New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 20. சமணம் சமய அடிப்படைகள் - முனைவர் இரா. கீதா


Guru

Status: Offline
Posts: 23763
Date:
20. சமணம் சமய அடிப்படைகள் - முனைவர் இரா. கீதா
Permalink  
 


20. சமணம் சமய அடிப்படைகள்

 

முனைவர் இரா. கீதா

 

சமயங்கள் பல, இவ்வுலகில் தோன்றினாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே அமையும் என்பது இயல்பு. மணிமேகலை, புத்தரின் நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதற்காக எழுந்த பனுவல் மணிமேகலை எழுந்த காலத்தில் வைதீகம், வேதாந்தம், நியாய வைசேடிகம், சமணம், ஆசிவகம், சாrவாகம், சைவம், வைணவம், சாங்கியம் முதலிய மதங்கள் தமிழகத்தில் நிலவின. அக்காலத்தில் சமயப் பூசல்கள் அதிகம் இருந்தன. முதன் முதலில் தருக்க தத்துவ ஞானக் கருத்துக்களைத் தெளிவாக விளக்கி அறிமுகப்படுத்தியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். இக்காலத்தில் தமிழகத்தில் சமண சமயமும் சிறப்புற்று இருந்தது. அச்சமணம், அகம் புறம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே அறத்தோடு கூடிய நீதியினை வலியுறுத்தியது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல சமண சமய இலக்கியங்கள் தோன்றின. அவற்றின் வழி சமணசமயம் சமுதாயத்தில் இலக்கியத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

 

சமய நோக்கம்

 

உலகில் உள்ள அனைத்து சமயமும் மனிதனைப் பக்குவப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு விளங்குகின்றன. பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது, கொல்லாமை, பொய்யாமை, தூய்மை, கருணை, இரக்கம், உலக அமைதி, அற வாழ்வு போன்ற உண்மைகளை மனிதர்களிடத்தில் விதைப்பதே தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளன. இச்சமயங்கள் பரப்பும் இக்கொள்கைகள் அனைத்தும் மனிதர்கட்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை விளைவிக்கும் காரணிகளாக அமைகின்றன.

 

இந்து சமயக் கடவுள் வழிபாடு

 

இந்து சமயம் ஆறு முக்கியமான சமயப் பிரிவுகளைக் கொண்டிருந்தன. சைவ சமயம் - சிவபெருமானையும், வைணவம் - திருமாலையும், சாக்தம் - சக்தியையும், காணாபத்தியம் - கணபதியையும், கௌமாரம் - முருகனையும், சௌமாரம் - சூரியனையும் வழிபடு தெய்வங்களாகக் கொண்டிருந்தன. இச்சமயங்கள் போலவே பௌத்தமும், சமணமும் தமிழகத்தில் நிலவின.

 

சமணம்

 

'சமணர்' என்ற சொல்லிற்கு 'சமணன்', 'அமணக்குலத்தான்', 'அமணம்', அமணர்' என்னும் பல பொருள் தருகின்றது மதுரைத் தமிழ்ப் பேரகராதி. இவர்கள் அருகனை வழிபடும் சமயத்தோர். ஆருகதர், இவர்கள் ஆன்மாவும் உலகமும் அநாதி நித்தயமென்றும், முற்றத் துறந்து வாழ்தலே முத்தியென்று கூறுபவர்கள். அருகன் சமணர்களுக்கு ஆதிமூர்த்தி, மகாவீரன், பார்சுவன் முதலியோர் தீர்த்தங்கருள் சிறப்பு வாய்ந்தவர்கள் இதில் மகாவீரர், கௌதமபுத்தர் காலத்தவர் ஆவார். இவர் பார்சுவர் இரண்டாயிரத்து அறுநூறு வருசங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். சமணர்களின் புனித நூல் ஸ்ரீபுராணம். இந்நூல் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள், பன்னிரெண்டு சக்ரவர்த்திகள், ஒன்பது வாசுதேவர்கள், ஒன்பது பிரதிவாசுதேவர்கள், ஒன்பது பல தேவர்கள் எனப் புகழ்மிக்க அறுபத்து மூவர் வரலாற்றினைத் தருகின்றது. சமணர்களின் மூல நூலாக நான்கு மூல சூத்திரங்களும், நாற்பத்தைந்து ஆகமங்களுமாகும். வழி நூல், கற்ப சூத்திரம் ஆகும். அவை பத்திரவாணனார் என்பவரால் செய்யப் பெற்றது.

 தமிழ்நாட்டில் சமணசமயத் தோற்றம்

 

மோரியர் காலத்தில் சமணம் தமிழ்நாட்டில் புகுந்தது. சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் சமணக் கோட்பாடுகளைப் பார்க்க முடிகின்றன. சங்கம் மருவிய காலத்திலும் அதனையடுத்த இருண்ட காலத்திலும் சமணம் வேகமாகப் பரவியது. மதுரையில் சமணம் சமயம் சார்ந்த வச்சிரநந்தி முனிவர் அமைத்த திரமிளச் சங்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்தது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் புத்த சமயம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்த போது களப்பிரர்கள் புத்த சமயத்தைத் துறந்து சமண சமயத்தை மேற்கொண்டனர். கி.பி 470 இல் திராவிடச் சங்கம் என்ற சமண சங்கம் நிறுவப்பட்டதைத் 'திகம்பர தரிசன சாரம்' என்ற சமண நூல் எடுத்துரைக்கிறது. இச்சமணர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிரவண பெலகோலாவில் இருந்து தமிழகம் புகுந்தனர். தமிழகத்தின் தஞ்சைப் பகுதியின் மலைகளில் உள்ள இயற்கைக் குகைகளில் தங்கிச் சமணம் பரப்பினர். குறிப்பாக திருஞானசமந்த மூர்த்தி நாயனார் காலத்திற்கு முன்பு இச்சமயம் மிக்க பெருக்கமுற்றிருந்தது.

ஆதிகாலத்தில் வாழ்ந்த தமிழர்களிடத்தில் தனித்தமிழே வழக்கிலிருந்தது. பின்பு தமிழகத்தில் வந்து புகுந்த வடநாட்டவர் மொழியும், அவர்களின் ஒழுக்கமும் தமிழர்களை ஈர்த்தன. இதுகண்ட சமணர்கள் தம் சமணக் கருத்துக்களையும் தமிழரிடத்தில் புகுத்த எண்ணித் தாம் தங்கியிருந்த பள்ளிகளில் கூடங்கள் அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்விக் கொடை புரிந்தனர். அன்றிலிருந்து கல்வி பயிலும் இடங்களுக்குப் பள்ளிக் கூடம் என்று பெயர் வழங்கலாயிற்று. சமணம் வடநாட்டில் சைன சமயம் என்றும், தென்னாட்டில் சமண சமயம் என்றும் வழங்கப்பட்டது. இச்சமணத்தில் இல்லற வாழ்வுடையோரைச் சிராவகர் எனவும், துறவறம் பூண்டு வாழ்வோரைச் சமணர் எனவும் அழைப்பர். இச்சைனமதம் சார்ந்த சமணச் சான்றோர் தமிழகத்தில் புகுந்து தம் சமய நெறியினைப் பரப்பியதால் இவர்கள் பெயரால் சமண சமயம் என வழங்கப்பட்டது.

 

தொல்காப்பியத்தில் சமணம்

 

தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியரும் சமணரே என்ற கருத்துள்ளது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் சமணர் ஆவார். இதுபோலவே நன்னூல் யாப்பெருங்கலம் நம்பியகப்பொருள் போன்ற பல இலக்கண நூல்களைச் சமணர்கள் இயற்றியுள்ளனர். தொல்காப்பியம் மிக விரிந்து பரந்த நூலாய் அமைந்திருந்தமையால் அதனை எளிமைப்படுத்தும் நோக்கில் சின்னூலும் நன்னூலும் எழுந்தது. 

“எழுத்தெனப்படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃது என்ப” (தொல்.கா.நூ.-1)

என்று கூறிய தொல்காப்பியர் 'எழுத்தாவது இது' என்று இலக்கணம் கூறவில்லை, இதனை நன்னூலார்.

“மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து” (நன்னூல் நூற்பா-58)

என்று எழுதுகின்றார். இந்நூற்பாவில் அமைந்துள்ள ”அணுத்திரன் ஒலி” என்பது சமண சமயக்கருத்து ஆகும். மேலும், தொல்காப்பியர் ”அகத்தெழுவளியிசை அரில்தப நாடி அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே” (தொல்.கா.நூ.-102) என்று கூறுகின்றார். இன்நூற்பாவானது உள்ளே உறுப்புக்களில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும் என்று விளக்கம் கூறுகின்றது. எனவே மேற்கண்ட இந்நூற்பாக்கள் சமணக்கருத்துக்களை விளக்கும் விதத்தில் அமைந்துள்ளது சிறப்பு.

 சமண சமய இலக்கியங்கள்

 

தமிழ் இலக்கியங்களில் முதன் முதலாகச் சமணக் கோட்பாட்டினை விரிவாக எடுத்துரைக்கும் நூல் சிலப்பதிகாரம் ஆகும். சமணர்கள் பல அறநூல்கள், காப்பியங்கள், இலக்கணங்கள், எனப் பல்வேறு துறைகளில் தங்கள் புலமையினைக் காட்டித் தமிழை வளர்த்தனர் சங்க காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், நாண்மணிக்கடிகை ஆகியன சமண இலக்கிய நூல்கள் ஆகும். மேலும், கீழ்க்கணக்கு நூல்களில் வராத அருங்கலச் செப்பும் அறநெறிச்சாரமும் சமணர் இலக்கியங்கள் ஆகும். 

ஐம்பெருங் காப்பியங்களில் மூன்று சமண சமயம் சார்ந்தவை அவை 

1. சீவகசிந்தாமணி 

2. சிலப்பதிகாரம் 

3. வளையாபதி. 

ஐஞ்சிறுங் காப்பியங்கள் ஐந்துமே சமண சமயம் சார்ந்தவையாகும்.

 

மணிமேகலை காலத்திற்கு முன் சமண இலக்கியங்கள்

 

பதிணென் மேற்கணக்கு நூல்களான அகநானூறு சமணக் கடவுள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதனை

“வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேன்மார்” (அகம்-35.7)

என்ற அடிமூலம் அறியலாம். இங்கு 'பதுக்கைக் கடவுள்' என்று குகையில் வாழக்கூடிய சமணமுனிவர் பற்றிய குறிப்பினைக் காணலாம். மேலும் பட்டினப்பாலை மதுரைக்காஞ்சி போன்ற நூல்களிலும் சமணக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நூல்களில் மதுரையிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் சமணப்பள்ளிகள் மிகுந்திருந்தமையைச் சுட்டுகின்றன. இவர்கள் தங்கியிருந்த இடங்கள் பள்ளி என அழைக்கப்பட்டது. 'பள்ளி' என்ற சொல் இவர்களிடமிருந்து பெறப்பட்டது. சமணம் சார்ந்த சமணப் பள்ளியில் பூவும் புகையும் கொண்டு வாசகர் வழிபட்டமையை

“பூவும் புகையும் சாவகர் பழிச்ச” (மதுரை கா-4:76)

என்ற அடி எடுத்தியம்புகின்றது.

 

பதிணென் கீழ்க்கணக்குகளில் சமணக்கருத்துகள்

 

“கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும்” (நான்மணிக்கடிகை-பா-6)

“நல்விருந் தோம்பலின் நட்டாளாம்” (திரிகடுகம்-பா-6)

“உடம்பொழிய வேண்டிய உயர்தவம் ஆற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல் ஈகை” (சிறுபஞ்சமூலம்-பா-6)

“வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம்- உளவாய்
மிதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
குறித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி-391)

என்ற அரிய பெரிய மானிட உண்மைகளைப் போற்றி வளர்த்துள்ளது சமணம், என்பதனை இச்சமண நூல்கள் பறைசாற்றி நிற்கின்றன. இக்கருத்துக்கள் யாவும் மனிதப்பிறவி புனிதமடைய வேண்டிய வழிகளை எடுத்து இயம்புகின்றன.

 சிலம்பு

 

சிலப்பதிகாரத்தில் புகார் நகரில் இருந்ததாக நிக்கந்தக் கோட்டம், புறநிலைக் கோட்டம், அருகதகானம் முதலான சைனக் கோயில்களும், உறையூரில் 'கந்தன் பள்ளி' என்ற சைனப் பள்ளியும் குறிக்கப் பெறுகின்றன. இதனை

“அருகன், அறவன் அறிவோற்கு அல்லது” (சில நாடு-பா-200-202)

இத்தொடர் சமணசமயக் கடவுள் அருகதேவனை குறித்து நிற்கின்றது.

“திங்கள் மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்
செங்கதிர் ஞாயிற்று...
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி” (சிலம்பு காடுகான்காதை -பா-1-4)

இவ்வடிகள் மூன்று திங்களை அடுக்கினார் போன்ற முக்குடைக்கீழ் அசோக மர நிழலில் அமர்ந்தவனைக் காட்டுகின்றன. மேலும் சமண சமயத்தின் இன்றியமையாத கொள்கை கொல்லாமையாகும். இதனை

''பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை,
நெறிசெல் வருத்தத்து நீரஞரெய்தி
அறியா தடியாங்கு இடுத்தலும் கூடும்” (சில நாடு - 87-89)

இங்கு வண்டு நத்தை ஆகிய உயிர்களைக் கூடத் துன்புறுத்தல் கூடாது என்ற சமண சமயத்தின் விழுமிய கொள்கையினை வற்புறுத்துவதை அறிய முடிகின்றது. மேலும்,

“அறிவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நல்நாட்டு தீது தீர் மதுரை” (சில நாடு - 57-58)

என்ற தொடர் அருக தேவன் வழிபாட்டினை விளக்குகின்றது. இங்ஙனம் சமண சமயக் கருத்துக்கள் நிறைந்த காப்பியமாகத் திகழ்கின்றது சிலம்பு.

 

 

மணிமேகலையில் சமணம்

 

இரட்டைக் காப்பியங்களில் இரண்டாவதாக அமையும் மணிமேகலை பௌத்தக் காப்பியமாக அமைந்திருந்தலும் சமண சமயக்கருத்துகளும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. முற்றிலும் பௌத்த சமயம் சார்ந்த மணிமேகலையில் சமணசமயம் பற்றிக் கூறுவதன் காரணத்தை ஆராயும் பொழுது, அது பௌத்ததினை முன்னிறுத்த அமைந்த நுட்பமே என்பது புலப்படுகின்றது. மணிமேகலை புத்த சமயத்தைப் பிறசமயத்திலிருந்து உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டது. அக்காலத்தில் புறசமயங்கள் நிறைந்திருந்தன. அவைகள் ஒன்றுக்கொன்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விளைந்த நேரத்தில் சமயப் பூசல்கள் எழுந்தன. அந்தக் காலக் கட்டத்தில் சமண சமயம் அறக்கருத்துக்களைக் கொண்ட பல இலக்கியங்களைத் தோற்றுவித்தன.

அச்சமணம் தோற்றிவித்த கருத்துக்கள் மிகச் சிறந்தனவாக அமைந்திருந்தன. மேலும் சமணம் வெகுவிரையில் பரவின. இந்நிலையினைத் தவிர்க்கவே புத்தசமயம் சமணத்தைத் தாழ்த்தின. இதனை மணிமேகலையில்,

'புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண் டென்ன
நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி
என் மகள் இருந்த இட மென்று எண்ணித்
தன்னுறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர் காணும் சரண் எற்றோனை,
இவணீர் அல்ல வென்று என்னோடும் வெகுண்டு
மையறு படிவத்து மாதவர், புறத்தெமைக்
கையுதிர்க் கோடலின், கண்ணிறை நீரேம்'' (மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதை 46-55)

இவ்வடிவில் நிணத்தோடு வருவோர் சமணப் பள்ளிக்குள் நுழைய முடியாது என்ற கருத்தும் சமணர்கள் மாடு குத்திப் புண்பட்டவரைக் காப்பற்றத் தவறியவர்கள் என்பதையும் கூறிப் பௌத்தம் சமணத்தின் மேல் குற்றம் சுமத்துகின்றது.

இங்ஙனம் மணிமேகலைக் காப்பியத்தில் சமணம் பௌத்தத்திற்கு எதிர் சமயமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நிலை சமணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத போக்கு நிலவியதை இங்கு காண இயலும்.

 

சமயப் பூசல்

 

சமண சமயம் பல அறநெறிகளைத் தமிழகத்தில் வழங்கித் தமிழ் மொழி வழியே பல அற இலக்கியங்களைத் தோற்றுவித்துப் பெரும் வளஎச்சி கண்டது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த சைவம், வைணவம் போன்ற ஆதிகாலச் சமயங்களின் சமயப் பூசல் காரணமாகச் சமணம் நிலை தடுமாற ஆரம்பித்தது. சைவமும் வைணவமும் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பித்த பொழுது சமணம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் திருஞான சம்மந்தர் காலத்திற்கு முன்பு வரை இச்சமயம் நல்ல நிலையில் இருந்தது.

மருள்நீக்கியார் சமணத்தில் இருந்தபோது தருமசேனர் என்னும் பட்டப்பெயர் பெற்றார். வாக்குக்கு ஈசர் எனும் பொருளில் வாசீகர், நாவுக்கரசர் என்றும் அழைக்கப்பட்டார். இளமையில் சமணத்தை நாடிப் பின் தமக்கை திலகவதியின் அருளால் முதிய வயதில் சைவத்திற்கு மாறியவர். சமணத்திலிருந்த மன்னன் மகேந்திரவர்மனைச் சைவத்திற்கு மாற்றியவர். இவர் காலத்தில் தமிழகத்தில் சைவ சமயம் வேகமாக வளரத் தொடங்கிற்று. சமணம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிற்று.

 

தமிழ்த் தொண்டாற்றிய சமணர்

 

சமணர்கள் அறம் உரைக்கும் அமைதியும் நிரம்பியத் துறவறத்தையும் சீரிதாக மேற்கொண்டிருந்தனர். மணிமேகலை காலத்திலிருந்த சமண முனிவர்கள் தம் சமய அறங்களை மக்களுக்கு உணர்த்துவதே தமது கடனாகக் கொண்டிருந்தனர். சமண முனிவர்களால் செய்யப்பட்ட நூல்கள் யாவும் அறநூல்களாகவே இருக்கின்றன. அவர்கள் உலக வாழ்வில் வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் மிக்கவராய் இருந்துள்ளனர். தமிழ் மொழியின் இலக்கணத் துறையில் புகுந்து அதன் பகுதிகளுள் ஒன்றாகிய செய்யுளியலில் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்று தெளிவு.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard