New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு பி.டி. கிங்ஸ்டன்


Guru

Status: Offline
Posts: 24455
Date:
சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு பி.டி. கிங்ஸ்டன்
Permalink  
 


சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு

Samuthayathil Valluvar suttum anbu - Tamil Literature Ilakkiyam Papers
தனி மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சமுதாயம். சமூக அமைப்பாக்கத்திற்கேற்ப ஒரே செயலெதிர்ச் செயல்களை மேற்கொள்ளும் பெரும் எண்ணிக்கையில் அடங்கிய தனி நபர்களைக் கொண்டது அது. சமுதாயம் என்பது பொதுவான உடற்கூறியல்புகளையும், பொதுவான விருப்பார்வங்களையும், பொதுவான வாழ்க்கை நோக்கங்களையும், பொதுவான விதிகளையும் கொண்டுள்ளது. உறுப்பினர்களை ஒன்றிணைக்கும், சிறியதும், பெரியதும், நிரந்தரமானதும் ஆகிய அமைப்பே சமுதாயம் என்பது சமூகவியலாளர்கள் கருத்து.

தமிழ்ச் சான்றோர் அன்றைய சமுதாயத்தின் இயற்பிற்கும் மரபிற்கும் ஏற்ப மக்கள் வாழ்க்கை முறைகளைப் பாகுபாடு செய்துள்ளனர். தொல்காப்பியர்,
 
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகலான

என்று கூறுகிறார். இதற்குப் பேராசிரியர் "வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கமே; என்னை, உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின், அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்ற தென்றவாறு" என்று கூறுகின்றார்.
அன்பு
காலத்தின் பொருளையும் பிறருக்குத் தேவைப்படும் போது கொடுக்கும் தன்மையே அன்பின் அடிப்படை. இது அகத்தே உணரும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. வார்த்தைகளால் வருணிக்க முடியாதது; உருவம் இல்லாத உணர்வு; இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் வாழ்வாங்கு வாழ்ந்து உடலும் உயிரும் செம்மையடைந்து சிறப்படைவது.
அன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை. அன்பு தான் ஒருவரையொருவர் விரும்புகின்ற ஆசையை உண்டாக்குவது. அந்த ஆசையினால் தான் நட்பு என்கின்ற உறவு தானாகவே உண்டாகிறது. அதனால்தான் சமுதாயம் அமைகிறது என்று, அன்பு எனும்..... (அன்புடைமை, 74) குறள் கூறும். அன்போடு இயைந்த...... (அன்புடைமை. 73) அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்கும்.
அரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அன்போடு கூடிய வாழ்க்கைதான் அதன் எலும்போடு பிறந்த குணம் என்று கூறுகிறார் வள்ளுவர்.
அன்புதான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது.
நெஞ்சகத்தில் அன்பில்லாதவர்களுடைய வாழ்க்கை, நீர்ப்பசை இல்லாத கெட்டியான நிலத்தில் முளைத்துவிட்ட மரம் உயிரோடிருந்தாலும் வற்றிப்போய்ச் செழிப்பில்லாமல் இருப்பதுபோல், அன்பு அகத்து இல்லா..... (அன்புடைமை, 78) வாழ்க்கை நடந்தாலும் இன்பம் இருக்காது.
அன்பும் அருளும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுபவையே. தொடர்புடையோரிடத்து நிகழும் அன்பு தொடர்பிலார் மாட்டும் அருளைத் தோற்றுவிக்கிறது. தொடர்பில்லாரிடத்து ஏற்படும் அருள் பின் அவருடன் நெருங்கிப் பழக அன்பாக நட்பாக மாறுகிறது.
 
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு

எனக் குறிப்பிடுகிறார்.
சான்றாண்மைக்குரிய குணங்களில் அன்பு முதலிடம் வகிக்கிறது.
 
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண் - - - (குறள் 983)

என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
இல்லற வாழ்க்கையில் அடிப்படை அன்பு
இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் மிக அன்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வள்ளுவர், எதைச் செய்தாலும் அன்போடும் தரும நியாயம், தவறாமலும் செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை. அதனால் தமக்கும் உலகத்துக்கும் நல்ல பயனுண்டாகும் என்பதை, அன்பும் அறனும்..... (குறள் 45) என்கிறார்.
இனிமை, நீர்மை எனும் இரண்டு பண்புகளும், அன்பின் வழித் தோன்றுவதாகும். அன்புள்ளம் கொண்டவர் யாவரிடமும் இனிமையாக நடப்பர்; இன்சொல் பேசுவர்; இனிமையாகக் காட்சியளிப்பர். அன்பு கொண்டவரிடம் சினம் தோன்றுவதில்லை; அன்பினால் உயர்வு தாழ்வு நீங்கி ஒற்றுமை வளரும். அனைவரும் ஒற்றுமையாக வாழும் பக்குவத்தை இன்றைய சமுதாயம் பெற்றுவிட்டால் வன்முறைகள் நிகழா.
அன்பில்லாதவன் துணையில்லாதவனாகவும் தானே வெல்லக்கூடிய திறமையற்றவனாகவும் மாறிவிடுவதால் பலமுள்ள பகைவனை எதிர்க்க இயலாது என்று குறிப்பிடுகிறார்.
 
அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்புரியும் ஏதிலான் துப்பு

அன்பும் - தோழமையும்
முகமும் முகமும் மகிழ்ந்து வருவது மட்டும் நட்பாகிவிடாது. நெஞ்சமாகிய அகமும் அகமும் ஒத்து மகிழும்படி பொருந்துகின்ற உறவுதான் நட்பு என்று கூறுகிறார். நட்பு நெஞ்சாகிய அகம் ஒத்துப் போக வேண்டுமென்றால் அன்பு இருத்தல் வேண்டும்.
நண்பன் மனங்கோணாமல் தேவையான போதெல்லாம் உதவி புரிந்து தாங்கி நிற்கும் தன்மைதான் நல் நட்பின் அடையாளம். ஒருவர் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் மட்டுமே நம்மால் நண்பனை அனுசரித்துப் போக முடியும்.
பழைய நண்பர்கள் குற்றம் செய்துவிட்டாலும் அவர்களிடத்தில் எப்போதும் போலவே அன்புவிடாமல் நடந்து கொள்பவர்கள் பகைவர்களாலும் பாராட்டப்படுவார்கள்.
அன்பு பிறர்மாட்டு விருப்பமுடைமை. அது நேயத்தைத் தருகிறது. அதுவே ஆர்வம் எனப்படுகிறது. நம் நெஞ்சு கருதிய பொருள்மேல் தோன்றுகிற பற்றுள்ளமே ஆர்வம். அந்த ஆர்வம், நட்பைத் தருகிறது. அஃதாவது தோழமையைத் தருகிறது. "நண்பு" என்ற சொல் 74,998 ஆகிய இரு குறட்பாக்களில் "தோழமை" என்ற பொருளிலேயே பயிலப்பட்டுள்ளது. அத்தோழமை சிறந்த மானுடச் சிறப்பு (Human Values) வாய்ந்தது. இதை "அன்பு ஈனும்" (74) என்ற குறளில் கூறுகிறார்.
அன்பு நேரிடையாகத் தோழமையைத் தருவதில்லை. மற்றவரிடம் ஆர்வத்தைத் தந்து அதன் வழியாகத் தோழமையைப் பெறச்செய்கிறது.
அறமும் அன்பும்
அறம் என்கிற அமைப்பு முறைக்கும், அன்பு சார்புடையது, அடிப்படையானது. அறத்தின் மற்றொரு கூறான வீர வாழ்க்கைக்கும் அன்பே துணையாக நிற்கிறது.
 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 

மறத்திற்கும் அஃதே துணை - - - (குறள் 78)

அறத்திற்கும் சார்புடையது அன்பு என்பதால், அன்பற்றதற்கு மாறுபட்டது அறம் என்பது பெறப்படுகிறது. அன்பற்ற மனித வாழ்க்கை மனவளர்ச்சியற்று இயக்கமின்றி முன்னேற்றமிழந்து - சிறப்பற்றுப்போகும். எனவே அன்பற்ற நிலையை அறம் என்கிற "அமைப்பு முறை" தனது பல்திறன் கொண்ட பகுதிகளில் மூலமாக அமைந்திருத்தலாகும் (குறள் 77).
அன்புடையார் அடையும் பயன்
"அருளென்னும் அன்பீன் குழவி" (குறள் 757) எனக் கூறி அன்பினின்றும் அருள் தோன்றுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
 
அன்புற்றும் அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு - - - (குறள் 75)

உலகத்தை இன்பமாக "அனுபவித்துப் புகழ் பெற்றவர்களுடைய சிறப்பெலாம் அவர்கள் அன்பைக் கடைப்பிடித்து நடந்து கொண்டதினால் தான் என்று கூறுகிறார்.
அன்புதான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது. அன்பிருக்கிற உடல்தான் உயிருள்ள உடல். அன்பில்லாத உடல் வெறுந்தோலால் மூடப்பட்ட எலும்புகள் தான் என்பதைக் குறளில்,
 
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு - - - (குறள் 80)

என்கிறார். அன்புடையவர்கள் தான் தூதுவர்களாகச் செல்ல முடியும்.
தூது சென்று பேசக் கூடியவனுடைய தகுதிகள் எவையென்றால், தூது அனுப்புகிறவர்களிடத்தில் அன்புடையவர்களாக இருப்பதுதான்.
காதல்
 
உடம்பொடு உயிரிடை என்ன மற்றுஅன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு - - - (குறள் 1122)

காதலன் தன் காதலியின் மீது உயிருக்குச் சமமாக அன்பு வைத்திருக்கிறான்.
"நீ போதாய் யாம் வீழும்" (1123) என்ற குறளில், நீ சென்றால் என் உயிர் பிரியும் எனக் காதலியின் மீது அன்பு மிகுந்திருத்தல் காண்கிறோம்.
காதலி, காதலனை நினைத்துக் கொண்டிருக்கிறாள். காதலி கண்ணில் காதலன் உள்ளேயும் போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையிலேயே இருந்து கொண்டிருக்கிறான் என்றால் காதலன் மீதான அன்பையே வெளிக்காட்டுகிறது.
கண்களை மூடினால் என் காதலர் மறைந்து விடுவார் என்றும் காதலி சூடான உணவுகளை உண்ண அஞ்சுவதும் காதலர் மீதான அன்பை வெளிப்படுத்தும்.
காதலிக்கிற மனைவிக்குக் காதலிக்கப்படுகிற கணவன், செய்கிற அன்பு, உயிர்வாழ இன்றியமையாத மழைக்காக வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிற மனிதருக்கு மழை பெய்வதைப் போன்றது.
 
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி - - - (குறள் 1192)

பரிமேலழகர் கூறுவதைப் போல "அன்பு" தொடர்புடையார்கண் காதல் உடைமை அன்று. தன்னைச் சார்ந்தோர் மாட்டும், தொடர்பற்றவர் இடத்தும் ஊடுருவிப் பாய்கின்ற நமது மனத்தின் திறனே அன்பு. சுருங்கக் கூறின் "நான்" என்ற சுயநல வட்டத்தைக் கடந்து மற்றவர் நலன் நாடுகிற பொதுநலப் பாங்கிற்கு வழி வகுக்கும் வலிவு மிகுந்த மனத்தின் ஆற்றல் தான் குறள் கூறும் அன்பு ஆகும்.
மனத்தால், எண்ணிச் செயலால் நிகழ்த்துவது அறம்; அறத்தின் மனத்தளவான பகுதியே அன்பு; அறத்தின் செயலாக்க உறுப்பே அன்பு; இந்த மறுமலர்ச்சி பெற்ற அன்பின் இலக்கணத்தைத் திருவள்ளுவர்தான் முதன் முதலாகத் தருகிறார். யாக்கை அகத்து உறுப்பு அன்பில வர்க்கு. (79) என்பது அக்குறள்.
மக்கள் வாழ்க்கையின் உயர்நிலை அன்பின் வழியதாகும் (குறள் 80). இயைபு பெற்ற கூட்டிணைவு வாழ்க்கையை அமைப்பதற்கு மனித மனத்தின் செயல் திறனுடைய உறுப்பாகத் திகழ்வது அன்பு. உடலோடு உயிர் இயைந்திருப்பதைப் போலவே மக்கட் சமுதாயத்துடன் இயைந்திருப்பது அன்பாகும் (குறள் 73). அன்பு என்பது, தமக்குரியது என்று எதனையும் கருதாமையாகும். தன் உடைமை, செயல், பயன், உடம்பு, எலும்பும் கூடப்பிறர்க்குரியது எனக் கருதுகிற உள்ளத்திறன் அன்பு (குறள் 72). அன்பு இன்றி மக்களது கூட்டுச் சமுதாய வாழ்க்கை இல்லை.
அன்பற்ற வாழ்க்கை, பாலை நிலத்தின்கண் காய்ந்து நிற்கும் மரம் தளிர்த்ததைப் போல் ஆகும்; யாருக்கும் அன்பற்ற வாழ்க்கையால் பயனில்லை (குறள் 89).
துணை நூல்கள்
1. டாக்டர் தி. முருகரத்தினம், திருக்குறள் காட்டும் சமுதாயம், திருக்குறள் ஆய்வக வெளியீடு-5, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை, 1975.
2. திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம்.
 
திரு. பி.டி. கிங்ஸ்டன்
அறை எண் 93, ஆண்கள் விடுதி
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 046.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard