New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் கூறும் பொருளாதாரம் செ. ஹேமலதா


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திருவள்ளுவர் கூறும் பொருளாதாரம் செ. ஹேமலதா
Permalink  
 


திருவள்ளுவர் கூறும் பொருளாதாரம்

Thiruvalluvar Koorum Porulatharam - Tamil Literature Ilakkiyam Papers
மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று பொருள் ஈட்டுதல். பொருளில்லாமல் எந்த நன்மையையும் அடைதல் முடியாது. புறவாழ்க்கைக்கு அது இன்றியமையாதது. மற்றும் தீய வழிகளில் பொருள் ஈட்டாமல் அதை முறையாகத் திறனறிந்து பொருள் ஈட்டுதலே அறத்தையும் இன்பத்தையும் தரவல்லது என்று வற்புறுத்துகிறார் வள்ளுவர்.
 
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்

என்று கூறுகின்றார். மேலும்,
 
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

அருள் இல்லாதவர்க்கு மேலுலகில் மட்டும் தான் இடம் இல்லை. ஆனால், பொருள் இல்லாதவர்க்கு தான் வாழ்கின்ற உலகில் இடம் இல்லை என்று பொருட் செல்வத்தின் பயனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பொருளியல் (Economics)
கிரேக்கச் சொல் "Eco" என்ற அடிச்சொல்லிலிருந்தே "Economics" என்ற சொல் வந்தது. இச்சொல்லுக்குக் குடும்ப நிர்வாகம் என்று பொருள். கிரேக்கச் சொல்லும் திருவள்ளுவர் பொருள் பற்றிக் குறிப்பிடும் சொல்லும் ஒன்றாகவே காணப்படுகிறது.
தலைவியின் பொருளாட்சியில் தான் இல்லறமே சிறந்து விளங்கும். இதனை நம்நாட்டில் வழங்கும் "நாட்டுக்கு அரசன்", "வீட்டுக்கு மனைவி" என்ற பழமொழி இதனை விளக்கும்.
வாழ்க்கை நெறி
திருவள்ளுவர் தம் முப்பாலிலும் தாம் பாடுதற்குரிய பொருளாக மனிதனையே எடுத்துக் கொண்டார். திருவள்ளுவர்க்கு மனிதனே, வானவரைவிடச் சிறந்தவனாகத் தோன்றுகின்றான். மண்ணுலகில் தோன்றிய மனிதன் சிறப்பாக வாழ்ந்து, விண்ணுலகச் சிறப்பினை இந்த மண்ணுலகிலேயே அடைய வேண்டும். அதற்கு என்ன வழி என்று ஆய்ந்து அதனை முப்பாலிலும் வகுத்துக் கூறுகிறார்.
மனிதன் உய்யும் நெறி பற்றிப் பண்டைக் காலந் தொட்டே எண்ணி வந்தனர். தொல்காப்பியனார் அதனை அகம், புறம் என்ற இரண்டு இலக்கிய நெறிகளாக வகுத்துக் காட்டினார். பின் வந்த நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் "அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே" என்றார்.
திருவள்ளுவர் முப்பாலாகப் பகுத்துக்கூறிய வாழ்க்கை நெறியைக் கீழ்க்காணும் பகுப்பு முறையோடு கூறலாம்.
1. தனி மனிதன், மணந்து கொள்ளாது வாழும் தனி வாழ்க்கை
2. தன் மனைவியுடன் நடத்தும் காதல் வாழ்க்கை
3. கணவனும் மனைவியும் சேர்ந்து சமுதாயத்தில் வாழும் சமுதாய வாழ்க்கை
மனிதனாகப் பிறந்தவன் மனப்பக்குவம் அடைந்து பிறர்க்கெனவே தன்னை அர்ப்பணம் செய்து கொண்டு தெய்வ நிலையடைகின்றான். இது மனம் வளரும் நிலை. சமுதாயத்தில், சமுதாயப் பங்கு கொள்ளத் தம்மை மறக்கும் நிலை உருவாகின்றது.
மனிதன் மனத்துக்கண் மாசு இலாது வாழக் கற்றுக் கொள்கிறான். காதலிக்கிறான்; இருவர் ஆயினர். பலர் பொருட்டு வாழ்ந்து படிப்படியாக உலகுக்கே வாழத் தொடங்குகின்றனர். தமக்கு என ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், எம்முடையது என்று எந்தப் பொருள் மீதும் உரிமை பாராட்டாமல் பற்றற்ற நிலையில் பிறர்க்கெனச் சமுதாய நலன் கருதி வாழக்கற்றுக் கொள்கின்றனர். ஆசையிலிருந்து விடுதலை அடைவதால் இந்த நிலையை வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதை,
 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - - - (குறள் 50)

என்பதால் மனிதன் தெய்வ நிலையினைப் பெறலாம் என்று கூறுகின்றார். இதற்கு அடிப்படையாய் இருப்பது அவன் பொருளை ஆளும் திறனேயாகும். பொருளாட்சியால் ஒருவன் தெய்வத்துள் வைக்கப்படும் நிலையை அடைகிறான்.
திருவள்ளுவர் மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது, அவளுடைய மாண்புக்குப் பல காரணங்கள் அமைகின்றன. அவற்றுள் ஒன்று கணவனுடைய வருவாய்க்கேற்பச் செலவு செய்வது இதனை வளத்தக்காள் என்று குறிப்பிடுகின்றார். வளத்தக்காள் என்பதை வீட்டை நிருவாகம் செய்வது எனலாம். கணவனுடைய வருவாய்க்கு ஏற்பக் குடும்பத்தை நடத்துகின்றவளே உண்மையான பொருளியல் நுட்பம் அறிந்தவள் என்பது பொருள்.
ஈட்டலும் பகிர்தலும்
பொருளைப் பொருளுக்காகவே மட்டும் பெறுதல் கூடாது. அதனை அறவழியிலும் ஈட்ட வேண்டும். அதற்காகத் திருவள்ளுவர் பழியஞ்சிப் பொருளைத் தேடு என்று கூறுகிறார். முயற்சி செய்து பொருளை அறவழியில் தேடு. தேடிய பொருளைப் பகிர்ந்து கொடு. பிறரும் பெற்று நுகரட்டும். இதுதான், நூலோர் கூறும் சிறந்த நெறி என்கிறார்.
 
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு - - - (குறள் 212)

உழைத்துப் பணத்தைத் தேடித் தேடிய பொருளைத் தக்கார்க்கு அளிக்க வேண்டும். தக்கார்க்கு உபகாரம் செய்வதற்கே பணம் திரட்டப்படுவதாகப் பகிர்ந்து கொடுத்தலை வலியுறுத்துகிறார்.
 
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் - - - (குறள் 44)

அறவழியில் பழிபாவத்திற்கு அஞ்சிப் பணம் சேர்த்து அதனைப் பலர்க்கும் பகிர்ந்து அளித்து வாழ்ந்து வந்தால் ஒருவனுடைய சந்ததி வாழையடி வாழையாகத் தொடர்ந்து வரும். தனக்கு இன்பமும், தன்னைச் சார்ந்தார்க்கும் குடும்பத்தார்க்கும் சமூகத்தார்க்கும் நலமும் பயக்கும்.
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - - - (குறள் 322)

திருவள்ளுவர் பொருள் பற்றிய தம் அரிய கருத்தினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். தேடிய பொருளைப் பகிர்ந்துண்டு (Distribution), பல உயிர்களையும் காப்பாற்றி வாழும் நெறியே சிறந்த நெறியாகும்.
திருவள்ளுவர் பொருட்பாலிலும் பொருளுக்கு ஏற்றம் தருவதோடு அது வரும் வழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனைச்-
 
சிறப்பீனும் செல்வமும்ஈனும் அறத்தி னூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - - - (குறள் 31)

என்கிறார். அதாவது அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும். எனவே அவ்வறத்தைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை எனக் கூறியுள்ளார்.
துணை நூல்கள்
1. ச. மெய்யப்பன் - திருக்குறள் தெளிவுரை - அருளுடைமை (கு. 237).
2. மேலது, இல்வாழ்க்கை (கு. 50)
3. மேலது, ஒப்புரவறிதல் (கு. 212)
4. மேலது, இல்வாழ்க்கை (கு. 44)
5. மேலது, அருளுடைமை (கு. 31)
 
திருமதி. செ.ஹேமலதா
தமிழியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்
சிதம்பரம் 608 002.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard