**********************************************************************************************************************
வள்ளுவர் கலந்து கொண்ட கல்யாணம்
அந்த நபரைப் பலமுறை ஒரு குறிப்பிட்ட நூல் அட்டைகளில் பார்த்த ஞாபகம்.
ஏன், நம்மூர் பேருந்துகளில் கூட அவர் முகத்தைப் பார்த்ததுண்டு..
அவர் ஒருநாள் என் அருகில் அமர்ந்து உணவருந்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
என் நண்பனின் திருமண வரவேற்பு விருந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தான் அவரை முதன்முறை நேரில் சந்தித்தேன்.
அவர் கண்ணோடு கண்ணினைப் பார்த்தேன். சந்தோஷத்தில் அதிர்ந்து போனேன். அவர் வேறு யாருமல்லர். திருவள்ளுவரே தான்.
கண்ணோடு கண்ணினைப் பார்த்தேன் அல்லவா ? வாய்ச்சொற்கள் எந்தப் பலனும் இல்லாமல் போயின.
"நீங்கள் எப்படி இங்கே" என்று என் கண்கள் தான் கேட்டன.அவர் உடனே புரிந்து கொண்டார். குறிப்பறிதல் அதிகாரத்தைப் படைத்தவர் அல்லவா ?
"வேறொண்ணும் இல்ல. உனக்கு ஒரு குறள சொல்லிக் கொடுத்திட்டுப் போலாம்ன்னு தான் வந்தேன். இங்கே இருக்கிற விருந்து ஒருங்கிணைப்பாளர்அதாவது சமையல் மேற்பார்வையாளர் பண்ற வேலை இருக்கே அது ரொம்ப அற்புதம். அவர் என்ன செய்றார்னு போய் பாரு. உனக்கு நான் எழுதினஒரு குறள் நினைவுக்கு வரும். சரி. எனக்கு நேரமாச்சு. நான் வர்றேன். அளவறிந்து சாப்பிடு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
எனக்கு ஏது செய்வதென்று தெரியவில்லை. ஒன்றும் புரியவுமில்லை.
சாப்பிட்டு முடித்த பிறகு தான் மண்டபத்தைப் பார்த்தேன். கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்திருந்ததைக் கவனிக்க முடிந்தது.
இத்தனை பேர் வந்திருக்கிறார்களே ? அனைவருக்கும் விருந்துக்கூடத்தில் இடம் இருக்குமா ? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
உடனே என் நினைவு விருந்து ஒருங்கிணைப்பாளருக்குத் தாவியது.
அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி அவர் செய்து கொண்டிருந்த வேலையைப் பார்த்த போது தான் அவரது நுண்ணறிவு புலப்பட்டது. அவருக்கிருந்தஆழ்ந்த அனுபவமும் வெளிப்பட்டது.
அவர் அப்படி என்ன வேலையைச் செய்து கொண்டிருந்தார் ?
எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்ததால் மண்டபத்தில் இருந்த விருந்துக்கூடத்தில் சாப்பிட வருவோருக்கு இடம் போதாதுஎன்பதை அவர் முன் கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும்.
கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், உணவருந்த வருவோருக்கு இப்போதைக்கு இடமில்லை. சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று உணவகத்தில்சொல்வது போல் சொன்னால் அது நன்றாக இருக்குமா ?
மக்களின் மனதை அது வருத்தி வந்தவர்கள் சாப்பிடாமலேயே திரும்பிச் சென்று விடலாம் அல்லவா ? அது விருந்து ஒருங்கிணைப்பாளரின்நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் அல்லவா? மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு அது இழுக்கல்லவா ?
அந்த அழகிய திருமண மண்டபம் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. மண்டபத்தின் வெளியே மிகப்பெரிய புல்வெளி இருந்தது.
கொஞ்சம் தாமதித்தால் நிலைமை கை மீறிப் போய்விடும் என்பதை உணர்ந்த அந்த விருந்து ஒருங்கிணைப்பாளர் தன் பணியாளர்களை ஏவிகூடுதலாகச் சமைக்கச் சொன்னார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் புல்வெளியில் ஒரு பந்தியையும் போட்டு விட்டார்.
விருந்துக் கூடத்தில் இருந்தவர்கள் போக மற்றவர்களுக்கு அந்தப் புல்வெளிப் பந்தியில் விருந்து பரிமாறினார்.
அனைவரும் வயிறார மனதார உண்டார்கள்.
இதையெல்லாம் வியந்து பார்த்துக்கொண்டிருந்த போது சட்டென்று வள்ளுவர் நினைவிற்கு வந்தார். ஏதோ குறளென்று சொன்னாரே ? என்ன குறள்அது?
விருந்து என்பதால் கண்டிப்பாக விருந்தோம்பல் அதிகாரமாகத் தான் இருக்கும். அதிலே என்ன குறள் ?
ம்ம்ம்ம்....... ஆ... நினைவிற்கு வந்துவிட்டது.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
விருந்து என்றால் உண்மையில் நாம் இதற்கு முன் சந்திக்காத நபர்கள் என்று பொருள்.
நாம் விருந்து மேற்பார்வை செய்யும் திருமணத்தில் விருந்துண்ண இத்தனை பேர் வருவார்கள், வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும், வருவோருக்கு ஏற்ப கூடுதல் உணவு சமைக்க வேண்டும் என்றெல்லாம் எப்போதும் விருந்தினர்களைப் பற்றியே நினைக்க வேண்டும். இதைத் தான்இங்கே வருவிருந்து என்ற சொல் சுட்டுகிறது.
எப்போதும் அவர்கள் நலனையே பேண வேண்டும்.
அப்படிச் செய்கிறவர்களுடைய வாழ்க்கையில் வறுமை வந்து துன்புறுத்தாது.
அந்த விருந்து ஒருங்கிணைப்பாளர் சதா சர்வகாலமும் விருந்தினர்களைப் பற்றியே யோசித்துச் செயலாற்றினார். அதுவே அவர் சிறப்பாகப்பணியாற்றியதற்குக் காரணம். பணியைச் சிறப்பாகச் செய்வதால் அவர் வாழ்க்கை எப்போதும் செழிப்பாகவே இருக்கும். அவரை வறுமை நெருங்காது. பெருமை மட்டுமே நெருங்கும்.
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் தலையாய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. அந்தச் சீரிய பண்பு அந்த விருந்து ஒருங்கிணைப்பாளர் வரைதொடர்வது நெஞ்சில் பெருமிதம் பொங்கச் செய்தது.
இல்லையென்றால் வள்ளுவரே வந்து அவர் சமைத்த உணவை உண்டு ஆசி வழங்கியிருப்பாரா ?!!!