கொள்வது தான் தவம். இத்தகைய தவத்தை மேற்கொள்ள, புற வேஷங்கள் தேவை இல்லை என்கிறார் வள்ளுவர். 5.5 போலித் துறவிகள் அக்காலத்தில் தவம் செய்யும் துறவிகளில் சிலர், தலைமயிரை நீளமாக வளர்த்துச் சடையாகப் பின்னி, முடியாகக் கொண்டிருந்தனர். சிலர் தலை மயிரைப் போக்கி மொட்டையாக இருந்தனர். இத்தகைய புற வேஷம் கொண்டு வாழ்ந்த துறவிகளுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருந்தது. மன்னனும், வலிமையும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்களைக் கண்டு அஞ்சினான். பல பேரரசுகளின் வீழ்ச்சிக்குத் துறவிகளே காரணமாக இருந்தனர். வள்ளுவர் இத்தகையப் போலித் துறவறத்தை, போலித் துறவிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார். உலகில் உள்ளோர், பழித்துச் சொல்லக் கூடிய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே தவம் செய்யும் துறவிகளும், உயர்ந்தோரும் செய்யும் செயல். இதை விட்டு விட்டு, வீணாகச் சடை வளர்த்தலும், மொட்டை அடித்தலும் ஆகிய புறச் சடங்குகள் எதற்கு? என்று வினவுகிறார் வள்ளுவர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் எண்: 280) (மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக வளர்ப்பது) உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள் எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர். இன்றைக்கும், அறிவியலில் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள் போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப் போன்றோர் வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை அடையாளம் காட்டவே, வள்ளுவர், மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார். 5:6 சுடச் சுடரும் பொன் தவறு செய்வது மனிதனின் இயல்பு (To err is human) என்று சொல்வார்கள். தவறு செய்யாமலே, மனிதனுக்குத் துன்பம் வருவதும் இயல்பு. துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் உண்டு. அதைக் கண்டு அஞ்சாமல் தாங்கிக் கொள்ளுகின்ற, பொறுத்துக் கொள்ளுகின்ற இயல்பு எல்லோருக்கும் அமையாது. மனத்தைத் திடப்படுத்திக் கொள்கின்றவர்களுக்குகே, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுகின்ற இயல்பு அமையும். அதைத் தான் தவத்தின் இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிட்டார். அந்தத் துன்பத்தை எவ்வளவு நாள் பொறுத்துக் கொள்வது? துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள, பொறுத்துக் கொள்ளத்தான், ஒருவரின் சிறப்பு மிகுந்துவரும்; தவத்தின் பெருமை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்லும் என்கிறார். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டையும் உவமையாகச் சொல்லுகிறார். தங்கத்தைச் சுத்தம் செய்பவர்கள், அதைத் தீயில் சுட்டு, உருக்குவார்கள். ஒரு தடவைக்குப் பல தடவை உருக்குவார்கள். மீண்டும், மீண்டும் தீயினால் சுட்டுச் சுட்டு, உருக்க உருக்க அதிலிருக்கும் கழிவுப் பொருள்கள் நீங்கி, சுத்தமான தங்கம் கிடைக்கும். தங்கம் மேலும், மேலும் ஒளி வீசும். இந்த அறிவியல் உண்மையை, தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுகின்ற தவ ஞானிகளுக்கு உவமையாகச் சொல்லுகிறார். சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோக்கிற் பவர்க்கு. (குறள் எண்: 267) (நோக்கற்பவர் = தவம்செய்பவர்) வள்ளுவரின் இந்தக் கருத்து, துறவிகளுக்கு மட்டுந்தான் பொருந்துமா? இல்வாழ்வானுக்குப் பொருந்தாதா? பொருந்தும். குடும்பத்தில் வரும் துன்பங்களை எல்லாம், தான் ஒருவனே தாங்கிக் கொண்டு, பொறுமையோடு வாழ்ந்து, குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்டி, வாழ்பவர்களும் இருக்கிறார்களே! அவர்கள் வள்ளுவர் சொல்லும் இந்த இலக்கணத்திற்குள் அடங்கமாட்டார்களா? அடங்குவார்கள். அவர்களை நாம் ‘தியாகச் சுடர்’ என்று குறிப்பிடுகிறோம். பிற எல்லாப் பற்றையும் துறந்து, குடும்பத்தை மேம்பாடு அடையச் செய்வதையும், சிக்கல் இல்லாது நடத்திச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வாழும் குடும்பத் தலைவர்களும் பொன்னைப் போல் புடம் போடப்பட்டவர்கள் தானே?
5:7 இல்லறத்துறவு எந்த ஒரு பற்றும் இல்லாமல், எல்லாவற்றையும் துறந்து காடு நோக்கிச் செல்வதை வள்ளுவர், ‘துறவு’ என்ற தலைப்பில் கூறவில்லை. எதிலும் பற்று இல்லாமல், ஏற்கனவே பற்று இருந்தாலும் அந்தப் பற்று உடைய பொருளையும் துறக்கும் மனப்பக்குவம் பெற்று வாழும் இல்வாழ்வானுக்கு உரியனவாகவே, கருத்துகளைக் குறிப்பிடுகிறார். அதற்கு வள்ளுவரின் இன்னொரு குறளின் கருத்தையும் சான்றாகக் காட்டலாம். இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், அற வழிகளில் இல்வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற ஒருவன், வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். வீட்டை விட்டுக் காடு செல்லும் துறவறத்தால் கூடுதல் பயன் ஒன்றும் இல்லை என்பதே வள்ளுவர் கருத்து. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவது எவன். (குறள் எண்: 46) இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? வள்ளுவரின் சிந்தனைச் செல்வம் எத்தகைய கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பது தெரியும் அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பலவேறு வகையான விளக்கங்களுக்கும் (Inerpretations), பலவகைப்பட்ட மக்களுக்கும் பொருந்தும். எனவே துறவறத்தில் சொல்லப்படும் கருத்துகள், இல்வாழ்வானுக்கும் பொருந்தும் மாண்பே அமைந்துள்ளது. 5:8 தொகுப்புரை மனித ஆற்றலில் தளராத நம்பிக்கையும், இவ்வுலக வாழ்க்கையில் பிடிப்பும் கொண்டவர் திருவள்ளுவர். எனவே தான், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் கொண்ட திருக்குறளுள், நூற்றுப்பதினைந்து அதிகாரங்களுக்குக் குறையாமல் - அதாவது எட்டில் ஏழு பங்கில் - இவ்வுலக வாழ்க்கைச் சிறப்பும், இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டியனவும் பற்றிக் கூறியுள்ளார். துறவற இயலில் பதின்மூன்று அதிகாரங்களே காணப்படுகின்றன. வள்ளுவரின் கோட்பாட்டின்படித் துறவறம் என்பது இல்லறத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. இல்லறத்தைப் பழித்து, வெறுத்து, ஒதுக்கி, அதற்குப் பதிலாக ஏற்க வேண்டிய ஒன்றாகத் துறவை அவர் காட்டவில்லை. மாறாக, வாழ்க்கைச் சுகங்களில் அளவற்ற பற்று வைப்பதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்த்து, உலகியல் இன்பங்களை முறையாகத் துய்க்க உதவும் துணையாகத்தான் துறவை விவரிக்கிறார் வள்ளுவர். 6:1 நட்பு என்பது என்ன? நட்பைப் பற்றிப் பலர், பலவிதமான விளக்கங்களைக் கூறியிருக்கலாம். ஆனால் வள்ளுவர் கூறும் விளக்கம் மிகவும் எளிமையானது. அதையும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் ஒரு சிறு அனுபவத்தைக் கூறியே விளக்கியுள்ளார். எத்தகைய அனுபவம்? ஒருவனது உடலின் மானத்தை மறைப்பது அவன் அணிந்திருக்கும் ஆடை. அந்த ஆடை, அவன் உடலை விட்டு நழுவினால் என்ன நிகழும்? அவனை அறியாமலே அவனது கை விரைந்து சென்று அவனது மானத்தைக் காப்பாற்றும். இது ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சிறிய நிகழ்ச்சி. இதையே நட்புக்கு உரிய இலக்கணம் என்கிறார் வள்ளுவர். அது எப்படி? உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவது ஆம் நட்பு. (குறள் எண் : 788) (உடுக்கை = ஆடை; இடுக்கண் = துன்பம்) - என்பது வள்ளுவர் நட்புக்கு கொடுக்கும் விளக்கம். இடுப்பிலுள்ள ஆடை நழுவி விட்ட ஒருவனது கை அவனை அறியாமலே உடனே விரைந்து சென்று அவனது மானத்தைக் காப்பாற்றும். அதைப்போல, நண்பனுக்குத் துன்பம் வந்ததை அறிந்த அந்தக்கணமே, அவன் அறியாமலே, அவனது அழைப்பிற்குக் காத்திராமல், விரைந்து சென்று அவன் துன்பத்தை நீக்குவதுதான் நட்பு, என்பது இக்குறளின் கருத்து. இது தான் நட்புக்கு வள்ளுவர் கூறும் இலக்கணம். 6:1:1 எது உண்மையான நட்பு? வாழ்க்கையில் நம்மோடு பழகுபவர்கள் எல்லாம் நண்பர்களா? இல்லை, நம்மை அடிக்கடி சந்தித்து, முகமலர்ச்சியுடன் நம்மை வரவேற்று, அன்போடு நம்மிடம் பேசி விட்டாலே அவர்கள் நண்பர்கள் ஆகிவிடமாட்டார்கள். எனவே தான் வள்ளுவர், எது உண்மையான நட்பு எது போலியான நட்பு என்பதைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார். இயந்திரமயமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், சூழலாலும், பணியாலும், பலரோடு பழகுகிறோம். சிலரோடு உள்ள பழக்கம், ஒரு தடவையோடு முடிந்துவிடும்; நாமும் பழகியவரை மறந்து விடுவோம். சிலரோடு உள்ள பழக்கம் தொடரும். பலமுறை சந்தித்துப் பேசிப் பழகியபின், ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டபின்னர், அவரது பண்புகள் நமக்குப் பிடித்து இருந்தால் அவரோடு நட்புக் கொள்ளுவோம். இரயிலில் பயணம் செய்யும் போது, சக பயணிகளிடம் (Co- passengers) சிறு நட்பு மலர்கிறது. அது பயணத்துடன் முடிந்துவிடும். பணி செய்யும் இடங்களில் சூழலின் காரணமாகச் சிலரோடு நட்புக்கொள்ளுகிறோம். பணி முடிந்ததும் அந்த நட்பு தொடர்வதில்லை. பணியிடம் மாற்றல் ஆனால், பழைய நட்பு மறந்து, புதிய இடத்தில் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய நட்பு அமையும். இவ்வாறு அமையும் உறவை எல்லாம் கடந்து ஒரு நட்பு ஏற்படும். அத்தகைய நட்பில் கூட, நாம் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே அந்த நட்பைப் பற்றி முடிவெடுக்க முடியும். அப்பொழுதுதான் உண்மையான நட்பு ஏ ற்படும் என்கிறார் வள்ளுவர். மனம் ஒன்றுபடாமல் ஒருவரை ஒருவர் பார்த்த உடனே, முகத்துக்கு முகம் வெளியே சிரித்துப் பேசி விட்டாலே, அது நட்பு ஆகாது. அத்தகைய உறவை நட்பு என்று நம்பி விடாதீர்கள்; இரு நெஞ்சங்கள் ஒன்றுபட்டு மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான் உண்மையான நட்பு என்கிறார் வள்ளுவர். முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு. (குறள் எண்: 786) (நக = நகை செய்யுமாறு, புன்னகைக்குமாறு; நட்பது = பழகுவது,நட்பு பாராட்டுவது) கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னனும், பிசிராந்தையார் எனும் தமிழ்ப் புலவரும் நண்பர்கள். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து, முக நக நட்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஒருவரது இயல்பை இன்னொருவர் அறிந்து உள்ளம் (அகம்) மகிழ்ச்சி அடையும்படி நட்புக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் சமண சமயப் பழக்கங்களை மக்கள் பின்பற்றினர். அவ்வழக்கப்படி வாழ்க்கையில் நிறைவு எய்திய ஒருகட்டத்தில் உயிரைத் துறந்து இறைவனடி சேர விரும்புவோர் வடக்கு நோக்கி அமர்வர்; உணவைத்தவிர்த்து, உயிர் விடுவர். இப்பழக்கம் ‘வடக்கிருத்தல்’ எனப்பட்டது. அவ்வழக்கப்படி கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பு கொண்டு இறப்பதற்குச் சென்றான். அப்பொழுது, பிசிராந்தையாருக்கும், தன் பக்கத்தில் ஓர் இடம் ஒதுக்கும்படி சொன்னான். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த செய்தி அறிந்து, உள்ளம் மகிழ்ந்து நட்புக் கொண்ட பிசிராந்தையாரும் உடனே வருவார் என்ற நம்பிக்கையால் அவ்வாறு கூறினார். நல்ல நண்பர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ் இருவரின் நட்பைக் கூறுவர். வள்ளுவர் இத்தகைய நட்பை அழகாக எடுத்துக் கூறுகிறார். மனம் ஒத்த இருவர் நண்பர் ஆவதற்கு அவர்கள் ஒரே இடத்தில் குடியிருக்க வேண்டியதில்லை. கூடிக்கலந்து பேச வேண்டியது இல்லை; அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக வேண்டுவதும் இல்லை. இருவர் உள்ளமும் உணர்ச்சியால் ஒன்றுபடின் அதுவே நட்பாகிய உரிமையை நல்கும் என்பது இக்குறளின் கருத்து. வெளியே காட்டும் பாவனைகளையும், உபசரிப்புகளையும் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். உண்மையான நட்பு என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் வள்ளுவர். அதனோடு நிற்கவில்லை. சிரித்துப் பேசவும், முகம் மலர மகிழ்வதற்கும் அல்ல ஒருவரோடு ஒருவர் நண்பராகப் பழகுவது. பண்பு வரம்புகளை ஒருவர் மீறும்பொழுது, அடுத்தவர் அதைக் கடிந்து திருத்துவதே நட்பின் இலக்கணமாகும் என்கிறார் வள்ளுவர். 6.1.2 நட்பின் பெருமை அலக்ஸாண்டர் போப்(Alexander Pope) என்ற ஆங்கிலக்கவிஞர், நட்பின் பெருமையைப் பற்றி ‘ஒவ்வொரு நண்பனது இறப்பிலும், நாம் நம்மில் ஒரு பகுதியை, அதுவும் மிக நல்ல பகுதியை இழந்து விடுகிறோம்’ என்று குறிப்பிடுவார். நட்பின் இத்தகைய பெருமையை அறிந்த வள்ளுவர், நல்ல நூலைக் கற்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சியுடன் நல்லவர் நட்பை ஒப்பிட்டுள்ளார். நல்ல நூல் ஒன்றைப் படிக்கும்பொழுது மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். அதை மீண்டும் மீண்டும் படிக்கும்பொழுது, அதன் சிறப்பின் புதிய கூறுகள் புலப்படும். அதன் விளைவாக அந்நூலின் மீது நமது பற்றுதல் கூடுதலாகும். இந்த அனுபவத்தை நல்லவர்களோடு கொள்ளும் நட்புக்கு உதாரணமாகக் கூறுகிறார் வள்ளுவர். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்பு உடையார் தொடர்பு.(குறள் எண்: 783) ‘நவிலுதல்’ என்ற சொல்லுக்குச் ‘சொல்லுதல்’, ‘நாவினால் உரைத்தல்’, ‘வாசித்தல்’ என்று பொருள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும், புதிய புதிய சிந்தனைகள், கருத்துகள், பொருள் கொள்ளும் வகைகள் எனப் புதுமையை உணர்த்துவன நல்ல நூல்கள். ஒவ்வொரு வாசிப்பிலும் நூலின் நயமும், பெருமையும் மிகும். அதுபோலவே பண்புடைய பெரியோரின் சுற்றத்தை விரும்பி, நட்பாக உறவாடும், ஒவ்வொருமுறையும் அந்தச் சுற்றத்தின் அருமை கூடும்; அந்த உறவின் பெருமை மிகும். பண்புடையார் நட்பின் பெருமை ஒருபுறம் இருக்கட்டும்." இப்பெருமையைச் சொல்ல வள்ளுவர் மேற்கொள்ளும் எடுத்துக்காட்டைப் பாருங்கள் - ‘நவில்தொறும் நூல் நயம்’! இந்த எடுத்துக்காட்டில் அக்காலப் பண்பாட்டின் சுவடு உங்களுக்குத் தெரிகிறதா? அச்சு வடிவம் கண்டிராத காலம். நூல்களை ஏட்டுச் சுவடிகளிலும், செய்திகளைக் கல்வெட்டுகளிலும் வழங்கிக் கொண்டிருந்த காலம். ஏட்டுப் பிரதிகள் அரிது. அவற்றைப் பிரித்துப் படிப்போர் அரிது. ஒருவர் உரக்கப் படிக்கப் பிறர் கேட்டுச் சுவைத்த காலம். அப்படிப்பட்ட காலத்திலேயே நூல்களைப் பயின்று, ஆய்ந்து, அவற்றின் நயம் பாராட்டும் உயர்ந்த நிலையைத் தமிழர் பண்பாடு எட்டியிருந்தது என்ற செய்தியைக் கவனித்தீர்களா? ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் நூலின் புதிய பரிமாணங்கள் விளங்கும் உண்மையை அனுபவித்து உணர்ந்த அறிவு நிலையை இது காட்டவில்லையா? பழந்தமிழர் பண்பாட்டின் உயர்விற்கு இலக்கிய வாயிலாகக் கிடைத்திருக்கும் ஒரு அகச்சான்று இது.
6:2 யாரை நண்பராகக் கொள்வது? எல்லோரிடமும் நட்புக்கொள்ள முடியாது. திருடனோடு நட்புக்கொள்ள முடியுமா? திருடனோடு நட்புக் கொண்டால், நாமும் அவனது திருடும் இயல்புக்கு அடிமை ஆகிவிடுவோம். எனவே நல்லபண்பு உள்ளவர்களிடமே நட்புக்கொள்ள வேண்டும். அதுதான் நட்பின் பெருமை என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். ‘பேயொடு ஆனாலும் பிரிவது கடினம்’ என்பார்கள். எனவே ஒருவருடம் பழகி நட்புக் கொண்ட பின், அவரிடம் இருந்து விடுபட்டுப் பிரிந்து வருவது என்பது மிகவும் கடினம். தீய நட்பு, ‘தான் சாகிற வரைக்கும்’, ஒருவனுக்குத் துன்பம் தரும். எனவே நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாடாது நட்டலின் கேடு இல்லை; நட்டபின் வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு. (குறள் எண்: 791) (நாடாது = ஆராயாது; நட்டலின் = நண்பராக ஆவதைவிட; வீடு = விடுதல், விமோசனம்) ஆராயாமல், தெளிவாகச் சிந்தித்து முடிவு செய்யாமல், ஒருவருடன் நட்பு பாராட்டுதலால் விளையும் கேட்டினைப் போல் வேறு கேடு இல்லை. ஏன் என்றால் நட்பு என்ற உரிமை ஒருவரைச் சார்ந்தபின், அவ் உரிமையில் இருந்து அவரைப் பிரிப்பது என்பது இயலாது. நண்பராக இணைந்தபின் அப்பிணைப்பை முறித்தல் கடினம். அப்படி ஆயின் எப்படிப்பட்டவரை நண்பராகக் கொள்ள வேண்டும்? அழச்சொல்லி, அல்லது இடித்து, வழக்கறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் (குறள் எண் : 795) நாம் ஏதேனும் குற்றம் புரியும்பொழுது, அக்குற்றத்தை நாம் உணர்ந்து, அதற்காக நம் உள்ளம் வருந்துப்படிக்கு, அதை எடுத்துச் சொல்கின்றவர் (‘அழச்சொல்லி’); நெறிதவறி நடக்கும் பொழுது, அதைச்சுட்டிக்காட்டித் திருத்துபவர் (‘இடித்து’); நமது சூழலையும் அச்சூழலுக்கு உகந்த நடப்பு வழக்கங்களையும் நன்கு புரிந்து அவற்றிற்கு ஏற்றவாறு நம்மை வழி நடத்திச் செல்லும் திறன் பெற்றவர் (‘வழக்கறிய வல்லார்’) - என இவ்வகைப்பட்ட நல்லவரின் நட்பைத் தெரிந்து ஏற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 6.2.1 பண்புடையார் நட்பு பண்புடையார் என்றால் யார்? எப்படி அவர்களைக் கண்டுபிடிப்பது? வள்ளுவர் அதற்கும் வழி சொல்கிறார். பண்புடையர் என்போர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிறரோடு அன்பு செலுத்துகின்ற, பிறருக்கு உதவி செய்கின்ற நல்ல இயல்புகள் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் குடிப்பெருமையும் இருக்க வேண்டும். குடிப்பெருமையை எப்படி அறிந்து கொள்வது? ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்குச் சுட்டாலும் வெண்மை தரும்’ என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி. எத்தகைய துன்பம் அல்லது சோதனை வந்தாலும், நல்ல குடியில் பிறந்த மக்கள், தங்கள் இயல்புகளில் இருந்து கொஞ்சம் கூட நெகிழமாட்டார்கள். அவர்களுக்கு வரும் துன்பமும், சோதனையும் அவர்களின் நல்ல பண்புகளை மேலும் மேலும் வளிப்படுத்தும். சங்கைச் சுடச் சுட அது எப்படி மேலும் மேலும் தூய்மையாகவும் வெண்மையாகவும் மாறுமோ, அதுபோல் தான், நல்ல குடிப்பிறந்தார் சிறப்புடன் திகழ்வார்கள். எனவே, மேற்குறிப்பிட்ட வகையில் செயல்படுபவரே நல்ல குடிப்பெருமை உடையவர்கள். இத்தகையோரை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளலாம், என்கிறார் வள்ளுவர். தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஏனென்றால், தவறுவது மனித இயல்பு (To err is human). அப்படி ஆயின், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வது எப்படி? நண்பராக ஆகவிரும்பும் ஒருவரின் குணத்தைக் கணக்கிடுங்கள்; குற்றம் குறையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவரது குறை எத்தகையது? சூழலால் நேர்ந்த குறையா? அல்லது குற்றத்தையே தம் வழியாகக் கொண்டவரா? என்பன போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். சிலர் நம்மோடு பழகும் முறையை வைத்து, அவர்களைப் பற்றிச் சில கருத்துகளை அமைத்திருப்போம். ஆனால், அவர்களை, வேறு சில இடங்களில், வேறு சூழலில், தீயவர்கள் மத்தியில் பார்க்கும் பொழுது ‘இவர் எப்படி இந்த இடத்தில்?’ என்று மிகவும் அதிர்ச்சி அடைவோம். அவர்கள் நம்மிடம் காட்டிய நட்பையும், நடவடிக்கைகளையும், இப்பொழுது இருக்கும் சூழலையும், சுற்றத்தையும் நினைத்துப் பார்ப்போம். நமக்கு ஏமாற்றமாக இருக்கும். ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொள்வதற்குமுன் அவன் சுற்றத்தையும் பார்க்க வேண்டும், அது முக்கியம். மேற்குறிப்பிட்டவைகளையே, பண்புடையவர்கள் என்று அடையாளம் காண்பதற்கு உரிய வழி என்று வள்ளுவர் கூறுகிறார். 6:3 விலக்க வேண்டியவரும் விலக்கக் கூடாதவரும் ‘கொடுத்தும் கொ(ள்)ள’ வேண்டிய நட்பைப்பற்றிக் கூறிய வள்ளுவர் கொடுத்தும் விட வேண்டிய நட்பு எது என்றும் குறிப்பிடுகிறார். மருவுக மாசு அற்றார் கேண்மை; ஒன்று ஈந்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (குறள் எண் : 800) (மருவுக = பொருந்துக, ஏற்றுக்கொள்க; கேண்மை = நட்பு; ஒருவுக = விட்டு விடுக; ஒப்பிலார் = நம்முடன் பொருந்திவராத பண்பினர்) குறைகள் இல்லாத நல்லவரின் நட்பினை நாடிப் பெறுங்கள்; உங்கள் தன்மைகளுக்கும், குணநலன்களுக்கும் ஒத்து வராதவரின் நட்பினை (தெரியாமல் ஏற்க நேர்ந்திருந்தால்) ஏதேனும் கொடுத்தாவது தவிர்த்தல் நன்று என்கிறார் வள்ளுவர். 6:3:1 துன்பத்திலும் உண்டு ஒரு நன்மை ஒருவனுக்குப் புகழும் செல்வாக்கும் இருக்கும் பொழுது பலர் அவனுடன் உறவு கொள்வார்கள். ஆனால் புகழையும் செல்வாக்கையும் அவன் இழந்து நிற்கும் பொழுது, சூரிய ஒளியில் மறைந்த பனித்துளிபோல் மறைந்து விடுவார்கள். ஆனால் உண்மையான நண்பன், அப்படி அல்ல. உண்மையான நண்பனின் கடமை என்ன? ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற குறள் நினைவிற்கு வருகிறதா? பின்னோக்கிச் செல்லுங்கள். பத்தி 5.1 க்கு; அக்குறளைப் படியுங்கள் மீண்டும் ஒரு முறை. ஆம், நல்ல நண்பனின் கடமை ‘இடுக்கண் களைவது’; துன்பம் நேர்கையில் வலிந்து தாமாக முன்சென்று துணை நிற்பது. அவ்வாறு இன்றித் துன்பம் நேர்ந்த பொழுது கைவிட்டுச் செல்பவரை நண்பராக ஏற்றல் கூடாது. துன்பம் உறுத்தும் பொழுது, நண்பராகப் பழகியபின் உதவாமல் விலகிச் செல்பவரின் செயலை, நினைத்தாலே நெஞ்சம் சுடும். கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (குறள் எண் : 799) (கெடுங்காலை = கேடுவந்த நேரத்தில்; அடுங்காலை = துன்பம் உறுத்தும் வேளையில்; உள்ளினும் = நினைத்தாலும்) ஆயினும் துன்ப காலத்திலும் ஒரு நன்மை உண்டு என்கிறார் வள்ளுவர். நல்ல நண்பர்களை இனம் காண அது வாய்ப்பு அளிக்கும். கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் (குறள் எண் : 796) (உறுதி = நன்மை; கிளைஞர் = நண்பர்) நண்பரை இனம்காணும் ஓர் அளவுகோலாக ஒருவரின் கேடுகாலம் நன்மை தரும் என்கிறார். சேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்று ஜுலியஸ் சீசர். இதில் சீசரின் நெருங்கிய நண்பனாக இருப்பவன் புரூட்டஸ். சீசரைக் கொலை செய்வதற்கு எல்லோரும் முயன்ற பொழுது, தன் நண்பன் புரூட்டஸ், தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசர், அவனிடம் ஓடுகிறான். ஆனால் புரூட்டஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீசரைக் குத்துகிறான். அப்பொழுது, புரூட்டஸைப் பார்த்து சீசர், ‘புரூட்டஸ் நீயுமா?’ (You Too, Brutus!) என்றான். துன்பத்தில் உதவ வேண்டிய காட்சி நண்பன் பகைவர்களுடன் சேர்ந்து, பகைவனாக மாறியதைத் தெரிந்து கொண்ட சீசர், அதிர்ச்சி அடைந்தான். அப்பொழுது தான், புரூட்டஸின் நட்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டான். அவனை இனங்கண்டான். எனவே, நீயும் பகைவனாகி விட்டாயா என்பதைச் சுட்டவே, ‘நீயுமா’ என்று கேட்டான். எனவேதான் வள்ளுவர், ஒருவனது துன்பகாலம், நல்ல நண்பனை அடையாளம் காண்பதற்கு உரிய காலம் என்று குறிப்பிடுகிறார். 6.3.2 துன்பத்தில் உதவும் நட்பு இராமாயணத்தில், ஆட்சிக்கு உரிய மன்னனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டிய இராமன், கைகேயியின் வரத்தால் காட்டிற்குச் செல்கிறான். காட்டிற்குச் செல்லும் பொழுது, தன் மனைவி சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் எந்த வித உதவியும் இல்லாமல் செல்கிறான். அரண்மனையில் எல்லாவித வாய்ப்பையும், வசதிகளையும், அனுபவித்த இராமனுக்குக் காட்டு வாழ்க்கை புதிது. பல துன்பங்களை அவனும் உடன் சென்றோரும் அனுபவிக்க வேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில், இராமனுக்கு உதவி செய்தவன் குகன் எனும் வேடர்கள் தலைவன். மூவருக்கும் பாதுகாப்பு கொடுத்ததோடு, அவர்களுக்குத் தங்கும் இடமும், உணவும் கொடுத்தான். துன்பமான காட்டு வாழ்க்கையில் குகன் செய்த உதவி, பெரிய உதவி. எனவே நண்பனாக ஏற்றுக் கொண்ட குகனைப் பின்னர், தம் தம்பிகளுள் ஒருவராக இராமன் ஏற்றுக் கொண்டதாக இராமாயணக் கதை கூறும். இதிலிருந்து என்ன தெரிகிறது? துன்பம் வரும்பொழுது உதவுபவனே உண்மையான நண்பன். அவன் உதவியை என்றும் மறக்கக் கூடாது. இராமன் செய்த செயல் இன்னும் மலோனது. நண்பனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்டான். நண்பனைக் கூட சில நேரங்களில் மறக்கலாம், அல்லது துறக்கலாம். ஆனால் சகோதரனை மறந்தாலும் துறக்க முடியுமா? சகோதரன் இல்லை என்று சொல்ல முடியுமா? துன்பகாலத்தில் உதவி செய்தவருடைய நட்பை மறந்து விடாதீர்கள். அதைப்போல் எல்லாவகையிலும் குற்றம் இல்லாதவர் நட்பையும் மறந்து விடாதீர்கள் என்று வள்ளுவர் வேண்டுகிறார். மறவற்க, மாசு அற்றார் கேண்மை, துறவற்க துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு. குறள் எண்: 106) (கேண்மை = நட்பு; துப்பு ஆயார் = தனக்கு உதவியாக இருப்பவர்) உதவியால் நட்பும், நட்பால் உதவியும் தொடர்ந்து வருபவை. ஆனால் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் உதவி செய்தவர் நட்பைக் காப்பாற்றுங்கள். அது என்றைக்கும் நன்மை கொடுக்கும் என்பது வள்ளுவர் கருத்து. 6:4 தீ நட்பும், கூடா நட்பும் ஒருவனுக்கு அமையும் தீய நட்பால், அவனது வாழ்க்கையே பாழாகி விடுகிறது. தீய நண்பனால், தீய பழக்கங்களைப் பின் பற்றுகிறான்; தீயவனாகவே மாறிவிடுகிறான். எனவே, விரும்பத்தகாத நட்பால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் நட்புப் பாராட்டத் தகுதியற்றவர்கள் யார் என்பது பற்றியும் ‘தீ நட்பு’, ‘கூடா நட்பு’ எனும் இரண்டு அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 6:4:1 இரட்டை வேடதாரிகள் நட்பு சொல் ஒன்று, செயல் இன்னொன்று என இருக்கும் இரட்டை வேடதாரிகளுடன் (Hypocrites) நட்புக் கொள்ள வேண்டாம் என்கிறார் வள்ளுவர். ஏனென்றால் அவர்களை நம்ப முடியாது; நம்பி எதையும் செய்ய முடியாது. இல்வாழ்க்கையில் இரட்டை வேடம் குடும்பத்திற்கு ஆபத்து. அரசியலில் இரட்டை வேடம் ஆட்சிக்கு ஆபத்து. ஆட்சியில் இரட்டை வேடம் நாட்டுக்கு ஆபத்து. தான் சொல்லுவதற்கு நேர் எதிராகச் செயல்படும் இரட்டை வேடதாரிகளுடன் நட்பு உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்கள் பகைவர்களை விட ஆபத்தானவர்கள். அவர்களது நட்பு, நனவில் மட்டுமல்ல, அச்சுறுத்தும் கனவுகளைவிடத் துன்பம் தரும் என்கிறார் வள்ளுவர். கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு(குறள் எண்: 819) (இன்னாது = துன்பம் செய்வது; மன்னோ = அசை, பொருள் இல்லை) தமிழில் உள்ள சிறந்த நாடகங்களில் ஒன்று மனோன்மணியம். ஜீவகன பாண்டிய நாட்டு மன்னன். அவனது முதல் அமைச்சன் குடிலன். இவன், இரட்டை வேடதாரி. ஜீவகனை வீழ்த்தி பாண்டிய நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவனது உள் ஆசை. ஆனால், ஜீவகனிடம், மன்னர் மீதும் நாட்டின் மீதும் மிகவும் அக்கறையும், அன்பும் உள்ளவன் போல் நடிக்கிறான். ஜீவகனும் அவனை முழுமையாக நம்புகிறான். தன் மகள் மனோன்மணியத்தின் திருமணத்திற்குச் சேரமன்னனிடம் தூது அனுப்பக் குடிலனின் மகன் பலதேவனைத் தேர்ந்தெடுக்கிறான். ஆனால், திருமணம் பேசச் சென்ற பலதேவன், போரை வரவழைத்தான். போர் மூள்கிறது. சேர மன்னன் புருஷோத்தமன், பாண்டிய மன்னன் கோட்டையை முற்றுகையிடுகிறான். எனவே தான் வள்ளுவர் சொல்வேறு செயல்வேறு என்பவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளாதீர் என்கிறார். 6:4:2 நண்பராய் நடிக்கும் பகைவர்கள் நட்பின் ஆழத்திற்கு அளவுகோல் நட்பு ஆள்பவர்கொண்டாடும் உரிமை. நெடுநாள் பழகிய நெருங்கிய நண்பர்களுக்கு இடையே சம்பிரதாயங்களுக்கு இடம் இல்லை. ஒருவரின் உத்தரவோ, இசைவோ இன்றிச் செய்யக்கூடாத செயல்களையும், தாமாக வலிந்து செய்கின்ற அளவிற்குச் சலுகைகளையும் உரிமையும் தருவது நட்பு. இவ் அனுகூலங்களைக் கருதிப் பகைவர் சிலர் தம் பகைநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நண்பர்கள் போல நடிப்பர். அத்தகையோரிடம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். • கைகூப்புவது - கும்பிடுவதற்கா, கொல்வதற்கா? இந்திய தேசப்பிதா அண்ணல் காந்தி அடிகளார், பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் போது, கோட்சே என்ற ஒருவன் உண்மையான தொண்டன் போல் வந்து அவரது காலைத்தொட்டு வணங்கினான். காந்தி அடிகளார், அவனை உண்மையான தொண்டன் என்றே எண்ணினார். ஆனால், வணங்கி நிமிர்ந்த அவன், தன் கைக்குள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான். யாருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில் வந்த அவன் தனது, கையின் உள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை எப்படி ஊகிக்க முடியும்? கடினம் தான். ஆனாலும் எச்சரிக்கை தேவை. சிலர் நம்மை நம்பவைப்பதற்கும், நம்மிடம் இரக்கம் பெறுவதற்கும் அழுது கண்ணீர் விடுவார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீரிலும் கெட்ட எண்ணம் மறைந்திருக்கும், கூப்பிய கையினுள்ளே மறைந்திருக்கும் கொலைக்கருவியைப் போல. ஆகவே நட்புக்கொள்ளவரும் எல்லோரையும் நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார். தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து. (குறள் எண் : 828) (படை = ஆயுதம்; ஒன்னார் = பகைவர்) எனும் குறள் மூலம் வள்ளுவர் குறிப்பிடுகிறார். • வில் வளைவது, அம்பினைச் செலுத்துவதற்குத் தான் நேற்றுவரையிலும் பகைவனாக இருந்தவன், இன்று வந்து நம்மிடம், ணிவாகப் பேசினால், அதைப்பார்த்து நாம் ஏமாந்து விடக் கூடாது. அவனது அந்தப் பணிவு பின்னர் நமக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அவர்கள் வில்லைப் (bow) போன்றவர்கள். வில் வளைவது அல்லது வணங்குவது, எதிரே நிற்பவர் மீது அம்பை எய்வதற்கே. வில் வளையும் வணக்கம், தீங்கு செய்வதைக் குறிக்கும். அதைப்போல் மிகத் தாழ்ந்து பணிந்து பேசுகின்ற சொல்லினது வணக்கத்தைக் கண்டு, நம்மிடம் நல்ல நட்புக்கொள்ள வந்துள்ளதாக எண்ணவேண்டாம். அப்படிப் பணிபவர்களை நம்ப வேண்டாம் என்கிறார் வள்ளுவர். சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு குறித்தமை யான். (குறள் எண்: 827) (ஒன்னார் = பகைவர்) வில்லும் அம்பும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய கருவி. அது ஒரு கொலைக்கருவி. அதை நண்பர்போல், நம்மிடம் வந்து பணிந்து நடிக்கும் போலிகளினால் வரும் ஆபத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறார். வில் இயற்கையாகவே வளைவு உடையது. அது வளைய, வளைய அதிலிருந்து வெளிப்படும் அம்பின் வேகம் கூடும். மேலும் அது வளைந்தால் ஆபத்து. போலி நண்பர்கள் அல்லது பகைவர் மனம் நேர்மை கொண்டது அல்ல; அது கோணல் (வளைவு) ஆனது. அது புறத்திலும் கோணல் ஆனால்? பெரிய ஆபத்து வரும். வள்ளுவர் எவ்வளவு பொருத்தமானஉவமையைக் கையாளுகிறார். பாருங்கள்! ஒரு சிறு உவமையில் எவ்வளவு அரிய நுட்பங்களை எல்லாம் அடக்கி உள்ளார்! 6:5 தொகுப்புரை நட்பை விட இந்த உலகில் தேடிச்சென்று பெறக்கூடிய அரிய பொருள் ஏதாவது இருக்கின்றதா? ஒரு செயலில் இறங்கும் பொழுது, துணை வேண்டியிருப்பின், பாதுகாவலாக உடன் நிற்பது நட்பைத் தவிர வேறு எது? நட்பின் சிறப்பை விளக்க வந்த வள்ளுவர் வினவும் கேள்விகள் இவை. செயற்கு அரிய யாஉள நட்பின்; அதுபோல் வினைக்கு அரிய யாஉள காப்பு. (குறள் எண : 781) நட்பின் இலக்கணம் இடுக்கண் (துன்பம்) களைவது; உணர்ச்சியால் ஒன்றுவது; தவறும் நேரங்களில் இடித்துரைத்து நெறிப்படுத்துவது. இத்தகைய நட்பிற்கு உகந்தவர் பண்புடையவரும் நல்ல குடிப்பிறந்தவரும் ஆவர். நட்புக்கொள்ளத் தகுதியற்றவர்கள் ‘சொல்வேறு செயல்வேறு’ என்றிருப்பவரும் அறிவிலிகளும். நட்பின் பெருமையாலும் அது தரும் உரிமைகளாலும், நண்பர்போல் நடிக்க முயல்வர் பகைவர் - அவர்களிடம் எச்சரிக்கை வேண்டும். மேற்கூறிய செய்திகளே இப்பாடத்தின் சுருக்கமாகும். சமூக இயல், உளவியல் போன்ற அறிவுத்துறைகள் உருவெடுப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னரே சமுதாயப் பழக்க வழக்கங்களையும், தனிமனிதரின் செயல் வகைகளையும் ஊன்றிக் கவனித்து, அலசி, ஆய்ந்து அறிந்த உண்மைகளின் சாரம் தான் இந்தச் செய்திகள். எனவே தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்பு அறாமல், பயன்தரும் அறிவுரைகளாகி, அறநெறியாக அவை விளங்குகின்றன.