New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்துரிமை -மருதன்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
கருத்துரிமை -மருதன்
Permalink  
 


கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்

 

1

சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.

கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.

வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.

2

படைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவது இங்கு புதிதல்ல. ஒரு புத்தக விமரிசனத்தின் அடிப்படையில் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ராஜிவ் காந்தி அரசால் அக்டோபர் 1988ல் தடை செய்யப்பட்டது. 1990கள் தொடங்கி எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது ‘ஆபாசமான’ படைப்புகள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தால் போட்டிகள் நடைபெறாது என்று சிவ சேனா அக்டோபர் 2006ல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. 2002 குஜராத் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Parzania  என்னும் திரைப்படத்தை குஜராத் திரையரங்குகளில் திரையிடமுடியவில்லை. இந்தியாவில் பிறந்த கனடா எழுத்தாளரான ரோஹிந்தன் மிஸ்தரியின் Such a Long Journey  பம்பாய் பல்கலைக்கழகப் பாடப்பட்டியலில் இருந்து அக்டோபர் 2010ல் நீக்கப்பட்டது. தன் தாத்தா பால் தாக்கரேயை அவமானப்படுத்தும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டதாக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா கருதியதாலும், பால் தாக்கரேயை அவமானப்படுத்துவது ‘மராத்தியர்களின் உணர்வை அவமானப்படுத்துவதற்குச் சமம்’ என்பதாலும் அந்நாவல் மாணவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.

அவ்வாறே, ஏ.கே. ராமானுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டது. வெவ்வேறு வடிவில் 300 ராமாயணப் பிரதிகள் மக்களிடையே நிலவி வருவதைச் சுட்டிக்காட்டியதற்காக சங் பரிவார் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து இந்தக் கட்டுரை விலக்கிக்கொள்ளப்பட்டது. காஷ்மிர் பற்றி அருந்ததி ராய் வெளியிட்ட கருத்துகளுக்காக அவர் அச்சுறுத்தப்பட்டார். Joseph Lelyveld  எழுதிய Great Soul, காந்தி பற்றிய ‘சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால்’, நூல் விற்பனை குஜராத்தில் தடை செய்யப்பட்டது.

சித்தார்த்த தேப் எழுதிய இந்தியா குறித்த பயண-வரலாற்று நூலின் (The Beautiful and the Damned) முதல் அத்தியாயம் சில்சார் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குப்தா எலெக்ட்ரிக் எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஐ.ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்து தொடுத்த மானநஷ்ட வழக்கின் அடிப்படையில், முதல் அத்தியாயத்தை நீக்கி புத்தகம் அச்சிடப்பட்டது. அரிந்தம் சவுத்திரியின் வர்த்தக உலகை முன்வைத்து, புகழ், செல்வாக்கு, செல்வம் ஆகியவை இந்தியாவில் வளர்ந்த கதையை விவரிக்கும் அத்தியாயம் இது. தடையுத்தரவுக்குப் பிறகு முதல் அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டதால் முன்னுரைக்குப் பிறகு நேராக 72ம் பக்கத்துக்குப் புத்தகம் நகர்ந்துவிடுகிறது.

ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், விளாதிமிர் நபகோவ், அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டுள்ளார் சித்தார்த் தேப். ‘இவர்களுடைய படைப்புகளையும் என் புத்தகத்தையும் படைப்புரிமை ஒன்றிணைக்கிறது.  ஒரு எழுத்தாளர் அச்சமின்றி, தணிக்கைத் தடையின்றி, மிரட்டலின்றி தன் கருத்தைப் பதிவு செய்யும் உரிமை பற்றியது.’ மற்றொன்றையும் குறிப்பிடுகிறார் சித்தார்த் தேப். ‘சமகால இந்தியாவின் வரலாறு முழுமையாக உலகம் முழுவதிலும் கிடைக்கும்போது, இந்தியர்களுக்குப் பகுதியளவு மட்டுமே கிடைக்கிறது என்பது சோகமான முரண்நகை.’ அவர் தொடர்கிறார். ‘ஆனால் இதுவே இந்தியாவின் நிகழ்கால போக்கு பற்றி சில விஷயங்களைச் சொல்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் செல்வந்தர்களையும் பற்றி எவ்வளவுதான் ஆய்வுப்பூர்வமாக எழுதினாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவியலாது.’ தன் முன்னுரையை அவர் இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘…உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் முயற்சியில்தான் இந்நூலைத் தொடங்கினேன். 45 பக்கங்களை நீக்கியதன் மூலம் உண்மையின் ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், மிச்சமுள்ள பக்கங்களில் போதுமான அளவுக்கு உண்மை நிறைந்துள்ளது என்றே நம்புகிறேன்.’

3

ஊடக தணிக்கை முறை குறித்து கபில் சிபல் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது பரவலாக விவாதத்துக்கு உள்ளானது. கபில் சிபலின் கருத்துகளை அப்படியே ஏற்காவிட்டாலும், தணிக்கை முறை ஊடகங்களுக்குத் தேவை என்று புதிதாகப் பதிவியேற்றிருக்கும் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியதும் விவாதத்துக்கு உள்ளானது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஊடகத்துறை மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது சரியல்ல என்றார் கட்ஜு.

ஏன் தணிக்கை அவசியம் என்பதற்கு கபில் சிபல் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் ‘அவதூறு’ செய்யும் வண்ணம் இணையத்தில் பல படங்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன என்றார். பிறகு ‘மத உணர்வுகள் காயப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகத் தணிக்கை தேவை’ என்றார். பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றார். எதிர்ப்புகள் வலுத்ததும், ‘ஊடகம் தனக்கான ஒழுங்குமுறைகளை வகுத்துக்கொள்ளவேண்டும்’ என்று மட்டுமே தான் குறிப்பிட்டதாகச் சொல்லி வாதத்தை முடித்துக்கொண்டார்.

தணிக்கை முறை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரபுலக எழுச்சி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று உலகம் தழுவிய அளவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இணையத்தளம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஒரே சமயத்தில் ஆளும் வர்க்கத்தின் பிரசாரக் கருவியாகவும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஆயுதமாகவும் இணையத்தளம் திகழ்கிறது என்பதால் எங்கே, எப்படி, எத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்று தெரியாமல் அரசாங்கங்கள் குழம்பிக்கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்ளும் என்னும் மார்க்சிய உண்மையை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

4

நாம் இருவகையான தணிக்கை முறைகளைப் பற்றி இங்கே உரையாடிக்கொண்டிருக்கிறோம். சட்டப்பூர்வமான தணிக்கை முறை. சட்ட விரோதமான தணிக்கை முறை. தன் நாட்டின் பிரஜைகள் எப்படிப்பட்ட படைப்புகளை நுகரலாம், ஊடகங்கள் எப்படிப்பட்ட செய்திகளை அளிக்கலாம் என்பதை ஓர் அரசு நிர்ணயம் செய்து, சில விஷயங்களைத் தணிக்கை செய்கிறது. அதன்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு படைப்பு சட்டப்படி தணிக்கை செய்யப்படுகிறது. ஆபாசமான, வக்கிரமான படைப்புகள், வன்முறையைத் தூண்டும் படைப்புகள், தேசத்தை பிளவுபடுத்தும் படைப்புகள் என்று வகைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அளவுகோல்களை மீறும் படைப்புகள் முழுமையாகவோ பகுதியளவிலோ தணிக்கை செய்யப்படும். இது முதல் வகை தணிக்கை முறை. உதாரணத்துக்கு, டி.ஹெச். லாரன்ஸின் Lady Chatterley’s Lover, நபகோவின் Lolita ஆகிய நாவல்கள், அதிலுள்ள ‘ஆபாச உள்ளடக்கம்’ காரணமாகத் தணிக்கை செய்யப்பட்டன.

இரண்டாவது வகை தணிக்கை முறை, சட்டவிரோதமானது. சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் எம்.எஃப். ஹுஸேனும் சட்டவிரோதமான தணிக்கை முறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள். முறைப்படி இவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்படவில்லை; தடை செய்யப்படவும் இல்லை. ஆனாலும், இவர்களுடைய படைப்பு சுதந்தரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மத பீடங்களும் அவர்களுடைய தீவிரவாத சித்தாந்தங்களும்தான். மாறாக, சித்தார்த்த தேபும் அருந்ததி ராயும் சட்டப்பூர்வமான தணிக்கையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகள் அரசியல் செல்வாக்கு பெற்றவையாக இருப்பதால் அவர்களுக்கு ஒவ்வாத படைப்புகள் வெளிவருவதில்லை. வெளிவந்தாலும் பலவந்தமான முறையில் தணிக்கை செய்யப்படுகிறது. (அருந்ததி ராய்மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கு ஓர் உதாரணம்). இஸ்லாமிய அமைப்புகளுக்கு அப்படிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றாலும் அவர்களுடைய எதிர்ப்புகளுக்கு அரசு பணிந்துபோவதற்குக் காரணம் இஸ்லாமிய சமூகத்தின் ஓட்டுகளைப் பெறுவதுதான். சல்மான் ருஷ்டி விவகாரத்திலும் தஸ்லிமா நஸ்ரின் விவகாரத்திலும் அரசு அமைதி காத்ததன் பின்னணி இதுவே.

ஒரு படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்தரம் அளிக்கப்படவேண்டும் என்று கோருபவர்கள் சட்ட விரோதமான தணிக்கை முறையை மட்டுமல்ல, அரசின் சட்டப்பூர்வமான தணிக்கையும்கூட சேர்த்தே எதிர்க்கிறார்கள். எது ஆபாசம் என்பதை எப்படி நிர்ணயம் செய்வது? எது வன்முறை? எது மத வெறுப்பு? எது தேச நலனுக்கு விரோதமானது? அளவுகோல்களை யார் நிர்ணயிப்பது? ஏன் நிர்ணயிக்கவேண்டும்? எது தனக்கு வேண்டும் என்பதை நுகர்வோர்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர அரசோ பிற அமைப்புகளோ அல்ல என்பது இவர்களுடைய வாதம். மேலும், இந்த இரு வகை தணிக்கை முறைகளுக்கும் இடையில் பெரும்பாலும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம். ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கருத்துகள் இரு வகைகளிலும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

5

அனைவருக்குமான கருத்துச் சுதந்தரம் என்பது சாத்தியமா? யாரும் எதைப் பற்றியும் பகிரங்கமாக விமரிசனம் செய்யலாமா? எந்தவொரு சமூகத்திலும் இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சரி, சோஷலிச, கம்யூனிச சமூகமாக இருந்தாலும் சரி. முறைப்படுத்தலும் கட்டுப்படுத்தலும் இல்லாத கருத்துச் சுதந்தரம் சாத்தியமில்லை. கவனிக்கப்படவேண்டிய விஷயம், இந்த முறைப்படுத்தல் யாருக்கு ஆதரவாக அல்லது எதற்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது என்பதைத்தான். உதாரணத்துக்கு, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் போராட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஒபாமா அரசு ஒரு சதவீத பெரும் பணக்காரர்களை ஆதரிக்கிறதா அல்லது 99 சதவீத பிற அமெரிக்கர்களை ஆதரிக்கிறதா? இருவருடைய நலன்களும் கேள்விக்கு உள்ளாகும்போது, இருவருடைய நலன்களும் எதிரெதிராக நிறுத்தப்படும்போது, அரசாங்கம் யாருடைய நலனைத் தேர்ந்தெடுக்கிறது? ஆக, எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக ஒரு அரசாங்கம் திகழ்கிறது என்பதைப் பொறுத்தே தணிக்கை முறையின் சரி, தவறுகளை நாம் விமரிசிக்க முடியும். இதன் பொருள், எதிர்க் கருத்துகளுக்கு இடம் கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல. இதுபற்றி பின்னர் விரிவாக உரையாடலாம்.

அலெக்ஸாண்டர் சோல்ஷனிஸ்டன், போரிஸ் பாஸ்டர்நாக் போன்றோரைச் சுட்டிக்காட்டி சோவியத் யூனியனில் படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்பட்டது என்று அலறும் அறிவுஜீவிகள் சல்மான் ருஷ்டியின் படைப்புரிமையையும் எம்.எஃப். ஹுஸைனின் படைப்புரிமையையும் ஒன்றுபோல் பாவிப்பார்களா? அவ்வாறு பாவிக்கவில்லை என்பதைத்தானே ஏ.கே. ராமானுஜனின் படைப்புரிமையும் அருந்ததி ராயின் கருத்து சுதந்தரமும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன?

6

சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விவாதங்களில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ‘ஜனநாயகத்தின் தோல்வி’ பற்றிய கவலை.  இந்த இரு எழுத்தாளர்களின் படைப்பு சுதந்தரம் பறிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டதாகப் பல படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ‘இந்தியர்களாகிய நாம் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

ஆனால், சல்மான் ருஷ்டியின் செயல்பாடுகளை மற்றொரு படைப்பாளியான தஸ்லிமா நஸ்ரினே ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபத்வா என்றதும் பயந்து முல்லாக்களிடம் மன்னிப்பு கேட்டு, இப்போது உயிருக்கு ஆபத்து என்றதும் இந்தியாவுக்கு வருவதைத் தள்ளிப்போட்ட சல்மான் ருஷ்டி உண்மையில் ஒரு ‘கோழை’ என்று விமரிசிக்கிறார் தஸ்லிமா நஸ்ரின். ஒரு வகையில் இது உண்மைதான். ருஷ்டியோடு ஒப்பிட்டால் தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துகள் கூர்மையானவை; சமூக அக்கறை மிக்கவை. இஸ்லாத்தை மட்டுமல்ல இந்து மதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட ஏனைய மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களைத் தொடர்ந்து காட்டமாக விமரிசித்துக்கொண்டிருக்கிறார் தஸ்லிமா. ருஷ்டியின் எழுத்துகளில் (நான் வாசித்தவரை) அத்தகைய சமூக நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு படைப்பாளி சமூக அக்கறையுடன் மட்டும்தான் எழுதவேண்டுமா என்று எதிர்கேள்வி வரும். வேண்டியதில்லை என்று வைத்துக்கொண்டால், அத்தகையவர்களுக்காக எதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்? சமூக அக்கறை இல்லாத ஒருவரது படைப்புகளை எதற்காக சமூகம் அக்கறையுடன் பரிசீலிக்கவேண்டும்?

சாதிய ஒடுக்குமுறைகளைத் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்னை இந்தியர்களின் பிரச்னை அல்ல. அது தலித் சமூகத்தின் பிரச்னை. நக்ஸலைட்டுகள் என்னும் பெயரில் பழங்குடிகள் வேட்டையாடப்படுவது இந்தியப் பிரச்னை அல்ல. அது பழங்குடிகளின் பிரச்னை. விடுதலை வேண்டி போராடும் காஷ்மிரிகளின் பிரச்னை, இந்தியப் பிரச்னை அல்ல. அது காஷ்மிரின் பிரச்னை. இவர்களுடைய பேச்சுரிமையும் எழுத்துரிமையம் கருத்துரிமையும் அதிகார வர்க்கத்தின் பூட்ஸ் கால்களுக்குக் கீழே நசுங்கி கிடக்கின்றன. ஆனாலும், சல்மான் ருஷ்டியால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளாமல் போனதைத்தான் நாம் நமது தேசிய அவமானமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுஜீவிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அது சாத்தியமில்லை. காரணம், எழுத்தாளர்கள் மக்களைக் காட்டிலும் மேலானவர்கள் அல்லர். மக்களுடைய உரிமைகளைக் காட்டிலும் மேலான உரிமைகளை அவர்கள் கோரமுடியாது. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் -மருதன்
Permalink  
 


அம்பேத்கர் கார்ட்டூனும் கருத்துரிமைக் காவலர்களும்

என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் பற்றிய பாடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கார்ட்டூன் பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்தக் கார்ட்டூனில் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் மிக மெதுவாக நத்தை வேகத்தில் நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் விதமாக ’அரசியலமைப்பு’ என்று எழுதப்பட்ட ஒரு நத்தை மீது சாட்டையுடன் அம்பேத்கர் அமர்ந்திருக்க, அவரை வேகமாகச் செல்லும்படி சாட்டையுடன் நேரு விரட்டுவதாக அமைந்துள்ளது. இருவரைச் சுற்றியுள்ள மக்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஷங்கர் பிள்ளை தனது கார்ட்டூன்ஸ் வீக்லி இதழில் 1949ல் வரைந்த அந்தக் கார்ட்டூன், குறிப்பிட்ட அந்தப் பாடப்புத்தகத்தில் 2006 முதலே இடம்பெற்று வந்துள்ளது. எனினும், கார்ட்டூனை எதிர்ப்பவர்கள் கண்களில் இப்போதுதான் சிக்கியுள்ளது.

மக்களவையில் இந்தப் பிரச்னையை எழுப்பியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் தொல் திருமாவளவன். அந்த கார்ட்டூன் அம்பேத்கர், நேரு ஆகிய இரு தலைவர்களையும் அவமானப்படுத்துகிறது என்றதுடன் கல்வித் துறைக்கு பொறுப்பான கபில் சிபல் ராஜினாமா செய்ய வேண்டும், அந்தப் புத்தகத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். இந்தக் கார்ட்டூன் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தினார் மாயாவதி. லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இதற்கு காரணமானவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பி.ஜே.பி., தெலுங்குதேசம் போன்ற கட்சிகளும் கார்ட்டூனுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் உடனடியாக அது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.

அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கார்ட்டூன் இடம்பெற்றுள்ள அந்தப் புத்தகத்தை உடனடியாக அரசு திரும்பப் பெறுவதாக மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அந்தப் பாடப்புத்தகத்தின் விநியோகத்தை நிறுத்தி வைக்கும்படி என்.சி.இ.ஆர்.டி.க்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த கார்ட்டூனைத் தவிர ஆட்சேபகரமான பகுதி வேறு ஏதேனும் இருக்கிறாதா என்று ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் அனைத்து கார்ட்டூன்களும் நீக்கப்படும் என்றும் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பாடப் புத்தக உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த, அரசியல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற கல்வியாளர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்ஷிகார் ஆகிய இருவரும் என்.சி.இ.ஆர்.டி.யில் தாங்கள் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். யோகேந்திர யாதவ் என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பாடநூல் மேம்பாட்டு கமிட்டியின் தலைமை ஆலோசகராக உள்ளார். சுகாஸ் பால்ஷிகார் கமிட்டியின் உறுப்பினராக இருக்கிறார்.

அடுத்த நாளே என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக உருவாக்க கமிட்டியின் தலைமை ஆலோசகர் சுஹாஸ் பல்ஷிகார் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அடுத்த நாள் புனே நகரிலுள்ள அவரது அலுவலகம் தாக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு இந்திய குடியரசு கட்சியின் அத்வாலே பிரிவு பொறுப்பேற்றது. ஏப்ரல் 2ல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்திய குடியரசு கட்சியின் ஒரு பிரிவின் தலைவரான ராம்தாஸ் அதவாலே, சர்ச்சைக்குள்ளாகியுள்ள அந்தப் பாடப்புத்தகத்தின் பக்கங்களை தீயீட்டு கொளுத்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவ்வளவு தான்! கருத்துச் சுதந்தரத்துக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக்கொள்ளும் சில அறிவுஜீவிகளும், ஆங்கில ஊடகங்களும் களத்தில் தீவிரமாக இறங்கின. அரசியல் சாசன உருவாக்கம் மெதுவாக நடைபெறுவதாக அம்பேத்கரை விமர்சிக்கும் கார்ட்டூனை நீக்கச் சொல்லி போராடுபவர்களுக்கு எதிராகச் சில ஆங்கில பத்திரிகைகளில் இன்றுவரைத் தொடர்ச்சியாக கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. ‘அரசியலை படித்தலும், படித்தலின் அரசியலும்’. ‘கார்ட்டூனுக்கு தடை விதிப்பதால் எதிர்காலத் தலைமுறைகளுக்கு எந்தப் பயனும் இல்லை’. ‘எம்.பி.க்களின் கார்ட்டூன் எதிர்ப்பு வாங்கு வங்கி அரசியலுக்காகத்தான்: தலித் சமூக ஆர்வலர்கள்’. ‘ஒரு கார்ட்டூனால் ஏன் இவ்வளவு களேபரம்?: கேட்கிறார்கள் கல்வியாளர்கள்’. ‘கார்ட்டூன் நீக்கப்பட்ட பாடப்புத்தகம் கற்றலை உயிர்ப்பற்றதாகச் செய்யும்’. ‘தணிக்கை இருந்தாலும்கூட பிரிட்டன் எப்போதுமே கார்ட்டூனை தடை செய்யாது.’ இவையெல்லாம் அவற்றின் தலைப்புகள்.

அரசியல் சாசனத்தை உருவாக்குவதை அம்பேத்கர் மெதுவாக/தாமதமாகச் செய்தார் என்று அந்த கார்ட்டூன் விமர்சிப்பதாகவும், அந்த விமர்சனம் உண்மையல்ல, இப்படிப்பட்ட கார்ட்டூன் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது, மாணவர்கள் மனத்தில் அத்தகைய எண்ணத்தை (அம்பேத்கர் அரசியல் சாசன உருவாக்கத்துக்கு அதிகக் காலம் எடுத்துக்கொண்டார்) ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த கார்ட்டூனை நீக்க வேண்டும் என்பது தான் கார்ட்டூன் எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால், அம்பேத்கர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை மறைத்துவிட்டு, கார்ட்டூன் எதிர்ப்பு என்பது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானது, தணிக்கையை ஆதரிக்கும் செயல் என்பதாக ஊடகங்கள் விவாதங்களைத் திசைத் திருப்பிவிட்டன. உடனே, ‘இந்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அம்பேத்கரை அவமானப்படுத்தும் விதமாக இதில் எதுவுமில்லை. அம்பேத்கர் ஒரு சுதந்தரச் சிந்தனையாளர். தணிக்கையை அவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் உருவாக்கிய அரசியல் சட்டமும் தணிக்கையை அங்கீகரிக்கவில்லை’ என்றார் அரசியல் ஆய்வாளரான ஆஷிஷ் நந்தி.

‘இது மிகவும் முட்டாள்தனமானது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் கருத்து இப்போதுள்ளவர்களின் மனத்தை எவ்வாறு புண்படுத்தும்? அரசியல் தலைவர்கள் உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுகிறார்கள். அதனால் தான் ஒருவரின் பார்வைக் கோணத்தைக்கூட இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.’ என்றார் மற்றொருவர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்ற புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான கே.எம்.பணிக்கர், ‘அம்பேத்கர் கார்ட்டூன் பற்றிய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு கவலை தருகிறது. அந்த கார்ட்டூன் விமர்சிப்பது மிக மெதுவாக நடைபெறுகிற அரசியலமமைப்புச் சட்ட உருவாக்கச் செயல்முறையைத் தானே தவிர அதை உருவாக்குபவர்களை அல்ல.’ என்று விளக்கவுரை அளித்தார். பணிக்கர் சொல்வது புரியவில்லையெனில் இப்படிச் சொல்லலாம்: நாங்கள் மெதுவாக ஓடுகிறது என்று குறை சொல்வது பஸ்ஸைத் தானே தவிர, அதன் ஓட்டுநர், நடத்துனரை அல்ல.

என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக உருவாக்க கமிட்டியின் தலைமை ஆலோசகர் சுஹாஸ் பல்ஷிகாரும் பணிக்கரின் கருத்தையே பிரதிபலித்தார். அதாவது, ‘அரசியல் சாசன உருவாக்கச் செயல்முறையைதான் அந்த கார்ட்டூன் விமர்சிக்கிறது, அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களை அல்ல. எதிர்ப்பவர்கள் அந்தப் பாடத்தை முழுவதுமாகப் படித்துப்பார்க்காமல் பேசுகிறார்கள்.’

சிலர் புலன் விசாரணை செய்து வெளிப்படுத்திய விஷயங்கள் இவை. ‘அம்பேத்கரோ நேருவோ இந்த கார்ட்டூனை ஆட்சேபிக்கவில்லை. ஏ.கே. ராமானுஜத்தின் ராமாயண சர்ச்சையாக இருந்தாலும் சரி, அம்பேத்கரின் கார்ட்டூன் சர்ச்சையாக இருந்தாலும் சரி, வெகுசன அபிப்பிராயத்தின் முன் மேதைமைக்கு மதிப்பில்லை. ஜனநாயகம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் தான், எதார்த்தத்தில் அதை அனுமதிக்க முடியாது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். 2006ல் இந்தப் புத்தகம் வந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று எதிர்ப்பவர்களைக் கேட்டால் மௌனம் தான் பதிலாக இருக்கிறது.’

கற்றலை எளிதாக்குதல், சுவாரசியமாக மாற்றுதல், மாணவர்களிடம் செயல்வழிக் கற்றலை அதிகரித்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் என்.சி.இ.ஆர்.டி. உருவாக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகத்தில் கார்ட்டூன்கள் வைக்கப்பட்டது. ‘அரசியலமைப்புச் சட்டம்: ஏன் – எப்படி? என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ள இந்த கார்ட்டூனின் நோக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபை ஏன் மூன்றாண்டு காலம் எடுத்துக்கொண்டது என்பதை கண்டறிவது தான் என்கின்றனர் பாடப்புத்தகம் எழுதியதில் பங்கெடுத்த அந்த இரண்டு கல்வியாளர்கள். ஒரு கேலிச் சித்திரத்தில் பொதிந்துள்ள நகைச்சுவையை ரசிக்கும் உணர்வு கார்ட்டூன் எதிர்ப்பாளர்களுக்கு இல்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

உண்மையில் அந்த கார்ட்டூன் மாணவர்களுக்குத் தெரிவிக்க துணியும் கருத்து என்ன? இதற்கான பதில் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தில் ஆங்கில மீடியப் புத்தகத்தின் 18ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பு இதுதான்: Cartoonist’s impression of the “snail’s pace’ with which the Constitution was made. Making of the Constitution took almost three years. Is the cartoonist commenting on this fact? Why do you think, did the Constituent Assembly take so long to make the Constitution?அரசியல் சாசன உருவாக்கம் நீண்டகாலம் (மூன்று ஆண்டுகள்) எடுத்துக்கொண்டது என்று சொல்லியே, அந்தத் தாமதத்துக்கான காரணங்களை ஆராயச் சொல்கிறார்கள். அந்தப் பாடத்தைப் படித்துப்பார்த்தால், அதில் எங்கேயும் தாமதம் என்றக் குற்றச்சாட்டு இல்லை. மிக அழகாக, அரசியல் சாசன உருவாக்கச் செயல்பாட்டை விளக்கியதுடன், அதன் தேவைகள், உருவாக்கத்தில் சந்தித்த சவால்கள் என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் அந்தப் பாடப் புத்தகம் விவரித்திருந்தது. அந்தப் பாடம் முழுவதையும் படித்துப் பார்த்தாலும் சர்ச்சையாகியுள்ள கார்ட்டூன் அந்தப் பாடத்தில் இடம்பெறுவதற்கான தேவை இல்லை.

கார்ட்டூனுக்குத் தடை கோருவது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானதா? ஒரு தனிப்பட்ட படைப்பாளியின், தனிப்பட்ட படைப்புக்கு எதிராக இந்தச் சர்ச்சை உருவாகவில்லை. இது மாணவர்களுக்காக, என்.சி.இ.ஆர்.டி. என்ற அரசு அமைப்பு ஒன்று, ஆசிரியர் சிலரை பணியில் அமர்த்தி எழுதச் சொல்லப்பட்ட பாடப்புத்தகத்தில் இடம்பெறும் கருத்தைத்தான் எதிர்க்கிறது. படைப்பாளியின் கருத்துச் சுதந்தரத்துக்கு யாரும் தடை கோரவில்லையே. குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் உணர்த்தும் செய்தி என்ன என்பதைப் பற்றிய சர்ச்சை தானே தவிர, அதிலுள்ள நகைச்சுவையை ஆராய்வதில் உண்டான சர்ச்சையல்ல இது.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? 60 ஆண்டுகளுக்கு முன்பு சமூக, கல்வி, பொருளாதார விழிப்புணர்வு தலித்துகளிடம் மிகக் குறைவாக இருந்தது. அன்று அவர்கள் குரல் பலவீனமாக இருந்தது. ஆனால், இன்றைய நிலை வேறு. ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தலித்துகள் தங்கள் சுயகௌரவம், உரிமைகள் பாதிக்கப்படும் போது உரத்து குரல் கொடுக்கவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும், குறிக்கோளை வென்றெடுக்கும் முனைப்புடன் விளங்குகிறார்கள். அதனால் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தவறான வரலாற்றுப் பதிவை தாமதமாக எதிர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் உருவாக்குவது கல்வியாளர்களின் பணி. அரசுகள் அதில் தலையிடக்கூடாது. சரியா? பள்ளி பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் உருவாக்குவதில் அரசியல்வாதிகள் தலையிடாமல். அதை கல்வியாளர்கள்,மற்றும் அறிவு ஜீவிகளிடம் விட்டுவிட வேண்டும் என்கின்றனர் கார்ட்டூனை ஆதரிப்போர். சமத்துவச் சமூகத்தை லட்சியமாகக் கொண்டிருக்கும் நாம், நமது அரசியலமைப்பும், அந்த லட்சியத்தை அடைவதற்கான பணியை எங்கிருந்து தொடங்குவது? பள்ளியிலிருந்துதானே அதைச் செய்ய முடியும். அரசு தலையிடாமல் கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும். வகுப்பறையில் அரசியல் அதிகாரத்தின் கை நீளக்கூடாது என்று சொல்லும் இதே அறிவு ஜீவிகள் தான், முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் பாடநூல்கள் திருத்தி எழுதப்பட்டுள்ளன, என்று கூறி, அரசின் தலையீட்டைக் கோரினர். இன்று அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.

சரி, உண்மையில் அரசியல் சாசனம் உருவாக்குவதில் அம்பேத்கர் தாமதமாகச் செயல்பாட்டாரா? இதற்கான விளக்கத்தை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்டால், கருத்துரிமைக் காவலர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

‘அரசியலைமைப்பு வரைவு குழு , அரசியல் நிர்ணய சபையால் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 30ல் அது தனது முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்ட் 30 முதல் 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்தச் சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக , அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக்குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் 243 விதிகளும் 13 அட்டவணைகளும் கொண்டிருந்தது. வரைவுக்குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது சாசன வரைவில் 315 விதிகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. பரிசீலனைக் கட்டத்துக்கு பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. இறுதி வடிவத்தில், அரசியல் சாசன வரைவு 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. அரசியல் சாசன வரைவுக்குழு முன் சுமார் 7635 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் 2475 மட்டும் ஆய்வுக்கு உகந்ததாக எடுத்துகொள்ளப்பட்டு, அவற்றின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன.

பிற நாடுகளின் அரசியல் சாசனம் தயாரிக்க ஆன காலத்தைச் சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1787 மே 25ல் கூடிய அமெரிக்க கன்வென்ஷன் தன் பணியை 1787 செப்டம்பர் 17ல், அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசிய சாசன அமைப்பு கன்வென்ஷன் 1864 அக்டோபர் 10ல் கூடியது. 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசன அவை 1891 மார்ச்சில் கூடியது. 1900 ஜுலை 9ல் அரசியல் சாசனைத்தை உருவாக்கி முடித்தது. இதற்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன் 1908 அக்டோபரில் கூடியது. 1909 செப்டெம்பர் 20ல் அரசியல் சாசனம் நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டு உழைப்புத் தேவைப்பட்டது.

‘அமெரிக்கா, தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட நமது நிர்ணய சபை அதிகக் காலம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிகக் காலம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா கன்வென்ஷனைவிடக் குறைவாகவே எடுத்துக்கொண்டது. கால அளவை ஒப்பிடும்போது இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள் இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. இந்திய அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147 பிரிவுகளும், ஆஸ்திரேலியா சாசனத்தில் 128 பிரிவுகளும், தென் ஆப்பிரிக்கா அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன. இரண்டாவது விஷயம் என்னவென்றால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய அரசியல் நிர்ணய சபை 2473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பார்த்தால், அரசியல் நிர்ணய சபை தாமதமாகச் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இவ்வளவு கடினமான பணியை இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக அரசியல் நிர்ணய சபை நிச்சயமாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்.’

அம்பேத்கரே இந்தக் கார்ட்டூனை எதிர்த்திருக்கமாட்டார் என்று சொல்பவர்கள் அம்பேத்கரே அளித்த இந்த விளக்கத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒரு பக்கம், கார்ட்டூன் உணர்த்தும் செய்தி. இன்னொரு பக்கம், அம்பேத்கர் அளித்த விளக்கம். இந்த இரண்டில் எதை கருத்துக் காவலர்கள் தேர்ந்தெடுப்பார்கள்? இரண்டில் எது பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும்? இரண்டில் எதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்? இரண்டில் எது நமக்கு இன்றும் பலனளிக்கக்கூடியது? இரண்டில் எது ஏற்கக்கூடியது?

இந்த எளிய உண்மையைச் சுட்டிக்காட்டினால், கார்ட்டூனைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள், நகைச்சுவை உணர்வு அற்றவர்கள், கருத்து சுதந்தரத்துக்கு எதிரானவர்கள், புனித பிம்பத்தைக் கட்டமைப்பவர்கள் என்று பல்வேறு பெயர்கள் பரிசளிக்கப்படுகின்றன. இது பிரச்னையைத் திசைதிருப்பும் உத்தி மட்டுமே.

மற்றபடி, அம்பேத்கர் நிச்சயம் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவருக்குப் புனித பிம்பம் தேவையில்லை. அவர் முன்வைத்த கருத்துகள், அவரது அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வை, அவர் முன்வைத்த விழுமியங்கள் தொடங்கி, எதுவொன்றையும் யாரும் விமரிசிக்கலாம். அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் உள்பட.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’

இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A  பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.

சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :

  1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
  2.  தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
  3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ

அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.

இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.

மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.

அது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.

ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா? குற்றமாகாதா?

தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.

கணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.

மேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.

அனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.

அதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard