New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி நா. தனராசன்


Guru

Status: Offline
Posts: 24455
Date:
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி நா. தனராசன்
Permalink  
 


 

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி

Valluvam kaattum vazhviyal neri - Tamil Literature Ilakkiyam Papers
 
 
 
திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
பொருண்மைச் சிறப்பு
சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் "தமிழனுக்குரியது" என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு", எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட் சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ் நாகனார் "எல்லாப் பொருளும் இதன் பால் உள" என்று தெளிந்துரைத்துள்ளார். இவை வள்ளுவத்தின் காலமும் எல்லையும் கடந்து நுண்பொருட்ச் சிறப்பை உணர்த்துவன.
வாழ்வியல் பதிவு
வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்வியல் கூறுகளை காட்டும் பதிவுகளாக உள்ளது.இதனை 
சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.
என்னும் அறிஞர் கருத்தினால் அறியலாம். வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தருவன.
மானிடப் பண்பு இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் - வாழ்க்கை, வழி நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது திருக்குறள்
என்னும் முத்தமிழ் அறிஞரின் கருத்தும் வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல் என்பதை உறுதிப்படுத்துகிறது.
முதன்மைப் பயன்
உயிரினத்தின் உச்சியில் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி, அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப் பயனுடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும், ஓட்டமும் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவுபெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கிறது.
பன்முகப்பார்வை
தனி மனிதநிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள், எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற அமைத்து ஒரு முழுமையான வாழ்வியல் கருத்தாக்கத்தை வள்ளுவம் தந்துள்ளது.
தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாய் இருந்து வந்த மரபுத்தளைகளை உடைத்து, மனிதப் பழக்க வழக்கங்களை மாற்றித் தனிமனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார்.
மரபுகளைத் தகர்த்தல்
மது அருந்துதலும் புலால் உண்ணுதலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கம் என்னும் நிலையை மாற்றி மனித மனத்தினை, வாழ்வின் பயனைத் தடம்மாற்றும் தவறுகள் என வள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
எனவும்
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்தது உண்ணும் மன்னே
என்றும் கள்ளுண்டுகளித்தலையும், கள்ளுண்ணல் பெருமித வாழ்வாக இருந்த மரபுகளையும் பின்பற்றக் கூடிய ஒழுக்கமாய்க் காட்டும் வழக்கினை மாற்றி அதனைச் சமுதாயத் தீமையாக உரைத்தவர் வள்ளுவர்.
"உண்ணற்க கள்ளை" என்றும் அது "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதது" எனவும் "நஞ்சுண்பார் கள் உண்பவர்" என்றெல்லாம் மது அருந்துதலின் தீமையை உணர்த்தித் தனிமனித வாழ்வு சிறக்கும் நெறியைக் காட்டியுள்ளார் வள்ளுவர் எனலாம்.
புலால் உண்பது மனித நெறி அல்ல என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. இன்றைய மனிதர்களின் உணவு முறையில் சைவ உணவே சிறந்தது என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலைநாட்டு உணவியல் வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தெய்வப் புலவர் வள்ளுவர் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்துள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை விளக்கமுறச் செய்துள்ளார்.
 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்னும் குறட்பா மனிதன் உயர்வதற்கான வழியைக் காட்டுகிறது. இன்றைய தமிழக அரசு உயிர்க்கொலை, உயிர்ப் பலி கூடாது எனச் சட்டம் கொண்டு வந்துள்ள நிகழ்காலச் சூழலில் வள்ளுவரின் வாழ்வியல் நெறி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதலாம். அன்பு, பண்பு, நட்பு போன்ற வாழ்வியல் இலக்குகளை எளிய முறையில் மனித மனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனி மனித வாழ்க்கையை வள்ளுவர் பண்படுத்தியுள்ளார்.
அறநெறிப்பட்ட வாழ்க்கை
மனித வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து முக்கியத்துவம் மிக்கதாக அமைய வேண்டும். மனித மனங்களை விரிவுபடுத்தி அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது திருக்குறளின் நோக்காகவும் உள்ளது.
மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித வாழ்க்கை நெறி என்கிறார்.
 
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

என்னும் குறட்பா இதனை உணர்த்துகிறது. அறம் என்பது பற்றிய இலக்கிய மரபுசார் கருத்தாக்கத்தை வள்ளுவர் மாற்றியமைக்கிறார்.
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்
என்னும் காப்பியக் கருத்தினை மறு ஆய்வு செய்து அறத்திற்குப் புதிய விளக்கங்களைத் தந்தவர் வள்ளுவர். மனத்தூய்மை, ஈகை, காதல் என்னும் தூயநெறிகளை வாழ்வியல் அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணர்த்தியுள்ளார்.
வாய்மை
திருக்குறள் அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் அடையும் இழிவினையும் திறம்படக் காட்டுகிறது. "வாய்மை" என்பதே தலையாய அறம் என்கிறது வள்ளுவம். பொய்மை கோலோச்சும் இக்கால மனித சமுதாயத்திற்கு வள்ளுவர் கருத்துக்கள் மலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாகக் கொள்ளலாம். அறங்களில் எல்லாம் வாய்மையே சிறப்புடையது என்பதை
 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

என்னும் குறட்பாவால் அறிய முடிகிறது.
மும்மை அறம்
மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் மூன்று அறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.
1. ஆன்மீக அறம்; 2. ஈதல் அறம்; 3. காதல் அறம்
கடவுளை "அறிவு, ஆற்றல், அப்பாற்பட்ட நிலை" என்றும் கருதுகோள் நிலையில் வைத்து மனித ஒருமைக்கும் சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். முதற் குறட்பாவில் "உலகு" என நினைவூட்டி உலகளாவிய நேயத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு, அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தை தந்துள்ளது. இதனை,
வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம், காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு; இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்!
என்னும் அறிஞர் கருத்தும் இதனைத் தெளிவுபடுத்தும்.
ஈதலறம்
மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை. பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்தவனாகிவிடுவான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகைக் குணமே உயிரின் ஊதியம் என்பர்.
 
ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு

கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.
காதலறம்
காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண்-பெண் உறவையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவு நிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி, அன்பெனும் நெறிக்குள், மனங்களின் சங்கமத்திற்குள், மாசுபடாத வாழ்வியல் படிநிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி "மனிதம்" அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவர் தந்துள்ளார்.
பிறன்மனை நயத்தலையும், பரத்தையர் உறவையும், பெருங்குற்றமாகச் சொல்லி அன்புடைய காமத்தைச் சமுதாய அறமாகத் தந்துள்ளார்.
ஆண் - பெண் சமனியம்
ஆண் - பெண் உறவு நிலை, திருமணத்திற்கு முன்னும் பின்னுமாகக் காதல் நிலை ஆகிய செய்திகளைக் குறள் விரிவாகப் பேசுகிறது. ஆண் - பெண் சமத்துவம் வள்ளுவரின் கொள்கையாகக் காணப்படுகிறது.
ஆண் மேலாதிக்க காலத்தில், அதற்கெதிரான, துணிவுடைய சிந்தனைகளை வழங்கியுள்ள வள்ளுவரின் அணுகுமுறை புரட்சிகரமானது. பெண்களின் உரிமைக்காகவும், உலகியல் மாற்றத்திற்காகவும் அவர் பாடுபட்டுள்ளார். பெண் ஆணுக்கு இணையானவள். ஆற்றல் மிக்கவள் என்பதை,
 
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

என்று ஆற்றலும் அறிவும் நிறையும் மிக்க பெண்களை உலகுக்கு உருவாக்கித் தந்தவர் வள்ளுவர் எனலாம். இத்தகைய வள்ளுவரின் வழிகாட்டல்தான் பிற்காலத்தில் பாவலன் பாரதியை "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்று பாட வைத்தது எனலாம.
சமுதாயக் கொடுமைகள்
சாதி, மதத்தின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயக் கொடுமைகள். இதனை மாற்ற வள்ளுவரின் குறட்பாக்கள் முனைந்துள்ளன. பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறையை வள்ளுவம் எதிர்க்கிறது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என ஓங்கி ஒலிக்கிறது.
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்னும் குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராக அடையாளம் காட்டுகிறது.
பகுத்தறிவு நோக்கு
வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் "பகுத்தறிவாளர்" எனக் கூறலாம். எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை.
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்னும் குறட்பாக்கள் இதற்குச் சான்றாகும்.
மானுடத்தின் மலர்ச்சி
வள்ளுவரின் நெம்புகோல் அடிகள் மானுடத்தின் மலர்ச்சி எனலாம். மரபுகளைத் தகர்த்துப் புதுமையை நிலை நிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாக இருக்கிறது.
 
அந்தணர் என்போர் அறவோர்
அன்பின் வழியது உயிர்நிலை

 
மனநலம் மன்னுயிர்க்குக் காக்கம்
அறத்தால் வருவதே இன்பம்

என்றெல்லாம் உயரிய சிந்தனைகளை வழங்கி மனித வாழ்க்கையை மலர்ச்சியடையச் செய்தவர் வள்ளுவர் ஒருவரே எனலாம்.
அடிக்குறிப்புகள்
1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.
2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.
3. ந. முருகேச பாண்டியன், "திருவள்ளுவர் என்ற மனிதர்", வள்ளுவம் இதழ் (வைகாசி - ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே - 2000.
4. மு. கருணாநிதி, "திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்", கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.
5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.
6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.
7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.
8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி - சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11. 
முனைவர் நா. தனராசன்
முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை
ம.இரா. அரசினர் கலைக் கல்லூரி
மன்னார்குடி - 614 001.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard