New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு
Permalink  
 


ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு

காலச்சுவடு, அக்டோபர் 2009 இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள “ஆஷ் அடிச்சுவட்டில்...” என்ற நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது.

“தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்று பிந்தைய வரலாறு காட்டியது” எனக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார். இக்கருத்து தவறான ஒன்று.

அதே நெல்லைச் சீமையில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) 1942 செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குலசேகரபட்டினம் உப்பளத்தில் பி. எஸ். ராஜகோபால நாடார் தலைமையில் நுழைந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்தது. அங்குப் பணியிலிருந்த காவலர்களைக் கட்டிப்போட்டதோடு அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.

டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தான். சத்தம் கேட்டு விழிப்படைந்த அவன் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களை வழிமறித்தான். குண்டுகள் இல்லாத காரணத்தால் தம் துப்பாக்கியின் பெய்னெட் பகுதியைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான். கூடியிருந்த விடுதலை வீரர்கள் தம் கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் லோன் துரையை வீழ்த்தினர்.

இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடியில் (Thoothukudi District Gazetteer, Vol-1, 2007, Tamil Nadu Archives, Chennai-8) குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்திலுள்ள லோன்துரையின் சமாதியின் படமும் இத்தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்கு விசாரணை 1943 பிப்ரவரியில் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் எதிரியான ராஜகோபால நாடாருக்கும், இரண்டாம் எதிரி காசிராஜன் நாடாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1943 ஏப்ரல் 30 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் எதிரியான பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ. எஸ். பெஞ்சமினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை ஒத்த ஃபெடரல் நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதிசெய்தது.

காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஆர். வெங்கட்ராமன், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லண்டனில் இருந்த ப்ரைவி கவுன்ஸிலில் ஆஜராகி இவர்கள் சார்பில் வாதாட மனுசெய்தனர். தேவைப்படுமானால் ராஜாஜியும் லண்டன் சென்று இவர்கள் சார்பில் வாதாடத் தயாராக இருந்தார். இவ்வழக்கில் வாதாடுவதற்காக ராஜாஜி லண்டன் வருவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி இந்தியாவின் கவர்னர் ஜெனரலை அறிவுறுத்தியது. அதன்படி, 1945 ஏப்ரல் 23 அன்று கவர்னர் ஜெனரல் தண்டனைக் குறைப்பு ஆணையை வெளியிட்டார்.

இரண்டாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா விடுதலை பெற்றதை முன்னிட்டு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜகோபால நாடார், ‘தூக்குமேடை’ ராஜகோபால் என்று குறிப்பிடப்படலானார். இச்சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில், 1997ஆம் ஆண்டில் குலசேகரபட்டினத்தில் நினைவுத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதேபோல நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வரலாறாகட்டும், பண்பாட்டுப் பொருளியல் சமூக வரலாறாகட்டும், நாடார் எனப்படும் சான்றோர் சமூகத்தவரின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதே ஆ.சிவசுப்பிரமணியன், ஆ. இரா. வேங்கடாசலபதி போன்றவர்களின் பணியாக இருந்து வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் கருத்தில் நாடார் என்ற சமூகமே இப்பகுதியில் இருந்ததில்லை போலும்.

மற்றோர் இடத்தில் கட்டுரையாளர், “மணியாச்சி சந்திப்புக்கு வாஞ்சி பெயரை இடவேண்டுமென ஒரு இயக்கமே நடந்தது. இதற்கு எதிராக வாஞ்சியின் இந்து மதவாதச் சார்பை முன்வைத்துத் திராவிடர் கழகம் துண்டறிக்கைகளை வெளியிட்டு ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாதுகாவலராக முன்வைத்தது. இந்தப் பின்னணியில் தான் ஆ. சிவசுப்பிரமணியன் ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சியும் (1986) நூலை எழுதினார்” எனக் குறிப்பிடுகிறார். மணியாச்சி சந்திப்புக்கு வாஞ்சி பெயரை இடவேண்டுமென இயக்கம் நடத்தியவர்கள் இந்து மதவாத அல்லது பிராமணியச் சார்புடையவர்கள் என்ற தொனி இக்கருத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் குமரி அனந்தன் ஆவார். அவர் நாடார் சமூகத்தவரும் பிராமணர் அல்லாத ஒருவர் என்பதும்தான் இந்த இருட்டடிப்புக்கு முக்கியக் காரணம். அல்லது, நாடார் சமூகத்தவர் அனைவருமே இந்து மதவாதச் சார்புடையவர்கள் எனக் கட்டுரையாளர் கருதுகிறார் போலும். ஒருவேளை, வாஞ்சிநாதனும் குமரி அனந்தனும் சார்ந்த சமூகங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பதோடு வீட்டிலும் வெளியிலும் சுத்தத் தமிழில்தான் பேசி வந்தார்கள் என்பதாலும், தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தமிழர்களை ‘அரவாடு’ என்று சொல்லக்கூடிய நடைமுறை இல்லாதவர்கள் என்பதாலும் இப்படி உண்மையைத் திரித்து இருட்டடிப்புச் செய்கின்றனர் போலும். இவர்களுடைய இத்தகைய இருட்டடிப்புக்கு அப்பட்டமான வேறொரு எடுத்துக் காட்டையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நெல்லைச் சீமையிலும் மறவர் சீமையெனப்படும் இராமநாதபுரத்திலும் இருந்த பருத்தி ஜின்னிங் கிடங்குகள் அனைத்தும் நாடார் சமூகத்துக்குரியவை என்பதை ராபர்ட் ஹார்ட்கிரேவ் தமது Nadars of Tamilnadu என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1827ஆம் ஆண்டிலேயே ஆறுமுகநேரி ஆயிரம் நாடாக்கள், தட்சிண மாறநாடு சீர்மை நாடாக்கள் என்னும் பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்து மதுரை நெல்பேட்டையில் ஒரு தலைமை இடமும் அமைத்துச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதற்குச் செப் பேட்டு ஆதாரம் உண்டு. இச்செப்பேடு தற்போது திருநெல்வேலி தட்சிண மாற நாடார் சங்க அலுவலகத்தில் உள்ளது.

18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே தூத்துக்குடி முதன்மையான பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாக விளங்கியது என்பதை பிஷப் ராபர்ட் கால்டுவெல் தம்முடைய History of Tinnevelly என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1870ஆம் ஆண்டளவில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை அடுத்த உமரிக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நாடார் என்பவர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கப்பல் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். சென்னைப் பட்டினத்தில் இருந்த லெவிச்சி துரை, பவிச்சி துரை முதலிய பரங்கித் துரைமார்கள் இவரிடமிருந்து சரக்குகளை விலை பேசி வாங்கினர் என்றும் சாதிலிங்கக் கட்டி, கட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கௌரிப் பாஷாணம், பச்சைக் கர்ப்பூரம், பவளக் கர்ப்பூரம், ஈயச் செந்தூரம், இந்துப்பு, வெடியுப்பு, பொரிகாரம், நவச்சாரம், சீனக் காரம் முதலான பல சரக்குகள் விற்கப்பட்டன என்றும் ‘கப்பல் பாட்டு’ (பக். 61-75, உமரிமாநகர் தல வரலாறு, ஆசிரியர்: காசிப்பழம் என்கிற சின்னாடார், உமரிமாநகர் அஞ்சல், ஆத்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம், 1987) என்ற ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்தியப் பருத்தி இங்கிலாந்தின் லங்காஷயர், மான்செஸ்டர் போன்ற தொழில் நகரங்களில் ஜவுளி ஆலைகளுக்கு முதன்மையான கச்சாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். எனவே, 1906இல் வ. உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தொடங்கியபோதும் 1908இல் கோரல் மில் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோதும் அன்னியத் துணி பகிஷ்காரப் போராட்டத்தை வழிநடத்தியபோதும் அவருடைய தலைமையைத் தூத்துக்குடி நகரத்தின் முதன்மையான வணிகர்களாகவும் விளங்கிய நாடார் சமூகத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டுமின்றி, அவருடைய கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களாகவோ வேறு விதத்தில் தொழில் உறவு கொள்ளவோ நாடார் சமூகத்தவர்கள் விரும்பவில்லை.

இலங்கை போன்ற அண்டை நாடுகளின் சரக்கு ஏற்றுமதிக்காகக்கூட இப்பகுதி நாடார் சமூகத்தவர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கப்பலை நாடவில்லை. வ.உ.சி. தம் குறிக்கோளில் தோல்வியடைவதற்கு நாடார்களின் இத்தகைய ஒத்துழைப்பின்மையே முதன்மையான காரணமென்ற வரலாற்று உண்மையைப் பரிசீலிக்க ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற ஆய்வாளர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. ஏனென்றால், அவர்களுடைய மனவெளிப் பரப்பில் நாடார் சமூகத்திற்கு எந்த ஓர் இடமும் கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவே அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமைந்த வரலாற்றிலும் நாடார் சமூகத்திற்கு எந்த இடமும் கிடையாதென்பது முடிந்த முடிபு.

1916ஆம் ஆண்டுக்குரிய இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வறிக்கை (Annual Report on Epigraphy) நூலின் முன்னுரையில் இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற கருத்தைப் பாருங்கள்: “நெல்லைச் சீமையில் இப்போதும் நிலவிவருகின்ற வேளாளர் - நாடார் பகைமையின் வேர்களைக் கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 15 மற்றும் 17ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணலாம்.” இந்தியக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மையைக்கூட இத்தகைய வரலாற்றாய்வாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்டம் மிகுந்த தீவிரமடைந்த 1940ஆம் அளவிலும் அதற்குப் பின்னரும்கூடத் தென்மாவட்ட நாடார் சமூகத்தவரிடம் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோரின் தலைமைப் பண்புகளும் பாரதியாரின் பாடல்களும் தாக்கம் விளைவித்திருந்தனவே தவிர, வ.உ.சி.யின் போராட்ட வரலாறு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வ.உ.சி. இணையற்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்ற உண்மையை எப்படி மறுக்க முடியாதோ அது போன்றே சைவ வேளாளர், பிராமணர் அல்லாத - அந்தக் காலகட்டத்தில் இடைத்தட்டுச் சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் இவர்களால் கருதப்பட்ட - பிற சாதியினர் சமைத்த உணவைக்கூட அருந்துவதற்கு ஆயத்தமாக இல்லாத மனநிலை உடையவர் என்ற உண்மையையும் யாரும் மறுத்துவிட முடியாது. கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேசனாகிய ஜார்ஜ் பஞ்சமன் என்று தன்னுடைய கடிதத்தில் எழுதும்போது, வாஞ்சி அய்யர் என்ன மனநிலையில் பஞ்சமன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினாரோ அந்த மனநிலைக்குச் சற்றும் வேறுபாடில்லாத மனநிலை உடையவர்தாம் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களும். (ஜாதி என்னடா? என்றேன். ‘முதலி’ என்றான். ‘என்னடா முதலி நீ?’ என்றேன், விழித்தான். ‘பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால் உண்பேன் என்று ஜெயிலர்பால் இயம்பெனச் சொன்னேன்’. - சுயசரிதை பக். 134.)

இத்தகைய மனநிலை அக்காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிற ஃபீனிக்ஸ் போல மீண்டும் மீண்டும் வேளாளர் சார்பு மனநிலை, சான்றோர் சமூகத்தை இருட்டடிப்புச் செய்கின்ற உள்நோக்கம் ஆகியவை ஆ. இரா. வேங்கடாசலபதி போன்றவர்களிடம் ‘நீறுபூத்த நெருப்பாக’ இருந்து வருகின்றன. அதன் வெளிப்பாடு தான், லோன் துரை கொலை வழக்கு என்ற நிஜத்தையே நிகழாத ஒன்றுபோல மறைத்து எழுதுகிற மனநிலை. உண்மையிலேயே இது “ஆஷின் அடிச்சுவட்டில்...” அமைந்த ஆய்வுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

- அ. கணேசன் 
(தலைவர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம், சென்னை)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு
Permalink  
 


எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே!
ப்ரவாஹன்

ஆஷ் துரை செத்துப்போனான்; அந்தச் சாவில் அவன் மனைவிக்கு ஏற்பட்ட துக்கத்தைவிடவும் அதிகத்தை ஆ. இரா. வேங்கடாசலபதி உணர்ந்திருக்கிறார். ‘தூத்துக்குடியில் ஆஷின் செயல்களால் நமக்கு நன்மை விளையவில்லை’ என்று சொன்ன பிரிட்டிஷ் கவர்னரே ஆஷ் செத்துப்போனதில் வருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததை மார்லி பிரபுவே பொறுத்துக்கொள்ளவில்லை என்ற அளவுக்குக் கடுந்தண்டனையாக அது இருந்தது எனும் போது, ஆஷிடமிருந்து எத்தகைய அணுகு முறையை வெள்ளை ஏகாதிபத்தியம் எதிர்பார்த்திருக்கும் என்பது வெளிப்படை. ஆனால் ‘அரசனைவிட அரசனுக்கு அதிக விசுவாசம் காட்டிய’ ஆஷ் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருந்தால் பிரிட்டிஷ் கவர்னரே மேற்குறிப்பிட்டபடி சொல்லியிருப்பார்? மேலும், அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டராக இருந்த விஞ்ச்சுடன் சேர்ந்து தனிப்பட்ட விருப்பத்துடன், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிராக வ.உ.சியும் அவரது தோழர்களும் சேர்ந்து நடத்திய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழிப்பதற்குக் காரணமாயிருந்த ஆஷை, “காலனிகளை அடித்து நொறுக்கும் ஏகாதிபத்திய வெள்ளை அரசு எனும் பேரியந்திரத்தின் ஒரு சிறு திருகாணி” என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார் கட்டுரையாளர். பேரியந்திரமோ சிற்றியந்திரமோ திருகாணிகள் இன்றி இயந்திரங்கள் இல்லை; இயந்திரங்களைப் பிய்த்தெறியத் திருகாணிகள் களையப்படுவது அவசியம். மேலும், திருகாணி எந்த இடத்தில் இருக்கின்றது என்பதுதான் மிகவும் முக்கியம். ஒரு இயந்திரத்தின் மைய இரும்பு உருளையில் இருக்கும் பல்சக்கரத்தைத் தாங்கிப்பிடிக்கின்ற திருகாணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அது இல்லையெனில் இயந்திரமே இல்லை என்பதைக் கூட அறியாதவரா கட்டுரையாளர்? அல்லது தெரிந்தேதான் இப்படி எழுதுகிறார் எனில் இவரது நோக்கம்?

“புரட்சிகரத் தீவிரவாதிகளின் முதல் இலக்கு ஆஷ் அல்ல; தூத்துக்குடியைவிட திருநெல்வேலியில்தான் அடக்குமுறையும் உயிர்ச்சேதமும் அதிகம். எப்படியும் மாவட்டக் கலெக்டர் என்ற முறையில் விஞ்சுதான் அனைத்திற்கும் பொறுப்பு” என்று எழுதுவதன் மூலம் வாஞ்சிநாதன், தவறான நபரை இலக்காக்கியதாகச் சித்தரிப்பதும் ஆஷ் கொல்லப்பட்டது தவறு என்று சொல்வதும்தான் கட்டுரையாளரின் நோக்கம். தனது இக்கருத்தை நியாயப்படுத்தத்தான் “ஆஷ் தலையில் சைத்தானின் கொம்புகளும் இரத்தம் வடியும் கோரைப் பற்களும் இல்லை” என்று சொல்லி ஆஷை ஒரு அப்பிராணியாகச் சித்தரிக்கிறார். ஒரு அப்பிராணியைக் கொன்ற கொலைகாரன்தான் வாஞ்சி என்பதே இவர் சொல்ல வருவது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டைருக்குக்கூடத் தலையில் கொம்புகளோ இரத்தம் வடியும் கோரைப் பற்களோ இல்லை என்ற ‘உண்மை’யைக் கூட இவர் பறைசாற்றுவார் போலும்!

“சுதேசி இயக்கத்தின் தலைமையகமாக விளங்கிய தூத்துக்குடியில் அதிகாரியாகப் பணியாற்றியதாலும், கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத் தொடர்புகொண்டவராகக் கருதப்பட்டதாலுமே ஆஷ் வெறுக்கப்பட்டார்” என்று எழுதிவிட்டு, வ.உ.சி எழுதிய, “யான் இவண் ஏகியதற்கும் தூத்துக்குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந்ததற்கும் அவன் காரண மென்றறைந்தேன்” என்று சொல்லி, அவன் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கேட்டு, “நல்லதோர் செய்தி நவின்றாய்” என்று ஊழ்வலி மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பொறுத்தருளும் பெருங்குணமும் ஒருங்கே பெற்றதோடு மட்டுமின்றி, நாட்டுப்பற்றாளரும் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவார்த்தமாகச் சிந்தித்த வ.உ.சி கூடத் தவறாகப் புரிந்து கொண்டதாகச் சொல்வது, ஆஷைக் கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சியின் செயலைக் கொச்சைப்படுத்த முற்படுவதாகும். வாஞ்சியை விடுதலைப் போராட்டக்காரன் என்று சொல்ல மனமின்றி ‘புரட்சிகரத் தீவிரவாதி’ என்று இன்றைய சூழலில் ‘இந்துத் தீவிரவாதி’ என்று சித்தரிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆஷ் - விஞ்ச் ஆகியோருக் கிடையிலான கடிதப் போக்குவரத்தைச் சுட்டி, சுதேசிக் கப்பல் கம்பெனியை ஒழித்துக் கட்டுவதில் ஆஷின் தனிப்பட்ட விருப்பார்வத்தை வெளிப்படையாகச் சொல்லிய பிறகு, சுதேசிக் கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத் தொடர்பு கொண்டவராகக் ‘கருதப்பட்டதாலுமே’ என்று தவறாகக் கருதியதைப் போல சொல்கின்ற மனநிலையை என்ன வென்று சொல்ல?

“கொலையாளியான வாஞ்சி ஒரு பிராமணர் என்பதைத் தமிழ்நாட்டு நடுத்தர பிராமண வர்க்கம் செரிக்க முடியவில்லை” என்கிறார். இங்கே வாஞ்சியைக் கொலைகாரனாகச் சித்தரிக்கின்ற இவர் தமிழ்நாட்டுப் பிராமண நடுத்தர வர்க்கம் அக்காலத்தில் விடுதலை வேட்கையின்றி வெள்ளையர்களின் கையாளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அதனால், வெள்ளையனுக்கு விசுவாசமான ஒரு பிரிவினர், தம்மிலிருந்து ஒருவன் வெள்ளை அதிகாரி ஒருவனைக் கொன்றான் என்பதைச் செரித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகப் பார்த்ததைப் போலப் பிரஸ்தாபிக்கிறார். இதற்கு என்ன சான்றுகள் வைத்திருக்கிறார்? பிராமண நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி ஏனைய நடுத்தர வர்க்கத்தினர் பற்றியும் “திருநெல்வேலி எழுச்சி ஒடுக்கப்பட்டு, வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றது மிதவாதிகளுக்கும் அரசைக் கண்டு அஞ்சிய நடுத்தர வர்க்கத்திற்கும் ஏற்கெனவே காய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆஷ் கொலையால் மேலும் உதறல் ஏற்பட்டது” என்று எழுதுகிறார். அதாவது அன்றைய சூழலில் ஒரு பெருந்தொகையினர் மத்தியில் பாதுகாப்பு உணர்வின்மையை ஏற்படுத்திய செயல் தான் ஆஷ் கொலை என்று சித்தரிக்கிறார். அதாவது வாஞ்சிநாதன் ஒரு பொறுப்பற்ற கொலையாளி என்பதே கட்டுரையாளரின் கருத்து. ஆனால் இவரே வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதைப் போல, ‘வாஞ்சியின் உயிர்த்தியாகம் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது’.

மணியாச்சி இரயில் சந்திப்புக்கு வாஞ்சி பெயரைச் சூட்ட இயக்கம் நடை பெற்றபோது அதற்கெதிராக, வாஞ்சியின் இந்து மதச் சார்பைக் கண்டித்துத் துண்டறிக்கைகள் வெளியிட்ட திராவிடர் கழகம், ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாதுகாவலராக முன்வைத்தது. வாஞ்சியின் இந்து மதச் சார்பைத் திராவிடர் கழகம் எதிர்த்ததை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆஷைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளின் பாது காவலனாக வைத்தது? ஐரோப்பியக் கிறித்தவ மிஷனரிப் போதகர் கால்டுவெல்லை ‘ஞானத் தந்தை’யாக ஏற்றுக்கொண்டவர்களிடமும், சொந்த புத்தி வேண்டாம், ‘தந்தை’ பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்பவர்களிடமும் வேறெதை எதிர்பார்க்க முடியும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ஆஷ் அடிச்சுவட்டில்...
ஆ. இரா. வேங்கடாசலபதி

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் விமான முனையத்தில் நான் தரை இறங்கிய நாள் ப்ளும்ஸ்டே 2006. ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யூலிஸஸ்’ நாவல் முழுவதும் டப்ளின் நகரைக் களமாகவும் 16 ஜூன் 1904ஐக் காலமாகவும் கொண்டதால் ஒவ்வொரு ஜூன் 16ஐயும் ப்ளும்ஸ்டே என்று கொண்டாடுகிறார்கள். எனது அயர்லாந்து பயணத்தில் தற்செயல் நிகழ்வுகளுக்குக் குறைவில்லை.

Ashe.jpgஇந்தியக் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலண்டனிலுள்ள அயர்லாந்து தூதரகத்தில் விசா பெறுவது எளிதாக இல்லை. தூதரக அலுவலருக்குக் ‘கலெக்டர்’ என்பதற்கு என்ன பொருள் என்று விளக்கி மாய்ந்து போனேன். டப்ளின் விமான முனைய விராந்தைகள் உலகக் கால்பந்துப் போட்டியின் பரபரப்பில் அலைவுற்றிருந்தன. அல்லற்பட்டு வாங்கிய விசாவைப் பார்க்கத்தானும் குடியேறல் வரிசையில் ஆளில்லை.

வாயிலில் நின்று சுற்றுமுற்றும் விழித்தேன். நான் சந்திக்க வந்தவருக்கு என்னை அடையாளம் காண்பதில் சிரமமிருந்திருக்க முடியாது. அங்கு நான் ஒருவனே இந்தியன். நரைத்த தாடியும் தடித்த கண்ணாடியுமாக உயரமாகவும் பொலிவாகவும் அவர் இருந்தார். சம்பிரதாயமான நல உசாவல்களுக்குப் பின் சொற்களைத் தேடும் தவிப்பு இருவரிடமும் வெளிப்பட்டது. சற்று நிலைகொள்ளாமல் நான் தடுமாறினேன். இவன் யாரோ என்ற கேள்வி அவர் பார்வையில் நிழலாடியது. இதற்கெல்லாம் காரணமில்லாமல் இல்லை. நான் டப்ளின் வந்ததன் நோக்கம் அவருடைய தாத்தாவைக் கொன்றவரை ஆராய்வதற்காக.

17 ஜூன் 1911இல் திருநெல்வேலி - தூத்துக்குடி இருப்புப்பாதையில் அமைந்த மணியாச்சி சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷைச் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சி சுட்டுக்கொன்றார். அங்கிருந்து ஓடிச்சென்று சிறிது தொலைவில் தம்மையும் சுட்டு மாய்த்துக்கொண்டார் வாஞ்சி.

தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்று பிந்தைய வரலாறு காட்டியது. ஆஷ் கொலையின் விளைவாகப் பல இன்னல்களை அடைந்த பாரதி, ‘சென்னை மாகாணத்தில் பயங்கரவாத இயக்கம் இறந்து பிறந்த குழந்தை’ என்று முன்னுணர்ந்து கூறினான். ஆஷுக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்ட ஆட்சிப் பொறுப்பையேற்ற ஜே.சி. மலோனி ‘தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடிய அரசியல் குற்றம்’ என்று அதை வருணித்தார். ரௌலட் கமிட்டி அறிக்கையும் ஆஷ் கொலையைக் குறிப்பிடத் தவறவில்லை.

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ (1986) என்ற நூலின் மூன்றாம் இயலின் தலைப்பு, ‘யார் இந்த ஆஷ்?’ தமிழ்நாடு ஆவணக்காப்பகத்திலும் புதுதில்லி இந்திய தேசிய ஆவணக்காப்பகத்திலும் இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் இருபதாண்டுகள் தேடியும் விடை காண இயலாத கேள்வியாக அது நின்றுகொண்டிருந்தது. இரகசியச் சங்கத்தைச் சேர்ந்த கொலையாளியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியாததில் வியப்பொன்றுமில்லை. ஆனால் ஆவணங்கள் மூலம் ஆட்சி செய்த அரசாக (Document Raj) விளங்கிய பிரிட்டிஷ் அரசின் ஐ. சி. எஸ். அதிகாரியைப் பற்றி அதைவிடக் குறைந்த தகவல்களே கிடைப்பதை என்னென்பது?

2006 இளவேனில் பருவத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையம் என்னை வருகை ஆய்வாளனாக அழைத்திருந்தது. அம்மையத்தின் ஆவணக்காப்பகத்தின் சான்று வளம்மிக்கது. இந்தியாவில் பணியாற்றிய வெள்ளை அதிகாரிகளின் கடிதங்கள், படங்கள் முதலானவற்றின் கோப்புகளைச் சேகரிப்பதில் பேர்பெற்றது. என் கவனம் அதில்தான். அவற்றுள் ஒரு பெட்டி ஆஷ் தொடர்பானது. ஆஷ் கொலையுண்ட பிறகு அவரது மனைவிக்கு வந்த நூற்றுக்கணக்கான இரங்கல் கடிதங்களும் தீர்மானங்களும் செய்தித்தாள் நறுக்குகளுமாக நிரம்பி வழிந்தது அப்பெட்டி. நிறைய இருந்தாலும் பெரிதும் சாரமற்றிருந்ததால் கொஞ்சம் ஏமாற்றமடைந்ததை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனாலும் விடவில்லை. ஆய்வு மைய நிர்வாகி கெவின் கிரீன்பேங்க் உதவியுடன் ஆஷ் கோப்பு எப்படி அங்கு வந்துசேர்ந்தது என்று துப்புத் துலக்கினேன்.

AsheFamily1.jpgகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் கிளின் டேனியல்சின் மனைவி ரூத் டேனியல்ஸ் கொல்லப்பட்ட ஆஷின் மகன் ஆர்தரின் கொழுந்தியாள் ஆவார். இவர் மூலமாகத் தம் தந்தை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் 1970களின் பிற்பகுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தெற்காசிய ஆய்வு மையத்திற்குக் கொடையளிக்க ஆர்தர் விரும்பியிருக்கிறார். என்ன காரணத்தினாலோ முதல் தவணைக்குப் பிறகு எந்த மேல்நடவடிக்கையும் இல்லாமல் போய்விட்டது.

இதன் தொடர்பான கடிதப் போக்குவரத்து அடங்கிய கோப்பில் ஆஷ் குடும்ப முகவரி ஒன்று இருந்தது. மயிரைக் கட்டி மலையை இழுப்பதுபோல் ஒரு கடிதத்தை விடுத்துவைத்தேன். சில நாள் கழித்து, ஒரு பின்மாலை நேரம், இரண்டு மொந்தை பியர் குடித்த மிதப்போடு உல்ஃப்சன் கல்லூரியின் கணினி அறைக்கு வந்தேன் மின்னஞ்சலைப் பார்க்க. ‘J.R. Ashe’ என்ற பெயர் அஞ்சல்பெட்டியில் ஒளிர்ந்தது. ஒரே நொடியில் அகன்றது போதை. ஜானெட். வயது 87. ஆர்தர் ஆஷின் மனைவி. கொலையுண்ட ஆஷின் மருமகள். தொடர்பு கொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி. அயர்லாந்திற்கு வந்து எங்களைச் சந்திக்க முடியுமா? மகனும் மருமகளும்கூட மிக மகிழ்வார்கள்.

ஒரு மாதம் கழித்து இதோ ஆஷின் பேரன் இராபர்ட்டின் காரில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன். டப்ளின் நகரின் தெற்கே ஐம்பது கல் தொலைவில் ஒரு கிராமத்தில் அவருடைய வீடு. ஐம்பது வயதான இராபர்ட் ஒரு சட்டத் தரணி. இலக்கியவழி நான் அறிந்த அயர்லாந்து வறுமை சூழ்ந்தது. ஆனால் அதன் சுவடே இப்போது தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு மிக வேகமாக வளர்ந்துவருகிறது அயர்லாந்து பொருளாதாரம். குறும்பா என்று அறியலாகும் ‘லிமரிக்’ என்ற நகைச்சுவைக் கவிதை வடிவம் ஒரு நகரத்தின் பெயராகும் என்பதைக் கைகாட்டி மரங்கள் நினைவுபடுத்தின. குவாக்கர் என்ற கிறித்தவப் பிரிவினரின் பாழடைந்த குடியைத் தாண்டி அமைந்திருந்தது இராபர்ட்டின் வீடு. அவர் மனைவி கரோலின் வரவேற்றார். வளமனை. எங்குப் பார்த்தாலும் அடுக்கியும் இறைந்தும் கிடந்தன நான் படித்ததும் படிக்க விரும்பியதும் படிக்க வேண்டியதுமான நூல்கள்.

காலனிய நாட்டில் தன் மூதாதையரைப் பறிகொடுத்திருந்த அக்குடும்பம் தொடர்ந்து காலனிய நாடுகளோடு உறவுகொண்டிருந்தது வியப்பாக இருந்தது. 1947வரை இராபர்ட்டின் தந்தை இந்திய இராணுவத்தில் அதிகாரியாக இருந்திருக்கிறார். ஹாங்காங்கில் பிறந்த கரோலின் தன் இளமைக் காலத்தை ஜிம்பாப்வேயில் கழித்திருக்கிறார். அவருடைய குடும்பம் இன்னமும் அங்குதான் வாழ்கிறது. ஏராளமான பழைய ஆவணங்களைப் பேணிவந்த, புத்தக வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்த அக்குடும்பம் ஆஷ் கொலையைப் பற்றிச் செவிவழிச் செய்திகளைத் தவிர மேலதிகமாக எதையும் அறிந்திருக்கவில்லை. டேவிட் டேவிடாரின் The House of Blue Mangoes நாவலில் வரும் ஒரு பகுதி மூலமாகச் சில செய்திகளை அவர்கள் அறிந்திருந்தனர். பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவலின் ஆங்கில மூலத்தைப் (The Tiger Claw Tree) பற்றியும் நான் சொன்னேன்.

அடுத்த நாள் விடிந்தது. ஜூன் 17. ஆஷ் கொலையின் 95ஆம் ஆண்டு நிறைவு என்பது நினைவுக்கு வந்தது. இதைச் சுட்டிக்காட்டியபோது நினைவிருக்கிறது என்றார் இராபர்ட். அவர் பாதுகாத்துவைத்திருந்த நூற்றுக்கணக்கான ஆவணங்களை மெல்லப் புரட்டலானேன். ஆஷின் மனைவி மேரி எழுதிக் குவித்திருந்த ஏராளமான கடிதங்கள், அவர் வரப்பெற்ற இரங்கல் கடிதங்கள் ஆகியவற்றுக்கிடையே சில அரிய வரலாற்று மணிகளும் தட்டுப்பட்டன. இவற்றைப் பார்வையிட்டுக்கொண்டே ஆஷ் கொலையின் வரலாற்றுப் பின்னணியை நான் விளக்கவும், குடும்பச் செய்திகளை விவரித்துச் சில இடைவெளிகளை நிரப்பினார் இராபர்ட். பகல் கழிந்து மாலை மயங்கியபொழுது எங்களுக்கிடையே முந்தைய நாளின் தயக்கம் நீங்கி நட்பு துளிர்விடத் தொடங்கியிருந்தது. வரலாற்றுக் கசப்புகளைக் காலம்தான் எப்படிக் கரைத்துவிடுகிறது! அன்று மாலை ஆஷ் நினைவுக்கு ஒயின் பாட்டிலைத் திறந்தபொழுது வாஞ்சிக்காகவும் தம் கோப்பையை இராபர்ட் உயர்த்தியபொழுது சற்று நெகிழ்ந்துதான்போனேன்.

ஊர் திரும்பியதும் வாஞ்சியின் படத்தை இராபர்ட்டுக்கு அனுப்பினேன். மின்னஞ்சலில் உடன் வந்த விடை : ‘எவ்வளவு பொலிவான இளம் முகம்! எங்கள் வாசகர் வட்டத்தில் ஆன் பாட்செட் எழுதிய ‘பெல் காண்டோ’ நாவலைப் படித்துவருகிறேன். அதிலும் இளம் புரட்சியாளர்கள் இவரைப் போலவே இளைஞர்கள்தாம். ஆனால் கடைசியில் இராணுவப் படையினர் இவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுகின்றனர். இவரோ தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். எதற்காக? தன் தோழர்களைக் காப்பாற்றவா? தியாகி ஆவதற்கா?’

2

ஆஷ் கொலையுண்டதைத் தொடர்ந்து அவர் மனைவிக்குக் கணக்கற்ற இரங்கல் கடிதங்கள் வந்தன. அவற்றுள் ஒன்று சிங்கப்பட்டியில் நாட்டு ஓடு தயாரிக்கும் சூளையில் மேலாளரான எஸ். சுவாமிநாதன் என்பவர் எழுதியது. ஆஷ் வாழ்க்கை வரலாற்றைத் தான் எழுதவிருப்பதாகவும் அதற்காக அவருடைய இளமைக் காலம் பற்றிய செய்திகளை அறிவித்து உதவும்படியும் அவர் கடிதம் விடுத்திருந்தார். திருமதி ஆஷ் அவருக்கு விடையிறுத்ததாகத் தெரியவில்லை. ஆஷின் வரலாறும் வெளிவரவில்லை. காலனிய ஆவணக்காப்பகப் பதிவுகளிலிருந்தும் ஆஷ் குடும்ப ஆவணங்களிலிருந்தும் கிடைக்கலாகும் குறையுடைய தகவல்களைக் கொண்டுமே ஆஷின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

அயர்லாந்தின் பாரம்பரியமான ஆங்கிலக் குடிவழியில் வந்தவர் ஆஷ். அவரது குடும்ப வம்சாவளி பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அயர்லாந்து அரசிடமிருந்து திருச்சபை பிரியும் காலம்வரை (1871) ஆஷ் குடும்பத்தினர் சீர்திருத்தச் திருச்சபையில் பாதிரிமாராக இருந்துள்ளனர். டப்ளினின் மிகப் புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியின் புரோவோஸ்டாகப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஷ் மூதாதையர் ஒருவர் இருந்திருக்கிறார். மற்றொருவர் ‘கலிவர் பயணங்கள்’ எழுதிய ஜொனாதன் ஸ்விஃப்டின் அறிவுலகக் குழுவில் இருந்திருக்கிறார்.

இராபர்ட் வில்லியம் டி’எஸ்கோர் ஆஷ் 23 நவம்பர் 1872இல் பிறந்ததாக அவருடைய பிறப்புச் சான்றிதழ் கூறுகிறது. தந்தை ஐசக் ஆஷ். தாய் சாராள் ஆஷ். பிறந்த ஊர் அயர்லாந்தின் லெட்டர்கென்னியில் ஸ்பிராக்பர்ன். ஆஷின் தந்தை மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மனநல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளர். 1892இல் அவ்விடுதியின் நோயாளி ஒருவர் தலையில் அடித்ததில் இறந்துபோனார்.

Chalapathy-JRAshe.jpgடப்ளின் உயர்நிலைப் பள்ளியில் ஆஷ் சிறப்பாகப் படித்துத் தேர்ந்ததாகத் தெரிகிறது. 1892இல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் முதல் மாணவராகத் நுழைவுத் தேர்வில் ஆஷ் வெற்றிபெற்றார். அக்கல்லூரியின் முந்நூறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அவர் எழுதிய செய்யுள் துணைவேந்தர் பரிசைப் பெற்றது. 91 செய்யுள் அடங்கிய 18 பக்கம் கொண்ட அதை டிரினிட்டி கல்லூரியே சிறுநூலாக வெளியிட்டது. 1894இன் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற அறுபத்தொருவரில் நாற்பதாம் இடத்தைப் பெற்றார் ஆஷ். 1895 நவம்பரில் பணியில் சேர்ந்த ஆஷ் டிசம்பர் 4ஆம் நாள் இந்தியாவில் கரையிறங்கினார். மாவட்டப் பொறுப்பேற்பதற்கெனத் தெலுங்கை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாம் மொழியாகவும் அவர் தேர்ந்தெடுத்துப் பயின்றிருக்கிறார். ஆஷின் ஆட்சிப் பணி வாலாயமான முறையில் சீராக, எந்தச் சிறப்புமின்றி இயல்பான கதியில் சென்றுள்ளது. அவருடைய முதல் பணி அமர்த்தம் அன்றைய சென்னை மாகாணத்தின் வடகிழக்கு மூலையான கஞ்சம் (இன்றைய ஒரிசா மாநிலத்திலுள்ளது) மாவட்டத்தில் அமைந்தது. மூன்றாண்டுக்குப் பிறகு சென்னை நகரில் சிறப்பு அலுவலராக அமர்ந்தார். 1899 ஜனவரியில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் துணை ஆட்சியரானார். சிறிது காலம் மீண்டும் சென்னைத் தலைமையகத்தில் பணியாற்றிய பின் 1900இல் மாவட்டப் பணிக்குத் திருப்பியனுப்பப்பட்டார். கிருஷ்ணா, ஓங்கோல், நெல்லூர் என்று 1907 வரை பெரிதும் தெலுங்கு பேசும் பகுதிகளிலேயே ஆஷ் பணியாற்றியிருக்கிறார். நவம்பர் 1905இல் விடுப்பில் தாயகம் திரும்பியிருக்கிறார்.

பதினைந்து மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய ஆஷ் சென்னை மாகாணத்தின் தென்மூலையான திருநெல்வேலியில் அமர்த்தப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே ‘தனிப்பட்ட அவசர விடுப்பில்’ ஆகஸ்டு 1907 முதல் ஆறு மாதங்களுக்கு அயர்லாந்து சென்றிருக்கிறார். அவருடைய மனைவி மேரியின் உடல்நிலையே இதற்குக் காரணமெனத் தெரிகிறது.

17 பிப்ரவரி 1908இல் மீண்டும் ஆஷ் நெல்லை திரும்பினார். அப்போது அவர் பணியாற்றிய இரண்டு மாதங்கள் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிய காலம் எனலாம். சேரன்மாதேவியில் தலைமை உதவிக் கலெக்டராக அமர்த்தப்பட்டிருந்தாலும், தூத்துக்குடிப் பிரிவின் துணைக் கலெக்டராகவும் ஆஷ் கூடுதல் பொறுப்பேற்றிருந்தார். சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்துப் பெரிய துறைமுகம் கொண்டது தூத்துக்குடி. அந்நகரில் இருந்த பெரிய நூற்பாலையான கோரல் ஆலை ஏ. எஃப். ஹார்வி என்ற வெள்ளையர் நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்தது. தூத்துக்குடி -கொழும்பு கடல் வணிகத்தை ஏகபோகமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் தூத்துக்குடி முகவராகவும் இதே நிறுவனம் இருந்தது. தூத்துக்குடி ஊழ்வினை சூழ்ந்த படலத்திற்குப் பிறகு ஆஷ் கோதாவரி மாவட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டார். டிசம்பர் 1908 முதல் திருநெல்வேலியிலும் சாத்தூர் துணைப் பிரிவிலும் பணியாற்றிய பின் ஆகஸ்டு 1910இல் திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியரானார்.

ஆஷின் பணிப் பதிவேடுகள் சிறப்பான ஒரு அலுவலரைக் காட்டவில்லை என்றால், ஆஷ் குடும்ப ஆவணங்களின்வழி அவருடைய ஆளுமையும் துலக்கம் பெறவில்லை. தொடர்ந்து கரடுமுரடான செய்யுள்களை அவர் எழுதிவந்துள்ளது தெரிகிறது. 35 தட்டச்சிட்ட தாள்களில் 26 செய்யுள்கள் அடங்கிய கற்றை ஒன்று காணப்படுகிறது. ஆஷ் மறைவுக்குப் பின் அவற்றை வெளியிடுவதற்கென அவருடைய மனைவி எடுத்த முயற்சிகளின் எச்சம் போலும் இது. அவற்றுள் சோனட் வடிவப் பாடல்கள் இரண்டு மன இறுக்கம் பற்றியனவாகவும் மரணம் பற்றியனவாகவும் எதன் முன்னறிவிப்பாகவோ அமைந்துள்ளன. கோப்புகளில் காணப்படும் இரண்டொரு கடிதங்கள் அவரைக் கறாரான ஆளாகக் காட்டவில்லை. சக அலுவலர்கள் இவரை ஏய்த்துள்ளதாகவும் தெரிகிறது.

3

17 ஜூன் 1911. காலை 9:30. நெல்லைச் சந்திப்பில் ஆஷ் மணியாச்சி மெயிலில் ஏறினார். உடன்வந்த மேரி அதற்குச் சில நாளுக்கு முன்னர் 12ஆம் நாளன்றுதான் அவருடைய நெடுநாள் நோய்க்காக மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று அயர்லாந்திலிருந்து இந்தியா திரும்பியிருந்தார். கொழும்புவில் இறங்கிய பின் மற்றொரு நீராவிக் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்திறங்கிய மேரியை ஆஷ் நேராகச் சென்று அழைத்து வந்திருந்தார்.

Ashe1.jpgஅவருடைய இயற்பெயர் மேரி லிலியன் பாட்டர்சன். அவருடைய தந்தை பெஞ்சமின் தாமஸ் பாட்டர்சன் ஒரு பொறியியலாளர். தாய் மேரி சூசன்னா பாட்டர்சன். 7 ஜனவரி 1872இல் பிறந்த மேரி ஆஷைவிட ஏறத்தாழ ஒரு வயது மூத்தவர்.

டப்ளினில் காதலிக்கத் தொடங்கிய ஆஷும் மேரியும் 6 ஏப்ரல் 1898இல் பெர்ஹாம்பூரில் மணம் முடித்தனர். இவர்களின் காதல் வாழ்க்கையில் மேரியே முன்னடி எடுத்திருக்கிறார். ஆஷ் குடும்ப ஆவணங்களில் மேரி எழுதிய நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் உள்ளன. மிக நெருக்கமான உணர்வுகளை இவற்றில் காண முடிகின்றது. தங்கள் காதலை வெளிப்படுத்த சங்கேத மொழியையும் ஆஷ் தம்பதியினர் கையாண்டிருக்கின்றனர்.

Ashe3.jpgஆஷ் இணையர் கொடைக்கானல் பயணப்பட்டுக்கொண்டிருந்தனர். காரணம் அங்கு வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வளமனையில் மொலி என்ற மேரி, ஆர்தர், ஷீலா, ஹெர்பர்ட் ஆகிய முறையே 13, 10, 8, 6 வயதான குழந்தைகள் மிஸ் மில்லிக்கின் என்ற செவிலியருடன் குடியிருந்தனர்.

10:38க்கு மணியாச்சி சந்திப்பை அடைந்தது தொடர்வண்டி. இன்றுபோல் அன்றும் மணியாச்சி கிராமத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் கரிசல் காட்டில் அமைந்திருந்தது மணியாச்சி சந்திப்பு. 10:48க்கு போட் மெயில் வர வேண்டும். அதற்காகக் காத்திருந்த ஆஷ் இணையர் முதல் வகுப்புப் பெட்டியில் ஒருவரையொருவர் பார்த்தவாறு எதிரெதிரே அமர்ந்திருந்தனர். குடுமிவைத்து நன்றாக உடையணிந்திருந்த ஓர் இளைஞரும் மலையாளிகளைப் போல் வேட்டி அணிந்திருந்த ஒருவரும் முதல் வகுப்புப் பெட்டியை நெருங்கினர். அதில் ஏறிய இளைஞர் தன் கோட்டிலிருந்து ஒரு பெல்ஜியத் தானியங்கிக் கைத்துப்பாக்கியை எடுத்து ஆஷை நோக்கி நீட்டினார். அவரைத் திசைதிருப்பும் முகமாக ஆஷ் தன் தொப்பியை எடுத்து வீசினார். கைத்துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு ஆஷ் நெஞ்சில் பாய்ந்தது. அவர் நிலைகுலைந்தார். குண்டடிபட்டவர் கலெக்டரானதால் ரயில் வண்டி நெல்லைக்குத் திரும்பியது. ஆனால் கங்கை கொண்டான் நிலையத்தருகே தன் மனைவியின் கைகளில் கடைசி மூச்சை விட்டார் ஆஷ்.

ஆஷைச் சுட்ட பின்பு நடைமேடையில் ஓடிய இளைஞர் அங்கிருந்த கழிவறைக்குள் புகுந்துகொண்டார். வெட்டவெளியில் வேனிற்காலக் காற்றின் இரைச்சலில் கைத்துப்பாக்கியின் வேட்டொலி எவருக்கும் கேட்கவில்லை. வாயில் துப்பாக்கி வைத்துச் சுட்டுகொண்டு இறந்தபோன இளைஞரின் சட்டைப் பையில் கீழ்க்காணும் கடிதம் கிடைத்தது.

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,

R. வாஞ்சி அய்யர்

R. Vanchi Aiyar of Shencotta

கொலைக்கான காரணம் அரசியல் என்பது வெளிப்பட்டது. கடித வாசங்கங்கள் பீதியூட்டின. அவ்வாண்டு கடைசியில் நிகழவிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகக் கொலை நிகழ்ந்த தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்று அஞ்சிய இந்திய அரசின் உள்துறை, தவிர்க்க முடியாத காரணமிருந்தாலேயொழிய நீதிமன்ற விசாரணையின் பொழுதுகூட அதை வெளிப்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டார்.

Ashe2.jpgசென்னை மாகாணம் அதுவரை கண்டிராத ஒரு நரவேட்டை தொடங்கியது. 1886ஆம் ஆண்டளவில் பிறந்த வாஞ்சி, திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் மணியக்காரராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்த ரகுபதி அய்யரின் மகன். மனைவி பொன்னம்மாள். தங்களுடைய கைக்குழந்தையை அண்மையில்தான் பறிகொடுத்திருந்தனர். வாஞ்சியின் அரசியல் ஈடுபாடுகளும் கமுக்கமான செயல்பாடுகளும் தந்தை மகனுக்கிடையே கடுமையான புகைச்சலை ஏற்படுத்தியிருந்தன. வாஞ்சிக்குக் கடைசிக் கடன்களைச் செய்யவும் மறுத்துவிட்டார் அவருடைய தந்தை. திருவிதாங்கூர் சமத்தானத்தின் புனலூரில் சிறிது காலம் வனக் காவலராகவும் வாஞ்சி வேலை பார்த்திருந்தார். அண்மையில் பரோடா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இரகசிய நடவடிக்கையாக அவர் சென்றுவந்திருந்ததாகத் தெரிந்தது. செங்கோட்டை, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள் இரத்தப் பிரமாணம், காளி பூஜை முதலான அனைத்து அம்சங்களும் கொண்ட இரகசிய சங்கம் ஒன்று இருந்ததைப் புலப்படுத்தின. ‘பரங்கி நாசினி அச்சியந்திர சாலை’யில் அச்சிடப்பட்ட, வெள்ளையரைக் கொல்லத் தூண்டும் இரண்டு துண்டறிக்கைகள் - ‘ஆரியர்களுக்கோர் ஆப்த வாக்கியம்’, ‘அபிநவ பாரத சமாஜத்தில் சேர்ந்துகொள்ளப் பிரமாணம்’ ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. பாரதி எழுதிய நூல்களும் நடத்திய சில இதழ்களும் போலீசார் கையில் அகப்பட்டன. அதற்கு முந்தைய சில ஆண்டுகளாகப் பல அரசியல் கொலைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்த வங்காளத்தின் இரகசிய சங்கங்களோடு இருந்த தொடர்புகளையும் போலீசார் துப்பறிந்தனர். நெல்லை மாவட்டத்தில் 1908இல் கோலோச்சிய சுதேசி இயக்கத்தோடு ஆஷ் கொலைக்கு நேர்த் தொடர்பு இருந்ததையும் புலனாய்வுகள் காட்டின.

ஆஷைக் கொல்லச் சூழ்ச்சி செய்ததாகப் பதிநான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். போலீசுக்கு அஞ்சி தர்மராஜ அய்யர் நஞ்சுண்டும் வெங்கடேசுர அய்யர் கழுத்தை வெட்டிக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர். வ.உ.சி.யின் உற்ற துணைவரும் கொலை நிகழ்ந்த நாளில் வாஞ்சியுடன் இருந்தவர் என நம்பப்பட்டவருமான மாடசாமி பிள்ளை கடைசிவரை சிக்கவில்லை. அவரைப் பற்றி உலவிவரும் கதைகளுக்கு இன்றுவரை குறைவில்லை.

காலனியாதிக்க காலத்துச் சதி வழக்குகள் அப்ரூவரின் சான்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழமை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார். இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும், 1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்.

வழக்கு விசாரணையின்பொழுது சென்னை நீதிமன்றத் தலைமை நீதிபதி சார்ல்ஸ் ஆர்னால்டு ஒயிட், நீதிபதி எயிலிங்கு ஆகியோர் அப்ரூவரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் நீதிபதி செட்டூர் சங்கரன் நாயர் சுதேசி இயக்கத்துக்கும் ஆஷ் கொலைக்கும் நேர்க் காரண காரியத் தொடர்பைக் கண்டார். நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த சுதேசி இயக்க எழுச்சியையும், அதையொட்டி வ.உ.சி. தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி முயற்சியையும், கோரல் ஆலையில் வ.உ.சி. முன்னின்று நடத்திய வேலைநிறுத்தத்தையும், திருநெல் வேலிக் கலகத்தையும் தொடர்ச்சியாக விவரித்த சங்கரன் நாயர், பாரதி எழுதிய ‘கலெக்டர் வின்ச் சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்’, ‘கலெக்டர் வின்ச்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி’ என்ற பாடலை மேற்கோள் காட்டி, ‘இந்தக் கசப்பான பகையின் நேரடியான விளைவே திரு. ஆஷ் கொலையாகும் . . . வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைது மற்றும் சுதேசிக் கப்பல் கம்பெனி விவகாரம் ஆகியவையே இக்கொலைக்கு முக்கியக் காரணமாகும்’ என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆஷ் கொலை விசாரணையில் சதி அம்சம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பதினால்வரில் ஒன்பது பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

ஆஷ் விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை. புதுச்சேரியில் தஞ்சமடைந்திருந்த பாரதி, வ.வே.சு. அய்யர் முதலானோர் இக்கொலையோடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டனர். ஒரு பெரும் போலீஸ் படையும் ஒற்றர் படையும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டன. தென்னிந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக ஆஷ் கொலை கடைசிவரை நின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

4

பிப்ரவரி 1908இல் ஆஷ் பணியாற்றவந்த நெல்லை ஒரு சாதாரண மாவட்டமாக இல்லை. ‘இராஜ துரோகத்தின் நாற்றங்கால் என்ற அவப்பெயர்’ பெற்றிருந்த மாவட்டம் என அதன் கலெக்டர் ஜே.சி. மலோனி ஒருமுறை நினைவுகூர்ந்தது அதன் விடுதலை இயக்க முனைப்புக்குச் சான்றாகும். வங்காள மாகாணத்தை இரண்டாகத் துண்டாட இராஜபிரதிநிதி கர்சன் பிரபு முயன்றதையொட்டி, பாரதி குறிப்பிட்டதைப் போல் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், ஸர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது.’ தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கும் முயற்சியாக வங்கப் பிரிவினையைக் கண்ட காங்கிரஸ், டிசம்பர் 1906 கல்கத்தா மாநாட்டில் சுதேசி, அந்நியப் பொருள் புறக்கணிப்பு, தேசியக் கல்வி ஆகிய கூறுகளைக் கொண்ட ஒரு செயல்திட்டத்தை அறிவித்தது. அதுவரை ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று மன்றாடிக்கொண்டிருந்த காங்கிரஸ் ஒரு வெகுசன இயக்கமாக மாற்றமுறத் தொடங்கியது. வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் வலுப்பெற்ற சுதேசி இயக்கம், ‘இருண்ட மாகாணம்’ என்று பெயர்பெற்றிருந்த சென்னையிலும் காலூன்றலானது.

Memorial1-1913.jpgடிசம்பர் 1906இல் சென்னை அரசு, சுதேசி இயக்கத்தின் நிலை என்ன என்று அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கலெக்டர்களையும் பணித்திருந்தது. சுதேசியம் ‘பேச்சோடு நிற்கிறது; பொதுமக்களின் ஆதரவு எள்ளளவும் இல்லை’ என்று எல்லா மாவட்டங்களும் அறிவிக்க, ‘பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு நிலவுவதாக ஐயுறும் நிலையிலுள்ளது திருநெல்வேலி மாவட்டம் மட்டுமே, அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி நகரம் மட்டுமே’ என்று அதன் கலெக்டர் கூறினார்.

இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன் மாதேவிக்குத்தான் ஆஷ் சப் கலெக்டராக வந்துசேர்ந்தார். தூத்துக்குடியின் துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாகவும், ஜாயிண்ட் மாஜிஸ்திரேட்டாகவும் கூடுதல் பொறுப்பு வகித்ததால் தூத்துக்குடி நகரமே ஆஷின் பணியிடமாக அமைந்தது.

1906இன் தொடக்கத்தில் தூத்துக்குடியில் சுதேசியம் முகிழ்த்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் சுதேசியம் என்றால் மெழுகுவத்தி செய்தல், வளையல் அறுத்தல் என்றிருக்க, தூத்துக்குடியிலோ சுதேசிக் கப்பல் கம்பெனி என்ற பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. உள்ளூர் நீதிமன்றத்தில் ‘பிளீடர்’ என்ற எளிய வழக்குரைஞராக இருந்த வ.உ.சி., ஒரு குறுகிய கால அளவில் தம் நெஞ்சுரத்தாலும் விடாமுயற்சியாலும் வினைத்திட்பத்தாலும் தியாகத்தாலும் ஒரு தேசிய நாயகராக ஒளிவிட்டார். திலகர் தலைமையிலான காங்கிரசின் தீவிரப் பிரிவில் அணிவகுத்த வ.உ.சி., தூத்துக்குடி நகர வணிகர்களை அணிசேர்த்து ஒரு கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இரண்டு பெரிய நீராவிக் கப்பல்களை விலைக்கு வாங்கினார். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்குக் கடும் போட்டியாக விளங்கிய சுதேசிக் கம்பெனி வெள்ளையரின் வணிக நலன்களுக்கு ஒரு தேசிய அறைகூவலாக விளங்கியது.

டிசம்பர் 1907இல் நடந்த சூரத் மாநாட்டில் காங்கிரஸ் பிளவுபட்டதைத் தொடர்ந்து தென்னகத்துத் தீவிரவாதிகளின் தலைவராகத் தூத்துக்குடிக்குத் திரும்பிய வ.உ.சி., தூத்துக்குடிக் கடற்கரையிலும் திருநெல்வேலிப் பொருநைக் கரையிலும் ஏராளமான தேசிய அரசியல் கூட்டங்களை முன்னின்று நடத்தினார். சுப்பிரமணிய சிவாவின் அனல் பறக்கும் உரைகள் இவற்றின் சிறப்பம்சம். பொதுவெளிகளில் தமிழில் அரசியல் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது அதுவே முதல்முறை எனலாம். வெள்ளை ஆட்சியாளர்களுக்குச் சவால்விடும் வண்ணம் சுதந்திரமான, பிரதிநிதித்துவ அரசாங்கம் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இப்பேச்சுகள் நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்களையும் உழைக்கும் வர்க்கத்தினரையும் அணிதிரட்டியதாகப் போலீஸ், சி.ஐ.டி ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

27 பிப்ரவரி 1908இல் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் ஏறத்தாழ ஓராயிரம் பேர் கூலி உயர்வு, வார விடுமுறை முதலான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்தனர். இதன் பின்னணியில் சுதேசி இயக்கமும் வ.உ.சியும் இருந்தது வெளிப்படை. போராட்டம் வலுப்பதைக் கண்ட அரசு நிர்வாகம் 144 சட்டப் பிரிவை அமலாக்கியதோடு, சிவகாசியிலிருந்து கூடுதல் போலீஸ் படையையும் வரவழைத்தது. நிலைமையை எதிர்கொள்ளும் பொறுப்பு, தலத்திலிருந்த அதிகாரியான ஆஷுக்கு. ஆஷ்,

ஜாயின்று மேஜிஸ் டிரட்டாக என்னகர்
காயிதம் தந்‘தெனைக் காண்க வா’ என்றனன்.
உயிரனைய என்நண்பர் ஓட்டத்தில்வந்து ‘நின்
உயிரினை நீக்குதற் குபாயம் செய்துளன்; 
காண்க நீ போகேல். காலையிற் கேட்டேம்; 
வீண் கதை யென்றுநீ விளம்பலொழி’ 
என்று வ.உ.சி. சுயசரிதையில் கூறுகிறது.

ஆனால் வ.உ.சி.யோ ‘உயிரினை நீக்கும் ஊழ்வலி வந்திடின் நம்மால் தடுக்கவும் நண்ணுமோ? செல்லாது சும்மா இருந்திடின் சுகமோ’ என்று துணிவாக ஆஷைக் காணச் சென்றார்.

ஆசுவைக் கண்டதும், ‘அழகிய மில்லினை
மோசம் செய்ததென் மொழிகுவாய்’ என்றான். 
‘கொடியபல செய்து கூலி யாட்களை 
மடியும் விதத்தினில் வருத்திவந் ததனால்
வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்; 
நாலு தினத்தினில் நன்மையாம்’ என்றேன்.
படையின் செருக்கைப் பகர்ந்தான். எழுந்தேன் 
‘படையிலா ரிடத்ததைப் பகர்தல் நன்’ றென்றே!

தொழிலாளர் ஒற்றுமையும் வ.உ.சியின் தலைமையும் வேலைநிறுத்தத்திற்கு வெற்றி தந்தன. அனைத்துக் கோரிக் கைகளையும் வென்று 7 மார்ச் 1908இல் தொழிலாளர் வேலைக்குத் திரும்பினர். ஆஷ் இதைத் தம் தனிப்பட்ட தோல்வியாகக் கருதியிருந்தால் அது இயல்பே.

வெற்றியைச் சுவைத்த களிப்பில் சுதேசிய அரசியல் கூட்டங்கள் அன்றாடம் மேலும் ஊக்கத்தோடு தொடர்ந்தன. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். தெருவில் செல்லும் வெள்ளையரை நோக்கி ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டு அவர்களுடைய அதிகாரத்திற்கு அறைகூவும் துணிவு பாமரர்க்கும் பிறந்தது. விபின் சந்திர பாலர் என்ற வங்காள சுதேசித் தலைவரின் விடுதலையை ‘சுயராஜ்ய நாளாக’க் கொண்டாடுவதென முடிவுசெய்ததும் வெள்ளை அரசங்கம் தன் கைவரிசையைக் காட்ட முற்பட்டது. 12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும் இவ்வெழுச்சியின்போது திருநெல்வேலி நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. சி.எம்.எஸ். கல்லூரி தாக்கப்பட்டது. நகர்மன்ற அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. ஆவணங்கள் எரிந்தன. அஞ்சல் அலுவலகம் தீக்கிரையானது. தந்திக் கம்பிகள் அறுபட்டன. நகர்மன்றத்தின் எண்ணெய்க் கிடங்கு இரண்டு நாளுக்கு நின்று எரிந்தது. காவல் நிலையமும் தப்பவில்லை. பிணைக் கைதிகள் மூவர் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் சுட்டதில் நால்வர் இறந்தனர்.

தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தில் ஆஷாக நடித்த வில்லன் நடிகர் எஸ்.ஏ. அசோகன், போலீஸ் சுடு முன்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதாக ஒரு காட்சி வரும். கூட்டம் கலைய மறுத்தபொழுது கூட்டத்தைத் தாக்குமாறு குதிரைப் படையினருக்கு ஆணையிட்டார் ஆஷ்.

ஆசு படையுடன் அணுகி அவரை 
மோசம் செய்திட மூட்டிக் கலகம் 
தடியால் அடிப்பித்தான் சார்ந்தநம் மவரை; 
வெடியால் சுட்டான் வெளிவர விடாது. 
ஆசுவின் குதிரையை அடித்தவர் தள்ளினார். 
நாசமென் னுயிர்க்கென நவின்றவன் ஓடினான்!

என்கிறது வ.உ.சி. சுயசரிதை. ஆஷைக் கூட்டம் தாக்கியபோது, சுடும் ஆணை வழங்கியதால் சிலர் குண்டடிபட்டனர் என்கிறது திருநெல்வேலி கெசட்டியர். யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. கைதான முப்பத்தாறு ‘கலகக்காரர்க’ளில் நால்வர் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பினர்.

வெள்ளையர் சகலரும் மிகமிக நடுங்கி
கள்ளரைப் போன்றவண் கரந்து மறைந்தனர்.

ஆஷ் மறைந்தபொழுது மேரி பாய்ட்டன் என்ற வெள்ளைப் பெண்மணி தம் இரங்கல் கடிதத்தில் தூத்துக்குடி எழுச்சியின்பொழுது நிகழ்ந்தவற்றைப் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்:

கலகங்கள் நடந்தபொழுது தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் பள்ளியின் பொறுப்பாளராக நான் இருந்தேன் என்று சொன்னால் இக்கடிதத்தை எழுதுவதன் காரணம் உங்களுக்குப் புரியும். தூத்துக்குடி நகரத்தையும் இந்தியாவையும் ஒரு கொடும் நாசத்திலிருந்து திரு. ஆஷ் (இறைக் கட்டளைப்படி) தம் விவேகமானதும் தீரமானதுமான நடத்தையால் அன்றிரவு காப்பாற்றியதை நான் ஒருபோதும் மறக்கவியலாது. ‘கன்னியாகுமரி முதல் கல்கத்தாவரை பரவப்போகும் பெருந்தீயை மூட்டவல்ல பந்தம் இன்றிரவு ஏற்றப்படவுள்ளது’ என்று எங்கள் பள்ளியின் சுதேச ஆசிரியர் ஒருவர் கூறினார். திரு. ஆஷ் அந்தத் தீப்பந்தத்தை அணைத்தார். . . அடுத்த நாள் காலை, முதல் வேலையாகத் தொண்டர் படை மற்றும் ரிசர்வு போலீசுக்குத் தலைமையேற்று வந்த திரு. ஆஷ் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோமா. . . என்பதைக் காண வந்தார்.

Tablet.jpgதிருநெல்வேலி எழுச்சி நாடு தழுவிய தலைப்புச் செய்தியாயிற்று. மாவட்ட கலெக்டர் விஞ்சு, இணை மாஜிஸ்திரேட் ஆஷ் பெயர்கள் இச்செய்திகளில் இடம்பெற்றன. கடும் கண்டனத்துக்கும் உள்ளாயின. எழுச்சி ஒடுக்கப்பட்டதும் அதில் கலந்துகொண்டவர்களை விசாரித்துத் தண்டிக்கும் படலம் தொடங்கியது. வ.உ.சி. மற்றும் தோழர்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கலானது. வ.உ.சிக்கு ஆதரவான ஆறு வக்கீல்கள்மீது நன்னடத்தை ஜாமீன் கேட்டார் ‘நடக்கையென்பதே நண்ணிடா’ ஆஷ். எழுச்சியில் பெருமளவு ஈடுபட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி நகர மக்களை ஒட்டு மொத்தமாகத் தண்டிப்பதற்காகத் தண்டக் காவல்படை அமர்த்தப்பட்டு வரியும் விதிக்கப் பட்டது.

தூத்துக்குடியைவிடத் திருநெல்வேலியில் அதிகச் சேதமும் உயிரழப்பும் ஏற்பட்டிருக்கையில் எப்படி ஆஷ் தன் உயிரை இழக்க வேண்டியதாயிற்று என்று கேட்டார் இராபர்ட். எழுச்சி ஒடுக்கப்பட்டு சுதேசிகள் நிலைகுலைந்திருந்த சூழலில், அலுவலக நேரம் முடிந்த பிறகு சுதேசிக் கப்பல் கம்பெனியின் அலுவலகத்தில் நுழைந்த ஆஷ், கம்பெனியின் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டுமாறு அங்கிருந்த கடைநிலை ஊழியரை மிரட்டியதாக வந்த ‘இந்து’ நாளிதழ்ச் செய்தியை இராபர்ட்டிடம் விவரித்த அதே நொடியில் என் கையில் ஒரு கடிதம் தட்டுப்பட்டது.

தூத்துக்குடி, 23 மார்ச் 1908

பெறல்
ஆர். ஆஷ் அவர்கள்

அன்பார்ந்த ஐயா,

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிட் பணித்தபடி அதன் கௌரவ சட்ட ஆலோசகராக இதை எழுதுகிறேன்.

சென்ற சனிக்கிழமை (21ஆம் தேதி) பின்மாலை டாக்டர் வான்லாங்கென்பெரியுடன் (சுதேசிக்) கம்பெனியின் அலுவலகத்திற்குத் தாங்கள் சென்று, கம்பெனிச் சட்டப்படி ஒரு ரூபாய்க் கட்டணத்தைக் கொடுத்துப் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டு மாறும், அவ்வாறு காட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும் கம்பெனி ஊழியரிடம் தாங்கள் கூறியதாக நிர்வாக இயக்குநர்கள் அறிய வருகிறார்கள். தங்கள் நோக்கம் அலுவல்பூர்வமானதா அல்லவா என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் கம்பெனி ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சி அச்சமளிக்கின்றது. பதிவேட்டைப் பார்வையிட வேண்டுமென்று எழுதித்தெரிவித்திருந்தால் அலுவலக நேரத்தில் எந்தச் சமயத்திலும் மகிழ்ச்சியுடன் கம்பெனி அதிகாரிகள் தங்களை வரவேற்றிருப்பார்கள். சென்ற சனிக்கிழமையன்று, பதிவேட்டுக்குப் பொறுப்பான குமாஸ்தா அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் தங்கள் வருகைக்கு முன்னரே சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் பங்குதாரர்களல்லாதவர்களும் அலுவலக நேரத்தில் பதிவேட்டைப் பார்வையிடுவதற்குக் கம்பெனி எப்போதும் தயாராக உள்ளது.

தங்கள் உண்மையுள்ள,
கே.ஆர். குருசாமி அய்யர்,
வக்கீல்

எனவே பொதுப்புத்தியில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி ஆஷின் பெயரோடு இணைந்திருந்ததில் எந்த வியப்புமில்லை. இந்தச் சமயத்தில் கலெக்டர் விஞ்சு ஆஷுக்கு எழுதிய இரண்டு கடிதங்கள் இருவருமே சுதேசி இயக்கத்தையும் வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியையும் முறிப்பதில் வெள்ளை அதிகாரிகள் என்ற கடமையையும் மீறிக் காட்டிய தனிப்பட்ட வெறுப்பும் விரைவும் புலப்படுகின்றன.

திருநெல்வேலி, 19 மார்ச் 1908

அன்பார்ந்த ஆஷ்,

இப்பொழுதுதான் அட்கின்சனுக்கு (தலைமைச் செயலர்) எழுதி, நமது மூன்று நண்பர்களின் மீதும் (வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார்) இராஜ துரோக நடவடிக்கை எடுக்க அரசாங்க அனுமதி பெற்று அவர்கள் மூவரும் சிறையில் வசதியாக இருக்க வழிசெய்யும்வரையில் கோதாவரி மாவட்டத்தின் கலெக்டராக நீங்கள் அரசிதழில் அறிவிக்கப்பட்டாலும் காட்டன் தம் விடுப்பைத் தள்ளிப்போட முடியுமானால் உங்கள் இடமாற்றத்தை எதிர்க்க எனக்கு எந்தக் காரணமுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன் . . .

தங்களை என் தனிச்செயலாளராக அமர்த்திக்கொள்ள முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். நம்மிருவருக்கும் கடுமையான வேலைதான். எனக்கு நீங்கள் மிகச் சிறப்பாகத் துணைநின்றதற்கு நான் என்றுமே நன்றி பாராட்டுவேன் . . .

என்றும் உங்கள்,
எல்.எம். விஞ்சு

*

சென்னை, (நாளிடப்படாத கடிதம்; டிசம்பர் 1908 தொடக்கமாயிருக்கலாம்)

அன்பார்ந்த ஆஷ்,

நீங்கள் சாத்தூர் செல்லும் வழியில் இன்னொரு முறை உங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன். நீங்கள் சாத்தூருக்கு மாற்றப்படவுள்ளீர்கள் என்று மேதகு ஆளுநர் தம் மாவட்ட வருகையை முடித்துவிட்டுச் செல்வதற்கு முந்திய நாள் என்னிடம் கூறினார். இது இவ்வளவு விரைவில் நடந்திருக்குமெனத் தெரிந்திருந்தால் முன்பே தந்தி அனுப்பியிருப்பேன். ஆளுநரின் மாவட்ட வருகை நன்றாக நடந்தேறியது . . . நான் விடைபெற்றபோதே (மாவட்டத்தின்) கௌரவமான பிரமுகர்களோடு சுமுகமான உறவுகள் மீட்கப்பட்டுவிட்டன. தண்டக் காவல் வரியான ரூ. 60,000த்தில் ரூ. 40,000 திருநெல்வேலி மக்களால் செலுத்தப்பட்டுவிட்டது. தூத்துக்குடியில் இப்பொழுதுதான் வசூல் தொடங்கியுள்ளது.

சுதேசிகளின் வளங்கள் முடியும் தறுவாயில் உள்ளது என்று அறிகிறேன். அவர்களுடைய நீராவிக் கப்பல் கொழும்பில் ஜப்தி செய்யப்பட்டுள்ளதென்றும் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் நாள் அதிகத் தொலைவில் இல்லை . . .

என்றும் உங்கள்,
எல்.எம். விஞ்சு

ஆஷுக்கு விஞ்சு எழுதிய இரண்டு கடிதங்களும் சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதில் அவருக்கு ஆஷ் உற்ற கையாளாக இருந்துள்ளதைக் காட்டுகிறது. வ.உ.சி. முதலான தலைவர்களை ‘நமது மூன்று நண்பர்கள்’ என்று குறிப்பிட்டு, அவர்கள் சிறையில் ‘வசதியாக’ இருக்க வேண்டும் என்று குரூர நகைச்சுவையுடன் விஞ்சு குறிப்பிடுகிறார். மேலும் சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப்போகவுள்ளதை ஆவலுடன் வரவேற்கத் தயாராக இருந்ததும் தெரிகிறது. வெள்ளை அரசுக்கு அறைகூவலாக அமைந்த சுதேசிய முயற்சியை ஒடுக்குவதில் அதிகாரிகள் என்ற கடமைக்கும் மேலாகத் தனிப்பட்ட, இனவாத வெறுப்புடன் விஞ்சும் ஆஷும் செயல்பட்டனர் என்பது இக்கடிதங்கள்வழி உறுதிப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து விடைபெறும்பொழுதுகூட விஞ்சு ஆஷுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆஷின் உடனடி மேலதிகாரி விஞ்சு அவரைப் பாராட்டியிருந்தபொழுதும், நெல்லை எழுச்சி நிகழ்ந்த ஒரே மாதத்தில் ஆஷ் கோதாவரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். 1908இன் இறுதியில் சாத்தூருக்கு வந்தார். மார்ச் 1910இலும், பிறகு ஆகஸ்டு 1910இலும் திருநெல்வேலி ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

இதற்கிடையில் மாவட்ட நிலைமைகள் மேலும் மோசமாயின. திருநெல்வேலி எழுச்சியின் காரணமாக நூறு பேருக்கு மேல் தண்டிக்கப்பட்டனர். 1908 ஜூலையில் அமர்வு நீதிபதி ஏ.எஃப். பின்ஹே வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்குப் பத்தாண்டுக் கடுங்காவல் தண்டனையும் விதித்தார்.

ஒருவகையில் ஆஷ் புரட்சிகரத் தீவிரவாதிகளின் முதல் இலக்கு அல்ல என்று சொல்லலாம். தூத்துக்குடியைவிடத் திருநெல்வேலியில்தான் அடக்குமுறையும் சேதமும் உயிர்ப் பலியும் அதிகம். எப்படியும் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் விஞ்சுதான் அனைத்திற்கும் பொறுப்பு. சமகாலப் பத்திரிகைகளும் விஞ்சையே கடுமையாக விமர்சித்தன. பாரதி தம் ‘இந்தியா’ இதழில் விஞ்சைக் கண்டித்துத்தான் இரண்டு கருத்துப்படங்களை வெளியிட்டான். வ.உ.சி.க்கும் விஞ்சுக்குமான சொற்போராகத்தான் தம் உணர்ச்சிமிகு பாடலை அமைத்தான். ‘லிபரல்’ பத்திரிகை விஞ்சுக்குப் பகிரங்கக் கடிதமே எழுதியது. ‘இந்து’மீது மானநஷ்ட வழக்குத் தொடரலாமா என்று விஞ்சு கருதும் அளவுக்கு அந்த நாளேடு அவரைக் கண்டித்திருந்தது. ஆஷ்மீதும் பத்திரிகை விமரிசனங்கள் எழுந்தாலும், விஞ்சுக்கு அடுத்தே அவர் கண்டிக்கப்பட்டிருந்தார்.

ஆஷ் சுடப்பட்ட பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத் தான் விஞ்சு அவருடைய மனைவிக்கு இரங்கல் கடிதம் எழுதினார். தான் எதிர்கொள்ள வேண்டிய துப்பாக்கிக் குண்டை ஆஷ் ஏற்றார் என்ற விஞ்சின் அடிமன ஓட்டமே இந்தத் தாமதத்திற்குக் காரணம் போலும்.

அன்புள்ள திருமதி ஆஷ்,

உங்களுடைய கடுமையான கையறுநிலையில் என் அனுதாபத்தை வழங்கும் எந்த முயற்சியும் எவ்வகையிலும் போதுமானதாக இராது என்ற உணர்வினாலேயே இதற்கு முன் உங்களுக்கு எழுதுவதற்குத் தயங்கினேன். . .

இக்கட்டானதொரு நேரத்தில் எப்படி ஒரு வலிய தூணாக எனக்கு ஆஷ் துணைநின்றார் என்பதையும், தம் கடமையை நிறைவேற்றுவதில் எவ்வளவு துணிவுடையவராக விளங்கினார் என்பதையும் என் அளவுக்கு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது . . .

ஆழ்ந்த அனுதாபத்துடன்,
எல்.எம். விஞ்சு

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

விஞ்சின் செயல்பாடுகளை முழுவதும் ஆதரித்த சென்னை அரசாங்கம் என்ன காரணம் பற்றியோ ஆஷ்மீது அதிருப்தியுற்றிருந்தது. ‘தூத்துக்குடியில் ஆஷின் செயல்களால் நமக்கு நன்மை விளையவில்லை’ (‘Ashe’s performance in Tuticorin had done us no good’) என்று கவர்னர் ஆர்தர் லாலி எழுதிய குறிப்பை ஆய்வாளர் நா. இராஜேந்திரன் மேற்கோள்காட்டியிருக்கிறார். ஆஷ் நினைவு மண்டபத் தொடக்கவிழாவில் நெல்லைக் கலெக்டர் மலோனியும் இதே பொருள்படப் பேசினார்

விஞ்சைப் போலவே பெரிதும் வெறுக்கப்பட்ட மற்றொரு வெள்ளையர், நீதிபதி பின்ஹே. வ.உ.சி.க்கு அவர் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை மார்லி பிரபுவால்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அதன் கடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

சுதேசி இயக்கத்தின் தலைமையகமாக விளங்கிய தூத்துக்குடியில் அதிகாரியாகப் பணியாற்றியதாலும், கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத் தொடர்புகொண்டவராகக் கருதப்பட்டதாலுமே ஆஷ் வெறுக்கப்பட்டார் எனலாம். ஊழ்வலிமீது ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுத்தருளும் பெருங்குணமும் ஒருங்கே பெற்ற சான்றோரான வ.உ.சி.கூடப் பின் வருமாறு எழுதும் நிலை இதனால் ஏற்பட்டது.

ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென் 
அரங்குள் யான்நன் குறங்குங் காலவண் 
செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென்
றறைந்த சத்தமொன் றனேக தடவை 
கேட்டு விழித்துப் பார்த்தேன். அரங்குமுன் 
சிறையின் ஜூனியர் சப்அஸிஸ் டெண்டு 
சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவி 
‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான். 
‘நன்றாகத் தெரியும்’ என்றேன். ‘எப்படி?’ 
என்றான். ‘யான் இவண் ஏகியதற்கும் 
தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் 
கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் 
அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘ஒருவன் 
அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் 
சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் 
செத்தான்’ என்றான். ‘நல்லதோர் செய்தி
நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன். 
உனக்கிவ் வருஷக் கரோஒ நேஷனில் 
விடுதலை இலையெனப் பகர்ந்தான். ‘விடுதலை 
என்றுமில் லெனினும் நன்றே’ என்றேன்.

இவ்வளவு இருந்தும் ஆஷ் பலியானதற்குத் தவறான இடத்தில் தவறான நேரத்தில் அவர் இருக்க நேர்ந்தது முக்கியக் காரணம் எனலாம். தமிழ்நாட்டில் புரட்சிகர பயங்கரவாத இயக்கம் முளைவிட்டு விரைவிலேயே நசுக்கப்பட்ட அக்குறுகிய காலகட்டத்தில் இந்தியாவில் விஞ்சும் இல்லை, பின்ஹேவும் இல்லை. விஞ்சு நீண்ட விடுப்பில் தாயகம் திரும்பியிருந்தார். பின்ஹே 1910இலேயே ஓய்வூதியம் பெற்று இளைப்பாறிவிட்டார்.

5

ஆஷ் கொலை பேரதிர்ச்சியோடு எதிர்கொள்ளப்பட்டது. அதுவரை மட்டுமல்ல அதன் பின்னரும் தென்னிந்தியா அறியாத ஒரு அரசியல் கொலையாக அது அமைந்தது.

கொலையாளியான வாஞ்சி ஒரு பிராமணர் என்பதைத் தமிழ்நாட்டு நடுத்தர பிராமண வர்க்கம் செரிக்க முடியவில்லை.

திருநெல்வேலி எழுச்சி ஒடுக்கப்பட்டு, வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றது மிதவாதிகளுக்கும், அரசைக் கண்டு அஞ்சிய நடுத்தர வர்க்கத்திற்கும் ஏற்கெனவே காய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆஷ் கொலையால் மேலும் உதறல் ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் ஆஷ் அடக்கம் செய்யப்பட்டபோது சிங்கம்பட்டி ஜமீன்தாரும் கே.ஆர். குருசாமி அய்யரும் சவப்பெட்டியைத் தோளில் சுமந்தனர்.

திருநெல்வேலி விளையாட்டுச் சங்கம் ஆஷ் பெயரில் ஒரு வெள்ளிக் கோப்பையை நிறுவியது. பாளையங் கோட்டை வாய்பேசாதோர் காது கேளாதோர் பள்ளியில் ஒரு புதுக் கட்டடத்திற்கு ஆஷ் பெயர் சூட்டப்பட்டது.

மூன்று நினைவுச் சின்னங்கள் திட்டமிடப்பட்டு, நிறுவப்பட்டன. ஆஷ் அடக்கம் செய்யப்பட்ட பாளையங்கோட்டையில் அவருடைய சக அலுவலர்கள் ஒரு கல்லறைக் கல்லை அமைத்தனர்.

Sacred to the memory
of
Robert William D’Escourt Ashe
member of the Indian Civil Service
who after sixteen years
loyal & faithful service
fell by the hand of a political assassin
on the 17th June 1911 when acting as
Collector & District Magistrate, Tinnevelly
aged 38 years
this memorial erected by his brother
officers.

கல்லறையில் அமைந்த பதினொன்றரை அடி உயரமுள்ள கெல்டிக் சிலுவை வெள்ளை சிசிலியப் பளிங்கு கொண்டு டப்ளினில் வடிக்கப்பட்டதாகும். கல்லறைக் கல் கப்பலில் வரும் வழியில் சிதைந்துவிட்டது. காப்பீட்டாளரிடம் வாதாடி, மீண்டும் அதை வடிக்க வேண்டியதாயிற்று. இறந்தபின்னும் ஆஷிடம் விதி தன் விளையாட்டை நிறுத்தவில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக நான் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் (1995) இதற்குக் கூப்பிடு தொலைவில் தூய யோவான் கல்லூரி விடுதி அறையில் ஆஷ் கொலையைப் பாடம் எடுத்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

தூத்துக்குடி நகர்மன்றமும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை அமைக்கத் திட்டமிட்டது. கிரேட் காட்டன் சாலையின் கிழக்கு முனையில் எண்முனை மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. இதற்கு நன்கொடை அளித்தவர்கள் அனைவரும் (ஒருவர் நீங்கலாக) இந்தியர்களே. 38 நன்கொடையாளர்களில் சிலர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களாகவும் வ.உ.சி.க்கு எதிரானவழக்கில் அவருக்கு ஆதரவாகவும் சாட்சியமளித்தவர்களாவர்.

2 ஏப்ரல் 1912இல் கால்கோளிடப்பட்ட ஆஷ் நினைவு மண்டபம் 28 ஆகஸ்டு 1913இல் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஜே.சி. மலோனியால் திறந்துவைக்கப்பட்டது.

சென்னை ஜார்ஜ் கதீட்ரலிலும் ஒரு நினைவுக் கல்வெட்டுப் பதிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஆஷ் மண்டபத்தில் அவருடைய படம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது. 1947இல் அப்படம் அகற்றப்பட்டதாக ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். இங்கு வெளியிடப்படும் ஆஷ் படங்களே முதன் முறையாக அச்சேறுபவை எனலாம். ஆஷ் தலையில் சைத்தானின் கொம்புகளும் இரத்தம் வடியும் கோரைப்பற்களும் இல்லை. காலனிகளை அடித்து நொறுக்கும் ஏகாதிபத்திய வெள்ளை அரசு எனும் பேரியந்திரத்தின் ஒரு சிறு திருகாணி ஆஷ்.

6

மேரியும் நான்கு குழந்தைகளும் 1912 ஏப்ரல் அளவில் தாயகம் திரும்பினார். அரசாங்கம் கௌரவமானதொரு ஓய்வூதியத்தை ஆஷ் குடும்பத்திற்கு வழங்கியது.

Ashe-Tombstone-1912.jpgஉடல்நலக் குறைவின் காரணமாக இளமையிலேயே இறந்துவிடுவார் என்று கருதப்பட்ட மேரி, ஆஷ் மறைந்து 43 ஆண்டுகள் கழித்து மே 1954இல்தான் காலமானார். வாழ்க்கையின் எண்ணற்ற புதிர்களில் இதுவும் ஒன்று. மேரி மறுமணம் செய்துகொள்ளவில்லை. தம் கணவரின் பெயரையும் புகழையும் மறையாமல் காக்கும் கடமையில் கடைசிவரை அவர் வழுவவில்லை. இந்தியாவில் பிறந்திருந்தால் பதிவிரதை என்ற பெயர் கட்டாயம் அவருக்குக் கிடைத்திருக்கும். இராஜப்பிரதிநிதி முதல் ஆஷின் சக அலுவலர்கள், மிஷனரிமார்கள், சுதேசக் கனவான்கள், பிரமுகர்கள், முன்னாள் இரவலர்கள் என இரங்கல் கடிதம் விடுத்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு அச்சிட்ட நன்றிக் கடிதத்தை அனுப்பினார் மேரி. ஆஷ் பெயரைப் போற்றும்வகையில் பல தரும காரியங்களிலும் ஈடுபட்டார். ஆஷ் தொடர்பான ஆவணங்களையும் படங்களையும் சேகரித்துப் பேணினார். ஆஷின் இளமைக் காலக் கவிதை முயற்சிகளை ஒழுங்குபடுத்தி, டப்ளின் டிரினிட்டி கல்லூரிப் பேராசிரியரின் முகவுரையோடு நூலாக்கம் செய்ய முயன்றார். மேரியின் கோப்புகளில் ஒரு கையடக்க நாட்குறிப்பேடு உள்ளது. அதில் குறிக்கப்பட்டுள்ள முக்கிய நாட்களெல்லாம் ஆஷ் தொடர்புடையனவாக உள்ளன.

ஆஷ் இறந்த செய்தி அவருடைய குழந்தைகளை உலுக்கியது. மூத்த மகள் மொலி எழுதிய நெஞ்சுருக்கும் கடிதங்கள் கோப்பில் உள்ளன. ஆர்தர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து கர்னல் பதவி பெற்று 1947இல் தாயகம் திரும்பி ஜானெட்டை மணந்தார். தன் தந்தையின் உயிரைப் பலி வாங்கிய நாட்டிலேயே அவர் பணியாற்ற முற்பட்டது ஏன் என்று விளங்கவில்லை. இந்தியாவை அவர் மிகவும் நேசித்ததாகச் சொல்லும் இராபர்ட், இந்தியப் பிரிவினையின்பொழுது ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளுக்கு மவுண்ட்பேட்டனே முழுப்பொறுப்பு எனக் கூறுவாராம். ஓய்வுபெற்றபின் வட இந்தியாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்ற அவர், திருநெல்வேலிக்கோ மணியாச்சிக்கோ தங்களை ஏனோ அழைத்துச்செல்லவில்லை என்றும் இராபர்ட் கூறினார். கடைசி மகன் ஹெர்பர்ட் இரண்டாம் உலகப் போரில் சமரிட்டு மறைந்திருக்கிறார். ஆஷ் மகள்கள் இருவரின் அழகிய புகைப்படங்கள் குடும்ப ஆல்பத்தில் உள்ளன. இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கு மேரியே காரணம் என மருமகள் ஜானெட் குறிப்பால் உணர்த்தினார். தம் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துன்பியல் நிகழ்ச்சியை எவரும் மறக்கவிடாதவர் மேரி என்பது ஜானெட்டின் எண்ணம்.

7

ஆஷ் கொலையும் வாஞ்சிநாதனும் தமிழ் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தேசிய இயக்கத்தில் இது ஒரு மைல்கல் என்பதில் ஐயமில்லை. செங்கோட்டையில் வாஞ்சிக்கு நினைவுச் சின்னங்கள் விடுதலைக்குப் பின்னர் மெல்ல அமைக்கப்பட்டன.

மணியாச்சி சந்திப்புக்கு வாஞ்சி பெயரை இட வேண்டுமென 1980களில் ஒரு இயக்கமே நடந்தது. இதற்கு எதிராக, வாஞ்சியின் இந்து மதவாதச் சார்பை முன்வைத்துத் திராவிடர் கழகம் துண்டறிக்கைகளை வெளியிட்டு, ஆஷைப் பிற்படுத்தப்பட்டத் தாழ்த்தப்பட்ட, சாதியினரின் பாதுகாவலராக முன்வைத்தது. ஆஷ் கொலையின்பொழுது அயோத்திதாசர் வெளிப்படுத்திய பார்வையை இது பிரதிபலிக்கின்றது எனலாம். இந்தப் பின்னணியில்தான் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ (1986) நூலை எழுதினார். 1980களின் தொடக்கத்தில் ‘தினமணி கதி’ரில் ஆஷ் கொலை பற்றி இரண்டு தொடர்களை ரகமி எழுதினார்.

வெவ்வேறு கருத்தியல் போக்குகள் வாஞ்சியை வேறு வேறாக மதிப்பிட்டாலும், வாஞ்சியின் உயிர்த்தியாகம் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. தமிழ் வெகுசனப் பண்பாட்டில் பல கதைமாந்தர்கள் வாஞ்சிநாதன் பெயர் சூடி உள்ளனர். ‘வாஞ்சிநாதன்’ (2001) என்ற பெயரில் விஜயகாந்த் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

வரும் ஆண்டு ஆஷ் கொலையின் நூற்றாண்டாகும். அதையொட்டிப் பல நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். நூற்றாண்டின் பொழுது திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் மணியாச்சிக்கும் வர விரும்புவதாக இராபர்ட் கூறினார். ‘என்னையும் சுட்டுவிடமாட்டார்களே!’ என்றார் கண்ணைச் சிமிட்டியவாறே. கவலைப்படாதீர்கள். அப்படி ஏதேனும் நடந்தால் கட்டாயம் நினைவு மண்டபம் கட்டுவோம் என்றேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி

22 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு பேருந்தில் வரும்போது ஒரு குழு பேருந்தில் ஏறி ஒரு துண்டுப்பிரசுரத்தை எல்லாருக்கும்  அளித்தது. அது மணியாச்சி ரயில்நிலையத்தை வாஞ்சிநாதன் பேருக்கு மாற்றவேண்டும் என்று குமரி அனந்தன் முதலியோர் கோரிக்கை விடுக்க அதை மத்திய அரசு பரிசீலித்து வந்த காலகட்டம். அதற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் அது.

அதில் வாஞ்சியின் செயலின் நோக்கமென்ன என்று ஆராய்ந்திருந்தார்கள். தென்காசி அருகே உள்ள கடையம் அக்கிரஹாரத்தில் ஆஷ் துரை குதிரையில் செல்லும்போது ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பிரசவ வலியால் துடிப்பதைக் காண்கிறார். அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல அவர் முயன்றபோது அக்ரஹாரம் வழியாகச் செல்லக்கூடாது என பிராமணர்கள் தடுக்கிறார்கள். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வழி எடுத்து ஆஷ் துரை வளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.

 

இந்த ‘ அடாத செயலுக்கு’ பழிவாங்கவே வாஞ்சி ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார் என்று அந்த துண்டுபிரசுரம் சொன்னது. அவர் தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த கடிதத்தில் ஆங்கிலேயரை மிலேச்சர் என்றும் ஜார்ஜ் மன்னரை பஞ்சமன் அல்லது பறையன் என்றும் வசைபாடியிருந்தார் என்றும் அதில் இருந்தது.

 

எனக்கு அந்தப் புதிய கதை ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தப்பேருந்தில் என்னருகே இருந்தவர்கள் இருவர் உடனடியாக அதை ஆதரித்து இருந்தாலும் இருக்கும் என்று பேச ஆரம்பித்தது அதைவிட ஆச்சரியம் அளித்தது. அந்த புதிய கதைக்கு எந்த விதமான ஆதாரத்தையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் சாதிச்சார்பு உடனடியாக அந்த கதையை ஏற்க வைத்தது. அது பிராமணர் குடியிருப்பு அல்லாமல் தேவர் குடியிருப்பு என்றிருந்தால் தேவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டிருப்பார்கள்.

 

பின்னர் இந்தக்கதையை பல ஊடகங்களில் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவர் கூட ஒரு இடத்தில்கூட ஆதாரம் கேட்கவில்லை, அளிக்கவில்லை. ஏன், இந்தக்கதையின் நாயகனாகிய ஆஷ் துரையைப்பற்றிக்கூட ஒரு சித்திரம் உருவாக்கப்படவில்லை. அவரது மனிதாபிமானம் எத்தகையது என்பதற்காக ஒரு சிறிய சான்றுகூட உருவாக்கப்படவில்லை.

 

பின்னர் அந்தக் கதையின் மூலத்தை நானே கண்டேன். அயோத்திதாசப் பண்டிதர்தான் இந்தக் கதையைச் சொல்கிறார். நிகழ்ச்சி நடந்து ஒருமாதத்துக்குள் அவர் தன் இதழில் எழுதிய குறிப்பில் இதைச் சொல்கிறார். அப்போது அவர் கர்நாடகத்தில் கோலாரில் இருந்தார். அவருக்கு இங்கே நடக்கும் நிகழ்ச்சி ஏதும் தெரிய நியாயமில்லை.

 

ஒருவகை வன்மத்துடன் வெள்ளைய ஆட்சியை ஆதரிக்கும் போக்கை நாம் அயோத்திதாசரின் கட்டுரைகளில் காணலாம். அந்த வன்மத்துடன் தான் இந்தக் கதையையும் சொல்கிறார். இதையும் ஓரிரு வரிகளில் ‘இப்படிக் கேள்விப்பட்டேன்’ என்று சொல்கிறார். ஆஷ் மட்டுமல்ல எல்லா வெள்ளைக்காரர்களுமே மனிதாபிமானிகள், நல்லவர்கள் என்பதே அவரது கொள்கை. ஆஷ் துரை செய்த இந்த கருணைச்செயலை முன்பு அவர் பதிவுசெய்யவில்லை. கொலையை மாபெரும் பாதகமாகச் சித்தரித்து மொத்த புரட்சியாளர்களையும் கடுமையாக கண்டிக்கும்போது ஆஷ் துரை கொல்லப்பட்டமைக்கு இதுவே காரணம் என்கிறார்.

 

இந்தக்கதையை இதற்குப் பின்னரும் எவரும் நிரூபிக்க முற்படவில்லை. ஆனால் ஒரு உண்மைச்சம்பவம் போல திராவிடர் கழக பேச்சுகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சம்பவம் நடந்த இடம் மட்டும் கதைகளில் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை அன்றைய பாடப்புத்தக பாணியில் ‘ஜார்ஜ் பஞ்சமன்’ என்று வாஞ்சி சொல்கிறார், அதைத்தான் சாதியக்குறிப்பாக மாற்றிவிட்டார்கள்.

 

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய திருப்பம் ஒன்றுண்டு. அயோத்திதாசர் வாஞ்சியையும் பாரதியையும் கண்டிக்கும் அதே வேகத்துடன் அதே மாதிரியான உயர்சாதிவெறியராகத்தான் வ.உ.சிதம்பரம்பிள்ளையையும் சொல்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லாட்சி அளிக்கையில் அதைக் கவிழ்க்கும் முகமாக தீய நோக்குடன் கப்பல் வணிகத்தை ஆரம்பித்தார் வ.உ.சி என்று எழுதுகிறார். அதை கொடும் ராஜதுரோகம் என்று கண்டிக்கிறார்.ஆனால் வ.உ.சிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டபோது, அவர் பேரில் மாவட்டம் அமைந்தபோது, தி.கவினர் எவரும் அயோத்திதாசரை மேற்கோள் காட்டி அவரை பழித்து துண்டு பிரசுரங்கள் அச்சிடவில்லை.

 

ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதிய ஆஷ் துரை பற்றிய கட்டுரை[ http://www.kalachuvadu.com/issue-118/page12.asp]  ஆஷ் துரையின் ஆளுமை மற்றும் அக்காலச் சூழல் ஆகியவற்றை கூர்ந்து ஆராய்ந்து தெளிவான ஒரு சித்தரிப்பை அளிக்கிறது. திருநெல்வேலியில் நடந்த சுதந்திரப் புரட்சி என்பது அன்று திலகர் தலைமையில் இந்திய அளவில் உருவாகியிருந்த தீவிரவாதப்போக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முதிரா முயற்சி.

 

ஆனால் அது அந்த உணர்ச்சிகளை வளரவிடும் வாய்ப்பு கொண்டது. ஏனென்றால் நெல்லைக்கு அத்தகைய வரலாற்றுப்பின்புலம் உண்டு. கட்டபொம்மு நாயக்கர், பூலித்தேவன் போன்ற கிளர்ச்சிகள் மக்கள் நெஞ்சில் இருந்தன. போர்மறவர்களான தேவர்கள் நிறைந்த பூமி. தீவிரவாதிகள் பெரும் ஆள்பலத்தையும் ஆயுதபலத்தையும் திரட்டிவிட்டார்கள் என்று உளவுச்செய்திகள் இருந்தன

 

அதனால் அஞ்சிய பிரிட்டிஷ் அரசு பெரும் பலத்துடன் அந்த தொடக்கத்தை முளையிலேயே கிள்ளியது. அந்த அடக்குமுறைக்கு முன்னின்ற அதிகாரிகளில் விஞ்ச் துரையும் ஆஷ் துரையும் முக்கியமானவர்கள். விஞ்ச் துரை தான் முக்கியமான இலக்காக இருந்தார், ஆனால் அவர் முன்னதாகவே நெல்லையைவிட்டுச் சென்றுவிட்டார். ஆஷ் துரை கொல்லப்பட்டார். ஆஷ் கொல்லப்பட்டது ஒரு தற்செயல்தான். தீவிரவாதிகள் ஒரு எச்சரிக்கை கொடுக்க நினைத்தார்கள், ஆஷ்தான் இருந்தார்.

 

நெல்லைக்கிளர்ச்சி உண்மையில் பெரிய ஒரு இலட்சியக்கனவுடன் ஆரம்பிக்கப்பட்டது.  வாஞ்சியின் கடிதத்திலேயே அந்த கனவு இருக்கிறது, ‘ஆயிரக்கணக்கானவர்கள் பிரதிக்கினை எடுத்திருக்கிறோம்’ என்று அவர் உண்மையிலேயே நம்பியிருக்கலாம். ஆனால் அது நடைமுறை ஞானம் இல்லாதவர்களின் கத்துக்குட்டித்தனமான முயற்சியாகவே இருந்தது.

 

ஆஷ் கொலை என்பது வெறும்கனவாகப்போன அந்த தீவிரவாதக் கிளர்ச்சியின் கடைசி துள்ளல். மிகவும் பலவீனமானது, அபத்தமானது. அந்தக்கொலைக்குப் பின்னர் ஆங்கில ஆட்சி தொடர்ந்த அடக்குமுறைகளின் விளைவாக 1947ல்  இந்திய சுதந்திரம் கிடைக்கும் வரை நெல்லையில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. அதுதான் வாஞ்சி உருவாக்கிய விளைவு.

 

ஆஷ் பிரிட்டனின் ஒரு எளிய அதிகாரி. அன்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இந்தியர்களைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருப்பாரோ அந்த எண்ணமே அவருக்கும் இருந்திருக்கும். அன்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி என்ன செய்தாரோ அதையே அவரும் செய்திருப்பார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு அடிப்படை அலகு, அவ்வளவுதான். அதற்காக அவர் கொலையுண்டதென்பது ஒரு அநீதியே.

 

இந்தியாவில் எந்த பிரிட்டிஷ் அதிகாரியும் மனிதாபிமானம் கொண்டு இந்தியாவின் சாதிசமூக அமைப்புக்குள் தலையிட்டதாகவோ மாற்றங்களைச் செய்ததாகவோ சரித்திரம் இல்லை. சட்டம் ஒழுங்கு, வரிவசூல் இரண்டுக்கும் பாளையக்காரர்களையும் ஜமீன்தார்களையும் குறுநில மன்னர்களையும் நம்பியிருந்தார்கள் அவர்கள். அவர்கள் செய்த எல்லா சாதியக் கொடுமைகளையும் அவர்கள் மறைமுகமாக அங்கீகரிக்கவே செய்தார்கள்.

 

ஆஷ் துரையின் வேர்களை தேடிச்செல்லும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவரை  கடுமையான ஏகாதிபத்தியக் கொள்கை கொண்டவராகவும் அதே சமயம் எளிய தனிமனிதராகவும் அடையாளம் காண்கிறார். ஆஷ் துரையின் முகம் கடந்த காலத்தின் எத்தனையோ முகங்களைப்போல வரலாற்றின் கறைபடியாததாக உள்ளது.

 

அசலான ஆய்வுகள் அருகி வரும் சூழலில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் இந்த தேடலும் ஆய்வும் மிக மிக பாராட்டத்தக்கது. ஆதாரபூர்வமான உண்மைச்சித்திரம் ஒன்றை அளித்துவிட்டு முடிக்கும்போது அயோத்திதாசரின் கதையையும் திராவிடகழக இயக்கத்தின் பிரச்சாரத்தையும் மெல்ல மறுத்து, செல்லமாகத் தொட்டுச் செல்கிறார்.  இதுவே ஒரு ‘பார்ப்பன திரிபாக’ இருந்திருந்தால் திராவிட இயக்க ஆதரவாளரான வேங்கடாசலபதியின் மொழி எந்த அளவுக்கு கூர்மை கொண்டிருக்கும் என எண்ணிக்கொண்டேன்

http://www.kalachuvadu.com/issue-118/page12.asp



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு
Permalink  
 


மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

நல்ல ஆய்வை [வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி]  சுட்டி இருக்கிறீர்கள், நன்றி!

வாஞ்சி மற்றும் ஆஷைப் பற்றி சில மாதங்களுக்கு நான் எழுதிய ஒரு பதிவில் -http://koottanchoru.wordpress.com/2009/03/17/வாஞ்சிநாதன்-ஜாதி-வெறியரா/
– அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டதை எழுதி
இருந்தேன். வாஞ்சியின் மத சார்புக்கான ஆதாரங்கள் இந்த புத்தகத்தில்
இருக்கிறதாமே? இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர்
கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. நீங்கள்
படித்திருக்கிறீர்களா?

மேலும் வாஞ்சிநாதன் மனைவிக்கு தி.மு.க. காலத்தில் வாஞ்சிநாதனுக்கு உரிமை
உள்ள பென்ஷன் கொடுக்கப்பட்டதை  எதிர்த்து தி.க.காரர்கள் போராடினார்களாம்.
அதற்கு முன்னாள் இருந்த ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் அரசுகளில் என்
கொடுக்கப்படவில்லை என்று உடனே கேள்வி எழுகிறது. உங்களுக்கு ஏதாவது
தெரியுமா?

காந்தியும் தலித் அரசியலும் மிக அருமையாக இருந்தது. ஒரே ஒரு குறைதான்.
அதற்குள் முடித்துவிட்டீர்களே!

அன்புடன்,
ஆர்வி

 

மாற்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியை சேர்ந்த ஏசு சபை பாதிரியார். இவர் நாவலாசிரியரும்கூட.  இவரை நான் ஒருமுறை  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சந்தித்திருக்கிறேன். உண்மையான மனிதாபிமானமும் ஏழைகளின்பால் கனிவும் கொண்ட மனிதர் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவர் பலகாலமாக பகடைகள் அல்லது சக்கிலியர் நடுவே மதப்பிரச்சாரப்பணி செய்துவருகிறார். அந்த செயல்பாட்டின் விளைவாக அவர் எழுதிய நூல்தான் ‘அருந்ததியர் வாழும் வரலாறு’

இந்த நூலை நீங்கள் முனைவர் கரசூர் பத்மாவதி எழுதிய ‘நரிக்குறவர் இனவரைவியல்’ [தமிழினி] என்ற நூலுடன் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். முனைவர் பத்மாவதி நெடுங்காலமாக நரிக்குறவர்களுடன் வாழ்ந்து அவர்களை கூர்ந்து அவதானித்து எழுதிய நூல் இது. இதில் அவர் தன்னை ஒரு ஆய்வாளராக, சகமனிதராக மட்டுமே நரிக்குறவர்கள் முன் வைத்துக்கொள்கிறார். இந்த நட்பான பார்வை அவருக்கு அவர்களை துல்லியமாக சித்தரிக்க உதவுகிறது.

பத்மாவதியில் நூலில் நரிக்குறவர்களைப் பற்றிய கருத்துருவாக்க முயற்சி ஏதும் இல்லை. அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய தகவல்கள் முறையாக தொகுத்தளிக்கப்படுகின்றன. சரிபார்க்கப்படாத தகவல்கள், மையப்பொருளுக்குத் தேவையில்லாத தகவல்கள், ஆசிரியரின் அபிப்பிராயங்கள் அல்லது விமரிசனங்கள் எதுவும் இந்நூலில் இல்லை. அதன் மொழியும் மிக நிதானமாக கறாராக உள்ளது. மானுடவியலின் ஆய்வு முறைமை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ள இந்நூல் அம்மக்களைப் பற்றி அறிவதற்கான சரியான கையேடு.

முனைவர் பத்மாவதியின் நூல்தான் இந்த நூற்றாண்டில் மானுடவியல் என்னும் அறிவுத்துறை  உருவாக்கிக்கொண்டுள்ள அளவுகோல்களின்படி ஓர் ஆய்வாளனால் பொருட்படுத்தத் தக்கது. முதல்நிலை ஆதாரமாகக் கொள்ளத்தக்கது.  ஆனால் மாற்குவின் நூல் அப்படி அல்ல என எளிதில் உணரலாம்.

மாற்கு தன்னை பகடைகளை விட மேலான ஓர் இடத்தில் மீட்கப்பட்ட நாகரீக மனிதனாக, ஞானம் பெற்றவனாக, உருவகித்துக்கொண்டு அம்மக்களை குனிந்து நோக்கி எழுதுகிறார். நட்பான சகமனிதனின் நிலைக்குப் பதிலாக அவர்களை அறியாமை மற்றும் இழிவிலிருந்து மீட்க விரும்புகிறவரின் தொனி அவரிடம் இருக்கிறது. அது அவரது மதநம்பிக்கை அவருக்கு அளித்தது.

ஆகவே அந்நூல் சக்கிலியரைப்பற்றிய மாற்குவின் அபிப்பிராயங்களின் தொகுப்பு மட்டுமே. அவரது அபிப்பிராயங்களை உருவாக்கும் தகவல்களுக்கு மட்டுமே அங்கே இடமிருக்கிறது. அவர்களின் பண்பாடு பாரம்பரியம் போன்றவற்றை பற்றிய அவர்களின் கதைகளும் நம்பிக்கைகளும் அவநம்பிக்கை கலந்த அலட்சியத்துடன் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.

தெலுங்கு பேசும் இம்மக்கள் தமிழகத்தின் நாயக்கர் ஆதிக்க காலத்தில் படைவீரர்களாக வந்தவர்கள். அதற்கு முன் விஜயநகரத்து ராணுவத்தில் இவர்கள் படைவீரர்களாக இருந்தார்கள்.  குறைந்தது நாநூறு ஆண்டு வரலாறு இவர்களுக்கு உண்டு. அவர்களின் வரலாற்றைப்பற்றி இந்த நூலில் தகவல்களைத் தேடினால் ஏமாந்து போவீர்கள். அம்மக்கள் வாய்மொழியாக தங்கள் வரலாற்றைப் பேணுபவர்கள், தொடர்ந்து முன்வைப்பவர்கள். ஆனால் அவர்களை வரலாறற்றவர்களாக ஆக்கவே மாற்குவின் நூல் முயல்கிறது.

தமிழகத்தில் மிஷனரிகளால் மதம் மாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலும் அனைத்து சமூகங்களும் அதற்கு முந்தைய வரலாற்றை இழந்திருக்கின்றன, சிறந்த உதாரணம் பரதவர்கள். மாற்குவின் நூலில் அந்த மனநிலை இயல்பாகவே வெளிப்படுகிறது.

இந்நூலுடன் ஒப்பிட்டு வாசிக்கப்படவேண்டிய ஆய்வேடு நாமக்கல் மாணவரான மு.நடராஜன் பெரியார் பல்கலைக்காக எழுதிய  ‘தொட்டிய நாயக்கர் குலதெய்வ வழிபாடு’. இதில் பகடைகளின் வரலாற்றுப்பின்புலம் குறித்த விரிவான ஒரு சித்திரம் உள்ளது. ஆனால் ஆய்வேடு தொட்டிய நாயக்கர்களைப் பற்றியது. தமிழகத்துக்கு வந்த நாயக்கர்களின் விரிவான இனவரைவியலை பகடைகளின் வரலாறு இல்லாமல் எழுதமுடியாது. ஆய்வுநோக்குள்ள ஒரு மாணவரால் அந்த வரலாற்றை விட்டுவிட முடியாது.

மாற்கு எழுதிய இந்நூல் கால்டுவெல் எழுதிய ‘சாணார் வரலாறு’ நூலுக்கு சமானமானது. நாடார்களை வரலாறற்ற, பண்பாடற்ற, பிறப்பிலேயே இழிவாக்கப்பட்ட, அரைப்பழங்குடிகளாகச் சித்தரிக்கும் இந்த நூலுக்கு கடுமையான எதிர்ப்பு கால்டுவெல் இருந்தபோதே அதன் இரண்டாம் பதிப்பு பரவலாக வந்தபோது எழுந்தது. அதன்பின் இது குறைவாகவே அச்சிடப்பட்டிருக்கிறது. கால்டுவெல்லின் நூல் கொஞ்சம் நேரடியானது, மாற்குவின் நூல் உண்மையான மானுடநேயத்தினால் மூடப்பட்டது

உலகம் முழுக்க மானுடவியலில் இவ்விரு வகையான எழுத்துமுறைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, நியூகினியா, நியூசிலாந்து முதல் அமெரிக்கக் கண்டங்கள் வரையிலான பழங்குடிகளைப் பற்றிய ஆரம்பகாலப் பதிவுகள் பெரும்பாலும் மிஷனரிகளால் எழுதப்பட்டவை. அவை அம்மக்களை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு கோணத்தில் மட்டுமே சித்தரிக்கின்றன. ஆகவே இன்றைய மானுடவியலாளர் அவற்றை முதல்நிலை ஆதாரமாகக் கொள்வதில்லை. மிகுந்த எச்சரிக்கையுடனேயே அவற்றில் உள்ள தரவுகளை கையாள்கிறார்கள்.

கால்டுவெல் முதல்  மாற்கு வரையிலான ஆராய்ச்சிகளை அத்தகைய மிஷனரி வரலாற்றை சார்ந்தவை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். முனைவர்.பத்மாவதி ,  மு.நடராஜன் போன்றவர்களின் ஆய்வையே மானுடவியல் ஆய்வுக்கான மதிப்பை அளித்து முதலிநிலை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்

மிஷனரி ஆய்வாளர்களின் அடிப்படை நோக்கமே அவர்களின் மனநிலையையும் அவர்களின் கோணத்தையும் தீர்மானிக்கிறது. அவர்களைப்பொறுத்தவரை அவர்கள் மெய்ஞானம் பெற்றவர்கள், மீட்கப்பட்டவர்கள். மறுதரப்பில் அவர்கள் எதிர்கொள்ளும் மக்கள் ஞானம் இல்லாதவர்கள், மீட்கப்படாதவர்கள். அவர்களை மீட்பதையும் அவர்களுக்கு தங்கள் மெய்ஞானத்தை அளிப்பதையும்தான் தங்கள் புனித கடமையாக நினைத்து அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் அம்மக்கள் நடுவே செல்வதும் அவர்களை ஆராய்வதும் அதற்காகவே.

ஆகவே அந்த மக்களின் பிணிகளை நீக்கவும், அவர்களுக்குக் கல்வி அளிக்கவும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடவும் அவர்கள் முயல்கிறார்கள். அதன்பொருட்டு அவர்கள் உயிரிழக்கவும் துணிகிறார்கள். அந்த மாபெரும் மானுடநேயத்தை நாம் பார்க்கிற அதே நேரத்தில் அந்த மக்களின் பாரம்பரியத்தை இழிவாக அவர்கள் எண்ணுவதையும் காண்கிறோம். அப்படி இழிவாக  எண்ணாவிட்டால் அவர்களை மீட்கும்பொருட்டு அந்தப் பணியை அவர்களால் ஆற்ற முடியாதென்பதே அதற்கான காரணமாகும்

மாற்குவின் நூலுக்கு வருகிறேன். அந்நூலில் ஏராளமான தகவல்கள் ‘சொன்னார்கள்’ என்ற அளவிலேயே உள்ளன. மாற்குவின் இந்து இந்தியப் பாரம்பரிய எதிர்ப்பு, உயர்சாதி எதிர்ப்புபாகியவற்ரை ஆதரிக்கும் எந்தத் தகவலையும் அவர் மேற்கொண்டு விசாரிக்காமல் அப்படியே ஒரு தரவாக பதிவுசெய்து விடுகிறார். அப்படி அவர் அளிக்கும் ஒரு ‘சொன்னார்கள்’ தகவல்தான் வாஞ்சிநாதனின் சாதிவெறி பற்றிய தகவல். அதில் பிரிட்டிஷ்காரர் ஒருவர், அவர் கிறித்தவர், மீட்பராகக் காட்டப்படுகிறார் என்பது மட்டுமே அதற்குக் காரணம்.

அப்படி அவர் ‘பதிவு’செய்வது அயோத்திதாசர் நூலில் இருந்து திராவிடர் கழகம் எடுத்து துண்டுபிரசுரமாக வெளியிட்ட அதே மொத்தையான தகவல்தான். மேலதிக ஆதாரம் ஏதும் இல்லை.  இந்த ‘ஆய்வுகள்’ வேடிக்கையானவை. முதலில் ஒருவர் ஒரு கதையை உருவாக்குகிறார். அதை ஒருநூலில் எழுதினால் அந்தக்கதை நூறு நூல்களில் மேற்கோள் காட்டப்படும். ஒரு நூல் இன்னொரு நூலை மேற்கோள்காட்டினாலேயே அந்த கருத்து ஆதாரபூர்வமானதாக ஆகிவிடும்!

ஆஷ் துரையின் கொலை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு செயல். அந்த எதிர்ப்புணர்வை மழுங்கடிக்க பிரிட்டிஷ் தரப்பிலிருந்தும் முயற்சிசெய்யப்பட்டிருக்கலாம். ஆஷ் ஒரு நியாயவான் என்று காட்டும் கதையின் ஊற்றுமுகம் அதுவாகவே இருக்கும். ஏன் என்றால் திருநெல்வேலியின் அப்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவ்வாறு சாதிய ஒழிப்பு , சமூக சீர்திருத்தம் என எதுவுமே செய்யப்பட்டதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமான, சாதிவெறியர்களான, ஜமீந்தார்களின் ஆட்சி அப்போது நிலவியது. வெள்ளையர்கள் அவர்களுக்குமேல் தங்கள் நிதிவசூல் அதிகாரத்தை மட்டுமே செலுத்தி வந்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பிரிட்டிஷ் அரசு இந்திய உற்பத்திமுறைகளில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று சாதிய அடக்குமூறை அமைப்பை எவ்வகையிலும் கலைக்க மனமில்லாமல் இருந்தது. அந்த மனநிலைக்கு எதிராக மீண்டும் மீண்டும் மிஷனரிகள் போராடுவதை நாம் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மதம் மாறிய தாழ்ந்த சாதியினருக்கு மட்டுமாவது சாதிய அடிமைக்கடமைகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி பாதிரிமார்கள் கோரிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷாருக்கு இந்தியர்களில் சாதிவேறுபாடு இல்லை, ஆகவே அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார்கள்.  கிறித்தவ சபைகள் மிகச்சிறிய அளவில் அவர்கள் தலித்துக்களை மதம் மாற்றியதைவிட்டால் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்களின் கவனம் எல்லாமே நாடார் சாதியைச் சார்ந்தே இருந்தது. தலித்துக்களை மதம் மாற்றினால் நாடார்கள் வராமல் போய்விடுவார்கள் என்ற அச்சமும் நிலவியது.

நெல்லையில் சாதிய அமைப்புக்கு எதிரான முதல் சலனம் என்பது காந்தியின் ஹரிஜன இயக்கம் மூலமே நிகழ்ந்தது. திருச்செந்தூர் ஆலயப்பிரவேசம் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஹரிஜன மக்களின் உரிமைகள் அப்போதுதான் முதல்முறையாகப் பேசப்பட்டன.ஆனால் நெல்லையில் காங்கிரஸ¤ம் சுதந்திரப்போராட்டமும் பிறபகுதிகளில் நடந்த அளவு தீவிரம் பெறவில்லை. ஆகவே மற்ற இடங்களில் நடந்த மாற்றங்கள் அங்கே நடக்கவில்லை

நெல்லை மிகவிரைவிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியலுக்கு திராவிட இயக்கங்கள் வழியாகச் சென்று சேர்ந்தது. ஆகவே காங்கிரஸின் ஹரிஜன இயக்கத்தால் தொடங்கப்பட்ட சமத்துவக்கோரிக்கை ஒருசில வருடங்களில் அப்படியே அடக்கப்பட்டது.  தமிழகத்தின் பிறபகுதிகளில் இல்லாத அளவுக்கு இங்கே தலித் ஒடுக்குமுறை நிலவியது. திராவிட இயக்கத்தின் தூண்களாக இருந்த, இருக்கும் பிற்படுத்தப்பட்டோர்தான் அதற்குக் காரணம்.

இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் கிறித்தவ மதத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களே இருந்தார்கள். அங்கும் உச்சகட்ட தலித் அடக்குமுறை நிலவியது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாதபடி கிறித்தவ தேவாலயங்களில் கூட நடுவே சுவர் கட்டி தாழ்த்தப்பட்டவர்களை தனியே விட்டு அவர்கள் தங்கள் கண்களிலேயே படாதபடி வழிபட்டனர் கிறித்தவர்கள். பின்னர் தனி தேவாலயங்களை அமைத்துக்கொண்டனர். [சாதிக்கு எதிராக ‘கொதித்தெழுந்த’ ஆஷ் துரை ஏன் கத்தோலிக்க தேவாலயங்களின் சுவரை இடிக்கச் சொல்லவில்லை என மாற்கு ஆராய்ந்து பார்க்கலாம். அல்லது பகடைப்பெண்ணை ஒரு தேவாலயத்துக்குள் கொண்டு வர அவர் முயன்றிருக்கலாமே] இந்த காரணத்தால்தான் இங்குள்ள தலித்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாற முடிவெடுத்தனர். மீனாட்சிபுரம் சம்பவங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம்.

பின்னர் 1980களில் தலித் இயக்கங்கள் உருவாகி வந்த பின்னர்தான் மீண்டும் சமத்துவத்துக்கான கோரிக்கைகள் உருவாகி வந்தன. அவை மிகமிகக் கடுமையாக பிற்படுத்தப்பட்ட சாதியினரால் எதிர்கொள்ளப்பட்டன. விளைவாக எண்பதுகள் முதல் இருபதுவருடம் தொடர்ச்சியான சாதிக்கலவரங்கள் இப்பகுதியில் நடந்தன. இப்போது தலித் இயக்கங்களும் வலுவாகவே வேரூன்றிவிட்டிருப்பதனால் அதிகாரச் சமநிலை உருவாகிவிட்டிருக்கிறது. தலித்துக்கள் ஆட்சியதிகாரத்தில் தங்கள் பங்குக்காக குரலெழுப்புகிறார்கள்.

இதிலும் நுட்பமான உட்சிக்கல் உள்ளது. இங்கே தலித்துக்களில் பெரும்பாலானவர்கள் மள்ளர்கள் அல்லது தேவேந்திரகுல வேளாளர்கள். இவர்களே தலித் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இவர்களின் கண்ணில் பகடைகள் கீழ்த்தளத்தில்தான் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் பலன் பகடைகளுக்கு வருவதில்லை. ஆகவே சமீபகாலமாக அவர்கள் உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி வலுவாக முன்னெடுக்கிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் புதிய தமிழகம் அதை எதிர்க்கிறது

இதுதான் சூழல். இந்த அதிகாரச்சமரில்  உயர்சாதி என்றொரு தரப்பே இல்லை. செயற்கையாக அதை உருவாக்க முயலும் ஓர் அரசியல் உத்தியே மாற்கு போன்ற மிஷனரிகளும் திராவிடர் கழகத்தினரும் வாஞ்சி எதிர்ப்பு வழியாக செய்வது. அது தங்கள் சாதிய நோக்குகளை, ஆதிக்க நோக்குகளை மறைத்துக்கொள்ளும் தந்திரம் அன்றி வேறல்ல



-- Edited by Admin on Saturday 18th of April 2015 02:48:42 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard