New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்


Guru

Status: Offline
Posts: 24596
Date:
திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்
Permalink  
 


திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளை முன்வைத்து)

 
 
 
தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அறியப்பட்ட நூல்களுள் ஒன்று திருக்குறள். எழுத்தறிவு பெற்றோர், பெறாதோர் என அனைவரும் திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் அறிந்துவைத்துள்ளனர். ஒப்பீட்டியல், பொருண்மையியல், அறவியல், அரசியல், சமயவியல் எனப் பன்முகப் பரிமாணங்களில் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளும் மனுதர்மமும்
  • திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் அறிவியல், திருக்குறளில் ஆளுமைத்திறன், திருக்குறளில் மருத்துவம், திருக்குறளில் வேளாண்மை, திருக்குறளில் உளவியல், திருக்குறளில் தத்துவம், திருக்குறளில் ஒற்றுமை, திருக்குறளில் மக்கள், திருக்குறளில் சுற்றுச்சூழல்
  • திருக்குறளில் அறம், திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில் அரசியல், திருக்குறளில் புதுமையும் புரட்சியும், திருக்குறளில் சித்தர் நெறி, திருக்குறளில் நட்பு, திருக்குறளில் சுற்றம், திருக்குறளில் ஒழுக்கம், திருக்குறளில் ஈகை, திருக்குறளில் வாய்மை, திருக்குறளில் நகைச்சுவை, திருக்குறளில் காலம், திருக்குறளில் பன்முகம்
  • திருவள்ளுவரின் சமயம் சைவமா? பௌத்தமா? சமணமா?, கிறித்துவமா? இசுலாமா?
இதுபோல் திருக்குறளின் வடிவம் தொடர்பான ஆய்வுகளும் காலந்தோறும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் வெண்பாவின் இனமான குறள்வெண்பாவில் பாடப்பட்டுள்ளது. இக்குறள்வெண்பாவிற்கான இலக்கணத்தை தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் விரிவான அளவில் எடுத்துரைத்துள்ளன. இப்பதிவுகளில் வெண்பாவிற்குரிய எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை எனப் பாவின் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் உரிய இலக்கணங்களை வரையறுத்து சான்றளிக்கும்போது திருக்குறளை உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர். இவ்வாறு உரைமேற்கோளாக  எடுத்தளிக்கப்பட்ட  திருக்குறளினையும் இலக்கணக் கூறுகளையும் இணைத்த நிலையில் திருக்குறள் மேற்கோள் விளக்கம் (1970) என்னும் ஆய்வு அ.தாமோதரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தியுரை, காரிகையுரை, தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள் முதலான யாப்பிலக்கண உரைகள் அடிப்படை மூலங்களாகக் கொள்ளப்பட்டன. உரையாசிரியர்களின் நுண்ணிய விளக்கவியல் ஆய்வுக்குச் சான்றாகத் திருக்குறளில் பயின்றுவரும் செப்பலோசையை ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என மூன்றாகப் பகுத்தாராய்ந்துள்ளனர். முந்தைய உரையாசிரிகளின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டும் சில புதுவகை ஆய்வுமுயற்சிகளுக்கு வித்திடும் வகையில் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் திருக்குறளின் யாப்பியல் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் சில பிறழ்ச்சிகளும் நிகழ்ந்துள்ளதை நுணுகி நோக்குகையில் காணமுடிகின்றது. இது எத்தகைய ஊடாட்டத்தைத் தமிழியல் ஆய்வில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. திருக்குறளின் யாப்பியல் குறித்துப் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
 
-  அயலகத் தமிழறிஞர்களால் நிகழ்த்தப்பட்ட திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (வீரமாமுனிவர், ஜி.யு.போப், கியூபர்)
 
-      தமிழகத் தமிழறிஞர்களால் நிகழ்த்தப்பட்ட திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (மு.சண்முகம் பிள்ளை, ச.வே.சுப்பிரமணியன், புலவர் குழந்தை)
 
கிறித்துவ சமயத்தினைப் பரப்புவதற்கு என்று இந்தியாவிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ்மொழியினைக் கற்றனர். இதன்வழித் தமிழின் தொல் இலக்கண, இலக்கியங்களைக் குறித்த நுணுக்கமான ஆய்வுகளையும் முன்னெடுத்தனர். இலக்கணம், இலக்கியம் என்னும் வகைமைகளில் சில நூல்களையும் படைத்தனர். தமிழின் முக்கிய நூல்கள் (புறநானூறு, திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட நூல்கள்) பலவற்றையும் தமது தாய்மொழிகளில் மொழிபெயர்த்தனர். படைப்பாக்கம், மொழிபெயர்ப்பாக்கம் என ஒவ்வொரு நிலையிலும் அந்நூல்களின் யாப்பியல் குறித்த ஆய்வுகளைக் காத்திரமாக நிகழ்த்தினர். அவ்வாறு நிகழ்த்தப்பட்டதில் ஆய்வுகளில் திருக்குறளின் யாப்பியல் குறித்த ஆய்வும் அடங்கும். இவ்வாய்வின் நிகழ்த்தியவர்களாக வீரமாமுனிவர்,  ஜி.யு.போப்,  கியூபர் முதலானவர்களை அடையாளப்படுத்தலாம். 
 
திருக்குறளின் யாப்புப் பற்றிய வீரமாமுனிவரின் கருத்துகள்
 
       ஈரடிகளால் அமையும் குறள்வெண்பாவின் முதலடியில் நான்குசீரும், இரண்டாமடியில் மூன்றுசீரும் இடம்பெறுகின்றன. இவ்வாறு தொன்றுதொட்டு இலக்கண மரபில் வழங்கி வருகின்ற குறள்வெண்பாவின் அமைப்பை மூன்று வகைகளாக்கியுள்ளார் வீரமாமுனிவர். இவரால் எழுதப்பட்டு கி.பி.1822இல் வெளிவந்தது ‘செந்தமிழ்’ என்னும் இலக்கண நூல். இந்நூல் திருக்குறளின் குறள்வெண்பாக்களை எதுகை அடிப்படையில் மூன்று வகைகளாகப் பகுத்தது  (செந்தமிழ், பக்.120, 121). இப்பகுப்பு குறித்துக் குறிப்பிடும் பின்வரும் ஆய்வாளரின் கருத்து :
 
1.  எதுகையொத்த, முதலடி நாற்சீர் - இரண்டாமடி மூச்சீர் எனும் அமைப்பு:
 
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                    (திருக்குறள் - 393)
 
2. எதுகைபெறாத, முதலடி நாற்சீர் - இரண்டாமடி மூச்சீர் எனும் அமைப்பு:
 
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.                      (திருக்குறள் - 20)
 
3. எதுகையொத்த முதலடி முச்சீர் - இரண்டாமடி நாற்சீர் எனும் அமைப்பு:
 
மனத்துக்கண் மாசில னாதல்
அனைத்தற னாகுல நீர பிற.                             (திருக்குறள் - 34)
 
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி
யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்.          (திருக்குறள் - 453)
 
தமிழ்யாப்பில் ‘அடி’யைத் தீர்மானிப்பதில் எதுகை என்பது இன்றியமையாத் தலைமை உறுப்பாகும். எதுகையொத்தல் என்பதை அளவுகோலாய்க் கொண்டு வீரமாமுனிவர், ‘குறள்வெண்பா அரிதாக முதலடி முச்சீர், இரண்டாமடி நாற்சீர் பெறும்’ (செந்.121) எனக் கூறியுள்ளமை குறள்வெண்பா இலக்கண வரலாற்றில் குறிப்பிடத்தக்க கருத்தாக்கமாகும்.  இலக்கியத்தில் அவ்வியாப்பு பெற்றுள்ள அமைப்பை ஆராய்ந்து வீரமாமுனிவர் இவ்வகைமையைக் குறிப்பிட்டுள்ளார் (ய.மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, பக்.176, 177).  இக்கருத்து வீரமாமுனிவர் தமது ‘செந்தமிழ்’ நூலின்கண் குறள்வெண்பா அமைப்பைப் பற்றிக்  கூறியதாகும். இவ்வமைப்பு முறை மரபான குறள்வெண்பாவின் வடிவ அமைப்பிலிருந்து வேறுபட்டதாகும்.
          வீரமாமுனிவர் ஐந்திலக்கண மரபைப் போற்றும் வகையில் ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் உரை தொல்காப்பியம் முதலான மரபிலக்கணங்களில் கூறப்பட்டுள்ள யாப்பு மரபின் வழி வெண்பாவின் இலக்கணத்தைச் சுட்டுகின்றது. இவற்றுள் குறள்வெண்பாவிற்கான இலக்கணத்தைச் சுட்டும்போது, ‘செந்தமிழ்’ நூலில் குறிப்பிட்ட ‘மூன்றுசீர்’, ‘நான்குசீர்’ என்ற குறள்வெண்பாவின் அமைப்பையும் இங்குச் சேர்த்து சுட்டியுள்ளது.  அக்கருத்து, “‘வெண்பா விகற்பமாமாறுணர்த்துதும் அவையே - குறள்வெண்பாவும் - சிந்தியல் வெண்பாவும் - இன்னிசை வெண்பாவும் - நேரிசை வெண்பாவும் - சவலை வெண்பாவும் - பஃறொடை வெண்பாவும் என வறுவகைப்படும். இவற்றுட் குறள்வெண்பா நாற்சீர் முச்சீரெனவிரண்டடி யொருவிகற்பத்தானு மிருவிகற்பத்தானும் வரப்பெறும். முச்சீர் நாற்சீர் வருவனவுமுளவெனக் கொள்க. மேலே காட்டிய உதாரணங்களைக் கண்டு கொள்க” (வீரமாமுனிவர், தொன்னூல் விளக்கம், மூலமும் உரையும், ப.70).  வெண்பாவின் வகையையும் அவை எதுகையின் அடிப்படையில் அமையும் ஒரு விகற்பம், இரு விகற்பம் என்ற அமைப்பையும் சுட்டி, அடுத்துக் குறள்வெண்பாவில் ‘மூன்றுசீர்’, ‘நான்குசீர்’ என்றமைகின்ற அமைப்பைச் சுட்டுகின்றார். இவ்வாறு முன்னர்த் தான் கொண்ட கருத்தை மீண்டும் நிலை நிறுத்துவதைப்போல் தாமெழுதுகின்ற இலக்கண நூல்களுள் இலக்கணம் வகுத்து அதற்குரிய சான்றுகளையும் தருகின்றார் வீரமாமுனிவர். இவ்வமைப்பு குறள்வெண்பாவின் மரபான அடியமைப்பு முறைக்கு மாறானது. அதாவது குறளின் முதலடி நாற்சீராயும் ஈற்றடி மூச்சீராயும் அமைவதே மரபு. இதை மாற்றுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு திருக்குறளின் வடிவத்தை மாற்றிப் பதிப்பித்து ஆராய்ந்த அயலகத் தமிழறிஞர்களுள் முதலமவராக வீரமாமுனிவரை அடையாளப்படுத்தலாம். வீரமாமுனிவரின் இக்கருத்தை அடியொற்றி ஜி.யு.போப்பும் கியூபரும் திருக்குறளைத் தம் விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றிப் பதிப்பித்து ஆராய்ந்துள்ளனர்.. இவ்விருவரின் கருத்து போக்குகளை இனி நோக்கலாம்.
 
திருக்குறளின் யாப்புப்  பற்றிய  ஜி.யு.போப்பின் கருத்துகள்
 
             கீழ்க்கணக்கிலுள்ள திருக்குறள், நாலடியார் ஆகிய இருநூல்களின் யாப்பியல் குறித்த நுட்பமான ஆய்வை ஜி.யு.போப் நிகழ்த்தியுள்ளார். இங்குத் திருக்குறளின் குறள்வெண்பா யாப்பினைக் குறித்து இவர் நிகழ்த்திய ஆய்வின் தன்மை சுட்டப்படுகின்றது. ஜி.யு.போப் திருக்குறளை மூலத்தோடு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து 1886இல் வெளியிட்டார். இந்நூலின் ஆங்கில முன்னுரையில் ‘திருக்குறளின் அமைப்பு’ குறித்த விரிவான ஆய்வுக்கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில் திருக்குறளின் யாப்புப் பற்றிய இவரது ஆய்வுÒMetre of the KurralÓ என்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விலக்கியத்தின் யாப்பைப் பற்றி ஆராய்வதற்குத் தேவையான தமிழ் யாப்பின் அடிப்படைகள் (அசைகள், சீர்கள்) இப்பகுதியுள் முதற்கண் விளக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்துத் திருக்குறளின் அடியமைப்பு, தொடையமைப்பு, தளை, ஓசை ஆகியவற்றையும் நுட்பமாக ஆய்ந்துள்ளார் ஜி.யு.போப். இவரது ஆய்வின் சிறப்பும், சிற்பின்மை  இங்குச் சுட்டப்படுகின்றன.
 
ஜி.யு.போப் : திருக்குறளின் அடியமைப்புகள்
 
      ஜி.யு,போப் ஈரடியில் ஏழுசீர்களைப் பெற்றுவரும் திருக்குறளின் அடி அமைப்பை வீரமாமுனிவரின் கருத்து வழி இரு வகையாகப் பகுக்கின்றார். அவை 1.முதலடி நான்குசீர் இரண்டாமடி மூன்றுசீர், 2.முதலடி மூன்றுசீர் இரண்டாமடி நான்குசீர் என்பன. முதல் வகையில் 909 குறள்களும், இரண்டாம் வகையில் 421 குறள்களும் உள்ளன எனப் பிரித்துக் கணக்கிட்டுள்ளார் (G.U.Pope, The Sacred‚ Kurral of Tiruvalluva-Nayanar, P.xxvi).  ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்புப் பதிப்பில் காணப்படும் இருவகைக் குறள்களின் (நான்குசீர் மூன்றுசீர், மூன்றுசீர் நான்குசீர்) எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால் இவர் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை மாறுபடுகின்றது. இவர் பதிப்பின் வழி முதலடி நான்குசீர் இரண்டாமடி மூன்றுசீர் என்ற அமைப்பில் 459 குறள்களும் முதலடி மூன்றுசீர் இரண்டாமடி நான்குசீர் என்ற அமைப்பில் 871 குறள்களும் உள்ளன. ஜி.யு.போப்பின் இவ்வெண்ணிக்கைகள் குழப்பமாக அமைந்துள்ளன.
 
ஜி.யு.போப் : திருக்குறளின் தொடை  அமைப்புகள்
 
அடியமைப்பில்  எதுகை என்பது கட்டாயம் இடம்பெறவேண்டும். இது அடியின் முதல்சீரிலுள்ள இரண்டாம் எழுத்து ஒத்து வருவதாகும். ஓர் அடியில் பயின்றுவருகின்ற எதுகைகளாக அடியெதுகை, இனவெதுகை, வருக்கவெதுகை முதலிய எதுகைகள் உள்ளன. அடியின் சீர்களில் பயின்றுவருகின்ற எதுகை அமைப்பில் ஏழு வகைகள் உள்ளன (இணை, பொழிப்பு, கூழை, ஒரூஉ, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று). இதில் முற்று எதுகையைத் தவிர பிற எதுகைகள் குறித்து ஜி.யு.போப் தமது ஆய்வுரையில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளில் சில நேரங்களில் எதுகையில்லாத பாடல்களும் அமையும். சிலவிடங்களில் ஒரு சொல்லோ, எழுத்தோ மறுமுறை வந்து ஒலிப்பதும் உண்டு.
 
(எ - டு)   தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
                தீவினை யென்னுஞ் செருக்கு.                     (குறள்.201)
 
இக்குறளின் ஈரடிகளிலும் ‘தீவினை’ என்ற சொல் பயின்றுவந்துள்ளது. இவ்வமைப்புகள் திருக்குறளில் காணப்படுகின்றன. ஜி.யு.போப் சொல்லின் இரண்டாமெழுத்தொத்து வருகின்ற ‘இடையாகெதுகை’, ஒரு சொல்லின் முதலெழுத்தைத் தவிர ஏனையவெழுத்துகள் ஒத்து வருகின்ற ‘தலையாகெதுகை’, இறுதியொன்றி வருகின்ற ‘கடையாகெதுகை’ முதலிய எதுகை அமைப்புகள் திருக்குறளில் பயின்றுவரும் முறைகள் பற்றி நுட்பமாய்ப் பதிவுசெய்துள்ளார். எனினும் இவரது மொழிப்பெயர்ப்பில் வருகின்ற தலையாசெதுகை, இடையாசெதுகை, கடையாசெதுகை என்பன முறையே தலையாகெதுகை, இடையாகெதுகை, கடையாகெதுகை என்பனவாகும். இவை அச்சுப் பிழையாக இப்பதிப்பில் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ‘ஆசெதுகை’யாக ய, ர, ல, ழ என்னும் ஒற்றெழுத்துகள் வருகின்றன.  மூன்றாவது குறளில் வரும் ‘மலர்மிசை’ என்னும் சொல்லிலுள்ள ‘ர்’ ஆசெதுகையாகும். இங்கு மூன்றாவது எழுத்து ஆசாக வந்துள்ளது (இலக்கண நூல்களின் உரைகள் காட்டும் சான்றில் இரண்டாமெழுத்து ஆசாக வருகின்றது).  இது இங்குச் சிந்திற்குரியது.
 
(எ - டு)   தீப்பால தான்பிறர்கட் செய்யற்க
                நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்.          (குறள்.206)
 
ஜி.யு.போப் இக்குறளை முதலடி மூன்றுசீர் இரண்டாமடி நான்குசீர் எனப் பிரித்துள்ளார். இதில் 4ஆவது சீரில் யகரவொற்று ஆசாக அமைந்துள்ளது. எனினும் இக்குறளில் வருகின்ற ஆசெதுகையை அடிநிலையில் ஆசாகக் கொள்ள முடியாது. சீர்நிலையில் சீரிடையிட்டு வந்த ஆசு ஒரூஉ எதுகை எனலாம். எதுகை ஒன்றலில் இனவெழுத்துகள் ஒன்றிவந்தால் இனவெதுகை என்பர். இதில் வல்லினத்திற்கு வல்லினமும் மெல்லினத்திற்கு மெல்லினமும் இடையினத்திற்கு இடையினமும் பொருந்தும். (எ - டு) குறள் 112இல் ‘செப்ப - யெச்சத்திற்’ எனவும், குறள் 211இல் ‘கைம்மாறு - என்னாற்றுங்’ எனவும் வருகின்ற குறளின் சொற்களில் முறையே வல்லின எதுகையும் (க், ச்), மெல்லின எதுகையும் (ம், ன்) இடம்பெற்றுள்ளன. மூன்றாம் எழுத்தொன்றெதுகை என்பது இரண்டாமெழுத்து ஒன்றாநிலையில் மூன்றாமெழுத்து ஒன்றுவது ஆகும். (எ - டு) 881ஆவது குறளின்கண் வருகின்ற ‘நிழனீரு, தமர்நீரு’ என்னும் சொற்களிலுள்ள ‘நீ’ என்ற மூன்றாமெழுத்தொன்றியுள்ளது. எனினும் மூன்றாமெழுத்தொன்றெதுகைக்கு இவர் காட்டும் குறள் மூன்றுசீர் நான்குசீர் என்னும் பகுப்பிலானது. மேலும் இக்குறளில் ரகரவொற்று ஆசாக இடம்பெற்றுள்ளது. மரபான ஆசெதுகை கொள்ளும் முறையிலிருந்து ஜி.யு.போப் கொண்டுள்ள இம்முறை வேறானதாகும். இவ்வெதுகையையும் அடிநிலையில் சீரிடையிட்ட ஒரூஉ மூன்றாமெழுத்து ஒன்றெதுகையாகக் கொள்ளமுடியும். இவர் மோனைக்குரிய கிளையெழுத்துகளைச் சுட்டியுள்ளார். 1. அ, ஆ, ஐ, ஔ,  2. இ, ஈ, எ, ஏ,  3. உ, ஊ, ஒ, ஓ,  4. ச - த , 5. ஞ் - ந்,  6. ம் - வ் ஆகிய எழுத்துகள் மோனையாக அமையவேண்டும் என்ற யாப்பருங்கலத்தின் கருத்தை எடுத்துக்காட்டுகின்றார். ஜி.யு.போப் திருக்குறளில் இருந்து எடுத்துக்காட்டும் மோனை வகைகள் சில மாறுபட்டுள்ளன. அவை பொழிப்பு மோனை, கீழ்க்கதுவாய் மோனை ஆகியனவாகும்.
 
பொழிப்பு மோனை (1, 3)
 
‘வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணராற் பாற்று.’         (குறள்.11)
 
இக்குறளின் முதல்மூன்று சீர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஜி.யு.போப் பொழிப்பு மோனை அமைந்துள்ளது எனக் கூறிவிடுகின்றார். ஆனால் இக்குறளில் பொழிப்பு மோனை அமையவில்லை. அதற்குப் பதில் ‘மேற்கதுவாய் மோனை’ அமைந்துள்ளது. பொழிப்பு மோனை எனச் சுட்டிய ஜி.யு.போப்பின் கருத்து சிந்தித்தற்குரியது.
 
கீழ்க்கதுவாய் மோனை (1, 2, 4)
 
சொல்லுக சொல்லிற் பயனுடைய
சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.         (குறள்.200)
 
இக்குறளின் 1, 2, 4 சீர்களில் மோனை ஒன்றியதால் கீழ்க்கதுவாய் மோனை என ஜி.யு.போப் குறித்துள்ளார். எனினும் இக்குறளை ஜி.யு.போப் முதலடி மூன்றுசீர் இரண்டாமடி நான்குசீர் எனப் பிரித்துள்ளார். இவ்வடியமைப்பின்படி பார்த்தால் முதலடியில் கீழ்க்கதுவாய் மோனையில்லை. இரண்டாமடியில்தான் கீழ்க்கதுவாய் மோனை அமைகிறது. யாப்பிலக்கண நூல்கள் வெண்பா யாப்பின் அடியமைப்புப் பற்றிப் பேசுமிடத்து ஈற்றடி முச்சீர் என்று குறிப்பிட்டுள்ளன. எனவே இக்குறளை 4 சீர்கள், மூன்று சீர்கள் என்றுதான் பிரிக்க முடியும். இவ்வாறு பிரித்தால் முதலடியில் கீழ்க்கதுவாய் மோனை இடம்பெறும். இவரும் இவ்வாறு கருதிச் சொன்னாரா? அல்லது இரண்டாமடியில் நான்குசீர்களை அமைத்து அதில் இடம்பெற்றுவரும் கீழ்க்கதுவாய் மோனையின் அடிப்படையில் சொன்னரா? என்று தெரியவில்லை. எவ்வாறெனினும் இக்குறளில் கீழ்க்கதுவாய் மோனை அமைகின்றது.
 
ஜி.யு.போப் குறளிலுள்ள மூவகைச் செப்பலோசைகளை நுட்பமாக ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார். ‘மூவகைச் செப்பலோசையிலும் அமைந்த குறள்களை ஆராய்ந்து முதன்முதலாகக் குறிப்பு எழுதியவர் இவரே’ (மு.சண்முகம் பிள்ளை, ‘அடிக்குறிப்பு விளக்கம்’, திருக்குறள் யாப்பு அமைதியும் பாடவேறுபாடும், ப.84) எனக் குறிப்பிடும் மு.சண்முகம் பிள்ளையின் கருத்து இதை உறுதிபடுத்துகின்றது. அதுபோல் பெரும்பாலான திருக்குறள்களின் அடிகளில் மோனை பயிலவில்லை என்று ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது (G.U.Pope, The Sacred‚ Kurral of Tiruvalluva-Nayanar,  P. xxvi).
 திருக்குறளிலுள்ள முதன்மையான தொடைகள், தொடை விகற்பங்களைப் பற்றி ஜி.யு.போப் குறிப்பிட்டுள்ளார். ஏனைய இனமோனை, இனவெதுகை, வருக்க மோனை, வருக்கவெதுகை பற்றியும், கடைச்சீரில் இருந்து முதல்சீர் நோக்கிய தொடைகள் பற்றியும் எக்கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இது இங்குக் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

திருக்குறளின் யாப்புப் பற்றிய கியூபரின் கருத்துகள்
 
      வீரமாமுனிவர், ஜி.யு.போப் ஆகியோரின் கருத்துகளைப் போலவே கியூபரின் கருத்தும் அமைகின்றது. திருக்குறளில் பயின்று வருக்கின்ற குறள்வெண்பாக்கள் குறித்துத் ‘திருக்குறளில் வெண்பா’ (The Venpa Meter in the Tirukkuralஎன்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பல எடுத்துக்காட்டுகளோடும் விளக்கங்களோடும் திருக்குறளின் குறள்வெண்பா அமைப்புப் பற்றிக் குறிப்பிடுகின்றார். திருக்குறளில் பல எதுகை அமைப்பு ஒத்து வரா நிலையில் அமைந்துள்ளன. இதை நாம் மாற்றிப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். மேலும் இவ்வமைப்பில் அறத்துப்பாலின்கண்ணுள்ள 382 குறள்களுள் 119 குறள்கள் மூச்சீர் - நாற்சீர் என்ற அமைப்பில் உள்ளன என்றும்,  அவை இரண்டில் ஒரு சதவிகித விழுக்காடாகும் என்றும் பதிவு செய்துள்ளார் (Prof. F.B.J. Kuiper, The Venpa Meter in The TirukkuralThiruvalluvar Thirunaal Vizha Malar, Oct 1968, P. 108). கியூபர் இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்வதோடு திருக்குறளில் இவ்வமைப்புடைய பல குறள்கள் காணப்படுகின்றன. இது திருவள்ளுவர் காலத்து அல்லது திருவள்ளுவரின் குறட்பா அமைப்பு முறையாகும். எனவே அதைப் பின்பற்றித் திருக்குறளைப் பதிப்பிக்க முயலும் இக்கால பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் இம்முறையின் வழித் திருக்குறளைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் (Prof. F.B.J. Kuiper, The Venpa Meter in The TirukkuralThiruvalluvar Thirunaal Vizha Malar, Oct 1968, P. 108).
 
இவ்வாறு  திருக்குறளின் யாப்பியல் குறித்த அயலகத் தமிழறிஞர்களின் சில கருத்துகள் தமிழ் யாப்பியலின் அடிப்படை மரபிலிருந்து வேறுபடுகின்றன. குறள் வெண்பாவின் ஒசையைப் பற்றியும் திருக்குறளிலுள்ள மோனை அமைப்பு பற்றியும் ஜி.யு.போப் குறிப்பிட்டுள்ள கருத்துகள் திருக்குறளின் யாப்பியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு கருத்தாக்கமாகும். ஏனைய தொடை அமைப்புகளில் சில முரண்கள் காணப்படுகின்றன. இதுபோல் திருக்குறளின் எதுகையமைப்பு குறித்து வீரமாமுனிவர் குறிப்பிட்ட கருத்தை அடியொற்றுகின்ற ஜி.யு.போப், கியூபர் ஆகியோரின் கருத்துகளும் முரணாக அமைகின்றன. இவற்றைக் குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பிருக்கின்றன.  எனினும் திருக்குறளின் யாப்பியல் குறித்த அயலகத் தமிழறிஞர்கள் மேற்கொண்ட சில நுட்பமான ஆய்வுகள் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கன.
 
3. திருக்குறள் யாப்பு :  மு.சண்முகம் பிள்ளையின் ஆய்வு - அறிமுகம் - மதிப்பீடு
 
                திருக்குறளின் யாப்பியலை விரிவாக ஆராய்ந்தவர் மு.சண்முகம் பிள்ளை. இவரது ஆய்வு பாவியல் தொடையியல் என்னும் இரு நிலைகளில் அமைகின்றது. திருக்குறளின் பாவியலானது குறளில் பயின்று வருகின்ற எதுகையினை அடிப்படையாகக் கொண்டமைகின்றது. அதாவது இரு அடிகளிலும் ஒரே எதுகைப் பெற்று வந்தால் ஒருவிகற்பம் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட எதுகைப் பெற்று வந்தால் இருவிகற்பம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு வகைகளுள் பெரும்பான்மையாகத் திருக்குறளில் ஒருவிகற்பக் குறள்வெண்பாவே ஆட்சிபெற்றுள்ளது. இதை ‘ஈரடியும் ஒரே எதுகை பெற்றுவந்த குறள்வெண்பாவை ஒரு விகற்பம் என்றும், ஈரடியும் வெவ்வேறு எதுகை பெற்ற வருவதனை இருவிகற்பம் என்றும் கூறுவர். திருக்குறள் 1330 பாடல்களிலும் ஒரு விகற்பமாய் வரும் குறள்களே பெரும்பான்மை. இருவிகற்பமாய் வரும் குறள்களின் எண்ணிக்கை 431’ (மு.சண்முகம் பிள்ளை, திருக்குறளின் யாப்பு அமைதியும் பாட வேறுபாடும், ப.23). இக்கருத்து திருக்குறளிலுள்ள ஒருவிகற்பக் குறள்வெண்பாக்கள் 899 ஆகும். இவ்வாறு மு.சண்முகம் பிள்ளை திருக்குறளின் ஒருவிகற்ப, இருவிகற்பக் குறள்வெண்பாக்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். மு.சண்முகம் பிள்ளையின் திருக்குறள் யாப்பியல் ஆய்வைப் பின்வரும் எட்டு வகைகளில் பகுத்து நோக்கலாம்.
 
  1. குறள்வெண்பாவில் பயின்று வந்துள்ள மூவகை ஓசைகள்
  2.  
  3. ஒருவிகற்ப குறள்வெண்பா
அ) ஒருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை பெற்றவை
ஆ) ஒருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை பெறாதவை
 
3.   இருவிகற்ப குறள்வெண்பா
 
அ) இருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை பெற்றவை
ஆ) இருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை பெறாதவை
 
4.  இருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை நீங்கிய ஏனைய சீர்களில் இடம்பெறுள்ள மோனை அமைப்புகள்
 
                                அ)  4, 5ஆம் சீர்களில் மோனை அமையப் பெற்ற பாடல்கள்
                                ஆ)  4, 5, 6ஆம் சீர்களில் மோனை அமையப் பெற்ற பாடல்கள்
                                இ)  4, 5, 6, 7ஆம் சீர்களில் மோனை அமையப் பெற்ற பாடல்கள்
                                ஈ)   4ஆம் 6ஆம் சீர்களில் மோனை அமையப் பெற்ற பாடல்கள்
                                உ)   4ஆம் 7ஆம் சீர்களில் மோனை அமையப் பெற்ற பாடல்கள்
 
5.     போலி எழுத்துகளால் இருவிகற்பக் குறள்வெண்பா ஒருவிகற்பக் குறள்வெண்பாவாக மாறுதல்
 
அ) ஐகாரத்திற்கு ‘அய்’ போலியாக நிற்றல்
ஆ) ஔகாரத்திற்கு ‘அவ்’ போலியாக நிற்றல்
இ) ஆய்த எழுத்திற்கு Ôயகரமெய்Õ போலியாக நிற்றல்
 
6.  திருக்குறளில் இடம்பெற்ற தொடை அமைப்புகள்
 
7.  திருக்குறளில் இடம்பெற்ற வண்ணங்கள்
 
8.  திருக்குறளில் இடம்பெற்ற வனப்புகள்
 
இவ்வகைகளின் அடிப்படையில் ஆராய்ந்ததில் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன.
 
-  திருக்குறளின் மூவகைச் செப்பலோசைகளைத் துல்லியமாகப் பகுத்து மதிப்பிட்டு உரைத்தவர் ஜி.யு.போப் என்று  கூறி, அவற்றைக் குறித்துத் தனித்தனியே  விளக்கியுள்ளமை
 
-      ஒருவிகற்ப,  இருவிகற்பக் (410/21)  குறள்வெண்பாக்களில் பயின்றுவருகின்ற ஒரூஉ எதுகை பெற்ற குறள்கள்  (68/410),  பெறாத குறள்கள் (மிகுதி/21)  எவை எவை என்று ஆராய்ந்துள்ளமை
 
-    போலி எழுத்துகளின் அடிப்படையில் ஒரு குறள் ஒரு விகற்பமாகவும், இரு விகற்பமாகவும் மாறி அமைகின்றன. இது குறித்த தெளிவான வரையைத் தொல்காப்பிய உரைகளிலே காணமுடிகின்றது என்று கூறியுள்ளமை. போலி எழுத்துகளில் ‘ஐ’க்கு ‘அய்’யும், ‘ஔ’க்கு ‘அவ்’வும், ஆய்த (ஃ) எழுத்திற்கு ‘யகர’ மெய்யும் போலியாக அமைதலைக் குறித்துச் சான்றுகளோடு ஆராய்ந்து எண்ணிக்கையினைச் சுட்டியுள்ளமை
 
-   இருவிகற்பக் குறள்வெண்பாவில் ஒரூஉ எதுகை நீங்கிய ஏனைய சீர்களில் இடம்பெற்றுள்ள மோனைத்தொடை அமைப்புகள் குறித்து விரிவாக எடுத்து ஆராய்ந்துள்ளமை
 
-      திருக்குறளில் இடம்பெற்ற தொடை அமைப்புகளான முதற்சீரில் இருந்து கடைச்சீர் நோக்கியவை, இறுதிச்சீரில் இருந்து முதற்சீர் நோக்கியவை என்னும் இரு நிலைகளினைக் குறித்தும் சான்றுகளோடு விளக்கியுள்ளமை
 
-   எதுகைத் தொடையில் ஒற்றெதுகை என்னும் புதிய எதுகைத்தொடை பெயரினைத் தந்து,      அவற்றிற்குத் திருக்குறளில் இருந்து சான்றுகாட்டியுள்ளமை
 
-  பாவின் ஒசை வேறுபாட்டைக் குறிப்பதற்காக வரும் வண்ணம் எவ்வாறு திருக்குறளில் இடம்பெற்றுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளமை. தொல்காப்பியம் குறிப்படும் இருபது வண்ணங்கள் மட்டும்  திருக்குறளில் பயின்றுவருகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளமை
 
- செய்யுளுக்கு அழகினைத் தருகின்ற அம்மை என்னும் வனப்பிற்கு உரையாசிரியர்கள் திருக்குறளினைத் தான் எடுத்துக்காட்டுகின்றனர் என்பதைச் சுட்டியுள்ளமை
என்பன போன்ற பல சிறப்புகளைப் பெற்று மு.சண்முகம் பிள்ளையின் திருக்குறள் யாப்பியல் ஆய்வு திகழ்கின்றது.
3. திருக்குறள் யாப்பியல் :  ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடும் புதுவகை ஆய்வு
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் யாப்பியலுக்கான சிறந்த நோக்கு நூலை ‘இலக்கணத் தொகை யாப்பு - பாட்டியல்’ என்னும் பெரும்தொகுதியாக உருவாக்கியவர் ச.வே.சுப்பிரமணியன் ஆவார். இந்நூலின் தொடக்கத்தில் ‘தமிழ் இலக்கியங்களின் யாப்பு’ என்னும் கட்டுரையை அவர் எழுதியுள்ளார். அதில் பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியலைப் பற்றியும் எழுதியுள்ளார். அப்பகுதியில் திருக்குறளின் யாப்பியலைப்  பற்றிப்  புது நோக்கில் ஆய்வு பார்வையைச் செலுத்திப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
          நான்கடி வெண்பாவிலும் மூவடி (சிந்தியல்) வெண்பாவிலும் இன்னிசை, நேரிசைப் பகுப்பமைத்தது போல் குறள்வெண்பாவில் அமைத்திலர் இலக்கணிகள். திருக்குறள், நால்வகை அமைப்புக்களைத் தருகின்றது. அவற்றைக் கீழ்வருமாறு சுட்டலாம். ஒன்று, முதலடியில் ஒரூஉ எதுகை பெற்ற நேரிசை நிலை.
                                                அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை - வன்பாற்கண்
                                                வற்றல் மரந்தளிர்த் தற்று (78)
                இரண்டாவது ஒரூஉ எதுகை பெறாது அடிஎதுகை பெற்ற இன்னிசை நிலை.
                                                அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
                                                என்புதோல் போர்த்த உடம்பு (80)
                மூன்றாவது, ஒரூஉ எதுகையும் அடி எதுகையும் உடைய இணைநிலை.
                                                அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்
                                                என்பும் உரியர் பிறர்க்கு (72)
                நான்காவது நிலை, மேற்கூறிய இருவகைத் தொடைகளும் நீங்கிய செந்தொடை நிலை.
                                                அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
                                                சிறுகை அளாவிய கூழ் (64)
(ச.வே.சுப்பிரமணியன், இலக்கணத்தொகை யாப்பு பாட்டியல், ப.73)
என்னும் நால்வகைகளைச் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். இந்நான்கு வகைகளில் முதன்மை பெறுவது ஒரூஉ எதுகையும் அடியெதுகையும் ஆகும். முதல்வகை ஒரூஉ எதுகையின் அடிப்படையிலும், இரண்டாவது வகை அடியெதுகையின் அடிப்படையிலும் மூன்றாவது வகை இவ்விரு எதுகையும் இணைந்ததன் அடிப்படையிலும் நான்காவது வகை எவ்வகைத் தொடைகளும் பயிலாததன் அடிப்படையிலும் அமைகின்றன. இலக்கணிகளின் நேரிசைப் பாகுபாடு இரண்டாவது அடியில் இடம்பெறுகின்ற தனிச்சொல்லின் ஒரூஉ எதுகையை மையமாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டது. ஆனால் ச.வே.சுப்பிரமணியத்தின் நேரிசை வகைப்பாடு திருக்குறளின் முதலடியில் அமைகின்ற ஒரூஉ எதுகையை அடிப்படையாகக் கொள்கின்றது. விதிநிலை ஒன்றுதான் அடியமைப்பு முறைதான் மாறுபடுகின்றது. இதற்குக் காரணம் நேரிசை வெண்பா நான்கடியில் அமைகின்றது. குறள்வெண்பா இரண்டடியில் அமைவதாகும். இந்நால் வகைப்பாடுகளையும் கொண்டு திருக்குறளினை ஆராயும்போது முந்தைய இலக்கணிகளின் நேரிசை, இன்னிசைப் பாகுபாடு திருக்குறளின் குறள்வெண்பாக்களிலும் உண்டு எனக் கூறலாம். நேரிசை வெண்பா அமையும் முறை பற்றி விருத்தியுரை குறிப்பிடும்போது இரண்டாமடியில் வருகின்ற ஒருஉ எதுகை பெரும்பான்மையும் சிறுபான்மை கீழ்க்கதுவாய், மேற்கதுவாய், முற்றெதுகை ஆகியவற்றைக் கொண்டு அமையும் என்று குறிப்பிட்டுள்ளது. இக்கருத்தைக் குறள்வெண்பாவின் நேரிசை அமைப்பிற்கும் பொருத்திப் பார்க்க முடியும். இதிலும் ஒரூஉ எதுகையைப் பெற்ற குறள்களே அதிக அளவில் பயின்றுவந்துள்ளன. ச.வே.சுப்பிரமணியன் திருக்குறளில் பகுத்துள்ள நால்வகை அமைப்புகளும் திருக்குறளின் எண்ணிக்கைகளும் முறையே வருமாறு:
1.  முதலடியில் ஒரூஉ எதுகை பெற்ற நேரிசை நிலை  -  416
2.  ஒரூஉ எதுகை பெறாது அடியெதுகை பெற்ற இன்னிசை நிலை - 798
3.  ஒரூஉ எதுகையும் அடியெதுகையும் உடைய இணைநிலை - 79
 4.  இருவகைத் தொடைகளும் நீங்கிய செந்தொடை நிலை - 37
திருக்குறள் யாப்பியல்: புலவர் குழந்தை
தமிழ் இலக்கணிகள் வெண்பாவிற்கு இலக்கணம் வகுக்கும்போது அளவடிகளில் பெரும்பான்மை பொழிப்பு மோனையும் சிறுபான்மை ஒரூஉ மோனையும் பெற்று வரவேண்டும் என்பர். சிந்தடியாகிய ஈற்றடியிலும் (முதற்சீர், மூன்றாம் சீர்) பொழிப்பு மோனை பெற்று வரவேண்டும் என இலக்கணம் வரையறுத்தனர். இவ்வரையறையில், சிந்தடியில் பொருற் செறிவு குறைவுடையதாக அமைகிறது என்றால் பொழிப்பு மோனை இன்றிச் செந்தொடை பெற்ற அடியாகப் பாடினாலும் இழுக்கில்லை என்று கருத்துரைக்கின்றார் (2010:38). இவ்விலக்கணத்தின் அடிப்படையில் குறள் வெண்பா அமைப்பை மூன்று வகைகளில் பகுத்துள்ளார்.
1.             முதலடி ஒரூஉ மோனை பெற்று, ஈற்றடி பொழிப்பு மோனை பெறாது வருதல்
அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு.                (குறள்.1)
2.             முதலடி ஒரூஉ எதுகை பெற்று, ஈற்றடி பொழிப்பு மோனை பொறாது வருதல்
சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.               (குறள்.31)
3.             முதலடி ஒரூஉ எதுகையும், ஈற்றடி பொழிப்பு மோனையும் பெற்று வருதல்
                                ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
                                பொன்றுந் துணையும் புகழ்.               (குறள்.156)
இவ்வகைகளின் அடிப்படையில் திருக்குறளில் உள்ள குறள்வெண்பாக்களை ஆராய வேண்டும் என்று கருத்துரைக்கின்றார். புலவர் குழந்தையின் வகைப்பாட்டு அடிப்படையில் அமையும் குறளினைப்போல், வகைப்பாட்டில் அமையா குறள்களும் திருக்குறளில் காணப்படுகின்றன. எனவே இவ்வகைப்பாட்டினை முற்றுமுழுதாகத் திருக்குறளில் பொருந்திப் பார்க்க முடியவில்லை. மேலும் பல திருக்குறள்களில் இவர் குறிப்பிடுகின்ற எந்த வகைகளும் பயின்றுவரவில்லை. எனவே இவரது வகைப்பாடு திருக்குறளின் யாப்பியலுக்குப் பொருந்தவில்லை.
நிறைவாக 
- அயலகத் தமிழறிஞர்களின் கருத்துகள் தமிழ் யாப்பியலின் அடிப்படை மரபிலிருந்து வேறுபடுகின்றன. என்றாலும் குறள்வெண்பாவின் ஒசையைப் பற்றியும் மோனை அமைப்பு பற்றியும் ஜி.யு.போப் குறிப்பிட்டுள்ள கருத்துகள் திருக்குறளின் யாப்பியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கருத்துகளாக அமைகின்றன.
  திருக்குறளின் எதுகையமைப்பு குறித்து வீரமாமுனிவரின் கருத்தை அடியொற்றுகின்ற  ஜி.யு.போப், கியூபர் ஆகியோரின் கருத்துகளும் முரணாக அமைகின்றன. இவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனினும் திருக்குறளின் யாப்பியல் குறித்த அயலகத் தமிழறிஞர்கள் மேற்கொண்ட சில நுட்பமான ஆய்வுகள் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கன.
-       தமிழக தமிழறிஞர்களின் திருக்குறள் யாப்பு குறித்த கருத்தாங்களில் மு.சண்முகம் பிள்ளையின் திருக்குறள் யாப்பமைதியும் பாடவேறுபாடு என்னும் குறிப்பிடத்தக்க வகையில் அமைகின்றது. அதுபோல் திருக்குறளிலும் நேரிசை, இன்னிசை பாகுபாட்டினை உருவாக்க முடியும் என்ற வகையில் அமையும் ச.வே.சுப்பிரமணியனின் ஆய்வும் புதுமுயற்சியாக அமைகின்றது. ஆனால் புலவர் குழந்தையின் புதுவகை முயற்சிகள் திருக்குறளின் யாப்பியல் ஆய்வில் பொருந்தி அமைவதைக் காட்டிலும் பொருந்தா நிலையில் அமைகின்றமையை ஆராய்ந்து பார்க்கையில் உணர முடிகின்றது.
-       பத்தொன்பாம், இருபதாம் நூற்றாண்டுகளில் திருக்குறளின் யாப்பியல் குறித்து நிகழ்த்தப்பட்ட இவ்வாய்வுகள் திருக்குறளின் ஆய்வுவரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றமைகின்றன.துணைநின்ற நூல்கள்
  1. அமிதசாகரனார், யாப்பருங்கலம் பழைய விருத்தியுரை யுடன், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, (ப.ஆ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, மறுபதிப்பு, 1998.
  2. குழந்தை புலவர், யாப்பதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 2010.
  3. குழந்தை புலவர், தொடையதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2006.
  4. சண்முகம் பிள்ளை, மு., திருக்குறள் யாப்பு அமைதியும் பாட வேறுபாடும், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1971.
  5. சண்முகம் பிள்ளை, மு., திருக்குறள் அமைப்பும் முறையும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1972.
  6. சுப்பிரமணியன், ச.வே.,   இலக்கணத்தொகை யாப்பு - பாட்டியல், தமிழ்ப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 1978.
  7. திருவள்ளுவ நாயனார், திருக்குறண் மூலமும் பரிமேலழகருரையும், பொன்னுசாமித் தேவர் வேண்டுகோளின்படி, ஆறுமுக நாவலர் பல பிரதிரூபங்களைப் பரிசோதித்து, சதாசிவப் பிள்ளையால் வித்தியாநுபாலன யந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. சென்னை, ஆறாம் பதிப்பு, 1904.
  8. Beschi,constantius joseph,A Grammar of the High Dialet of The Tamil Languge Called ªê‰îI› Translated from the original Latin by Benjamin Guy Babington,Reprint and published by The Tanjore maharaja serfoji‚s sarasvathi mahal Library,Thanjavur(second Edition 1917), Reprint,1974.
  9.  Pope,G.U., The Sacren Kurral Of Tiruvalluvanayanar With Introducion Grammar Translation Notes Lexicon And Concordance , Asian Educationl Services, New Delhi,madras, 2003. 
  10.   Pope, G.U., The Naladiyar With Introduction Grammar Translation Notes Lexicon And Concordance, Asian Educational Services, New Delhi, Madras, 2002.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard