New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெயமோகன் சிலாகிக்கப்படவேண்டியவரே BY T N GOPALAN


Guru

Status: Offline
Posts: 24624
Date:
ஜெயமோகன் சிலாகிக்கப்படவேண்டியவரே BY T N GOPALAN
Permalink  
 


ஜெயமோகன் சிலாகிக்கப்படவேண்டியவரே

 

துக்ளக் இதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம். தஞ்சை இராமூர்த்தியிடம் என்ன சார் இது இப்படிப் போட்டுத் தாக்குகிறார். சுவையாகவும் இருக்கிறது. நன்றாக விற்கிறது. இத்தகைய வலது சாரி சிந்தனைகள் வளர்வது நல்லதில்லையே என்றேன் நான் கவலையுடன். அவரோ அவருக்கே உரித்தான கம்பீரம் மற்றும் மமதையுடன் – அட விடுங்க கோபாலன்..எவ்வளவு பேருக்கு நம்ம ஊர்ல படிக்கத் தெரியும், அதில எவ்வளவு பேரு இந்தக்குப்பையையெல்லாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப்போறாங்க…..டி.எம்.கேயை போட்டு தாக்குறாரு கொஞ்சம் குஷி அவ்வளவுதான்… நம்ம ஊர்ல பாத்திருப்பீங்களே ஒரு ஆளு தண்ணி போட்டு தெருத் தெருவா போய் பரிசுத்த நாடாரையும் காங்கிரசையும் திட்டிகிட்டே போவான்…கொஞ்சநேரம் கிளுகிளுப்பு…அத்தோட முடிஞ்சிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக தனது மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளம்பினார்.

boston-faneuil-hall-quincy-market-old-state-house-jeyamohan

ஆனால் இன்று நிலை என்ன? சோ குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும், வேறுவித மசாலாக்கள் இல்லாத, துக்ளக் இலட்சக்கணக்கில் விற்பனை ஆகிறது.

அதாவது கருணாநிதியின் மோசமான அரசியலைத் துணிச்சலாகத் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், எமர்ஜென்சிக்குப் பிறகு பரிவாரத்தில் சங்கமமானாலும் பல தரப்பினரின் போலித் தன்ங்களை தோலுரித்துக்காட்டுபவர் என்று புகழ் பெற்றுவிட்டார். விளைவு இன்று அவரது பிற்போக்குவாத்த்திற்கு நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பிருக்கிறது.

பெரியாரிய அல்லது மார்க்கசீய சிந்தனையாளர் எவரும் இவர் அளவு புகழ் பெறவில்லை. இதற்கு பிராமணர்களையோ ஊடகங்களையோ மட்டும் பொறுப்பாக்க முடியாது. கருணாநிதியின் அராஜகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது சோ எதிர்கொண்டார். அதேபோல இந்திரா காந்தியின் அட்டகாசங்களையும். சோவின் நகைச்சுவை உணர்வு வேறு. இவற்றால் உருவான செல்வாக்கை பிற்போக்கு வாத்த்தை வளர்க்கவே அவர் பயன்படுத்துகிறார் என்பது துரதிர்ஷ்டமே.

ஜெயகாந்தனுக்குப் பிறகு பரந்துபட்ட அளவில் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் பெற்ற இடதுசாரி எழுத்தாளர் எவருமிலர். சுஜாதாவின் வருகை இலக்கிய உலகில் அவரது இறங்குமுகத்தின் தொடக்கம். இரசிகர்களின் இரசனையின் போக்கு மாறத் துவங்கியதையே அந்நிகழ்வு சுட்டிக்காட்டியது. அதாவது உலகமயமாதலுக்கு முன்னரேயே, நடுத்தர வர்க்கத்தினரின் அற்பத்தனங்கள் பொது நெறியாவதற்கு முன்னரேயே, விடலைகளுக்கு போதை ஏற்றும் டெக்னிக்குகளுக்கு பெரும் ஆடியன்ஸ் உருவாகிவிட்டது.

சுந்தர ராமசாமி போன்ற தீவிர சிந்தனையாளர்கள் இலக்கியவாதிகள் தனிக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தனர் அவரும் நாளடைவில் புகழ்பெற்றாலுங்கூட அவரது வட்டமென்பது சற்று குறுகியே இருந்தது.

மாறாக அவரது பள்ளியில் உருவான அல்லது அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெயமோகன் இன்று விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இலக்கிய உலகின் சோவாக உருவாகிக்கொண்டிருக்கிறார். அவருக்கும் ஏறத்தாழ ஒரு ஐகானிக் ஸ்டேட்டஸ். வரைமுறையற்று அவரை வசைபாடி அவரது செல்வாக்கை வளர்த்துவிட்டு அதன் காரணமாக காந்தியம், இந்திய ஆன்மிகம் என்ற ரீதியில் அவர் கூறும் அபத்த விளக்கங்களெல்லாம் மேலும் மேலும் படித்த வர்க்கத்தினரை சென்றடையவே முற்போக்காளர்கள் வழி செய்கின்றனர் என நினைக்கிறேன்.

அவரது எழுத்தின் வீச்சு அவருக்கு இரசிகர் கூட்டத்தை அளித்திருக்கிறது என்றால், சர்ச்சைகளுக்குள்ளாவதை மிகவும் இரசிக்கும் அவரை மேலும் மேலும் தாக்கி அவரது ஆளுமையின் வீச்சையும் விரிவுபடுத்துகின்றனர் ஒரு சாரார்.
பெண்ணியவாதிகளுடனான மோதல்: இப்போதைய பிரச்சினை என்ன ? நாஞ்சில் நாடன் தற்கால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். ஆனந்தவிகடன் வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது. அவரும் அவ்வாறே செய்கிறார்.

அதுகுறித்து, விட்டுப்போனவர்களும் அவர்களது அனுதாபிகளும் காரசாரமாக முகநூலில் விமர்சிக்க ஜெமோ தனது முதல் கட்டுரையினை வெளியிடுகிறார். http://www.jeyamohan.in/?p=56339

அதிலே அவர் சொல்லும் விஷயங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. சிலர் விடுபட்டிருக்கின்றனர் என்கிறார். அப்புறம் தான் சிக்கல். “பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பபாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.

இவர்களைச் சேர்த்த அடிப்படையில் பாவம் தமிழச்சி தங்கபாண்டியனையும் கனிமொழியையும் சேர்த்திருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும் அடுத்த ஐந்தாண்டில் தமிழ்ச்சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள்தானே?

பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள் என்று அவர் தாக்குவதில் தவறென்ன? அவர் அப்படி நினைக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது. எதுக்கு வம்பு என்று ஒதுங்குவதும் நடக்கக்கூடியதே.

ஆக என்னைப் பொறுத்தவரை ஆண்கள் எழுதினால்தான் நிற்கமுடியும், பெண்கள் தங்கள் பாலினத்தாலேயே, அதாவது கவர்ச்சியினாலேயே அங்கீகாரம் பெற்றுவிடுகின்றனர் என்பதுதான் கண்டனத்திற்குரிய அவதூறு.

இந்நிலையில் விமர்சனங்கள் தொடர ஜெமோ தன் அடுத்த தாக்குதலைத் தொடுக்கிறார்: http://www.jeyamohan.in/?p=56437

திரும்பத்திரும்ப ஊடகங்களில் பெண் படைப்பாளிகளாக இடம்பெற்று வரும் சிலர் உண்மையில் சொல்லும்படி எதையாவது எழுதியிருக்கிறார்களா என்பதே என் கேள்வி. அவர்கள் இன்று அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்காக தேசமெங்கும் செல்கிறார்கள். நாடுநாடாகப் பறக்கிறார்கள். உலகமெங்கும் சென்று தமிழை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எல்லா அங்கீகாரங்களையும் அடைகிறார்கள்.

ஆனால் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டால் தர்மசங்கடமான மௌனம். பெரும்பாலும் வெறும் புலம்பல் கவிதைகள். கடன்வாங்கிய படிமங்களை உருட்டி வைத்த போலிக்கவிதைகளாக ஓரிரண்டு. சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துபக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்.

பொதுப்படையாக காப்பியடித்துப் பெயர் வாங்குகின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால் சில பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுவிட்டு ”உண்மையிலேயே இவ்விஷயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்,” என்கிறார்.

தொடர்ந்து ஜெமோ “ அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச்செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை காணவிழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.

அதை அறிந்த பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்துவகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை.” என்கிறார். http://www.jeyamohan.in/?p=56554

பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது எனும் ஜெமோவின் சவாலுக்கு பதில் பேசப்படக்கூடிய படைப்புக்கள் பற்றிப் பேசுவதுதான், அவரை சாடுவதல்ல.

ஆனால் பெண்ணியவாதிகள் கொதித்தெழுந்து நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். http://www.penniyam.com/2014/06/blog-post_18.html

மிக நீண்ட மறுமொழி. பொறுமையுடன் தான் படித்தாகவேண்டும். வழக்கம்போல மிகக் காட்டமாகவே.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிற மதங்கள் பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது.

இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், அது எனக்கும் புலனாகிறது. ஒரு வகையில் இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் செய்கிறார். அது ஆபத்தானது. ஆணாதிக்கத் தடித்தனம் அதுவும் ஆங்காங்கே தலைகாட்டத்தான் செய்கிறது.

ஆனால் சூடாமணியின் எழுத்துக்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்ல என்று சொன்னால் என்ன பிரச்சினை…அதைபொறுத்துக்கொண்டோம் என்கின்றனர். ஆஹா என்ன பெருந்தன்மை?

அப்புறம் கமலாதாஸ் ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார் எனவும் குற்றச்சாட்டு.

ஜெமோ என்றல்ல எவருக்கும் அப்படிக் கருத்துக்கள் கொள்ள சொல்ல உரிமை இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ” படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார்,” என எப்படி நிறுவமுடியும்.

ஆண்களைப் பற்றி இவர் ஏன் பேசுவதில்லை எனவும் கேள்வி அவருக்குப் பட்டிருந்தால் சொல்லியிருப்பார். சொல்லாதது பாவமா என்ன? பெண்ணியவாதிகள் பலர் தரமான படைப்புக்களைத் தரவில்லை என ஏன் சொல்லக்கூடாது. இல்லை தரம் வாய்ந்தவை என வாதாடலாம். அவரிடம் காழ்ப்புணர்ச்சி புரையோடிப்போயிருக்கிறது என்று கூடச் சொல்ல்லாம். ஆனால் இப்படி எல்லாம் எங்களைப் பற்றிக் கருத்து சொல்வதே தவறு என வாதாடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது அறிக்கை தயாரித்தவர்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துவதாகக்கூட எனக்குப் படுகிறது.

பெண்ணியவாதிகள் சிலரின் அணுகுமுறையினை விமர்சிப்பதாலேயே ஒருவர் ஆணாதிக்கவாதியாகவேண்டிய அவசியமில்லை. எஸ்.இராமகிருஷ்ணன் குட்டி ரேவதி பற்றி தரக்குறைவாக் குறிப்பிட்டதற்காக அவர் பேசிய நிகழ்ச்சியில் குறுக்கிட்டு களேபரம் செய்தது என்ன நியாயம்? அதே போல நாம் உடன்படாத நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பிரச்சினை செய்வோமேயானால் எங்கு போய் முடியும்? இப்படி நாங்கள் கேட்பதாலேயே பெண்ணியத்திற்கு எதிரானவர்களாக ஆகிவிடுவோமா என்ன?

பெண்ணியவாதிகள் குறித்து ஆண்கள் பேசக்கூடாது, தலித் அமைப்புக்களில் உள்ள சிக்கல்கள் குறித்து தலித் அல்லாதோர் விமர்சிக்கக்கூடாது, இப்படியெல்லாம் குழு அரசியல் செய்ய முயல்வது இக்காலகட்டத்தில் செல்லுபடியாகும் எனத் தோன்றவில்லை.

இப்படி ஒரு பொது விமரிசனத்தால் negative உந்துதலே வரும். இனி எழுதும் பெண் எழுத்தாளர்கள் எல்லோர் மனத்திலும் ஒரு தாழ்வு மனப்பான்மையையும் குழப்பத்தையும் மட்டுமே இவ்விமரிசனம் தூண்டும். ஒவ்வொரு பெண் படைப்பாளியும் இனிமேல் “தம்முடைய எழுத்தைப் பற்றி ஜெயமோகனின் பார்வையின் வழியாகவே விமரிசனங்கள் வரும்” என்று ஒரு பயத்தை உருவாக்குவதாகவே அமையும். பல வகைகளில் சல்மான் ருஷ்டி இந்திய மொழிப் படைப்புகளைப் பற்றித் தெரிவித்த விமரிசனத்தை விட ஜெயமோகனின் விமரிசனம் மோசமானது என்கிறார் இன்னொரு நண்பர். இது ஒரு நியாயமன பயமாகவே தெரியவில்லை. மாறாக தங்கள் நிலைப்பாட்டை விமர்சிப்பவர்கள் மீது விழுந்து குதறி அவர்கள் மனித குல விரோதிகள் என்று ஓயாமல் சவுக்கடி கொடுப்பதுதான் இன்றைய பொதுப்போக்கு. இணையதளத்தில் பரிவாரத்தினர் ஒன்று திரண்டு மோடி எதிர்ப்பாளர்களை மிரளவைத்தது, வெ மதிமாறனின் விமர்சனங்கள் எல்லாம் ஒரே வகைதான். அதே பாணியைத் தான் இவர்களும் கைக்கொள்கிறார்கள்.
பதிலுக்கு ஜெமோ ஒட்டுமொத்தமாக அனைவரையுமே இகழ்ந்து எழுதுகிறார் இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசை நடவடிக்கை மூலம். கும்பல் கூடி கூச்சலிடுவதன் மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு- வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். http://www.jeyamohan.in/?p=56732

அவரை விட்டால் நிறுத்தவே முடியாது. எவ்வளவு தூரம் மற்றவர் வசைபாடினாலும் இன்னும் கூடுதல் தீவிரத்துடன் எசப்பாட்டு பாடும் வலிமை அவருக்கிருக்கிறது. இனியும் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்கின்றனர் கூட்டறிக்கை வெளியிட்டவர்கள். என்ன செய்துவிடமுடியும்.? இன்னும் உரக்கக் கூச்சலிடலாம். கூட்டங்கள் போடலாம். சுவரொட்டிகள்…அப்புறம் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர்ப்பாட்டங்கள்…….

என்னைப் பொறுத்தவரை அவரது செக்சிஸ்ட் கூற்றுக்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் நின்றிருக்கவேண்டும். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிரான அவர்கள் கொதிப்பை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வார்கள். அதை விட்டுவிட்டு பிற்போக்குவாத எச்சில் என்றும், தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளையத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலை எனவும் சாடுவதன் விளைவு அவர் தன் தாக்குதலை இன்னமும் கூர்மைப்படுத்துவார், சம்பந்தமேயில்லாமல் எள்ளி நகையாடுவார், பெண்ணிய முன்னேற்றப்பாதையில் தேவையில்லாத ஒரு distrtaction இது.

அவரிடம் நற்சான்றிதழ் வாங்கவேண்டுமா? அதற்கு அவசியமென்ன என மீண்டும் மீண்டும் குமுறும் பெண்ணிய வாதிகள் அத்தகைய நற்சான்றிதழ் கிடைக்காத்தால்தானே இவ்வளவு பெரிய அறிக்கை வெளியிருகின்றனர்?

சமூக மாற்றத்திற்குப் பயன்படாத எழுத்துக்கள் எதற்கு என்று ஒரு நண்பர் குமுறுகிறார். ஜெமோவின் எழுத்துக்கள் பயன்படுமா படாதா என்பதற்கப்பால் இப்படிப்பேசி பேசித்தான், சோஷலிஸ்ட் ரியலிசம் பேசி, சோவியத் இலக்கியமே நகைப்புக்குள்ளாகியது, சோவியத் அமைப்புக்குப் பல ஆண்டுகள் முன்னரேயே அது மரணித்தும் போனது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.

ஜெயமோகனுக்கு எவரையும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது ஆனால் வரம்பு மீறிச் செல்கிறார். அவருடைய வாசகர்/இரசிகர் வட்டம் விரிந்துகொண்டே செல்லும் நிலையில் தடித்தனமாகப் பேசுகிறார். அது அவருடைய இலக்கிய ஆளுமைக்கு அழகல்ல என நான் நினைக்கிறேன்.

அதே நேரம் இஸ்லாத்திலிருந்து தமிழ் தேசியவாதிகள் பெரியாரிஸ்டுகள் என்று பல தரப்பினரும், தங்களை விமர்சிப்போரை வூடு கட்டி அடிக்க முயல்வது மிக இரசனைக் குறைவாய் இருப்பது மட்டுமல்ல, அம்முயற்சிகள் வெற்றியும் பெறாது. சீனாவே தடுமாறுகிறது.

இணையவெளி விஞ்ஞானிகளின் அருட்கொடை. அதைத் தவறாகப் பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக மூடிவிடு என்றா குரல் கொடுக்கமுடியும் ?.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் எழுத்துலகின் மாபெரும் ஆளுமை ஜெயமோகன். இதற்கு முன் எழுதிய அனைவரைவிடவும் பல தளங்களில் நம்மை பிரமிக்கவைக்கக்கூடியவர் அவர். விவிலியத்தில் நாம் சந்திக்கும் கடவுளுக்கும் ஜேக்கப்பிற்குமிடையேயான மல்யுத்தத்தை நினைவூட்டும் மாடன். மோட்சம் ஒன்று போதும் அவருடைய தனிப் பெரும் தன்மையினைப் பறைசாற்ற. அவருடைய வர்ணனைகள் நம்மிடம் ஏற்படுத்தும் கிளர்ச்சி வாழ்நாள் முழுதும் தொடரும்.

என்ன செய்ய? ஆன்மிகத்தில் ஆழ்ந்து போகிறார். அவ்வப்போது இந்துத்துவத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார். தனக்கு வேண்டியவர்களைத் தலையில் வைத்து ஆடுவார் பிடிக்கவில்லையென்றால் காலில் போட்டு மிதிப்பார். இடதுசாரிகள் குறித்து அவரது புரிதலில் உள்ள சிக்கல்களின் விளைவாய் பலவற்றைத் தவறாகவே உள்வாங்கியிருக்கிறார்.

இவை அவரது தனிப்பட்ட வக்கிரங்கள். ஆனால் இவை எவையுமே அவருடைய மாட்சியைக் குலைத்துவிடாது.
நிறையப்படிக்கும் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அது நன்றாகவே வெளிப்படுகிறது. துரதிர்ஷ்டம் அவரது மேதைமை குறித்த போதை அவருக்குத் தலையேறிவிட்டது. இப்படித்தான் டமால் டுமீல் எனப் பேசுவார்.
அல்லனவற்றைப் புறந்தள்ளி நல்லனவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அவரிடம் நேரிடையாக உரையாடாமலேயே அவரது படைப்புக்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard