New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம் அ. அறிவுநம்பி


Guru

Status: Offline
Posts: 23904
Date:
இன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம் அ. அறிவுநம்பி
Permalink  
 


இன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம்

Indraiya thevai: Araviyal nokkilana valluvam - Tamil Literature Ilakkiyam Papers
திருக்குறளைப் பலரும் பல்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து வருகின்றனர். அதனை அறநூல் என்பார் பலர். சிலர் அரசியல் நூல் என்றும் வேறு சிலர் பொருள் நூல் என்றும் ஒருசாரர் காமத்துப்பாலை முன்வைத்து காதலிலக்கிய நூல் என்றும் பலபடப் பகருவர். எவ்வாறாயினும் திருக்குறள் காலங்கடந்த பெற்றிமையை உடையது என்பது உண்மை. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் தனித்தன்மையைக் குறள் மட்டுமே கொண்டுள்ளது. இன்றைக்கும் திருக்குறள் தேவைப்படுகிறது. அருங்குறளின் ஏனைய கூறுகளைவிட அறவியல் நெறிகளே நடப்பியலுக்கு இன்றியமையாதன. அறவியல் நெறிகளைத் தான் வள்ளுவம் அடிநாதமாகவும் அடித்தளமாகவும் கொண்டுள்ளது. "அறம் பாடிற்றே ஆயிழை கணவ" என்றச் சங்கச் சொல்லாடல் குறளையே கருதிற்று என்பாரும் உளர். உயர்ந்த நீதி இலக்கியமாகக் கருதத்தக்க வள்ளுவத்தை அறவியல் நோக்கில் உணர்வது காலத்தின் தேவையாகும். அதனையே இக்கட்டுரை முன்வைக்கிறது.
வள்ளுவ அறம்
வள்ளுவத்தின் பிழிவு அறச்சாறுமட்டுமே. வசதி கருதி அல்லது காலமரபு கருதி மூன்று பால்களாகத் திருக்குறள் வடிவமைக்கப்பெற்றிருக்க வேண்டும். அடிமுதல் நுனிவரை "அறம்" மட்டுமே மணக்கும் நூல்தான் குறள். "அறம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை காலத்துக்கேற்ப மாறுபடும் இயல்புடையது. சத்திரம் கட்டுதல் ஒரு காலத்தில் அறமாகக் கருதப்பட்டிருக்கலாம். போக்குவரத்து வசதி என்பதே இல்லாத அப்பழங்காலத்தில் சத்திரம் கட்டுதல் என்பது அறம்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் காலம் மாறிவிட்டது. காலையில் கங்கையில் மூழ்கிவிட்டு மாலையில் இராமேச்சுரத்தில் புனலாடக்கூடிய வேகத்தில் பயணம் நடைபெறும் இக்காலத்தில் சத்திரம் கட்டிவைப்பது அறமன்று என்று கூறினால் தவறு ஒன்றுமில்லை. இதுபோன்றே பல அறங்கள் காலாந்தரத்தில் மாறுபடும் இயல்புடையன.
இரண்டாம் வகை எக்காலத்தும் யாவர்க்கும் பொதுவான அறங்கள், அவை என்றும் மாறுபடுவதில்லை. இவற்றை அடிப்படையான அறங்கள் என்று கூறலாம். கவிஞன் மாறாத இந்த அடிப்படை அறங்களிலேயே தன் கருத்தைச் செலுத்துகிறான். அதனால்தான் அந்த நூல் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட அவைதம் மதிப்பில் குறையாமல் சமுதாயத்தில் உலவி வருகின்றன." என்பர். பரத்தமை, புலாலுண்ணல், கள் அருந்துதல் ஆகியவை பிழையாகக் கருதப்பெறாத சங்கமரபினைத் திருவள்ளுவர் மறுதலித்து அவற்றை நீக்குதலே அறமென்கிறார். குறளின் அறக்கருத்துகளை எவரும் மறுதலித்ததில்லை. இவ்வகையில், அடிப்படை அறங்களையே வள்ளுவம் பேசுகிறது என்பது வெள்ளிடைமலை.
முப்பாலின் மூன்றாம்பால் இல்லறத்தைக் குறிப்பது என்பர். களவு, கற்பு என்ற தமிழரின் அகவாழ்க்கைக் கூறுகளையும் இன்னபிற தமிழ்மரபுகளையும் கொண்டதே காமத்துப்பால் என்பது பொதுவான செய்தி. அறநோக்கில் வள்ளுவத்தைக் காணின் வேறு சில செய்திகளும் வெளிச்சம் பெறும். அறத்துப்பால் எனப்பெறும் முதலாம் பாலில் இல்லறத்தார்க்கும், துறவறத்தாருக்குமான அறங்களை வள்ளுவம் பேசிவிட்ட பிறகு காமத்துப்பால் எனத் தனிப்பகுதி தேவையா என்ற வினாவையும் எழுப்பிக் கொண்டு காணுவோம். அறத்துப்பாலில் மங்கலம் ஆகிய மனைமாட்சியைச் சொன்ன வள்ளுவர் நன்கலமாய் மக்கட் பேற்றையும் குறிப்பார். இல்வாழ்க்கை, மக்கட்பேறு, வாழ்க்கைத் துணைநலம், விருந்தோம்பல் போன்ற கூறுகளைத் தவிர்த்து இல்வாழ்க்கைக்கான இணையை மட்டும் முன்வைக்கிறது. இல்லறம் என்பது வேறு; அறவழி இல்லம் என்பது வேறு என்னும் சிந்தனையின் வெளிப்பாடே காமத்துப்பால் சிலம்பில் இல்லறத்தார் கடமைகளாகத் துறவோர்க்கு எதிர்தல், அந்தணர் ஓம்பல், அறவேரைப் போற்றல், விருந்து பேணல் என்பன பேசப் பெறும். இவை இல்லறத்தின் ஒருபகுதிச் செயல்பாடுகள். இல்லறம் அறவழியில் உருவாகுமாற்றை விளக்குவதே மூன்றாம் பால். அதனால்தான் பெற்றோர், கண்டோர், குழந்தைகள், விருந்தினர், துறவோர், அறவோர் யாரும் இடம்பெறவில்லை. நிகழ்வுகள் யாவும் ஆடவன் ஒருவனுக்கும் நங்கை ஒருத்திக்குமான கூறுகளே. சங்க இலக்கிய மரபில் பாலை எனப்பெறும் பிரிவை எழிலுறப் பேசுவார் திருவள்ளுவர். ஆனால் சங்கமரபில் பரத்ததையோடு வேரோடு நீக்கிப் பாடுவார். அஃதே அறவியல் நோக்கிலான இல்லற அமைப்பாகும். தமிழ் இலக்கியங்கள் எதும் சுட்டாத "பரத்த" என்ற சொல்லை ஊடற்கருவியாக்குவார் முப்பால் நூலார். ஆனால் மறந்தும் பரத்தையைக் கூறவேயில்லை. இந்த முப்பாலின் மூன்றாம்பாலில், காட்சி, ஐயம், தெளிதல் போன்ற தமிழ் அகமரபுகளை விடாமலும், பிரிவு, ஆற்றாமை, ஊடல், கூடல் போன்ற கூறுகளைத் தவிர்க்காமலும் காமத்துப் பாலை நெய்துள்ள வள்ளுவர் பரத்தைமையைத் தவிர்த்திருப்பது அறநோக்கிலேதான், பரத்தமையினால்
1. உடற்கேடு
2. பொருளியல் சரிவு
3. (தலைவிக்கு) உள நலக்கேடு
போன்றவை உருவாகும். இவையாவும் அறவாழ்விற்கு எதிரிகள். எனவே அறவழி ஈதென்று சுட்டவரும் திருவள்ளுவர் மிகமிகக் கவனமாகப் பரத்தையின் சுவடுகூடப் பதியாவண்ணம் - சொல் முதலாகப் பழக்கம் ஈறாக - மடைமாற்றிப் பாடுகின்றார். சுருங்கச் சொல்லின் பரத்தமையைக் கொண்டோரின் வாழ்க்கை அறவழிப்பட்ட வாழ்க்கையில்லை. அஃது இல்லறமாகாது என்பதே வள்ளுவரின் உள்ளக்கிடக்கை. இஃது அவருடைய காலத்திற்கு மட்டுமில்லை. இக்காலத்திற்கும் உரியதுதானே!
தனிமனித அறங்கள், இல்லறத்தார் அறங்கள், துறவிகட்கான அறங்கள், சமுதாயத்தார் அறங்கள் எனத் தனித்தனியே பார்க்கக்கூடிய அளவு அறங்களைப் பரிமாறியுள்ளார் வள்ளுவர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தம்முள் காதல் வயப்பெற்று இல்வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். களவில் தொடங்கிக் கற்பில் இல்லறம் உருவாகும். களவுக்காலச் செயல்பாடுகள், கற்புக்காலச் செயல்பாடுகள் போன்றவற்றைச் சங்க இலக்கிய மாந்தர்களைப் போலவே மேற்கொள்ளும் திருக்குறள் தலைவனும் - தலைவியும் பழம் மரபுகளிலிருந்து மாறுபாடு கொள்ளும் ஒரே இடம் பரத்தமைதான். பரத்தமையை மறுதலிக்கும் இல்வாழ்க்கை மட்டுமே அறவாழ்வும், உரிய வாழ்வுமாகும். பரத்தமையால் முன்னர்கூறிய உடல்நலக்கேடு, பொருளாதாரச் சீர்கேடு, மனநலக்கேடு இவற்றுடன் சமுதாயத்தால் இழிந்த மகனாகக் கருதப் பெறும் கேடும் உடன்சேரும். அதனால்தான் இன்றைய தேவையாக அறவழிப்பட்ட இல்லறத்தைச் சமைக்கக் கூறும் வள்ளுவத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. இன்றைக்குத் தென்படும் ஆட்கொல்லி நோய்களுக்கு இல்லத்தில் இடந்தரக் கூடாது எனில் பரத்தைக்கு இடந்தரக்கூடாது என்பதுதான் வள்ளுவம்,
இங்கே இன்னொரு வினாவை இறக்குமதி செய்யலாம்.
 
பரத்தையர் பார்வை விழுந்து 
காமத்துப்பால் திரிந்துபோகாமல்
நீ.... பாதுகாத்தது சரிதான்; ஆனால்
வரைவின் மகளிர், பெண்வழிச் சேறல்
பற்றியெல்லாம் நீ பேசியவை சரியா

வள்ளுரிடம் ஈரோடு தமிழன்பன் கேட்கும் வினா இது. இதற்கும் விடைதேடுங்கால் அறவியலே விடைதரும் சாவியாகிறது. இல்லறத்தில் பரத்தமையை ஒழிக்கக் கூறும் வள்ளுவர் நாட்டில் அனுமதிப்பாரா? மாட்டார். இல்வாழ்க்கைத் துணையை இழந்த ஆடவனோ படை, தூது, ஒற்றுப் போன்ற காரணங்களுக்காக நெடியநாள் இல்லைத் துறந்த ஆண்மகனோ தன் தேவைக்காக வரைவின் மகளிரை நாடின் பின்செய்வது என்ன என்ற தன்காலச் சிக்கலை வள்ளுவர் எண்ணுகிறார். பெண்ணொருத்தியின் பேச்சை நம்பித் தன் மாட்சிமைப்பட்ட வாழ்வை மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட இராவணனைப் போன்றாரை நினைக்கும் வாய்ப்பும் வள்ளுவருக்கு ஏற்பட்டிருக்கிறது. "பெண்வழிச் சேறல்" அதனால் விளைந்தது. இல்லறத்தில் பரத்தையின் நுழைவுதரும் கேட்டைவிடச் சமூகத்தில் வரைவின் மகளிரால் விளைவுகள் கொடுமையானவை. இல்லறத்துக்குள்ளேயே பிறமகள் கூடாடெனில் சமுதாயத்தை விட்டு அவளை அறவே நீக்கலே அறம் என்பதே வள்ளுவத்தால் முன்வைக்கப் பெறுகின்றது. சமூக நோய்களை ஒழிக்க வள்ளுவ மருத்துவரின் வழிகாட்டலே வரைவின் மகளிரை அழிப்பது. அவர்கள் சமுதாயக் களைகள் என்பதாலும் ஆட்சியில் இருப்பாரே அவர்களை நீக்க இயலுமென்பதாலும் பொருட்பாலில் "வரைவின்மகளிர்" அதிகாரம் இடம்பெறுகிறது. இதன்வழி "ஓவாப்பிணி"யற்று இயலம் நாடு அமையும். குறளின் மூன்றாம் பாலில் இல்லத்திருந்தும் இரண்டாம் பாலில் சமுதாயத்திலிருந்தும் காமநங்கையர் அகற்றப்பெற வேண்டுமென்பதைக் குறள் எடுத்துரைக்கின்றது. ஆளுபவன் பரத்தமையில் ஆழ்ந்தால் என்னவாகும் என்பதற்குப் பல இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. பரத்தமையை நீக்கிய அரசனே "இறை" ஆவான். ஏனெனில் "மன்னன் எவ்வழி; குடிகள் அவ்வழி" என்பது பயில்மொழி. எனவேதான் ஆட்சியாளனைப் பேசும் பொருட்பாலில் உரிய இடமென்று கருதிய இடத்தில் இவ்வதிகாரங்கள் பொருத்தப்பெற்றுள்ளன. "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" எனப் புறப்பாட்டில் (55) மதுரை மருதனிளநாகனார் மொழிவதும் உடன்வைத்து எண்ணத்தகுந்தது. இதனால் பொருட்பெண்டிர் (913) மாயமகளிர் (918), இருமனப் பெண்டிர் (920) என்றெல்லாம் அவர்கள் குறிக்கப் பெறுவர். அத்தகைய "பெண்வழிச் சேறல்" குறளில் குறிக்கப் பெறுவதே அறவியல் கண்ணோட்டத்தில் உணருதல் வேண்டும். அறத்துப் பாலிலும் காமத்துப் பாலிலும் பெண்மையை, பெண்டிரை ஏத்துகின்ற பொய்யாமொழிப் புலவர் சமுதாய நெறிகளை வலியுறுத்தும் பொருட்பாலில் குறிப்பிட்ட பெண்களைச் சாடுவதற்கு ஒரே காரணம் அவர்கள் நோய்க்கிருமிகள் என்பதே. சமுதாயமே அவர்களைத் தவிர்க்க வேண்டுமெனும் போது இல்லறத்தில் அவர்களுக்கு என்னவேலை? அதனைத்தான் பொருட்பாலில் வள்ளுவர் பேசுகிறார். அவருடைய வழிகாட்டலில் நாட்டையாளும் இராசாவும் வீட்டையாளும் இராசாவும் நடைபோட வேண்டும் அவ்வாறிருப்பின் "எந்த ராசாவுக்கும் எதுவும் வராது"
சான்றெண்:
1. அ.ச. ஞானசம்பந்தன், புதிய கோணம், ப. 155.
2. தழிழன்பன், வணக்கம் வள்ளுவ, ப. 30
நூற்பட்டியல்
1. அ.ச. ஞானசம்பந்தன், புதிய கோணம், கம்பன் திருநாள் மலர், காரைக்குடி, ப. 155.
2. தமிழன்பன், வணக்கம் வள்ளுவ, பூம்புகார் பதிப்பகம், சென்னை, ப. 30.
 
முனைவர் அ. அறிவுநம்பி
பேராசிரியர் - தலைவர்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
புதுவைப் பல்கலைக்கழகம்
புதுச்சேரி - 605 014.
 
 
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard