New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில் கலவை வெங்கட்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில் கலவை வெங்கட்
Permalink  
 


பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்

 

 

கலவை வெங்கட்

 

 

 

 

-------------------

நிஜ ரூபத்தில் ஒரு பொய்

ஜோஸஃப் கேபல்ஸ் என்பவர் ஹிட்லருடைய பிரச்சார மந்திரியாக இருந்தார். அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்:

 

'ஒரு பொய்யை பலமுறை பிரச்சாரம் செய்தால், அதையே மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள். '

 

இரண்டாம் உலகப் போரின்போது இது நிரூபணமாகியது. யூதர்களுக்கெதிராக நடந்த பொய் பிரச்சாரத்தின் விளைவாக அறுபது இலட்சம் யூதர்கள் உயிரிழந்தனர். மேற்கத்திய உலகம் அதன் பின்னரே விழித்துக் கொண்டது. பிரச்சாரத்திற்கு அடிப்படியாக உண்மை இருக்கிறதா என்று கேட்கத் துவங்கினார்கள். இந்தியாவிலோ, இன்னும் அந்தப் பகுத்தறிவு மக்களிடம் பரவவில்லை. பொய் பிரச்சாரங்களை உண்மை என்று நம்புவோர் பலர். உதாரணமாக,

 

'ஐரோப்பியர்களும் பாதிரியார்களும் வரும் முன்னால், நமது நாட்டில், கல்வி என்பது மேல் ஜாதி மக்களுக்கேக் கிட்டியது. கீழ் ஜாதி மக்களும், ஹரிஜன மக்களும் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களின் ஆட்சியிலே, பாதிரியார்கள் கல்விக்கூடங்கள் கட்டிய பின்னரே, கீழ் ஜாதி மக்களுக்கும், ஹரிஜன மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. '

 

என்று ஒரு பிரச்சாரம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நமது நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை நமது மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், இது உண்மையா இல்லை பொய்யா என்று வினவியவர்கள் வெகு சிலரே. அங்ஙனம் வினவியது மட்டுமில்லாமல், மிக சிறப்பாக ஆராய்ந்து, இது பொய் பிரச்சாரமே எனவும், நமது பாரம்பரியக் கல்விக் கூடங்களில் ஹரிஜன மக்கள் உட்பட எல்லா ஜாதியினரும் ஒன்றாகவே பயின்றனர் எனவும், அத்தகைய பாரம்பரியக் கல்வித் திட்டம் அழிந்திடக் காரணமே ஐரோப்பியர்களின் அராஜக ஆட்சிதான் எனவும் நிரூபித்தவர் தரம்பால் என்னும் அறிஞர்.

 

 

தரம்பால்

தரம்பால் பேரறிஞர் மட்டுமில்லை. காந்திஜியின் தொண்டரும் கூட. மாபெரும் சமூக சம நீதி இயக்கத்தின் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணனின் வழிவந்தவருமாவார். இந்த இரு பெருந்தலைவர்களின் தூண்டுதலினாலேயே தமது ஆராய்ச்சியைத் துவங்கினார். இந்த ஆய்வின் விளைவே தரம்பால் அவர்களின் 'Beautiful Tree - Indigenous Indian Education in the 18th Century ' என்கிற சிறந்த நூலாகும். இதில், பிரிட்டிஷ்காரர்களே நடத்திய நூற்றுக்கணக்கான statistical studies-களை சான்றாகத் தந்துள்ளார். அங்ஙனம் தரப்பட்டுள்ள சான்றுகள் மட்டுமே இந்நூலில் 350 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றினின்று ஒன்றிரண்டைக் காண்போம்.

 

 

நிஜம்தான் என்ன ?

 

இந்த statistical study தரம்பாலின் நூலில் Annexure - A, பக்கம் 226 முதல் 233 வரை தரப்பட்டுள்ளது. சென்னை கச்சேரியின் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த எல்.ஜி.கே. மர்ரே என்பவர் 12, ஃபிப்ரவரி 1825 அன்று கையொப்பமிட்டு எழுதிய 'Collector, Madras to Board of Revenue ' என்கிற மடலும் (ஆதாரம்: TNSA: BRP: Vol. 1011, Pro. 14th February 1825 No. 46 pp. 1193 - 1194), 'Statement of Schools ' என்ற ஆவணத்திலும், கீழ் காணும் புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன:

 

1825-ம் ஆண்டிலே, சென்னை கச்சேரியிலே 305 பொது மற்றும் தனியார் பாரம்பரியக் கல்விக்கூடங்கள் இருந்தன. கச்சேரி என்பது இன்று உள்ள திருவல்லிக்கேணி, மயிலை, ஸான் தோம் மற்றும் ஃபோர்ட் பகுதிகளைக் கொண்டதாகும். குருகுலங்களும், பாடசாலைகளும் இவற்றில் அடங்கும். வேதங்களும், தத்துவமும் மட்டுமே சொல்லித்தரப்பட்ட கடிகைகள் இந்த எண்ணிக்கையில் சேரமாட்டா. இந்தப் பொது மற்றும் தனியார் பாரம்பரியக் கல்விக்கூடங்களில் ஆயுர்வேதம், கணிதம், பொருளாதாரம், ஜோஸியம், சமயம், இலக்கியம் போன்றவை கற்பிக்கப் பட்டன. பிராம்மணர், ஷத்ரியர், வைஸியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, மாணவிகளும் இக்கல்விக் கூடங்களில் பயின்றனர். ஹரிஜன மாணவ, மாணவிகளும் பயின்றனர்.

 

பொதுக் கல்விக் கூடங்களில் இலவசமாகக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இக் கல்விக் கூடங்கள் மான்ய நிதி கொண்டு நடத்தப்பட்டன. தர்ம கல்விக்கூடங்கள் செல்வந்தர்கள் தானமாக அளித்த நிதியினைக் கொண்டு நடத்தப்பட்டன.

 

பொதுக் கல்விக் கூடங்களில் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை வர்ண வாரியாக:

 

பிராம்மண மாணவர்கள் : 358

பிராம்மண மாணவிகள் : 1

வைஸிய மாணவர்கள் : 789

வைஸிய மாணவிகள் : 9

சூத்திர மாணவர்கள் : 3506

சூத்திர மாணவிகள் : 113

ஹரிஜன மாணவர்கள் : 313

ஹரிஜன மாணவிகள் : 4

முஸ்லீம் மாணவர்கள் : 143

முஸ்லீம் மாணவிகள் : 0

 

தர்ம கல்விக் கூடங்களில் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை வர்ண வாரியாக:

 

பிராம்மண மாணவர்கள் : 52

பிராம்மண மாணவிகள் : 0

வைஸிய மாணவர்கள் : 46

வைஸிய மாணவிகள் : 2

சூத்திர மாணவர்கள் : 172

சூத்திர மாணவிகள் : 0

ஹரிஜன மாணவர்கள் : 134

ஹரிஜன மாணவிகள் : 47

முஸ்லீம் மாணவர்கள் : 10

முஸ்லீம் மாணவிகள் : 0

 

சூத்திரர்கள் என்று எழுதினால் படிப்பவர் மனது புண்படாதா என்று சிலர் கேட்கலாம். புண்படுத்துவது எனது நோக்கமல்ல. பிரிட்டிஷ்காரர்களின் ஆவணங்களில் அங்ஙனமே கூறப்பட்டுள்ளது. எனவே, நானும் அவ்வாறே இங்கே எழுதியுள்ளேன். மற்றபடி, கண்ணன் செய்வித்த நாற்வர்ணங்களை அழித்தனரே மூடர் என்ற பாரதியாரின் ஆதங்கமே எனது ஆதங்கமுமாகும். அதுபோல், ஹரிஜனர் என்பது காந்திஜி பிற்காலத்தே உருவாக்கிய சொல். இவர்கள் பிரிட்டிஷ்காரர்களின் ஆவணங்களில் ஆதி திராவிட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஹரிஜனர் என்று சொன்னால் சுலபமாகப் புரியும் என்பதால் அவ்வாறு எழுதியுள்ளேன். தேவர், நாடார் போன்ற ஜாதியினர் பல நூற்றாண்டுகளாகப் போர் வீரர்கள் எனப் படும் ஷத்ரியர்களாக இருந்தனர். சோழர்களின் ஆவணங்களிலும் இதற்கு ஆதாரங்கள் பல உண்டு. சங்க இலக்கியப் பாடல்களிலும் இது பற்றிக் காணப்படுகிறது. மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ந்த பின்னே, இந்த ஷத்ரிய ஜாதியினர் வேலையிழந்து வறுமைவயப்பட்டனர். இதனால்தான், 19-ம் நூற்றாண்டில் ஷத்ரியர் எனும் வர்ணமே தமிழ் நாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு நிலை. இவர்களும், சூத்திரர்களாகவே கருதப்பட்டனர்.

 

 

வீட்டிலும் கல்வி

 

பல மாணாக்கர்கள் கல்விக்கூடம் சென்று பயிலாமல் வீட்டிலேயே கல்வி கற்றனர். மேற்கூறிய ஆவணத்தில், அங்ஙனம் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை வர்ண வாரியாகத் தரப்பட்டுள்ளது:

 

பிராம்மண மாணவர்கள் : 7586

பிராம்மண மாணவிகள் : 98

வைஸிய மாணவர்கள் : 6132

வைஸிய மாணவிகள் : 63

சூத்திர மாணவர்கள் : 7589

சூத்திர மாணவிகள் : 220

ஹரிஜன மாணவர்கள் : 3449

ஹரிஜன மாணவிகள் : 136

முஸ்லீம் மாணவர்கள் : 1690

முஸ்லீம் மாணவிகள் : 0

 

 

நிதர்சனமாகும் உண்மைகள்

-

மேற்காணும் ஆவணத்தை அலசுவோமேயாயின் பல உண்மைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஒன்று, பாரம்பரியக் கல்விக் கூடங்களில் ஒவ்வொரு வர்ணமும் சமுதாயத்தில் தனது எண்ணிக்கைக்கு ஏற்றவாறே பயின்றதைக் காணலாம். அந்த விகிதாசாரத்தையும்தான் காண்போமே.

 

பொது கல்விக் கூடம் - தர்ம கல்விக் கூடம் - வீட்டில் பயின்ற மாணாக்கர்களின் விகிதாசாரம் வர்ண வாரியாக:

 

பிராம்மண மாணாக்கர்கள் : 6.8 % - 11.2 % - 28.5 %

வைஸிய மாணாக்கர்கள் : 15.2 % - 10.3 % - 23 %

சூத்திர மாணாக்கர்கள் : 69.1 % - 37.1 % - 37.1 %

ஹரிஜன மாணாக்கர்கள் : 6.1 % - 39.1 % - 13.3 %

முஸ்லீம் மாணாக்கர்கள் : 2.7 % - 2.2 % - 6.3 %

---- ---- ----

மொத்தம் : 100 % - 100 % - 100 %

 

இதிலிருந்தே தெரியவில்லையா நமது பாரம்பரியம் எந்த வர்ணத்தாருக்கும் கல்வியை மறுக்கவில்லையென ? தரம்பாலின் நூலில் இந்த உண்மையைப் பறை சாற்றும் வகையில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் தரப்பட்டுள்ளன.

 

 

பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி

 

நமது பாரம்பரியக் கல்வி பின் ஏன் வீழ்ந்தது ? பல காரணங்கள். பாரம்பரியக் கல்வி மன்னர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் எழுதி வைத்த மான்ய நிதி கொண்டே நடத்தப்பட்டது. இவர்கள் நிலமும், பணமும் மான்யமாக எழுதி வைத்தனர். முஸ்லீம்கள் தென் நாட்டின் மேல் படை கொண்ட போது, பல அரசுகள் வீழ்ந்தன. செல்வங்களும் சூறையாடப்பட்ட நிலை. இதன் விளைவாக, கல்விக்கூடங்களைப் பராமரிக்கத் தேவையான வருவாய் குறைந்தது. இது நமது பாரம்பரியக் கல்விக்கு விழுந்த முதல் அடியாகும். இருப்பினும், திண்ணைகளையே பள்ளித்தலமாக்கி நமது முன்னோர்கள் பாடம் பயிற்றுவித்தனர். இதுவே, ஐரோப்பிய நாடுகளில் Lancaster System என்று அழைக்கப்பட்டக் கல்வித் திட்டத்தின் அடிபடையாகவும் அமைந்தது. ஆனால், 1830-களில், மெகாலே என்பவர் நமது பாரம்பரியத்தை அழிக்க வேண்டுமென்றும், இந்தியர்களை அடிமை சிந்தனைக் கொண்டவர்களாக மாற்ற வேண்டுமெனவும், இங்ஙனம் செய்வதால் ஹிந்துக்கள் தமது பாரம்பரியத்தை மிகவும் தாழ்ந்த அபிப்பிராயத்தோடு நோக்குவரென்றும், அதன் விளைவாக கிறிஸ்தவர்களாக மதம் மாறுவார்களென்றும் திட்டமிட்டார். அவர் நடைமுறைப்படுத்தியத் திட்டங்களே பாரம்பரியக் கல்வி அழிய முக்கியக் காரணமாக அமைந்தன. அவர் எழுதியவற்றையும்தான் காண்போமே.

 

 

மெகாலே

தாமஸ் பேபிங்டன் மெகாலே 1832-ல் Member of the Supreme Council of India-வாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு இன வெறியர். இந்தியர்களைக் கறுப்பர்கள் என்று இழிவாகக் கூறியவர். இவர் ஒரு கிறிஸ்தவ மத வெறியராகவும் திகழ்ந்தவர். அதற்காக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய இந்தியர்களை மதித்தார் என்று எண்ணிவிடக் கூடாது. The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1 என்ற நூலில் (பக்கம் 335) அவரே கூறுவதாவது:

 

'ஒரு இந்தியன் என்னதான் மதம் மாறினாலும் ஓரளவு மட்டுமே நல்ல கிறிஸ்தவனாக இருக்க முடியும். '

 

மெகாலே தாழ்ந்த ஜாதி மக்களைப் பற்றி எழுதியது மிகவும் மனவருத்தமளிக்கும் விதமாக இருக்கிறது:

 

'கீழ் ஜாதி ஹிந்துக்கள் நாசுக்கற்றவர்கள். பொதுவாக, அவர்தம் மனைவி வேறு ஆண்களோடு தகாத உறவு கொள்ளும் பட்சத்தில், அவள் கணவன் அதற்கு நஷ்ட ஈடாக பணம் பெற்றுகொண்டு விஷயத்தை மறந்துவிடுவான். ' (ஆதாரம்: The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1, பக்கம் 335)

 

இங்கும் கீழ் ஜாதி, மேல் ஜாதி போன்ற சொற்கள் எனது பிரயோகமல்ல. அது போன்ற சொற்களில் எனக்கு ஒப்புதலுமில்லை. மெகாலே போன்ற மிஷனரிகள் பிரயோகம் செய்த சொற்களை அங்ஙனமே மொழிந்துள்ளேன்.

 

 

மார்க் ட்வெய்ன்

 

இவர் ஒரு பேரறிஞர், எழுத்தாளர். இவர் ஒரு முறை எழுதினார்:

 

'இந்தியாவே நாகரிகத்தின் பிறப்பிடமாகும். தத்துவத்தில் இந்நாட்டிற்கு ஈடில்லை. சிந்தனை வளமே செல்வமாகுமெனில், இந்தியர்களே உலகின் பெரும் செல்வந்தர்களாவர். '

 

இவரும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரே. இவர் போல பல அறிஞர்கள் இந்தியாவின் பெருமையை உணர்ந்தார்கள். அவர்கள் நமது இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் பற்றி அறிந்தவர்களாவர். இவற்றைப் பற்றியெல்லாம் கிஞ்சித்துமறியாத மெக்காலேயோ, இந்தியாவின் படைப்புகள் மீது வெறுப்பையே உமிழ்ந்தார்.

 

 

மெகாலேயின் வெறுப்பு

மெகாலே எழுதினார்:

 

'சில காலம் முன்பு பஞ்சாப் போலிருந்த ருஷ்யா இன்று நாகரிகத்தின் வரம்பிற்குள் வந்துவிட்டது. இன்று ருஷ்யர்கள் உயர் பதவி பூண்டு இங்கிலாந்து அரசிற்கு சேவை செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அது எங்ஙனம் சாத்தியமாகியது ? நாம் அவர்களுக்கு மேற்கு ஐரோப்பாவின் நாகரிகத்தையும், மொழியையும் பயிற்றுவித்ததால்தானே ? மேற்கு ஐரோப்பிய மொழியும், சிந்தனையும் ஹிந்துக்களையும் நாகரிகத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்துவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஹிந்துக்களை புத்திசாலிகள் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது. ' (ஆதாரம்: The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1, பக்கம் 355)

 

அவர் மேலும் எழுதினார்:

 

'இந்தியர்களுக்கு என்ன பயிற்றுவிக்க வேண்டுமென்று முடிவு செய்யும் அதிகாரம் பிரிட்டிஷ்காரர்களிடமிருக்கிறது. ஆங்கில மொழியோடு ஒப்பிடும் தகுதி எந்த இந்திய மொழிக்குமில்லை. இங்கிலாந்தில் குதிரைக்கு லாடமடிப்பவன் கூட, இந்திய மருத்துவர்களைவிட அதிகம் அறிந்திருப்பான். இந்திய அறிவியல் நூல்களைப் படிப்பின், இங்கிலாந்தின் பள்ளிக்கூட சிறுமியர்களும் ஏளனத்துடன் சிரிப்பார்கள். ' (ஆதாரம்: The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1, பக்கம் 354)

 

 

மெகாலேயின் கல்வித் திட்டம்

 

இந்தியர்களுக்கு எவ்விதமான கல்வியளிக்க வேண்டும் என்பதில் மெகாலே மிகவும் தெளிவாகயிருந்தார்.:

 

'இந்திய மொழிகளில் படிக்க உகந்த படைப்பு ஏதுமில்லை. எனது திட்டம் நிறைவேறுமாயின், இன்னும் இருபது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் செயலிலும், சிந்தனையிலும் பிரிட்டிஷ்காரர்களாக ஆகிவிடுவார்கள். இவர்கள் ஐரோப்பிய சிந்தனைகளை மொழிபெயர்ப்பதன் மூலமாக மட்டுமே இந்திய மொழிகளில் சீரிய படைப்புகளை உருவாக்க இயலும். ' (ஆதாரம்: The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1, பக்கம் 362)

 

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இந்தியர்களைத் தேங்காய்களாக மாற்றுவதே மெகாலேயின் குறிக்கோளாக இருந்தது. தேங்காய் ஓடு மர நிறமாக இருப்பினும் உள்ளே வெள்ளையாக இருக்கும். மெகாலே உருவாக்கிய Brown Sahib-களும் அது போலவே -- மர நிறத் தோலுடையவர்களாயிருப்பினும், சிந்தனையால் பிரிட்டிஷ்காரர்களாகத் திகழ்ந்தார்கள். மெகாலே திட்டமிட்டபடியே, அவர்கள் தங்களின் பாரம்பரியத்தை மிகவும் இழிவாக எண்ணினர்.

 

மெகாலே தனது திட்டத்தை முழு மூச்சுடன் செயல்படுத்தினார். பெங்கால் மாநிலத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 7,000 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பிரிட்டிஷ் இராஜ்யத்திற்கு அனுகூலமாக இருந்த இக் கல்வித் திட்டம், வரிப் பணத்தை செலவிட்டு செயலாக்கப்பட்டது. இக் கல்வித் திட்டம் முழுதுமாக செயல்படுத்தப்படுமாயின் சில ஆண்டுகளில் இந்தியர்கள் தங்களை ஹிந்துக்கள் என்றுக் கூறிக்கொள்ளாவே அவமானப் படுவார்கள் என்றும் மெகாலே கூறினார்.

 

மிஷனரிகளும் முழு மூச்சுடன் மெகாலேயின் கல்வித் திட்டத்தை செயலாற்றினர். மிஷனரிகள் நடத்திய பள்ளிக் கூடங்களில் தேசிய உணர்வுகளைத் தூண்டும் யாவும் தடை செய்யப் பட்டன. சுதந்திரப் போராட்டத்தின்போது, மிஷனரிகள் மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடவிடவில்லை. மிஷனரிகள் நடத்திய பள்ளிக் கூடங்களில் தேசிய போராட்டதிற்கு எதிராகப் பல பிரச்சாரங்கள் நடந்தன.

 

இங்ஙனமாக, நமது பாரம்பரியக் கல்வி நசுக்கப்பட்டது.

 

 

மனு ஸ்மிருதியின் பெயரால்

இவை யாவும் சுதந்திரத்திற்குப் பிறகு மாறியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. மெகாலே உருவாக்கிய தேங்காய்கள் நமது பாரம்பரியத்தைப் பற்றிப் பொய்யான பிரச்சாரங்களை இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றனர். நமது பாரம்பரியமே மனு ஸ்மிருதியைக் கொண்டு நடத்தப்பட்டதாகவும், கீழ் ஜாதி மக்கள் நசுக்கப் பட்டதாகவும் ஒரு பொய் பிரச்சாரம். இதிலாவது ஏதேனும் உண்மை இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஒரு மன்னரின் ஆட்சியின் போதும் மனு ஸ்மிருதி நீதி நூலாக இருந்ததில்லை. இவ்வளவு ஏன் ? இன்னொரு விஷயத்தையும் பார்ப்போமே.

 

குப்தர்களின் ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும் சரித்திர ஆய்வாளர்கள் வாதிடுவார்கள். அது எதுவாயிருப்பினும், ஒன்று மட்டும் திண்ணம் -- அந்த சமயத்தில் காமண்டகிய நீதி ஸாரம் என்னும் நூலே நீதிக் கோட்பாடாக இருந்தது. அதை இயற்றிய காமண்டகிய முனிவர், மனு ஸ்மிருதி முன்னொரு சமயம் இருந்ததாகவும், அதன் கோட்பாட்டின் அடிப்படையில் தாம் இயற்றியிருப்பதாகவும் தொனியில் கூறுகிறார். இதிலிருந்து, சுமார் 2,000 ஆண்டுகள் முன்பே கூட மனு ஸ்மிருதி நடைமுறையில் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

 

நமது பாரம்பரியக் கல்வியிலும் ஒரு பொழுதும் மனு ஸ்மிருதி பயிற்றுவிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. தரம்பால், இதைப் பற்றியும் ஒரு அரிய விஷயத்தை வெளிக் கொணர்கிறார். அவரது நூலில், Annexure IV E, பக்கம் 323 - 326, வில்லியம் ஆடம் சமர்ப்பித்த 'Reports on the State of Education in Bengal 1835 and 1838 ' என்ற ஆவணத்த மூலமாக சுட்டிக் காட்டி தரம்பால் கூறுவதாவது:

 

'கீழ் கண்ட நூல்களே நீதிக் கோட்பாடுகளாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன: திதி தத்வம், பிராயச்சித்த தத்வம், உத்பஹ தத்வம், சுத்தி தத்வம், சிரத்த தத்வம், ஆஹ்னிக தத்வம், ஏகாதசி தத்வம், மலாமஸ தத்வம், சமய சுத்தி தத்வம், ஜ்யோதிஷ தத்வம், தயாபாகம், பிராயச்சித்த விவேகம், மிதாஷரம், சரோஜகலிகம், சிரத்த விவேகம், விவாஹ தத்வம் மற்றும் தயா தத்வம். '

 

இது போன்ற பல அரிய உண்மைகளை தரம்பால் வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவருடைய நூல், உண்மையை நாடும் மற்றும் நமது பாரம்பரியக் கல்வியைப் பற்றி அரிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard