New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் முனைவர். சி. சேதுராமன்


Guru

Status: Offline
Posts: 24777
Date:
பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் முனைவர். சி. சேதுராமன்
Permalink  
 


பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள்         முனைவர். சி. சேதுராமன்

 

rajarajacholan.jpg

 

பண்டைத் தமிழகத்தில் நல்ல அரசுகள் நிலைபெற்றிருந்தன. அந்த அரசுகளின் தலைவர்கள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்கள் பகைவர்க்கு கூற்றுவனாகவும், தம்மை அண்டியவர்களுக்கு அருமைத் தோழர்களாகவும் விளங்கினர். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் புகலிடமாக இருந்தனர். இம்மன்னர்கள் கலைகளை வளர்ப்பதற்கு உறுதுணையாக விளங்கினர்.

பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் சோழன் கரிகாற்பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன், ஓய்மானாட்டு நல்லியக் கோடன், நன்னன் செய் நன்னன் ஆகிய ஐவராவர். இவர்கள் மட்டுமல்லாமல் கடையெழு வள்ளல்கள், மூவேந்தர்கள் பற்றிய செய்திகளும் இப்பத்துப் பாட்டில் இடம் பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை இரண்டும் கரிகாற்சோழனைப் பற்றி எடுத்துரைக்கின்றன. மதுரைக்காஞ்சியும், நெடுநல்வாடையும் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்களாகும். பெரும்பாணாற்றுப்படை இளந்திரையனைப் பற்றியதாகும். சிறுபாணாற்றுப்படை நன்னனைப் பற்றிய பாட்டாகும்.

 



கரிகாற்சோழன்

 

சோழன் கரிகால் வளவன், கரிகாற் பெருவளத்தான், கரிகாலன் என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகின்றான். இவன் சோழ நாட்டை காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான். தமிழிலக்கியங்களில் இவனைப் பற்றி பல்வேறு வரலாறுகள் காணப்படுகின்றன. இவனுடைய கால் நெருப்பில் பட்டுக் கரிந்து போய்விட்டது. ஆதலால் கரிகாலன் என்று பெயர் பெற்றான் என்பர். சோழமன்னன் சந்ததியற்றுப் போனான். உடனே மக்களும்,அமைச்சர்களும் சேர்ந்து அரசனைத் தேடிக் கொண்டுவரப் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பினர். அந்த யானை அரச குமாரனைப் போன்ற ஒரு சிறுவனைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு வந்தது. அவனையே கரிகாலன் என்று அழைத்தனர். அரியணையேற்றி அரசனாக்கினர். யானையின் வழியே வந்தவன் ஆதலால் கரிகாலன் (கரி-யானை) என்ற பெயரினைப் பெற்றான் என்றும் கூறுவர்.

ஆனால் கரிகாலன் யானையால் கொண்டு வரப்பட்டுப் பட்டம் சூட்டப்பட்டவன் என்ற கதை பொருநராற்றுப்படையால் மறுக்கப்படுகின்றது. இவன் உருவப்பஃறேர்; இளஞ்சேட்சென்னி என்னும் மன்னனுடைய மகனாவான். தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே அரசனாகும் உரிமையுடன் பிறந்தவன். முருகனைப் போன்ற ஆற்றலும், அழகும் உடையவன் என்பதனை,

 

‘‘உருவப் பஃறேர்; இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்
தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி’’ (130-அடி)

 

- எனப் பொருநராற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

கரிகாற்சோழனை இளமையிலேயே அவனது பகைவராகிய தாயத்தார் சிறையில் இட்டுக் காவலும் வைத்திருந்தனர். அப்போது அம்மனன் சிறையிலிருந்து தப்பிப் பகைவரை வென்று பகைவரால் கவரப்பட்ட அரசாட்சியை அடைந்தான் என்ற செய்தியை,

 



‘‘கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
பிறர் பிணியகத்து இருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடி புக்காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண் காப்பு ஏறி வான் கழித்து
உரு கெழு தாயம் ஊழின் எய்தி’’ (221-227)

 

- என்ற பட்டினப்பாலையின் வரிகள் தெளிவுறுத்துகின்றது.

கரிகாற்சோழன் உலகத்தை ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்டவன். குடி மக்களின்பால் குறையாத அன்பு கொண்டவன். அறங்கூறும் நூல்களை அறிந்து அம்முறையைப் பின்பற்றி ஆட்சி செய்தவன். பகைவர்களை வெல்லும் வேற்படையை உடைய சிறந்த வீரன் என்பதை,

 

‘‘ஒரு குடையான் ஒன்று கூறப்
பேரிதாண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணர்;ந்த திறன் அறிசெங்கோல்
அன்னோன் வாழி, வெல்வேற் குரிசில்’’ (228-231)

 

-என முடத்தாமக் கண்ணியார்; பொருநாராற்றுப்படையில் குறிப்பிடுகின்றார்.

 

கரிகாலன் நீதி வழங்கிய முறை

 

கரிகாலன் நடுநிலைமை தவறாமல் நீதி வழங்குபவன். ஒருமுறை முதியோர் இருவருக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமா? என்று ஐயுற்றனர். அவர்;கள் ஐயத்தைக் குறிப்பாலறிந்த கரிகாலன் அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறிஞரிடம் மாற்றுவதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரை முடியும் தாடியுமுடையவனாக வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டு இருவரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் நீதி வழங்கினான் என்ற வரலாற்றுக் குறிப்பொன்றை,

 



‘‘முதியோர் அவை புகுபொழுதில்தம்
பகைமுரண்செலவும்’’ (188)

 

- எனப் பொருநராற்றுப்படை தெளிவுறுத்துகின்றது.

 

கரிகாற் சோழனின் வீரம்

 

இக்கரிகாற் சோழன் வெண்ணி என்ற இடத்திலே சேரனையும், பாண்டியனையும் போரிலே தோற்கடித்து வெற்றிமாலை சூடினான் எனக் கரிகாற்சோழனின் வீரத்தை,

 

‘‘ஆளி நன் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
அரவாய்வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇருஞ் சென்னி மேம்பட மிலைந்த
பெரு வேந்தரும் ஒரு களத்தவிய
வெண்ணித்தாக்கிய வெரவரு நோன்தாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்’’ (138-148)

 

- என பொருநராற்றுப்படை மொழிகிறது.

 

வெற்றிச் செயல்கள்

 

தான் அரசுரிமை பெற்றதால் மகிழ்ச்சி பெறாதவனாய்த் தன் பகைவரின் அரண்களை இடிக்கும் வன்மை கொண்ட யானைகளோடும், குதிரைகளோடும் சென்று பகைவரை வென்றான் அவர்களுடைய மருத நிலத்தில் இருந்த குடிகளைத் துரத்தினான் என்ற கரிகாலனின் போர்ச் செய்தியை,

 

‘‘உகிருடை அடிய ஓங்கு எழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர்; வீழ
பெருநல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப
தூறுஇவர்; துறுகல் போல போர்; வேட்டு
வேறுபல் பூளையொடு உழிஞை சூடி
பேய்க்கண் அன்ன பிளிறு கடி முரசம்
மாக்கண் அகல்அறை அதிர்;வன முழங்க
முனைகெடச் சென்று முன்சமம் முருக்கி’’ (228-239)

 

- எனப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. கரிகாற்சோழனின் படையெடுப்பால் பகைவர்களின் மருத நிலங்களும் (240-245) மன்றங்களும் (252-260) அழிந்ததையும், பகைவர் நாடு அழிந்ததையும் (261-268) கரிகாலனின் எண்ணியதை முடிக்கும் திறனையும், (266-273) குறிப்பிடுகின்றார்.



மேலும் கரிகாலனிடம் தோல்வி அடைந்த பல வெளி நாட்டவர் தாழ்ந்து ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டின் மன்னர்கள் தாங்கள் செய்யும் தொழிலை வந்து கேட்டனர். வடக்குத் திசையில் உள்ள மன்னர் வாடினர். குட நாட்டவர் மன எழுச்சி குன்றினர். பாண்டியன் வலிமையற்றுப் போனான். முல்லை நில மன்னர்கள் கெட்டு அழிந்தனர். இருங்கோவேளின் சுற்றத்தார் கெட்டனர் (274-282) என சோழ மன்னனின் வெற்றிச் செய்திகளைப் பட்டினப் பாலை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

 

கொடைச்சிறப்பு

 

கரிகாலனின் கொடைச்சிறப்பைப் பொருநராற்றுப்படை,

 

‘‘பொருநனே நானும் உன்னைப் போல் வறுமையால் வாடினேன்.
கரிகாற்சோழனிடம் போனேன். 
அவனைப் புகழ்ந்து பாடினேன்; 
அவன் என்னை அன்புடன் வரவேற்றான்; 
புத்தாடையளித்தான்; 
வழிநடை வருத்தந்தீர 
இனிய பானங்களைத் தந்து ஓய்வு பெறுவதற்கு இடமும் கொடுத்தான். 
பின்னர்; 
நல்ல கொழுப்பும் இனிய சுவையுமுடைய விருந்தளித்தான். 
இவ்வாறு என்னையும், 
என்னுடன் சேர்ந்தவர்களையும் 
பல நாட்கள் கவலைக்கு இடமின்றி உபசரித்தான். 
பின்னர் அவனிடம் விடைபெற்று 
வீடு திரும்பும் பொழுது களிறுகளையும், 
பிடிகளையும் கன்றுகளுடன் பரிசளித்தான். 
வறுமை நோய் எங்களை 
எக்காலத்திலும் எட்டிப் பிடிக்காதபடி 
ஏராளமான ஊர் திசைகளையும் 
ஆடை, அணிகலன்களையும் அளித்தான்’’

 

- என எடுத்துரைக்கின்றது.

 

ஆட்சிச் சிறப்பு

 

திருமாவளவன் தன் நாட்டில் உள்ள காடுகளை வெட்டி அழித்து நாடாக்கினான். குளங்களைத் தோண்டச் செய்தான். பல வகையான வளங்களும் சோழநாட்டில் பெருகுமாறு செய்தான். பெரிய நிலைகளையுடைய மாடங்களையுடைய உறையூரை விரிவுபடுத்தினான். அங்கு திருக்கோயில்களையும், குடிகளையும் நிலைபெறச் செய்தான் என்பதை பட்டினப்பாலை (283-292) தெளிவுற எடுத்துரைக்கின்றது. பழந்தமிழ் மன்னர்;களின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும் மட்டும் எடுத்துக் கூறாது, அவர்கள் மக்களுக்காகச் செய்த பணிகளையும் எடுத்துரைக்கும் ஆசிரியரின் பண்பு சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.

 

பாண்டியன் நெடுஞ்செழியன்

 

பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பினை மதுரைக் காஞ்சி எடுத்துரைக்கின்றது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், நெடுஞ்செழியன், பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர்களாலும் இம்மன்னன் குறிக்கப்படுவது நோக்கத் தக்கது. இப்பாண்டியன், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற சேர மன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே போர் செய்தான். அவனை வென்று சிறைப்படுத்தியுமுள்ளான். இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றான். சிலப்பதிகாரப் பாண்டிய நெடுஞ்செழியனும் இவனும் ஒருவனே என சிலர்; கருதுவாராயினர். ஆனால், சிலப்பதிகாரத்து மதுரைக்காஞ்சி பற்றியும் மதுரைக்காஞ்சியில் சிலப்பதிகாரம் பற்றியும் பேசப்படாமையின் அக்கருத்து ஆராயத் தக்கது. 01 முதல் 205- வரையுள்ள வரிகள் பாண்டியனின் குலப் பெருமையும் வெற்றிச் சிறப்பினையும் கூறுகின்றன. அதன் பின்னர்; பாண்டியனுக்கு நிலையாமையை எடுத்துரைத்து, மதுரையின் சிறப்பினையும் எடுத்துக் கூறி முடிவதாக மதுரைக்காஞ்சி அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன். ஈடுயிணையற்ற வீரன். போர் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தவன். நால்வகைப் படைகளையும் நல்ல முறையிலே பெருக்கி வைத்திருந்தான். செல்வச் செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்து விடக்கூடியவை என்பதை மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பர் மற்றும் அவைக்களத் தலைமைப் புலவருமானவர் மாங்குடி மருதனார். உலகத்து நிலையாமையைத் தம் மன்னனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப் பார்த்து முதலில் அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டினார். அதன் பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்து வரும் அரசியல் சிறப்பையும் பாராட்டினார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச் சொன்னார். பாண்டியனின் சிறப்புக் கூறி பின், உன்னைப் போலவே இந்த உலகில் எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக - செல்வர்களாக - கொடை மறவர்களாக - சிறந்து வாழ்ந்தனர். அவர்கள் தம் எண்ணிக்கை கடலின் குறு மணலினும் பலராவர். புகழ்பட வாழ்ந்த அவர்கள் இறுதியில் மாண்டு போயினர் என்று நிலையாமையை எடுத்துக் காட்டினார்.

 



பாண்டியனின் ஆட்சிச் சிறப்பு

 

பாண்டியனின் ஆட்சிப் பெருமை கூறும் இந்நூலாசிரியர்; பாண்டியநாடு சிறந்திருந்ததை,

 

‘‘மழைதொழில் உதவ, மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன்எதிர்ப்பு நந்த,
நோயிகந்து நோக்கு விளங்க’’(மதுரைக்கா : 10-13)

 

என்ற அடிகளில் சுட்டியுள்ளார். தமிழ் மன்னர்கள் தங்கள் பகைவர்களுடன்தான் போர் செய்வார்கள். தங்கள் பகைவர் நாட்டுக் குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் இழைக்க மாட்டார்கள்.

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24777
Date:
RE: பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் முனைவர். சி. சேதுராமன்
Permalink  
 


நெடுஞ்செழியனின் போர்ச் சிறப்பு

 

பாண்டிய நெடுஞ்செழியனின் போர்ச்சிறப்பை விளக்கப் புகுந்த மாங்குடி மருதனார், ‘‘பகைவர்களின் உள்நாடுகளிலே புகுந்து அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளனவைகளை எல்லாம் பிடித்துக் கொண்டு அவ்விடத்தே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். அந்நாடுகள் மேன்மையடைய பலசீர்திருத்தங்கள் செய்வாய்’’ என பின்வரும் பாடல் வரியால் எடுத்துக் கூறியுள்ளார்.

 

‘‘அகநாடு புக்குஅவர் அருப்பம் வௌவி,
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து
மேம்பட மரீஇய வெல்போர்;க் குருசில்’’ (மதுரைக்கா : 149-151)/b>

 

இப்பகுதி மேலேகூறிய கருத்தினை விளக்கி நிற்கும். தமிழ் மன்னர்கள் அழிவை மட்டும் செய்பவர்கள் அல்லர். ஆக்க வேலைகளைச் செய்வதிலும் ஊக்கம் தளர்ந்தவர்களில்லை என்பது வெளிப்படை.

நெடுநல்வாடையின் தலைவனும் பாண்டியன் நெடுஞ்செழியனே ஆவான். நெடுநல்வாடையில் இப்பாண்டியனுடைய பெயர் சுட்டப்படவில்லை. மதுரை நகரைப் பற்றியும் இந்நெடுநல்வாடையில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அரசனுடைய படைத்தலைவனைக் குறிப்பிடும் போது

 

‘‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன்’’(176-177)

 

என்று நக்கீரர் நெடுநல்வாடையில் குறிப்பிடுகிறார். படைத்தலைவன் வேப்ப மலர் மாலையை அணிந்திருந்தான் என்பதால் இப்பாடலில் குறிக்கப்படும் அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனே ஆவான்.

மேலும் இப்பாடல் இறுதியில்,

 

‘‘வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே’’

 

என்று முடிகின்றது. மன்னர் பலரொடு பகைத்துப் போர் செய்த போர்க்களத் தொழில் என்பது இத்தொடரின் பொருளாகும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் பல மன்னர்களைப் போரிலே வெற்றி கொண்டவன். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் ஏழு மன்னர்களையும் போரிலே புறமுதுகிட்டோடும்படி செய்தவன். தலையாலங்கானம் என்ற இடத்திலே இந்த எழுவருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். இவனால் வெற்றி கொள்ளப்பட்ட எழுவருள் சேர மன்னன் சிறை பிடிக்கப்பட்டான். இச்சேர மன்னன் தான், கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவன். எனவே இவ்விரு வரிகளைக் கொண்டு நெடுநல்வாடையின் தலைவன் பாண்டியன் நெடுங்செழியன் என்று தெரிந்து கொள்ளலாம்.

 



ஓய்மானாட்டு நல்லியக் கோடன்

 

ஓய்மானாட்டு நல்லியக்கோடன் ஓவியர் குடியில் பிறந்தவன். கடையெழு வள்ளல்களுக்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவன். கடையெழு வள்ளல்களைப் போன்று மிகச் சிறந்த வள்ளலாகத் திகழ்ந்தவன். இவனை சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து பாடியுள்ளார். இடைகழிநாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உள்ளது. உப்பங்கழிகளுக்கு இடையில் உள்ள இந்நாடு தொண்டைநாட்டின் ஒரு பகுதியாகும். இதனாலேயே இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று இப்புலவர் பெயர் நீளமாக வழங்கப்படுகின்றது.

ஓய்மான் நாடு என்பது திண்டிவனத்தை உள்ளிட்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், என்ற நகரங்கள் அடங்கியிருந்தன. மாவிலங்கை இவனது தலைநகரம். நல்லியக் கோடன், ஓய்மான் நல்லியக்கோடன் என்ற வேறு பெயர்களிலும் இவனை அழைப்பர்.

 

நல்லியக்கோடனின் நாட்டின் சிறப்பு

 

நல்லியக்கோடனுடைய நாடு சேரநாட்டைக் காட்டிலும் செல்வம் நிறைந்தது. பாண்டிய நாட்டைக் காட்டிலும் பலவகை வளங்கள் கொழிப்பது. சோழ நாட்டைக் காட்டிலும் செழிப்புடையது. ஆவன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் செல்வத்திலே சிறந்து நிற்பவை. அந்நகரங்களிலே வாழ்வோரும் விருந்தினரை விரும்பிப் போற்றுவார்கள்; நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களைப் போன்ற கொடையாளி. அவனிடம் போய் அவனைப் புகழ்ந்து பாடுவாயானால் உன் வறுமை தீரச் செல்வங்களை வாரிவாரி வழங்குவான் என்று 110 அடிகள் வரை சிறுபாணாற்றுப்படையானது நல்லியக்கோடனின் வள்ளல் தன்மையுடன் அவனது நாட்டின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.

 

நல்லியக்கோடனின் பெருமை

 

நல்லியக்கோடன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும் புலவர்க்கும், அருமறை பயின்ற அந்தணர்களுக்கும் எப்பொழுதும் காட்சி தருவன். அவர்கள் வேண்டுவனவற்றை விருப்பமுடன் கொடுப்பான். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும். இதனை,

 

‘‘பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன
அடையா வாயிலவன்’’ (203-206)

 

- என்ற அடிகளால் அறியலாம்.

இவன் அறிஞர்களைக் கண்டவுடன் அன்போடு கைகுவித்து வணங்குவான் என்பதை,

 

‘‘முதுவோர்க்கு முகிழ்த்த கையினை’’ (231)

 

என்ற வரிகளில் புலவர்; எடுத்துரைக்கின்றார். நல்லியக்கோடன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் காத்து வந்தான். அவர்கள் வறுமையால் வாடாமல் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால்தான் உணவுப் பொருள் உற்பத்தி குறையாது என்ற உண்மையை உணர்ந்திருந்தான் என்பதை,

 

‘‘ஏரோர்க்கு நிழன்ற கோலினை’’ (233)

 

என நத்தத்தனார் குறிப்பிடுகின்றார். மேலும் நல்லியக்கோடனை நாடிச் சென்றால் வறுமை நீங்கிவளமை பெறலாம் என்பதை,

 

‘‘குறிஞ்சிக் கோமான் கொய் தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே’’ (267- 269)

 

எனப் புலவர் குறிப்பிட்டு நல்லியக்கோடனின் பெருமையினைக் குறிப்பிடுகின்றார்.

 

தொண்டைமான் இளந்திரையன்

 

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் தொண்டையர் ஆனதால் இவன் ஆண்ட நாட்டிற்குத் தொண்டை நாடு எனப் பெயர் வழங்கப்பட்டது. இம்மரபைச் சார்ந்த அரசர்களைப் பல்லவர் என்றும் கூறுவர்.

திருமால் நிலம் அளந்தவன்; இலக்குமியை மார்பில் உடையவன். கடல் போன்ற நிறம் கொண்டவன். அவனுக்குப் பின்னவனாக அக்கடலின் திரைகள் தர வந்த ஒருவன் மரபில் வந்தவனே கச்சி நகர்க் காவலன். அவன் தொண்டையர் வழியில் வந்தவன். திரையன் என்னும் பெயரினை உடைய வேற்படையை உடையவன் என கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையனின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.

 



இளந்திரையனைப் பற்றிய வரலாறு

 

பெரும்பாணாற்றுப்படையில், ‘‘திரைதரு மரபின் உரவோன் உம்பல்’’ என்ற வரிகள் இளந்திரையனின் வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது. நாகப்பட்டினத்துச் சோழன் ஒருவன் பிலத்துவாரத்தால் நாகலோகத்திற்குப் போய் நாக கன்னியைப் புணர்ந்தான். அப்போது அந்நாககன்னிகை சோழனைப் பார்த்து நான் உன் மூலமாகப் பெறும் புதல்வனை என்ன செய்வேன்? எனக் கேட்டாள் அதற்கு அச்சோழன், தொண்டைக் கொடியை அடையாளமாகக் கட்டிக் கடலில் விடு. அவன் வந்து கரையேறின் அவனுக்கு நான் அரச உரிமையை அளிப்பேன் என்றான். அவளும் அங்ஙனமே செய்தாள். திரையானது அவனைக் கரையேறச் செய்தது. அதனால் அவன், ‘திரையன்’ என்று பெயர் பெற்றான் என இவ்வரிகளுக்கு நச்சினார்க்கினியர் சிறு வரலாற்றுக் குறிப்பை வழங்கியிருப்பது நோக்கத்தக்கது.இக்கதையால் திரையர், தொண்டையர் என்பவர்க்குத் தந்தை சோழன். அவனுக்கும் நாககன்னிக்கும் பிறந்து கடல் வழியாய் வந்து அச்சோழனிடம் சோழநாட்டின் ஒரு பகுதியைக் கொண்டு தன் நாடாக ஆண்டனர் என அறிய முடிகிறது.

நெடுமுடிக் கிள்ளி என்பவன் ஒரு சோழ மன்னன். ஒரு சோலையில் அவன் தங்கி இருந்த போது அழகிய பெண்ணொருத்தி அச்சோலையில் இருந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய சோழன் அவளுடன் புணர்ந்தான். பின் அவள் ஒருநாள் மறைந்து போனாள். மன்னன் மயங்கினான். அவ்வாறு மனமயக்கமடைந்திருந்த சோழ மன்னனைப் பார்த்த சாரணன் ஒருவன் மன்னனிடம் வந்து, மறைந்து விட்ட மங்கை பீலிவளை அவள் தன் மகளை உன்னிடம் உரிய காலத்தில் சேர்ப்பாள் என்று உரைத்தான். அவ்வாறே பீலிவளையால் ஒப்படைக்கப்பட்ட குழந்தையே தொண்டை மன்னன் என்ற மணிமேகலை ஒரு வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது. இதில் குறிப்பிடப்படும் தொண்டைமான் மன்னன் தொண்டைமான் இளந்திரையனின் முன்னோன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பல்வேல் திரையன்’ (37), ‘தொண்டையர்; மருக’ (454) என்ற இருபெயர்களும் இவனுக்கு உரியனவாக பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

திரையர் எனப்பட்டவர்க்கு வேங்கடமலை உரியதாக விளங்கியது. அவர்கள் வேற்படை உடையவர்கள் போர்களில் பண்பட்ட யானைகளை உடையவர்கள். அவர்கள் நாட்டில் பவத்திரி என்பது சிறந்த நகரமாக விளங்கியது. அவர்கள் அழியாத புகழினையும், பொன் அணிகளையும் அணிந்தவர்கள் என்பதை கண்ணகனார், நக்கீரர், தாயங்கண்ணனார், கல்லாடர், முதலிய புலவர்களின் பாடல்களால் அறியலாம்.

 



தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச்சிறப்பு

 

தமிழகத்தில் ஆய்குடி, எவ்விகுடி, வேளிர்குடி, என்பது போன்று தொண்டையர் குடி என்பது ஒன்றிருந்திருக்கலாம். தமிழகத்தில் நடந்த மூவேந்தர்களின் ஆட்சியை விட சிறப்பானதாக இம்மன்னனின் ஆட்சி இருந்தது. இவனது ஆட்சி வலம்புரிச் சங்கைப் போன்ற உயர்வு கொண்டது. தூய்மையானது. அவனது செங்கோல் ஆட்சி நிலவியுள்ள நாட்டில் வழிப்போக்கரை அலறுமாறுதாக்கி அவர் தம் பொருள்களைக் கொள்ளை கொண்டு வாழ்வு நடத்துவோர்; இல்லை. அந்த அளவிற்கு தொண்டைமான் இளந்திரையனது நாடானது கடுமையான காவலை உடையதாக விளங்கியது. அந்நாட்டில் இடியும் இடிக்காது. பாம்புகள் தீங்கிழைக்காது. காடுவாழ் புலியும் தீமை செய்யாது என தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச் சிறப்பினை,

 

‘‘கைப்பொருள் வௌவும் களவேர்; வாழ்க்கைக்
கொடியோர்; இன்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா’’ (40-43)

 

- எனப் பெரும்பாணாற்றுப்படையில் புலவர் காட்சிப்படுத்துகிறார்.

 

திரையனின் வீரமும் நீதி வழங்கும் முறையும்

 

வெண்மையான கொம்புகளையும் கரிய நிறமும் உடைய யானையின் பிணங்களைக் குருதியாறு இழுத்துச் செல்லுமாறு கொடிய போர் செய்து பாண்டவரைப் போன்று மிகப்பெரிய படையுடன் வேந்தர் ஐவர் இத்திரையனை எதிர்த்த போது அவர்களை இளந்திரையன் வெற்றி கண்டு புறமுதுகிட்டோடச் செய்தான் என இத்திரையனின் வீரத்தைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

கடல் நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் செய்யும். அக்கடலுக்கு நடுவே பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் ஒளிக்கதிர்களை விரிப்பதைப் போன்று அருள் உணர்வுடனும், தனது அமைச்சர் குழாத்துடனும் வீற்றிருந்து நடுநிலை தவறாது, மயக்கம் தீர்ந்த அறிவுடன் முறை வேண்டுவோர்க்கு முறை வழங்குபவனாவான். தன்னிடம் குறை வேண்டி வந்தவர்களது குறை தீர்த்து நீதி வழங்கினான் என்று உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகின்றார்.

 



கொடைத்திறம்

 

இவன் தன்னை நாடி வந்த பாணர் புலவர் ஆகியோரை அருள் உணர்ச்சியுடன் வரவேற்று அவர்கள் அணிந்துள்ள கந்தை ஆடைகளை அகற்றி பாலாவி போன்ற நல்ல நூலால் ஆன ஆடைகளை வழங்குவான். உயர்ந்த உணவு வகைகளையும் இறைச்சியையும், செந்நெல் சோற்றையும் கண்ட சர்க்கரை கலந்த உணவையும் வெள்ளிக் கலங்களில் படைத்து விருந்தினரை நின்று கொண்டே உபசரிப்பான். மேலும் பாணன் பொற்பூவை அணிந்து கொள்ள அளிப்பான். குதிரைகள் பூட்டிய தேரைத் தருவான் பகைவர் போரில் விட்டுவிட்டுப் போன குதிரைகள், அணிகள் ஆகியவற்றையும் பரிசாகத் தருவான் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை (465-493) நன்கு எடுத்துரைக்கின்றது.

 

செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்

 

நன்னன் சேய் நன்னனை மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது. இம்மன்னன் பல்குன்றக் கோட்டம் என்ற நாட்டை ஆண்டான். இப்பல்குன்றக் கோட்டத்தை மலைபடுகடாம், ‘‘குன்று சூழ் இருக்கை நாடு’’ எனக் குறிப்பிடுகிறது. தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் பல்குன்றக் கோட்டம் என்பது ஒன்று. குன்றுகள் பல சூழ்ந்து இருப்பதால் அப்பெயர் பெற்றது. தமிழக எல்லையான வேங்கடமலையும் இப்பகுதியுள் அடங்கும்.

நன்னன் சேய் நன்னனின் தலைநகரம் ‘செங்கண்மா’ என்பதாகும். இவன் வேளிர் குடியில் தோன்றியவன். ஆதலால் வேண்மான் எனப்படுகின்றான். இந்த நூலில் இயவன் வேள் என்றே குறிக்கப்படுகின்றான். செங்கண் மா என்ற நகரம் தற்போது திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ளது. இக்காலத்து செங்கண்மா எனவும் செங்கம் எனவும் வழங்கப் பெறுகின்றது. இவனுடைய தந்தை பெயரும் நன்னன் ஆதலால் நன்னன் சேய் நன்னன் என இம்மன்னன் அழைக்கப்படுகின்றான். மேலும் இவனுக்கு நன்னன் வேண்மான், வேள் நன்னன், சேய்நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன், சேய்நன்னன் என்ற பல பெயர்களாலும் இவன் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.

 



நன்னன் சேய் நன்னனின் மலைநாட்டின் சிறப்பு

 

இம்மன்னனது மலைநாடான சவ்வாது மலைத்தொடரைச் சேர்ந்த அடிவாரப் பகுதியில் புன்செய் நிலங்கள் மிகுதியாக உள்ளன. இதனை நவிர மலை என்றும் திரசூல மலை, பர்வத மலை என்றும் குறிப்பிடுவர். அங்கு முசுண்டைக் கொடியில் கார்த்திகை விண்மீன்களைப் போன்று வெண்மையாக மலர்கள் மலரும். அதிகமாக எண்ணெய் மிகும் வண்ணம் எள்ளுச் செடியானது காய்களுடன் வளரும். யானைக் கன்றுகள் தமக்குள் துதிக்கைகளைப் பிணைத்து விளையாடுவதைப் போல் தினைக் கதிர்கள் பிணைந்து முற்றும். அவரைகள் முற்றிய தயிரினது பிதிர்ச்சி போல் பூக்களை உதிர்த்து அரிவாளைப் போன்று வளைந்த காய்களைக் கொள்ளும். வரகுகள் தர்க்கம் செய்பவன் கையில் இணைந்த விரல்களைப் போன்று இரட்டித்த கதிர்கள் முற்றும். மூங்கில் நெல் அவல் இடிக்கும் பருவத்தை அடையும். நிலத்தை உழாமல் களைக் கொட்டால் பண்படுத்தப்பட்ட நிலத்தில் வெண்சிறு கடுகு நெருங்கி விளையும். இஞ்சிகள் நன்கு முதிர்ந்து வளரும். உறைப்பை நன்கு கொள்ளும் கவலைக் கொடி பெண்யானையின் மடித்த முழந்தாளைப் போன்றுள்ள குழிகளில் செம்மையாய் வளரும் என நன்னன் சேய் நன்னனின் மலை நாட்டின் வளப்பம் மலைபடுகடாமில் சிறப்பிக்கப்பட்டுள்ளது (170-182).

 

நன்னன் சேய் நன்னனின் கொடைச் சிறப்பு

 

நன்னன் எப்போதும் கொடுத்துச் சிவந்த கையினை உடையவன். இவனது கொடைச்சிறப்பினை,

 

‘‘உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கையராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தம்சால் அருவிக்
கடுவரல் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடும் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு’’ (550-558)

 

- என்ற வரிகளில் புலவர் பெருங்கௌசிகனார் எடுத்துரைக்கின்றார்.

மலைபடுகடாமில் நன்னன், ‘‘மான விறல் வேள், செருசெய் முன்பின் குரிசில் திருந்து வேல் அண்ணல், செருமிக்குப் புகலும் திருவார் மார்பன், தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னன், வெம்போர்ச் சேய்ப் பெருவிறல், குன்ற நல்லிசைச் சென்றோர் உம்பல்’’ என்று பலவாறாகப் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

நன்னனின் வீரம்

 

நன்னன் மிகச் சிறந்த வீரன் ஆவான். புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தான். தன்னை இகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குவான். புகழ்வோருக்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுவான். அவனுடைய அவைக்களத்திலே சிறந்த கல்வியும் அறிவுமுடைய பலர் குழுமியிருந்தனர். இவ்வாறு நன்னனுடைய நற்பண்புகளை மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. இவனது வீரச்சிறப்பையும், ஒழுக்கச் சிறப்பையும்,

 

‘‘தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்
பலர் புறங்கண்டவர் அருங்கலந்தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரியும்,
இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றலும்புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமராநோக்கமொழு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாதுசுரக்கும் அவன்நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லாராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் (70-80)

 

என கௌசிகனார், நன்னனுடைய சிறப்பை விளக்குகின்றார். இவ்வரிகள் பழங்காலத்து நிலத்தலைவர்கள் பொதுமக்களிடம் எத்தகைய மதிப்புப் பெற்று வாழ்ந்தனர் என்பதை தெளிவுறுத்துகின்றன.

பத்துப்பாட்டில் இடம்பெறும் நூல்கள் அக்காலத்திய மக்களின் வாழ்க்கையை மட்டும் கூறாது அக்கால மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், வீரம், அவர்களின் பண்பு நலன்கள், விருந்தோம்பும் திறம் ஆகியவற்றையும் எடுத்துரைத்து பழந்தமிழக வரலாற்றினைக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard