இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்1.

ஐந்திரம்

          இக்காரணத்தை நாம் ஊன்றி நோக்கினால் அது வலிமையுடையதாகாது என்பது விளங்கும். ஏனெனில் ஐந்திரம் பாணினீயத்திற்குப் பின் வழங்கவில்லை என்று ஒரு தலையாகத் துணியமுடியாது. மேலும், ஐந்திரம்2 ஒரு தனிப்பட்ட இலக்கணமாக எப்பொழுதாவது இருந்தது உண்டா என்பதும் ஐயப்பாட்டிற்கு இடனாயுள்ளதே. பாணினீயினுடைய இலக்கண முறை ஸமிஜ்ஞை முதலியவற்றால் நிறைந்து இயற்கையான முறைகளோடு பெரிதும் மாறுபட்டுள்ளது. இதற்கு மாறாக ஓர் எளிய, இயற்கையான – யாவருக்கும் விளங்கும்படியான – வகையில் இலக்கண அமைப்பு முறை ஒன்று உளதாயிருத்தல் வேண்டும். பிராதிசாக்கியத்தில் இந்த எளிய முறை காணப்படுகிறது. இம்முறையை நமது புராணங்களில் கூறப்படும் இந்திரன் தோற்றுவித்தான் என்று நம்பினர். இவன் இந்த எளிய முறையை அமைத்து இலக்கண நூல் ஒன்று செய்தான் என்றும் கற்பித்தனர். எளிதாயிருந்தபடியாலே இம்முறையைப் பலர் கையாண்டார்கள். தனியான ஓர் இலக்கண மதமாகவும் இது கொள்ளப்பட்டது. இந்த மதம்தான் ஐந்திரம் எனப் பெயர் பெறலாயிற்று. பாணினி ஆசிரியர், பதஞ்சலி ஆசிரியர், காசிகாவிருத்தி ஆசிரியர் இவர்களுள் ஒருவரேனும் இம்மதத்தை ஐந்திரம் என்ற பெயரால் அழைத்ததில்லை. வடமொழி இலக்கணங்களை ஆராய்ச்சி செய்த கீல்கார்ண் (Kiwelhorn), பெல்வெல்க்கர் (Belvalkar) என்ற இரு பேராசிரியரும், ஐந்திர மதத்தில் கூறப்பட்டுள்ள பொருள்கள் பாணினீயத்திற்கு முற்பட்டதாயினும், ஐந்திரமதமும் அதன் பெயரும் ஏற்பட்டமை அதற்குப் பிற்பட்ட காலத்தேதான் என்று கருதுகிறார்கள்3. ஸர்வவர்மன் சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றிய காதாந்த்ரம் ஐந்திர மதத்தைச் சார்ந்தவற்றுள் சிறந்தது என்பர். இந்த இலக்கணம் கௌமாரம் அல்லது காலாபம் என்றும் வழங்கப்பெறும்.

மேற்கூறியவற்றால் ஐந்திரம் என்னும் பெயர்வழக்கும் மதமும் பாணினீயத்துக்குப் பிற்பட்டனவே என்பது விளங்கும். தற்காலத்துள்ள ஒருவன் வில்லிபாரதத்தில் வல்லவன் என்று கூறப்படுவானாயின் அவன் பெருந்தேவனார் காலத்திற்கு முற்பட்ட காலத்தவன் என்பது அமைதியுடைத்தாகுமா? மேற்குறித்த தமிழறிஞர்களது கொள்கையும் இது போன்றது தான்.

பாணினீயம் முற்பட்டதாயின், அதனை விடுத்து ஐந்திரத்தைத் தொல்காப்பியர் கைக்கொண்டதற்குக் காரணம் என்னவென்று கேட்கலாம். காரணம் மிக வெளிப்படையாக உள்ளதே. பாணினி ஆசிரியர் குறியீடுகளையும் தாமாகப் படைத்துக் கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார். இவை, பீஜகணிதத்தில் குறியீடுகள் போல, பாணினீய இலக்கணத்திற்கு உதவின. இவற்றைப் பயன்படுத்தத் தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜகணித நூலை இவர் இயற்றினார் என்று தான் நாம் சொல்ல வேண்டும். உதாரணமாக, நிலைமொழியீற்றில், இ, உ, ஜ, ஸ என்ற இவ்எழுத்துகள் குறிலாகவேனும் நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர்வருமாயின் நிலைமொழியீறு ய், வ், ர், ல் என முறையே திரியும். இவ்விதியை, இகோயணசி என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார். இங்கே இக் என்பது இ, உ, ஜ, ஸ என்பவற்றையும் யண் என்பது ய், வ், ர், ல் என்பவற்றையும் அச்  என்பது உயிரெழுத்துக்களையும் குறிக்கும். இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும். ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாதுபாடத்தையும் கணபாடத்தையும் மனனம் பண்ணியிருத்தல் வேண்டும். தாதுபாடம் வினைப்பகுதிகளையெல்லாம் ஒருசேரத் தொகுத்துக் கூறும். கணபாடம் என்பது சொல் – தொகுதிகளின் இயல். இத்தொகுதி ஒவ்வொன்றிலும் முதலாவது வரும் சொல்லையே ஓர் இலக்கண விதியில் பாணினியாசிரியர் குறித்திருப்பர். அங்ஙனம் குறித்த அளவில், அச்சொல்லோடு தொடங்கும் அனைத்துச் சொற்களும் அவ்விதியினையே பின்பற்றும் என்பது ஆசிரியரது கருத்தாகும். இவ்வாறாக பிரத்தியாகாரம் முதலிய சுருக்கங்களினாலும், பல்வேறு குறியீடுகளினாலும், பிற குறிப்புக்களாலும் வடமொழி முழுவதையும், அதன் சிதைவு வடிவம் முதலிய அனைத்தையும் ஒரு சிறு நூலாகப் பாணினி ஆசிரியர் மிக்க திறமையோடு அமைத்திருக்கின்றார்4.

இவ்வகையாய் அமைந்த பாணினீயமுறை வடமொழியோடு யாதொரு தொடர்புமற்ற பிறிதொரு மொழியின் இலக்கணத்தை அமைப்பதற்குச் சிறிதும் பயன்படமாட்டாது என்பது தெளிவு. அன்றியும் வேறொரு காரணமும் உளது. தொல்காப்பியர் ஜைனர் என்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன; ஆதலால் அவர் ஓர் புறச்சமயி ஆவர். தம்போன்ற புறச்சமயிகளால் கற்றுப் போற்றப்பட்ட ஓர் இலக்கண முறையையே அவர் பின்பற்றுதல் இயற்கை, ஐந்திரம் அவ்வகை இலக்கணமுறையுள் ஒன்று.

தற்காலத்துள்ள ஓர் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார்: சாந்திர வியாகரணம் முதலியன பாணினீயத்திற் கூறியுள்ள முறையையே பெரிதும் பின்பற்றின. எனினும், புதுமுறைகளும் தோன்றத் தொடங்கின. இவற்றின் விளைவாகக் காதாந்த்ரம் என்னும் பெயருடைய ஓர் இலக்கணத்தை ஸர்வ்வர்மன் இயற்றினார். அது அவர் காலத்தில், பெரிதும் பயன்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், மத்திய ஆசியா வரையிலும் அது வழக்கில் இருந்தது எனத் தெரிகிறது. தென்னிந்தியாவிலும் திராவிட மொழிகளின் இலக்கணங்களுக்கு அது முன் மாதிரியாகவும் பயன்பட்டது5.

முடிவாகப் பாணினியின் பேரிலக்கணத்தைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்க முடியாது. யாஸ்கரது நிருக்தத்தில்,

சத்வாரி பதஜாதாநி நாமாக்யா தோசோபஸர்க்க நிபாதச்ச

எனச் சொற்களின் பாகுபாடு வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நாமம், ஆக்யாதம், நிபாதம் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பது இதன் கருத்து. ஆனால் பாணினீயத்தில் ஸீப் – திங் – அந்தம் பதம் (1, 4, 14) என்று வருகின்றது. இதனையே தொல்காப்பியர்,

சொல்லெனப் படுப பெயரே வினையென்று

ஆயிரெண் டென்ப அறிந்திசி னோரே     (தொல்.சொல்.158)

எனச் சூத்திரம் செய்தனர்.

இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப    (தொல்.சொல்.159)

என நிருத்தம் கூறியுள்ளதனையும் அவர் அடுத்தபடியாக உடன்பட்டனர். பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் சிக்ஷைங்யுங் கூடத் தொல்காப்பியருக்குப் பயன்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சிக்ஷையில்,

அஷ்டௌ ஸ்தாநாநி வர்ணாநாம் உர: கண்ட சிரஸ்ததா:

ஜிஹ்வாமூலஞ்ச தந்தாஸ்ச நாசி கோஷ்டௌச தாலுச.

என வந்துள்ளது. இதனையே,

உந்தி முதலா முந்துவளித் தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்துஞ் சொல்லும் காலை

பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல

திறப்படத் தெரியுங் காட்சி யான          (தொல்.எழுத்.83)

என்ற சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே தொல்காப்பியர் பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்ற கொள்கை சிறிதும் ஒப்புக் கொள்ளத்தக்கதன்று. பிற்பட்டவர் என்றே நாம் கொள்ளுதல் வேண்டும்.

பாணினியின் காலம்

இவ்வாறு சொல்லிய அளவில், தொல்காப்பியரது காலத்தை வரையறை செய்தவர்களாக மாட்டோம். பாணினியின் காலம் இன்னும் அறுதியிடப்படவில்லை. R.G. பண்டர்க்கர் கி.மு.8ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பர். கோல்ஸ்டக்கர் என்ற பேராசிரியர் தவிர, மற்றைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கி.மு. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டினராக அவரைக் கொண்டுள்ளார்கள். வடமொழியிலுள்ள பூர்வ இலக்கியங்களின் காலம் பெரும்பாலும் ஊகமாகவே உள்ளன. மாகாபாஷ்யத்தை இயற்றிய பதஞ்சலியின் காலம் ஒன்றே ஐயத்திற்கிடமின்றித் திட்டமாக அறியப்படுவது. வடமொழி இலக்கியத்தின் சரித்திரத்திற்கு அது ஒரு முக்கியமான, அறுதியான எல்லைக் கல்லாக உள்ளது. இப்பதஞ்சலி முனிவர் தம்முடைய மாகாபாஷ்யத்தை கி.மு. 150இல் இயற்றினார். இவருக்கும் தொல்காப்பியருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நாம் நோக்குதல் வேண்டும்.