New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் உணர்த்தும் இல்லறம் தா.க. அனுராதா


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருவள்ளுவர் உணர்த்தும் இல்லறம் தா.க. அனுராதா
Permalink  
 


திருவள்ளுவர் உணர்த்தும் இல்லறம்

Thiruvalluvar unarthum illaram - Tamil Literature Ilakkiyam Papers
உலகம் விளக்கமுற உதிக்கின்ற ஞாயிறு போல் உள்ளங்களில் விளக்கேற்றியவர் வள்ளுவர். வாசுகி என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லறமெனும் நல்லறத்தை உலகிற்கு உணர்த்திய உத்தமர்.
ஆணும், பெண்ணும் லயமும் சுருதியும் போல், சுடரும் கதிரும் போல், மலரும் மணமும் போல் இருவர் வாழ்வும் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் நன்கறிந்து, நயம்பட அன்பாய் வாழ்வு நடத்துவதுதான் இல்லறம். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.
இல்வாழ்க்கைப் பண்பும் பயனும்
இல்வாழ்க்கையின் ஆணிவேரான பண்பு அன்பு; அதன் பயன் அறம். அறவழியில் இல்லறம் நடத்துபவரே உலகில் வாழ முயலும் அனைவரிலும் தலை மகனாவார்.
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - - - (குறள் 45)

என்கிறார் வள்ளுவர்.
அன்பே தெய்வம் என்பர். மரஞ்செடி கொடிகளுக்கு ஆதவன் போல், மனித இதயத்துக்கு அன்பு மிக அவசியம். அறம் செய்தால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் அருள் பெருகும். இல்வாழ்க்கை நடத்தும் ஆணும், பெண்ணும் அன்புடன் வாழ்வதுடன் மற்றுமுள்ளார் அனைவரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.
அத்துடன் அறம்பட வாழ வேண்டும். அறமென்பது வாழ்க்கை நெறி. அறமின்றித் தீய நிலையில் இருப்பின் அது இல்லறமாகாது. இல்லறம், பிறர் பழி சொல்லக் கூடிய அளவிற்கு அமையலாகாது. அவ்விதம் அமையாதிருக்குமாயின், அது நல்ல புகழுக்குரிய பெரும் நிலையாகும்.
 
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று - - - (குறள் 49)

என்பதே வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறி.
கணவன் மனைவி
மணம் புரிந்துகொண்டு குடும்பமாக வாழ்வதே இல்லறம். இந்த இல்லறம் இனிது நடைபெற வேண்டுமானால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒற்றுமையிருக்க வேண்டும். உள்ளத்திலே, நடத்தையிலே, பண்பிலே அவர்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். ஒன்றுபட்ட தம்பதிகளின் வாழ்வில் தான் இன்பம் தழைக்கும்.
மனிதனைத் தெய்வமாக்கும் இரசவாதம் மனையறம் எனில் அதற்குக் கைகோத்து அழைத்துச் செல்லும் ஆற்றலாய்த் திகழ்பவள் "வாழ்க்கைத் துணை" என்று வள்ளுவர் போற்றும் மனைவியே ஆவாள். அவள் மனைத்தக்க மாண்பும், கணவன் வளத்துக்கு ஏற்ற வாழ்வும் பெற்றவளாய் இருப்பாள். கற்பென்னும் திண்மையால்,
பெண்ணின் பெருந்தக்க யாவுள? - - - (குறள் 54)
என்று பெருவியப்பை அளிப்பாள்; தெய்வம் தொழாது கணவனைத் தொழுது மழைபோல் பயன் தருவாள் என்று இல்லத்தரசியை ஏற்றிப் போற்றுவார் வள்ளுவர்.
மக்கட்செல்வம்
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலம் என்றும் கூறுவர். அன்பும் அறனும் இணைந்து செயல்படும் இல்லறப் பூங்காவில் மலரும் மலர்களே குழந்தைகளாவர். அக்கருத்தினையே வலியுறுத்திக் கூறியுள்ளார் வள்ளுவர்.
 
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு - - - (குறள் 60)

இல்லறத்திற்கு எவ்வாறு மனைவியின் நற்பண்பு மங்கலமாக அமைகிறதோ, அதைப் போலவே, நன்மக்களைப் பெறுதலும் இல்லறத்திற்கு அணிகலன்களாக அமையும் என்பதாம்.
 
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற - - - (குறள் 61)

இல்லற வாழ்வில் பெறத்தகுந்த பேறுகளில் அறிவுடைய நன்மக்களைத் தவிர மற்றப் பேறுகளை யாவும் (வள்ளுவரே) அறிந்ததில்லை என்பதிலிருந்து மக்கட்பேற்றில் ஏன், மக்கட் பெருக்கத்திலும் வள்ளுவர் காட்டியுள்ள உண்மையான, உறுதியான கருத்து இன்றைய உலகிற்குப் பொருத்தமானதாகும்.
ஆணையும், பெண்ணையும் இணைத்த அன்பு, குழந்தைகளிடமே முதலில் பாய்ந்து பெருகுகிறது. வள்ளுவர்க்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கு யாழ் ஒலியும் நிகராக மாட்டாவென்று மழலை இன்பத்தை வானளாவப் புகழ்கிறார். குழந்தையைத் தொட்டணைக்கும்போதும், மழலை மொழியைக் கேட்கும் போதும் மனத்துக்கும், உடலுக்கும் இன்பம் விளையும் என்கிறார் வள்ளுவர்.
அவையத்து முந்தியிருப்பச் செய்வது தந்தையின் கடன். ஈன்ற பொழுதிற் பெரிதுவப்பாள் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்லக் கேட்கும் தாய். மகன் தந்தைக்கு இவனைப் பெறுதற்கு என்ன தவம் செய்தனரோ என்ற சொல்லைப் பெற்றிருத்தல் வேண்டும் என மக்களால் பெறும் இன்பத்தையும் பெறவேண்டிய இன்பத்தையும் இல்லற வியலில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது தமிழரின் தலையாய பண்பாகும். குடும்ப இன்பத்தில் விருந்தளித்து மகிழ்வது ஒரு சுவையான அனுபவம். ஒரு மனிதனின் இதயத்தைச் சென்றடைய வேண்டுமானால் அவனுடைய வயிற்றின் வழியாகத்தான் அடைய முடியும் என்று சொல்வார்கள். அவனுக்கு உணவளித்து உபசரிக்கும்போது அவன் மனநிறைவு அடைகிறான். விருந்து சாப்பிட்டவனுக்கும் மனநிறைவு, விருந்து அளித்தவனுக்கும் மனநிறைவு.
வள்ளுவர் உன்னதமான நெறிகளை உணர்த்தியவர். பசி தீர்த்தல் மிகச் சிறந்த அறம் என்று உபதேசித்தவர். இல்வாழ்வான் துறந்தார்க்கும், துவ்வார்க்கும், இறந்தார்க்கும் துணையாக இருத்தலோடு, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவகையினரையும் ஓம்புகின்றவனாதல் வேண்டும். அவற்றுள் விருந்து ஓம்பும் பண்பே குடும்பத்தின் குறிக்கோளாகும் என்ற செய்தியை,
 
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு - - - (குறள் 81)

என்ற குறளின் மூலம் எடுத்துக்காட்டுகிறார். கண்ணகி, சீதை ஆகிய இருவரும் தம் தம் கணவரைப் பிரிந்து வாழ நேரிட்ட பொழுது, அவ்விருவரும் இழந்த பேறாக, விருந்து ஓம்ப இயலாநிலைமையையே முதன்மைப்படுத்தி வருந்தியுள்ளனர். விருந்து புரந்தராமல், உண்ணும் உணவு சாவாமை தரும் சிறப்பினையுடைய மருந்தெனினும் அது வேண்டுதற்குரியதல்ல என்பது வள்ளுவத்தின் செய்தி. வருவிருந்து ஓம்பி, செல்விருந்து பார்த்திருக்கும் குடும்பம் வானத்தினர்க்கு நல்விருந்தினராவர் என்று திருக்குறள் வீடுபேற்றை உறுதிப்படுத்துகின்றது.
அனிச்சப் பூவினும் மென்மையானவர் விருந்தினர். ஆதலால் இனிய சொற்களால் கேட்பவர்க்கு இன்பம் தருவதாய், உள்ளத்தில் சிறுமை சிறிதும் இல்லாதவராய்ப் பயன்தரும் சொற்களையே பேசவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
செய்ந்நன்றியறிதல்
ஒருவர் செய்த நன்றிக்காக அவரை வணங்குவதோ, அவரை நினைத்துக் கொண்டிருப்பதோ மட்டும் செய்நன்றி அறிதல் ஆகாது. பிறர் நமக்குச் செய்த நன்மையைப் போல் நாமும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும். இந்த எண்ணம் - உணர்ச்சி பிறக்க வேண்டும். இதுதான் செய்ந்நன்றி மறவாமையின் பலனாகும்.
 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று - - - (குறள் 108)

ஒருவர் செய்த நன்றியை மறந்துவிடுவது நன்மையாகாது; ஒருவர் செய்த தீமையை அவர் செய்த அன்றே மறந்துவிடுவது தான் நல்லது.
பிறர் செய்த நன்மையை மறந்துவிட்டுப் பிறர் செய்த தீமையை மட்டும் மனத்தில் வைத்திருப்பதனால் தீமைதான் விளையும். நமக்குத் தீமை செய்தோர்க்கு நாமும் தீமை செய்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்போம். சமயம் கிடைத்தபோது பழிக்குப்பழி வாங்கத்தான் தோன்றும். இதனால் பகைமைதான் வளரும். எதிரிகள் பக்கம் பலர்; நமது பக்கம் பலர்; இவ்வாறு பிளவுபட்டு நிற்போம். இத்தகைய பிளவுக்கு மக்கள் ஆளாவர்களானால் சமுதாயத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க முடியாது. ஆகையால்தான் செய்ந்நன்றியை வலியுறுத்தி, வாழ்வியலில் இந்நெறி போற்றுவோர் பல்கிப் பெருக வேண்டும் என்பதே வள்ளுவரின் விருப்பம்.
ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கந்தான் ஒருவனுக்கு உயிர்; அதுதான் குடிப்பிறப்பு; அதுதான் உயர்வளிப்பது; அதுதான் நன்மைக்கெல்லாம் அடிப்படை. தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் ஆரம்பமாகிறது. "நெஞ்சில் அறமிருந்தால், நடத்தையில் அடக்கமிருக்கும். நடத்தையில் அடக்கம் இருந்தால் தேசத்தில் ஒழுக்கமிருக்கும்" என்கிறார் மகாத்மாகாந்தி. ஆனால் இன்று தேசத்தின் நிலை என்ன? சுதந்திரம் என்றால் பிறரைச் சுரண்டச் சுதந்திரம் என்றும், பண்பாடு என்றால் பகுத்தறிவாலான பித்தலாட்டம் என்றும் நடைமுறையாகிவிட்டது. நமது நற்பண்பும், சீலமும் சீர்குலைந்துவிட்டன. மது, மாது, சூது, கொள்ளை, கொலை ஆகிய பஞ்சமாபாதகங்கள் மலிந்துள்ளன. மதுவாலும் போதைப் பொருள்களாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒழுக்கம் மிகவும் சீர் குலைந்துள்ளது.
மக்கள் மிகவும் சிறப்பை அடைவது ஒழுக்கத்தால்தான். தனிப்பெரும் சீருடையது ஒழுக்கம். உடல்நிலை பெற உயிரைப் பேணுதல் போல், உயிர்நிலை பெற ஒழுக்கத்தைப் பேணுதல் வேண்டும். உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழுங்கால் விழுப்பந் தரும். ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தரும். அதனால் ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாய்ப் போற்றப்படும்.
 
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் - - - (குறள் 131)

என்கிறார் வள்ளுவர்.
ஏட்டில் எழுதப்பெற்றனவெல்லாம் ஒழுக்கமல்ல. உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். ஒழுக்கத் தவறு மெய்யுணர்ச்சியால் விளைவது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐவகை இன்பங்களையும் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம்; பிறனில்லாளை விரும்பியடைதல் ஒழுக்கக்கேடு. பிறர் மனைவியை விரும்புவார் அறம் பொருள் இவற்றையிழப்பர். அவர்களே பேதையர். அவர்கள் இறந்தவர்களே. அவர்களே பழிகாரர்கள், பாவிகள். பிறர் மனைவியை ஏறெடுத்துப் பார்க்காதவர்களே வீரர்கள்; ஒழுக்கமுடையவர்; தருமவான்கள். அவர்கள் உலகில் எல்லா நல்ல காரியங்களுக்கும் தலைமை தாங்க உரியவர்கள். தன் கணவரைத் தவிர வேறு ஆடவனை விரும்பாத பெண்ணே கற்புள்ளவள்; அதுபோலத் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை விரும்பாத ஆண் மகனே ஒழுக்கம் உள்ளவன்; கற்புள்ளவன் என ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.
பொறுமையின் பெருமையும் பொறாமையின் பகையும்
"பொறுமை எனும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்" என்ற பாடலை இசைப் பேரரசி கே.பி.சுந்தராம்பாளின் குரலில் கேட்கும்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தனி இன்பம் இருந்தது. பொறுமையானது குறை செய்பவர்களை மன்னித்து விடுவது மட்டுமன்று; மறந்தேவிடுவது தான். பொறுமை சால்புடைமையைத் தரும். அழியாப் புகழைத் தருவதும் அது. துறவியைக் காட்டிலும் பெருமையைத் தருவதும் அதுவே.
பொறுமைக்கு மறுதலை பொறாமை. பொறாமை என்பது ஒரு பொல்லாத வியாதியாகும். அதனை மாற்றுவது எந்த மருத்துவராலும் முடியாததாகும். பொறாமையுடையவனைப் புண்ணியம் பொருந்தாது; செல்வம் சேராது; சுற்றமுங்கெடும். குலம் அழியும், குற்றமிகும். ஆதலால் பொறாமையை நீக்கிடுக என வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
கொடைப்பண்பு
ஒப்புரவும் ஈகையும் கொடைக்கடன்கள் எனலாம். பொதுக் கொடை ஒப்புரவு; தனிக்கொடை ஈகை. ஏழைகட்குச் செய்யப்படும் உதவி ஈகை எனப்படும். குறிப்பறிந்து ஈதலே கொடை. வாங்கியவன் மகிழும்வரையில் ஏழையின் பசியைப் போக்குதலே சேமநிதியைச் சேமித்து வைக்குமிடம்.
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுவதில்லை. கா கா எனக் கரைந்து அவர்கள் உண்பதால், வா வா என அவர்கள் வரவைக் கூட்டுவதால் அவர்களுக்குப் பஞ்சம் வருவதில்லை.
சாவு என்னும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாது என்கின்ற மனத்துன்பம் பெரியதாகும். சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை. ஆதலால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
 
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை - - - (குறள் 230)

என்ற குறளுக்கமைய, கொடுக்கும் பேராற்றல் வேண்டும் என்பதை உணர்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
புகழின் பெருமை
கொடையால் விளைவது புகழ். உலகத்தில் அழியாதது புகழ் ஒன்றே. புகழில்லா உடலைச் சுமந்த நிலங்கூட வளங்குன்றும். புகழ் வளர வளர அதனால் வரும் புகழுடம்பு நிற்கும்; புகழுடையார் இறந்தாலும் புகழ் இறவா நிற்கும். தம் வாழ்நாளில் புகழை நிலைநாட்டாதவர்களின் வாழ்க்கை, என்றும் பிறரால் பழிப்புக்கு உரியதாகவே அமையும். அறிவு, அதிகாரம், முதலிய ஆற்றல்களால் ஆட்டிப் படைப்பவர்களின் புகழை விட, கொடுப்பதால் பெறும் புகழ், வியந்து பாராட்டப்படும் ஒன்றாக அமைகின்றது. ஆதலால் வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றுமில்லை என்பதை,
 
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - - - (குறள் 231)

என்ற குறளின் மூலம் வலியுறுத்துகிறார்.
மேலும் இல்லறத்தின் இன்றியமையாப் பண்புகளாக, அன்பால் விளையும் நற்பண்பு, நடுவுநிலை தவறாமை, நாவடக்கத்தின் நன்மை, புறங்கூறுதலால் ஏற்படும் பாவம், பயனற்ற பேச்சினால் ஏற்படும் தீமை, தீவினையினால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைப் பற்றியும் மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். மனிதகுல சமுதாய வாழ்வும் சிறப்புற்று இல்லற வாழ்வு மாண்பு பெற வள்ளுவர் வழி வாழுதல் வேண்டும்.
திருவள்ளுவர் கூறியுள்ள இல்லறத்திற்கான கருத்துக்களை நுண்ணிதின் உணர்ந்து தெளிந்து ஏற்று வாழ்பவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவராவர். அவர்தாம் வானுறையும் தெய்வத்துள் வைத்து வணங்கும் பெருமைக்குரியவராவர். வள்ளுவர் கூறியிருக்கும் இல்லற உண்மைகள் எவ்வினத்தினராலும் எந்நாட்டினராலும், எம்மொழியினராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மைகள். இவை போன்ற உலகம் போற்றும் உண்மைகள் திருக்குறளிலே நிறைந்திருக்கின்றன.
இல்லற இன்பத்திற்கு வள்ளுவர் காட்டும் வழியைவிட சிறந்தவழி இருக்க நியாயம் இல்லை.
துணை நூல்கள்
1. சாமி சிதம்பரனார், வள்ளுவர் வகுத்த தமிழகம், மணிவாசகம் பதிப்பகம், 2001, பக். 74-89.
2. இரா. மோகன், சிற்பியின் கட்டுரைகள், மணிவாசகர் பதிப்பகம், 1996, பக். 448, 449.
3. பொன் பரமகுரு, வள்ளுவன் வழங்கிய வாழ்க்கை நெறி, திருவரசு புத்தக நிலையம், 2000, பக். 18-79.
4. முத்துராமன், திருக்குறள் அரசியல் தெளிவுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1996, ப. 28.
5. ப.ச. ஏசுநாதன், திருக்குறளில் குடும்பம், சுதா பதிப்பகம், 1999, பக். 10, 11.
6. பா. வளவன் அரசு, வழிகாட்டும் வள்ளுவம், கதிரவன் பதிப்பகம், பக். 11, 12.
7. பி.சி. கணேசன், வள்ளுவர் உணர்த்தும் இல்லற தர்மம், தாமரைப் பதிப்பகம், 1991, ப. 82.
8. பேரறிஞர் கட்டுரைகள், வள்ளுவர் வாய்மொழி, தமிழ் மணம், 1965, பக். 96-99.
9. அ.பொ. செல்லையா, கேட்கட்டும் குறளின் குரல், தாய்நாடு பதிப்பகம், 2002, பக். 128-187.
 
திருமதி தா.க. அனுராதா
தமிழியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்
சிதம்பரம் - 608 002

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard