New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எது நமது தமிழ்ப் புத்தாண்டு? எஸ்.ராமச்சந்திரன்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
எது நமது தமிழ்ப் புத்தாண்டு? எஸ்.ராமச்சந்திரன்
Permalink  
 


எது நமது புத்தாண்டு?

-எஸ்.ராமச்சந்திரன்

புத்தாண்டு சிறப்புக் கட்டுரை- அட்டைப்படக் கட்டுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்று அண்மையில் பேசியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வருவது, சட்டம் இயற்றுவதெல்லாம் இருக்கட்டும்; தமிழ் மரபு எது என்று முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.

திண்ணை.காம் இணைய இதழில் 17.04.2006 அன்று  ‘சித்திரையில்தான் புத்தாண்டு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தி.மு.க அரசு (2006-2011) தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு எனச் சட்டமன்றத்தில் சட்டமியற்றியபோது இக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்  ‘தினமணி’ நாளிதழில் வெளிவந்தது. அதன்பிறகு, ஓகை நடராஜன் போன்ற நண்பர்களுடனான கலந்துரையாடலின் விளைவாகப் பல புதிய கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான விடைகளும் கண்டறியப்பட்டன. அந்த அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முதலில் ஆண்டு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். சம்ஸ்க்ருதத்தில் வழங்குகிற வருஷம் என்ற சொல் மழைக்காலத்தைக் குறிக்கிற வர்ஷருதுவைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பெயர். அதாவது கடுங்கோடை முடிந்து மழைக்காலம் தொடங்குகிற ஆவணி மாதத்தில்தான் ‘வர்ஷம்” பிறக்கும். வருடம் என்று தமிழில் இச்சொல் வழங்கினாலும், மழைக்காலத் தொடக்கத்தை வருடப் பிறப்பாகக் கொள்வதில்லை. சம்ஸ்க்ருதத்தில்  ‘சம்வத்ஸரம்’  என்ற சொல்லே ஆண்டு என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், இவ்வாறு ஆவணி மாதத்தை ஆண்டுப் பிறப்பாகக் கருதுகிற ஒரு மரபு இருந்துள்ளது என்பதற்கு தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சான்றளிக்கிறார்.

தொல்காப்பியம் (அகத்திணையியல், நூற்பா-5) திணைகளை வரிசைப்படுத்துகிறபோது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறிவிட்டு, அடுத்ததாக அவற்றுக்குரிய பருவங்களை வரிசைப்படுத்தும்போது கார்காலம் தொடங்கி வரிசைப்படுத்தப்படுகிறது. இதற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர், சிங்கவோரை தொடங்கி கற்கடகவோரை முடிய ஓர்யாண்டாதலின் தொல்காப்பியர் இவ்வாறு வரிசைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார் (1).

சிங்க ஓரை என்று சிம்ம ஞாயிற்றையும் (ஆவணி மாதத்தையும்) கற்கடக ஓரை என்று கடக ஞாயிற்றையும் (ஆடி மாத்த்தையும்) அவர் குறிப்பிடுகிறார். ஓரை என்ற சொல் சூரியனைக் குறிக்கும்  ‘ஹோரஸ்’ என்ற எகிப்தியச் சொல்லிலிருந்து கிரேக்க மொழி வழியாகத் தமிழில் நுழைந்து திரிந்தது இச்சொல் என்று கருதப்படுகிறது (2).

அந்த அடிப்படையில் தான் சிம்ம ஞாயிறு எனப்பட்ட ஆவணி மாதத்தில் யாண்டு தொடங்கிற்றென்ற கருத்தினை நச்சினார்க்கினியர் பதிவு செய்கிறார். ஆனால் இந்தக் கருத்தே தமிழகத்தில் நிலவிய புத்தாண்டு குறித்த கருத்து என்று அவர் குறிப்பிடவில்லை.

”யாண்டு” என்ற சொல்லை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தோம். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘யாண்டு” என்ற வழக்கே இடம் பெற்றுள்ளது (3). யானை என்ற சொல் ஆனை என்று வழங்குவது போல  ‘யாண்டு” என்ற சொல்லே ஆண்டு என்று திரிந்திருக்க வேண்டும். அப்படியானால் யாண்டு என்ற சொல் எந்த அடிப்படையில் தோன்றியிருக்கும் என்று ஆராய்வது தேவை.

மனிதன் குகைகளில் தங்கி வேட்டையாடிய காலத்திலேயே பருவங்களைக் கணிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். வேனிற்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற மூன்று பருவங்கள் கொண்ட முழுமையான சுழற்சியையே யாண்டு வட்டம் அல்லது ஆட்டைவட்டம் என்றனர். வேனிற்காலம் தொடங்குவதை, மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கொண்டு கணித்தனர். இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற பருவம் என்ற புரிதலில் இளவேனிற் பருவத்தை யாணர் என்றும் யாணர்ப் பருவம் என்றும் குறித்திருக்க வேண்டும்.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் நூற்பா- 81, “புதிது படற் பொருட்டே யாணர்க் கிளவி” எனக் கூறுகிறது. யாணர் என்ற சொல்லுக்குப் புதிது என்று பொருள். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் யாணர் என்பது புதிய பூ, புதிய விளைச்சல் என்ற பொருள்களில் வழங்குகிறது.  ‘யாணர் கோங்கின் அவிர் முகை” என்று சிறுபாணாற்றுப்படை (வரி-25) கூறுகிறது. புதியனவாக மலர்ந்த பூக்களில் தேனருந்தும் வண்டு ‘யாணர் வண்டு” என்று கூறப்படுகிறது (நற்றிணை-30). புதிய விளைச்சல்- இந்தி மொழியில் ‘கலியானா” என்ற சொல்லுக்குப் புதிதாக அரும்பும் மொட்டு என்று பொருள் (4).

பனிக்காலத்தில் நீர்ப்பூக்களே பெரும்பாலும் மலரும். கோட்டுப்பூ, கொடிப்பூ எனப்படுகிற அனைத்து வாகை மலர்களும், இளஞ்சூடு பரவித் தென்றல் காற்று வீசத் தொடங்கும்போது தான் மலரும். வண்டுகள் பறக்கத் தொடங்கித் தேனருந்தும் நோக்கத்துடன் மலர்களில் அமர, அதன் மூலம் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதுதான் இளவேனிற் பருவத்தின் தனித்தன்மையாகும். இவ்வாறு வண்டுகள் தேனருந்துவது  ‘புதிதுண்ணுதல்” எனப்பட்டது. இளவேனிற் பருவத் தொடக்க நாளில் தினைக்கதிர்களை அறுத்து, காட்டுப் பசுவின் பாலில் பொங்கித் தினைப் பொங்கல் அருந்துவது குறிஞ்சிநிலக் குறவர்களின் வழக்கம். கர்நாடக மாநிலத்திலுள்ள குதிரை மலையின் (குத்ரேமுக் பர்வதம்) அரசன் பிட்டங் கொற்றன். அவனது ஆட்சிப் பகுதியில் வாழ்ந்த குறவர்கள், மழைக்காலம் முடிந்த பின்னர், பனிக்காலத் தொடக்கத்தில் ஈரநிலத்தில் தினை விதைப்பார்கள். தினை நன்கு வளர்ந்து முற்றிய பின்னர் அதனை அறுவடை செய்து காட்டுப்பசுவின் பாலில் அதனைச் சமைத்து, பூத்துக் குலுங்குகிற வேங்கை மரநிழலில் அமர்ந்து கூட்டாக உண்பதை  ‘யாணர் நாள் புதிது உண்பார்கள்” என்று புறநானூறு (பா-168) கூறுகிறது.

மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில்  ‘யாணர்நாள் புதிதுண்பார்” என்ற வரி வருவதால் மட்டும் இந்நாள் இளவேனிற் பருவத்தில் தொடக்கநாள் என்று எப்படி முடிவு செய்ய இயலும்? என்றால் உறுதியாக முடியும். தினை வளர்கிற பருவம் என்பது பனிக்காலம்தான். பனிக்காலமாகிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் குறிஞ்சிநில மகளிர் தினைப் புனக் காவலுக்குச் செல்வது நீடிக்கும் (5). ஆதலால் இக்காலகட்டத்தில்தான் களவு மணம் (குறிஞ்சித் திணையின் உட்பொருள்) நிகழும். பங்குனி உத்தர நாள் என்பதே பனிக்கால இறுதிநாள். அந்த நாளில்தான் வேங்கை மரத்தடியில் முருகன் வள்ளியை மணம் புணர்ந்தான். இந்த அடிப்படையில் பார்த்தாலும் யாணர்ப்பருவம் என்பது இளவேனிற்பருவத்தை- வசந்தருதுவையே- குறித்தது என்பதும், யாணர் நாள் என்பது சித்திரை முதல் நாளைக் குறித்தது என்றும் தெரிய வருகின்றன. குறிஞ்சி நிலத்தில் வேங்கை மலர்வதை வைத்து ஆண்டுப் பிறப்பைக் கணித்தனர். எனவே  ‘கணிவேங்கை” என்றே வேங்கை மரம் குறிப்பிடப்பட்டது.

இப்போது, கணியர் எனப்பட்ட ஜோதிடர்கள் குறித்து ஆராய்வோம். மலைக்குகைகளில் மனிதன் வாழ்ந்த போதே இரவு நேரங்களில் நிலவையும் உடுக்கணங்களையும்- விண்மீன் குழுக்களையும்- கூர்ந்து நோக்கிக் காலம் கணித்துக் கொண்டான். நிலவுக் கணிதமுறையே மிகப் பழமையான காலக் கணித முறை என்பதை மானிடவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். எந்த விண்மீன் குழு (constellation) முழுநிலவு (பௌர்ணமி) நாளில் நிலவுடன் தோன்றுகிறது; எந்த விண்மீன் குழு மதிநிறைவு (அமாவாசை) நாளில் கீழ்த்திசை வானில் அந்தி நேரத்தில் தோன்றுகிறது என்பதைக் கணிப்பதன் மூலம் ஆட்டை வட்டத்தின் 360 பாகைகளின் 12 கூறுகளை – 30 பாகை கொண்ட மாதங்களை – அடையாளப்படுத்தினர்.

மனிதகுல மூதாதையர், வேனிற்பருவம் என்பது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என்ற நான்கு மாதங்கள் கொண்டது என்றும், மழைப்பருவம் என்பது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்கள் கொண்டதென்றும், பனிப் பருவம் என்பது மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற நான்கு மாதங்கள் கொண்ட்தென்றும் கணித்தனர் (6). வள்ளுவர் எனப்பட்ட கணியர் சமூகத்தவரின் தோற்றம் இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.

நாள்மீன் என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும். கோள்மீன் என்பது கிரகங்களைக் குறிக்கும். ‘நாள் மீன் விராய கோள்மீன் போல’ என்று பட்டினப்பாலை (வரி-67) குறிப்பிடுகிறது. நாள் என்பது நட்சத்திரத்தோடு தொடர்புடையது. (அண்மைக்கால வரலாற்றில், திருவிதாங்கூர் அரசர்களை அனுஷம் திருநாள், கார்த்திகைத் திருநாள் என்று அவர்கள் பிறந்த நட்சத்திரம் பெயராலேயே அழைக்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்). மாதம் என்ற சொல், மதி என்ற சொல்லிலிருந்து உருவானதே. தமிழில் திங்கள் என்பது நிலாவையும் மாதத்தையும் குறிக்கும்.

பழந்தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம், நாள் என்று நட்சத்திரத்தையும், திங்கள் என்று மாதத்தையும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் சொல்லதிகாரம், உயிர் மயங்கியல் நூற்பாக்கள் 45,46:

‘நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு  

ஆன் இடைவருதல் ஐயம் இன்றே

 திங்கள் முன்வரின் இக்கே சாரியை

மேற்படிச் சொல்லதிகாரம் புள்ளிமயங்கியல் நூற்பா 36:

“நாட்பெயர்க் கிளவிமேல் கிளந்தன்ன

அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றே

ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்”

இந்நூற்பாக்களின் மூலம், நட்சத்திரப் பெயர்கள் இகர- ஐகார உயிர் மகர மெய்யுடன் முடிவடையும் என்றும், மாதப்பெயர்கள் இகர- ஐகார உயிருடன் முடிவடையும் என்றும் தொல்காப்பியம் குறிப்பால் உணர்த்தியுள்ளது எனத் தெரிய வருகிறது. அதாவது அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் முதலான 27 நட்சத்திரப் பெயர்களையும், சித்திரை, வைகாசி முதலான 12 மாதப் பெயர்களையும் நாம் இன்று வழங்குவது போன்றே சங்க்காலத் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் எனத் தெரிகிறது.

நிலவுக் கணித முறையே பழந்தமிழர் மரபென்றால் பரிதிக் கணித முறை (Solar Calender) தமிழர் மரபல்ல எனக் கூற முடியுமா? அவ்வாறு கூறிவிட இயலாது. ஆனால் பரிதிக் கணிதமுறை என்பது பாகை (degree) கணக்கு. அதாவது சூரியனின் ஒளிபடுகிற பொருளின் நிழல், வட்டத்தின் எந்தப் பாகையில் விழுகிறது என்பதைக் கொண்டு நாளைக் கணிக்கிற கணக்கீடு ஆகும். இது விஸ்வ பிராமணர் எனப்பட்ட தச்சர்- கொல்லர் சமூகத்தவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கணித முறையாகும். தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கிற நெடுங்கணக்கு, எண்கணிதம் கற்பிக்கிற கீழ்க்கணக்கு ஆகியவற்றை எண்ணையும் எழுத்தையும் கற்பிக்கின்ற கணக்காயர்களாக இருந்தவர்கள் விஸ்வ பிராமண சமூகத்தவர் ஆவர். சங்கு அறுத்து வளையல் செய்கிற விஸ்வ பிராமண சமூகத்தவராக திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்படுகிற நக்கீரர், மதுரைக் கணக்காயனார் மகனார் என்று அறியப்பட்டவராவார். இதன்பொருள், எண்ணும் எழுத்தும் கற்பிக்கிற ‘ஆச்சாரியர்கள் வம்சத்தவர் நக்கீரர்’ என்பதே. நக்கீரரால் இயற்றப்பட்ட நெடுநல்வாடையில் (வரி: 160-1)

‘திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக  

விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்’  

-என்று சூரிய மண்டலம் குறிப்பிடப்படுகிறது.

மேஷம் (ஆடு) முதலாகச் சூரியனைத் தலைமைக் கோளாகக் கொண்டு நவகோள்களும் சுற்றிவருகிற 12 வீடுகள் என்பது இதன் பொருளாகும். சூரியன் மேஷம் என்ற வீட்டில் இருக்கிற 30 நாட்களும் மேஷ ஞாயிறு எனப்படும். 27 நட்சத்திரங்களுள் சித்திரை நட்சத்திரம் துலாம் என்ற வீட்டில் அடங்கும். துலாம் என்ற வீடு, மேஷம் என்ற வீட்டிற்கு நேர் 180 பாகையில் உள்ளதாகும். எனவே மேஷம் என்ற வீட்டில் சூரியன் இருக்கையில் துலாம் என்ற வீட்டிலுள்ள சித்திரை நட்சத்திரத்துடன் சந்திரன் சேர்கிற நாளில்தான் பௌர்ணமி (முழுநிலவு) அமையும். எனவேதான் மேஷஞாயிறு என்பது பரிதிக் கணித முறைப்படியிலமைந்த பெயரென்றும் சித்திரைத் திங்கள் என்பது அதே மாதத்தை நிலவுக் கணித்த்தின் அடிப்படையில் குறிப்பிடுகிற பெயர் என்றும் கூறுவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: எது நமது தமிழ்ப் புத்தாண்டு? எஸ்.ராமச்சந்திரன்
Permalink  
 


மதுரைக் கணக்காயனார் வம்சத்தவரான நக்கீரரால் இயற்றப்பட்ட நெடுநல்வாடையிலேயே, மனையடி சாஸ்திரம் எனப்படும் கட்ட்டக் கலை வல்லுநர்களான விஸ்வ பிராமணர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட பாகைக் கணக்கீடு கொண்டே மனை வகுத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் 

 இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு  

 ஒரு திறஞ்சாரா அரைநாள் அமயத்து

 நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்      

தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்      

பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவருத்து

(நெடுநல். 73-78)

(நூலறி புலவர் = கட்டடக் கலை வல்லுநர்)

அதாவது ஒரு வட்டத்தை 360 கூறுகளாகப் பகுத்து சூரியன் நேர்கிழக்கே தோன்றி நேர்மேற்கே மறைகிற 2 நேரெதிர்ப் பாகைகளுள் ஒரு பாகை வருகிற நாளில் உச்சி வெயிற்காலத்தில் நிலத்தை அளந்து அரண்மனை வகுப்பர் என்பது இதன் பொருள். 360 பாகைகளுள் சூரியன் நேர் கிழக்கே தோன்றி நேர்மேற்கே மறைகிற 2 நாள்கள் சித்திரை முதல் நாளும், ஐப்பசி முதல் நாளுமேயாகும். இவ்விரண்டு நாள்களையும் விஷூக்கள் என்றனர் (ஆங்கிலத்தில் Equino). இந்நாள்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். சூரியன் வடகிழக்குக் கோடியில் உதிக்கிற நாள் என்பது ஆனிமாத இறுதிநாள். இந்நாளில் பகற்பொழுது நீண்டு இருக்கும்.

இதற்கு அடுத்தநாளான ஆடி மாத முதல்நாள் தட்சிணாயன நாளாகும். இதுபோன்று தென்கிழக்குக் கோடியில் சூரியன் உதிக்கின்ற நாள் மார்கழி மாத இறுதிநாளாகும். அன்றுதான் இரவுப் பொழுது மிக நீண்டிருக்கும். இதற்கு அடுத்த நாளான தைமாத முதல்நாளே உத்தராயணத் திருநாளாகும். இவ்விரு நாள்களும் அயன நாள்களாகும். வானநூலை அடிப்படையாகக் கொண்ட சோதிட சாஸ்திரத்தின்படி, மேஷவீட்டில் சூரியன் உச்சமடையும். எனவே இந்த மாதமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட பரிதிக் கணித முறைப்படி முதல் மாதமாகிறது.

நவகோள்களுள் சூரியன் முதன்மையானது. பொ.யு.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தமது தேவாரம்- கோளறு பதிகத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பிரண்டுடனே (ராகு- கேது) என்று வரிசைப்படுத்துகிறார். இந்த அடிப்படையில் பார்த்தாலும் சூரியனின் உச்ச வீடாகிய மேஷம் (மேஷ ஞாயிறு) முதல் மாதமாகிற பொருத்தப்பாடு விளங்கும்.

குறிஞ்சித் திணைக் குறவர்கள், இளவேனிற் பருவத் தொடக்கத்தில் புதிதுண்பர் என்று புறநானூறு குறிபிடுவதை முன்னரே கண்டோம். பொ.யு.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் (திருமொழி – 5:3:3)

புனத்தினை கிள்ளிப் புதுஅவிகாட்டி உன்

பொன்னடி வாழ்க என்று  

இனக்குறவர் புதியதுண்ணும்      

எழில் மாலிருஞ்சோலை எந்தாய்

என்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை அழகர், மதுரையில் நடைபெறுகிற சித்திரைத் திருவிழாவில் பங்கேற்பது மரபு. இது, திருமாலிருஞ்சோலைக் குறவர்கள் சித்திரை மாதத் தொடக்கத்தில் புதிதுண்ணும் விழாக் கொண்டாடி வந்த மரபின் தொடர்ச்சியே.

சங்க இலக்கியமான கலித்தொகை, இளவேனிற் பருவத் தொடக்கத்தில் 3 விதமான புதிதுண்ணல் நிகழ்வுகள் நடந்தேறின எனக் கூறுகிறது. இருந்தும்பி விருந்துண்ணல் (7), அதாவது வண்டுகள், புதிய பூக்களில் தேனுண்ணுதல், இளவேனிற் பருவத் தென்றலை அனுபவித்துக் கொண்டு காதலர்கள் புது இன்பம் நுகர்தல் (8), இவற்றோடு, மதுரைத் தமிழ்ச் சங்கம் இளவேனிற் பருவத்தில் கூடும்போது புலவர்கள் புதியன புதியனவாகக் கவிதைகளைப் புனைந்து நுகர்தல் (9) ஆகியன இத்தகைய புதிதுண்ணல்கள் ஆகும். புலவர்கள் புதிதுண்ணுதல் பின்வருமாறு கூறப்படுகிறது:

“நிலன்நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்  

புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?”

(கலி. 34:17-18)

(செவிக்குணவு என்று திருவள்ளுவர் கூறுவது நம் நினைவுக்கு வரும்). இவ்வாறு மதுரை தமிழ்ச் சங்கம் இளவேனிற் பருவத்தில் கூடும்போதுதான், பாண்டிய மன்னன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறான். குறுந்தொகையில் 2-ஆம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ள இறையனாரின்  ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’  எனத் தொடங்கும் பாடலை மையமாக வைத்து உருவான திருவிளையாடல் இந்தத் தருணத்தில்தான் நிகழ்ந்தது.

புத்தாண்டின் மலர்ச்சி- சரக்கொன்றை

இவ்வாறு, இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் இளவேனிற் பருவமே பருவங்களுள் தலைமைப் பருவமாகக் கருதப்பட்டது. அதனால்தான் படைப்பின் குறியீடாக இப்பருவத்தின் தொடக்க நாளான சித்திரை மாத முதல் நாள் ஆண்டுத் தொடக்கமாகக் கருதப்பட்டது.. பகவத் கீதையில் (10:35) கண்ணன், ‘பருவங்களுள் நான் பூக்களை உருவாக்கும் இளவேனிற் பருவம்’ (ருதூனாம் குஸூகமாகரம்) எனக் கூறும் காரணம் இதுவே. இதே ஸ்லோகத்தில் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றும் கண்ணன் கூறுகின்றான். மார்கழி மாதம் என்பது ஓராண்டினை ஒருநாளாகக் கொண்டால் விஸ்வபுருஷனின் பிரம்ம முகூர்த்தம் (உதயத்துக்கு முன்னர் 5 நாழிகை நேரம்) என்ற அடிப்படையில் கண்ணன் இவ்வாறு கூறியுள்ளான். மேலும் மழைக்கால சாதுர்மாஸ்ய (ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை) விரதம் முடித்து முனிவர்கள் யாத்திரை புறப்படுகிற மாதம் என்பதால்  ‘ஆக்ரஹாயனம்” – முதல் மாதம் என்று மார்கழி மாதத்தைக் குறிப்பிடும் வழக்கம் உண்டு.

மார்கழி மாத முடிவின் போது – பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மார்கழி மாத முழுநிலா நாளன்று மகளிர் பாவை நோன்பு நோற்கத் தொடங்குவர். 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து, தைமாத இறுதிநாளான தைப்பூசத்தன்று விரதத்தை முடிப்பர். தைப்பூச நாளன்று நிலத்தில் இயல்பாக நீர் ஊறும் என்பது மக்களின் நம்பிக்கை.

தை இத்திங்கள் தண் கயமன்ன

 கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

– புறநானூறு

இவ்வாறு தைப்பூசத்தன்று நோன்பு முடித்து விருந்துண்பது குறித்து ஆண்டாளின் திருப்பாவை,

‘ – – – – – – – – – — – – பாற்சோறு  

மூடநெய்பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

-என்று கூறுகிறது.

பாவை நோன்பின் முதல் நாள்,  ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’  எனத் தொடங்கி 30 நாள்கள் நோன்பு நோற்று இறுதி நாளான தைப் பூசத்தன்றே மகளிர் நோன்பினை முடித்தனர்.

‘நெய் பூசுமொன்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் 

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

-என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரம்- திருமயிலைப் பதிகத்தில் கூறுவது இதனையே. பூச நட்சத்திரம் வளர்பிறையில் வருகின்ற மாதங்களில், குறிப்பாக பூச நட்சத்திரம் பௌர்ணமியன்று குபேரனுக்கு பால் பொங்கல் நிவேதனம் செய்வது உத்தமம் என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுகிறது. குபேரன் யக்ஷர்களின் தலைவனாவான். யக்ஷர்கள் எனப்படுவோர் மஞ்சள் நிற மங்கோலாய்டு இனத்தவர் என்று அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கையின் பூர்வ குடியினரான யக்ஷர்கள், தைப்பூச நாளில் மாவலி கங்கையாற்றங்கரையில் தங்கள் குலத்தவரின் ஆட்டை விசேட நாளினைக் கொண்டாடுவதற்காகக் குழுமுவது வழக்கம் என்று மகாவம்சம் (I:11-23) கூறுகிறது. இன்றும் மங்கோலியப் புத்தாண்டு என்பது தைப்பூசத்தையொட்டியே- சிறு கணக்கீட்டு வேறுபாடுகளுடன் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

சித்திரை மாதப் புத்தாண்டே பழந்தமிழரின் மரபு என்பது ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும். அதுமட்டுமன்றி, தை மாத உத்தராயணத்தை ஆண்டு தொடக்கமாகக் கொள்வதோ, பரிதிக் கணித முறையே பழந்தமிழர் மரபு எனக் கொள்வதோ அடிப்படையற்ற வரலாற்று அடித்தளமற்ற ஒன்றாகும்.

நிலவுக் கணிதமுறைப்படி அமைந்த தைப்பூச நாளினை ஆண்டுப் பிறப்பாக்க் கொள்வது யக்ஷர்களின் மரபாக இருந்தது என்று சொன்னாலாவது அதில் ஓரளவு வரலாற்று அடிப்படை இருக்கிறது. யக்ஷர் குலமாகிய மங்கோலாய்டு இனத்தவரின் பண்பாட்டுக் கூறுகள் தமிழ் மரபில் சிறு கூறாகக் கலந்துவிட்டவையாகும். இயக்கி (இசக்கியம்மை) வழிபாடு போன்ற சில கூறுகளுக்குத்தான் இது பொருந்துமே தவிர, ஒட்டுமொத்த தமிழ் மரபுக்கும், இந்தியக் காலக் கணக்கீட்டு மரபுகளுக்கும் பொருத்தமானது சித்திரை மாதத்தை யாண்டுப் பிறப்பாகக் கொள்கிற வழக்கமேயாகும்.

 

அடிக் குறிப்புகள்:

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், 1- ப.178, பதிப்பாசிரியன்மார்: தி.வே.கோபாலையர், ந.அரணமுறுவல், தமிழ்மண்பதிப்பகம், சென்னை-17, 2003

2. சிந்து>ஹிந்து என்று திரிந்தது போல சூர்ய என்பது ஹோரஸ் என்று திரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இத்தகைய பிரச்சினைகள் குறித்து முடிவு செய்வதற்கு பல்துறை சார்ந்த ஆய்வு தேவை.

 3. “வேண்டிய கல்வி யாண்டு மூன்றிரவாது” வேந்துறு தொழிலே யாண்டினதகமே” – தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல் நூற்பா, 46,47 “யாண்டு பலவாக நரையிலவாகுதல்” – புறநானூறு 191:1 “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்திறத்து” – பதிற்றுப்பத்து 15:1

4. Youngminds Trilingual Dictionary – Hindi- Tamil- English P-130. by Smt.Rema ravi, Sri.C.N.Krishnamoorthy, Youngmind publishers, T.Nagar, Chennai- 17, Jan 2015

5. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் 16-ஆம் நூற்பா – ‘கலந்தபொழுதும் காட்சியும் அன்ன’ எனத் தொடங்கும் நூற்பாவுக்கான உரையில், நச்சினார்க்கினியர், ‘தினைக்கதிர் முற்றுதற்குரிய – அறுவடப்பருவம் இளவேனிற்பருவம்’ என்பதைக் குறிப்பிடுகிறார். (தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம்-1- ப.204, பதிப்பாசிரியன்மார்: தி.வே.கோபாலையர், ந.அரணமுறுவல், தமிழ்மண்பதிப்பகம், சென்னை-17-2003)

6. நிலவுக் கணிதமுறைகளுள், பூர்ணீமாந்த முறையே பழமையானது. மாதப்பெயர்கள் முழுநிலா நாள் எந்த நட்சத்திரத்தில் அமைகிறதோ அந்த நட்சத்திரப் பெயராலேயே வழங்குவது இதற்குச் சான்றாகும். இது குறித்த விவரம், எனது ‘சித்திரையில்தான் புத்தாண்டு’கட்டுரையில் உள்ளது (பார்க்க: ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்’, ப. 125. பதிப்பு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை – 17-2007)

7. கலி. 28:16 (‘லெழில் வரைத்தன்றி” எனத் தொடங்கும் பாடல்)

8. ‘பல்வரி இனவண்டு புதிதுண்ணும் பருவத்து’ – கலி, 25:9 (ஒரு குழை ஒருவன் போல் எனத் தொடங்கும் பாடல்)

9. கலி 26:24 (‘ஈதலில் குறை காட்டாது’ எனத் தொடங்கும் பாடல்).

 

குறிப்பு:

எஸ்.ராமச்சந்திரன்

திரு. எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டியல் அறிஞர். சென்னையில் இயங்கும் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard