New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் சி. அழகர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் சி. அழகர்
Permalink  
 


வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும்

Valluvarin penmaiyum ikkala penniya parvaiyum - Tamil Literature Ilakkiyam Papers
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம் பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின் வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள பெண்மைக் குணமான கற்பு, ஒழுக்கம், கணவன் மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப் பெண்ணியப் பார்வையில் இங்குக் காணலாம்.
கற்புத்தன்மை
 
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் - - - (குறள் 54)

இல்வாழ்வில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் அம் மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.
 
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - - - (குறள் 56)

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது. புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் தோன்றிய பின் சொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்கப் பெண்களைக் கற்பு என்னும் கோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர். இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் தோற்றம் பெறுகிறது. அக் கற்புக் கோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களில் கூறியிருப்பதால், அதை ஓர் ஆணாதிக்கச் சமூகக் கருத்தியலாகவே காண முடிகிறது. அக் கற்புக் கோட்பாடு இன்று மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. "கற்பு என்ற கருத்தாக்கம் தேவையான ஒன்று என்பதை 95.5% மக்கள் கற்பு என்பது தேவையில்லாத சமுதாயக் கட்டுப்பாடு என்றும் அது மாயை என்றும், வெற்றுப் பந்தம் என்றும் கணித்துள்ளனர்." திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஓர் ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கணவன் - மனைவி உறவு
பண்டைக் காலச் சமூகத்தில் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்ததால் அவர்களே சமூகத்தில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதே நிலை என்பதால் பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை வள்ளுவர் தன் படைப்பில் பதிவு செய்துள்ளார்.
 
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு - - - (குறள் 58)

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் பணி செய்யும் ஓர் அடிமைப் பெண்ணாக வற்புறுத்தப்படுவதைக் காண முடிகிறது.
 
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - - - (குறள் 55)

கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம். தெய்வத்தை விடக் கணவன் அதீத சக்தி படைத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். இது ஆண்களின் சமூக மேன்மையைக் காட்டுகிறது. பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்வதைத் தவிர சமூகத்தில் பிற பணிகளில் பங்கெடுத்ததாகக் காட்டப்படவில்லை.
இல்லமும் பெண்ணும்
தந்தை வழிச் சமூகத் தோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு "இல்லாள்", "மனையாள்", "வீட்டுக்காரி" என்ற இடம் கொடுத்து அவர்களை இல்லத்தில் அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதிக்கப்பட்டுள்ளது.
 
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் - - - (குறள் 52)

இல்லறத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக இருந்தாலும் பயனில்லை.
 
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை - - - (குறள் 53)

மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும். "நற்குணம் பொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை சூன்யமாகிவிடும். இந்தப் பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வரையறுத்துள்ளனர்". ஆண்களிடம் பண்பாட்டை எதிர்நோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால் பெண்களிடம் பண்பாட்டையும் மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக் கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் கொள்கின்றனர்.
பெண்ணை இழிவுபடுத்தல்
பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்றும், அவர்களின் பேச்சையோ கருத்தையோ கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். அக்கருத்து குறளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது - - - (குறள் 901)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே எனக் கூறப்பட்டுள்ளது.
தையல் சொல் கேளேல் - - - (ஆத்திசூடி 62)
எதார்த்தத்திலும், இலக்கியங்களிலும் பெண்களுக்குக் கருத்துரிமை கொடுக்காமல் இல்லப் பொம்மையாகவே வைத்துள்ளனர். சமூகத்தில் பெண்களுக்கு எந்தவகையான மேன்மையும் கொடுக்காமல் அடித்தட்டு நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
"வள்ளுவப் பேராசானுக்கு அவன் காலத்து நிலப் பிரபுத்துவக் கருத்தான பெண், ஆண் ஏற்றத் தாழ்வுக் கருத்தைத் தாண்ட முடியவில்லை. அதற்கு முதல்தரமான எடுத்துக்காட்டு பெண் வழிச் சேரல் அதிகாரம்" எனப் ப. ஜீவானந்தம் கூறியுள்ளார். "வள்ளுவர் காலத்தில் அரசு தோன்றிவிட்டது. நிலவுடைமை அமைப்பு நிலைத்து விட்டது. வள்ளுவர் அரசுக்கும் நிலவுடைமை அமைப்புக்கும் சேவை செய்பவராகவே விளங்கினார். நிலவுடைமை அமைப்பை உடைக்க அவர் விரும்பவில்லை. அதை நிலைநாடட அரசனுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் அறிவுரை கூறினார். அதை உடைக்க விடாது காப்பதற்கு அறம் வகுத்தார். இவற்றால் நிலவுடைமைச் சமுதாயத்தைப் பேணுவதற்குத் திருக்குறள் இலக்கண நூலாக விளங்குகிறது. நிலவுடைமையை விரும்பியதால் ஆணாதிக்கக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளது. பெண்ணை இல்லாள் என்று கூறுகின்றனர். ஆனால் இல்லத்தின் நலனுக்கான ஆலோசனை கூறியதாகக் காட்டப்படவில்லை.
நிலவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் அச்சமூகத்தில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கற்புக்கோட்டைப் பதிவு செய்துள்ளார். நிலவுடைமை வர்க்கத்தினர் அக்கோடபாட்டைச் சுயநலத்திற்காகத் தோற்றுவித்துள்ளனர் என ஆராயப்பட்டுள்ளது. குடும்பத்தில் உழைப்பை ஆண்களுக்குக் கொடுத்து மனைவியைக் கணவனைச் சார்ந்து வாழவைத்து, கணவனையே கடவுளாகவும் வணங்க வைத்துள்ளனர். இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மரபுகளை வலியுறுத்தி, ஆண்களுக்கு அம் மரபுகள் வலியுறுத்தப் படாமல் உள்ளதைக் குறள்வழிக் காண முடிகிறது. இல்லாள் எனக் கூறப்பட்ட பெண் இல்ல வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் கூறியதாகக் காட்டப்படவில்லை. திருவள்ளுவர் காட்டும் பெண்மை மரபைப் பின்பற்றும் பெண்மையாகவே அமைந்துள்ளது. பெண்ணியப் பார்வையில் இதனை ஆணாதிக்கச் சிந்தனையாகவே அறியமுடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. முனைவர் பிரேமா - "கற்புக் கலாச்சாரம்," ப. 104.
2. இராயகரன் - "ஆணாதிக்கமும் பெண்ணியமும்," ப. 205.
3. முனைவர் சு. துரை "மார்க்சிய நோக்கு," ப. 84.
திரு. சி.அழகர்,
அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி
சிவகாசி.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard