New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்
Permalink  
 


தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்

தேமொழி  Feb 11, 2017  http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

Siragu tamilagaththin saadhi2

இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் “தீட்டு”  “விழுப்பு” என்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  “தீண்டாமை” என்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

கோ. க. பிள்ளை (1969), ஜார்ஜ் ஹார்ட் (George L. Hart, 1975a) போன்ற தமிழ் ஆய்வாளர்கள் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமையும் சாதிப்பிரிவினையும் இருந்துள்ளது எனத் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் கூறியுள்ளார்கள். இதனை மறுப்பவர்கள், குறிப்பாக அயல்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை மறுப்பவர்கள், அந்த ஆய்வாளர்களின் ஆய்வின் அடிப்படையில் புரிதல்பிழை நேர்ந்துள்ளது எனக் கருதுகிறார்கள். அயலக ஆய்வாளர்கள்  இந்திய வாழ்வியல் குறித்துத் தாங்கள் கொண்ட கருத்துப்பிழை காரணமாக, இக்காலச் சமூகத்தின் நிலைமையை அக்காலத்திற்கு ஏற்றிப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகிறார்கள்.  நூறாண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் இந்தியாவின் சாதி குறித்து வழங்கிய கட்டுரை முதற்கொண்டு இக்கால இந்தியச் சாதி ஆய்வாளர்களின் ஆய்வுகள் வரை, அயல்நாட்டு ஆய்வாளர்களுக்கு இந்திய சமூகத்தைக் குறித்த புரிதலில் பிழையிருக்கிறது என வைக்கும் விமர்சனமும் தொடர்ந்தே வருகிறது.

தமிழ்ப்பண்பாட்டில் வளர்ந்த தமிழறிஞர்கள் பாவாணர் (1992), கைலாசபதி (1968), வீ. எஸ். ராஜம் (1992) போன்றோர் சங்க இலக்கிய நூல்களில் ‘பறையன்’, ‘புலையன்’, ‘புலைத்தி’, போன்ற தொழில் அடிப்படையிலான பெயர்கள்  ஒருவரின் தாழ்ந்த நிலையைக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள். ‘இழிசினன், ‘இழிபிறப்பினோன், ‘இழிபிறப்பாளன்’ என்று சங்க இலக்கியங்களில் வழங்கிவரும் சொற்கள், இக்காலத்தில் நாம் கருதுவது போல, இழிந்தோன்’ என்ற பொருள் தரும் வகையில் ஒருவரைக் குறிக்கவில்லை என்றும் ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்கள். வீ. எஸ். ராஜம்  (2015) அவர்கள் தாம் எழுதிய  ‘சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற …’ என்ற நூலில் தொல்காப்பியம் முதற் கொண்டு சங்ககால இலக்கியங்கள், இலக்கணங்கள், சங்கம் மருவிய நூல்கள், பிற்காலத்திய தொல்காப்பிய  இலக்கண உரைநூல்கள் என விரிவாக அலசிப் பல சான்றுகள் வழியாகச்  சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் சாதிக்கோட்பாடு இல்லை என்று நிறுவுகிறார். சங்ககால தமிழ்ச் சமூகத்தினரிடம் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசும் சாதி, தீண்டாமை போன்றவை வழக்கத்தில் இல்லை என்றால்  எக்காலத்தில் இச்சொற்கள் தமிழ்ச் சமூகத்தின் தாழ்ந்த குலத்தவர் என ஒரு சில பிரிவினரைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தும் நிலை உருவானது,  ஏன் அந்த மாற்றம் என்பதை ஆராய்வது தொடர்ந்து வருகிறது.   இதன் பொருட்டு  சங்கம் மருவிய காலத்துத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலும், இலக்கியங்களிலும் விடை தேடி வருகிறார்கள் ஆய்வாளர்கள்.

Siragu tamilagaththin saadhi9

இந்த வரிசையில் ஆய்வாளர் முனைவர் பழனியப்பன் (முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், தலைவர், தென்னாசிய ஆய்வு மற்றும் தகவல் கழகம் / Dr. Sudalaimuthu Palaniappan, President, South Asia Research and Information Institute, www.sarii.org) அவர்கள் 2008 ஆம் ஆண்டு சர்வதேச சமண சமய ஆய்விதழில் வெளியிட்ட “சங்கம் மருவிய தமிழகத்தில் சாதிகள் உருவானதில் சமணம் அளித்த எதிர்பாராத் தாக்கம்” (On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society – https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf) என்ற ஆய்வுக் கட்டுரை சற்றே விரிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.  இலக்கிய ஆய்வுடன் நின்றுவிடாமல், வரலாற்றாய்வு, கல்வெட்டியல், சமண சமய நூல் விளக்கங்கள், மானுடவியல், மற்றும் திராவிட மொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டு, ஒரு பலதுறை அணுகுமுறையில் ஆய்வை மேற்கொள்ளும்பொழுது பழந்தமிழ்ச் சமூகத்தினரின் வாழ்வியல் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு புதிய கோணம் வெளியாகிறது என்கிறார் பழனியப்பன்.   முனைவர்  பழனியப்பன் சமணம் சமயம் ஏற்படுத்திய  தாக்கம் குறித்து  முன்வைக்கும் கருதுகோளையும்,  தனது கருதுகோளுக்குச் சான்றாக  அவர் வைக்கும் விவாதங்களையும் கொண்ட ஆய்வுக்கட்டுரையினைச் சுருக்கமாக  இனி காணலாம்.

*****

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்
Permalink  
 


சமண சமயம் எதிர்பாராதவிதமாகத் தமிழகத்தின் சாதிவளர்ச்சியின் வினையூக்கியாக மாறிய நிலை:

Siragu-tamilagaththin-saadhi10

சங்க இலக்கிய காலத்தில் பொருளாதார அடிப்படையில் செல்வந்தர்கள் வறியவர்கள் இருந்துள்ளனர், தலைவர் ஊழியர் இருந்துள்ளார்கள், மன்னர் குடிமக்கள் இருந்துள்ளார்கள், ஆனால் வறியவர்களை இழிவாக நினைத்து ஒதுக்கும் நிலை இருந்ததில்லை, தீண்டத்தகாதவர்கள் எனக் கருதிய நிலையும் இல்லை என்பதுவே சங்க இலக்கியங்கள் கூறுவது.  தங்களிடம் பரிசில் பெற வருபவர்களை மன்னர்கள் மதிப்புடன் நடத்தியுள்ளார்கள். புரவலர்கள் தங்களை மதித்துத் தங்களது திறமையைப் பாராட்ட வேண்டும் என்பதே பரிசில் பெறுவோரது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது. பொருநர்களை மதித்துப் பரிசில் வழங்கி அவர்களைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பும் கரிகால்வளவனின் செய்கையைக் குறிக்கும் பொருநராற்றுப்படை பாடல் (151-167) கூறுவதும் இத்தகைய நிகழ்வுகளையே.  இப்பண்புகளால் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தினர், பிறகு வந்த  சங்கம் மருவிய தமிழ்ச் சமூகத்தில் இருந்தும், வர்ணாசிரம பிரிவுகளைத் தழுவிக் கொண்ட வட இந்தியச் சமூகத்தில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவர்களாகவே  இருந்திருக்கிறார்கள். சுருங்கச் சொல்லின்,  சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறானது எவ்வாறு சாதிகளற்ற ஒரு சமூகம் உயர்வுதாழ்வுகளைப் பேசித் திரியும் சாதிகள் கொண்ட ஒரு சமூகமாக மாறியது என்ற  தனிப்பட்ட கோணத்தை வெளிக்கொணரும்  ஒரு வரலாறாகும்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்(1975) சங்க காலத்தில் துப்புரவற்ற தொழில் புரிந்த காரணத்தினால்  புலையர், புலைத்தி, பாணர், பறையர் ஆகியோர் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டனர் என்று கூறும் கருத்தினை மறுப்பதாகவே  இலக்கியமும் (பரிபாடல், 3.86), மொழியியல், வரலாற்றியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளும் அமைந்துள்ளன.  பொ.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல்லில் ‘சாக்கைப் பறையனார்’ என்ற போர் வீரர் பற்றிய கல்வெட்டுக் குறிப்பொன்று, மதிப்பைக் காட்டப் பயன்படும் ‘ஆர்’ விகுதி கொண்டு காணப்படுகிறது. அவ்வாறே, சங்கம் மருவிய காலத்துச் சோழ பாண்டிய மன்னர்கள் குறித்த செய்திகளிலும், பாணரைப் பெருமைப்படுத்தும் குறிப்புக்கள் கொண்ட  பல கல்வெட்டுத் தகவல்கள் கிடைத்துள்ளன. தர்மபுரிக் கல்வெட்டு ஒன்று (கல்வெட்டு எண், 1974/66) ‘புலைய மன்னார்’ என்பவர் ‘புறமலை நாடு’ என்ற தர்மபுரிப் பகுதியை ஆட்சி செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.  ஆகவே, பாணர், பறையர், புலையர்  போன்றோர் துப்பரவற்றது எனக் கருதப்படும் தொழில்களைச் செய்தவர்களும் அல்லர்.  இவர்கள் சமயச்சடங்கைச் செய்த தகவல்களும் இலக்கியத்தில் காணப்படுகின்றன.  சமயச் சடங்கில் ஈடுபட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாக அக்காலத்தில் கருதினார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகவும் இல்லை. சங்ககாலச் சமயச்சடங்குகளை ‘தீட்டு’, ‘தீண்டாமை’ ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தும் முயற்சி ஆய்வாளர்களின்  புரிதல் பிழையையும் காட்டுகிறது.  இப்பிழைக்குக் காரணம் இக்காலச் சமூகத்தின் நிலைமையை அக்காலத்திற்கு ஏற்றிப் புரிந்து கொள்வதால் ஏற்படுகிறது. அத்துடன் காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறிவிடுவதையும் இந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

சங்க இலக்கியப் பாடல்களில், ‘புலையன்’ என்ற சொல் ‘பாணரையும்’ குறிக்கிறது, பறை முழக்கியவரையும் குறிக்கிறது (நற்றிணை 347), ஈமச்சடங்குகளைச் செய்யும் சமயக்குருமார்களையும் குறிக்கிறது (புறம். 360); ‘புலைத்தி’ என்பவள் அழுக்குத் துணிகளை வெளுத்திருக்கிறாள் (குறுந்தொகை 330) எனச் சங்க இலக்கியப் பாடல்களில் காணக் கிடைக்கிறது.  அத்துடன்,  ‘புலைத்தி’ சமயச் சடங்குகளைச் செய்திருக்கிறாள் (புறநானூறு  259) என்றும்,  கூடை முடைந்திருக்கிறாள் (கலித்தொகை  117) என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. ‘இழிபிறப்பினோன்’ எனக் குறிப்பிடப்படுபவர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளார்; ‘இழிபிறப்பாளன்’என்பவர் பறை முழக்கியுள்ளார்; ‘இழிசினன்’ எனப்படுபவர் தண்ணுமை இசைப்பவராகவும், கட்டில் செய்பவராகவும் காட்டப்படுகிறார்.

இந்தச் சான்றுகளின் அடிப்படையில் இத்தொழில்களைச் செய்தவர்களை தாழ்ந்த சாதியினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றனவா என ஆராயத் தேவையுள்ளது. அத்துடன், சங்ககாலச் சமூகம் சாதிகளும் தீண்டாமையும் கொண்ட ஒரு  சமூகமாக இருந்திருக்கவில்லை என வாதிடுவோரும் இன்று ‘இழிந்த’ என்ற பொருள் தரும் இச்சொற்கள் குறிப்பது எதை என்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தக்க விளக்கம் அளிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலாச்சாரத் தொடர்பில் விழுந்த இடைவெளியால் எழுந்த சொற்களில் ஏற்பட்ட பொருள் மாற்றத்தை அறியாமல் சங்க இலக்கியங்களை ஆராயும் தமிழறிஞர்கள் தற்கால நிலையைப் பண்டைக்கால வாழ்வு முறையில் ஏற்றி காலத்திற்கு ஒவ்வாத பொருளை அளித்து வருகிறார்கள் என்பதைச் ‘சேரி’ என்ற சொல்லிற்கு இவர்கள் பொருள் கொள்ளும் முறை விளக்கும்.  ‘சேரி’என்று வாழ்விடத்தைக் குறித்த சங்ககாலச் சொல்லுக்கு இக்காலப் பொருளை ஏற்றி ஆய்வாளர் ஜார்ஜ் ஹார்ட் (1987) எவ்வாறு பிழையாக விளக்கம் தருகிறார் என்பதைப் பார்ப்போம். “பண்டைத் தமிழகத்தில் தாழ்ந்த சாதி மக்கள் பெரும்பாலும் ஊரிலிருந்து தனித்து வாழ்ந்தார்கள், பட்டினப்பாலை 75-ஆம் வரி இப்பொழுது உள்ளது போலவே அக்காலத்திலும் ஊருக்குப் புறத்தே இருந்த சேரியைக் குறிப்பிடுகிறது. பன்றிகளும் கோழிகளும் மீனவர்களும் வாழும் இச்சேரிப் பகுதியில் தாழ்ந்த குல மக்களும் வாழ்ந்தனர்” என ஜார்ஜ் ஹார்ட் விளக்கம் தருகிறார். ஆனால் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும்  குறிப்பிடப்பட்ட ‘சேரி’வேறு விதமானது.  குறுந்தொகை (231) பாடல் தலைவன் வாழ்ந்த வீதியைச் சேரி எனக் குறிப்பிடுகிறது. பிராமணர்கள் வாழ்ந்த பகுதியை சேரி எனக் குறிப்பிடும் கல்வெட்டுத் தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று பிராமணர்கள் குடியிருப்பைப் ‘பார்ப்பனச்சேரி’ எனக் குறிப்பிடுகிறது. மேற்கூறப்பட்ட பட்டினப்பாலை பாடல் விளக்கம், சங்க இலக்கியங்கள் காலத்திற்கு ஒவ்வாத பொருள் கொண்டு படிக்கப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது சங்ககாலச் சேரி வாழ் மக்களின் வாழ்வுமுறையைக் குறித்த பிழையான புரிதலுக்கும் வழிவகுக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களின் சேரிகளில் வாழும் இக்கால மக்களின் நிலையினை பண்டைய காலத்திற்கு  தொடர்புபடுத்தி,  சங்ககாலச் சேரிமக்கள் தாழ்ந்தசாதி மக்கள் எனக்கூறுவது  பிழையான கருத்தாகும்.

மேலும், இதே போன்று பிழையான மொழியியல் ஆய்வின் அடிப்படையில் ‘புலை’ என்ற சொல்லுக்கும் அதிலிருந்து உருவான ‘புலையன்’, ‘புலைத்தி’ என்ற சொற்களுக்கும்  ஜார்ஜ் ஹார்ட் (1987)  அவர்களால் தவறான விளக்கமே அளிக்கப்படுகிறது.  “இச்சொற்கள் ‘பறையன்’ என்ற சொல் இகழ்ச்சியாக இக்காலத்தில் பயன்படுத்தப் படுவது போலவே பழந்தமிழகத்தில் இகழும் சொற்களாகப் பயன்படுத்தப்பட்டன” என்பது ஜார்ஜ் ஹார்ட் கொடுக்கும் விளக்கம்.  ஆகவே, இது போன்ற தவறான விளக்கங்களைத் தவிர்த்து ‘புலைத்தி’, ‘புலையன்’, ‘இழிசினன்’, ‘இழிபிறப்பினோன்’, ‘இழிபிறப்பாளன்’ போன்ற சொற்கள் சங்ககாலத்தில் எந்தெந்தப் பொருள்களில் பயின்று வந்தன எனத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

‘புலை’,‘புலையன்’,‘புலைத்தி’:

பொதுவாக, சங்க இலக்கியம் காட்டும் ‘புலையன்’,‘புலைத்தி’என்போர் தாழ்ந்த சாதி ஆண்மகன், பெண்மகள் என்று இன்று  புரிந்துகொள்ளப்பட்டாலும், ‘புலைத்தி’ என்பவள் ஆடை வெளுக்கும் தொழிலை செய்த நற்பண்புகளைக் கொண்ட பெண்ணாகக் குறுந்தொகை (பாடல் 330) குறிப்பிடுகிறது.  ‘புலைத்தி’ என்பவள் முருகனுக்கு சமயச் சடங்கு செய்பவளாகப் புறநானூறு (பாடல் 259) குறிப்பிடுகிறது. இவ்வாறு முருகன் வழிபாட்டுச் சடங்கில் பங்கேற்பவளை ‘குறமகள்’(குறிஞ்சி நிலத்தின் குறவர் இனப் பெண்) என்றும் திருமுருகாற்றுப்படை (வரி 241) காட்டுகின்றது.  முருகன் கோவில் வழிபாட்டை நடத்தும் பெண் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட வாய்ப்பில்லை. மேலும், ‘புலைத்தி’என்பவளைப் பூக்கூடை முடைந்து விற்பவளாகக் கலித்தொகை (பாடல் 117) காட்டுகிறது. [அவ்வாறே சங்க இலக்கியம் காட்டும் ‘புலையன்’ என்பவனும் போரிலும் ஈடுபட்டுள்ளான் (நற்றிணை 77), துடி, தண்ணுமை, பறை, முழவு ஆகியவற்றை இசைத்திருக்கிறான்.  அத்துடன்,  இவை போன்ற இசைக்கருவிகளை வாசித்தவர்கள் ‘புலையன்’ மட்டுமல்ல மழவர், மறவர், எயினர், பாணர் எனப் பலரும் இசைத்ததைப் பல சங்க இலக்கியப்பாடல்கள் காட்டுகின்றன.] இதனால் ‘புலை’ என்ற சொல் தாழ்ந்த சாதியுடன் தொடர்புடையது என்ற கருத்தும் பொருளற்றுப் போகிறது.

‘இழிசினன்’, ‘இழிபிறப்பினோன்’, ‘இழிபிறப்பாளன்’:

‘இழிசினன்’ என்ற சொல் ‘இழி’ என்ற (உயர்வான இடத்தில் இருந்து கீழ்நோக்கி இறங்குதல், நிலை தாழ்வது என்ற பொருள் தரும்) சொல்லில் இருந்து தோன்றியது அல்ல (ஏனெனில் ‘இழி’ என்ற சொல்லில் இருந்து வந்திருக்கவேண்டுமெனில் அது  ‘இழிந்திசினோன்’ என்றுதான் வரமுடியும்.) சங்க இலக்கிய நூல்களில், ‘இழிசினன்’ என்ற சொல் மூன்று முறை இடம் பெறுகிறது. இருமுறை முரசு முழக்குபவரையும் (புறம் . 287; 289)  ஒருமுறை கட்டில் செய்பவரையும் (புறம். 82) குறிக்கிறது.  ஒரு அகநானூற்றுப் பாடலுக்கான (பாடல் 19) உரையில் உடுக்கை வகையைச் சார்ந்த மகுளி என்ற கருவியை ‘இழுகு பறை’ என்கிறார்  தற்கால உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார். அவர்  கோல் கொண்டு இழுத்துத் தேய்த்து வாசிக்கும் இழுகு பறையின் ஒலி ஆந்தையின் குரலொலி போல இருக்கும் என்கிறார். [இழுகுதல் என்றால் ஒரு தளத்தின் மீது தடவுதல், இழுத்துத் தேய்த்தல், பூசுதல், உரசுதல் என்று பொருள். இன்றும் கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலில் "திருநீறு இழுகி விட முடிந்தது சடங்கு" என்ற சொல்லாட்சியைப் பார்க்கலாம்.] எனவே, இழுகு எனும் சொல்  பறையை  வாசிக்கும் முறையைக்  குறிக்கும் ஒரு சொல் என்றாகிறது. இழுகி என்ற சொல் திராவிட மொழியியல் காரணத்தால் இழுசி என்று மாறிப் பின் இழிசி என்று மாறும்.  இதற்குச் எடுத்துக்காட்டாகப் பெரிய திருமொழியில் (2.8.7) ஒரு பாடலுக்குச் சாந்து இழுசிய கோலம் என்றும் சாந்து இழிசிய கோலம் என்றும் பாட வேறுபாடங்கள் உள்ளதைச் சொல்லலாம். உரசுதல் போன்ற உராய்வு முறையில் பறை வாசிக்கும் செயலால் உண்டான  இழுகினன் என்ற சொல் இழுசினன் என்று மாறிப் பின்னர் ‘இழிசினன்’என்று மாறியிருக்கவேண்டும். ஆதலால் ‘இழிசினன்’ என்பது  பறைவாசிப்பவரைக் குறிக்கும் பொருத்தமான சொல்லே.  மூன்றாவதாகக் குறிப்பிடும் இழிசினன் பற்றிய பாடலில், ‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று’ என்பது ஊரில் விழா நடக்கும்  நாளன்று, மகப்பேற்றை எதிர்நோக்கி இருக்கும் தன் மனைவிக்காகக் கட்டில் பின்னும் ஒருவன், பொழுது சாய்வதற்குள் விரைவாகக் கட்டிலைப் பின்னுவதைக் குறிக்கிறது. இப்பாடல் சுட்டும் இழிசினனும் ஊர் விழாவில் இரவு நிகழ்ச்சியில் ஒரு பறை வாசிப்பவனாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே பொழுது சாய்வதற்குள் கட்டிலைப் பின்னி முடிக்க முயல்கிறான்.

Siragu tamilagaththin saadhi6

சங்க காலத்தில் ஒருவர் குறிப்பிட்ட ஒரு தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலையும் இருந்ததில்லை. பூசாரி ஆகிய குயவரையும் (நற்றிணை 293), மீன் பிடிக்கும் பாணரையும் (அகநானூறு 196), சங்கு அறுத்து வளையல் செய்யும் வேள்வி செய்யாப் பார்ப்பாரையும் (அகநானூறு 24) சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.  எனவே பறை இசைக்கும் ஒருவன் கட்டில் பின்னுவதும்  சங்ககால வாழ்வியல் வழக்கத்திற்கு மாறானது அல்ல. விழாவில் பறை இசைக்கச்  செல்லும் அவசரத்தில் அவன் கட்டில் பின்னியிருக்கலாம். எனவே, பலநூற்றாண்டுகளாக ‘இழிசினன்’ என்ற இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டு வந்திருந்தாலும், ‘இழிசினன்’ என்பது தாழ்ந்த குலத்தவனைக் குறிக்கிறது  எனப்பொருள் கொள்வது தவறாகும்.

‘இழிபிறப்பினோன்’ எனக் குறிப்பிடப்படுபவர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளார், ‘இழிபிறப்பாளன்’எனப் புறநானூறு (பாடல் 170) வேட்டுவக் குடியில் பறை இசைப்பவரைக் குறிக்கிறது. உடலை அறுத்து ஈமச்சடங்குகளைச்  செய்த சமய குருக்களைப்  புலையர்கள் என்று தமிழர் அழைத்தனர் என்றால் அத்தொழிலைப் பிராமணரும் செய்துள்ளனர் என்கிறது சங்க இலக்கியம்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் வேத பிராமணர்கள் ஈமச்சடங்குகளை நடத்தி வைக்கும் புரோகிதர்களாகத் தொழில் நடத்தியிருக்கிறார்கள்.  போர் முனையில் அன்றி  இயற்கையாக உயிரிழக்கும் வீரர்களின் மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது அக்காலத்தில்  மறக்குல மரபாகத்  தமிழ் நாட்டில் இருந்தது (புறம். 74). இம் மரபினையொட்டிப் போரில் இறக்காது இயற்கைச் சாவு எய்திய வீரர்களின் உடலை வெட்டி, சடங்குகள் செய்து அடக்கம் செய்வதை வேத பிராமணர்கள் ஈமச்சடங்குகளாகச் செய்துள்ளனர் (புறம். 93). அத்துடன் தோலால் செய்யப்பட்ட போர்முரசுகளை வழிபடும் சடங்குகளையும் செய்துள்ளனர்.  அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இச்சடங்குகள் செய்வது தூய்மையற்ற இழிந்த செயல்களாகக் கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை வேத பிராமணர்கள் இச்சடங்குகளைச் செய்ததில் இருந்து தெரிய வருகிறது. எனவே பழந்தமிழரிடையே தொழில் அடிப்படையினால்  தீண்டாமை இருந்திருக்கவில்லை என்பதற்கு இது சான்றாக விளங்குகிறது.

சங்ககாலத்தில் வேத பிராமணர் ஈமச் சடங்குகளை செய்ததில் இருந்து ‘புலை’ என்பதற்கு ‘தீட்டு’ என்ற சொல்லுடன் தொடர்பிருந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. இது ‘தீண்டாமை’ ‘சாதிகள்’ என்ற கோட்பாடுகள் அக்காலத்  தமிழரிடமும், பிற திராவிட மொழி பேசுவோரிடமும்  இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே காட்டுகிறது. ‘பிராமணர்கள்’ ‘புலையர்கள்’ இடையே தூய்மை / மாசு என்ற வேறுபாடுகளைச் சங்க இலக்கியங்கள் காட்டாத பொழுது, சங்ககாலத்தில் சாதிகள், சாதி வேற்றுமைகள் இருந்தனவென்று கருதக் காரணமும் இல்லை.  அவ்வாறாயின்,   ‘புலை’, ‘புலைத்தி’, ‘புலையன்’, ஆகிய சொற்களுக்கு  ‘இழிபிறப்பினோன்’ என்ற கருத்துடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பதற்குச் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் விடை பகரக்கூடும்.

 *****

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 தமிழகத்தில் சமணம்:

Siragu-tamilagaththin-saadhi11

கல்வெட்டுகள் தரும் தகவல் மூலம் பொ.மு.  2 ஆம் நூற்றாண்டு முதலே சமணம் தமிழகத்தில் பரவியிருந்தது தெரிகிறது (மகாதேவன், 2003).  மதுரைக்காஞ்சி  (476), அகநானூறு (123)  பாடல்களும் சமணர்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயத் தாக்கத்தில் பல தமிழ் நூல்கள் எழுதப்பெற்றன. சமண சமயம் தமிழ் இலக்கண இலக்கியங்கள் உருவாக்குவதில் கொண்டிருந்த பங்கு அளப்பரியது.  கமில் சுவலபில் (Kamil Zvelebil, 1975) தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றியது தொல்காப்பியர் என்றும், இந்நூல் பொது ஆண்டுகளுக்கு  முன்னர் (பொ.மு. 100) எழுதப்பட்ட நூல் என்றும் கருதுகிறார்.  அத்துடன், ஒரு சில வர்ணாசிரம  கருத்துக்களைக் கொண்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதியானது பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் திருத்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் கருதுகிறார். ஆகவே, தொல்காப்பியத்தில்  இடம்பெறும் வர்ணாசிரம கருத்துக்கள் பொ.மு. 100 ஆண்டுகளின் காலத்தில் எழுதப்பெற்ற தொல்காப்பிய மூலத்தில் பின்னர் பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் இறுதியாக நுழைக்கப்பெற்ற இடைச்செருகல்கள் என்று கூறும் கமில் சுவலபில் அவர்களின் கூற்று சாதி குறித்த ஆய்வில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கருத்து.

 தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, சமணர்களின் இலக்கியப்பங்களிப்பு சங்கம் மருவிய காலத்திலும், சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களையும், அறநூல்கள் பலவற்றையும் தமிழுக்குத் தருவது வரை தொடர்ந்தது.  சமணரின் தமிழ் இலக்கியப் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டாலும், சமண சமயக் கருத்துகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஏற்படுத்திய தாக்கம் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை.  சங்க இலக்கியங்களை ஆராயும்பொழுது அந்த ஆய்வு  பல்துறை அணுகுமுறையில் கையாளப்படாமல் அமைந்துவிடுவதே இக்குறைக்கான அடிப்படைக் காரணம்.

 சமண சமய மரபு குறிக்கும் ‘இழிபிறப்பினோன்’ என்போர்:

கொல்லாமையை, அகிம்சையைப் போதித்த சமண சமயத் துறவிகள் சடங்கு செய்வதற்காக  உடலைக் கூறு போடுபவர்களையும்,  கொலைத்தொழில்  செய்பவர்களையும் நரகத்திற்குச் செல்பவர்கள் எனக் குறிப்பிட்டனர். சமணத்தின் சமயக் கோட்பாட்டின்படி  வானுலகில் தேவர்களும், மண்ணுலகில் மனிதர்களும், புவியின் கீழே  உள்ள  நரகத்தில்  தீவினை செய்த நரகர்களும் வாழ்கிறார்கள்.  கர்மவினைப் பயனின் காரணமாக  தேவ உலகில் இருப்பவர்கள் வினைப்பயன் காலம் முடிந்ததும் மண்ணுலகிற்குத் திரும்புவார்கள்.  பிற உயிரைத் துன்புறுத்தும் தீய  செயல்களைப் புரிந்தால்  மறுபிறப்பில் நரகத்தில் தள்ளப்படும் நிலையை அடைவார்கள்.  எனவே,  சமண சமயக் கோட்பாடுகளின்படி நரகம் என்பது கீழிருக்கும் ஓர் உலகம்.  சமண இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நூலிற்குப் பிற்காலத்தில் உரை வழங்கிய அடியார்க்கு நல்லார்  (12 ஆம் நூற்றாண்டு) தம் உரையில், துறவறத்தைத் துறந்து இல்லறத்தைத் தழுவிய துறவிகள் நரகத்திற்குச் செல்பவர்கள் என்ற சமண சமய நம்பிக்கையைக் குறித்து எழுதியுள்ளார்.  குறிப்பாகச் சிலப்பதிகாரம் (10.90-93 வரிகளுக்கு), உயிர்களைத் துன்புறுத்துபவர்கள்  இறப்பிற்குப் பிறகு புவிக்குக் கீழே உள்ள நரகத்திற்குச் செல்வதை ‘இழி’என்ற சொல் மூலம்தான் அவர் குறிப்பிடுகிறார்.

சமண சமயக் கொள்கையில் பிறப்பின் அடிப்படையிலான  சாதி என்ற கோட்பாடு கிடையாது.  சமண சமயக் கொள்கைப்படி ‘புலை’ என்பது இந்து சமய நம்பிக்கையின் கருத்தான  ‘தீட்டு’ என்பதும்  அல்ல.  சமணத்தின் கொள்கையின்படி ‘புலை’ என்பது ‘தீயசெய்கை’யைக் குறிக்கிறது.  நற்பண்புகளைக் கொண்டோரே உயர்ந்தவர்கள், பிறப்பால் வருவதல்ல உயர்ந்தநிலை என்பது சமணம் காட்டும் நெறி.  ஆகவே, மறுபிறப்பில் கீழேயுள்ள நரகத்தில் பிறக்கும் தாழ்வை ஏற்படுத்தும் தொழிலைச் செய்வோன்  சமணரின் கொள்கைப்படி  ‘புலையன்’, ‘இழிபிறப்பாளன்’ எனக் கருதப்பட்டனன். இவ்வாறே கொலைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் ‘வேட்டுவன் தன் கர்மவினைப்பயன் காரணமாக நரகத்தில் மறுபிறவி எடுக்கும் நிலையில் உள்ளவன் எனக் கருதி அவனையும் ‘இழிபிறப்பாளன்’ என்று சமணர் குறிப்பிட்டனர்.  இதில் இவ்வுலகில் உயர்வு தாழ்வு என்ற கருத்து நுழைக்கப்படவில்லை.  சமண நம்பிக்கையின்படி,  ‘இழிபிறப்பினோன்’ என்பதோ  ‘இழிபிறப்பாளன்’ என்பதோ ஒருவர் செய்யும்  (அதாவது, சமணத்தின் கொல்லாமைக் கொள்கையுடன் முரண்படும்)  தொழிலால் உண்டாகும் கர்மவினைப்பயன் காரணமாக ‘‘நரகத்தில் மறுபிறவி” எடுக்கப்போவதைக் குறிப்பது. சங்கம் மருவிய காலத்துச்  சமணத் தமிழிலக்கியமான  ஏலாதியில் 67-ஆம் பாடலில் கணிமேதாவியார் (பொ.பி. 7 ஆம் நூற்றாண்டு) நரகத்தை ‘இழிகதி’எனக் குறிப்பிடுகிறார்.

சமணரின் பார்வையில், உயிர்ப்பலி கொடுக்கும் பூசாரிகளும் (அகநானூறு 242), உயிர்களைக் கொல்லும்  வேட்டுவர்களும் நரகத்திற்குச் செல்லும் இழிபிறப்பாளர்களே. இவர்களைச் சண்டாளர்கள் எனக் குறிப்பிடுகிறது சமணம். தமிழ்ச் சமூகத்தில் தீண்டத்தகாதவர் எனக் கருதப்படாத ஒரு சில உயர்நிலைப் பிரிவினரையும் இந்த வரிசையில் சேர்க்கிறது சமணம். சமணரான ‘திவாகரர்’ (பொ.பி. 9 ஆம் நூற்றாண்டு) தொகுத்த ‘திவாகர நிகண்டு’, தமிழகத்தின் கவுண்டர் பிரிவினரைச் சண்டாளர்கள், புலையர்கள் வரிசையில் சேர்த்துள்ளது. வேட்டுவக் கவுண்டர்கள் என அழைக்கப்பட்ட கவுண்டர்களின் ஒரு பிரிவினர் செய்த  வேட்டுவத் தொழிலின் காரணமாக இவ்வாறு அவர்களை  வகைப்படுத்துவது  சமணத்தின் கொல்லாமைக் கோட்பாட்டின் அணுகுமுறை.  வேதகால பிராமணரின் வைதீகச் சடங்குகளும், தொன்மையான தமிழரின் சமயச் சடங்குகளும் உயிர்ப்பலியைக் கடைப்பிடித்தவையே. சமணர் மட்டுமே தங்கள்  மதத்தின் அடிப்படைக் கொல்லாமைக் கொள்கையின் காரணமாக உயிர்ப்பலியை அக்காலத்தில் எதிர்த்தவர்கள்.

பார்ப்பனரும் புலையரும் செய்த தொழிலில் சங்க கால இலக்கியங்கள் வேறுபாடு காட்டாத பொழுது சங்ககாலத்தில் சாதி,  தீண்டாமை ஆகியவை இல்லை எனத் தெரிகிறது.  எனவே சங்ககாலத் தமிழரிடம் மாசு/தூய்மை காரணமாகத் ‘தீட்டு’ என்ற கருத்தாக்கமும் அதனால் ‘தீண்டாமையும்’ இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால், தற்கால  இந்தியச் சமூகத்தினை ஆராயும் மானுடவியல் ஆய்வாளர்கள்,  தொழில் முறைத் தூய்மை அடிப்படையில் ‘தீட்டு’ என்பதுவே  ‘தீண்டாமை’ மற்றும் சாதிப் பிரிவுகளுக்கு காரணம் எனக் கூறுவது பிழையான கருத்து என்பது தெரிகிறது.  சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர்  சமணம   சிறிது சிறிதாக தமிழகத்தில் வலுவிழக்கத் துவங்கிய காலத்தில், வைதீக பிராமண இந்து சமயம் எழுச்சியுற்று ஓங்கத் துவங்கியது.   இக்காலத்தில்   ‘புலை’ என்பதை இறைச்சி உண்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளத் தலைப்பட்டனர் பிற்காலத் தமிழர்.     ஆகவே, புலை என்ற சொல்லின் தோற்றம், பொருள் குறித்துத் தீர ஆய்வு செய்தல் தேவை.

 ‘புலை’ என்ற சொல்லின் பொருள்:

‘புலை’ என்ற சொல்லுக்கு   ‘விழுப்பு’, ‘தீட்டு’ என்ற அடிப்படை இருக்க வாய்ப்பு இல்லை எனக் காட்டுகிறது சங்க இலக்கியம். எனவே, திராவிட மொழியியலின் வரலாற்றை மீளாய்வு செய்து புலை என்ற சொல்லின் பொருளை அறியலாம்.   ஜார்ஜ் ஹார்ட்  (1987) ‘புலை’என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய சாதியின் தோற்றம் திராவிட மொழிகள் பேசியவரிடம் தோன்றியது என அவர் பயின்ற தமிழ்நூல்களின் அடிப்படையில் கூறுகிறார். ‘புலை’ என்பதற்கும் ‘புலவு’ என்பதற்கும் தொடர்புபடுத்தி, அதனை மாசு, இழிவு என்பதுடன் இணைத்து, அதன் அடிப்படையில்   தீண்டாமைக் கருத்திற்குப் பொருள் கொள்கிறார்.  மாறாக,  புறநானூற்றுப் (93) பாடலின் பொருளோ இதை மறுக்குமாறு உள்ளது.   அத்துடன், சங்க நூல்களில் ‘புலை’ என்பது ‘இறைச்சி’ என்ற பொருளில் ஓரிடத்தில் கூடப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலையன், புலைத்தி, பாணன், துடியன் ஆகியோர் செய்த தொழில்களும் சமயச் சடங்குகளும் வாழ்வில் வளமை பெற, நன்மை பெற விரும்பிச்  செய்யப்பட்டவை.  அகநானூற்றுப்  பாடலின் (பாடல் 242) ‘பொலிய’ என்ற சொல்லும், மற்றொரு அகநானூற்றுப்  பாடலின் (பாடல் 370) ‘பொலிந்த’ என்ற சொல்லும் சிறப்பு, நன்மை என்ற பொருளையே தருகின்றன.  நன்மையைக் குறிக்கும்  ‘புலை’ என்ற சொல்லின் பொருள், பிற்காலத்தில் ‘இழிநிலை’ என்ற  பொருள் கொண்டு  மாறிவிட்ட நிலையில் ‘புலையன்’என்போர்  ‘இழிபிறப்பாளன்’ எனக் கருதப்பட அது  அடிப்படையாக அமைந்துவிட்டது எனக் கொள்ளலாம்.  கொங்கு வெள்ளாளரின் மூன்றாம் நாள் ஈமச் சடங்கில், இறந்தவரின் எலும்புகளை நீரில் வீசி, பசும் மரத்தினடியில் பாலை ஊற்றிச்  சடங்கு செய்யும் ‘நாவிதர்’ சடங்கின் மரபாக ‘பொலிக’ என உச்சரிப்பார் எனத் தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது.  தெலுங்கு மொழியில் நாவிதரை‘மங்கல’ என அழைப்பார்கள்.

புறநானூற்றுப் பாடல்களில் (பாடல்கள் 29, 126, 373) வரும் பொலன், பொலிய, பொலிக, என்ற சொற்களும் பொன், அழகிய என்ற பொருளையே தருகின்றன.  கலித்தொகைப் பாடல் (பாடல் 68) குறிப்பிடும் பாணன் (இப் பாடலில் புலையன் என இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்) ‘வாழ்க வளமுடன்’ என்ற பொருளில்  தலைவன் தலைவி வீட்டில் வளம் பெருக விரும்பி ‘பொலிக’ என்று வாழ்த்துகிறான். புறநானூற்றுப் பாடல் (பாடல் 308) ‘நன்மை நிறைந்த நயவரு பாண!’ என்றே பாணனைக் குறிப்பிடுகிறது.  ஒரு நற்றிணைப் பாடலில் (பாடல் 90) துணிவெளுக்கும் வண்ணாத்தியும் புலைத்தி எனக் குறிப்பிடப்படுவது அவளால் கிடைக்கும் நன்மையைக் குறிப்பதாகவே கொள்ளலாம். ஒரு புறநானூற்றுப் பாடல் (பாடல் 311) ‘புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை’ என்றே துணி வெளுக்கும் வண்ணாத்தியைக் குறிப்பிடுகிறது. இங்குக் காட்டிய சான்றுகள் நன்மைக்குக் காரணமானவர்களையே புலையன் புலைத்தி  எனச் சுட்டுகிறது.  மேலும் இவர்கள் பாணனாகவும், துணி வெளுக்கும் பெண்ணாகவும் தொழில் செய்வதாகச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

காலப்போக்கில் ஒரு சொல்லின் பொருள் மாறி வேறு ஒரு பொருளைக் குறிப்பதை நாம் அறிவோம். சில வேளைகளில் முற்றிலும் எதிரான பொருளும் கொள்ளப்படுவதுண்டு.  ஆகவே, நூல்களில் ‘புலை’ என்ற சொல் இடத்திற்கு ஏற்ப என்ன பொருளில் வழங்கி வருகிறது என்பது ஆராயத் தேவையாகிறது. திராவிட மொழியியல் தோற்றப்பாட்டின் காரணமாக  ‘ஒ’ என்பது  ‘உ’ என்ற ஒலியாகக் காலப்போக்கில் வாய்வழிச் சொல் வரலாற்றில் மாற்றம் கண்டிருக்கிறது. ‘பொத்’ என்ற வேரில் இருந்து  ‘பொதி’, ‘புதை’ என்ற சொற்கள்  உருவானது போல; ‘ஒட்’ என்ற வேரில் இருந்து ‘ஒடி’, ‘உடை’ என்ற சொற்கள்  உருவானது போல;  ‘பொல்’என்ற வேரில் இருந்து  ‘பொலி’, ‘புலை’ ஆகிய சொற்கள் ‘ஒ’ மற்றும்  ‘உ’ ஒலி மாறுபாடுகளுடன் தோன்றியிருக்கின்றன.   ‘பொலி, பொலிக, பொலிவு, பொலிய, பொலிதல், பொலிந்து, பொலிந்த’ என்ற சொற்கள் சிறப்பு, நன்மை, மங்கலம், வளமை, வளர்ச்சி, பொன் என்ற பொருள்களைத் தரும் சொற்கள்.  ஆகவே, ‘புலை’ என்ற சொல், தமிழில் ‘பொலிவு’ என்ற பொருளையும், சமஸ்கிரத ‘மங்கலம், சுபம்’ என்ற சொற்களுக்கும் இணையான பொருள் தருவது.

 மாற்றம் பெற்ற தமிழ்ச் சமூகம் :      

சங்கம் மருவிய தமிழ்ச் சமூகமானது  சமணரின் கொல்லாமைக் கொள்கையின் அடிப்படையில் மாறுதல்களைக் கண்டது. கொல்லாமை, அகிம்சை என்ற சமண சமயக் கோட்பாடுகள் பொ.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் பரவியிருக்கின்றன.  சங்கம் மருவிய காலத்தில் பிராமணர்களும், பிராமணர் அல்லாதாரும் பண்டைய தமிழ்ச் சமூகத்தின்  ஈமச்சடங்குகளைக் குறித்த எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, சங்ககாலத்தில் இருந்திராத வகையில் இச்சடங்குகளையும் அதைச் செய்வோரையும் இழிவாகக் கருதத் தலைப்பட்டனர் என்பதையும், அதற்குச் சமணத்தின் கொல்லாமை என்னும்  கொள்கை காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது எனவும் கருதலாம்.  இந்த மாற்றத்திற்கு ‘இழிபிறப்பாளன’, ‘இழிசினன்’ என்ற சொற்களின் பொருளைத் தவறாகக் கையாண்டது காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது. ‘இழி’என்ற சொல்லில் இருந்து ‘இழிசினன்’ என்ற தாழ்வு நிலையைக் காட்டும் சொல் பிறந்ததாக இன்றும் கருதப்படுவதில் இருந்து இதை நாம் அறியலாம்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வைணவ சமயத்தின் அடியார்கள் ‘ஆழ்வார்கள்’ எனக் கடந்த 8  நூற்றாண்டுகளுக்கும் மேலாக அழைக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.   திருமாலிடம் கொண்ட  பக்தியில்  ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டதாகத் தமிழறிஞர்களாலும், வைணவப் பெரியோர்களாலும் பொருள் விளக்கம் தரப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த இறையடியார்கள்  ‘தலைவர்’ என்று குறிக்கும் வகையில் ‘ஆள்வார்கள்’ என்றுதான் முதலில் அழைக்கப்பட்டுள்ளார்கள் என மொழியியல் ஆய்வு காட்டுகிறது (பழனியப்பன், 2004). குறிப்பிடத்தக்க இம்மாற்றம் சற்றொப்ப  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைணவர்களிடம்  நிகழ்ந்திருக்கிறது. இந்த சொற்பொருள் மாற்றம் சமூகத்திலும் வைதீக கலாச்சாரத்திலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு மாற்றம் பெற்ற காலத்திற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து இந்து சமயத்தைச் சார்ந்த மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் இருந்து வந்தது இதற்குக் காரணமாகக் கூறலாம்.

மாறாக, சங்ககாலத்திற்கும் சங்கம் மருவிய காலத்திற்கும் இடையே தமிழகத்தின் ஆட்சி தமிழர்களிடம் இருந்து களப்பிரர்கள் வசம் சென்றது. இதனால் பொ.பி. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழரின் சமூக கலாச்சார வாழ்வியலில் ஒரு பெருத்த இடைவெளியும் தோன்றியது. தமிழறிஞர்கள் இருண்டகாலம் எனக் குறிப்பிடும் இந்தக் காலத்தில் தமிழகத்திற்குச் சற்று வடக்கே இருந்த களப்பிரர்கள் தமிழகத்தினை ஆண்டதால் சங்ககாலத் தமிழர் வாழ்க்கை முறை முடிவுக்கு வந்து தமிழரின் கலாச்சாரத்தில் மாறுதல் நிகழ்ந்தது. கலாச்சாரம் மாறாத காலத்திலேயே ஒரு சொல்லின் பொருளும் ஒலியும்  மாறுகிறது என்றால், கலாச்சார இடைவெளி விழும்பொழுதும் சொல்லின் பொருளில்  மாற்றம்  நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.

 சமண சமயத்தினர் தீவிரமாகக் கொல்லாமைக் கொள்கையைப் பரப்பிய தாக்கத்தினால் சங்கம் மருவிய காலத்து மன்னர்களும்;  சமணத்தின் அகிம்சைக் கொள்கையின் தாக்கம் பெற்ற வைதீக பிராமண சமயத்தினரும் சமணத்தின்  கொள்கைகளை உள்வாங்கினர்.  இந்த மாறுதலால் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் சமயச் சடங்குகள் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கலாம். சமணரின்   கொல்லாமைக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கிய வைதீக பிராமணர் தமிழ்ப் பழங்குடியினரது சமயச் சடங்குகளைத் தாழ்ந்தவையாகவும் கருதத் தலைப்பட்டிருக்கக்கூடும். துடிப்பறையை  இசைக்கும் வேட்டுவக் குடியைச் சார்ந்த ஒருவனை  மறுபிறப்பில்  நரகத்திற்குப் போகும் ‘இழிபிறப்பினோன்’ என உயர்வு தாழ்வு குறிக்காது சமணர் குறிப்பிட, பின்னர் சங்கம் மருவிய காலத்தில் உயிர்ப்பலி கொடுக்கும் வெறியாட்டுச் சடங்கில் முழவை இசைப்போனை வாழும் பிறவியிலேயே  ‘கீழ்மகன்’ என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின்  ‘பக்தி இயக்கம்’ காலத்தில்  (பொ.பி. 6 முதல் – 9 ஆம் நூற்றாண்டுகள்) இந்த மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

 நம்மாழ்வார் (9 ஆம் நூற்றாண்டு) தமிழரின்‘வெறியாட்டு’ என்ற சமயச் சடங்கைக் கீழான சடங்காகக் கருதியுள்ளார் (நாலாயிர திவ்யபிரபந்தம் 3069). அச்சடங்கில் பறை இசைப்பவரைக் ‘கீழ்மகன்’(தாழ்ந்தவன்) எனக்குறிப்பிடுகிறார்.   வைதீக வழிபாட்டினை மேலான வழிபாட்டு முறையாகவும் குறிப்பிடுகிறார்.  தொண்டரடிப்பொடி ஆழ்வார் (9 ஆம் நூற்றாண்டு) ஒரு பாடலில் சமூகத்தில்  புலையர்களின் நிலையும் பிராமணர்கள் நிலையும் எதிரெதிர் நிலையில் இருப்பதைக் காட்டுகிறார் (நாலாயிர திவ்யபிரபந்தம் 914). ஆசாரக்கோவையின் (9 ஆம் நூற்றாண்டு) சைவசமய நூலாசிரியர் சடங்குகளைச் செய்ய நல்லநாள் குறித்து அறிய புலையரைக் கலந்தாலோசிக்க வேண்டாம், அதனை அறியப் பிராமணரையே  அணுகுமாறு அறிவுறுத்துகிறார் (ஆசாரக்கோவை 92). பத்தாம் நூற்றாண்டு கல்லாடம் என்ற சைவசமய இலக்கியம் (26.11) ‘புலை’ என்பதைத் ‘தீட்டு’என்ற பொருளில் குறிக்கிறது.

சமணத்தின் தாக்கத்தினால், சங்கம் மருவிய காலத்து ‘இழிபிறப்பினோன்’ என்ற சொல் அடைந்த பொருள் மாற்றமும்; காலப்போக்கில் ‘ஒ’ என்பது  ‘உ’ என்ற ஒலியாக வாய்வழிச் சொல் வரலாற்றில் மாற்றம் கண்டதால்,  ‘புலை’எனப் பொருள்மாற்றம் அடைந்த  சொல்லும்,  அதன் தொடர்ச்சியாகப்  பிற்காலத்தில் அச்சொல் ‘புலையன்’ ‘புலைத்தி’ என்போர் தாழ்ந்த குல மக்கள் என்ற புரிதலுக்கு வழி வகுத்துள்ளது.  சமயச் சடங்குகளை நிகழ்த்திய இவர்கள் வறியவராக இருந்திருக்கலாம், ஆனால் தாழ்ந்தவர்களாக அக்காலத்தில் கருதப்படவில்லை. ‘புலை’ என்ற சொல்லின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டால், வாழ்வில் வளம் பெருகும் சடங்குகளைச் செய்தவர்களாகவே அவர்கள் அறியப்படுகிறார்கள்.   இன்றும் சமயச் சடங்குகள் செய்யும்  கோவில் அர்ச்சகர்கள் வறியவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் தாழ்ந்தவர்களாகக் கருதுவதில்லை .

கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றைப் போற்றிய சமணமே எதிர்பாராதவிதமாகப் பலநூற்றாண்டுகளாகத்  தமிழகத்தின் தீண்டத்தாகதவராகக் கருதப்படும் மக்கள் வன்முறையை எதிர்கொள்ளக் காரணமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது.  வைணவர்கள் ‘ஆள்வார்’, ‘ஆழ்வார்’ வேறுபாடுகளைக் காலப்போக்கில் மறந்தது போலவே, தமிழர் சங்கம் மருவிய காலத்தில் நிகழ்ந்த மாறுதலில் தங்கள் வரலாற்றை மறந்து போனார்கள். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் மக்களால் வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் தாழ்ந்த சாதியினர் என்பவரோ, தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படுவோரோ இருந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய உண்மையை மறந்துவிட்டனர். இடைக்கால இலக்கிய உரைநூலாசிரியர்களின் நூல்களை விமர்சன நோக்குடன் கவனமாக ஆராயாமலும், அவற்றைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டதாலும், சமண சமயம் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களில், குறிப்பாக  ‘புலையன்’ என்ற சொல்லின் பொருள் மாற்றத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த சரியான புரிதலைக் கொண்டிராததாலும், தமிழறிஞர்கள் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை சரிவரப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளார்கள்.

இந்த ஆய்வின் முடிவும், எழுப்பியுள்ள விவாதங்களும்  அதன் தாக்கமும்  மிகமுக்கியமானவை.  திராவிடமொழிகளைப் பேசும் மக்கள் தொன்மையான காலத்தில் தங்களிடையே தீண்டாமை என்பதையோ சாதிகள் என்ற கோட்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. இக்காலத்தில் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிவரும் தென்னிந்தியப் பகுதிகள் சிலவும் முன்னொரு காலத்தில்  திராவிட மொழியினர் வாழ்ந்த பகுதிகளைச் சார்ந்தவையே.   ஆதலால், இக்கால இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்களில் பலரின் மூதாதையரும் சாதிகள், தீண்டாமை ஆகிவை இல்லாது வாழ்ந்திருக்கவே வாய்ப்புண்டு.  சுருக்கமாக, பட்டியல் சாதியினரும், தலித் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களும், தாழ்ந்த சாதியினராகக் கருதப்படுபவரும்,  இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிவரும் தென்னிந்தியப் பகுதி  மக்களின் மூதாதையரும் உண்மையில் தாழ்ந்தகுல மக்களாகக் கருதப் பட்டிருக்க மாட்டார்கள்.

*****

சங்க இலக்கியப் பாடல்கள் தரும் இந்தச் செய்திகள் இல்லாது போயிருந்தால் தென்னிந்தியாவின் தாழ்ந்த சாதியினர் குறித்த உண்மை வரலாறும்,  குறிப்பாக இந்தியாவின் தாழ்ந்த சாதியினர் எனக் கருதப்படுவோரின் வரலாறும் தெரியவராமல் போயிருக்கும்.  எனவே, சங்க இலக்கியப் பாடல்களை ஆராய்வதில்  பல்துறை அணுகுமுறையும், அவற்றைக் கல்வெட்டியல், சமய நூல் விளக்கங்கள், மொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டும் ஆய்வு செய்யவேண்டிய தேவையும்  இருக்கிறது என்று வலியுறுத்தும்  முனைவர் பழனியப்பன் அவர்களின் கோணம்  சாதிகளின் தோற்றத்தையும்  வளர்ச்சியையும் ஆராய்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய கருத்து.  முனைவர் பழனியப்பன் அவர்கள் அளிக்கும் கோணம் தமிழகத்தின் சாதிப்பிரிவுகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் புதிய கோணத்தில் காண வைக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

 *****

On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society, Sudalaimuthu Palaniappan, International Journal of Jaina Studies (Online) Vol. 4, No. 2 (2008) 1-65.

https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf

Hart, George. L. “Ancient Tamil Literature: Its Scholarly Past and Future.” Essays on South India. Edited by Burton Stein, 41-63. Honolulu: The University Press of Hawaii, 1975a.

Hart, George. L. The Poems of Ancient Tamil. Berkeley and Los Angeles: University of California Press, 1975b.

Hart, George. L. “Early Evidence for Caste in South India.” Dimensions of Social Life: Essays in Honor of David G. Mandelbaum. Edited by Paul Hockings, 467-491. Berlin: Mouton de Gruyter, 1987.

Kailasapathy, K. Tamil Heroic Poetry. London: Oxford University Press, 1968.

Palaniappan, S. “Āḻvar or Nāyaṉār: The Role of Sound Variation, Hypercorrection and Folk Etymology in Interpreting the Nature of Vaiṣnava Saint-Poets.” South Indian Horizons: Felicitation Volume for François Gros on the Occasion of his 70th Birthday. Edited by Jean-Luc Chevillard, Eva Wilden & A. Murugaiyan, 63-84. Pondicherry: Institut Français De Pondichéry and École Française D’Extrême-Orient, 2004.

Pāvāṇar, G. Tēvanēyap. Paṇṭait Tamiḻar Nākarikamum Paṇpāṭum. Ceṉṉai: The South India Saiva Siddhanta Works Publishing Society, 1992.

Pillay, Kōlappapiḷḷay Kanakasabhāpati. A Social History of the Tamils Part I. Madras: University of Madras, 1969.

Rajam, V. S. A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia: American Philosophical Society, 1992.

Zvelebil, K. V. Tamil Literature. Leiden: E. J. Brill, 1975.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard