New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம் சுரேஷ் பிரதீப்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம் சுரேஷ் பிரதீப்
Permalink  
 


பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்

யாதும் ஊரே என்ற சொல் கணியன் பூங்குன்றனின் சிந்தையில் எழுந்த கணத்தை சற்று எண்ணிப் பார்க்கலாம். தொல் வேதங்களிலும் இத்தகைய கவித்துவ உச்சங்களைத் தொடும் பல வரிகள் இருப்பதாக நண்பர்கள் சொல்லி இருக்கின்றனர். ரிக் வேதத்தில் வரும் “சிருஷ்டி கீதத்தை” ஜெயமோகன் மொழிபெயரத்திருக்கிறார். அதை வாசிக்கும் போது அவ்வரிகளை உதிர்த்த கவிஞனை அல்லது ரிஷியை அல்லது யாரோ ஒருவனை அல்லது ஒருத்தியை மணம் எண்ணிக் கொள்கிறது. கேட்கும் போதே மனதுள் மேன்மையை நிறைக்கும் அத்தகைய வரிகள் தான் மொழி என்ற ஒன்று இருப்பதற்கான அதில் இலக்கியம் என்றொரு கலை நீடிப்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.

“மேன்மைக்கான உந்துதலை” இன்றைய சூழலில் லட்சியவாதம் என்று வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா. அனைத்துத் துறைகளும் நூறு சதவீதத் திறனை அடைவதற்கான ஒரு தாகத்தினை தம்முள்ளே கொண்டிருக்கின்றன.

“வசுதைவ குடும்பகம்” என மொத்த உயிர்க்குலத்தையும் ஒன்றிணைந்து வாழச் சொல்லும் லட்சிய நிலைகள் மொழியில் உள்ளன. ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கென மொழி கடத்திக் கொடுப்பது இந்த லட்சிய நிலையை மட்டும்தானோ என்று தோன்றுகிறது. வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மனநிலை காலாவதியாகும் போது அக்காலத்தைய மாமனிதர்கள் மீதான பெருமிதங்களும் அவதூறுகளும் அவசியமற்றவையாகப் போகும் போது குறிப்பிட்ட அக்காலத்திற்கு “சமகாலத்திற்கென” கொடுப்பதற்கு எஞ்சியிருப்பது அது திரட்டிய வாழ்வு குறித்த நோக்கும் அக்காலம் உருவாக்கிய சொற்களும் தான். சில நூற்றாண்டுகளைக் கடந்து இன்று வாசிக்கப்படும் எந்த நூல்களிலும் இந்த அம்சத்தை உணர முடியும்.  அவை தங்கள் மொழி வழியாக சில நோக்குகளை சிந்திக்க வேண்டியவை எனக் கொடுத்துச் சென்றுள்ளன.

ஒரு படைப்பாளி எவ்வளவு சமகாலப் பிரக்ஞை உடையவராயினும் பழமையை மறுப்பவராயினும் எழுத வேண்டும் என்ற உந்துதலை படைப்பாளி அடைவதில் இத்தனை ஆண்டுகளாக மானுடம் தொகுத்த மேன்மைகளின் ஒரு கூறு செயல்படவே செய்கிறது. இன்றைய பின் நவீனத்துவம் வரலாற்றை தொகுக்கப்பட்டவற்றை கட்டுடைத்துப் பார்க்கிறது. எனக்கு அப்படிப் பார்ப்பது ஒரு கடினமான கணிதச் சமன்பாட்டை எதிர்கொள்ளவது அல்லது  ஒரு சிக்கலான அறிவியல் சூத்திரத்தை விளக்குவது போன்றதொரு மூளைச் செயல்பாடு என்று மட்டுமே தோன்றுகிறது. இன்னொரு வகையான வாசிப்புக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எழுத்தின் பின்னிருந்து செயல்பட்ட அதிகாரத்தை கருத்தில் கொள்ளாமல் மனவெழுச்சியைக் கருத்தில் கொள்வது.  ஏன் அந்த வாசிப்பு அவசியம் என்கிறேன் என்றால் ஒரு வலிமையான படைப்பாளியை அவர் எவ்வளவு சமநிலையும் மேதைமையும் கொண்டிருந்தாலும் அவரை எழுதத் தூண்டுவது மனவெழுச்சி என்ற அம்சமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் எழுதுவது இலக்கியமாகிறது. அனைவருக்குமானதாகிறது. சமூகத்துடன் உரையாடுகிறது. நவீனத்துவ படைப்புகள் என்று சொல்லப்படுகிறவை பெரும்பாலும் இந்த “எழுச்சி” நிலையை மறுக்கிறவை. வடிவம், ஆசிரியனின் போதம், சூழலின் நம்பகத்தன்மை, பொருத்தப்பாடு என அனைத்தையும் ஆராய்கிறவை. சுருக்கமாகச் சொல்வதெனில் ஒரு பிறந்த குழந்தையை கையில் வாங்கி அதன் எடையை உடலியக்கத்தை சுவாசத்தை ஆராய்வது போல ஒரு இலக்கியப் படைப்பு படிக்கப்படும் ஒரு மனநிலையை நவீனத்துவம் வளர்த்துவிட்டிருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்தை வாழ்நாளை உறுதி செய்கிற இந்தச் சோதனைகள் அவசியம் எனினும், அனைத்தையும் தாண்டி அதுவொரு குழந்தை. ஒரு புது உயிரைக் கையில் வாங்குகையில் ஏற்படும் ஒரு மனவெழுச்சி நிலையை நம்முடைய நவீனத்துவ பார்வை தடுக்கிறது.

ஒரு படைப்பின் எழுச்சி நிலை உண்மையானதா போலியானதா என்பது மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு படைப்பினை எழுதத் தூண்டுவது படைப்பாளியின் மனவெழுச்சி நிலையே.

இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதில் பித்துநிலையில் எழுந்த கவித்துவச் சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. கவிதைகள் அப்படி மாறிப்போகும் சாத்தியம் கொண்ட நவீன வடிவம். தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல சமகாலத்தில் இருந்து தங்களை வெட்டிக் கொண்டு கவிதைகள் காலங்களை கடந்து விடுகின்றன.

ஆனால் நாவல் ஓர் உரையாடலுக்கென உத்தேசிக்கப்பட்ட வடிவம். ஒரு நாவலின் அல்லது பெரும்புனைவின் எழுச்சி நிலை அவ்வுரையாடல் வழியாகவே உருவாகி வர முடியும். ஒரு நாவலாசிரியனின் எல்லை எது? அவன் கவிஞன் போல “எழும்” கணம் ஒன்றினை படைப்பு முழுவதும் தொடர முடியாது. அவன் எழுத்து மண்ணில் நிற்கிறது. சமூக எதார்த்தம் அல்லது அப்படைப்பு தனக்கென உருவாக்கிக் கொண்ட பிரத்யேக எதார்த்தத்திற்கு நியாயம் செய்வதாகவே ஒரு நாவல் அமைய முடியும். ஆனால் நாவலாசிரியனும் அந்த எழுச்சி நிலையிலேயே தன்னுடைய படைப்பைத் தொடங்குகிறான். இந்த மேன்மைக்கான தேடல் படைப்பை இயக்கும் அதேநேரம் எதார்த்தத்தை மீறிச்செல்ல முடியாத ஒரு கட்டுப்பாடும் நாவலுக்கு உருவாகிவிடுகிறது. தூயலட்சிய நிலைக்கும் எதார்த்தத்துக்கு நியாயம் செய்யும் நிர்பந்தத்துக்கும் இடையே ஒரு படைப்பாளி எவ்வளவு விரைவாக பயணிக்கிறானோ அவ்வளவு கலையம்சம் நிறைந்ததாக அப்படைப்பு உருப்பெறுகிறது. எதார்த்தத்தைக் கட்டமைத்து லட்சிய நிலையைக் கோடிடுவதற்கான நிர்பந்தம் காரணமாகவே  வெவ்வேறு வகையான வடிவங்களுக்குள் நாவல் பயணிக்கிறது.

மார்க்கேஸின் மகோந்தா ஒரு வரலாற்றுச் சூழலைச் சுட்டுவதற்கான நிர்பந்தம் காரணமாகவே உருவாகிறது. ஆனால் அந்த நிலம் அமைக்கப்பட்ட பின் அவரது மனவண்ணங்களை முழுவதுமாக அங்கு உலவவிட முடிவதில்லை. பிரக்ஞை அதை தடுக்கிறது. ஆனால் இந்த எல்லைகளுக்கு நடுவே அப்படைப்பு வெற்றிகரமாக பயணிக்கிறது.

தமிழில் இந்த எல்லைகளுக்கு இடையே பயணித்த நவீனத்துவர்கள் இந்த இரு எல்லைகளுக்கு நடுவே விரிவான பயணத்தை மேற்கொள்ளாததே மிகச்சிறந்த வடிவத்தை அடைந்த அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.குறிப்புகள் போன்ற படைப்புகளைக்கூட ஒருவித சொந்த சாதனையாக நிறுத்தி விடுகின்றன. நவீனத்துவப் போக்கில் மிகச்சிறந்த வடிவத்தை அடைந்த படைப்புகள் என்பதோடு இவற்றின் எல்லைகள் குறுகி விடுகின்றன.அதேநேரம் முற்போக்கு லட்சியவாதத்தை தன்னுடைய தொடக்க காலத்தில் “லட்சிய” நோக்காக கொண்டிருந்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் மிக வெற்றிகரமாக எதார்த்தத்துக்கும் லட்சிய நிலைக்கும் இடையே பயணிக்கிறது.

ஒரு நடைமுறைச் சிக்கலை, தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வாமையை உருவாக்கக்கூடிய சிக்கலைப் பேசு பொருளாக்கியதன் மூலம் எதார்த்தத்தை நெருங்கும் இப்படைப்பு, அதனை அச்சூழலால் ஒரு அடி பிசகாமல் பாதிக்கப்படும் பெண்ணின் குரலில் பேசியிருப்பதால் தமிழில் அதுவரை தொடப்பட்டிராத ஒரு உன்னதத் தளத்தை தன் வடிவம் மூலமாகவே எட்டிவிடுகிறது.

செவிகொடாமல் விடப்பட்ட குரலின் முதல் முழக்கம்

இருத்தலின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று அது நம் மீது சுமத்தியிருக்கும் பண்பாட்டுச் சுமை. சமூகத்தின் ஒவ்வொரு பாத்திரமும் அந்த சமூகத்தில் நீடிப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. “கட்டுப்பாடு” என்று எளிமையாக வரையறுத்துவிட முடியாது. ஒரு சமூகத்தின் நீடித்தலுக்கான தேவை கருதி நன்மையும் தீமையும் தெளிவாக வகுக்கப்பட்டு விடுகின்றன. நேரடியாக அந்த எல்லைகளை சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குள் (குடும்பம் பொருளாதாரம் போன்ற புற அலகுகள் உருவாக்கும் கட்டுப்பாடுகள்) வாழும் ஒரு மனிதன் மீறிவிட முடியாது. மீறுகிறவர்களை கடுமையாக தண்டிப்பதன் விலக்கி வைப்பதன் வழியாக அச்சமூகம் தன் இருப்புக்கான நியாத்தை செய்து கொள்கிறது. ஆனால் சமூகத்தின் உற்பத்தி முறை மாறும்போது அதோடு அதன் கட்டுப்பாடுகளும் வரையறைகளும் மாறியாக வேண்டும். உரையாடல்கள் சாத்தியமாகக் கூடிய ஒரு சமூகத்தில் இந்த வரையறைகள் குறைவானவர்களைப் பலி கொடுத்து குறைந்த சேதாரத்துடன் உருவாகின்றன. உற்பத்தி முறை மாறும்போது புறத்தில் அந்த புதிய உற்பத்தி முறைகளுக்குள் தன்னை பொறுத்திக் கொள்வதில் சமூகம் காட்டும் ஆர்வமும் ஆத்திரமும் அதற்கேற்றவாறு மாறியாக வேண்டிய பண்பாடு சார்ந்த விஷயத்தில் காட்டப்படுவதில்லை.

குலங்களாக மனிதர்கள் ஒருங்கிணையத் தொடங்கிய போது பெண் என்பவள் முக்கியமான உற்பத்தி அலகு. எண்ணிக்கையே ஒரு குலத்தின் திரள்வுக்கு பலம். இன்றுவரை ஒரு உயர்ந்தசாதி ஆண் தாழ்ந்த சாதி பெண்ணை மணந்து கொள்வது நம் சமூகத்தில் இதற்கு மாற்றீடான உயர்சாதிப்பெண-தாழ்ந்தசாதி ஆண் உருவாக்குவது போல பெரும் சலனங்களை உருவாக்காது. காரணம் ஒரு “உற்பத்தி அலகு” அக்குலத்திற்கு வந்து சேர்வது எப்படிப் பார்த்தாலும் லாபம் தான். ஆனால் தன் குலத்தின் உற்பத்தி அலகை கைமாற்றும் போது அதற்கு இணையான ஒரு மாற்று அக்குலத்திற்கு தேவைப்படுகிறது. அது அப்பெண்ணை எந்த குலத்திற்கு அளிக்கிறார்களோ அக்குலத்தின் சமூக அந்தஸ்து சார்ந்தது. இன்று உற்பத்தி முறையும் சமூக ஒருங்கிணைவும் குலத்தொழில் சார்ந்ததல்ல. ஆகையால் பெண்களும் சமூகப் பொரளாதாரத்தில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பு கடந்த ஒரு நூற்றாண்டாக உருவாகி வந்திருக்கிறது.

பொத்தி வைக்கப்பட்டு,  “கணவன்” என்ற பாதுகாப்பான லேபிளை ஒட்டிக் கொண்டு மட்டுமே சமூகத்தில் தலைகாட்டிக் கொண்டிருந்த பெண் மாணவியாக ஊழியராக சமூகத்திற்குள் நுழைகிறாள். ஆனால் அச்சமூகம் தன் மனநிலைகளில் இருந்து முற்றாக வெளிவந்துவிடவில்லை. காட்டின் ஓரத்திற்கு விரட்டப்படாத ஆனால் விரட்டப்பட வேண்டிய   கிழப்புலி போல “மரபு” வலிமையை எதிர்காலத்தை சுதந்திரத்தை வெறுப்புடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறது. அது பெண்ணின் உடலை தொடர்ச்சியாக கண்காணிக்கிறது. அவள் எதை உண்ண வேண்டும் எப்போது மலர வேண்டும் எதற்கெல்லாம் அஞ்ச வேண்டும் எங்கெல்லாம் நாண வேண்டும் என்ற திட்டவட்டமான வரையறையை வகுத்து வைத்திருக்கிறது.

இச்சூழலில் தான் பல நூற்றாண்டுகளாகப் புழக்கடை நீங்கி உலகறியாத குருதியின் தொடர்ச்சியாய் அம்மன் சிலை போன்ற சிறுமியான கங்கா மழை பெய்யும் ஒரு மாலையில் மிரட்சியான விழிகளுடன் தனித்து நின்று கொண்டிருக்கிறாள். ஒரு இளைஞன் அவளை காரில் ஏற்றிக் கொள்கிறான். அச்சூழல் அவ்விளைஞனின் நோக்கு அவளது இயல்பான பெண்மை அனைத்தும் சேர்ந்து அப்பயணத்தை ஒரு புணர்வில் கொண்டுபோய் முடிக்கிறது. அவள் அம்மா அவளுக்கு “தீட்டு கழிப்பதோடு” அக்கினிப்பிரவேசம் என்ற ஜெயகாந்தனின் சிறுகதை முடிகிறது. அதன்பின் கங்கா அச்சம்பவத்தை கருத்தில் கொள்ளாமல் அல்லது ஒரு அந்தரங்க அனுபவமாக தான் மட்டும் அறிந்த ரகசியமாக மாற்றிக் கொண்டு கல்லூரி செல்கிறாள் என ஜெயகாந்தன் அக்கதையை முடித்திருப்பார்.

அதன் தொடர்ச்சியாக ஆனால் அதற்கு நேர் எதிரான ஒரு முடிவுடன் தொடங்குகிறது சில நேரங்களில் சில மனிதர்கள். அன்றிரவு அவள் அம்மா அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஊர் பார்க்க அவளைத் தூற்றுகிறாள். கங்காவின் அண்ணன் அவளையும் கங்காவின் அம்மாவையும் வீட்டை விட்டுத் துரத்துகிறான். தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் நடைபெறாத ஒன்றிற்காகத் தனக்கிழைக்கப்பட்ட அநீதி கங்காவை கசப்பும் தனிமையும் நிறைந்தவளாக மாற்றுகிறது. அக்குரலில் தான் கங்கா நாவல் முழுவதும் பேசுகிறாள். இதுவரை அக்குரல் தமிழ் இலக்கியத்தில் கேட்டதேயில்லை.

தன்னை பதிவிரதையாக நிறுத்திக் கொண்டு பரத்தைகளுக்காக பேசும் குரலோ பரத்தையாகவே நின்று பச்சையாக சமூகத்தை வசை பாடும் குரலோ ஒலித்திருக்கலாம். ஆனால் இரண்டுமே உள்ளீடற்றவை. கங்கா பரத்தையோ பதிவிரதையோ அல்ல. ஒரு விபத்தின் வழியாக இரண்டையும் கடந்து அவள் “இன்றுக்கு” வந்து விடுகிறாள். வாழ்வின் முதல் திருப்பமே ஒரு ஆணுடலால் நிகழ்ந்ததான அச்சம்பவத்தில் தொடர்புடையவனை வஞ்சகனாக எண்ண முடியாத தவிப்புடன் யாரையும் வெறுக்க முடியாத குழப்பத்துடன் ஆண்களை அஞ்சும் பதற்றத்துடன் தான் கங்கா பேசுகிறாள். அக்குரல் இதுவரை கேட்டறியாதது. நடுக்குற வைப்பது. லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் இடையே அச்சுறுத்தும் வேகத்தில் பயணிப்பது.

“எப்படி என்னைப் பாத்து இவாளுக்கு இப்படி தோணறதோ? என்னைப் பாத்து அப்படியெல்லாம் தோணப்படாதுன்னு நான் ஜாக்கிரதையா இருக்கறதனாலேயே அப்படியெல்லாம் தோணறதா? நான் பாத்த எல்லா ஆம்பளைக்கும் என்கிட்டே இப்படி தோணறதே; ஆமாம்; எல்லா ஆம்பளைக்கும்…ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா..ரொம்ப யோக்கியன் தான்! நேக்கு அண்ணனா இருக்கிற உறவு நடுவிலே நின்னு தடுக்கறது”.

ஒரு மழையிரவில் ஏற்பட்ட விபத்து அல்லது மீறலுக்குப் பிறகு பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து கங்கா இப்படித்தான் நம்மிடம் அறிமுகம் கொள்கிறாள். அண்ணன் அப்பா உட்பட அத்தனை பேரையும் ஆணாக மட்டுமே பார்க்க முடிகிறவளாக. அவள் அந்த மீறலில் திளைக்கவோ தன் மீது குற்றவுணர்வு கொண்டு குறுகவோ இல்லை. மாறாக அதனை ஒரு தொடக்கமாகக் கொண்டு உழைக்கிறாள். அவ்வுழைப்பு அவளது லட்சிய நிலை. ஆண்கள் மீதான அவளது நடைமுறைப் பார்வை மரபு அவளுக்கு இழைத்ததாக நினைக்கும் தீமைக்கான பதிலீடு.

முரண்களால் இயக்கப்படும் நாயகி

அம்மா கொதித்தெழுந்ததால் அவள் நிலையை ஊர் அறிய நேரிடுகிறது. குன்றிப்போய் அவமானப்பட்டு கங்காவுடைய அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணனான வெங்கட்ராமைய்யரிடம் கங்காவும் அவள் அம்மாவும் அடைக்கலமாகின்றனர். அவரும் அவளை மேற்கொண்டு படிக்க வைக்கிறார். ஆனால் அதற்கு வெங்கட்ராமைய்யர் எதிர்பார்ப்பது கங்காவின் மனதை. அதன் வழியாக அவளது உடலை. உண்மையில் இந்த நாவலின் மிகுந்த வெற்றிகரமான சித்தரிப்பு வெங்கட்ராமைய்யருடையது தான். ஒவ்வொரு கருத்தியலும் பிசிறே இல்லாத எதையும் தர்க்கத்தின் வழியே நிறைவு செய்துவிடக்கூடிய ஒரு தூய்மையான வெற்றிகரமான அயோக்கியனை உருவாக்கி இருக்கும். நம் மரபில் ஊறிப்போன வக்கிரங்களின் பிரதிநிதியாக வெங்கட்ராமைய்யர் சித்தரிக்கப்படுகிறார்.

“இதோ தனக்கு எழுபது வயசு ஆகறதுங்கற ஒரு போர்வைக்கு வெளியிலே – பாக்கறவா கண்ணுக்கு ஒரு தாத்தா பேரப்பொண்ணைக் கொஞ்சற மாதிரி ஒரு வாத்ஸல்யம் காட்டிண்டு அந்த போர்வைக்குள்ளே இந்த கிழடு எவ்வளவு போக்கிரியாய்,பஸ்ஸிலே வந்து மேலே சாய்கிற காலியை விடவும் படுகாலியாய், காரிலே ஏத்திண்டு போனானே அவனை விடவும் ‘வுமன் ஹண்ட்டராய்’ இருக்குன்னு நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னா என்னைப் பெத்தவளே என்னை நம்பமாட்டா. ஆனாக்க என் மனசுக்கு தெரியறது. இந்த மாமா புலிகிட்டே எனக்கு நன்றியுணர்ச்சியும் இருக்கு. பாவ உணர்ச்சியும் இருக்கு”

இவ்வுணர்வுக்களுக்கு இடையே நாவல் முழுவதும் தத்தளிக்கிறாள் கங்கா. அவள் மாமாவிற்கு அவள் மேலிருக்கும் வாஞ்சை அவளுக்கு ஏற்பட்டு போன நிலையால் இவள் பணிந்து விடுவாள் என்ற எண்ணத்தை அளிக்கிறது. அவள் அம்மாவிடமும் அவளுக்கு இந்த விருப்ப விலக்க உறவே உள்ளது. தன் வாழ்வை சீரழித்தவள்-தன்னுடனேயே இருப்பவள் தன்னுடைய அம்மா எனும் இருமை. கங்கா தன் வாழ்வில் நடந்தது போன்ற நிகழ்வினைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கதையை வாசிக்கிறாள். அக்காதாசிரியனின் வழியாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் அவளுடன் பந்தப்படுத்திக் கொண்ட பிரபுவை அவள் சந்திக்கிறாள். அவனுடனும் அவளுக்கிந்த விருப்ப-விலக்கம் நீடிக்கிறது. அதன் வழியாகவே மெல்ல மெல்ல பிரபுவை அவள் அறிகிறாள். பன்னிரண்டு வருட கல்வியும் வாழ்வனுபவமும் அவளை நிதானமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன. அதேநேரம் மெல்ல மெல்ல பிரபுவை நோக்கி அவள் ஈர்க்கப்படுகிறாள். தன்னை காரில் ஏற்றிக் கொண்ட போதே பரிசுத்தமான பொறுக்கியாக மாறிப் போயிருந்த ஒருவனை பணக்கார மைனர் என்பதைத் தவிர வேறு தகுதிகள் அற்றவனை மனைவியும் வயதுக்கு வந்த ஒரு மகளும் இருப்பவனை நோக்கி கங்கா ஈர்க்கப்படுகிறாள். விலக்கிவிட முடியாத தர்க்கங்களுக்குள் அடைத்துவிட முடியாத ஈர்ப்பு அது.

ஒன்றி வாழ்வதற்கான தவிப்பும் ஒன்றாமல் நிற்க வைக்கும் எதார்த்தமும்

பிரபுவும் அவன் மகள் மஞ்சுவும் கங்காவின் வீட்டிற்கு வரும் சமயம், அவர்களுக்கு காஃபி கொண்டு செல்லும் போது கங்கா தன்னை மணப்பெண்ணாக கற்பனை செய்து கொண்டு சிரிக்கிறாள். தனிமையில் படுத்திருக்கும் மற்றொரு சமயம் தலையணையை வருடிக்கொண்டே தன்னையொரு தாயாக கற்பனை செய்து கொள்கிறாள்.

தன் வாழ்வின் ஒரு இரவில் நிகழ்ந்த தலைகீழாக்கத்தை தவிர்த்துவிட்டால் அவள் இச்சமூகத்துடன் அதன் சராசரித் தனங்களுடன் ஒன்றி வாழவே விழைந்திருக்கிறாள். அவளுடைய பெண்மை இரண்டு வகையில் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட அந்த இரவில் அவள் இச்சமூகத்தால் தன்னுடைய ரசனையும் அழகுணர்வும் நுண்மையாக அவமானப்படுத்தப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஆனால் அவளது ரசனையை அவள் வாழ்ந்த சூழலே கட்டமைத்துள்ளது. மீண்டும் மீண்டும் தன்னால் அச்சூழலுக்கு திரும்பிச் செல்ல முடியாது என எண்ணுவதன் வழியாக அவள் விழைவது அந்தச் சூழலைத்தான் எனப் புலப்படுகிறது. ஏனெனில் “பொருளுடைய வாழ்க்கை” என சமூகம் எதை கட்டமைத்து வைத்திருக்கிறதோ அதை சமரசமும் கள்ளமும் இல்லாமல் கங்கா அடைய விழைகிறாள். அது சாத்தியம் இல்லை எனும் போது அவள் வாழ விரும்பும் சூழலைக்கூட மெல்லிய விழி விரிப்புடன் விலகிக் கடந்து விடுகிறாள்.

பிரபுவை மறுபடியும் சந்தித்த பிறகு அவளுடைய ரசனைகள் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன. வேறொரு வகையில் அவனுடன் இணைந்து இச்சமூகத்தை எதிர்கொள்ள விழைகிறாள். ஒரு எல்லையில் அவனது “கான்குபைனாகக்” கூட.

மலரும் காதல்

கங்காவின் பாத்திர வார்ப்பு மிகச் சிக்கலானதாக இருக்கிறது. அவள் வெறுப்பினை உமிழ்கிறவளாக இருப்பதில்லை. ஆனால் மௌனமாக அனைத்தையும் எதிர்க்கிறாள். பிரபுவின் வாழ்க்கைக் கதையை அறிந்த பிறகு அவனது விட்டேத்தித்தனம் அவளை கனிவு கொள்ளச் செய்கிறது.  அவ்வுறவை எப்படி வரையறுப்பது எனத் தெரியாமல் அவள் தத்தளித்த வண்ணமே இருக்கிறாள். அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வு வளருந்தோறும் கங்காவின் மொழியில் ஏற்படும் மாற்றம் வியக்க வைக்கிறது. கதை சொல்லியாக பேருந்தில் இடிப்பவனை சபித்தபடியே எரிச்சலுடன் தொடங்கும் அவளது மொழி பிரபுவின் மகளிடம் தான் யார் என்பதை வெளிப்படுத்தும் போது ஆழ்ந்த நிதானம் கொள்கிறது.

பிரபு முதன்முறையாக காதலுடன் ஒரு பெண்ணிடம் நடந்து கொள்ளத் தொடங்குகிறான். கங்காவும் அவனை “மை மேன்” என்றே எண்ணுகிறாள். அவளுக்கு உறவென இருந்த அம்மா தள்ளிப் போகிறாள். வெங்கட்ராமைய்யர் அவளை மூர்க்கமாக நெருங்க வரும்போது பிரபுவின் மீதான காதலே அவரை அப்பட்டமாக அவமதித்து விலக்கி நிறுத்துவதற்கான தைரியத்தை கங்காவிற்கு அளிக்கிறது. பிரபுவின் மனதை மிக நுட்பமாகத் தொடர்ந்து செல்லக்கூடியவளாக கங்கா மாறிப் போகிறாள். அவளைப் போலவே பன்னிரெண்டு வயதில் ஏற்பட்ட பாலியல் அதிர்ச்சி அவனை ஒரு மைனராக மாற்றியிருக்கிறது.

எல்லாமும் மெல்ல உச்சம் நோக்கி நகர்கின்றன. கிளப்பில் ஏற்பட்ட ஒரு அவமானத்தை பிரபு கங்காவிடம் சொல்லி ஆற்றிக் கொள்கிறான். அவனுடைய மனதைப் பற்றிக் கொண்டு வெகுதூரம் பயணித்து விடுகிறாள் கங்கா. அவர்களுடைய தொலைபேசி உரையாடல் கூட அடையும் அந்தரங்கத் தொனி புரிந்துணர்வு உள்ள இருவருக்கு இடையே இருக்கும் கண்ணியமான நட்பு என கங்காவின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கான பிடிவாதமும் சரியாகத் தளரத் தொடங்குகிறது. அதேநேரம் அவள் வேறொரு ஆணை, அவள் நிலையை நன்குணர்ந்த ஆணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை நிர்பந்தம் உருவாகிறது. ஒரு வகையில் இவளே அதை உருவாக்குகிறாள். பிரபு தன் மீது கொண்டிருக்கும் அன்பினை சோதிக்க அவளது ஆழம் விழைந்திருக்கலாம். பிரபுவும் அவளை வேறு மணம் புரிந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தவே, அவளது லட்சிய நிலை உடைந்து நொறுங்குவதுடன் கங்கா வீழ்ந்து படிவதுடன் நாவல் முடிகிறது.

துரத்தும் தனிமை

லட்சியவாதம் என நாம் வரையறுத்துக் கொள்வது என்ன? சமரசத்துடன் எட்டக்கூடிய தீர்வுகளை மறுத்து ஒன்றில் நிலை கொள்வது. அப்படி ஒன்றில் நிலை கொள்வதெற்கென அதை நோக்கிய பயணத்தில் செய்யப்படும் சமரசங்கள் வேறு. ஆனால் அந்த ஒன்றில் அல்லாமல் அதற்கு சற்று மாற்றான ஒன்றில் கூட நிலை அமைய முடியாத ஒரு பிடிவாதத்தைத் தான் இன்று நாம் லட்சியவாதம் என வரையறுத்துக் கொள்கிறோம். இக் கட்டுரையின் தொடக்கத்துக்கு தற்செயலாக வந்துவிட்டோம். கங்காவும் அந்த உச்சத்தில் தான் நிற்கிறாள். தேர்வுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் இடமே இல்லாத உச்சப்புள்ளி அது. தன்னை உடைத்தெறிந்த ஒரு சமூகத்திடமிருந்து தன்னையே திரட்டிக் கொண்டு அவள் சென்று நிற்கும் இடம் அது.

நாவல் முழுக்கவே கங்காவின் தனிமை பேசப்படுகிறது. மனதில் துயரை நிரப்புகிறது அவளது தனிமை. ஆனால் அது அவளே உருவாக்கிக் கொள்வது. ஒரு சிறு சமரசம் அவள் தனிமையை போக்கியிருக்கக்கூடும். ஆனால் அவள் அதை விழையவில்லை. அனைவரிடமிருந்தும் தன்னை கழித்துக் கொண்டு ஒரு இடத்துக்கு சென்று நிற்கிறாள்.

உண்மையில் இந்த நாவல் கங்காவின் மலர்ச்சியில் தான் தொடங்குகிறது. தனக்கானவனுக்காக மட்டுமே மலரக்கூடிய ஒரு தன்மை அவளில் வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாடு மீண்டும் மற்றொரு முகத்தில் அறையும் எதார்த்தத்தால் பொருளிழந்து அழிகிறது. உண்மையில் லட்சியமும் எதார்த்ததமும் பெண்ணுடல் என்ற உருவகத்தை வைத்து உக்கிரமாக மோதிக்கொள்ளவதாகவே நான் இந்த நாவலை வாசிக்கிறேன். அவ்வாசிப்பினை கொடுக்க முடிகிறதா என நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard