கட்டுரையாளர்: செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பெ.சத்தியவேல் முருகனார்
“தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புகழாரம்! பதிலுக்குக் கலைஞர் ஜெயலலிதாவிற்கு ஆசி!”
இது எப்படி நடக்கவே நடக்காத கற்பனையோ அதை விட கற்பனை ஒன்றை முன்னிறுத்தி அய்வரங்கம்என்ற பேரில் அழைத்தார் முனைவர் மு.தெய்வநாயகம் அவர்கள். தலைப்பு இது தான்: “இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறுத்துவ நாடே – எவ்வாறு?”
இந்த ஆய்வரங்கத்திற்கு என்னை அழைத்தார். ‘இது எனக்கு உடன்பாடில்லாதது; எனவே வருவதற்கில்லை’ என முதலில் மறுத்தேன்.
“இல்லை; இந்த ஆய்வரங்கத்திற்கு இந்துக்களில் சார்பாக நீதிபதியாக நீங்கள் கலந்து கொண்டு உங்கள் தீர்ப்பை அளிக்கலாம். மொத்தம் ஐந்து நீதிபதிகள்; அதில் நீங்களும் ஒருவர்’ என்றார்.
மற்ற நான்கு நீதிபதிகள் யார், யார் என்ரு கேட்டேன். அவர் இஸ்லாம் சமய சார்பில் ஒருவர், கிறுத்துவ திருச்சபை சார்பில் ஒருவர், தமிழ் அறிஞர் ஒருவர், நாத்திகரில் ஒருவர் – அதாவது திராவிடர் கழகத்திலிருந்து ஒருவர் என்றார்.
ஐந்து நீதிபதிகள் எப்படி தீர்ப்பு வழங்குவார்கள்? தனித் தனியாகவா அல்லது மாறுபட்ட தீர்ப்புகள் அமையுமானால் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்படுமா? என்று கேட்டேன்.
“இல்லை தனித்தனியே ஐந்து நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பைத் தொகுத்து ஒரு நீதிபதி தீர்ப்பை அளிப்பார் என்றார். அவர் அநேகமாக நாத்திகச் சார்புடைய நீதிபதியாக இருப்பார்” என்றார்.
முதலில் அவர் என்னை தொகுத்தளிக்கும் தீர்ப்பை வழங்கும்படி கெட்டார். நான் மறுத்து விட்ட்தால் எந்த மதத்தையும் சாராத நாத்திகரே ஏற்புடையவர் என்ற கருத்தைச் சொன்னார்.
அதன்படி 27, 28, 29-08-2013 ஆம் நாட்களில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கம் ஏற்பாடாயிற்று.
பன்மத அறிஞர்களிடையே சிகாகோவில் விவேகானந்தர் கலந்து கொள்ளவில்லையா? விவேகானந்தர் அளவிற்கு யான் பெருமையும் அறிவும் உள்ளவன் அல்லன் என்றாலும் அவரது முன்னுதாரணத்தை அடியொற்றி அந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டேன். அத்துடன் அது ஒரு ஆய்வரங்கம் தானே தவிர ஒரு கிறுத்துவ சமயப் பரப்புக் கூட்டமல்ல என்ற நியாமும் என்னை ஊக்குவித்தது.
இதற்கு முன் தமிழ் வழிபாட்டுத் தொடர்பாக திரு.தெய்வநாயகம் அவர்களுடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன். தமிழ் வழிபாட்டுக்கு ஆதரவு என்ற கருத்து ஒன்றே குறைந்தளவு இணைப்பு. சரி! ஆய்வரங்கத்திற்கு வருவோம்!
ஆய்வரங்கில் 27-08-2012 ஆம் நாள் இறை வேண்டலை அருட்தந்தை V.G. அருள்ராஜ் அடிகளார் செய்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்க ஆய்வரங்கம் தொடங்கியது.
தெய்வநாயகத்தின் கருதுகோளுக்கு மறுப்புக் கேள்வி தொடுக்கும் குழுவிற்குத் தலைவராக அமைக்கப்பட்ட பிரதமப் பேராயர் முனைவர் எஸ்றா சற்குணம் அவர்கள் ஏறத்தாழ 15 கேள்விகள் அடங்கிய நீண்ட பட்டியலை அச்சேற்றி அவற்றைத் தொடுத்தும் விளக்கியும் சிற்றுரை ஆற்றினார்.
கேள்விகளை முன்வைக்கும் பொறுப்பில் நீதிபதிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு பணி என்னிடம் விடப்பட்டது. முதலில் ஆய்வரங்கத்தில் கலந்து கொண்ட நீதிபதிகள் ஐவரின் பட்டியலைத் தருகிறேன்.
செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பெ.சத்தியவேல் முருகனார் B.E., M.A., M.Phil.
அர்ச்சகர் பயிற்சிப் பேராசிரியர், S.R.M. பல்கலைக் கழகம்
ரெவரண்ட் டாக்டர். ஆர்தர் ஜெயக்குமார் M.Th. Ph.D
பேராசிரியர் கிறித்துவ இயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
முனைவர் சம்சுதீன் M.A. Ph.D
பேராசிரியர் அரபி மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
பேராசிரியர் முனைவர் ஆ.ஜீவானந்தம் M.A. Ph.D
திராவிடர் விடுதலைக் கழகம்
முனைவர் தங்கையா M.A. Ph. D
தமிழ் இலக்கியப் பேரவை, சென்னைப் பேராயம்