சங்க இலக்கியங்கள் இரண்டாயிரமாண்டு காலப் பழமையுடையன. இவ்விலக்கியங்களில் ஆங்காங்கே இடப்பெயர்களைச் சுட்டி புலவர்கள் பாடியுள்ளனர். புற இலக்கியங்களில் புரவலர்களின் வள்ளன்மையைப் பாடும் போது அவர்களின் ஊர்ப்பெயர்களையும் அவர்களின் உடைமையாய் விளங்குகின்ற இடங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடுகின்றனர். அக இலக்கியங்களில் உவமைக்காக இடப்பெயர்களையும் இடப்பெயர்களோடு தொடர்புடைய பிற பொருட்களையும் பிறரையும் குறித்துப் பாடுகின்றனர். இவையன்றி ஆலங்குடி வங்கனார் குடவாயில் கீரத்தனார் எனப் புலவர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாய் அப்புலவர்களது ஊர்ப்பெயர்கள் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு ஏறத்தாழ 240 இடப்பெயர்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பெற முடிகிறது. இவற்றுள் தமிழகத்தின் புறத்தேயமைந்த ஊர்ப்பெயர்களும் அடக்கம். சோழ நாட்டைச் சேர்ந்த இடப்பெயர்களாக ஏறத்தாழ 40 ஊர்ப் பெயர்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது. சங்க இலக்கியம் கூறும் ஊர்ப்பெயர்கள் இவைதாம் என்று அறுதியிட்டு உறுதிபடக் கூற இயலாதவாறு அமைந்த பெயர்களும் உண்டு. ஆயின் ஒத்த வடிவம் குறித்து இவ்வூராகலாம் என்ற கருதுவதற்கு இடமளிக்கும் இடப்பெயர்களாக அவை அமைகின்றன.
பிற்காலத்தே, கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நாற்றாண்டு வரை, கல்வெட்டுகளில் வளநாடு, கூற்றம்/நாடு என்ற நிருவாகப் பிரிவுகளுடன் இடப்பெயர்கள் குறிக்கப்பட்டன. அதனால் கல்வெட்டுகளில் சுட்டப் பெற்ற இடப் பெயர்களை இனங்காணுதல் எளிதாக இருந்தது. சங்க கால இலக்கியங்கள் அளவிற்குச் சங்க காலக் கல்வெட்டுகள் இடப்பெயர்களைக் குறித்தோ பண்டைய மன்னர்களைக் குறித்தோ விரிவாகக் குறிப்பிடாமையால் சங்க இலக்கியம் ஒன்றையே சங்க கால வரலாற்றினை அறிவதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறோம். கிடைக்கின்ற ஒன்றிரண்டு சங்க காலக் கல்வெட்டுகளும் ஓரிரு வரிக் கல்வெட்டுகளாக பிழைபட இருக்கின்றன. வாய்மொழி இலக்கியங்களாக விளங்கி, பிற்காலத்தே ஏடுகளில் எழுதப் பெற்றதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் நிலவியில் பிண்ணனியைச் சுட்டி இடப் பெயர்களைச் சரியாக அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமாகக் குறித்துக் கூறுதல் பெருமளவில் இல்லை எனலாம். சங்க இலக்கியங்களும் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டனவல்ல. இயல்பாகக் கவிபாடும் போக்கில் வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்ற உணர்வின்றிப் பாடப்பெற்றவை. இதனால், பழமைச்சிறப்பு வாய்ந்த பெரிய நகர்களான புகார், மதுரை. உறையூர் போன்ற இடங்களை இனங்காணுதல் எளிதாகின்ற அளவிற்கு ஆலத்தூர் ஆலங்குடி போன்ற சங்க இலக்கியம் கூறும் பிற சிறிய ஊர்ப் பெயர்களை இவைதாம் என்று உறுதிபடக் கூறவியலாது போகிறது.
சோழநாட்டைச் சேர்ந்த ஊர்ப் பெயர்களுள் மிக அதிகமான சங்க இலக்கிய வரிகளால் பாடப்பெற்ற சிறப்புடைய நகரங்கள் இரண்டு. அவை உறந்தையும் புகாருமாம். இவ்விரண்டு நகர்களும் சங்க்கால சோழ நாட்டின் தலைநகர்களாக விளங்கின.
உறந்தை : சங்க இலக்கியங்கள் யாவிலும் இவ்வூர் உறந்தை என்றே பெரும்பாலும் அழைக்கப் பட்டது. சங்கம் மருவிய காலத்து இரட்டைக் காப்பியங்களில் இவ்வூர் ஊறையூர் என்றும் குறிக்கப் பட்டிருப்பதால் உறையூர் என்பது பிற்கால வழக்கு என்பதை அறியலாம். ஆயின் சங்க இலக்கியப்புலவர்கள் பத்து பேர் உறையூர் என்ற பெயரை தம் பெயருக்கு முன்னொட்டாக க் கொண்டிருக்கின்றனர். யானையைக கோழி வென்ற புராணத்தைக் கூறி கோழி என்ற பெயரை இவ்வூருக்கு மணிமேகலை கூறுகிறது. ‘கோழியோனே கோப்பெருஞ் சோழன்’ என்று இப்பெயரைப் புறநானூற்றின் ஒரு பாடல் (புறம் 212) குறிக்கிறது இவ்வூர் காவிரி நதியின் கரையில் அமைந்த செய்தியைச் சங்க இலக்கியம் பதிவு செய்கிறது.
காவிரிப் படப்பை உறந்தை அன்ன (அகம் 385),
சோழ மன்னர்களோடு தொடர்பு படுத்தி,மறம் கெழு சோழர் உறந்தை, வளம் கெழு சோழர் உறந்தை, சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை என்று சங்க இலக்கியங்கள் இவ்வூரைப் பாடுகின்றன. இவ்வூரின் ஒரு பகுதியாக ஏணிச்சேரி என்ற இடம் இருந்த்து.ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் இவ்வூரினர்
பண்டைய உறையூர் நகரம் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் 13 ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டதாக வரலாறு கூறும். திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாக இன்று உறையூர் விளங்குகிறது உறையூரின் கிழக்கே அமைந்த திருச்சிராப்பள்ளி மலைக் குன்றினை அக நானூறு
உறந்தை குணாது நெடும் பெருங்குன்றம் (அகம் 4)
என்று கூறுகிறது. அவ்வாறே உறந்தையின் கிழக்கே அமைந்திருந்த காவல் மிகுந்த பிடவூர் என்ற ஊரைப்பற்றியும்
உறந்தை குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
எனப் புறம் 395 பாடுகிறது.
புகார்: காவிரிபூம்பட்டினத்து.. என்ற முன்னொட்டுடன் மூன்று சங்கப் புலவர்கள் இவ்வூரினர். ‘முட்டாச்சிறப்பின் பட்டினம் என்று பட்டினப்பாலை மிக விரிவாக இந்நகர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்று இரு பகுதிகளைக்கொண்டதாக இவ்வூர் விளங்கியது போன்ற பல செய்திகளை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
அம்பர்: அம்பர் என்ற ஊர் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு கிழக்கே அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஏந்துகோட்ட்டு யானை இசைவெங்கிள்ளி
வம்புஅணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம்தண் அறல்... நற்றிணை 141
என்று அரிசில் ஆற்றையடுத்து இவ்வூர் இருந்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. அருவந்தை என்னும் புரவலனின் ஊராக அம்பர் விளங்கியமை பற்றி ,
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழி புறம்385
எனப்புறம் பாடுகிறது.
அரசிலம் பொருபுனல் அம்பர் மாநகர் என இவ்வூரை மாநகராகத் தேவாரம் குறிப்பிடுவதால் இடைக்காலத்தே இவ்வூர் பெற்றிருந்த சிறப்பினை அறியலாம்.
குடவாயில்
‘தண் குடவாயில் அன்னோள்.. ‘ அகம்44
‘தேர்வண் சோழர் குடந்தை வாயில்.. ‘ நற்றிணை 44
‘கொற்றச்சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதி....’ அகம் 60
ஆகிய சான்றுகளில் குடவாயில் என்றும், குடந்தை என்றும், குடந்தை வாயில் என்றும் குறிக்கப்படும் இடப்பெயர்கள் யாவும் இன்றைய குடவாசலே என்று இப்பாடல்களுக்கு உரை எழுதிய உவேசா., பின்னத்தூர் நாராயணசாமி, பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் ஆகியோர் குறிக்கின்றனர். குடவாயில் கீரத்தனார், குடவாயில் கீரனக்கன் ஆகிய புலவர்கள் இவ்வூரினராக அறியப் படுகின்றனர்.
பிரபந்தமும் தேவாரமும் குடந்தை என்று குறிப்பது இன்றைய கும்பகோணத்தை என்பது குறிக்கத்தக்கது. சங்க இலக்கியம் குறிக்கும் குடந்தை என்பது குடவாயிலே என்பது ஆய்வாளர் முடிபு. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் குடந்தை எனச் சவெ இலக்கியம் சுட்டுவது இன்றைய கும்பகோணத்தையே என்பர். குடவாயிலில் சோழன் கோச்செங்கணான் சேர மன்னனைச் சிறை வைத்தான் என்ற செய்தியை பக்தி இலக்கியங்கள் சுட்டுகின்றன. சோழநாட்டு நிதியம் குடந்தையில் வைத்து காக்கப்பட்டதை அகநானூறு குறிக்கிறது.
வெண்ணி: கரிகால்பெருவளத்தான் பகையரசர்களோடு பொருது வென்ற வெண்ணிப் பறந்தலை, நீடாமங்கலத்தை அடுத்த கோயில் வெண்ணியே ஆகும். வெண்ணிக் குயத்தியார் என்னும் புலவர் இவ்வூரினர்.
‘காய்சின மொய்ம்பின் பொரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்’ அகம்246
எனவும்,
‘இரு பெரு வேந்தரும் ஒருகளத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ணார் கண்ணி,கரிகால் வளவன்’ பொருநர் 145
எனவும் வெண்ணியைச் சங்க இலக்கியம் குறிக்கிறது.
வெண்ணிப் போரில் ஏற்பட்ட புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் நீத்த சேரலாதனின் பெயரில் அமைந்த ஆதனூர் எனும் ஓர் ஊர் வெண்ணியின் அருகே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வூரை ஆதநல்லூர் என்று பிற்காலச் சோழர் கால செப்பேடு குறிக்கிறது. இவ்வூரைச் சேரலாதன் வடக்கிருந்து உயிர்நீத்த இடமாகக் கருத இடமுண்டு.
கரிகால் வளவ ..நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள்யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்தி
புறப்புண்நாணி வடக்கிருந்தோனே புறம் 66
எனச் சேரலாதனின் புகழைப்பாடும் பாடல் எண்ணத்தக்கது. இவ்வாறு பாடலால் பகையரசனின் புகழைப் போற்றியது போல் இடத்திற்கும் அவனது பெயரிட்டு புகழ்பாடி மகிழ்ந்தனர் போலும்.
தலையாலங்கானம் ஆலங்கானம் என்று மதுரைக் காஞ்சி, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ஊர் குடவாயிலை அடுத்த தேவாரம் பாடப்பெற்ற தலமான தலையாலங்காடு என்று குறிப்பிடுகின்றனர். ஆலங்கானம் சோழநாட்டு ஊராகக் கருதத்தக்கது என தமிழக வரலாற்றுக் குழுவினர் தம் நூலில் குறித்துள்ளனர்.(ப.253,தமிழ்நாட்டு வலராறு- சங்க காலம்) சேரன்,சோழன் மற்றும் வேளிர் ஐவரை பாண்டியன் நெடுஞ்செழியன் இவ்வூரில் வென்றான் என்பது வரலாறு.
ஆலத்தூர்: ஆலத்தூர் கிழார் (6 பாடல்கள்) எனும் புலவரின் பெயரால் அறியப்படும் ஆலத்தூர் எனும் பெயர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக அமைந்துள்ளதன. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மூன்று பாடலிலும் சோழன் நலங்கிள்ளியை ஒரு பாடலிலும் ஆலத்தூர் கிழார் பாடியிருப்பதையொட்டி ஆலத்தூர் கிழார் சோழ நாட்டவர் எனக்கொண்டு அவரது ஊர் சோழ நாட்டு ஆலத்தூர் என்று கருத இடமிருக்கிறது. அவ்வாறே ஆலத்தூர் என்ற பெயரில் சோழ நாட்டில் பல இடப்பெயர்கள் அமைந்துள்ளன. குடவாசல் பகுதியில் அமைந்த ஆலத்தூர் பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளிலும் திரிபின்றி வழங்கப்பட்டிருப்பது கொண்டு நீண்ட காலமாக வழங்கி வரும் இவ்வூரையே சங்க இலக்கியம் குறித்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆலங்குடி: ஆலங்குடி வங்கனார் என்னும் புலவர் பாடிய 7 பாடல்கள் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ளன. ஆலங்குடி எனும் பெயரிலும் தமிழகம் முழுவதும் பல இடப்பெயர்கள் அமைந்துள்ளன. ஆலங்குடி வங்கனார் பாடிய அகத்திணை அமைந்த பாடல்கள் யாவும் மருதத் திணையமைந்த பாடல்களாக இருப்பதால் இப்புலவர் சோழநாட்டவராக இருக்க வாய்ப்புண்டு. வலங்கைமானுக்கு அருகிலும், நன்னிலம் பகுதியிலும் அமைந்த ஆலங்குடி என்ற இடப்பெயர்கள் சங்க இலக்கியம் சுட்டிய இடப்பெயராக இருக்கக் கூடும். வலங்கைமானுக்கு அருகில் அமைந்த ஆலங்குடி தேவாரப் பாடல் பெற்றதும் சோழர் காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலிலும் இடம் பெற்றதுமான பழமைச் சிறப்புடையது என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
ஆவூர்: ஆவூர் என்ற ஊரைச்சார்ந்த ஐந்து புலவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர்.இவர்கள் பாடிய 15 பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. வலங்கைமானை அடுத்த தேவாரம் பாடப்பெற்ற தலமான ஆவூர் சங்க காலப் புலவர்களின் ஊராக இருக்கக் கூடும் .ஆனால் மெய்ப்பிக்கத் தக்க சான்றுகள் எவையுமில்லை.
எருக்காட்டூர்: எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும புலவரின் ஊர். திருவாரூருக்கு அண்மையில் அமைந்துள்ள எருக்காட்டூர் இதுவாகலாம். தாயங்கண்ணனார் பாடிய புறப்பாடல் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியதாகும். இதனடிப்படையில் இவர் சோழ நாட்டவராய் இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு. சங்க கால சமணர் படுக்கைக் கல்வெட்டொன்று எருக்காடூர் என்று ஓர் ஊரினைக் குறிக்கிறது.
ஒக்கூர்: ஒக்கூர் மாசாத்தியார், மாசாத்தனார் ஆகிய புலவர்களின் பெயரைக் கொண்டு அறியப்படும் ஊர். ஒரத்தநாட்டிற்கு அண்மையிலும் நாகப்பட்டினத்திற்கு அன்மையிலும் ஒக்கூர் என்ற இடப்பெயர்கள் அமைந்துள்ளன.
குறுக்கை: குறுக்கைப் பறந்தலை எனுமிடத்தில் அன்னி எனும் மன்னன் திதியனோடு போரிட்டு அவன் காவல் மரத்தை வெட்டி வீழ்த்தினான் என்று சங்க இலக்கியம் பாடுகிறது. மயிலாடுதுறைக்கு அண்மையிலும், திருச்சிக்கு அண்மையிலும் குறுக்கை என்ற இடப்பெயர்கள் வழங்குகின்றன.
‘அன்னிக் குறுக்கைப் பரந்தலை’ அகம் 45,145
என்ற வரிகள் அன்னிக்கு உரிமையுடையதாகக் குறுக்கையைக் குறிப்பிடுகின்றன. மயிலாடுதுறைக் குறுக்கைக்கு அண்மையில் அன்னியூர் என்றும் ஓர் இடப்பெயர் வழங்குவது இணைத்து அறியத்தக்கது. திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள கொருக்கை எனும் இடப்பெயர் காணப்படுகிறது. இது குறுக்கை என்பதன் திரிபாகக் கருதத்தக்கது. (குடம் – கொடம்)
கோவூர்: சோழன் நலங்கிள்ளி, கிள்ளி வளவன், நெடுங்கிள்ளி ஆகிய மன்னார்களைப் பாடியவரான கோவூர் கிழாரின் பெயரால் அறியப்படும் கோவூர் சோழநாட்டு இடப்பெயராய் இருக்கலாம். நாகைக்கு அண்மையில் கோகூர் என்று அறியப்படும் ஊரைச் சங்க காலத்தைச் சார்ந்த கோவூர் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
சிறுகுடி: நன்னிலத்தை அடுத்த செருகுடியே சங்க இலக்கியம் குறிப்பிடும் சிறுகுடி என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.
‘கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி’ புறம்70
என்று பண்ணன் என்பவனுக்கு உரியதாகச் சிறுகுடியைச் சங்க இலங்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பூஞ்சாற்றூர் முடிகொண்டான் ஆற்றின் கரையமைந்த ஊர். பூஞ்சாற்றூர் கௌணியன் விண்ணந்தாயன் எனும் அந்தணன் இவ்வூரைச் சார்ந்தவன். இவனை ஆவூர் மூலங்கிழார் பாடியுள்ளார்.
பொறையாறு
‘நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல்தோள்..’ நற் 131
என்று கல்லாடனாரால் பொறையாற்றுக் கிழான் எனும் புரவலன் பாடப் பெறுகிறான். பொறையாறு, தரங்கம்பாடி கடற் கரையைச் சார்ந்த ஒரு ஊராகும்.
மிழலை எவ்வி எனும் தலைவனுக்கு உரியதாய் மிழலையைச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
‘மாவேள் எவ்வி புனலம்புதவின் மிழலை’ என்பது புறம் 24
நன்னிலத்தை அடுத்த திருவீழிமிழலையே இவ்வூர் என்று கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.எவ்வியை வென்று மிழலைக்கூற்றத்தைநெடுஞ்செழியன் வென்றதாக வலராறு குறிப்பிடுகிறது.
வல்லம்
கடும்பகட்டு யானைச்சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் அகம் 356
என்று அறியப்படும் வல்லம் தஞ்சையை அடுத்த வல்லம் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வூர் கோட்டை மதிலினால் சூழப்பட்டு அரண் செய்யப்பட்டிருந்தது. ஆரியர் படை இவ்வூரைத் தாக்கிய போது வல்லத்து வீரர்கள் அவர்களைத் தாக்கி வெற்றி கண்டனர் என அகநானூறு 336 குறிக்கிறது.
சாய்காடு திருச்சாய்காடு என அழைக்கப்படும் ஊர், பூம்புகாருக்கு அண்மையில் அமைந்து உள்ளது. சாயாவனம் என்றும் அறியப்படும்.
நெடுங்கதிர் தண் சாய்க்கானம்’ அகம் 220
பூக்கெழுப் படப்பைச் சாய்க்காடு’ நற் 73
என்று சங்க இலக்கியங்கள் இவ்வூரைக் குறிக்கின்றன.
வேளுர் நாகையை அடுத்து ஒன்றும் , திருத்துறைப்பூண்டியை அடுத்து ஒன்றுமாக முறையே கீழ்வேளுர், வேளுர் என்று இரு ஊர்கள் சோழநாட்டில் அமைந்துள்ளன.
‘நெல்லின் வேளுர் வாயில்’ அகம் 166
வெண்டாழை வேளூர் கூற்றம் என்பது பிறகாலச் சோழர் காலத்தில் இருந்த ஓர் கூற்றமாகும். இக்கூற்றத்தின் தலைநகராக இருந்தது திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூராகும்.
குராப்பள்ளி: சோழன் கிள்ளி வளவன் துஞ்சிய ஊர். தஞ்சை மாவடத்து திருக்களாச்சேரியே இவ்வூர் என்பர். திருக்குராச்சேரி என்பதன் திரிபு பெற்ற வடிவமாகத் திருக்களாச்சேரியை அவர்கள் கூறுகின்றனர். (செந்தமிழ்ச்செல்வி 40)
ஆர்க்காடு : சங்க காலத்தில் ஆர்க்காடு என ஓர் ஊர் இருந்ததை நற்றிணை 227 குறிப்பிடும். அழிசி என்பவன் இவ்வூரினன் (குறு 258) தஞ்சையை அடுத்திருந்த ஓர் ஊர் இது. ஆர்க்காட்டு கூற்றம் என பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகள் இவ்வூரைக் குறிக்கின்றன.
கழார்: காவரிக்கரையில் அமைந்திருந்த ஒரு ஊராக இவ்வூரைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. (அகம் 6).காவிரியில் நீர்ப்பெருக்கு நாளில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்குக் கரிகாலன் வந்திருந்தான் எனவும் இவ்வூரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.
மேலும் நீடுர், நாலூர், நல்லூர், வயலூர், வெள்ளைக்குடி, வெண்மணி வாயில் என்றெல்லாம் பல ஊர்ப்பெயர்களைச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இதே வடிவத்தில் அமைந்த இடப்பெயர்கள் இக்காலத்தும் சோழ நாட்டில் வழங்குகின்றன. சங்க இலக்கியம் குறிப்பிடும் இடப்பெயர்கள் அவைதாம் என்று மெய்ப்பிக்கத்தக்க சான்றுகள் எவையுமில்லை.
பார்வை நூல்கள்
ஆளவந்தார்.ஆர்., இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை,1984
தமிழ் நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு- சங்க காலம் இரு தொகுதிகள்,தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனம்,சென்னை,1983
ஜான் பீட்டர்.அ., திருவாரூர் மாவட்ட இடப்பெயர்கள், முக்கூடல் பதிப்பகம், சென்னை,2006
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள்
முனைவர் அ. ஜான் பீட்டர்