New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் காட்டும் அரசியல் ஆர். அனுராதா


Guru

Status: Offline
Posts: 23950
Date:
திருக்குறள் காட்டும் அரசியல் ஆர். அனுராதா
Permalink  
 


திருக்குறள் காட்டும் அரசியல்

Thirukural kattum arasiyal - Tamil Literature Ilakkiyam Papers
நாட்டின் தன்மை, ஆட்சியின் இயல்பு ஆகியவற்றின் நிலைகளை எடுத்துக் கூறுவதை அரசியல் எனலாம். இது ஒரு சமூகத்துள் வாழும் மக்களின் செயல்களின் நிலையை எடுத்துக்காட்டும். மனிதனின் எண்ணங்களும் கற்பனைகளும் பிறரால் கட்டுப்படுத்த முடியாதவை. உலகம் ஒரு குடும்பம். மக்கள் அதன் உறுப்பினர். ஆள்வோரும் ஆளப்படுவோரும் வேறல்லர். குடியரசு, முடியரசு, படையரசு என எதுவாக இருப்பினும் சிறப்பான முறையில் அரசு நடத்துவதை நோக்கமாய்க் கொள்ள வேண்டும். வள்ளுவரின் அரசியல் எப்படிப்பட்டது என்பதை அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
வள்ளுவர் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு தனிப்பெரும் புலவர். வள்ளுவர் வையகம் தழைத்து வாழ அறநூலாம் திருக்குறளை எழுதியுள்ளார். வள்ளுவரின் திருக்குறன் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. எக்காலத்தும், எந்நாட்டவராலும், எச்சமயத்தினராலும் பின்பற்றக்கூடிய கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளன. வள்ளுவர் வாழ்வின் பல்வேறு கூறுகளை நன்கு ஆராய்ந்து தெளிந்து உலக உயிர்களின் செம்மையான வாழ்க்கைக்கு வேண்டிய அறிவுரைகளை விளக்கி உள்ளார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளில் வாழ்க்கை பொலிவடையும் வழிவகைகளை வகுத்துள்ளார். இவர் பொருட்பாலின் முதல் 25 அதிகாரங்களிலும், ஒழிபியல், அங்கவியல் போன்ற அதிகாரங்களிலும் அரசியல் கருத்துகளை உள்ளடக்கி உள்ளார்.
நாட்டிற்கு ஓர் அரசு வேண்டும். அரசுக்கோர் தலைவன் வேண்டும் என்பது வள்ளுவம். தலைவன் வரும் வழி பற்றிக் கவலையில்லை. எவ்வழியாயினும், அரசேற்கும் தலைவனைப் பற்றியே ஆசான் கவலை கொண்டார். அரசன் தவறும் வழி பேசாது இறைமாட்சி அதிகாரத்து அவனுக்கு அமைய வேண்டும் அரசியல்புகளைப் பேசினார் என்பர் வ.சு.ப. மாணிக்கம்.
நாடாளுகின்ற அரசன், உயர்ந்த குறிக்கோள் உடையவனாகவும், பண்புடையவனாகவும், ஆற்றல்கள் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் கருத்து. வள்ளுவர் மன்னனும் மக்களும் ஒன்றே என்னும் கருத்துடையவர். மனிதனுக்குரிய சிறந்த குணங்களை அரசன் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகின்றார். மன்னனிடமிருந்து மக்களை வேறுபடுத்துவது நாடாளும் பொறுப்பு மட்டுமே. மக்களுக்கு ஆட்சிக்கு உட்படும் கடமை. இந்த வேறுபாட்டைத் தவிர பிற வேறபாடில்லை. பண்டைக் காலத்தில் முடியாட்சி வழக்கத்திலிருந்தது. அரசன் தெய்வீகத் தன்மை வாய்ந்தவன் என்ற கருத்து நிலவி வந்தது. அரசன் தவறு செய்யமாட்டான். அரசனைத் தவறு செய்பவனாக நினைப்பதே மிகவும் பாவம் என நினைத்து வாழ்ந்தனர் மக்கள் என்றால் அது மிகையில்லை.
 
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும் - - - (குறள் 388)

என்ற குறளின் மூலம் வள்ளுவர் கூறியதாவது: அரசனைக் கடவுளாக நினைத்த காலத்திலேயே நீ கடவுள் இல்லை. நீ நல்லபடி நடந்தால் மக்கள் உன்னைக் கடவுளாக நினைத்துப் போற்றுவார்கள் என்றார். இக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது எவ்வளவு பெரிய உண்மை. குடியாட்சி மலர்ந்துள்ள இந்த நாளில் கூட மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதும் இதையே தான். "திருவள்ளுவர் ஆட்சித் தலைவனுக்கு என்று கூறும் இயல்புகள் நாட்டு மக்கள் பலருக்கும் வேண்டிய நல்லியல்புகளாக உள்ளன. நாட்டு மக்களும் நல்ல இயல்பும் திறனும் கல்வியும் உள்ள பலர்க்கும் ஆட்சித் தலைமை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். அரசியல் முறையே குடியாட்சி முறை" என்ற மு.வ. அவர்களின் கருத்து சிந்தனைக்குரியது.
மன்னன் என்பவன் மக்களைக் கண்ணாகவும் உயிராகவும் உடலாகவும் கருதினான் என்று பல்வேறு காலங்களில் வாழ்ந்த சான்றோர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்லிச் சென்றுள்ளனர். வள்ளுவர் அரசன் ஆட்சி செய்த செங்கோல் ஆட்சியினையே இறைமைத் தன்மை உடையதாகக் கருதினார். இதனைப் பின்வரும் குறள் புலப்படுத்தும்.
 
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - - - (குறள் 543)

 
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் - - - (குறள் 547)

தலைவன் செங்கோலாட்சி புரிந்தால் மக்கள் அவனை மதிப்பர். இல்லையாயின் அவனுடைய நிலை கெடும் என்பது,
 
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - - - (குறள் 563)

எனும் குறளால் அறியப் பெறும். வள்ளுவர் கால அரசு மன்னனையும் மக்களையும் மையமாகக் கொண்டது. மக்கள் நினைத்தால் மன்னனை மாற்ற இயலும் என்னும் குரலைப் பல குறள்களில் காணலாம். மக்களை நீக்கியதற்கான சான்றுகள் இல்லை. மறைமுகமாக எடுத்துரைக்கிறார். சான்றாக,
 
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும் - - - (குறள் 564)

 
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை - - - (குறள் 555)

என்ற குறள்களில் மன்னன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி நடத்துவானேயானால் அவனுடைய ஆட்சி விரைவில் அழியும். அதற்கும் மாறாக ஆட்சி புரிபவனாக இருந்தால் அவன் கொடுங்கோலன் என்று மக்களால் தூற்றப்படுவான் என்று கூறுகிறார். அரசன் மக்கள் மனம் மகிழ அரசாட்சி நடத்த வேண்டும். இதற்கு அரண் சேர்க்கும் வகையில் பின்வரும் கருத்து அமைந்துள்ளது. அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் கொள்கை. அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அஃதொரு சமுதாய வாழ்க்கை முறை. அரசியல் சமுதாய வாழ்க்கைக்கு ஒருங்கமைதியைத் தருவது. ஒருவர்க்கு மேற்பட்ட பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுத்துத் துணை செய்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும். வாழ்க்கையின் துய்ப்புக்குரியன அனைத்தும் எளிதில் கிடைக்கும். அறிவுத்துறை மேம்பட்டு விளக்கமுறும். ஆங்குப் பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும். அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கன்று; மக்களுக்கேயாம்.
"முடி மன்னர்க்கு" என்று வகுத்துக் கூறிய நெறிமுறைகள் குடிமக்களுக்கும் உரியதாக உள்ளன. குழந்தையைக் காப்பாற்றுவது தாயின் கடமை. தாய்மார்களை இரண்டு வகையில் அடக்கலாம். ஒன்று காலமறிந்து உணவு கொடுப்பவர்கள். மற்றொன்று அழுதபின் கொடுப்பது. எப்படி இருப்பினும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது தாயின் கடமை. மன்னன் மக்களைக் காப்பதில் தாயை ஒத்து விளங்க வேண்டும் என்பதனை,
 
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு - - - (குறள் 554)

என்று விளக்கிக் கூறியுள்ளார். "மன்னன்" என்பதை விட்டுவிட்டு வேறு சொல்லால் அழைத்தால் அது இன்று நடைமுறையில் இருக்கும். குடியாட்சியை உடைய எந்தவொரு நாட்டுத் தலைவனுக்கும் பொருந்துவதாக இருக்கும். குடிதழீஇக் கோலோச்சும் ஒருவருக்கு - குடி மக்களைத் தழுவி ஆளும் ஒருவருடைய ஆணைக்கு இவ்வுலகம் கட்டுப்படும். வள்ளுவரின் குறளில் குடியாட்சிக்குப் பொருந்தாத இறை மன்னன் வேந்தன் எனப் பல சொற்றொடர்கள் உள்ளன. இச்சொற்கள் பொதுமையாக "ஆட்சித் தலைவன்" எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடிமக்களின் நன்மை கருதி வேண்டியன செய்ய வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து பொறுப்பாக நடக்க வேண்டும் எனும் கருத்து மக்களாட்சிக்கும் பொருந்துவதாக உள்ளது.
வள்ளுவர் விவசாயம், தொழில் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். விவசாயத்தை உலகின் உயிர்நாடி என்று கருதி நீர் மராமத்து, குடி மராமத்துகளைப் பெருக்குதல் அரசின் கடமை என்கிறார்.
 
வாரி பெருக்கி வளப்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை - - - (குறள் 512)

அரசுக்கு வேளாண்மைத் துறையில் உள்ள பங்கு இதனால் பெறப்படுகிறது.
அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துரைத்த வள்ளுவர், அடுத்ததாக அரசுக்குப் பொருள் வருவாயை அதிகரிக்கும் வழிவகைகளைச் சொல்லிச் செல்கிறார்.
 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - - - (குறள் 385)

இதில் இடம்பெற்றுள்ள இயற்றல் என்னும் சொல் மிகவும் முக்கியமான சொல்லாக ஆளப்பட்டுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கையின் படி, புதிய தொழில்களை நிறுவியதால் ஏற்பட்ட புதிய அமைப்பின் மூலம் தேடிப் பெறப்பட்ட பொருள் என்பதையே இயற்றல் என்கிறார் வள்ளுவர். புதிய வரிகள் எனப் பொருள் கொள்ளக்கூடாது. நேர்மையான முறைகளில் புதிய வழிகளில் பொருளைத் தேடிச் செல்வத்தைக் குவிப்பதைக் கடமையாய்க் கொள்ள வேண்டும். இவ்வாறு பெறப்படும் பொருளை ஒழுங்கான முறையில் சேர்க்க வேண்டும். இதனை ஈட்டல் என்று குறிப்பிடுகிறார். அதைப் பாதுகாப்போடு வைத்திருப்பதைக் காத்தல் என்று கூறியுள்ளார். இயற்றல், ஈட்டல், காத்தல் ஆகியவற்றை அரசின் கடமைகளாக வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இது சாலவும் பொருந்தக்கூடியது. இறைமாட்சி என்ற அதிகாரத்தில் கூறியுள்ள அறிவுரைகளை அமைச்சர்கள் பின்பற்றி நடந்தால் நாடு நலமுறும். சான்றாக,
 
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு - - - (குறள் 381)

என்ற குறளின் மூலம் உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுப் படையெடுப்பை, எதிர்க்கவும் தேவையான படைகள், ஆட்சிக்கு அடங்கி நடக்கும் மக்கள், தேவையான உணவு, அறிவும் திறமையும் வாய்ந்த அமைச்சர்கள் அண்டை நாடுகளுடன் நட்பு, நாட்டைக் காக்கும் இயற்கை அரண்கள் ஆகிய ஆறு உறுப்புகளைக் கொண்டவன் அரசர்களில் ஏறு போன்றவன். இவ்வடிப்படைத் தன்மைகள் யாரிடம் இருந்தாலும் அவர்கள் அரசாளலாம் என்பதே வள்ளுவரின் எண்ணம். அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டைத் தம் உடைமையெனக் கருதாமல் உயிராகவே கருதுதல் வேண்டும். நாட்டிற்கு அழகு சேர்ப்பது,
 
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து - - - (குறள் 738)

எனக் கூறியுள்ளார். நாட்டைப் பாதுகாக்கும் வழி முறைகளையும் கூறுகிறார். இதனை,
 
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து - - - (879)

பகைவர் வலிவடைவதற்கு முன்னரே அவரை வெல்ல வேண்டும். இல்லையாயின் அவர்கள் வலுவடைந்த பின் அவர்களை வெல்வது கடினம் என்று அறிவுறுத்துகிறார்.
ஒரு நாடு சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானால் வெளிநாட்டுப் பொருள்கள் மீது வரி விதிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருள்கள் மீது வரி விதிக்கக் கூடாது என்கிறார். இதனை,
 
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் - - - (குறள் 756)

என்ற குறளின் மூலம் வெளிநாட்டுப் பொருள்களின் மீது மட்டும் தான் வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
வள்ளுவருடைய அரசு அமைப்பில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் நெருங்கிய உறவினர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
 
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைவருங்கு நேர்வது நாடு - - - (குறள் 733)

அரசின் நெருக்கடி உணர்ந்து மக்கள் பொருளைத் தருகிறார்கள். இப்படி அரசை மக்களும், மக்களை அரசனும் புரிந்து நடப்பதையே நாடு என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அரசுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட அகந்தையின் காரணமாய்த் தவறு செய்யாதிருக்கும் அரசே நல்ல அரசு என்றும் குறிப்பிடுகிறார். அதாவது அரசு ஒழுக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மக்களும் தவறு செய்ய மாட்டார்கள். மக்கள் தவறு செய்யாமல் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசே நல்ல அரசு என்றும் குறிப்பிடுகிறார். அடுத்து அவர் தீமையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் கூறுகிறார். அரசு தீய செயல்களை தண்டிக்க வேண்டும். தீமை செய்தவர்களைத் தண்டிப்பதும், தீமையை ஒழிப்பதும் அரசின் தலையாய கடமையாகும். இதனை வள்ளுவர்,
 
குடிபுறம் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் - - - (குறள் 549)

என்று மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார். அஞ்சாத திண்மை, வறியவர்களுக்கு ஈயும் பண்பு, சோம்பல் இல்லாதிருத்தல், முயற்சியை நட்பாகக் கொள்ளுதல், கல்வி கேள்விகளிற் சிறத்தல், துணிவுடைமை, குடிகளின் குறை தீர்க்கும் மனம், காட்சிக்கு எளிமை, இனிய சொல், நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்தல் என பல நல்ல குணங்களில் சேர்க்கையே அரசன். இப்பண்புகளைப் பெற்ற ஒருவனால் மட்டுமே நாட்டைச் சிறந்த முறையில் நிருவகிக்க முடியும். இக்கருத்தும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளது.
 
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி - - - (குறள் 542)

எனும் குறளும், செங்கோன்மை எனும் அதிகாரத்தில் உள்ள பிற குறள்களும் இக்கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக உள்ளன. சுருங்கக் கூறின் திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பை மக்கள் நல அரசு என்பது பொருத்தமாக இருக்கும்.
பண்டைக் காலத்தில் முடியாட்சியைத் தவிர வேறு அமைப்புகள் இல்லை. எனினும், முடியாட்சியில் மக்களாட்சியையும், குடியாட்சியில் கொடுங்கோலாட்சியையும் காணமுடிகிறது.
ஆட்சி எந்த உருவத்தில் காணப்பட்டாலும், அதன் நோக்கம், பயன் ஆகியவை கருதித்தான் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கொள்ளப்பட வேண்டும். திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மக்கள் நல அரசுக்கு" வித்திட்டு விட்டார் எனில் அது மிகையாகாது.
அடிக்குறிப்புகள்
 
1. வ.சு.ப. மாணிக்கம், வள்ளுவம், பக். 253 - 254.
2. ந. சஞ்சீவி, திருக்குறள் கனிகள், ப. 169.
3. குன்றக்குடி அடிகளார், திருவள்ளுவர், சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள், ப. 60.

 
திருமதி ஆர். அனுராதா
முதுநிலை விரிவுரையாளர் 
மொழித்துறை - தமிழ்
எம்ஓபி.வைணவ மகளிர் கல்லூரி
20, 4-வது சந்து, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 34.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard