பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.]
தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களிலிருந்து வந்தவையே.
அப்படியென்றால் இங்கு ஒரு வினா எழுகின்றது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று வரலாற்றில் பதியப்பெற்ற தமிழ் மக்களை ஒருங்கிணைக்க நல்வழிப்படுத்த இங்கு ஒரு சமயம் இயல்பாகத் தோன்றவில்லையா? தமிழ் இனத்திற்கென்று தமிழில் ஒரு சமயநூல் இல்லாமல் போய்விட்டதா?
சமயம் என்பது ஆங்காங்கே அந்தந்த பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் தோன்றிய ஒரு சமூக அமைப்பாகும். அப்படியான ஓர் அமைப்பு தமிழ்நாட்டில் பிறசமயங்களெல்லாம் வருவதற்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டு மக்களிடையே பரவலாகப் பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது தமிழ்நாட்டில் மக்களிடையே ‘திருவள்ளுவமே’ பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம் தவிர பிற எல்லா இலக்கியங்களிலும் திருக்குறள் பாக்கள் மேற்கோள்களாக எடுத்தாளப் பட்டிருக்கின்றன என்பதே இதற்குச் சான்றாகும். எனவே தமிழ் இனத்திற்கான தனித்த சமயநூல் திருக்குறளே ஆகும்.
திருவள்ளுவம் என்பதே தமிழர்களின் தனித்த சமயமாகும். தந்தை பெரியார் அவர்களும் “உன்னுடைய சமயம் எது என்றால் திருவள்ளுவம் என்று சொல். உன்னுடைய சமயநூல் எது என்றால் திருக்குறள் என்று சொல்” என்று கூறியிருக்கிறார்.
வள்ளுவர் சமண சமயத்தவர் என்பதில் சந்தேகமில்லை என்று செ.கணேசலிங்கன் எழுதியிருக்கிறார். [பிப்.19, 2014, தி இந்து, பக்.9]
திருவள்ளுவர் சமண சமயத்தவர் என்றோ சமண, பவுத்த கருத்துக்களைத்தான் திருக்குறளில் எழுதியுள்ளார் என்பதோ ஏற்கத்தக்கதல்ல என்று பல தமிழ்ச் சான்றோர்கள் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.
“அய்ந்தாம் நூற்றாண்டு நடுமுதல் சமண சமயமும், சமணப் புலவர் வாயிலாக மிகுந்த வடசொல் வழக்கம் தென்னாட்டில் ஏற்பட்டன. ஆறாம் நூற்றாண்டிலே சமணப் பெருங்காப்பியங்களும், சைவசித்தாந்தப் பெருநூல்களும், முதல் நிகண்டு நூல்களும் இயற்றப்பட்டன.” என்கிறார் “தமிழ் இலக்கிய வரலாறு” எழுதிய திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை. (பக்.203)
'அறம் பொருள் ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன் வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்.'
என்று திருவள்ளுவமாலையில் மாமூலனார் என்ற புலவர் பாடியுள்ளார்.
இந்த மாமூலனார் கி.மு.220க்கும் 200க்கும் இடையில் வாழ்ந்தவர். கரிகால் வளவனோடு ஒத்த காலத்துச் சேரமன்னன் பெருஞ்சேரலாதன் என்பவன். அவன் காலம் சுமார் கி.மு.220 முதல் 200 வரை ஆகும். பெருஞ்சேரலாதனும் கரிகால் வளவனும் பொருததைப் பற்றி மாமூலனார் பாடியுள்ளார். எனவே மாமூலனார் காலத்தில் கி.மு. 220 லேயே திருக்குறள் புகழ்பெற்ற ஒரு நூலாக இருந்திருக்கிறது; அக்கால கட்டத்திலேயே திருவள்ளுவர் வாழ்ந்திருக்கிறார் என்பதும் புலனாகின்றது.
அதே போன்று கி.மு.87 - 62ல் வாழ்ந்த செல்வக் கடுகோ வாழியாதனைப் பாடியவர் கபிலர். பாரி, காரி, ஓரி, கள்ளி, எவ்வி, இருங்கோவன், விச்சிக்கோ என்னும் குறுநில மன்னர்களை கபிலர் பாடியுள்ளார். இதே கபிலர் தான் திருவள்ளுவமாலையில்
'தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தான் - மனையளகு வள்ளைக் குரங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.'
என்று பாடியுள்ளார்.
எனவே கி.பி.5ம் நூற்றாண்டின் நடுவில் தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்த சமண சமயத்தை கி.மு.220-200ல் வாழ்ந்த திருவள்ளுவர் பின்பற்றியிருக்கவோ சமண சமயக் கருத்துக்களை வைத்து திருக்குறளை எழுதியிருக்கவோ முடியாது.
மேலும் சமணம் இறை கோட்பாட்டை ஏற்கவில்லை. திருவள்ளவரோ ஓரிறை கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்.
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” [குறள் - 5]
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” [குறள் - 10]
எனவே ‘தமிழ்திரு வள்ளுவனார்’ என்று திருவள்ளுவமாலையில் குறிப்பிடுவதற்கு ஏற்ப திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழர்க்காக தமிழ் இனத்தை நெறிப்படுத்துவதற்காக எச்சமயத்தையும் சாராத தனித்த ஒரு சமய நூலாகவே கருதலாம்.
கிறித்துவர்களுக்கு ஒரு பைபிள் போல், இஸ்லாமியர்களுக்கு ஒரு திருக்குரான் போல் தமிழர்களுக்கு திருக்குறளே வேத நூலாகும்.
மனித வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு சமயங்கள் மிகப்பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது வெளிப்படை. சமயம், ஒழுக்கம் ஆகிய இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முற்பட்டோமானால் கடவுளின் இருப்புநிலை மற்றும் புலன்கடந்த இயல்களின் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தாலும், சமயத்தை ஒழுக்கத்திலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது என்பது தெளிவாகிறது.
அனைத்து சமயங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளை மிக உயர்வாகப் புகழ்கின்றன. மனிதனை உண்மை, நன்மை, நேர்மை ஆகிய வழிகளைக் கடைபிடிக்கும்படி அவை வற்புறுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் சமயம் மனித இனத்தை ஒருங்கிணைப்பதற்கு மிகப்பெரும் சக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘Regligare’ என்று ஆங்கிலச் சொல் ‘இணைத்தல்’ என்ற பொருளையே கொண்டிருக்கிறது.
அவ்விணைப்பு சங்கிலியால் கட்டப்படுவதல்ல. விதிகள், சட்டங்கள், கட்டளைகள் ஆகியவற்றால் இணைக்கப்படுவதாகும். இதன் மூலம் மனிதன் ஓர் ஆன்மீகம் சார்ந்த உயர்ந்த வாழ்க்கையை வாழ இயலும்.
எனவே “சரியான வடிவத்தில் சொல்வதானால் சமயம் என்பது கோட்பாடுகளையும் கட்டளைகளையும் உள்ளடக்கியது” என்ற சமயத்தின் பொது இலக்கணம் திருக்குறளுக்கு விவாதத்திற்கு இடமில்லாமல் பொருந்துகிறது.
1848ல் எம். ஏரியல் என்னும் அறிஞர் பர்னாப் என்னும் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழின் மிகச்சிறந்ததும், மானுடத்தின் தூய எண்ணங்களின் மிக உயர்ந்த வெளிப்பாடுமான திருக்குறள்” என்று புகழ்ந்ததை தம் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில் மேற்கோளாகக் காட்டுகிறார் அறிஞர் ஜி.யு.போப்.
மாறிவரும் இன்றைய சமூகச் சூழலில் சமயத்தின் உள்ளடக்கமும் பங்களிப்பும் என்னவாக இருக்க வேண்டுமோ அவற்றைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது திருக்குறள்.
மனித இனம் மதிப்பிற்குரியதாகவும், மதிப்பீடுகளின் மையமாகவும் திகழ்கிறது. ஆனால் ஆசைகளும், பேராசைகளும் நீட்டித்த நாட்டங்களும் மனிதனைக் குருடாக்கி, மனித மாண்புகளைக் குறைத்து எதையும் எதைச் செய்தும் பெறுவது என்ற நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டன. இதன் விளைவாக மனிதன் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். இக்கீழ்த்தரமான பண்பிழந்த நிலையே மனிதனின் இன்றைய அனைத்துத் துன்பங்களுக்கும் முதல் காரணமாகும்.
பொருள்களை மட்டுமே ஆராயும் அறிவியல் துறை பொருள்களோடு மட்டுமே தொடர்பு கொண்டது. மனிதனின் துன்பச் சூழலை அது அறியாது. இத்துன்பச் சூழலிலிருந்து விடுதலை பெறுவது என்பது அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு வெளியே உள்ளது. அது ஒழுக்கத்தை போதிக்கின்ற அறக்கோட்பாடுகளை உள்ளடக்கிய சமயத்தினால் மட்டுமே இயலும். “மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்து அறன்” என்பதை வலியுறுத்தி அதற்கு வழியும் காட்டும் திருக்குறள் சமய நூலாக அத்தகைய விடுதலையைப் பெற்றுத் தரும்.
விடுதலை என்பது மனிதனின் பொறுப்பு. மனிதன் மனித இனத்தைச் சார்ந்து சிந்தித்தலும், தனக்குத்தானே ஒழுக்க நியதிகளை உருவாக்கிக் கொண்டு அந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே சுதந்திரம் என்கிறார் ஜெர்மானிய தத்துவஞானி இமானுவெல் காண்ட். உண்மையில் இதுதான் சமயத்தின சாரமாகும்.
இத்தகு இலக்கணத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாக அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறை உடைமை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாணுடைமை, ஆகிய பத்து உடைமைகளில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யத்தக்கன எவை செய்யத் தகாதன எவை என்பதை மனிதவாழ்க்கையில் அனுபவத்திலிருந்து பிழிந்தெடுத்த சாராம்சத்தை விதிகளாக [Laws] கட்டளைக் கோட்பாடுகளாக [Categorical Imperatives] வகுத்தும் தொகுத்தும் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர் தன் திருக்குறளில்.
நாம் சமயத்தை சுயநலத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ளுகிறோம். நம் வழிபாடுகள், வேண்டுதல்கள், சடங்குகள், கணக்கிட்டு சுயநலத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் ஆகிய அனைத்தும் மனிதனின் ஆசைகளையும், நாட்டங்களையும் அதிகரிக்கவே செய்கின்றன.
மனிதத் தன்மைகளற்று சுயநலம் மிகுந்ததாக ஆகிவிட்ட மனித இனத்தை மீண்டும் மனிதத் தன்மை உள்ளதாக சுயநலமற்ற பாதையில் வழிநடத்த சமயக் கோட்பாடுகளை சரியாகப் பயன்படுத்தவதே தீர்வாக இருக்க முடியும்.
அத்தகைய பாதையைக் காட்டுவதாக இலக்கியமாகவும், வாழ்வியல் இலக்கணமாகவும் திருக்குறள் ஒன்றே பல்வேறு கோணங்களில் தமிழர்களிடம் பரவியுள்ளது. மனிதனுக்கு மனிதனே நோக்கமாக இறுதி எல்லையாக இருக்கும்படியான ஒரு வாழ்க்கைப் பாதையை அவனுக்குக் காட்டுவதாக திருக்குறள் அமைந்திருக்கிறது.
“சமயம் இன்று மனிதனுக்கு எது தேவையானதோ அதனோடு தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும். அத்தகைய தேவையின் அடிப்படையிலேயே மனிதனின் வளர்ச்சி இருக்கும்படியாக சமயம் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். உண்மையான தன்னை [self] உணரும்படியான ஒரு விழிப்புணர்வை சமயம் மனிதனிடத்தில் உண்டாக்க வேண்டும். எவ்விதமான மறைபொருளையும் சுட்டாமல் மனித மாண்புகளை உணரும்படியாக, கடமை உணர்ச்சி உள்ளவனாக ஆக்குவதற்கு சமயம் முயற்சி மேற்கொள்ள வேண்டும. சமயம் மனிதனுக்கு அறிவொளி தரக்கூடிய சக்தியாக விளங்க வேண்டும. அந்த வகையில் சமயம் மனிதனின் செயல்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ராதாகிருட்டிணன். [spirit of Religion.. பக். 18] இத்தகைய எதிர்பார்ப்பை வழிகாட்டுமலை உள்ளடக்கிய சமய நூலாக திருக்குறள் விளங்குகிறது என்பதில் அய்யமில்லை.
எந்தவொரு வாழ்க்கைக் கல்வியும் சமயங்களின் வாயிலாகவே கற்பிக்கப்படுகின்றன. கல்வி நிலையங்களில் பொருள்சார்ந்த கல்வி மட்டுமே அளிக்கப்படுவதால் வாழ்க்கை நெறிகளும், மனித மாண்புகளையும் அறியாத இன்றைய மாணவர்களையும், பொருளை மட்டுமே நோக்கி ஓடும் இளைய சமுதாயத்தையும் நெறிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது சிறுவயது முதல் குடும்பத்திலிருந்தே அளிக்கப்பட வேண்டும்; கற்பிக்கப்பட வேண்டும்.
திருக்குறளின் அன்புடைமை, அடக்கமுடைமை, பொறையுடைமை, இன்னா செய்யாமை, இனியவை கூறல் போன்ற அதிகாரக் குறட்பாக்களை இசையோடு ஓதக் கற்றுக் கொடுத்தாலே மனித மனத்தில் உளவியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த இயலும். எனவே திருக்குறளை தமிழர்களின் சமயநூலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அதன் அருமை தெரிந்துதான் அது சமணம் சார்ந்தது, பவுத்தம் சார்ந்தது, கிறித்துவம் சார்ந்தது என்று அவரவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். திருக்குறள் பாலிமொழியிலோ, சமஸ்கிருத்ததிலோ, ஆங்கிலத்திலோ, லத்தீன் மொழியிலோ எழுதப்படவில்லை. தமிழரால், தமிழில், தமிழர்க்காக எழுதப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய நாம் ஏன் அதை நம் சமயநூல் என்று உரிமை கொண்டாடக் கூடாது?
திருக்குறள் ஓர் அறநூல்தானே! ஏன் அதை ஒரு சமய நூலாகக் கருத வேண்டும் என்ற கேள்வி எழலாம். சமயத்திற்கென்று உள்ள அத்தனை தத்துவக் கோட்பாடுகளும், திருக்குறளில் தெளிவாக வைக்கப்பட்டுள்ளன. சமயத் தத்துவக் கோட்பாடுகளான வாய்மை, நிலையாமை, கொல்லாமை, துறவு, அருளுடைமை, மெய்யுணர்வு, பிறவாமை, தவம், மறுவுலகம், ஊழ், இறை ஆகிய அனைத்தும் அவற்றிற்குரிய தனித்த வரையறைகளோடு தெளிவாக இடம் பெற்றுள்ளமையை யாரும் மறுக்க இயலாது.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற சமயத் தத்துவக் கோட்பாட்டை உள்ளடக்கியதாக திருக்குறள் விளங்குகிறது என்பதால் திருவள்ளுவம் என்பதே தமிழர்க்கான சமயம்! திருக்குறளே தமிழர்களின் சமய நூல்!