New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால் ஜெ.கெ. வாசுகி


Guru

Status: Offline
Posts: 24455
Date:
வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால் ஜெ.கெ. வாசுகி
Permalink  
 


வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால்

Valamana illarathirku Valluvar tharum kamathupal - Tamil Literature Ilakkiyam Papers
திருக்குறள் ஒரு தெய்வநூல், உலகப் பொதுமறை நூல் என்று ஒருசேர அனைவரும் கூறுகின்றனர். அதை அறம், பொருள், இன்பம் என அழகாகப் பாங்காகப் பிரித்து வாழ்க்கைக்கு அடிப்படைத் தத்துவத்தை, எந்நாட்டவர்க்கும், எவ்வினத்தவர்க்கும், எம்மொழியினர்க்கும், அன்றும், இன்றும், என்றும் பொருந்தும் வகையில் திருவள்ளுவர் படைத்ததால்தான் இதனை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூலில் திருக்குறள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் நூல் இரண்டும், சமய நூல் என்கின்ற போது, திருக்குறள் ஒன்றுதான் அதிகமான எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்ட வாழ்வியல் நூலாகும்.
வள்ளுவர் இந்த வாழ்வியல் நூலில் இல்லறம் என்னும் நல்லறத்தில் வளமாக, நலமாக வாழும் வழிகளைக் காமத்துப் பாலில் கச்சிதமாகச் சித்திரித்திருக்கின்றார்.
காமத்துப்பால் ஓர் உயர்வான, சிறப்பான பகுதியாகும். ஆனால் காமம் என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டு அதைப் படிக்காமலே இருந்தவர் பலர்; இருப்பவர் பலபேர். "கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர் (தொல். சொல். உரி. 355). மனத்தில் நிறைந்த இன்பமாகிய கமம் என்பது காமம் என்று மாறியிருக்கலாம். அது பிறகு குறிப்பிட்ட ஒரு பொருளில் உடல் வழி உள்ளம் பெறும் இன்பம் என்ற பொருளில் காலப்போக்கில் வழக்காற்றில் வந்திருக்கக்கூடும். உண்மையான அன்பைத் தெய்வத்தின் மேல் காட்டும்போது "காதலாகிக் கசிந்து" என்று தானே மாணிக்கவாசகர் பாடியிருக்கின்றார். "எனைத்து ஒன்று இனிதே காண் காமம்தான் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்" என்று வள்ளுவரும் வளமாகக் கூறியுள்ளார். ஓரறிவிலிருந்து, ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உண்டாகும் இயற்கையான உணர்ச்சியே காமம் ஆகும். இது உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவானதாகும். இதனையே,
 
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது 
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும் - - - (தொல்.பொருள்.பொருளியல் 29)

என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
இந்த இன்பம் என்ற காமம் இல்லையெனில் உலகத்தோற்றமில்லை. காமம் என்பது ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் உண்டாவது. ஆனால் பிற்காலத்தில் இது தவறான பொருளில் பயன்படுத்தும் நிலையைப் பெற்றது. நாற்றம் என்ற சொல் தொடக்கக் காலத்தில் நறுமணம், வாசனை என்ற பொருளில் பயன்பட்டது. ஆனால், அந்தத் தமிழ்ச் சொல், வாசம் என்ற வடசொல் புகுத்தப்பட்டபோது எதிர்மறைப் பொருளுக்குத் தள்ளப்பட்டது. ஆக இழிவுப் பொருளைப் பெற்றது. சரசம் (சரசலீலை) என்ற வடசொல் தமிழில் நுழைந்த பிறகு காமம் என்ற சொல் இழிவுப் பொருள் பெறும்படி சீரழிக்கப்பட்டது. மிருகத்தன உணர்வு, விலங்கின் வற்புறுத்தும் உடல் அணைவு - என்ற பொருளுக்கு அது உரிமையாக்கப்பட்டது. மற்றொரு காரணமும் சொல்லலாம். வாத்சாயனர் என்ற வடமொழி நூலாசிரியர் காமசூத்திரம் என்ற நூலை எழுதினார். அன்பின் ஐந்திணை என்ற தமிழின் கோட்பாட்டிற்கு மாறாகப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஆண் அவளை வலிந்து பணியவைத்து இன்பம் நுகர்தல் போன்ற, அப்புணர்வுக்குப் பொருந்தாத பல செய்திகளை அந்நூலில் அவர் கூறியுள்ளார். ஆகவே காமசூத்திரம் என்ற வடசொல்லின் அடிப்படையில் தமிழ்ச் சொல்லான "காமம்" என்பதற்கு தாழ்வான பொருளைப் பலரும் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டனர். இதன் காரணமாகவும் "காமம்" என்ற சொல் வெறுத்து ஒதுக்கப்படும் நிலைமையைப் பெற்றது. காமத்தின் அடிப்படையில் இணையும்போது, அன்பு வலுப்படுகிறது. வாழ்வின் உறுதியான அடித்தளமாகின்றது. அந்த வகையில் கணவனும், மனைவியும் உயிரும், உடலுமாகப் பிரிக்க இயலாப் பந்தத்தால், கட்டுண்டு பின்னிப் பிணைந்துவிடுகின்றனர். இதைத்தானே 1122 ஆம் குறளில் திருவள்ளுவர் தெளிவாக்குகின்றார். அப்படிப்பட்ட பிணைப்பால் பிறந்த குழந்தைகளும், மக்கள் செல்வங்களும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத ஆழ்ந்த அன்பினைப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் Blood is thicker than water என்று கூறுவர். அதைவிட வலுவாக நடைமுறைப் பழமொழி Sex is thicker than blood என்பதை அனுபவத்தில் உணரலாம். மேலும் காம இன்பம் மேலுலக இன்பத்தைவிட உயர்ந்தது என்று கருதியதால்தான் தொல்காப்பியம் "காமப்பகுதி கடவுளும் வரையார்" என்றது (புறத்திணை 28). இப்படிப்பட்ட தெய்வீகத் தன்மை கொண்ட காமம் என்ற உயர் நிலைச் சொல், இழிநிலை உணர்வாக மாற்றம் பெற்றது. உண்மைப் பொருளான உயர்நிலைக் காதலையே காமத்துப்பால் என அமைத்தார் திருவள்ளுவர்.
வள்ளுவர் காமத்தைப் பொது இன்பம் எனக் கூறாது நிலை பேரின்பம் என்கின்றார். "காமம்" உயர் நிலை இன்பச் சொல்லாகும். காலத்தின் கோலத்தால் பெருமை குன்றிச் சிறுமை கொண்டமையால், காமத்துப்பால், இன்பத்துப் பாலாகிவிட்டது என்பதுதான் உண்மை. ஏனென்றால் இன்பம் என்பது பொதுவானது. ஆனால் காமம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் மட்டுமே ஏற்படும் உண்மை அன்பின் நிறைவாகும். அதனால்தான் இன்பம் என்ற சொல்லாட்சி மூன்றாம் பாலில் இரண்டு தடவைதான் கையாளப்படுகின்றது. அதே சமயம் காமம் என்ற சொல்லோ 46 இடங்களில் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமல்ல; இன்பம் இடம்பெற்ற இடத்தில் காமமும் இணைந்தே இடம் பெற்றுள்ளதன் மூலம் (1166, 1130) காமத்தில் பெருமையைப் பூரணமாக உணரலாம். ஆக இல்லறத்தின் அடித்தளமே "காமம்"தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காமத்தால் ஒன்றிணைவதே இல்லறமாகும். இயற்கையில் ஆண்பால், பெண்பால் என இருபால் படைத்து, இவ்விருபாலார் இணைவதற்கு அடிப்படைப் பாலமாகப் பால் உணர்வைப் படைத்து, துய்க்கும் வகையினையும் இயற்கையாக, இயல்பாக, வைத்து உலகையே சுழற்சியுடன் இயங்கச் செய்யும், அற்புதப் படைப்பாற்றலின் விந்தையே விந்தை. ஆக, காமம் என்பது ஜீவசக்தி. இது உன்னத உந்து சக்தி. உயிரினங்கள் அனைத்துக்கும் தேவையான இச்சாசக்தி. ஆண்டவன் அளித்த தெய்வீக சக்தி.
அந்த உயிர்ச்சக்தியால் இல்லறத்தை, இயற்கையாக, இயல்பாக, தெய்வீகமாகக் கொண்டு வாழ்பவர், வாழ்வில் சிறப்படைய எண்ணுபவர்கள் எல்லோரிலும் தலைசிறந்தராவர் என்று
 
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை - - - (குறள் 47)

என்ற குறளில் தெளிவாக்குகின்றார். இல்வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை அன்பான, சிறப்பான, உயர்வாக வாழ்க்கைத் துணை நலம். அதனால்தான் இல்வாழ்க்கைக்கு அடுத்து, வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தை உணர்ந்து வைத்துள்ளார். அதனை வாழ்க்கைத் துணைவி, அல்லது வாழ்க்கைத் துணைவன் என்று பால்பிரித்துக் கூறாது, பொதுவாக வாழ்க்கைத்துணை என்றார். கணவனுக்கு மனைவி துணை, மனைவிக்குக் கணவன் துணை என்பதனால் பொதுவாக இப்படிப் பகர்ந்துள்ளார். இப்படிக் காமத்தால் கணவன் மனைவி இணைந்து அதன் பயனாகப் பரிசாகக் கிடைக்கும் மக்கள் செல்வத்தைப் பெறுவதும், கணவன், மனைவியின் முக்கியக் கடமை என்பதை "தம்பொருள் என்பதம் மக்கள்" என்ற குறள்வழி உணரலாம். அதனால்தான் வாழ்க்கைத் துணை நலத்துக்கு அடுத்த அதிகாரமாக "மக்கள் பேறு" என்று சரியாகக் கணித்து, அதிகாரத்தை வகைப்படுத்தியிருக்கிறார். இந்த இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என்ற மூன்றுக்கும் அடிப்படைத் தேவை அன்பு. அதனால்தான் அன்புடைமையை அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார்.
ஆகவே அன்பினால், கணவன், மனைவி என்ற உடலும், உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. உடலில்லாது உயிர் இருக்க முடியாது உயிரில்லாது உடல் இயங்க முடியாது.
உயிரில்லா உடல் பிணம். உடலில்லா உயிர் ஆவி. தனித்தனியாகக் கடனாற்ற முடியாது. கணவன் இல்லாமல் மனைவி இல்லை. மனைவி இல்லாமல் கணவன் இல்லை. இந்தக் தொடர்பு பிரிதல் அறியாத் தொடர்பு. இந்தத் தொடர்பு பிரிக்க இயலாத் தொடர்பு. உடல் உயிர் பிணைந்த தொடர்பு. இதனை,
 
உடம்பொடு உயிரிடை என்னமற்ற அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு - - - (குறள் 1122)

என்கிறார். ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதே, இணைபிரியாது வாழ்வதே, இல்லறம் காட்டும் நல்லறமாகும்.
கணவன், மனைவி கூடும் வாழ்வில் ஐந்து வகை நெறிப்பாடுகள் திணைகளாக உள்ளன. அவற்றைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று தொல்காப்பியர் வழங்கினார் (அகத் 14). அப்படி ஒவ்வொரு திணைக்கும் 5 அதிகாரங்களாக 25 அதிகாரங்களைத் தந்துள்ளார் வள்ளுவர்.
புணர்தல் என்கின்ற காம உணர்வில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, மகிழ்ந்து அன்பைப் பரிமாறி வாழ்வது இல்லறமாகும். அன்பைப் போற்ற வேண்டும். அன்பை வாரி வழங்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பான வார்த்தைகளால் நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது. இன்பத்தில் பேரின்பம் பிறக்கும். வள்ளுவத் தேவனார் பெண்களைக் குறிப்பிடும்போது பொருளாள், மகளிர் மடந்தை, மடவார், மலரன்ன கண்ணாள், மனை, மனையாள், மாணிழை, மாதர், வாழ்க்கைத் துணை, அணியிழை, அரிவை, ஆயிழை, இல், இல்லாள், இவள், ஒண்தொடி, ஒண்ணுதல், ஒளியிழை, கண்ணிறைந்த காரிகை, குறுந்தொடி, சேயிழை, திருநுதல், துணை, பனிமொழி, பூவண்ணக் கண்ணாள், பெண், பெண்டகை, பெண்டிர் பேதை, அசையியல், அசைவலி என்றெல்லாம் அன்பாக அழைக்கச் சொல்லித் தருகிறார். ஒவ்வொரு சொல்லும் பொருள் நிறைந்ததாகும். இவற்றில் சில, பெண்ணின் சிறப்பை உணர்த்துகின்றன. ஒரு சில அவளுடைய கடமையை அறிவிக்கின்றன. மனையாள், இல்லாள் என்ற சொற்கள் வீட்டின் அனைத்துப் பொறுப்புகளுக்கும் அவள் உரியள் என்பதை அறிவிக்கின்றன. துணை, வாழ்க்கைத்துணை ஆகிய சொற்கள், அவள் கணவனுக்கு எல்லா விதத்திலும் துணையாக இருக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை அறிவிக்கின்றன.
உதாரணமாக, அசையியல் என்று ஒரு கணவன் அழைத்தால், அம்மனைவி எத்தகைய இனிமையானவளாக இருக்க வேண்டும். அழைப்பவனும் எத்தகைய நய உணர்ச்சிமிக்கவனாக இருத்தல் வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அதேபோல் அசைவளி என்றழைப்பது அவள் தென்றலாய் விளங்குவதால்தான், தென்றல் போல் அன்ன நடை நடப்பதால்தான். மென்மையாக விளங்குவதால் தான் அவ்வாறு அழைப்பது அவன் கடமை. அந்த அழைப்பைப் பெறுவது அவளின் கடமையாகும்.
 
அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும் - - - (குறள் 1098)

என்கின்றார் திருவள்ளுர். இவ்வாறு அழைக்கும் அழகிலேயே அவளின் நாகரிக வாழ்க்கைத்தரம் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. வள்ளுவர் கண்ட இரண்டு முத்தான செயல்களாவன: ஒன்று அவன் நினைக்கின்றான், இரண்டு தன் துணையை நினைத்துப் பூரிக்கின்றான். அவர் பெண்களை மட்டும் வர்ணிக்கவில்லை. அவர் காட்டிய மனைவியால் சுட்டப்படும் கணவன் கொண்கன், கொண்டான், கொழுநன், இனியர், உற்றார், கலந்தார், கள்வன், காதலன், கேள் துணை நச்சியார், நயந்தவர், நயப்பித்தார், பரிந்தவர், பெட்டார், பேணியார், மணந்தார், வீழ்வார், வேண்டியவர், வேந்தர் என்றெல்லாம் காமம் சொட்டச் சொட்ட, இனிக்க இனிக்க வழங்கப்படுகின்றான். இத்தகைய கனிவான சொற்களைக் கேட்கும்போது ஒருவருக்கொருவர் பசைபோல் ஒட்டிக் கொள்ளத்தானே செய்வர். மயக்கத்தகும் சொற்களால் மயங்கத்தானே செய்வர். இதனால் கிடைக்கும் நன்மை என்ன? இவ்வாறு கொஞ்சி அழைக்கும்போது பிணக்கு இருப்பினும் மறந்து, வாழ்வின்பத்தை சுவைபடக் காண்பர் என்பது உறுதி. மேலும் வேறு துணை தேடிச்செல்லும் எண்ணம் ஏற்பட வாய்ப்பேது. எய்ட்ஸ் என்ற நோய் ஏது? ஆகவே அன்பாக, குழைவாக, இனிமையாக அழைப்பது முதல், பழகுதல் வரை பனிந்த மொழியே கனிந்த வாழ்வாகும் என்பதை உணர்த்துகின்றது.
காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் குறிப்பிட்ட காலம் வரை தொடரும். உள்ளம் சம்பந்தப்பட்டது என்றால் இறுதி நாள் வரை தொடரும். உண்மைக் காமம் ஆத்மா சம்பந்தப்பட்டது. இது பிறவிதோறும் தொடரும். இப்படி உடலும், உயிருமாக வாழும் தம்பதிகள் எல்லாப்பிறப்பிலும் இதேபோன்று கணவன், மனைவியாகப் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
 
இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியார் எம் கணவனை
யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே

என்று (குறுந். 49) பாடப்பட்டுள்ளது. அதனால்தான் தலைவன் இப்பிறவியில் பிரியமாட்டோம் என்றவுடன் அடுத்த பிறப்பில் பிரிவு வரும் என்று எண்ணி அஞ்சிய தலைவியின் கண்களில் கண்ணீர் வருகின்றது. இதே கருத்தை,
 
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண்ட டனள் - - - (குறள் 1315)

என்று செந்நாப்புலவர் செப்புகின்றார். இப்படிப் பிரிவு என்ற சொல்லே அவளை வாட்டுகின்றது என்றால், அது உண்மை காமத்தால் ஏற்பட்ட பிணைப்பேயாகும்.
கணவன் பொருளீட்டும் வகையில், வீட்டின் வறுமையைப் போக்கும் வகையில், மனைவியைப் பிரிந்து செல்கின்றான். ஆனால் மனைவியால் தாங்க முடியவில்லை. பிரிவுத்துயர் குறித்து 100 பாடல்கள் உள்ளன. உதாணத்திற்கு ஒன்று.
 
சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - - - (குறள் 1231)

என்று சிறப்பாகச் செப்புகின்றார் திருவள்ளுவர். தலைவியைப் பிரிந்த தலைவனுக்கும் இதே நிலைதான். உண்மையான அன்பும், ஆசையுமே இப்பிரிவு நோய்க்குக் காரணமாகும். இப்படி ஒத்த எண்ணம் கொண்ட குடும்பமே வள்ளுவருக்குரிய இலட்சிய குடும்பமாகும். தொல்காப்பியக் கணவன் வேறு, திருவள்ளுவரின் இலட்சியக் கணவன் வேறு.
தலைவனைப் பிரிந்து பின் கூடும் இன்பம், பகுத்துண்டலுக்கு நிகரான மகிழ்ச்சி என்கின்றார் நாயனார். படிக்கப் படிக்கத் தீராத நூலறிவு போலத் தீரத்தீரத் தீராதது காமம் என்கின்றார். கல்வியைப் பற்றித் திருவள்ளுவர் பலவாறு வற்புறுத்திக் கூறுகிறார். கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை போன்ற அதிகாரங்களில் தொடர்ந்து எடுத்துரைக்கிறார். அதுமட்டுமன்று. நட்பு என்ற அதிகாரத்தில் "நவில்தொறும் நூல்நயம் போலும்..." (குறள் 783) என்ற குறளை உவமை மூலம் உணர்த்துகிறார். கற்க வேண்டியது ஒருவனுடைய இன்றியமையாத கடமை. இந்தக் கடமையை அவர் காமத்துப் பாலிலும் உவமையாக உள்ளத்தில் நுழைக்கிறார்.
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்தும் தோறும் காதல் உணர்தல், நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது என்று அவர் கூறுகிறார்.
 
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு - - - (குறள் 1110)

என்பது அந்தக் குறள். இப்படிப் படிப்புக் கடமையை இன்பத்துடன் இணைத்துக்காட்டுகிறார் அவர். உணவு பங்கிடுதல் போன்று சமமான பங்கேற்புடன் வாழ்வில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் காமம் இருவருக்கும் பொதுவானது. ஆகையால் கடமை உணர்வோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற புதிய பார்வையை, நல்ல பார்வையைப் பொய்யில் புலவரிடம் காணலாம். பழந்தமிழ்ப் புலவர்களும் பிறரும் ஒரு கடமை உணர்வை மேற்கொண்டிருந்தனர். தம்மிடம் உள்ள உணவைப் பலருக்குப் பகுத்துக் கொடுத்தல் என்பதே அந்தக் கடமையாகும். குமணனிடம் பெரும் பொருள் பெற்றப் புலவர் பெருஞ்சித்திரனார், அதனைப் பலருக்குப் பங்கிட்டுத் தரும்படி தன் மனைவிக்கு அறிவுறுத்துகிறார். இந்தக் கருத்து திருவள்ளுவருக்கு உடன்பாடான ஒன்று. அரசனின் உடமைகள் நான்கு என்றார் அவர். அவை இயற்றல், ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல் என்பவை. நான்காம் கடமையான காத்த வகுத்தல் என்பது பகுத்துண்ணும் பண்பாடே. "பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" (குறள் 322) என்பது திருவள்ளுவர் காட்டும் கடமை நெறி. பிற்காலத்துக் காரல் மார்க்ஸ் கொள்கையாக வகுத்த அந்தக் கடமையைத் திருவள்ளுவர் காமத்துப் பாலிலும் வற்புறுத்துகிறார். அதை உவமையாகக் காட்டி, உள்ளத்தில் பதிய வைக்கிறார். தன் தலைவியைத் தழுவுதல் தம் வீட்டிலிருந்து, தான் ஈட்டிய பொருளைப் பகுத்துக் கொடுத்து உண்டாற் போன்றது என்று உவமையாகக் கூறி உணர்த்துகிறார்.
 
தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு - - - (குறள் 1107)

என்பது அந்த அருங்குறளாகும்.
இயற்கையான தேவை கொண்ட உடலைப் புறக்கணிக்காது. இரு உடலின் சேர்வில் முழு அன்பினை, இணைத்து வைக்கின்றார் திருவள்ளுவர். தொல்காப்பியம் கூறும் "இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவற்றாகும்" என்பது எதிர்நிலைப்பாடாகும்.
கணவனும் மனைவியும், விரும்புவராகவும், விரும்பப்படுபவராகவும் இருத்தல் வேண்டும். இப்படி அமைந்த கணவன், மனைவியே காதல் இன்பம் எனப்படும் விதையில்லாப் பழத்தைப் பெற்றவர் ஆவர். இந்த உயர் கருத்தை, "தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி" (குறள் 1191) என்ற குறளில் தெரிவிக்கிறார். 1192, 1193 குறள்களிலும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றார். இப்படி எத்தனையோ அற்புதமான கருத்துகள் குறளில் கொட்டிக் கிடக்கின்றன. ஒருவரிடம் ஒருவர் ஊடல் கொள்ளும்போது அங்குச் சினம் இல்லை, வெறுப்பு இல்லை. குறும்புத்தனமான இன்பமே நிழலாடுகின்றது. அவ்வூடலைக் கணவனும் சுவைக்கின்றான்; விரும்புகிறான்; இன்புறுகிறான். என்பதை,
 
ஊடுக மன்னோ ஒளிஇழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா - - - (குறள் 1329)

என்ற பாடலில் திருவள்ளுவர் தெளிவுறுத்துகின்றார்.
 
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் - - - (குறள் 1109)

என்ற குறளில் பிணங்குவது, பின் உணர்வது, பின் கூடி இன்பம் பெறுவது, சிறந்த இணையர்பெறும் தெய்வீகப் பயன் என்றும் குறிப்பிடுகின்றார்.
அறநூல் எழுதிய செந்நாப்போதார் குடும்பத் தலைவனும், நாட்டின் தலைவனும் பரத்தர்களாக வாழ்வதை விரும்பவில்லை. பெண்மைக்குரிய பரத்தை என்ற சொல்லுக்கு ஆண்பால் சொல்லைச் சங்க இலக்கியம் எடுத்துக் கூறவில்லை. திருக்குறளே "பரத்தன்" என்ற ஆண்பால் சொல்லை உருவாக்கியுள்ளது.
 
பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு - - - (குறள் 1311)

என்ற குறள் மூலம் காமத்தில் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் ஒரே அளவுகோல் கொண்டு அறிந்து ஆண் கற்பினையும் வலியுறுத்தியது பெரிதும் போற்றுதற்குரியது.
பொய்யா மொழியார், தெய்வத் திருக்குறளில் காமத்துப் பாலில் முறையான இல்லறமே நல்லது என்றார். காமமே இல்லற வாழ்க்கைப் பிணைப்பின் உண்மை இரகசியம் என்பதை உணர்த்தி அதன் மூலம் தெய்வீகத் தன்மை கொண்ட இல்லறம் என்ற நல்லறம் பெறலாம் என்பதை உணர்த்துகின்றார். அதனை அவரவர், அவரவர்கள் வாழ்வில் கடைப்பிடித்து, நல்வழியில் வாழ்ந்து எய்ட்ஸ் இல்லா நல்வாழ்வு வாழ்வோமாக.
 
திருமதி. ஜெ.கெ. வாசுகி
செண்பகம் இல்லம்
68, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை
மைலாப்பூர், சென்னை - 4.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard