திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் அடக்கிய ஞானி அவர்.
.
ரோமக் கவிஞர் ஓவிட் என்பவர் ( 43 BC – 18 AD ) மட்டுமே அவருடைய காமத்துப் பாலை கொஞ்சம் ஒத்து எழுதியவர். கன்பூசியஸ் சில இடங்களில் ஒத்துப் போகும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார், அதைத் தவிர்த்தால் அறத்துப் பால், பொருள் பாலைப் பொறுத்தவரை திருவள்ளுவர் தனிக்கொடி நாட்டியவர் தான்.
நிற்க.,
கிமு 970 – 928, காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர் சாலமோன். கடவுளிடம் ஞானம் வேண்டிப் பெற்றவராக, சிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப் படுவவர் தான் சாலமோன். அந்தக் காலத்தில் எருசலேமை தலைமையாகக் கொண்ட யூதா மற்றும் இஸ்ரேல் நாடுகளை நாற்பது ஆண்டுகள் ஆண்டவர் தான் சாலமோன்.
.
தன்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் வாழ்வே மாயம் என்று பல்டிக் கொள்கைகளை அடித்தாலும், முதல் பாதியில் அருமையான நீதிமொழிகள் தந்திருக்கிறார்.
இங்கும் நிற்க.,
இரண்டு வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட இடங்களில், வேறுபட்ட மொழிகளில் வாழ்ந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இருந்தாலும் திருவள்ளுவருடைய சிந்தனைகள் பல இடங்களில் தன்னைவிட பத்து தலைமுறைக்கு முந்தியவரான சாலமோனின் சிந்தனைகளைக் நிறைய இடங்களில் உரசிச் சென்றிருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம்.
சாலமோனின் எபிரேய மொழிச் சிந்தனைகளை, நம் தமிழ் நாட்டு வள்ளுவர் உள்வாங்கினாரா ? இல்லை இவை இணைச் சிந்தனைகளா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் முடிவு செய்ய முடியும்.
சில முக்கியமான உதாரணங்களைக் கூறவேண்டுமென்றால்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
நீதி மொழி : 25 : 21,22 ல் சாலமோன் இதையே, எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. என்கிறார். இவ்வாறு செய்வதால் நீ அவன் தலையில் எரி தழலைக் குவிப்பாய்.
புறம் தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
இந்தக் குறளும், நீ.மொ 27: 19 – ல் சாலமோன் குறிப்பிடும்,
” நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார், தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார் ”
என்பதும் ஒத்த சிந்தனையைச் சொல்கின்றன.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
– தகுதிடையவரின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பினும், சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவது அரிதாகும். எனும் குறளும்
நீ.மொ. 10 :4 , வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும், விடாமுயற்சியோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீ.மொ. 13 :14 , சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள் உணவோ இல்லை
நீ.மொ 20.4 , சோம்பேறி பருவத்தில் உழுது பயிரிட மாட்டார், அவர் அறுவடைக்காலத்தில் விளைவை எதிர் பார்த்து ஏமாறுவார்.
என்றெல்லாம் சோம்பேறிகளின் நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக நீ.மொ. 19:24 ல், சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார், ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போக சோம்பலடைவார். என்று மிகைப்படுத்தி முத்தாய்ப்புக் கருத்துக்களை வைக்கிறார்.
வேலொடு நின்றான் இடுவென் றுதுபோலும்
கோலோடி நின்றான் இரவு.
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக் காரனின் மிரட்டலைப் போன்றது.
வள்ளுவரின் இதே கருத்து ,
(நீ. மொ 28:15) கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும், இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.
(நீ.மொ. 28:16 ) அறிவில்லாத ஆட்சியாளன் குடிமக்களை வதைத்துக் கொடுமைப் படுத்துவான்.
( நீ.மொ. 29:4 ) நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும். அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.
என்றெல்லாம் சாலமோன் வாயால் கூறப்பட்டிருக்கிறது.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
– பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
இதை சாலமோன் மிகச் சுருக்கமாக, (நீ.மொ. 10:1) – ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரம் வருவிக்கின்றனர் எனக்குறிப்பிட்டு, பின்
(நீ.மொ 23 : 25 ) – இல், நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக, உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக என்று அறிவுரையும் வழங்குகிறார்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.( 70 )
– ஆஹா, இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்
– நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள்
போன்ற குறள்களைக் கூட இங்கே குறிப்பிடலாம்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
( 1075 )
– தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தில் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
நீ.மொ. 10 :13 இதே கருத்தைச் சொல்கிறது.
அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ( 543 )
ஓர் அரசின் செங்கோன்மை தான் அறவோன் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்
(நீ. மொ. 20.8 ) மன்னன் நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான் என்கிறார் சாலமோன்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284 )
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்மத்தை உண்டாக்கும்.
( நீ.மொ. 21 :7 ) பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களை பாழடித்து விடும்.
அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு ( 288 )
நேர்மையுள்ளவன் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்கு வழியான வஞ்சக வழியில் செல்லும்.
(நீ.மொ. 12 : 20 ) சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
(நீ.மொ 12 : 17 ) உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவர், பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ( 100 )
-இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
(நீ.மொ : 15:1 ) கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.
பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக் கால்
ஊராணமை மற்றதன் எஃகு ( 773 )
– பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆன்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் போற்றப்படும்.
( நீ.மொ. 25 : 21 ) – எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு, தாகமாயிருந்தால் குடிக்கக் கொடு.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ( 44 )
– பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தேன் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
( நீ.மொ. 22:9 ) கருணை உள்ளவன் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பான், அவரே ஆசி பெற்றவர்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று ( 259 )
– நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரப் போக்காமலிருப்பது உயர்ந்தது.
( நீ.மொ. 21:3 ) – பலி செலுத்துவதை விட நேர்மையும் நியாயமுமாக இருப்பதே ஆண்டவருக்குப் உவப்பளிக்கும்.
இந்தக் குறள் அப்படியே அதன் பொருளை பிரதிபலிக்காவிட்டாலும், பலி செலுத்துவதை விடச் சிறந்தது நேர்மை நியாயம் என்று சாலமோன் குறிப்பிடுகிறார், வள்ளுவர் அதை மிருக வதைக்காக பயன் படுத்துகிறார்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ( 400 )
– கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.
( நீ.மொ .16:16 ) பொன்னை விட ஞானத்தைப் பெறுவதே மேல், வெள்ளியை விட உணர்வைப் பெறுதலே மேல்.
( நீ.மொ 3 : 13 ) – இலும், மேற்கூறிய பொருளே கூறப்படுகிறது.
(நீ.மொ : 8 : 11 ) பவளத்திலும் ஞானமே சிறந்தது, நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.
இந்தக் குறள் சாலமோனின் செய்தியை அப்படியே சுமக்கிறது, தரம் குறையாமல்.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் ( 649 )
– குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள், பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
( நீ. மொ : 17: 27 ) தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி, தம் உணர்ச்சிகளை அடக்குபவரே மெய்யறிவாளர்.
நாவடக்கம் பற்றி சாலமோன் மேலும் நிறைய விளக்கங்கள் தருகிறார்,
(நீ.மொ 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவனாய் கருதப் படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.
(நீ.மொ 17 : 14 ) வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்து விடுதல் போலாகும்: வாக்குவாதம் மேலும் வளரும் முன் அதை நிறுத்திவிடு.
( நீ. மொ 18 : 7 ) மதிகேடர் பேசத்துவங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடி வாங்கித் தரும்.
( நீ. மொ 18 : 20 ) ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும்.
(நீ.மொ 18 : 21 ) வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.
வகையறிந்து வல்லமை வாய்சேரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ( 721 )
– சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்
எனும் குறளும் இங்கே ஒப்பிடத் தக்கதே.