New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்


Guru

Status: Offline
Posts: 23950
Date:
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
Permalink  
 


திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்

 

தலைப்பு,திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத்திறன், குறளேந்தி ந.சேகர் ;thalaippu_thiruvalluvarin_uyiriyalpaarvaithiran_kuralendhi_ne_sekar_myanma

திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்

  தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும்.

  இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும் திருவள்ளுவர் என்பவரால் இயற்றப் பெற்றது.

  தமிழ் மக்கள் பண்பாடு பெற்றுயர்வதற்குரிய வழிவகைகளையெல்லாம் பரக்க உணர்த்தியுள்ளது திருக்குறள். ஏன், உலக மக்கள் அனைவருமே பண்பாடு பெற்றுப் பிறப்பின் பயனை அடைவதற்கு உரிய வழிவகைகளையெல்லாம் தெளிய உணர்த்தும் ஒரு பொது நூல் திருக்குறளாம் என்று நாம் துணிந்து கூறலாம்.

  திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் அரசியல், பொருளாதாரம், தாவரவியல், நீரியல், அறிவியல், மருத்துவம் போன்று பல துறைக் கருத்துக்களையும் உள்ளடக்கி எழுதியுள்ளார். அவற்றுள் ‘திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திற’னைப் பற்றிய சில குறள்களைக் காண்போம்.

  அன்பை வலியுறுத்த வந்த திருவள்ளுவர் ‘அன்புடைமை’ அதிகாரத்தில்,

என்பில் அதனை வெயில் போலக் காயுமே
அன்பில் அதனை அறம் (குறள். 77).

என்ற குறளில் எலும்பு இல்லாத உடலையுடைய புழு வெயிலில் காய்ந்து அழிந்து விடுவதுபோல அன்பில்லாத உயிர் அறத்தின் முன் தானாகவே காய்ந்துவிடும் என்று உவமை காட்டிக் கூறுகின்றார்.

  எறும்பு, புழு முதலியவை வெயிலின் காய்ச்சல் தாங்காதாம். எல்லா உயிர்களுக்கும் வெயில் இன்றியமையாதது. ஆனால் பூச்சிகள், புழுக்கள் வெயிலின் வெப்பத்தைத் தாங்கவில்லை. ஏனென்றால் அவை எலும்பு இல்லாதவை. எலும்பு இல்லாத காரணத்தால் வெயிலின் நன்மையைப் பெற முடியாது அழிகின்றன. அது போல அன்பு இல்லாத காரணத்தால் உயிரானது அறம் செய்து அதன் நன்மையை அடைய முடியவில்லை. அறம் செய்து நன்மையடைவதற்காகத்தான் உடலை மனிதன் பெற்றிருக்கிறான். எவன் நன்மை செய்து அன்பை வளர்த்துக் கொள்ள முடியவில்லையோ அவன் தன் நலன் கருதி மறம் செய்து அழிகிறான் என்பதாம். மேலும், எலும்பில்லாத புழு தன்னியல்பால் வெயிலில் சென்று, வெயில் தாங்காது உயிர் விடுதல் போல மனிதன் அன்பில்லாத காரணத்தால் தீமை செய்து நல்லோரால் பழிக்கப்பட்டு அழிகிறான் என்பதைப் புழு, பூச்சிகள் உவமை காட்டி நமக்கு அறிய வைக்கின்றார்கள்.

அடுத்து, ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள். 126).

என்ற குறளில் ஆமையை எடுத்துக் காட்டுகின்றார்கள்.

 ஆமையானது எப்படித் தன் ஓட்டுக்குள், தனக்குத் தீங்கு வரும் என்பதை அறிந்த உடன் நான்கு கால்களையும் தலையையும் உள்ளடக்கிக் கொள்கிறதோ, அதுபோலத், தனக்கு இழிவு வரும் என்று அறிந்தவுடன் ஒருவன் ஐம்புல அவாவையும் அடக்கியாளப் பயிலுவானாயின் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறவியிலும் பாதுகாவலாய் வந்து துணை செய்யும் என்று ஆமையின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றார்.

  ஒருவனுக்கு அடக்கமின்மை, அதாவது தருக்கு / அடங்காமை வெகுளியால் உண்டாகிறது. வெகுளி, அவா (ஆசை) நிறைவேறாதபோது உண்டாகும் ஒரு குணம். எவன் ஆசையை வெல்கிறானோ அவனுக்குச் சினம் இல்லை. சினமில்லாதவன்தானே அடக்கமுடையவனாய் வாழ்வான்? ஆகையால் ஐம்புல அடக்கமாகிய அவா இன்மையையே அடக்கமாகத் திருவள்ளுவர் சிறப்பித்து, அடக்கம் என்பது வஞ்சகமாகப் பூனை போல் அடங்கி இருப்பது அன்று என்பதை விளக்கினார். மேலும், எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றமையால், அடக்கமானது புகழை மாத்திரம் கொடுப்பதன்று; உயிர்க்குப் பல பிறவிகளிலும் பாதுகாவலாய்த் துணை செய்வது என்பதையும் வற்புறுத்தி மன அடக்கம் வலியுறுத்த ஆமையை உவமைக்கு எடுத்துக் காட்டுகிறார்கள்.

‘காலம் அறிதல்’ அதிகாரத்தில்,

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481).

என்ற குறளில் செயலை மேற்கொள்வதற்குக் காலமறிய வேண்டும் என்பதற்குக் கோட்டானையும் காக்கையையும் நம் முன்னே கொண்டு வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

 கோட்டானைக் காக்கை பகல் காலத்தில் வென்றுவிடும் ஆகையால் பகைவர்களை வெல்ல எண்ணும் அரசர்கள் தமக்கு உகந்த காலத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

 கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. அதனால் காகம் கோட்டானைப் பகலில் வென்றுவிடும். காகத்திற்கு இரவில் கண் தெரியாது. கோட்டான் காகத்தை இரவில் வென்று விடும். காகமும் கோட்டானும் ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே வலிமையுள்ள பறவைகளாக இருப்பினும் காலத்தின் மாறுபாட்டால் ஒன்றை ஒன்று வெல்கின்றன. அது போல், பகையை வெல்ல நினைக்கும் அரசரும் தக்க காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும். சம வலிமையுள்ள பகைவரை வெல்ல வேண்டுமாயினும், வலி மிகுந்தவரை வெல்ல வேண்டுமாயினும் தனக்கு ஏற்ற காலத்தைப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்பதற்குக் கோட்டானின் இயல்பையும் காக்கையின் இயல்பையும் நன்கறிந்த திருவள்ளுவர் பறவைகளை உவமைக்கு எடுத்துக் காட்டியிருப்பது சிந்தித்துச் சிந்தித்து மகிழ வேண்டியதாகும்.

மேலும், அந்த அதிகாரத்தின் கீழ்வரும்

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள். 486).

என்ற குறளில் சண்டைக் கிடா விலங்கை உவமைக்கு எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

  மன எழுச்சியுடையவர் பகை மேல் செல்லாது காத்திருப்பது சண்டைக்கிடா வேகமாகத் தாக்குவதற்குப் பின்வாங்கிப் பாய்வது போலாகுமாம்.

  காத்திருக்கும் நேரமெல்லாம் எதிரியை முறியடிப்பதற்கான எண்ணங்களில் சிந்தனையைச் செலுத்த வேண்டும். முழு வலிமையோடு தாக்குவதற்குக் காலம் வரும் வரை வெற்றி மேல் மனம் இருத்திக் காத்திருக்க வேண்டும். முழு வலிமையையும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்பது உவமானம். வலிமையுடையவன் அடங்கி இருப்பது சண்டைக்கிடா முட்டப் பின்னடைவது போலாம்.

அதே அதிகாரத்தில், பிறிதொரு குறளில்,

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (குறள். 490).

என்ற குறளில் பறவையினத்தைச் சேர்ந்த கொக்கை எடுத்துக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.

  ஒரு செயலைச் செய்யாதிருக்கும்போது மீனைப் பிடிக்க எண்ணும் கொக்கு இருப்பது போல் காலம் வரும் வரை அடங்கி இருக்க வேண்டுமாம். நேரம் வாய்த்தவுடன் கொக்கு மீனைக் கௌவிப் பிடிப்பதுபோலச் செயலை முயன்று செய்து முடிக்க வேண்டுமாம். கொக்கு எவ்வாறு அசையாது காத்திருந்து மீன் வரும் அந்த நேரத்தில் சரேலெனப் பாய்ந்து பிடிக்கிறதோ, அது போல, ஒரு வினையைச் செய்யத் தொடங்கும் காலம் வரும்வரை காத்திருந்து, வாய்ப்பு வருகிற அந்தச் சமயத்திலேயே நழுவ விடாமல், முயற்சி குன்றாது வினையைச் செய்து முடிக்க வேண்டும். கொக்கு, வினை செய்வானுக்குத் தொழில் உவமை ஆகையால் கொக்கு மீன் வரும் சமயத்தையும் இடத்தையும் நழுவ விடாது இறுகப் பிடிப்பதுபோல வினை செய்வானும் வெற்றி வரும் சமயத்தையும் இடத்தையும் நழுவ விடாது உள்ளத்தில் அதே கருத்தாக அமைதியாகக் காத்திருக்க வேண்டும் என்பதாம்.

அடுத்து, ‘இடனறிதல்’ அதிகாரத்தில்,

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற (குறள். 495).

என்ற குறளில் நீர்வாழ் உயிரினமான முதலையின் இயல்பை எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

  ஆழமான நீர் நிலையில் முதலையானது பிற விலங்குகளை வெல்லும். ஆனால், நீர்நிலையை நீங்கித் தரைக்கு வந்தால் பிற விலங்குகள் முதலையைக் கொன்றுவிடும்.

  தரையிலே வாழும் விலங்குகள் தண்ணீரில் நிலைத்து நின்று முதலையோடு சண்டை போட முடியாது. அதனால் முதலை அந்த விலங்குகளை வென்று விடுகிறது. தரையிலே முதலை இயங்க முடியாது. அதனால் பிற விலங்குகள் முதலையை வென்று விடும். இடம்தான் முதலையின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. அது போல் எதிரியை வெல்வதற்கும் இடம்தான் காரணம் என்பதையும் பகைவன் தோல்விக்குரிய இடம் நோக்கிச் செயல்பட வேண்டும் என்பதை நீர்வாழ் விலங்கான முதலையைக் கொண்டு வந்து காட்டுகின்றார்கள்.

‘சுற்றம்தழால்’ என்ற அதிகாரத்தில்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள (குறள். 527).

என்கிறார் வள்ளுவர். அவர், முன் குறள்களில் சில உயிரினங்களின் இயல்புகளை, நிலைகளை, செயல்படும் தன்மைகளை நமக்கு உவமைக்காக எடுத்துக் காட்டியுள்ளார்; இக்குறளில், காகத்தின் செயலை, நல்ல பண்பை அப்படியே பின்பற்றச் செய்கின்றார்; கடைப்பிடிக்கக் கூறுகின்றார். அதாவது, காக்கைகள் தமக்கு இரை கிடைத்தவுடன் அதனை மறைக்காமல், கரைந்து கத்தித் தமது இனத்தை அழைத்து அவற்றோடு உண்ணுமாம். அது போல மனிதனும் தனக்குக் கிடைத்த பொருட்களை மறைக்காமல் மற்றவர்க்கும் பகிர்ந்து கொடுத்து இன்பப்பட வேண்டும்.

  விலங்குகளில் நாய்களின் செயல்களைப் பெரும்பாலும் நாம் கண்டிருக்கலாம். நாய்கள் தனக்குக் கிடைத்த இரையைத் தான் மட்டும் விரைந்து விரைந்து வஞ்சகமாக உண்ணும். தான் பெற்ற நாயாக இருந்தாலும் கிட்டே வர விடாமல் குரைத்து, கத்தி, கடித்து விரட்டி விட்டுத் தான் மட்டும் எல்லாவற்றையும் தின்றுவிடும். மாடு, எருமை போன்ற விலங்குகளும் இரை கிடைத்தவுடன் தன் இனத்தை அழைக்காமல் தான் மட்டும் வயிறார உண்ணும். ஆனால், காக்கைப்பறவைக்கு அப்படிப்பட்ட வஞ்சகப் பழக்கம் இல்லை. ஏதாவது உணவைக் கண்டால் ‘கா’ ‘கா’ என்று கூவிக் கத்தித் தன் இனத்தோடு பகிர்ந்து உண்டு இன்பமடைகின்றது.

  இப்படிக் காக்கையின் நல்லியல்பை மனிதர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்புகின்றார். இஃது அறச் செயலோடு அல்லாமல் பொருளைப் பெருக்கவும் வழியாகும். மக்கள் பலர் நன்றியுடையாராக இருப்பதால் இவனுக்குப் பெருமையோடு பொருளும் வளர வழியுண்டு. இதற்குக் காகத்தின் இயல்பான நற்செயலைக் கண்டறிந்து நமக்கு எடுத்துக் காட்டுகின்றார் திருவள்ளுவப் பெருமான்.

  திருக்குறளில் திருவள்ளுவரின் உயிரியல் பார்வைபற்றிய சில குறள்களைக் கண்டறிந்தோம். இன்னும் ஏராளமான குறள்களில் உயிரியல் கருத்துகள் புதைந்து கிடக்கின்றன. யானையைப் பற்றிப் பேசுகிறார், சிங்கத்தைப்பற்றிக் கூறுகின்றார், புலியின் தன்மைகளைப் பேசுகின்றார், இன்னும் பல விலங்குகளின் தன்மைகளைப் பற்றியும் நமக்கு அரிய செய்திகளாகத் தந்திருக்கிறார்கள் வள்ளுவப் பெருந்தகை.

 பறவைகள், ஊர்வன,நீந்துவன, விலங்குகள் முதலானவற்றின் இயல்புகள், தன்மைகள், செயல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது அறிவுக் கூர்மையாலும் சிந்தனைத் திறனாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்திருப்பதைச் சிந்திக்கும்போது திருவள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்தை வியந்து வியந்து பாராட்ட வேண்டியுள்ளது.

  திருக்குறளில் திருவள்ளுவரின் உயிரியல் செய்திகளைத் திருக்குறள் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், உயிரியல்அறிஞர்கள், நூல் முழுதும் ஆராய்ந்து உயிரியல் செய்திகளை நூல் வடிவில் தருவார்களேயானால் நூல் சிறக்கும், வாசகர்களின் அறிவுக்கு நல்விருந்தாக இருக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

– குறளேந்தி ந.சேகர்
செயலாளர்
கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம்
தட்டோன், மியான்மா__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்
Permalink  
 


திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்

 

தலைப்பு-திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை, குறளேந்தி ந.சேகர் l thalaippu_thiruvalluvar_kaattum_vaazhkaimurai_na-sekar

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை

உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.

  திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.

  இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள்  தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.

 முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது பண்புகள், வழிபாடு, அதனால் பெறும் பயன்களை எடுத்துக்காட்டி மனிதர்கள் அனைவரும் வணங்கத்தக்க கடவுளை வழிபடுவதையே சிறந்த கடவுள் கொள்கையாகக் காட்டுகின்றார்கள்.

  ‘தெய்வம்’ என்கிற சொல்லினைத் திருவள்ளுவர் ‘கடவுள் வாழ்த்து’ என்ற முதலாவது அதிகாரத்தில் சொல்லவே இல்லை என்பது பெரிதும் சிந்திக்க வேண்டியதாகும். இக்காலத்தில் ‘தெய்வம்’ என்ற சொல் இறைவனைக் குறிக்கும் சொல்லாகவே நடைமுறையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அப்படி அல்ல!

கடவுள் வேறு – தெய்வம் வேறு.

கடவுள் ஒருவர் – தெய்வங்கள் பல.

  கடவுள் எல்லாம் வல்லவர், எப்போதும் உள்ளவர், பிறப்பு – இறப்பு இல்லாதவர். ஆனால், தெய்வங்கள் அப்படி இல்லை. தெய்வப் பிறவி, தெய்வப் பிறப்பு என்று சொல்வார்களே, அப்படித் தெய்வங்கள் ஊழ்வினைப் பயனால் பிறக்கின்றன. பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும். எனவே, தெய்வங்கள் நிலையானவை அல்ல என்பது பெறப்படும். ஆகவே, உயர் பிறப்புடைய மனிதன் எல்லாம் வல்ல, எப்பொதும் உள்ள, பிறப்பு இறப்புகள் இல்லாத, நிலையான, உண்மையான கடவுளையே எண்ணி, நோக்கி வழிபட வேண்டும்; வணங்க வேண்டும் என்பது நம் தமிழ் மகான்களின் கூற்றாயிற்று.

  அந்த ஒரே கடவுள் கொள்கையில் இறைவனை உறுதியுடன் வழிபடுபவர்கள் அடையும் பெரும்பயன்களை,

நிலமிசை நீடு வாழ்வார்

யாண்டும் இடும்பை இல

நெறிநின்றார் நீடு வாழ்வார்

மனக்கவலை தீர்தல் – என்ற வரிகளினால் திருக்குறள் அறிவிக்கின்றது.

  அடுத்தபடியாக, முதற்பாலாகிய அறத்துப்பால் மனிதனுக்குச் செய்யத்தக்கன, செய்யத்தகாதன கூறி வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய நல்வாழ்வை விளக்குகின்றது.

  உலக வளர்ச்சியும் அன்பு வளர்ச்சியும் இல்வாழ்க்கையில் அமைந்திருப்பதை இல்லறவியலில் (இருபது) அதிகார வரிசையால் நன்முறையில் திருக்குறள் அறிவிக்கின்றது. இல்லறம் நடத்துவோர் யாரோடும் பேசினாலும் இனிமையாகப் பேச வேண்டும்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (அ.10
; கு.96).

பிறர்க்கு நன்மை தரும் சொற்களை இனிமையானவற்றைச் சொல்பவனுக்குத் தீங்குகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும். அடுத்து,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (அ.10; கு.100)

  இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்கள் பேசுவது பழங்களை விட்டுவிட்டுக் காய்களைப் பறித்துக் கொள்வது போலத்தான்.

  இல்லறத்தார்க்கு செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை – அதாவது, யாரிடத்திலும் சமமாக நடந்து கொள்ளும் குணம் – வேண்டும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின். (அ.12
; கு.116)

  ஒருவன் நடுநிலைமை நீங்கி மாறான செயலைச் செய்யத் துணியும்போது மனச்சாட்சி ‘நான் கெட்டுப் போவேன்’ என்று அறிய வேண்டும்.

அடுத்து, இல்லறம் நடத்துவோர்களுக்கு ‘அடக்கம் உடைமை’ மிக முதன்மையான நெறிமுறையாகும். குணம், மொழி, மெய் ஆகியவற்றைத் தீ நெறியில் செல்ல ஒட்டாமல் அது தடுத்து அடக்கத்துடன் இருக்கச் செய்கிறது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (அ.13
; கு.127)

எதை அடக்கி ஆளாவிட்டாலும் நாக்கை அடக்கி ஆள வேண்டும். நாக்குப் பதற்றமில்லாத அடக்கமே மிகவும் தலையாயது என்று திருக்குறள் அந்த அடக்கத்தை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.

மேலும், மக்களுக்குரிய ஒழுக்கத்தில் நின்று வாழவும் ஒழுக்கம்தான் மனிதனுக்கு விழுப்பமான உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரை விடப் பேணிக் காத்து வாழவும் வழிகாட்டுகின்றது. இதை –

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (அ.14
; கு.133)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (அ.14
; கு.134)

என்கிற குறள்களால் அறியலாம். ஒழுக்கமுடைமையினால்தான் ஒருவன் உயர்ந்த பிறப்புடையவனாகக் கருதப்படுகிறான். ஒழுக்கம் கெட்டவன் தாழ்ந்த பிறப்புடையவனாகவே கருதப்படுவான் என்று விளக்கி சாதியில் ஒன்றும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது திருக்குறள்.

  மேலும், ஒழுக்கங்கெட்டு, பிறனுடைய இல்லாளை விரும்பாதிருக்க வேண்டும் என்றும் பிறனுடைய இல்லாளை விரும்பித் தீமை புரிந்து ஒழுகுவார்களானால்,

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (அ.15
; கு.146)

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார். (அ.15
; கு.143)

என்று பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் அவனை விட்டு ஒருக்காலும் நீங்காது என்றும் அவர்கள் இறந்தவர்களே ஆவார்கள் என்றும் மிகவும் கண்டிக்கிறது திருக்குறள்.

  பொறுமை என்னும் நற்பண்பைப் பெற்றிருத்தலும் பொறாமை என்னும் தீயகுணம் இல்லாதிருத்தலும் இல்லறத்தானுக்கு மிகவும் கட்டாயமாகும்.

  அடுத்து, இல்லறத்தார்களை ஒப்புரவு அறிதல், ஈகை, புகழ் ஆகிய நல்லறங்களைச் செய்து மனிதன் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்து நிலைத்து நிற்கும் புகழினைப் பெற்றுப் பயனுள்ள வாழ்க்கையாக இருந்திட திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை சிறப்பாக அமைந்திருக்கிறது.

  அடுத்ததாகத் துறவறவியல் வருகின்றது. இந்தத் துறவறவியல் திருக்குறளின் உயிர் நாடி என்றே கூற வேண்டும். திருக்குறளின் ‘இதயப் பகுதி’ என்றும் கூறுவார்கள்.

  இவ்வியலில் மனிதனுக்கு விருதப் பகுதி, ஞானப் பகுதி என்று இரண்டு பகுதிகளை எடுத்துக்காட்டி மனிதப் பிறப்பு, அதன் நோக்கம், அடைய வேண்டிய இலக்கு, செல்லும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வழிகாட்டுகின்றன வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறைகள்.

  குறிப்பாக, மனிதன் அருள் நெறியைக் கடைப்பிடித்து எல்லா மனிதர்களிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்தும் கருணையோடு நடந்து  கொள்ள வேண்டும்.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (அ.27
; கு.264)

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (அ.27
; கு.267)

ஆகிய குறள்கள் தவம் செய்வதனால் மனிதனுக்கு ஆற்றல்கள் உண்டாகின்றன, தவ வலிமை கூடும், தவத்தின் வலிமையால் தக்க பேரறிவு (ஞான) ஒளி உண்டாகும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

  அடுத்து, ‘கள்ளாமை’ பேசிப் பிறருடைய பொருளைக் களவு செய்தற்கு நினையாமல் இருக்க வேண்டும் என்றும் ‘வாய்மை’யில் வாயால் பேசப்படுகிற உண்மையைத்தான் பேச வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.

  ‘வெகுளாமை’ அதிகாரத்தில் சினத்தினால் வரும் தீமைகளும் அவற்றை நீக்குதலும் பற்றி எச்சரிக்கை செய்கின்றார்கள். அதாவது,

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (அ.31
; கு.304).

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (அ.31
; கு.305)

ஒரு மனிதனுக்கு இன்பத்தைக் கெடுக்கக்கூடியது சினம் என்றும், அச்சினத்தை அடக்காவிட்டால் அது தன்னையே அழித்துவிடும் என்றும் மிகவும் கண்டித்துச் சொல்கின்றார்கள். அடுத்து,

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர். (அ.32
; கு.320)

துன்பங்கள் எல்லாம் துன்பங்களைச் செய்தவர்களுக்கே வந்து சேரும். பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்று அழுத்தமாகச் சொல்கின்றார்கள்.

கொல்லாமை’யில் எவ்வுயிரினையும் கொல்லாதிருத்தலாகும். எந்த நோக்கத்தைக் கொண்டும் பிற உயிரைக் கொன்று போக்காதிருப்பது பற்றி,

தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. (அ.33
; கு.327)

என்கிறார்கள். உயிரை ‘இன்உயிர்’ என்று கூறுகின்றார்கள். அதாவது, இனிமையான உயிர் என்று கூறுகின்றார்கள். இது மிகவும் சிந்தனைக்குரிய சொல்லாகும் என்பது குறிப்பிடற்பாலது.

 __________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
RE: திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
Permalink  
 


 மேற்கூறிய அறங்களை உறுதியுடன் கடைப்பிடித்து மிகவும் பண்பட்ட நிலை அடைந்து மேலான அறிவுநிலை பெற்றவனை,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (அ.35; கு.350)

என்றும்,

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.(அ.36; குறள் 360)

என்றும் கூறுகின்றது திருக்குறள். அஃதாவது அவாவை (ஆசையை) முற்றிலும் விட்டு விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் இறைவனுடைய பற்றினைப் பிடித்துக் கொள் என்றும் அவா, சினம், அறியாமை இந்த மூன்று குற்றங்களும் அறவே இல்லாமல் போனவனுக்குப் பிறவித் துன்பமும் இல்லாமல் போகும் என்றும் உறுதியாகக் கூறுகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம்
 மாணாப் பிறப்பு. (அ.36; கு.351)

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருளாக உணர்ந்து விடுகிற மயக்கத்தால் கீழான பிறவி வந்துவிடும்.

  கடவுள் அல்லாதவற்றைக் கடவுள் என்று உணர்ந்து விட்டவனுக்குக் கீழான பிறவி வந்து விடும். மனிதர்கள் மிகவும் பண்பட்ட நிலை அறிந்து மேலான அறிவுநிலை (ஞானம்) பெற்றுவிட்டால் கடவுளைத்தான் வணங்குவார்கள். அதாவது, கல்வி கற்றவர்கள். கடவுளைத்தான் வணங்குவார்கள். கல்வி கற்காதவர்கள் எதையும் கும்பிடுவார்கள். பிறப்பு, வீடு என்பவற்றின் காரணங்களை ஐயமின்றி உண்மையாகத் தெரிந்தவர்கள் கடவுளைத்தான் வணங்குவார்களேயொழிய சிறு தெய்வங்களை வழிபட மாட்டார்கள். அதாவது, சிறு தெய்வங்கள் என்றால் காட்டேரி, பாம்பு, அனுமன், இடும்பன், கடம்பன் இன்னும் சில சிறிய தெய்வங்கள் ஆகியவற்றை மெய்ப்பொருள் என்று மயங்கிவிடக்கூடாது என்பது உணரத்தக்கது.

 பேரறிவின் முதற்படியான நிலையாமை கண்டு துறவுள்ளம் எய்தி, மெய்யுணர்ந்து, அவா நீங்கப் பெற்றுப் பேரின்ப நிலையான வீடு பெறும் வழிமுறையை இனிமையாகத் திட்டவட்டமாகக் காட்டுகின்றது வான்புகழ் வள்ளுவம். இதை –

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (அ.37
; கு.370)

என்ற குறள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

  அடுத்தபடியாக, பொருட்பால் பகுதியில் மக்கள் சமுதாயம் நன்றாக நடைபெறுவதற்கு மனிதன் அறிய வேண்டிய அறிவுகளும் செய்ய வேண்டிய நன்முயற்சிகளும் விலக்க வேண்டிய தீமைகளும் பற்றிப் பற்பல முறைகளில் வழிகாட்டுகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

  நாட்டுத் தலைவனுக்கும் மக்களுக்கும் அமைய வேண்டிய அறிவையும் திறமைகளையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது திருக்குறள். அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய அறிவுகள் நிறைந்து கொடை, அளி (அருள்), செங்கோல், குடி ஓம்பல் நிறைந்திருக்க வேண்டும் என்றும் கற்க வேண்டியவற்றைக் கற்கவும், கல்வி இல்லாமையின் இழிவும் பேசி, கல்வி இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது என்றும் உறுதிபடக் கூறுகின்றது. கற்றறிந்தார் சொல்வதைக் கேட்டல் மூலமாகவும் கல்வி கேள்விகளினால் அறிவுடையவனாக வழிகாட்டுகின்றது.

  நல்ல அறிவுள்ள பெரியோர்களை நட்பாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிலும் குணத்திலும் ஒழுக்கத்திலும் இழிவானவர்களைச் சேர்க்கையால் பல தீமைகள் வரும் என்றும் திருவள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கையாகக் கூறுவார்கள். இது மிகவும் பயனுடைய அறிவுரையாகும்.

  மேலும், மனிதனுக்கு ‘மான உணர்ச்சி’ வேண்டும் என்றும் அந்த மான உணர்ச்சி உயர்ந்த கொள்கைகளுக்காகவும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றது திருக்குறள். சிறப்பில்லாத, பயனில்லாத, பொறுமையில்லாத குறுகிய மான உணர்ச்சி அதாவது ‘மாண்பிறந்த மானம்’ இருக்கக்கூடாது என்றும் ‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்றும் கூறிக் கீழ் நோக்கிப் போகும் எண்ணங்களை எண்ணக்கூடாது என்றும் கண்டிக்கின்றது திருக்குறள்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (அ.80; கு.798)

துன்பக் காலத்திலே எட்டிப் பார்க்காமல் போனவர்களுடைய நட்பைக் கொள்ளக்கூடாது என்றும் வள்ளுவப் பெருமான் அறிவுரை கூறுவார்கள்.

‘உள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல்’ என்று நமது எண்ணங்கள் உயர்வான, மேன்மையானவற்றையே எண்ணி உயர்ந்து வாழ வேண்டுமென்று திருக்குறள் வழிகாட்டுகின்றது.

அடுத்து, மனிதர்கள் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்றும், தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றும் கீழ்வரும் குறள்கள் வழிகாட்டுகின்றன.

கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். (அ.107
; கு.1061)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். (அ.107
; கு.1065)

ஆகிய குறள்கள் மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய குறள்கள் ஆகும். அடுத்து,

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (அ.92
; கு.920)

வரையறையில்லாத வரைவின் மகளிரும் கள்ளும் சூதும் ஆகிய மூன்றிடமும் செல்பவர் நீக்கப்பட்டவர் என்று மிகவும் எச்சரிக்கை செய்யும் குறள்கள் ஆகும் இவை.

  மேலும், மனிதத்தன்மை எதுவுமே இல்லாத கீழோர் இயல்பை, அதாவது எந்த நற்குணமும் இல்லாத மிகவும் கீழ்த்தரமான மனிதர்கள் உண்டு என்பதைக் கூறும்போது கயமையைப் பற்றிப் பேசுவார்கள்.

  அடுத்தபடியாகத், திருக்குறளின் இறுதிப்பாலான இன்பத்துப்பாலில் வயதுக்கு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாகக் காதல் வருவதையும் அக்காதல் தூய்மையாகவும் நீதியுள்ளதாகவும் வாய்மைக்கும் கட்டுப்பட்டதாகவும் எடுத்துக்காட்டி உறுதியான காதல் வாழ்வைக் கடைப்பிடிக்கச் செய்து கற்பொழுக்கத்துடன் வாழச் செய்கிறது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

  மேலும், மனிதன் ஆதிபகவனாகிய முழுமுதற் கடவுளை அடைக்கலம் அடைந்து அதன் மூலம் பிறப்பு இறப்பு அற்ற வீடுபேறு அடைவதே மனிதனாகப் பிறவி எடுத்ததன் நோக்கமாகும் என்று வலியுறுத்தும் திருக்குறள், வீடு பேறு அடைய இல்லறத்தின் மூலமும் துறவறத்தின் மூலமும் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும் அறங்களையும் குறள்பாக்கள் மூலம் தெளிவுபடுத்துகிறது.

  மேலும், ஊழ்வினை காரணமாகப் பிறந்து வாழ்ந்து இறந்து மீண்டும் பிறக்கும் பிறவிச் சூழல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் அப்பிறவிச் சூழலை நிறுத்திப் பிறவாமை பெறுவதே பேரின்பம் என்று கூறுவதோடு இன்னும் ஒருமுறை,

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (அ.37; கு.370)

என்று உறுதிப்படுத்துகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

  ஆகவே, மனிதன் அன்போடும் பண்போடும் அறத்தோடும் வாழ்ந்து இம்மைப் பயனும் மறுமைப் பயனும் பெற்று முழுமையான நல்வாழ்வை அடைய, அத்தகைய நிலைக்கு மனிதக்குலத்தை அழைத்துச் செல்ல வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறைக்கு ஆற்றல் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

 குறிப்பாக, நம் தமிழ் மக்கள் திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்று உணர்ந்து கடைப்பிடித்து ஒழுகி, திருக்குறள் வழியில் வாழ்ந்து, பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் இனிய மக்களாகத் திகழ வேண்டும் என்பது நம் தமிழர்களின் நல்வாழ்வை விரும்பும் அனைவரின் மிகப் பெரிய விருப்பமாகும்.

– குறளமுதன், குறளேந்தி ந.சேகர்
திருக்குறள் தேர்வுப் பொறுப்பாளர்
கலைமகள் தமிழ்க்கல்வி நிறுவனம்
தட்டோன் மாநகர், மியான்மா__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard