New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான்
Permalink  
 


30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை

 

சொ. வினைதீர்த்தான்

 

இலக்கியம் என்பது இனிமை உடைத்து. கற்போருக்கும், வாசிப்போருக்கும், கேட்போருக்கும் இனிமை பயப்பது. கதையோடு கூடிய காப்பியமாக விளங்குகின்ற மணிமேகலை போன்ற இலக்கியங்கள் கதைத் திருப்பங்களால் மேலும் இனிமை பெற்றனவாக விளங்குகின்றன. இலக்கிய இனிமையோடு உயர்ந்த கருத்துகளும் இலக்கியத்திற்கு இன்றியமையாப் பண்பினவாகின்றன. உயர்ந்த நோக்கங்களுள் ஒன்று படிப்போருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகும். மணிமேகலைக் காப்பியம் ஒரு தனி மனிதப் பெண்ணாக இருந்து மணிமேகலை சாதித்த சாதனைகள், மற்றும் அவள் சிக்கல்களை எதிர்கொண்ட விதம் ஆகியன குறிப்பாகப் படிக்கும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவனவாக அமைவனவாகும். அவ்வகையில் இக்கட்டுரை மணிமேகலைக் காப்பியத்தின் வழியாகப் பெறப்படும் தன்னம்பிக்கைக் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. 

மணிமேகலையில் இடம்பெறும் தன்னம்பிக்கைச் சிந்தனைகளை பின்வரும் நிலையில் அடுக்கிக் காண இயலும்.

1. பிள்ளைகளுக்கு அவர்கள் குடும்ப அங்கத்தினரின், மரபினரின் நற்செயல்களைத் தாய் எடுத்துச்சொல்லி வளர்க்கிறபோது உயர்ந்த நெறிகள் அவர்கள் மனதில் படிந்து, அவர்கள் வாழ்வை நல்ல நெறியில் வழிநடத்துகிறது. சித்ராபதி வழி வந்த ஆடல் மகளிர் வாழ்க்கை, கோவலன் கண்ணகி வழியாக வருகிற வாழ்க்கை என்று இரண்டு மரபுகள் மாதவி முன் தெரிந்தெடுக்க உள்ளன. ஆனால் மாதவி துறவறம் பூண்டு துறவாடை வழிகாட்டியாக மணிமேகலை முன்னின்று

“காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்” 

என்று சொல்லி மணிமேகலை நெஞ்சத்தில் தான் கண்ணகி மகள் தீத்தொழிலுக்கு உரியவளன்று என்ற நெறியை வளர்தெடுக்கிறாள்.

2. மணிமேகலை என்ற பெயர் நன்னெறித் தெய்வத்தின் பெயராக அமைந்து அவளுடைய நல்ல எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றது என்பதனை இன்று பிள்ளைக்குப் பெயர் வைப்பவர்கள் உணர வேண்டும்.



3. நல்ல அறங்களுக்கு முயல்பவர்களுக்கு மக்கள், பெரியோர், சூழ்நிலை, தெய்வம் அனைத்தும் துணையாகவரும் என்பதற்கேற்ப மணிமேகலைக்கு சுதமதி, காயசண்டிகை, ஆதிரை, அறவண அடிகள் அனைவரும் உதவுகின்றனர். சக மனிதர்களின் நலம் பேணுகையில் தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும் என்பதற்கிணங்க மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்குக் கொண்டு சேர்க்கிறது. வரங்கள் நல்கிறது. தீவில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை கைகளுக்கு அமுதசுரபி வர துணைநிற்கிறது. பெரியாரைத் துணைக்கொள்வதில் மணிமேகலை சிறந்து விளங்குகிறாள்.

4. நல்லெண்ணத்தின் வலிமையால் வந்த துன்பம் நீங்குமென்பதற்கு உதயகுமரன் கொலையால் சிறைபுகுந்த மணிமேகலை சிறைக்கொடுமைகளைப் பொறுத்துக் கொண்ட திறத்தைக் கண்டு இராசமாதேவி மனம் மாறி மணிமேகலையைத் தொழுகிறாள். பெரியோர் போற்றும் தவச்செல்வி அதனைத் தடுத்துத் தான்தொழுகிறாள். 

5. தகவல் தொடர்பு கலை சாதுவன் கதை மூலம் தெற்றென விளக்கப்படுகிறது. நாகர்மொழி அறிந்திருந்தமை அவன் உயிரினைக் காக்குகிறது. நரமாமிசம் உண்பவர்களிடமும் அவர்கள் மனம்கொள்ளுமாறு சான்றுகளுடன் அறிவைக் கெடுக்கும் கள்ளுண்ணுதல், மனிதனால் படைக்கவியலாத உயிரைக் கொல்லுதல் போன்றவற்றைத் தவறெனத் தன் திறன் மூலம் உணர்த்தித் திருத்துகிறான் சாதுவன். தன் முன்னேற்றத்திற்குக் காரணமான அறிவை மயக்கும் கள் தன்முன்னேற்றம் வேண்டுபவர் விலக்க வேண்டியதில் தலையாயது.

6. காப்பியம் புத்தமதக் கொள்கைகளை வலியுறுத்த எழுந்தது. முற்பிறப்பின் எச்சங்கள் இந்தப்பிறவியிலும் தொடர்கிறது என்பது பல இடங்களில் கூறப்பட்டிருந்தாலும் “பொறியின்னமை யார்க்கும் பழியன்று ஆள்வினையின்மை பழி” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விதியெவ்வாறு இருந்தாலும் தவத்தாலும் பசிப்பிணியகற்றும் அறத்தாலும் தொடர்ந்து செயலாற்றி மானுடம் போற்ற வாழ்க்கை நடத்தலாமென்பதற்கு எடுத்துக்காட்டாகிறாள் மணிமேகலை.

7. ஆப்பிரகாம் மாஸ்லா அடிப்படைத் தேவையான உண்டி முதல் உயர்ந்தபட்சத் தேவையான தன்இலக்கு நிறைவேறல், தன்னிலை அறிதல் வரை தேவைகள் நிறைவேறுகிற போது மனிதன் தன்முன்னேற்றம் கொள்கிறான் எனத் தேவைக்கோட்பாடுச் சட்டகம் வகுக்கிறார். பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்றுப் பிறவாமை நீக்குகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது. 



மேற்கண்ட கருத்துக்களில் சிலவற்றை விரிவாகக் காணும் வகையில் முதலில் மணிமேகலையின் கிளைக்கதையொன்றில் சாதுவன் என்ற வணிகனுடைய பாத்திரப்படைப்பு வழியாகப் பல மொழிகளை தெரிந்துவைத்திருப்பது உயிரையும் காக்க உதவுவதையும் உரையாடலில் Logic and Sequencing என்கிற கோர்வையாகவும் தர்க்க வாதச் சான்றுகளுடன் பேசுகிறபோது கொடிய மனமுடையோரையும் கவர்கிறது என்பதையும் காணலாம்.

“பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென” முதன்முதலாக அமுதசுரபி பாத்திரத்தில் உணவு இடுகிற பெண்ணின் நல்லாள் ஆதிரையின் கணவன் சாதுவன் எனும் வணிகன். அவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையுடன் சேர்ந்து வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டி விடுகிறாள். பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான். கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர்கள் கையில் அகப்படுகிறான்.

இங்கே ஊரில் ... கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகிறாள். கணவன் இறந்ததால் தீக்குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்துத் தீக்குளிக்க முயல்கிறாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்த கூறை எரியவில்லை; பூசிய சந்தனமும் சூடிய மாலையும் நிறம் வாடவில்லை. அவள் தாமரையின் நடுவே திகழும் திருவைப் போலப் பொலிகிறாள். ”தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான். என்ன செய்வேன்!” என்று புலம்புகிறாள்.

அப்போது அசரீரி ஒன்று சொல்கிறது: 

“உன் கணவனைக் கடல் அலைகள் நக்க சாரணர் நாகர் வாழும் மலைப்பக்கம் சேர்த்திருக்கின்றன. பல ஆண்டுகள் அங்கே தங்கமாட்டான். சந்திர தத்தன் என்னும் வாணிகனின் கப்பல் வரும்போது அவனும் வருவான். துன்பப்படாதே!” ஆதிரையின் அழுகை நிற்கிறது. பொய்கையில் குளித்து எழுந்தவளைப் போல எழுந்திருந்து தன் வீடு செல்கிறாள். அதுமுதல் பிற பத்தினிப் பெண்டிரும் அவளைத் தொழுகின்றனர்.

நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்து விடுகிறான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள் அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து அவனை எழுப்புகிறார்கள். ”ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்” சுருக்கமான பொருள்: ஊன் உடைய இந்த உடம்பு நமக்கு உணவு என்று சொல்லி அவனை எழுப்ப... 

சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது.... அவர் பாடை மயக்கு அறு மரபின்” கற்றனன் ஆதலின் அவர்களுடன் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் ”குரு மகனிடம்” கூட்டிச் செல்லுகிறார்கள். அங்கே... கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில்... நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போன்று (எண்கு தன் பிணவோடு இருந்ததுபோல) தோன்றுகிறது.

அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலைவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான். நாகர் தலைவனோ, ”பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு” என்று கேட்கிறான். 



சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.

”மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனையாகு ...”

சுருக்கமான பொருள்: மயக்கத்தை உண்டாக்கும் கள், உயிர்க்கொலை இந்த இரண்டையும் குற்றமற்ற மக்கள் தவிர்த்தார்கள். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதும்... உறங்குவதும் உறக்கத்திற்குப் பின் விழிப்பதும் போலவே. இந்த உண்மையினால்... நல்லறத்தைச் செய்பவர்கள் நல்லுலகை அடைவார்கள்; நல்லது அல்லாதவற்றைச் செய்பவர்கள் கொடிய நரகத்தை அடைவார்கள். அதனால் அறிவுடையோர் இவைகளைத் தவிர்த்தார்கள்.

சாதுவனின் ”நல்லறம்” பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்: ”உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு.” சாதுவன் மறுமொழியாகச் சொல்கிறான்:

”உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். போனவர்களுக்கு எங்கே புகலிடம் என்பதை நான் மட்டுமல்ல, எல்லோரும் அறிவார்கள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்.” 

இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் ”நல்லது அறிந்த அந்தச் செட்டி”யின் கால்களில் விழுந்து கேட்கிறான்: ”கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்.” சாதுவன் அவர்களுக்கு நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.

”உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக”

சுருக்கமான பொருள்: கலம் (கப்பல்) உடைந்து உயிர் தப்பி இங்கே யாரும் வந்து சேர்ந்தால், அவர்களைக் கொல்ல வேண்டாம். அவர்களுடைய அருமையான உயிரைக் காப்பாற்ற வேண்டும். முதுமை அடைந்து இறந்து போகும் விலங்குகளைத் தவிர்த்து வேறு எந்த உயிர்களையும் (உண்ணுவதற்காக) கொல்ல வேண்டாம். நாகர் தலைவன் நன்றி காட்டுகிறான். அவன் கொடுத்த பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான். இவ்வாறாக பல மொழிகள் கற்றுப் பிறர் மனங்கொள்ளுமாறு உரையாடுகிற திறனை வளர்த்துக் கொள்கிறபோது இன்னல் விலகி வாழ்வு சிறக்கிறது. 


அடுத்து தலையாய கருத்தாகப் பிறிதொன்றைக் காணலாம். தன்முனைப்பு, தன்ஊக்கம் மற்றும் ஊக்குவிப்பு (Motivational theories) பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் ஆப்பிரஹாம் மாஸ்லாவின தேவைகள் பற்றிய கொள்கைகளைத் தொடாமல் இருக்க முடியாது. மனிதன் தேவைகள் பூர்தியாகிறபோது ஊக்குவிக்கப்படுகிறான் என்பதும் மனிதனின் ஒரு தேவை பூர்த்தியனாதும் அடுத்ததேவைக்கு மனிதமனம் ஏங்குகிறது என்பதும் அவருடைய கொள்கை.(Hierarchy of Needs).

இந்த தேவைகள் கொள்கையும் மணிமேகலை வாழ்க்கை உணர்த்தும் படிநிலைகளும் அப்படியே ஒத்துப் போவதைக் காணலாம். 1950-களில் பிரபலமான கோட்பாட்டை எவ்வளவு துல்லியமாக நம்முடைய பெரியோர்கள் யோசித்திருக்கிறார்கள் என்பது வியப்பிற்குரியது.

மாஸ்லாவின் கொள்கைப்படி முதல் தேவை Basic need உடல் சார்ந்த தேவை. உணவு ,உடை, உறையுள் முதலியவை. நேற்று வந்த பசி 'இன்றும் வருங்கொல்லோ ' என்றது குறள்.

அடுத்த தேவை Security need. இன்றைக்குக் கிடைத்த உணவு நாளைக்கும் கிடைக்க வேண்டும். முன்னோர் காடு வெட்டி போட்டுக் கடிய நிலம் திருத்தி வீடு கட்டிக் கொண்டு இருந்தது இத்தேவையின் பூர்த்தி கருதியே!.

அடுத்தது தோழமையுணர்வு (Companionship need - Social need). ஒருவனுக்கு வேலை கிடைத்து, அவ்வேலை நிரந்தரமாகவும் சமுதாயம் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறது. தனியாக வாழ முடியாததால் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்ததாக பைபிள் சொல்லிற்று. பாரதிதாசன் 'என்ன இன்பம் எனக்கு நல்கும்' என கேட்டு 'இருக்கின்றாள் என்பது ஒன்றே' என்று பதில்அளித்தார்.

பிறகு Esteem need. மனிதர்கள் கவனிக்கப்படுவதற்கும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் ஏங்குகிறார்கள். இது தீராத ஏக்கம்! எனவே இது உயரிய தேவை. மனிதர்களை வயப்படுத்த, மனித உறவுகள் மேம்பட மற்றவரின் இத்தேவையை என்றும் பூர்த்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்! 

இதற்கும் மேலே உச்சபட்சத் தேவை Self Actualization. தன்னை அறிதல், தன் உயரிய உள்ளக்கிடக்கை நிறைவேறல் எனக் குறிக்கலாம்.

இதே வரிசை திருவிடை மருதூர் தேவாரத்தில் நாவுக்கரசர் பாடுகிறார்:

கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல்பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்தாலும் அரசினும் 
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே!

முதல் அடிப்படைத்தேவை கனி. கனியாக இருந்தால் அதிக நாள் வைத்திருக்க முடியாது. அதுவே கட்டிபட்டு வெல்லமாக மாறி இருந்தால் பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். இரண்டாவது தேவை நிறைவேறும். 


அடுத்து மலர்க் குழல் பாவை தொடர்பு தோழமை நல்கிறது. அடுத்து அரசனைப் பற்றிப் பாடல் சொல்கிறது. அதுவும் அரசர்க்கு அரசன். தனி முடி தரித்தவன். Esteem Need எவ்வளவு பூர்தியாகும். 

அதற்கும் மேலே அப்பரின் உச்சமான தேவை, அவனருளே. அவரின் உள்ளக்கிடக்கை, இனிமை அவனை அடைவதே.

இந்த அடிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதல் அடிப்படைத்தேவையான (Basic Need) பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலு அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.

தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.

”ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

சுருக்கமான பொருள்: வலிமை உடைய மக்களுக்கு உணவு கொடுப்பவர் அறத்துக்கு விலை பேசுபவர்கள். இயலாதவர்களின் கொடிய பசியை நீக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே உண்மையான மெய்ந்நெறி வாழ்க்கை. எனவே ... உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.

அறவண அடிகள் அறம் கூறும்போது உரைக்கிறார்.

”மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல்”

சுருக்கமான பொருள்: மக்கள் தேவர் என்ற இருவகைப்பட்டவர்களுக்கும் தகுந்த ஓர் அறம் சொல்லுவேன். அது பசியாகிய பிணியைத் தீர்ப்பதே.

இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.

அடுத்த தேவையான தோழமை (Companianship Need) நல்கும் காமஉணர்வு குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.

புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 
இதுவே ஆயின் கெடுகதன் திறம்... 

என்று அதை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் (Self Actualisation) என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது. “காணார், கேளார், கால்முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தியோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாகப் பெருவளம் சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. ”பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றிய பின்னரும் (Esteem Need) மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. அறவண அடிகளிடம் ”அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள். பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்றுப் பிறவாமை நீக்குகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது. 


மீண்டும் காப்பியத்தில் நம்மைக் கவர்கின்ற சிந்தனைகளைப் பட்டியிலிட்டு உரையை நிறைவு செய்யலாம். 

1. பிள்ளைகளுக்கு அவர்கள் குடும்ப அங்கத்தினரின், மரபினரின் நற்செயல்களைத் தாய் எடுத்துச்சொல்லி வளர்க்கிறபோது உயர்ந்த நெறிகள் அவர்கள் மனதில் படிந்து அவர்கள் வாழ்வை நல்ல நெறியில் வழிநடத்துகிறது. சித்ராபதி வழி வந்த ஆடல் மகளிர் வாழ்க்கை, கோவலன் கண்ணகி வழியாக வருகிற வாழ்க்கை என்று இரண்டு மரபுகள் மாதவி முன் தெரிந்தெடுக்க உள்ளன. ஆனால் மாதவி துறவறம் பூண்டு துறவாடை வழிகாட்டியாக மணிமேகலை முன்னின்று மணிமேகலை கண்ணகி மகளென்ரு ஒப்புக்கொடுத்து அவள் தீத்தொழிலுக்கு உரியவளன்று என்ற நெறியை வளர்தெடுக்கிறாள். 

2. மணிமேகலை என்ற பெயர் நன்னெறித் தெய்வத்தின் பெயராக அமைந்து அவளுடைய நல்ல எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றது என்பதனை இன்று பிள்ளைக்குப் பெயர் வைப்பவர்கள் உணரவேண்டும். 

3. நல்ல அறங்களுக்கு முயல்பவர்களுக்கு மக்கள், பெரியோர், சூழ்நிலை, தெய்வம் அனைத்தும் துணையாகவரும் என்பதற்கேற்ப மணிமேகலைக்கு சுதமதி, காயசண்டிகை, ஆதிரை, அறவண அடிகள் அனைவரும் உதவுகின்றனர். சக மனிதர்களின் நலம் பேணுகையில் தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும் என்பதற்கிணங்க மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு கொண்டுசேர்க்கிறது. வரங்கள் நல்கிறது. தீவில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை கைகளுக்கு அமுதசுரபி வர துணைநிற்கிறது. பெரியாரைத் துணைக்கொள்வதில் மணிமேகலை சிறந்து விளங்குகிறாள். 

4. நல்லெண்ணத்தின் வலிமையால் வந்த துன்பம் நீங்குமென்பதற்கு உதயகுமரன் கொலையால் சிறைபுகுந்த மணிமேகலை சிறைக்கொடுமைகளைப் பொறுத்துக் கொண்ட திறத்தைக் கண்டு இராசமாதேவி மனம் மாறி மணிமேகலையைத் தொழுகிறாள். பெரியோர் போற்றும் தவச்செல்வி அதனைத்தடுத்துத் தான்தொழுகிறாள். 

5. தகவல் தொடர்பு கலை சாதுவன் கதை மூலம் தெற்றென விளக்கப்படுகிறது. நாகர்மொழி அறிந்திருந்தமை அவன் உயிரினைக் காக்குகிறது. நரமாமிசம் உண்பவர்களிடமும் அவர்கள் மனம்கொள்ளுமாறு சான்றுகளுடன் அறிவைக் கெடுக்கும் கள்ளுண்ணுதல், மனிதனால் படைக்கவியலாத உயிரைக் கொல்லுதல் போன்றவற்றைத் தவறெனத் தன் திறன் மூலம் உணர்த்தித் திருத்துகிறான் சாதுவன். தன்முன்னேற்றத்திற்குக் காரணமான அறிவை மயக்கும் கள் தன்முன்னேற்றம் வேண்டுபவர் விலக்க வேண்டியதில் தலையாயது. 6.காப்பியம் புத்தமதக் கொள்கைகளை வலியுறுத்த எழுந்தது. முற்பிறப்பின் எச்சங்கள் இந்தப்பிறவியிலும் தொடர்கிறது என்பது பல இடங்களில் கூறப்பட்டிருந்தாலும் “பொறியின்னமை யார்க்கும் பழியன்று ஆள்வினையின்மை பழி” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விதியெவ்வாறு இருந்தாலும் தவத்தாலும் பசிப்பிணியகற்றும் அறத்தாலும் தொடர்ந்து செயலாற்றி மானுடம் போற்ற வாழ்க்கை நடத்தலாமென்பதற்கு எடுத்துக்காட்டாகிறாள் மணிமேகலை. 

7. ஆப்பிரகாம் மாஸ்லா அடிப்படைத் தேவையான உண்டி முதல் உயர்ந்தபட்சத் தேவையான தன்இலக்கு நிறைவேறல், தன்னிலை அறிதல் வரை தேவைகள் நிறைவேறுகிறபோது மனிதன் தன்முன்னேற்றம்கொள்கிறான் எனத்தேவைக்கோட்பாடுச் சட்டகம் வகுக்கிறார். பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப்போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்றுப் பிறவாமை நீக்குகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard