இலக்கிய வடிவில் எழுதப்பட்ட மிகத் தொன்மை மிக்க தமிழ் இலக்கண நூலே தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர் என்பது தொல்காப்பியப் பாயிரம் மூலம் அறியப்படுகின்றது. அகத்திய முனிவரின் மணாக்கரில் ஒருவரான தொல்காப்பியர் கி.மு 500க்கும் கி.மு 300க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்றார். இதில் இடைச் செருகல்கள் உள்ளதாக சில ஆய்வாளர்களால் குறிப்பிடப்படினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூலாகவே இது கொள்ளப்படுகின்றது. இதனை முதன் நூலாகக் கொண்டே காலந்தோறும் பல வழி நூல்கள் தோற்றம் பெற்றன. 1602 பாக்களாலான இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன.
தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறும் நிலையில் பொருளதிகாரம் தமிழரது வாழ்வியலைப் பற்றி விரிவுபடக் கூறுகின்றது. அத்தோடு வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதனையும் அது விளக்கி நிற்கின்றது. இதிலுள்ள ஒன்பது இயல்களில் முதல் இரண்டுமான அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழினையும் புறத்திணைகள் ஏழினையும் விளக்கி நிற்கின்றன. மூன்றாவதாகவுள்ள களவியலும் நான்காவதாகவுள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்புக்கள் பற்றிக் கூறுவன. ஐந்தாவதாகவுள்ள பொருளியல் அகப்பாடல்களுக்கு பொருள்காணும் முறைமையை விளக்கமுறக் கூறுகின்றது. ஆறாவதாகவுள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலுமுள்ள மெய்ப்பாடுகளை விவரிக்கின்றது. மெய்ப்பாடு என்பது உள்ளத்துணர்வுகள் உடலில் வெளிப்படுவதைக் குறிக்கும். ஏழாவதாகவுள்ள உவம இயல் வாய்மொழி மூலம் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்க எட்டாவதான செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பது பற்றிக் கூறும். ஒன்பதாகவுள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடு, அவற்றின் இளமை, ஆண் பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்கள் போன்றவை விளக்கப்படுவதைக் காணலாம். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தொல்காப்பியப் பொருளதிகாரமானது தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்கி நிற்பன எனலாம். தமிழறிஞர் டாக்டர் சி.இலக்குவனார் கூறுவதைப் போல் தொல்காப்பியம் இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல்கள் போலல்லாது உயிரியல், வாழ்வியல், உளவியல் முதலிய பண்பாட்டுக் கலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் அண்மைக் காலமாக வளர்ச்சியடைந்து வரும் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிக்கு உறுதுணை புரிந்து வருவதையும் மிக்க பெருமையாகக் கொண்டுள்ளது எனலாம்.
தொல்காப்பியமும் நடனமும்
ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா கற்பும் ஏரும் எழிலும் என்றா சாயலும் நாணும் மடனும் என்றா நோயும் வேட்கையும் நுகர்வும் என்று, ஆங்கு ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் நாட்டியியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப ….
இப்பாடல் மூலம் தொல்காப்பியக் காலத்திற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலே பண்டைத் தமிழகத்தில் நாட்டியம் நன்கு பயிலப்பட்டு வந்துள்ளமையும் நாட்டியத்திற்கென ஒரு மரபு தோற்றம் பெற்றிருந்தமையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் இலக்கியங்களில் பயின்றுவரும் பாடு பொருட்களை அகப்பொருள் புறப்பொருள் என பகுத்துக் கூறுவதையும் இதில் அவதானிக்க முடியும்.
அகப்பொருள் என்பது காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்பது. இது கற்பு, களவு என இருவகைப்படுவது. கற்பு முறைப்படுத்தப்பட்ட இல்லற வாழ்வு சார்ந்தும் களவு காதல் வாழ்வு சார்ந்தும் அமைவது. புறப்பொருள் என்பது வீரம், கொடை, ஒழுக்கம் என்பவற்றை விளக்குவதாக அமையும். இவ்விரு பாடுபொருட்களையும் விளக்கிடும் இலக்கியங்கள் ஒன்றில் நாடக வழக்கிலோ அன்றேல் உலகியல் வழக்கிலோதான் எழுதப்படும் என்பதுவும் தொல்காப்பியத்தின் வெளிப்பாடாகும்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனார் புலவர்
எனும் நூற்பாவின் மூலம் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தொல்காப்பியம் குறிப்பிடும் கூத்து
தொல்காப்பியத்தில் நாட்டியம், நாடகம் இரண்டுமே கூத்து என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கூத்தர் எனக் குறிப்பிடப்படுபவர் நடிப்பு நிறைந்த நாடகவியலையும் ஆடல், அபிநயம் மற்றும் அடவு நிறைந்த நாட்டியவியலையும் ஒருங்கே வளர்க்கும் கலைப்பிரிவினர் ஆவர். கூத்தரும் விறலியும் பொருள் பெறவேண்டி மன்னர் முன் ஆடுதலை பின்வரும் நூற்பா விளக்கி நிற்கின்றது.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச்சொன்ன பக்கமும்
என அதன் வெளிப்பாடு அமையும்.
மேலும் உண்டாட்டு மற்றும் வெறியாட்டு குறித்த விளக்கங்களையும் தொல்காப்பியம் நமக்கு சிறப்பாகச் சொல்லியுள்ளதையும் இங்கு குறிப்பிடலாம். உண்டாட்டு என்பது தனது எதிரியின் நாட்டின் மீது படை நடாத்தி அந்நாட்டிலுள்ள பசுக்களை கவர்ந்து வந்து அவற்றைத் தனது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மகிழ்ச்சியில் கள்ளினைப் பருகி ஆடுவதைக் குறிப்பதாகும். வெறியாட்டு என்பது தமிழர்தம் அகவாழ்வோடும் புறவாழ்வோடும் தொடர்புபட்டதாக அமைவது. வெட்சித் திணையில் சொல்லப்படுகின்ற இருபத்தியொரு துறைகளில் இது முதலில் சொல்லப்படுவதைப் பார்க்கலாம்.
என்ற பாடலடிகள் இதனை நன்கு விளக்கி நிற்கின்றது. தனது அரசனுக்கு வெற்றிகிட்டவேண்டி தெய்வத்தை வணங்கிப் போற்றிப் பாடியாடுவது இங்கே வெளிப்படுகின்றது. இவ்வாறே காதல் நோயால் துன்புற்று உடல் மெலிந்து வாடும் தலைவியின் நிலையறியவும் வெறிக்கூத்து ஆடப்பட்டிருப்பதையும் தொல்காப்பியம் கூறும்.
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்...
என்ற பாடலடிகள் இதனை விளக்கி நிற்பதைக் காணலாம்.
வாகைத் திணையில் தேர்ப் படையையுடைய மாற்றரசனை வெற்றி பெற்ற தமது மன்னனின் தேரின் முன்னாலும் பின்னாலும் போர் வீரர்கள் கூட்டமாக ஆடிச் செல்வதை
தேரோர்... வென்றகோமான் முன்தேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்..
என வரும் பாடலடிகள் வெளிப்படுத்துகின்றது. இது ஒருவகைக் குரவைக் கூத்தாகும். வெற்றி பெற்ற மன்னன் வெற்றிக் களிப்பினால் தேர்த் தட்டிலே நின்ற வண்ணம் தனது வீரர்களோடு கைகோர்த்து ஆடுவது முன்தேர்க் குரவையென்றும் அம்மன்னனின் தேரின் பின்னால் மறவரும் விறலியரும் மன்னனின் புகழ்பாடி ஆடுவது பின்தேர்க் குரவையென்றும் அழைக்கப்பட்டதைத் தொல்காப்பியம் குறிப்பிடும். ஆய்வாளர்கள் இதனை ஆரடிவிருத்தியில் உள்ளடக்குவர். இது வீரம் மிகுந்த மானிடரை தலைவனாக முன்னிறுத்துவதாக அமையும். அத்தோடு இவ்வாடலனது விரைவான தாளக்கதியுடன் ஆரவாரம் மிகுந்த ஆடலாக அமைந்திருக்கக் கூடுமென்பதே பொதுவான கருத்தாகும்.
அன்றைய வள்ளிக் கூத்து குறித்தும் தொல்காப்பியத்தில் அறிய முடிகின்றது.
வாடாவள்ளி வயவர் ஏந்திய ..
என்ற பாடலடி போரிலே தமது நாடே வெற்றி பெற வேண்டுமென முருகனை வேண்டி ஆடுவதைக் குறிப்பிடுகின்றது.
அதேபோல் போரில் தன் வீரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றி பெறக் காரணமான வீரனுக்குக் கழல் அணிவித்து மற்றைய போர் வீரர்கள் ஆடிய கூத்து கழல் கூத்து எனக் குறிப்பிடப்பட்டதைத் தொல்காப்பியம் நமக்குத் தெரிவிக்கின்றது.
……வயவர் ஏந்திய ஓடாக் கழல்நிலை ... ...
என வரும் பாடலடிகள்மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும். இவ்வாடலினை தாண்டவ நடனத்தை ஒத்ததாகக் கருதுவர்.
இதே போன்ற பிறிதொரு ஆட்டமே வாள் அமலைக் கூத்தாகும். போரிலே பகை மன்னனின் யானையையும் கொன்று அம் மன்னனையும் கொன்றபின்னர் வெற்றிபெற்ற அரசனின் போர்வீரர்கள் இறந்து கிடக்கும் மன்னனைச் சுற்றிச் சுற்றித் தங்களது வாள்களை சுழற்றிய வண்ணம் பாடியாடுதலே அமலைக் கூத்தாகும். இதனை
…..களிற்றோடு பட்டவேந்தனை ஆட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்
என்ற பாடலடிகள் விளக்கி நிற்கின்றது.
தொல்காப்பியம் வெளிப்படுத்தும் நடனக் கூறுகள்
தொல்காப்பியமானது ஒரு இலக்கண நூலாகப் பொதுவாகக் கொள்ளப்பட்டாலும் அது நடனம் பற்றிக் குறிப்பிடும் கருத்துக்கள் பண்டைய காலம் முதலே நடனக் கலை தமிழர் தம் வாழ்வியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்மையை நம்மால் உணர முடியும். பின்வரும் வெளிப்பாடுகள் அதற்குப் போதிய சான்றாக அமைவதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானமாகும்.
1. நாடக தர்மி, லோக தர்மியென நடனத்தில் குறிப்பிடப்படும் இரு வேறு வழக்குகளையும் தொல்காப்பியமானது நாடக வழக்கு, உலகியல் வழக்கு எனக் குறிப்பிடுகின்றது.
2. நடனத்தில் குறிப்பிடப்படும் நடனவிபாவம் சஞ்சாரி பாவம், ஸ்தாயி பாவம், சாத்வீக பாவம் ஆகியனவற்றை தொல்காப்பியமானது முதல், கரு, உரியென திணைகளில் பயின்று வரும் பொருள்களாகக் குறிப்பிடுகின்றது.
3. கருத்துப் பொருட்களை காட்சிப் பொருளாக மாற்றும் தன்மையில் கூற்று, கேட்போர், முன்னம் எனும் மூன்றினையும் இன்றியமையாத கூறுகளாக தொல்காப்பியம் குறிப்பிடும். கூற்று என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்துபவரை அடையாளப்படுத்துவதாகும். குறித்த செய்தியினைத் தலைவி அல்லது தலைவன் அல்லது தோழி ஆகியோரில் யார் வெளிப்படுத்துகிறார்களோ அதற்கு ஏற்றதாகவே பாவமும் அமைய வேண்டும். கேட்போர் என்பது குறித்த கருத்தினை கேட்பவர் பற்றியது. இதில் முன்னர் குறிப்பிட்ட மூவரில் யார் கேட்கிறாரோ அதற்கு ஏற்றாற் போல் பாவமும் வெளிப்படுத்தப்பட வேண்டும். முன்னம் என்பது அக்குறிப்பானது எதைப் பற்றியது என்பதை விளக்குவதாகும். இம்மூன்றையுமே நடன நிகழ்வில் ஆடுவோருக்கும் பார்ப்போருக்கும் இடையே நிகழுகின்ற ஊடாட்டத்திற்கும் ரஸம் எனப்படுகின்ற சுவையினுக்கும் பயன்படுகின்ற தன்மையாக நடனம் வெளிப்படுத்தும்.
4. நடனத்தில் ரஸம் மற்றும் பாவம் என்பன தனித்த ஒரு இடத்தை வகிப்பதாக அமையும். இதனையே தொல்காப்பியம் மெய்ப்பாடு என்ற பெயரில் தனி இயலாக வெளிப்படுத்தியுள்ளது.
5. தொல்காப்பியம் ஆட்ட வகைகளை ஆடுதல், கள்ளுண்டு ஆடுதல், வெறியாடல், கூத்திடல், விறல்களினால் வல்லபம் செய்தல் போன்ற பெயர்களில் வெளிப்படுத்துகின்றது. இதனையே நடனமானது உடல் மாற்றத்தின் வெளிப்பாடுகளை ஆங்கிகம் என்றும் முகமாற்றத்தின் வெளிப்பாடுகளை பாவம் என்றும் குறிப்பிடுகின்றது.
தொல்காப்பியம் குறிப்பிடும் கருத்துப் புலப்பாடு
நடனக் கூறுகளை வெளிப்படுத்திய தொல்காப்பியம் அதன் கருத்துப் புலப்பாட்டினுக்குரிய பொருளாக முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றினை சுட்டிநிற்கின்றது. இதில் ஒரு திணைக்குரிய நிலத்தின் தன்மை, பருவம் மற்றும் நேரம் என்பன முதல்பொருள் எனக் குறிப்பிடப்படுகின்றது. அந்நிலத்தில் உள்ளடக்கப்படுகின்ற இயற்கைவாழ் பொருட்கள் அனைத்தும் கருப்பொருள் என்ற வரையறைக்குள் அடங்குகின்றன. உரிப்பொருளென்பது அந்த நிலத்துக்குரிய ஒழுக்க நெறிகளை குறிப்பிட்டுக் கூறுவது.
நடனத்திலே மேற்குறிப்பிட்ட முவ்வகைப் பிரிவுகளும் பின்வருமாறு வெளிப்படுத்தப்படுகின்றது. நிலைக்கருத்து எனும் ஸ்தாயி பாவத்திற்கு உரிப்பொருளும் நிலைக் கருத்தின் காரணமாய் அமைகின்ற விபாவத்திற்கு உரிப்பொருளின் பல்வேறு துறைசார்ந்த நிகழ்வுகளையும் துணைக்கருவி எனப்படுகின்ற சஞ்சாரி பாவத்திற்கு கருப்பொருளோடு முதல்பொருளிலுள்ள பருவம் மற்றும் நேரத்தினையும் இதில் உள்ளடக்கலாம். மேலும் நடனத்தின் மிகவும் முக்கியப்படுத்தத்தக்கதான சாத்வீக பாவத்திற்கு மிகப் பொருத்தமான இயலாக தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலை நம்மால் பொருத்திப் பார்க்க முடிகின்றது. சுவையின் வெளிப்பாட்டினைத் துல்லியமாகக் காண்பிக்கும் தன்மையில் தொல்காப்பிய அகத்திணை மெய்ப்பாட்டியல் மரபுகள் அமைந்திருப்பதை இங்கு குறிப்பிடலாம்.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு பற்றிய கூறுகள்
மக்களின் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்பாடாக அமைகின்ற கண்ணீர் அரும்பல், மெய்சிலிர்த்தல், வியர்த்தல், நடுங்குதல் என்பன போன்ற புறக்குறிகள் காண்போர்க்குப் புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும். இதனையே இளம்பூரணனார் மெய்யின்கண் தோன்றுவதால் மெய்ப்பாடாயிற்று எனக்குறிப்பிடுவார். இதனைத் தொல்காப்பியம் சிரிப்பு, அழுகை, இழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, காதல் என எட்டாகக் குறிப்பிடுகின்றது.
நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே ………………………………………… நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப என அது அமையும்.
மேற்சொன்ன எட்டு மெய்ப்பாடுகளும் தோன்றுவதற்கான காரணங்களாக ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு காரணங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
1. நகை (சிரிப்பு)
எள்ளல் இளமை பேதமை மடன் என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப
இது இழ்தல், இளமை, அறிவு இல்லாமை, மடமை எனப்பட்ட நான்கூடாகவும் நகையெனும் மெய்ப்பாடு பிறக்கும் எனப் பொருள்படும்.
2. அழுகை
இளிவே இழவே அசைவே வறுமை என விளிவு இல்கொள்கை அழுகை நான்கே
இது இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கூடாகவும் கெடுதலற்றதாக அழுகை பிறக்கும் எனப் பொருள்படும்.
3. இளிவரல் (இழிப்பு)
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே
இது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனப்பட்ட நான்கூடாகவும் இளிவரல் பிறப்பதாகக் கூறும்.
4. மருட்கை (வியப்பு)
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு முதிமை சாலா மருட்கை நன்கே
இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்பாலும் அறிவால் அமையாத மருட்கை தோன்றுவதாகக் கூறும்.
5. அச்சம்
அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே
இது அணங்கு (பேய் போன்றவை), விலங்கு, கள்வர், அரசர் ஆகிய நால்வகையாலும் அச்சம் தோணுவதைக் குறிப்பிடும்.
6. பெருமிதம் (வீரம்)
கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே
இது கல்வி, அஞ்சாமை, புகழ்மை, கொடைத்தன்மை ஆகிய நால்வகையிலும் வீரம் தோன்றுவதைக் குறிப்பிடும்.
7. வெகுளி
உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே
இது உறுப்புக்களை குறைத்தல், குடிப்பிறப்பிற்கு கேடு சூழ்தல், ஏசுதலும் அடித்தலும், கொலை செய்வதற்குக் கருதுதல் எனப்பட்ட வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி தோன்றுவதைக் குறிப்பிடும்.
8. உவகை (காதல்)
செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே
இது செல்வம் நுகர்தல், புலன்களால் நுகர்தல், இன்ப நுகர்ச்சி, விளையாட்டு என்ற நான்கு வகையூடாக உவகை எனும் இன்ப உணர்ச்சி தோன்றுவதைக் குறிப்பிடும்.
இவ்வாறு முப்பத்தியிரண்டு காரணங்கள் எண்வகை மெய்ப்பாடுகளுக்கும் சொல்லப்படுவதைத் தொல்காப்பியம் நமக்கு விளக்குவதைக் காணலாம்.
இதில் தரப்பட்ட தகவல்களைக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறப்பு வாய்க்கப் பெற்றதான தொல்காப்பியத்தினூடாக ஆடற்கலையின் தொன்மையினையும் மரபுவழிப்பட்ட அதன் பண்பாட்டுக் கூறுகளையும் நம்மால் தெளிவாக உணர முடிகின்றது.