New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவத்தைப் பேணிய அம்மை - சு.கோதண்டராமன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சைவத்தைப் பேணிய அம்மை - சு.கோதண்டராமன்
Permalink  
 


சைவத்தைப் பேணிய அம்மை -1

 

‘இவள் நம்மைப் பேணும் அம்மை’ என்று சிவன் உரைத்ததாகச் சேக்கிழார் கூறுவது உபசார வழக்கு. உண்மையில் காரைக்கால் அம்மையார் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அம்மையார் தோன்றி இராவிட்டால் சமணமும் சாக்கியமும் தமிழ்நாட்டில் கோலோச்சி இருக்கும்.

வெளிநாடுகளில் புத்த சமயம் தாழ்ச்சியுற்ற வடிவத்தில் இன்று பின்பற்றப்படுவது போலத் தமிழ்நாட்டிலும் சமணம் சாக்கியம் என்ற சமயங்களின் பெயரை வைத்துக் கொண்டு மனம் போன வாக்கில் வாழும் ஒரு ஒழுங்கு முறை அற்ற சமுதாயம் ஏற்பட்டிருக்கும். அந்த அவக்கேட்டிலிருந்து தமிழ் நாட்டை மீட்டவர் அம்மையார். அப்பர் முதலானோர் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் சென்றார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார்.

சங்க காலத்தில் பல வகை நிலங்களிலும் வெவ்வேறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ஒரு வகை நிலத்து மனிதர் மற்றொரு வகை நிலத்தில் குடியேறாத காலம் அது. மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்ட பிறகு தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார்.

தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் வேதத்தைச் சார்ந்திருந்தார். வேதம் இந்திரன் வருணன் முதலான பல வேறு தெய்வங்களைப் போற்றுகிறது. ஆனால் வேதத்தின் மெய்பொருள் உணர்ந்தோரே,“ஒன்றுளதுண்மை, ஓதுவர் அறிஞர் பலவிதமாய்” (ரிக் 1.164.46) என்ற அதன் உயிர் நாடியை அறிவர். அம்மையார் வேதம் ஓதுதலைக் கடமையாகக் கொண்ட அந்தணர் மரபில் பிறக்கவில்லை, வேதத்தை அறிவு வழியில் ஆராய்ந்து உபநிடதங்கள் இயற்றிய அரச வம்சத்தில் தோன்றவில்லை.

வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறித் தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அவர்.

சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த சமயங்களின் வழிபாட்டிடங்களிலும் வழிபடுகிறார்கள் சைவர்களுக்கு இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார்.

சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் அம்மையார். இதுவே பிற்காலத்தில் பக்தி இயக்கமாக மாறியது. இது சைவத்தில் மட்டுமல்லாமல் பிற நாட்டுச் சமயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறைவன் எவ்வுருவினன், எத்தன்மையன் என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வையுங்கள், அவன் அஞ்சுதற்குரியன் அல்லன், தன் பெருமை தானறியா எளியவன். அவனுக்கே ஆட்பட்டவர்களாக இருங்கள். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் எதுவும் தேவை இல்லை. அவனிடம் அன்பு செலுத்துங்கள் போதும், உங்களுக்கு எதை வேண்டினாலும் தருவான் என்ற கருத்தைச் சொன்னவர் அவர்.

இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று உரக்க அறிவித்து அதுவரை மேல் மட்டத்தினருக்கு மட்டுமே உரிமையாக இருந்து வந்த சமயத்தை எளிமைப்படுத்திச் சாதாரண மக்களும் அதில் பங்கு கொள்ளுமாறு செய்தார்.

இவர் தோன்றியிராவிடில் சைவம் தனிப் பெரும் சமயமாக வளர்ந்திருக்க முடியாது என்பதனால் தான் மற்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படாத சிறப்பு உரிமை, ஆலயங்களில் இரு புறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க அமர்ந்திருக்கும் உரிமை இவருக்குக் கொடுக்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2.அம்மையாரின் குடும்பம்

காரைக்கால், பல வணிகர்களும் நெருங்கி வாழும் பதி என்கிறார் சேக்கிழார்.  சமண சாக்கிய சமயங்களை வணிகர்கள் தாம் ஆதரித்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  எனவே காரைக்கால் வாழ் வணிகர்களும் சமணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

தனதத்தன், நிதிபதி, பரமதத்தன், புனிதவதி என்ற வடமொழிப் பெயர்கள் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. சமஸ்கிருதம் தொல்காப்பியக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கி வந்த போதிலும் பொதுமக்கள் வழக்கில் அம்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்பட்டது சமணர் ஆதிக்கம் பெருகிய பின் தான்.  திரு ஞானசம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக உள்ளதையும், மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்மையார் பாடல்களில் சங்க காலத்தை விட மிகுதியான வடசொற்கள் (4 சதவீதம்) உள்ளன. சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயன், சிவகதி போன்ற கூட்டுச் சொற்கள் பயன்படுத்தப் படுவதிலிருந்தும், பிற்காலத்தில் ஆகாயம், தயை என்று தற்பவமாகப் பயன்பட்டது போல் அல்லாமல் ஆகாசம், தயா என்று தற்சமம் ஆளப் பட்டதிலிருந்தும் அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.

இவரது கணவன் முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவன் என்பது, அம்மையார் மாங்கனி வரவழைத்த போது அவன், ஈசன் அருள் எனக் கேட்டும் அது தெளியாது இருந்ததாலும், தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி அச்சமடைந்ததிலிருந்தும் அறிகிறோம்.  தொலைவில் பல சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்கள் அனைவருமே இந்தப் புதுமை கண்டு அஞ்சினார்களே அன்றி, இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.

சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக் கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்!

அண்மைக் காலத்தில், வேதக் கல்வி வழக்கொழிந்து போன வங்காளத்தில் அந்தணர் அல்லாத குடும்பத்தில் தோன்றிய விவேகானந்தர் மூலமாக வேதத்தின் பெருமை உலகளாவப் பரவியதை ஒப்பிடுக.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

3. இறைவனுக்கு அம்மையார் வழங்கும் பெயர்கள்

“அடிகள், அழகன், அந்தணன், அட்ட மூர்த்தி, அண்டத்தான், அண்டவாணன், அண்ணல், அப்பன், அம்மான், அமரர் பிரான், அரவப் புயங்கன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், உம்பர் கோன் தானத்தான், எந்தை, எம்மான், எரியாடி, கங்கை மணவாளன், கண்ணாளன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், சீராளன், செஞ்சடையான், செம்மேனிப் பேராளன், ஞானத்தான், தழல் வண்ணன், தன்னோடே ஒப்பான், நம்பன், நன்றுடையான், நனையாச் சடைமுடி, நுதற்கண்ணான், நெய்யாடி, பரமன், பிரான், புண்ணியன், பெரியான், பெருமான், மணிமிடற்றான், மாயன், மைத்தமர்ந்த கண்டத்தான், வானத்தான், வானோர் பெருமான், விண்ணோன், விமலன், வெண்ணீற்றன், வேதியன்” முதலிய பல பெயர்களைப் பயன்படுத்தி அம்மையார் இறைவனைப் போற்றுகிறார்.

ஆலமரத்தடியில் அமர்ந்த நிலையைக் குறிப்பிடும் பெயரையும், பிற்காலத்தில் பெருவழக்காகிய சிவன் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இறைவனின் தோற்றச் சிறப்புகள்

இறைவன் சிவந்த சடை உடையவன். அதில் பிறை நிலவையும் கொன்றை, எருக்கு, வன்னி மலர்களையும் சூடி இருக்கிறான். கங்கை ஆறும் அங்கே தங்கி உள்ளது. நெற்றியில் ஒரு கண்ணைப் பெற்றிருக்கிறான். அவனது மிடறு நஞ்சு உண்டதால் கறுத்துள்ளது. எட்டுத் தோள்களை உடையவன். தலையிலும் மார்பிலும் இடையிலும் பாம்புகளே அணிகலன். மார்பில் நூலும், ஏனக் கொம்பும், மண்டை ஓட்டு மாலையும், எலும்புகளும் அணிந்திருக்கிறான். உடல் பவளம் போல் சிவந்த மேனியாக உள்ளது. அதில் முழுவதும் நீறு அணிந்துள்ளான்.

அவனது இடது புறத்தில் நீலக்குழல் கொண்ட மலைமகள் பாகம் பிரியாதவளாக இருக்கிறாள். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறான். கையில் தீ ஏந்தி உள்ளான். ஆனேறு அவனது வாகனமாக உள்ளது. கால்களில் கழலும் சிலம்பும் அணிந்துள்ளான். வேறு பொன் அணிகள் அணியவில்லை. அவனது அடிகள் செந்தாமரை போல் உள்ளன. அவனது இருப்பிடம் சுடுகாடு. அங்கு அவன் பேய்க் கணங்களுடன் நடனமாடிக்கொண்டு இருக்கிறான்.  கையில் கபாலம் ஏந்தி ஊர் ஊராகப் பலி ஏற்றுத் திரிகிறான்.

 

திருமாலும் சிவனும்

தற்போது வழக்கில் இல்லாத, திருமால் பற்றிய, ஒரு கருத்தை அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒருபால் உலகளந்த மாலவனாம், மற்றை

ஒருபால் உமையவளாம்   (அற்புதத்திருவந்தாதி-41)

…………………………செங்கண்

திருமாலைப் பங்குடையான்    (அ-52)

ஓருருவாய் நின்னோடு உழிதருவான்- நீருருவ

மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய

பாகத்தான்      (அ-54)

…………………………………………………பெண்புணரும்

அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ

தெவ்வுருவோ-(அ-59)

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் (அ-3)

இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. ‘மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன்’ என்று சம்பந்தரும், ‘மாலோர் பாகம் திகழ்ந்தான்’ என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர். இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப்பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சிவனை விட மூத்தவர் திருமால். இவர்  தொல்காப்பியர் காலத்திலிருந்தே வணங்கப்பட்டு வந்தவர். புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் தொடர்புபடுத்தியிருக்கக் கூடும் என ஊகிக்கலாம்.

சங்க காலத்தின் முற்பகுதியில் தோன்றிய நூல்களில் சிவன் முருகனின் தந்தையாகக் கூறப்படவில்லை. பிற்பகுதியில் தோன்றிய ‘கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல்’ஆகியவற்றில் மட்டும் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை ஒப்பிடுக.

இறைவனின் செயல்களும் கோலங்களும்

முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, அரக்கன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராத வேடம் பூண்டது. அடி முடி தேடிய மால் அயனுக்கு அறிய முடியாதபடி நின்றது, காலனைக் காலால் உதைத்தது, காமனை எரித்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் நடனமாடியது என்று சிவனின் பல திருவிளையாடல்களையும் கோலங்களையும் அம்மையார் குறிப்பிடுகிறார்.

 

சிவனுடைய தோற்றத்தில் அம்மையார் குறிப்பிடாத பல அம்சங்கள் தேவாரக் காலத்தில் சேர்ந்து விட்டிருப்பதை அடுத்த பகுதியில் காண்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

4.

அம்மையாரின் பெம்மான் காலாலும் கண்ணாலுமே பகைவர்களை அழித்தவன். முப்புரம் எரிக்க அவனுக்குத் தேவைப்பட்டது ஓரம்பு தான். வில்லைக் கூட அவன் கையில் ஏந்தி இருக்கவில்லை. ஆனால் தேவாரக் காலத்தில் அவனிடம் சூலம், மழு ஆகிய ஆயுதங்கள் விளங்குவதைக் காண்கிறோம். பல பகைவர்களை வென்றதன் அடையாளமாகத் தேவாரக் காலத்தில் கொக்கிறகு, ஆமை ஓடு ஆகிய வெற்றிச் சின்னங்கள் அவனிடத்தே விளங்குகின்றன.

இறைவன் புலித்தோலும் மான் தோலும் அணிந்திருப்பதாக அம்மையார் சொல்ல, தேவாரக் காலத்தில் கோவணம் அணிந்தவனாகவும், நக்கனாகவும் கூறப்பட்டுள்ளான். கையில் மான் ஏந்தியவனாகவும் காணப்படுகிறான்.  பொன்னாரம் மற்றொன்று பூண் என்று அம்மையார் வேண்டியதற்கிணங்கப் பிற்காலத்தில் அவனிடத்தில் தோடு, குழை ஆகிய அணிகளும் விளங்குகின்றன.

அம்மையாரால் கூறப்படாத தக்கன் கதை தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பிரமன் தலையைச் சிவன் கொய்தது பற்றிய புராணக் கதையும் அம்மையாருக்குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும்.

சிவன் இராவணனை மலையின் கீழ் அடர்த்து பாதத் தனி விரலால் செற்றதாக அம்மையார் கூறுகிறார். ஆனால் கைலாயம் என்ற பெயரை ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடாததால், சிவனைக் கைலாயத்தில் உறைபவராகச் சொல்லும் வழக்கும் அம்மையார் காலத்துக்குப் பின்னரே தோன்றி இருக்கக் கூடும்.


தேவாரக் காலத்தில் இறைவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்க்கு அறம் உரைத்தது கூறப்படுகிறது. இதுவும் அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.

அம்மையாரின் இறைவன் உமை காண ஆடுகிறான். தேவாரக் காலத்தில் இறைவன் காளி காண ஆடுகிறான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

                                                 5. அம்மையாரின் அன்பு வழி

அம்மையாருக்கு இறைவன் மேல் அன்பு ஏற்பட்டது எப்பொழுது? பிறந்தது முதலே என்று அவர் கூறுகிறார். மழலை பேசத் தொடங்கியதிலிருந்தே இறைவனுக்கு நாமாலை சூட்டத் தொடங்கினார் அவர். ‘எனக்கே அருளாவாறு என்கொல்’ என்று உரிமையோடு சண்டைக்குப் போகிறார். ஆனால், “இறைவன் என் துன்பத்தைக் களையாமல் மீண்டும் பிறக்க வைத்தாலும் என் அன்பு அறாது, அவனல்லாத பிறர்க்கு ஆளாக மாட்டேன், எழுபிறப்பும் அவனுக்கே ஆளாவேன்” என்கிறார்.

இவ்வாறு, தான் அம்மானுக்கு ஆட்படக் கிடைத்த வாய்ப்பு, தன் தவப் பயனாய்க் கிடைத்தது என்றும் இது பெறற்கரிய பேறு என்றும் அவர் மகிழ்கிறார். “உன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன். உன்னை அன்பாலே போர்த்து நெஞ்சினுள் அடைத்து வைத்து விட்டேன். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. என் நெஞ்சம் நல்ல நெஞ்சம். தனக்கு நன்மை தருவது எது என்று அறிந்து கொண்டு விட்டது. அதனால் காலனையும் வென்றோம், கடுநரகம் கை கழன்றோம், பிறவிக் கடலை நீந்தி விட்டோம்” எனப் பெருமைப்படுகிறார். இந்தப் பெருமித உணர்ச்சி வளர்ந்து செருக்காகவே ஆகிவிட்டதாம். “எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இது கொலோ சிந்தையார்க்கு உள்ள செருக்கு” என்று தன் சிந்தையைப் பார்த்து வியக்கிறார்.

பாரதியின் உள்ளத்தில் இருந்த நந்தலாலா காக்கைச் சிறகினிலும் பார்க்கும் மரங்களிலும் தோற்றம் காட்டியதைப்போல, அம்மையாருக்கும் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் செஞ்சடைப் பெம்மானாகவே தோன்றுகிறது. கார் கால வெள்ளம் அவருக்குக் கங்காதரனை நினைவூட்டுகிறது. பூத்துச் சொரிகின்ற கொன்றை மரம் அவருக்குக் கொன்றை மாலை அணிந்த குழகனாகக் காட்சியளிக்கிறது. கிரகண வேளையில் நிலவையும் அதை விழுங்க வரும் பாம்பையும் பார்த்ததும் ஆகாயம் விண்ணோர் பிரானின் விரிசடையாகவே தோன்றுகிறது. மேகங்கள் கங்கையாறு போன்று தோன்றுகின்றன. காலை இளஞ் சூரியனின் செந்நிறத்தில் அவர் செம்மேனிப் பெம்மானைக் காண்கிறார். கடும்பகலின் வெய்யில் அவருக்கு வேத முதல்வனின் வெண்ணீறாகத் தெரிகிறது. மாலைச் சூரியனின் பொன்னிறம் சங்கரனின் சடையாகத் தெரிகிறது. இரவின் இருளோ கறைமிடற்றன் கண்டத்தை நினைவூட்டுகிறது.

அம்மையாரின் உறவினரும் சுற்றத்தாரும் அவருடைய இந்தப் பேய்த்தனமான பக்தியைப் பார்த்து குறை கூறினர் போலும். அவர்களைக் குறித்து, “இந்தப் பேய்க் கோலம் எனக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இறைவனிடம் ஆட்பட்ட அன்பு காரணமாக எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் தேவையானது எல்லாம் கிடைத்து விட்டதே. உங்கள் குறை கூறலால் எனக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை” என்கிறார்.

உலகியல் ஆசைகளை எல்லாம் துறந்து இறைவனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த அம்மையாருக்கும் ஒரு ஆசை இருக்கிறதாம். சாதாரண ஆசை அல்ல, பேராசை. ஈமப் பெருங்காட்டில் இறைவன் பேய்களோடு நடனமாடுவதை ஒரு நாள் காண வேண்டும் என்பது தான் அது. “இறைவனது பேயாய நற்கணத்தில் ஒன்றாக நான் இருந்து அவனுக்குக் கைப்பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும். அண்டம் பெறினும் வேண்டேன். பிறிது யாதும் வேண்ட மாட்டேன்” என்கிறார் அவர்.

அம்மையார் நமக்கு அளிக்கும் செய்தி என்ன?


“இறைவனை அடைவதற்கென்று ஒரு முறை உண்டு. அது இல்லாமல் அவனை நீ பெற முடியாது. அவன் புகழை ஓயாது உரை. மனைவி மக்களைச் தஞ்சமென்று எண்ணி அவனடி நினையாது அழிகின்றாய். சாவு வருமுன் நெய்யாடியின் திறம் கேட்டு உய்க. நீ கருதியது எல்லாம் உடனே நிறைவேறும். அவன் இரக்கம் காட்டிவிட்டால் எந்த உயர் நிலையிலும் வைப்பான், எவ்வுலகம் வேண்டுமானாலும் ஈந்தளிப்பான். அவனடியாரை வினைகள் தீண்டா, ஈசனது தொண்டர் பாதத்தைக் குறிக்கோளாகக் கொள்க. அவனடி நினையாதாரை விட்டு நீங்கு” என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

6.

வேத அடிப்படை

சமண சாக்கிய சமயங்களின் தாக்கம் அன்றைய தமிழகம் முழுவதும் நிறைந்திருந்தது. அவர்களது கொள்கைகளில் சிலவற்றை அக்கால மக்களி்ல் எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. அம்மையாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவரது கால்கள் வேதத்தில் நிலைபெற்றிருந்தன. அதனால் சமணக் கருத்துகளைச் சைவத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்.

பிறவியை ஒரு பிணி எனக் கூறிய சமணம், காமத்தைப் பெரும் பகையாகக் கருதியது. சிவன் தன் மனைவியைப் பிரியாமல் இருப்பது புறச்சமயத்தாரின் விமரிசனத்துக்கு இலக்கான பின் அதை முறியடிப்பதற்காகச் சிவன் காமனை எரித்தவர் என்ற ஒரு கதை ஏற்பட்டிருக்கலாம். இது அம்மையார் காலத்தில் அல்லது அவருக்கு முன்பே ஏற்பட்டிருக்கக் கூடும்.  இத்தகைய எதிர்வினை வைணவத்தில் ஏற்படாததையும், சமணத்தை முறியடிக்கும் பணியைச் சைவம் மட்டுமே மேற்கொண்டது என்பதையும் நோக்குக.

சமண சாக்கியங்கள் வலியுறுத்திய கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை. அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகத் தான், தான் மண்ணில் பிறக்க நேர்ந்தது என்று கருதிப் பல முறை வினை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். “சிவனை வணங்குபவரை வினை நெருங்காது, அவனது அடியாரின் நிழலைக் கண்டாலே ஓடிவிடும்” என்று கூறுகிறார் அவர்.

சாக்கிய சமணர்கள் கூறும் அறவழிகளையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற் கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார். அம்மானுக்கு ஆட்பட்ட அன்பின் காரணமாகத் தன்னிடம் புண்ணியங்களும் ஐந்து அறநெறிகளும் பொருந்தியதாகக் கூறுகிறார் அவர்.

இறைவனிடம் அவர் வைக்கும் ஒரே வேண்டுகோள், ‘இடர் தீர்ப்பாயாக’ என்பது தான். என்ன இடர்? அது செல்வமின்மையோ, உடல் நலமின்மையோ அல்ல, பிறவிப் பிணி தான். சமண சாக்கியர்கள் அறநெறி மூலம் பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று போதித்தனர். அம்மையாரோ இறைவன் ஒருவன் தான் அதைச் செய்ய முடியும் என்று நம்பியதால் அவர் அதை இறைவனிடம் வேண்டுகிறார்.

அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்திரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து, அதை மறவாமல் குறிப்பிடுகிறார் அம்மையார்.

அம்மையாரின் பாடல்கள் வானோர் பிரானின் புகழை மட்டும் பாடவில்லை, அக்காலச் சமண சாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவை விளங்கின. உண்மையில், சம்பந்தர் பாடல்கள் சமண சாக்கியர்களின் ஆடையின்றி இருத்தல், பாயினைக் கையில் ஏந்தித் திரிதல், கையில் உணவு பெற்று நின்ற நிலையில் உண்ணல், தலையை மழித்தல், துவராடை உடுத்தல் ஆகிய புறவொழுக்கங்களைச் சாடுகின்றனவே அன்றி கொள்கைகளைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை. அம்மையார் ஒருவர் தான் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்தார்.

அம்மையார், சம்பந்தர் போல, சமணர்களுடன் வாதம் செய்யவில்லை. ஆனால் அவர்களது இறை மறுப்புக் கொள்கையை மறைமுகமாகச் சுட்டி அதை மறுக்கிறார். இறை அன்புச் சுவையை உணரமாட்டாத புறச் சமயத்தவர் இறைவனை இகழ்ந்ததைக் கண்ட அவர், அவனை இகழாது ஏத்தினால் மறுபிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர், இதை அறியாத அவர்கள், உணர்ந்து கொண்ட எம்மைப் புறன் உரைப்பதில் நேரத்தை வறிதே செலவிடுகின்றனரே” என்று இரங்குகிறார்.

நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று பல வகையாக வேதத்திற்கு விளக்கம் அளித்தனர் அறிவு ஜீவிகள். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவதிலிருந்தே அவை எதுவுமே முழு உண்மை அல்ல என்பதை அவர் உணருகிறார். பின் வேதத்தின் உண்மையான கருத்து தான் என்ன? ‘ஒன்று உளது மெய்ப்பொருள், பலரும் பலவிதமாய் ஓதுவர்’ என்ற வேதக் கருத்து அவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்.

“எவர் எவரோ எப்படி எல்லாமோ பேசுவார்கள்.அவை புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். அறிவினால் அவனை அறிய முடியாது. அவனிடத்தில் பக்தி கொள்வதன் மூலம் அவனது அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும். நீங்கள் எந்தக் கோலத்தில் எந்த உருவத்தில் வழிபட்டாலும் இறைவன் உங்களுக்கு அந்தக் கோலத்தில் அந்த வடிவத்திலேயே காட்சி கொடு்த்து ஆட்கொள்வான்” என்கிறார் அவர்.

நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார், “பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை. இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்” என்கிறார்.

பிறவாமை ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கருதிய சமணத்திலிருந்து மாறுபட்டு, “பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும்” என்று கோரும் அம்மையார் “இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம்” என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.

அஞ்சத் தகுந்த பொருள்களிடத்தும் உள்ள அழகை வியந்து பாராட்டுவதை அடிப்படையாகக் கொண்டது, வேத சமயம். பாரதி கூறுகிறார், “புயற் காற்று அடித்தது, வேதரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள் போலே வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள்.”


அம்மையார் போற்றும் ஈசன் அச்சம் தரும் தோற்றம் கொண்டவன் தான். அவனைச் சூழ்ந்துள்ள பொருள்களும் அச்சம் தருவனவே. ஆயினும் அம்மையார் அஞ்சவில்லை. அவனது அழகை ரசித்து ஆனந்தம் அடைகிறார்.

இதை, அலைகடலும் அணங்கும் தனக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும் என்று அச்சத்தின் காரணமாக அவர்களை வணங்கும் பரமதத்தனின் இயல்போடு ஒப்பிடுக.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

7.அம்மையார் கால வழிபாட்டு முறை    

இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் அம்மையார் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.கோவில்கள் குறைவாக இருந்திருக்கக் கூடும். இருந்தவையும் மக்கள் நடமாட்டம் அற்று முட்புதர் மண்டி இருந்திருக்க வேண்டும். எனவே தான் பிற்காலத்தில் உழவாரப் பணி செய்து மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க வேண்டிய நிலை அப்பருக்கு ஏற்பட்டது. கண்ணுக்குப் புலனாகும் கந்து அல்லது லிங்கம் அல்லது வேறு உருவம் எதுவும் இல்லாமலே, சிவனைக் கருத்துருவாகவே அம்மையார் காட்டுகிறார். 

சங்க காலத்தில் தெய்வத்தை அதிட்டானிக்க, ஆதாரமாகப் பயன்பட்ட பொருளைக் கந்து என்று அழைத்தனர். இது பொதுவாகக் கல் தூணாகவே இருந்தது. இதுவே பிற்காலத்தில் வளர்ந்து விக்கிரக வழிபாடாக மாறியது. அம்மையாரது காலத்தில் ஆடற்பெருமானை உலோகத்திலோ, கல்லிலோ சிற்பமாக வடித்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. 

தேவாரக் காலத்தில் சிவன் ஆன் ஐந்தால் (பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமயம்) அபிடேகம் செய்யப் பெறுபவனாகக் கூறப்படுகிறார். ஆனால் அம்மையார் சிவனை நெய்யாடி என்று வர்ணிப்பதிலிருந்து சிவனை அதிட்டானித்திருந்த கந்துக்குச் சங்க காலத்து நடுகற்களுக்குச் செய்தது போல் நெய் மட்டும் தடவும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. மலர் தூவி வழிபடும் வழக்கம் இருந்தது. 

உமையம்மை 

இருவடிக்கண் ஏழை, உமையவள், குலப்பாவை, குலமங்கை, கொம்பு, கோல்வளை, சிலம்படியாள், செப்பேந்திளமுலையாள், பாகத்தாள், பெண், பொருப்பன்மகள், மலைப்பாவை, மலைமகள், மலைமங்கை, மலையான் மகள் எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் உமை இறைவனது பாகம் பிரியாமல் இருக்கிறாள். அவன் சுடலையில் ஆடும்போது மருண்டு நோக்குகிறாள். அவளைக் குறிப்பிடுகிறாரே தவிர அம்மையார் அவளை வணக்கத்திற்குரிய தெய்வமாகப் போற்றவில்லை. அம்மன் வழிபாடு குலோத்துங்கன் காலத்தில் தான் ஓங்கியது என்பதை வரலாறு கூறும். 


சிவகுமாரர்கள்
 

இன்று சிவகுமாரர்களாக வணங்கப்படும் கணபதி, முருகன் போன்ற தெய்வங்களையும் அம்மையார் குறிப்பிடவில்லை.

8.பேயார் 

எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. 

ஆசை நிறைவேறாமல் அற்ப ஆயுளில் இறந்தவர்களும் தற்கொலை, விபத்து இவற்றால் இறந்தவர்களும் பேயாக மாறி உலவுகின்றனர் என்பதும், இப் பேய்கள் உருவம் இல்லாதவை என்பதும், இவை பெண்களையும் பலவீனமானவர்களையும் பிடித்துத் துன்புறுத்துகின்றன என்பதும் இன்றைய தமிழ்நாட்டு நம்பிக்கை. ஆனால் அம்மையார் கூறும் பேய்கள் வேறு வகையானவை. அவரது மூத்த திருப்பதிகம் பேய்களைப் பற்றிக் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.  

இறந்தவர்கள் பேயாவதில்லை. மாறாக, பேய்கள் என்பவை மனிதர் போன்ற உருவம், ஆனால் அழகற்ற தோற்றம் உடைய தனி உயிரினம். வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் கொண்டவை பேய்கள். இவற்றில் சில வாயி்ல் தீயும், சில கண்ணில் தீயும் கொண்டவை. இவற்றில் கூளி என்ற ஒரு வகை உண்டு. இவை மற்றப் பேய்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பது தெரியவில்லை. 

இவை சுடுகாட்டில் வாழ்கின்றன. அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசம் உள்ளவை இவை. குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன. அது தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன தாய்ப் பேய்கள். அவை குறும்பு செய்யாமல் இருப்பதற்காக அவற்றை அச்சுறுத்தி “கொள்” என்று இசை பாடுகின்றன. 

நம்முடைய கண்ணோட்டத்தில் தான் பேய்கள் அழகற்றவை. அவை தாம் அழகாக இருப்பதாகத் தான் கருதுகின்றன போலும். அவை மனிதப் பெண்களைப் போலவே தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் நாட்டம் கொண்டவை. கூந்தலைக் காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருக்கிறது. எரிந்து அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாக தீட்டிக் கொள்கிறது அது. 

அவற்றிற்கும் நம்மைப் போலவே கோபம், பயம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகள் உண்டு. மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பேய் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதும் பயந்து குதிக்கிறது. அங்கு பிணஞ்சுடு தீச் சுட்டு விடவே, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது என்பதையும் அம்மையாரின் பாடலின் மூலம் அறிகிறோம். 

பேய்களுக்கும் துன்பம், வறுமை எல்லாம் உண்டு. ஊரில் யாரும் இறக்காத நாளில் அவை, பாவம், பட்டினி் தான். கிடைத்த நாட்களிலும் அவை நரி, கழுகு முதலானவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது. இறுதிக் கடன் செய்து மனிதர் விட்டுப் போன சோற்றை நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, இசை கூட்டுகின்றன. துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன. வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிடுகின்றன. 

பிணங்களை உண்டு களிக்கும் அவை உயிருள்ள மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் அவை மனிதர்களிடம் அஞ்சுகின்றன. ஒரு பிணத்தை உயிருள்ள மனிதன் என்று தவறாக நினைத்த ஒரு பேய் பயந்து போய் ஊரைக் கூட்டிய செய்தியை அம்மையார் நகைச்சுவையோடு விவரிப்பதைக் காண்கிறோம். 

பேய்கள் பற்றி அம்மையார் கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது மனித மாமிசம் தின்னும் வழக்கம் உடைய மனிதர்களைத் தான் அக்காலத்து மக்கள் பேய் எனக் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. அம்மையார் காலத்தில் உண்மையில் அத்தகைய மனிதர்கள் இருந்தார்களா? இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணங்களை ஆராய்வோம். 

பரிணாம வளர்ச்சிப் படிகளில் கீழ்நிலையில் உள்ள மீன் போன்ற சில தவிர, ஏனைய உயிரினம் எதுவும் தன் இனத்தாரின் புலாலை உண்பதில்லை. கொடிய புலி கூட மற்றொரு புலியைத் தின்பதில்லை. வளர்ச்சி நிலையில் மேல் படியில் உள்ள மனிதனுக்கு தன் இனத்தாரின் மாமிசம் இயல்பான உணவு அல்ல. வக்கிர புத்தி உடைய சிலர் எப்பொழுதேனும் அவ்வாறு உண்டிருக்கலாம். மற்ற மனிதர்களுக்கு இது அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் தரும் செய்தியாக இருக்கும். எனவே அவர்கள் இதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பர். செவி வழிச் செய்தியாக இது பரவும்போது சொல்பவரின் கற்பனையும் அதில் கலந்து பரவும். அதனால் இது பற்றிய கதைகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.   

டேனியல் டேபோ எழுதிய ராபின்சன் குரூசோ என்னும் புகழ் பெற்ற கதையில் கன்னிபல் எனப்படும் காட்டுமிராண்டி ஆண்கள் தங்களில் ஒருவனை அவ்வப்பொழுது கொன்று தின்பதாகக் கூறுகிறார். இது கதை எழுதியவரின் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனக் கொள்ளலாம். 

பிணம் தின்பதால் அதீதமான வலிமை பெற்ற மந்திரவாதிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. அவர்கள் பெண்களாகவே இருக்கக் காண்கிறோம். 

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேய் மகளிர் பிணம் தின்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. இங்கு ஆண் பேய்கள் கிடையாது. இந்தப் பேய் மகளிர் அஞ்சுவதற்குரியவராக வர்ணிக்கப்பட்டாலும் அவர்கள் ஊருக்குள் புகுந்து மனிதரைத் தூக்கிச் சென்று கொன்று தின்பதாகச் சொல்லப்படவில்லை. சுடுகாட்டில் கொண்டு வைக்கப்படும் பிணங்களை மட்டுமே அவர்கள் தின்பராம். துணங்கை என்னும் கூத்தினை ஆடி மகிழ்வராம். 

அம்மையார் தான் முதன் முதலில் பேய்களின் செயல்களை எல்லாம் விவரமாக வர்ணித்தவர். பிற்காலத்தில் பேய்களைக் கதா பாத்திரங்களாக்கிப் புனையப்பட்ட பரணி என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வழிகாட்டியவர் அம்மையாரே. 

அம்மையார் கூறும் பேய்களும் பெண்களே. ஒரு ஆண் பேய் கூடக் குறிக்கப் படவில்லை. குழந்தைப் பேய் என்னும் ஒரு புதிய வகையை உருவாக்கிய அம்மையார், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிணம் தின்னும் பேய் மகளிர் என்னும் கருத்துருவுக்குத் தன் கற்பனை மூலம் தாய்ப் பாசம், பயம் ஆகிய உணர்ச்சிகளைப் படைத்து விரிவுபடுத்தினார் என்பது பெறப்படுகிறது. அம்மையாரைப் பின்பற்றியே பிற்காலத்தில் வந்த ஜயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் குழந்தைப் பேய்களை அறிமுகப் படுத்துகிறார். 

அம்மையார் கொண்ட பேய்வடிவம் சுடலைப் பேய்களுக்கு உண்டான அருவருக்கத்தக்க தோற்றமும் செயல்களும் உள்ளதல்ல. மாறாக, வனப்பு நின்ற தசைப் பொதி கழிந்து, எற்பு உடம்பே ஆன, எல்லோரும் வணங்கும் பெருமை சேர் வடிவமாக இருந்தது. இறைவனின் அருகாமையை விரும்புவதில் மட்டும் தான் இவர் பேயுடன் ஒன்றுகிறார். ஈசன் பேய்களுடன் நடனமாடுகிறார் என 24 முறை கூறும் இவர் தன்னைப் பேய் என 4 முறை கூறிக் கொள்கிறார். 

அவர் தம்மைப் பேய் எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது? அடுத்த பகுதியில் காண்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

9. பேயார்

பரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது.

இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான். 

இவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான். 

பாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது. 

அதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். 

தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின. 

தன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.    

அப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு, திருத்தருமபுரம் ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது. 


சுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார். 

பேயவள் காண் எங்கள் அன்னை

புதுவையை வாழிடமாகக் கொண்ட பாரதி அதன் தொலைத் திட்டுப் பகுதியான காரைக்காலுக்கு வந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையாரின் பாடல்களை அவர் படித்திருக்கக் கூடும். ஆனால் அவர் அவர் கம்பன், இளங்கோ, வள்ளுவன் தவிரப் பிற புலவர்களையோ எந்த ஒரு நாயன்மாரையோ போற்றியதில்லை. என்றாலும், பாரதியின் ஒரு குறிப்பிட்ட பாடல் அம்மையாரைப் புகழ்ந்து பாடப்பட்டதோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. வெற்றி கொண்ட தாய் என்ற தலைப்பிலான பாடலின் முதல் நான்கு பாக்களைப் பாருங்கள்.

 பேயவள் காண் எங்கள் அன்னை  பெரும் 

பித்துடையாள் காண் எங்கள் அன்னை

காயழல் ஏந்திய பித்தன் தன்னைக்

காதலிப்பாள் எங்கள் அன்னை

 

இன்னிசையாம் இன்பக் கடலில் எழுந்

தெற்றும் அலைத் திரள் வெள்ளம்

தன்னிடை மூழ்கித் திளைப்பாள் அங்குத்

தாவிக் குதிப்பாள் எம் அன்னை.

 

தீஞ்சொற் கவிதை யஞ்சோலை தனில்

தெய்விக நன்மணம் வீசும்

தேஞ்சொரி மாமலர் சூடி மதுத்

தேக்கி நடிப்பவள் எம் அன்னை.

 

வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை

வேல் கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்

தோதி உலகெங்கும் விதைப்பாள்.

பேய்க் கோலத்தை விரும்பி ஏற்றவர் அம்மையார். பேயாடும் கானில் பிறங்கக் கனலேந்தித் தீயாடும் பெம்மான் மேல் அவருக்குக் காதல், பிறந்து மொழி பயின்ற போதே ஏற்பட்டு விட்டது. இக் காதல் கசிந்து பெருகிக் கடலென மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்ததால், மணிவாசகர் கூறுவது போல, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்பதில் முடிவடைந்தது. அவரது பாடல்களில் இறைவனிடம் ஆரா அன்பு, பணிவு, வியப்பு, பெருமகிழ்வு, நகைச்சுவை என்று பல்வேறுபட்ட உணர்ச்சிகள் கணத்துக்கு கணம் மாறி மாறி வருவதைக் காண்போர் இவர் பித்துக் கொண்டவர் என்று கருதியதில் வியப்பு என்னே!

தமிழிசையின் முன்னோடி அம்மையார். ஆலங்காட்டில் அப்பன் ஆடும் ஆட்டத்தை விவரிக்கப் புகுந்த அவர் பல இசைக் கருவிகளைப் பட்டியலிடுகிறார். இன்றைய ஸரிகமபதநி- க்கு இணையான தமிழ்ச் சுரப் பெயர்களான துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகியவற்றை நாம் அறிய உதவும் பழைமையான நூல் அவரது பாடல்களே. எனவே அவர் இசையில் புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பதை நாம் ஐயமின்றி ஊகிக்கலாம்.  இறைவனின் பேயாய நற்கணத்தில் ஒன்றாய அவர் இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துப் பாடிய பாடல்கள் அவர் தாவிக் குதித்து ஆடியதை நம் கண் முன் கொண்டு நிறுத்துகின்றன.

அம்மையாரின் கவிதைச் சிறப்போ சொல்லொணாதது. அதில் இல்லாத சுவை இல்லை. இல்லாத அணி இல்லை. அவரது பாடல்கள் அத்தனையும் தெய்விக நன் மணம் வீசும் தேன் சொரி மாமலர்களே, ஐயமில்லை. 

வேதியனை, வேதப் பொருளானை, வேதத்திற்கு ஆதியனைப் புகழ்ந்து அவர் பாடிய பாடல்கள் சாதாரண மக்கள் எளிதில் கற்க முடியாத ஓதரும் சாத்திரம் கோடியின் உண்மையை எளிமைப் படுத்தித் தருகின்றன. ‘ஏழைகளே, எந்தை அராப் பூண்டு உழலும் அம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறம் எளியது தான், வாருங்கள்’ என்று கூவி அவர் பக்தி விதைகளை உலகெங்கும் விதைக்கிறார்.

இந்த நான்கு பாடல்களும் பாரதி அம்மையாரைத் தான் பாடி இருப்பாரோ என்று மயக்கம் தந்தாலும் ஐந்தாவதாகிய நிறைவுப் பாடல் நம்மை அதிலிருந்து மீட்கிறது. 


பாரதப்
 போரெனில் எளிதோ விறற்

பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்

மாரதர் கோடி வந்தாலும் கணம்

மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.

சந்தேகமில்லை. பாரதி குறிப்பிடுவது பாரத அன்னையைத் தான். என்றாலும் நமக்கு அம்மையாரைப் பற்றிச் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

10.அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம்  

கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கயிலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கயிலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கயிலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லைகயிலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வடக்கு முகமாகச் சென்றதைத் தான், கயிலை நோக்கிச் சென்றதாகச் சேக்கிழார் கூறியதாகக் கொள்ள வேண்டும். 

அவர் கால் போன போக்கில் அலைந்து, செல்லும் இடங்களில் எல்லாம் இறைவன் புகழை வாய் ஓயாது உரைத்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். பலர் அவரைப் பேய் எனக் கருதி அஞ்சி ஓடினாலும் அவரைப் போற்றி ஆதரித்தோரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத் தான் அவரது பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன. 

இறைவன் ஆலமரங்களிடையே நடனமாடுகிறான் என்ற அவரது கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுப் பரவியதால் பல ஊர்கள் ஆலங்காடு என்று பெயரிடப்பட்டன. அத்தகைய இடங்களில் அவர் அதிக நாட்கள் தங்கி இறை வழிபாடு செய்திருப்பார். அங்கு அவரால் தாக்கம் பெற்றுச் சமணம் துறந்து சைவ நெறியை மேற்கொண்டோர் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆலங்காடுகள் சைவத்தின் நாற்றங்காலாகப் போற்றத் தக்கன. 

இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம், தலை ஆலங்காடு என்ற ஊர்ப் பெயர் தான். இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இது அப்பர் தேவாரம் பெற்ற தலம். இங்கு இறைவன் நடனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழி பெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் இரு திருவாலங்காடுகளும் வடாரண்யம் என்று கூறப்படுகின்றன. (வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலை ஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. தலை என்ற அடைமொழி இது அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது. மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம். 

அம்மையார் தன் முதல் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் திருவாலங்காடு என்னும் இடத்தைக் குறிப்பிடுகிறார். தேவார ஆசிரியர்களும் பிறரும் ஒரு ஊரை வர்ணிக்கும் போது அந்த ஊரின் சிறப்பு அம்சமாக- அருகிலுள்ள ஆற்றின் பெயர், மலை, கடல், சோலைகள், மாட மாளிகைகள், அந்தணர்கள் மிகுதியாக வாழ்வது- இப்படி ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். சுடுகாட்டுச் சூழலை வர்ணித்து விட்டு இத்தகைய திருவாலங்காட்டில் எங்கள் அப்பன் ஆடுகிறான் என்று அம்மையார் காட்டும் காட்சிகள் எல்லா ஊர்ச் சுடலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. அவர் எந்தச் சுடலைக்கும் சென்றதில்லை என்பதும் மக்கள் பேசிக் கொள்வதை வைத்துத் தான் அவர் அதை விவரிக்கிறார் என்பதும், ‘நீ இரவில் தீயாடும் இடத்தை எனக்கு ஒரு நாள் காட்டுதியோ’ என்று கேட்பதிலிருந்து அறியலாம். 

மாங்காடு, மாங்குடி, புளியங்குடி, வேலங்குடி, ஆலங்குடி என்று அந்தந்த ஊரில் மிகுதியாக உள்ள மர வகையின் அடிப்படையில் ஊருக்குப் பெயரிடுவது வழக்கம் தான் என்றாலும் ஆலங்காடு எனப் பெயரிடப்பட்ட ஊர்கள் அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அவை மரத்தின் காரணமாகப் பெயரிடப்பட்டிராமல் அம்மையாருடன் தொடர்பு கொண்டமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்க இடம் ஏற்படுகிறது. நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் ஆலங்காடு என்று பெயர் பெற்ற ஊர்கள் 7 உள்ளன. (ஆதாரம்- தமிழ்நாடு வாக்காளர் பட்டியல். இந்த ஏழுக்கும் நான் நேரில் சென்று வந்தேன்.) அவையாவன- 

ஆலங்காடு 1- அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை சாலை அருகில் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில் இல்லை. 5 கி.மீ. தொலைவில் ஆலங்குடி என்னுமிடத்தில் உள்ளது. இது முன்னாட்களில் பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கலாம். 

ஆலங்காடு 2- முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி சாலையில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அண்மைக் காலத்திய சிவன் கோவில்கள் இரண்டு உள்ளன. 

ஆலங்காடு 3- தலையாலங்காடு. நாகப் பட்டினத்திலிருந்து 30 கி.மீ. மேற்கில் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது. அப்பர் பாடல் பெற்றது. 

ஆலங்காடு 4-      தரங்கம்பாடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ளது. கோவில் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முன்னர் அரச ஆதரவு பெற்றிருந்ததாலும், தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படுவதாலும் நல்ல நிலையில், அளவிலும் பெரியதாக உள்ள இக்கோவில் திரு என்ற அடைமொழியுடன் கூடியதாக உள்ளது. 

ஆலங்காடு 5- காரைக்கால்- சீர்காழி சாலையில் கருவிழந்த நாதபுரம் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது. இன்று அது பற்றி ஊர் மக்களில் எவரும் அறியவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி என்ற முதியவர் மட்டுமே இவ்வூர் இங்குள்ள சிவன் கோவிலை ஒட்டியே ஆலங்காடு எனப் பெயரிடப்பட்டது என்பதை அறிவித்தார். அவரது உறவினராகிய வேல்முருகன் என்ற இளைஞருக்குச் சொந்தமான கருப்பங் கொல்லையின் நடுவில் ஒரு சிவலிங்க பாணம் மட்டும் உள்ளது. அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார். 

ஆலங்காடு 6- சீர்காழி– பழையார் பாதையில் உமையாள் பதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் பெயர் அவுட்டீஸ்வரர் எனச் சொல்லப்படுகிறது. ஆலங்காட்டீஸ்வரர் என்பதன் மருவாக இருக்கலாம். 

ஆலங்காடு 7- சென்னைக்கு மேற்கில் 60 கி.மீ. தொலைவில் அரக்கோணம் சாலையில் உள்ளது. இதுவும் திரு என்னும் அடைமொழி பெற்றது. அம்மையார் இந்தத் தலத்தில் முத்தி அடைந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அம்மையார் மேற்கண்ட வரிசைப்படியான தலங்கள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக இங்கு வந்து சேர்ந்ததாகக் கருதலாம்.

மேற்கண்ட ஏழு ஊர்களில் ஐந்தாவது ஆறாவது நீங்கலாக மற்ற ஐந்தும் வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இது அம்மையார் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்படுத்துகிறது. அந்த இரண்டு மட்டும் ஏன் ஒதுங்கி உள்ளன என்பது தெரியவில்லை. 

அம்மையாரின் பயணப் பாதையாக இதைக் கருதுவதில் மேலும் ஒரு தடை உள்ளது. இவற்றில் முதல் ஆறு தலங்களும் சோழ மண்டலக் கடற்கரை அருகில் அமைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அருகாமையில்- ஓரிரு நாள் நடைப் பயணத்துக்கு உட்பட்டதாக- உள்ளன. ஆறாவதாகச் சொல்லப்பட்ட ஆலங்காட்டிற்கும் ஏழாவதாகச் சொல்லப்பட்ட திருவாலங்காட்டிற்கும் இடையே சுமார் 200 கி.மீ. உள்ளது. சோழ மண்டலத்து மக்கள் அம்மையாரை வரவேற்று உபசரித்துத் தங்கள் ஊர்களுக்கு ஆலங்காடு எனப் பெயரிட்டுக் கொண்ட அளவுக்கு வடக்கே உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. 

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். இவ்விடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கக் கூடும். பல்லவர்கள் அப்பரால் போதிக்கப்படு முன் சமணர்களாகவே இருந்தனர் என்பது அறிந்த விஷயம். இங்கெல்லாம் சமணம் மிக அதிகமாக வேரூன்றி இருக்கக் கூடும்.  

இந்தச் சோழநாட்டுத் திருவாலங்காட்டுக்கும் பல்லவ நாட்டுத் திருவாலங்காட்டுக்கும் இடையில் அமைந்துள்ள தில்லை தான் ஆடற்பெருமானின் தலைநகரமாக அம்மையாருக்குப் பின் விளங்கியது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

11.அம்மையாரின் கவிதைச் சிறப்பு 

இறைவனிடம் கொண்ட தூய அன்பில் மட்டுமல்லாது அதை வெளிப்படுத்தும் கவிதைத் திறனிலும் அம்மையார் விஞ்சி நிற்கிறார். பல வகை அணிகளும் அவருக்குக் கைகட்டிச் சேவகம் செய்கின்றன. 

அவரது உவமைத் திறத்துக்கு ஒரு சான்று- இறைவனின் சடைமுடி பொன்மலை போல் மின்னுகிறது. கற்றைகள் பொன்னைச் சுருளாகச் செய்தது போல் விளங்குகின்றன. தலையில் சூடிய நிலவு வெள்ளித் தட்டினைத் தேய்த்து வளைத்தது போல் உள்ளது. அதன் ஒளிக்கதிர்கள் சடைக் கற்றைகளின் ஊடே பரவி விழும் காட்சி பொன் சரிகையையும் வெள்ளி சரிகையையும் சேர்த்து முறுக்கியது போலத் தோற்றமளிக்கிறதாம். 

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன

போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின்- ஞான்றெங்கும்

மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே

அக்கயலே வைத்த அரவு.      (அ-26)

 

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்

விராவு கதிர்விரிய ஓடி- விராவுதலால்

பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே

தன்னோடே ஒப்பான் சடை.                (அ-49)

 இறைவனின் கண்டத்தில் உள்ள கருமையின் ஒளிக்கு அவர் அடுக்கும் உவமைகளைப் பாருங்கள். நிலவு சூடியின் நீல கண்டத்துக்கு உவமையாக இருளைக் கூறுவேனா, மேகத்தை மொழிவேனா, நீல மணியை நினைப்பேனா என்று கூறுகிறார். ராம பிரானின் கருமேனியின் அழகை வர்ணிக்கப் புகுந்த கம்பர் மையோ மரகதமோ மழை முகிலோ மறிகடலோ எனப் பேசியபோது அம்மையாரின் இந்தப்பாடலை நினைவு கூர்ந்திருப்பார். 

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ

மருளின் மணிநீலம் என்கோ- அருளெமக்கு

நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்

ஒன்றுடையாய் கண்டத் தொளி.       (அ-88)               

தற்குறிப்பேற்ற அணியை அம்மையார் கையாளும் திறனுக்கு இதோ ஒரு சான்று- ஈசன் கழுத்தில் கருமையும் தலையில் நிலவும் உள்ளது. அது எப்படி உள்ளது தெரியுமா? வெண்ணிலா தன்னை அழித்துவிடும் என்று அஞ்சி இருள் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது போல் உள்ளதாம். 

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்

திடங்கொண் டிருக்கின்ற தொக்கும்- படங்கொள்

அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல

மணிமிடற்றின் உள்ள மறு.       (அ-35)

 

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோ    (அ-98)

 என்று அவர் வியக்கும் அழகு தனித்தன்மை வாய்ந்தது. கொடி அசைந்த்தும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்று கண்ணதாசனைப் பாட வைத்தது இவ்வரிகள் தாமோ?

அவரது எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் ஓசை நயத்தினால் கற்பாரைக் களிப்பிப்பன. சில உதாரணம் காண்போம். 

சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான் (அ-44)

 

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாது

ஈதொக்கும் என்பதனை யாரறிவார் (அ-62)

 

இருளின் உரு என்கோ மாமேகம் என்கோ

மருளில் மணிநீல மென்கோ (அ-88)

 

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேளையே போன்றிலங்கும் வெண்ணீறு (அ-65)

 

ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்

நீறாடி நெய்யாடி நீ (தி-14) 

அம்மையாரின் இலக்கியம் அளவில் மிகச் சிறியது. அவர் பல்வேறு கதா பாத்திரங்கள் கொண்ட ஒரு காப்பியம் எழுதவில்லை. இறைவனின் பெருமையைப் போற்றியும் அவரிடம் தான் கொண்ட அன்பைப் பற்றியும் பேசும் அவருக்கு பல வகைச் சுவைகளையும் வெளிப்படுத்துவதற்கான களம் மிகச் சிறியது. எனினும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எண் வகை மெய்ப்பாடுகளும் அம்மையாரின் கவிதையில் விரவி வந்துள்ளன. நகைச் சுவையைப் பற்றித் தனித்த தலைப்பில் காண்போம். முதலில் பிற சுவைகளைக் காண்போம். 

எஞ்ஞான்று தீர்ப்ப திடர் (அ-1), அல்லல் அறிய முறையிட்டால் கேளாதது என்கொலோ (அ-4), மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்கு என்செய்வான் கொல்லோ இனி (அ-15) என்று கேட்கும்போது அழுகைச் சுவையைக் காண்கிறோம். 

ஏறலால் ஏற மற்றில்லையே எம்பெருமான் (தி-18), படுவெண் புலால் தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம் (அ-56) என்னும் போது இளிவரல் சுவையைக் காண்கிறோம். 

அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ (அ-18), அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும், கடகம் மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும் (அ-77), இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ கண்டத் தொளி (அ-88), நடக்கிற் படிநடுங்கும், நோக்கில் திசைவேம், இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் அடுக்கல் பொருமேறோ ஆனேறோ நின்னேறு (அ-100) என்பதில் மருட்கை தெரிகிறது. 

இலக்கியத்தில் அரிதாகவே ஆளப்படும் அச்சச் சுவையை அம்மையார் போல் அழகாகப் பயன்படுத்தியவர் எவரும் இல்லை. சுடுகாட்டுக் காட்சிகளை அவர் வர்ணிக்கும்போது நமக்கு அச்சம் ஏற்படுவதுடன் மெல்லியல்பு உடைய ஒரு பெண்மணி எப்படி இதை எல்லாம் நுட்பமாக வர்ணிக்கிறார் என்று வியப்புத் தோன்றுகிறது. சூழ்நிலையின் அச்சம் தரும் தன்மையை மிகுதிப்படுத்திக் காட்டியதன் மூலம் அவர் இறைவனின் அளவற்ற சக்தியை கோடிட்டுக் காட்டுகிறார். அத்தகைய அச்சம் தரும் ஈசன், அளவு கடந்த வலிமை உள்ள ஈசன், அடியார்களுக்கு மிக நல்லவன் என்று அவனது கருணையை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இறை அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் விதைக்கிறார்.  

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் (அ-7), ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் (அ-8), இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள் சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம் (அ-16), மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் (அ-21) என்பதில் உவகைவெளிப்படுகிறது. 

எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று (அ-10) என்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிகின்றன. 

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை, என்றும் ஓர் மூவா மதியானை மூவேழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு (அ-19) என்பதில் பெருமிதம் பீறிடுகிறது. 

இறைவர் எமக்கிரங்காரேனும் கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென்றிருக்குமே எந்தையா உள்ள மிது (அ-23) என்பதில் சாந்தம் என்னும் ஒன்பதாவது சுவை அடங்கி இருக்கிறது.                           

அம்மையார் தாய்மை அன்பே வடிவானவர். இறை உணர்வில் தோய்ந்து இருப்பதால் அவருக்கு உலகியல் நினைவுகளே இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவருக்குக் கோபம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. எனினும் நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக (அ-33) என்னும் ஓரிடத்தில் மட்டும் அவருடைய வெகுளி சற்றே வெளிப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

12.அம்மையாரின் நகைச்சுவை 

அம்மையார் கண்ணுதற் பெருமானையே எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதெனக் கொண்டார். பிறவி என்னும் பெருங் கடலைக் கடக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு எப்பொழுதும் அவனையே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அவர் கடுமையானவராக இல்லை. அவரிடத்தில் இயல்பாகவே ஒரு நகைச் சுவை உணர்வு இருந்தது. தன்னை அவர் பேய் என்று கூறிக் கொண்டாலும் இந்தப் பேய் அச்சுறுத்தும் பேயாக இல்லை.

இறைவனுடைய தோற்றத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருக்குப் பக்தியுடன் கூட நகைச் சுவையும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. சுடுகாட்டில் பிணம் எரித்தல், பேய்கள் பிணம் தின்னல் போன்ற அச்சம் தரும் காட்சிகளை வர்ணிக்கும் போதும் அவருக்கு உள்ள இயல்பான இந்த நகைச்சுவை உணர்வு நீங்காமல் உள்ளது. இந்தப் பாடல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

பரமன் பால் கொண்ட அன்பின் மிகுதியால் அவர் தன்னை அவனுடைய தாய் ஸ்தானத்திற்குக் கொண்டு போய் இருத்திக் கொண்டு அவனுக்காகக் கவலைப்படுகிறார். 

“உன் நடனத்தை இந்தப் பூமி தாங்காது, பார்த்து ஆடப்பா” என்கிறார். (அ-77)

இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார். சிவனுடைய தலையில் உள்ள விசித்திரமான பொருள்களாகிய அரவு, மதி, கங்கை இவை அவருக்குச் சரியான வாய்ப்பைத் தருகின்றன. 

“உன் தலையில் உள்ள கங்கை திடீரென்று ஒரு நாள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடினால் தலையில் உள்ள மதியும் அரவும் அடித்துக் கொண்டு போய் விடுமே, என்ன செய்வாய்.” (அ-90)

“உன் மேல் உள்ள நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமேல் உனக்குப் பழி வந்து சேரும். எச்சரிக்கையாக இருந்து கொள்.” (அ-13) 

“பூணாக, நாணாக, பொன்முடிமேற் கண்ணியாக எல்லாவற்றிற்கும் பாம்பு தானா? இது எதில் போய் முடியப் போகிறது?” (அ-28) 

“ஒரு பொன்னாரம் பூணக்கூடாதா?” (அ-27) 

“பாம்பை அணியாதே என்று நாங்கள் பல முறை சொல்லிப் பார்த்து விட்டோம். நீ கேட்கமாட்டாயா?” (அ-27)

“பலி ஏற்கச் செல்லும் போதாவது அரவுகளைக் கழற்றி வைத்து விட்டுச் செல். இன்றேல் பெண்கள் வந்து பலியிட மாட்டார்கள்.” அ-57)

“திங்கள் சூடிப் பலிக்கென்று ஊர் திரியேல் என்று தேவர்கள் தடுத்துப் பார்த்து விட்டனர். நான் சொல்லியா கேட்கப் போகிறாய்?”(அ-43)

“நீ தலையில் நிலவை அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் முக்காடு அணிந்தாற் போல உள்ளது. தவறான செயல் செய்பவர்கள் தாம் முக்காடு அணிவார்கள். நீ புலால் நாற்றம் வீசும் கபாலத்தில் பிச்சை எடுத்து உண்பதை மற்றவர்கள் பழிக்கப் போகிறார்களே என்று பயந்து இவ்வாறு செய்கிறாயோ?” (அ-56)

“உன்னை அன்பால் அடையலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவரையும் நெருங்க விடாமல் அச்சுறுத்தும் பாம்புகளும், தலை மாலையும், ஒரு முரட்டுக் காளையும் உன்னிடம்  உள்ளனவே, உன்னை எப்படி அன்பால் அடைவது?” (தி-17)

“காளையை வாகனமாகக் கொண்டாயே, உனக்கு வேறு ஊர்தி கிடைக்கவில்லையா?” (அ-18)

“உன்னைப் பிரியாமல் உமை எப்பொழுதும் உன்னுடனேயே சேர்ந்திருப்பதற்குக் காரணம், நீ அவளைப் பிரிய விரும்பவில்லையா? அவளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? அல்லது அவள் தனியே இருக்க அஞ்சுகிறாளா?” (அ-94) 

“உமையை உன் உடலில் வைத்துக் கொண்டு ஈமப் பெருங்காட்டிற்குப் போகாதே. அவள் பெண்ணல்லவா? பயப்படுவாள் என்று உனக்குத் தெரியவில்லையே.” (அ-51)

“அவளுக்கு ஒரு வாகனம் தேடிப் பெற்றுத் தர உனக்குத் துப்பில்லை, கூடவே அவளையும் அழைத்துக் கொண்டு திரிகிறாயே?” (தி-19)

“உன்னுடைய உடம்பின் ஒரு கூறனாகிய மாலுக்குக் கூட அறிய முடியாமல் நீ எங்கே ஒளிந்து கொண்டாய்?” (அ-54)

“உமையும் மாலும் உன் உடலின் பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு விட்டனர். இனி எப்படி நீ நீறணிவாய்?” (அ-59)

“நஞ்சம் உண்ட உன் வாய் அப்படியே இருக்க, உன்னுடைய கண்டம் மட்டும் இருள் கொண்டது போலக் கருத்தது ஏன்?” (அ-89)

“உன் உடல் முழுவதும் சிவப்பாக இருந்தும் நெஞ்சில் மட்டும் கறுப்பாக இருக்கிறதே. அங்கு கருணைக்குப் பதிலாக வஞ்சம் உள்ளது போலும். நாங்கள் பல முறை முறையிட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யாததன் காரணம் இப்பொழுதல்லவா புரிகிறது.” (அ-4)

இப்படி எல்லாம் இறைவனை எள்ளி நகையாடிய அம்மையார் இன்னும் ஒரு படி மேலே போய் அவனுடைய குடும்பத்தில் கலகம் செய்யக் கூட முனைகிறார். 

“மதியை நீ தலையில் கங்கை அருகே வைத்ததால் இடப்பாகங் கொண்டவளாகிய மலைப்பாவைக்குப் பங்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே.” (அ-71)

“இந்த இருவருள் உமக்கு மிகவும் அன்புடையார் யார் என்று சொல்லுமின்.” (அ-95) 

“உமைக்குத் தெரியாமல் இன்னொரு மனைவியைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாய். என்றாவது ஒரு நாள் இவள் அவளைப் பார்த்து விடப் போகிறாள். அப்பொழுது நீ என்ன செய்வாய்?” (தி-5)

கிரகணம் என்பது ராகு, கேது என்னும் பாம்புகள் சந்திரனை விழுங்க வருவதால் உண்டாகும் நிகழ்ச்சி என்ற முற்கால நம்பிக்கையைப் பயன்படுத்தி அம்மையார் சிவனிடம் சேர்ந்திருக்கும் மதி, அரவு இவற்றை வைத்து நகைச் சுவையாகப் பேசும் பாடல்கள் பல உள்ளன. 

“உன் பாம்பின் சிந்தை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்க. அது ஒரு நாள் நிலவை விழுங்கிவிடப் போகிறது” என்று எச்சரிக்கிறார். (அ-22)

“தன் பரம்பரைப் பகையான நாகம் அருகாமையில் இருப்பதால் அச்சத்தினாலேயே உனது நிலா வளராமல் பிள்ளை மதியாகவே உள்ளது.” (அ36)

“ உனது ஏனக் கொம்பு அரவந் தீண்டிச் சிறுத்த நிலவு போல் உள்ளது.” (அ-38)

“உமது மார்பில் உள்ள பாம்பு சரியான முட்டாள். தலையில் உள்ள உண்மையான நிலவையும் மார்பில் உள்ள ஏனக் கொம்பையும் பார்த்து இவ்விரண்டில் எது மதி என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் உமது மதி  பிழைத்தது” என்று சிரிக்கிறார். (அ-48)

“உன் தலை மீது பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறதே, அது மதியைத் தேடித்தான் உலாவுகிறதா?” என்று வினவுகிறார். (அ-64)

சுடுகாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் போது அச்சச் சுவையுடன் நகைச்சுவை கலந்து மிளிர்வதைக் காண்கிறோம்.

கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம் ஒரு பெண் பேய். கொள்ளிக் கட்டையை அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படி தீட்டிக் கொண்டிருக்கிறதாம். திடீரென அதற்கு ஏதோ அச்சம் ஏற்படுகிறது. மிரண்டு துள்ளிக் குதிக்கிறது. அப்படிக் குதிக்கும்போது பிணத்தைச் சுடும் தீச் சுட்டுவிடுகிறது. உடனே அதற்கு நெருப்பு மேல் கோபம் வந்து விடுகிறது. முகத்தைச் சுளித்துக் கொண்டு புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது. இத்தகைய காட்டில்  ஆடுகிறான் எங்கள் அப்பன் என்கிறார். (பதிகம் 1-2) 

மற்றொரு காட்சி. காட்டில் ஒரு பிணம் கிடக்கிறது. ஒரு பேய் (அது ஒரு அறியாத குழந்தைப் பேய் போலும்) அது பிணம் என்று அறியாமல் படுத்துக் கிடக்கின்ற உயிருள்ள ஆள் என்று நினைத்துப் பயந்து சற்றே அருகிற் சென்று தனது சுட்டு விரலைக் காட்டி, உரக்கக் கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசிவிட்டு ஓடி விடுகிறது. இதைப் பார்த்த மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடுகின்றனவாம். இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில் பெருமான் தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான் என்கிறார். (பதிகம் 2-4) 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

13.அம்மையாரின் இசை 

இவ்வுலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிய சமண சாக்கியங்கள் இசை, நடனம் ஆகிய கலைகளில் ஈடுபடுவது மறு உலக வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எனப் போதித்தன. ஆனால் அம்மையார் அவற்றையே பயன்படுத்தி இறை நெறியைப் போற்றுகிறார். இறைவனை ஆடும் தெய்வமாக உருவகப்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இசை முழங்குவதையும் குறிப்பிட்டு இக்கலைகளைத் தெய்வத் தன்மை கொண்டதாக ஆக்குகிறார்.

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழு சுரங்களைப் பட்டியல் இடுகிறார் அவர். தமிழ் இலக்கியத்தில் இவற்றைக் கூறும் முதல் நூலே இவருடையது தான். மற்றப் பண்டைய நூல்களினின்றும் இவருடைய சுர வரிசை சற்றே மாறுபடுகின்றது. மற்ற நூல்களில் குரல் எனக் காணப்படும் சுரத்துக்குப் பதிலாக அம்மையார் ஓசை என்று கூறுகிறார். மேலும் மற்ற நூல்களில் இந்த ஓசை (குரல்) முதலாவதாக வருகிறது. அம்மையார் கடைசியாக வைக்கிறார். இந்த ஏழு சுரங்களின் கூட்டுறவால் பண் வகைகள் உண்டாகின்றன என்று அவர் கூறுகிறார். 

இனி அம்மையார் கூறும் வாத்தியங்களைப் பார்ப்போம். சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, வீணை முதலான சுர வாத்தியங்களையும் தாளம், மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய தாள வாத்தியங்களையும் அவர் குறிப்பிடுகிறார். 

14.ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை

அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறை முகமாகவோ காரணமாக இருந்தார்.

அம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை முதன் முதலாக மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 2 பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (22) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார். ஆனால் அவர் ஆடற்பெருமானின் புகழ்பெற்ற தலமாகிய தில்லையை எங்கும் குறிப்பிடவில்லை.

கலித்தொகை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இறைவனின் நாட்டியக் கோலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் மூவகை நாட்டிய வகைகளைச் சிவன் ஆடுவதாகக் காணப்படுகிறது. அம்மையார் இந்த நாட்டிய வகைகளைக் குறிப்பிடவில்லை.

கருத்துருக்களைப் பொறுத்தவரை முதலில் பருமையாகத் தோன்றிப் பின்னரே அதில் உட் பிரிவுகள் ஏற்படுவது இயல்பு. எடுத்துக்காட்டாக, கடவுள் அவதரிக்கிறார் என்ற கருத்து முதலில் தோன்றிய பிறகு தான் அவதாரங்கள் பத்து என்ற பிரிவுகள் தோன்றி இருக்க வேண்டும். பல இசைக் கருவிகளின் பெயர்களையும் இசைக்கு அடிப்படையான சுரங்களையும் பட்டியலிடும் அம்மையார் இறைவனின் நாட்டிய வகைகளைக் கூறாதது கொண்டு இவ்வகைகள் பிற்கால வளர்ச்சியாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே இந்த நாட்டிய வகைகளைக் கூறும் சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகியவை அம்மையாருக்குப் பிற்பட்டவையோ என ஐயம் எழுகிறது.

திரு ஆருர்

காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஆலங்காட்டில் இறைவனின் நடனமாடுவது கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அருவுருவமான லிங்கப் பெருமானுக்கு நர்த்தன புரீசர் எனப் பெயரிடப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டு நின்ற கோலத்தில் உள்ள உலோகச் சிலையில் காட்டப்பட்டது.  

 சோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. (‘விடங்க’ என்ற சொல்லுக்கு ‘உளியால் செதுக்கப் படாத’ என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோகச் சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது.) திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் விடங்கப் பெருமான் இன்று தியாகராஜா என்று அழைக்கப் படுகிறார். இந்தத் தலங்களில் பிற்காலத்தில் நடராஜ விக்கிரகம் இணைக்கப் பட்டது. ஆனால் தியாகராஜா எனப்படும் விடங்கப் பெருமானே இந்தத் தலங்களில் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக ஆடும் கோலத்தைக்  கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.

இறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்து விட்டனர்.

திருவாரூரின் தொடர்ச்சி தில்லை

மற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங் காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே. 

ஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்த வரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம், ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.

விடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாம சுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.

திருவாரூரின் புற்றிடங் கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.

தில்லை    

அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான்.

தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். ஆனந்தமே பிரம்மம் என்று உபநிடதங்கள் கூறும். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.

தில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது? எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்?

சோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவ ஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இவ்வாறு அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஆடற்பெருமான் வழிபாடு தில்லையில் மையம் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

15.சோதி வழிபாட்டின் துவக்கம்.

அம்மையார் போற்றிய எம்மான் சுடலையில் நடனம் ஆடுபவன். சுடலையில் எப்பொழுதும் பிணம் சுடு தீ எரிந்து கொண்டிருக்கிறது. பெருமான் கையிலும் ஒரு பெருந் தீ எரிந்து கொண்டிருக்கிறது.  சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்களாக விளங்க, தீ அவனது மூன்றாவதான நெற்றிக்கண்ணாக உள்ளது. அவன் கண் விழித்துப் பார்த்தால் காமன் ஒண்பொடியாக ஆகி விடுகிறான். அவன் கையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பினால் முப்புரங்களும் வெந்து அழிகின்றன. 

அம்மையார் இறைவனின் உருவத்தைப் பலவாறு வர்ணிக்கிறார். அவன் தழற் கொண்ட சோதிச் செம்மேனி எம்மான். சிவந்த நீண்ட சடை, நெற்றியில் ஒரு கண். கறுத்த கண்டம். தலையிலும் மார்பிலும் பாம்புகள். இடையில் புலித் தோல், யானை உரி. காலில் சிலம்பும் கழலும். ஒரு பக்கத்தில் உமை. மறு பக்கத்தில் திருமால். இப்படி எல்லாம் சொல்லால் வர்ணித்தாலும் அம்மையாரால் இறைவனின் இத்தகைய உருவத்தை மனக் கண்ணால் காண முடியவில்லை.

சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நடுவே, கையிலும் தீ ஏந்தி, தீப் போன்ற சிவந்த உடலுடன், அழல் வாய்ப் பேய், அழல் கண் பேய் இவற்றின் துணையோடு நடனமாடும் இறைவனை நினைத்தால் அந்தத் தீத் திரளின் சுவாலையில் மற்ற உருவ அடையாளங்கள் மறைந்து போய் சோதி வடிவம் ஒன்றே அவரது மனதில் தங்குகிறது.  

அதனால் தான் அவர் அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன், இன்றும் திருவுருவம் காண்கிலேன் என்றும் சுடருருவில் எரியாடும் எம்மான் என்றும், காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றும் என்றும் ஈசன் திருவுருவம் மின்னுஞ் சுடருருவாய் மீண்டும் மீண்டும் என் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்றது என்றும் நொந்தாத செந்தீ அனையான் என்றும் வர்ணிக்கிறார். இப்படித் தீ வடிவமாக நின்றாலும் அவன் உடல் எப்பொழுதும் குளிர்ந்து தான் உள்ளது. தீயைத் தீ சுடுமா?     

பஞ்ச பூதங்களும் அவனே என்றாலும் தீ மட்டும் அவனுடைய சிறப்பு வடிவமாகக் கருதப்படுவதற்கு வித்திட்டவர் அம்மையார். இறைவன் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் என்று அம்மையார் சொன்னதையும் சேர்த்துப் பின்னர் வந்த மூவர் முதலிகள் காலத்தில் மாலயன் காணாப் பேரழலாக நின்றான் ஈசன் என்று ஒரு புராணக் கதை தோற்றுவிக்கப்பட்டது. 

இந்தத் தீ வடிவத்தைச் சம்பந்தர்  தன் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் போற்றினார். வேதமும் தீ வழிபாட்டை முக்கியமாகக் கொண்டதால் வேத நெறியும் சைவ நெறியும் வேறுபாடற்றதாக இணைந்தன. வேத முறைப்படி வேள்வி செய்ய இயலாதவர்களும் தீ வடிவினனான சிவனை வணங்குவதன் மூலம் துயர் நீங்கி நலம் பெற முடியும் என்ற கருத்து வளர்ந்தது. சைவம் மக்கள் சமயமாக மலர்ந்தது.

16. பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார். 

Lord-Shiva-250x300.jpgஇறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ஆவதற்கு அம்மையாரே வழி காட்டினார் எனலாம்.  

வட இந்தியாவில் புத்த மத எழுச்சியால் நலிவடைந்திருந்த வைதிக சமயம் மீண்டும் தழைக்க உதவியவை புதிதாக எழுதப்பட்ட புராணங்களே. மஹாராஷ்டிரத்தில் இஸ்லாம் மேலோங்கிய நிலையில் அங்கு தோன்றிய சான்றோர்களின் அபங்கங்களே இந்து சமயத்தை நிலை நிறுத்தின. அது போலத் தமிழ் நாட்டில் சமணத்துக்கு எதிராகச் சைவத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவார, திருவாசகங்களுக்கு உண்டு எனினும் அவற்றிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவை அம்மையாரின் பாடல்களே. 

அம்மையாரின் பாடல்களின் மொழியும் நடையும் சாதாரண மக்களின் அன்றாட அனுபவத்துக்கு ஒட்டி இருப்பதால் அது மக்களை விரைவாகக் கவர்ந்ததில் வியப்பு இல்லை. 

பக்தி இலக்கியங்கள், இசை முதலிய கலைகளின் துணை பெறும்போது இவற்றின் தாக்கம் அதிகமாகிறது. அம்மையார் இசை நுணுக்கங்களைப் பற்றிக் கூறியிருப்பதால் அவர் இசை வல்லுநராக இருந்திருக்கக் கூடும். தனது படைப்புகளை அவர் இசையோடு பாடக் கேட்ட மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரைப் பின்பற்றியே அப்பர் முதலானோர் மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் பனுவல்களை இசையுடன் பாடும் வழக்கத்தை மேற்கொண்டனர்.  பதிகம் பாடும் முறை, கடைக்காப்பு பாடுதல் முதலியனவற்றையும் அம்மையாரிடமிருந்து பின்னர் வந்த சமயக் குரவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

‘சிவன் மாலுக்கும் அயனுக்கும் அளக்க முடியாதவன்’ என்று சொன்னார் அம்மையார். ‘சோதி வடிவில் என் சிந்தனையில் சுழல்கின்றான்’ எனவும் கூறினார். அப்பரும் சம்பந்தரும் இவை இரண்டையும் இணைத்து ‘மாலயன் அறிய முடியாமல் சோதி வடிவமாய் நின்றான்’ என விரித்தனர். 

அம்மையார் காட்டிய இறைவனின் சோதி வடிவத்தையும், கருணைப் பண்பையும் மிக அதிகமாகப் பெருமைப்படுத்தி மனமுருகினார் மணிவாசகர். அவரைத் தொடர்ந்து வள்ளலாரோ ‘அருட் பெரும் சோதி தனிப் பெருங்கருணை’ என்பதை ஒரு மந்திரமாகவே உருவாக்கினார். 

பிறவா நிலை விரும்பத்தக்கது தான். ஆனால் இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அம்மையார் கூறி இவ்வுலக வாழ்வை இடர் எனக் கருதும் சமண, சாக்கியச் சமயங்களின் கருத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றினார். அவரைப் பின்பற்றிய சம்பந்தர் சிவ பெருமானை வணங்குவோர் மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், வானுலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை என்ற கருத்தைத் தன்  பாடல்கள் முழுவதும் பாடியுள்ளார். அப்பரும் உன் திருவுருவத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டுமானால் பிறவியை வெறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று இறைவனிடம் குழைகிறார். 

அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் என்ற அம்மையாரின் கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். ‘அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்கிறார் அவர். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் பாடியதிலும் அம்மையாரின் தாக்கத்தைக் காண்கிறோம். 

சுந்தரரின் முதல் பாடல் ‘பித்தா’ என்று துவங்குகிறது. சிவனைப் பித்தன் என்று முதன் முதலாக அழைத்தவர் அம்மையாரே. (பதிகம் 2-4) 

‘பலிக்குநீர்வரும் போது நுங்கையிற்

பாம்புவேண்டா பிரானிரே’

என்ற சுந்தரரின் திருப்பைஞீலித் தேவார வரிகள், 

‘நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய

தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய

மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி

விடவரவம் மேல்ஆட மிக்கு’ என்ற அ-57ஐ நினைவூட்டுகிறது. 

‘கையோர் பாம்பு அரையார்த்தோர் பாம்பு

கழுத்தோர் பாம்பவை’    7.36.10

என்ற சுந்தரரின் வரிகள் அம்மையாரின், 

‘பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்

நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம்

பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்

கென்முடிவ தாக இவர்’                              

என்ற அ-28 பாடலை நினைவூட்டுகிறது. 

‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்ற கருத்து கல்வியின் மூலம் அவனை அடைய முடியாது என்று உறுதிப் படுத்துகிறது. நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே என்று அப்பர் கூறுவதன் கருத்து இதுவே. ‘கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்’ என்று இதையே மணிவாசகர் கூறுகிறார். அப்பர் தன் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் ‘சுடருருவில் என்பறாக் கோலத் தான்’ என்று அம்மையாரின் (அ2 பாடலின்) சொற்றொடரை அப்படியே எடுத்தாள்கிறார்.  

இறைவன் தன்னை ஆண்டு கொண்டு அருள் செய்ததை எண்ணிப் பெருமிதமாகச் சில  பாடல்களிலும், எனக்கு எப்பொழுது அருள் செய்வானோ என்று ஏக்கமாக வேறு சில பாடல்களிலும் மணிவாசகர் பாடுவது, அம்மையாரைப் போல், தான் நற்கதி அடைந்தது போதாது, ஏனைய மக்களும் இறை அருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் கருத்துக்கு வேர், அம்மையாரின் பாடல்களில் இருப்பதை அவரது நெஞ்சறிவுறுத்தும் பாடல்களில் கண்டோம். 

அம்மையாரின் தாக்கத்தை இஸ்லாத்திலும் காணலாம். குர் ஆனின் முதல் வசனம், ‘லா இலாஹ் இல்லில்லாஹ்’ என்பது, ஈசன் அவன் அல்லாது இல்லை என்ற அம்மையார் வாக்கின் (தி-2) நேர் மொழி பெயர்ப்பே. சங்க காலத்திலிருந்தே அராபிய வாணிகர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் அம்மையாரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும்.  “நான் அந்தந்த இன மக்களிடமும் அவரவர் மொழியிலேயே பேசுகிறேன்” என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதால் அம்மையாரை “ஈசன் அவன் அல்லாது இல்லை” என்று பேச வைத்த இறைவனே நபிகள் நாயகத்திடமும் அக் கருத்தை அரபி மொழியில் கூறியதாகக் கொள்ளலாம்.  



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

17.சைவத் தொட்டில் – சோழநாடு 

தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழ நாட்டிலும் சமண சாக்கியச் சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்துத் திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும். 

ஆனால் சோழ நாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ, சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழ நாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும், மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.    

சைவ சமய எழுச்சிக்குச் சோழ நாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழ நாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

வேதநெறி ஒன்றே நாத்திகத்தை வேரறுத்துச் சைவத்தை நிலை நாட்டும் என்பதை, அம்மையார் சிவனை வேத நாயகனாகப் போற்றியதிலிருந்து சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே வேதநெறி பரப்புவதற்காக வடக்கிலிருந்து அந்தணர்களை வரவழைத்தனர். 

அம்மையார் காலத்துக்கும் அப்பர் காலத்துக்கும் இடையில் வடக்கிலிருந்து அந்தணர்கள் வந்தார்கள் என்பதை எப்படி அறிகிறோம்?      

அம்மையார் காலம் வரை இல்லாத கணபதி வழிபாடும், திருநீறு பூசும் வழக்கமும் அப்பர் காலத்தில் காணப் படுகின்றன. அம்மையார், இறைவன் சுடலை நீறு பூசிய மேனியனாகக் காட்சி தருவதாகக் கூறுகிறாரே அன்றித் தான் நீறு பூசியிருப்பதாகவோ மற்ற இறை அன்பர்கள் பூசியிருப்பதாகவோச் சொல்லவில்லை. திருநீறு தந்து சம்பந்தர் பாண்டியனின் நோய் தீர்த்ததையும், திலகவதியார் அப்பரின் சூலை நோயைப் போக்கியதையும் பார்க்கும் போது அவர்கள் காலத்தில் சிவனடியார்கள் திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டு விட்டதை அறிகிறோம். இது பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப் பட்டது என்பதைக் கவனிக்க. மகாராஷ்டிர அந்தணர்கள்  ஹோமம் செய்த பின் அந்தச் சாம்பலை நீரால் குளிர்வித்துப் பூசும் வழக்கம் இருந்தது. இன்றும் அது அங்கும் இங்கும் தொடர்கிறது.

 அது போலக் கணபதி வழிபாடும் மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே இவை அங்கிருந்து அக்காலத்தில் இங்கு வந்து குடியேறிய ஒரு கூட்டத்தினரால் அறிமுகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. 

அவர்கள் அந்தணர்கள் என்பதை எப்படி அறிகிறோம்? 

மராட்டியக் கொங்கணக் கடற்கரைப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுவதிலிருந்து வந்தவர்கள் அந்தணர்கள் என்று தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரிச் சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் கொங்கணக் கடற்கரையில் நர்மதை நதி முகத்துவாரமாகிய புரோச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.     

இந்தக் குடியேற்றத்துக்குக் காரணம் என்ன? பஞ்சம் காரணமாகப் பிழைக்க வந்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால் அந்தணர்கள் மட்டும் வந்திருக்க முடியாது. பிற சாதியினர் வந்ததற்கானச் சான்றுகள் இல்லை. அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும். 

அழைத்தவர்கள் சோழ அரசர்கள் என்பதை எப்படி அறிகிறோம்? சோழ நாட்டில் தான் அந்தணர்களுக்கு மிகுதியான நிலங்கள் இறையிலியாகக் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும் அண்மைக் காலம் வரையிலும் இங்கு தான் அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். 

ஏன் நர்மதை நதிக்கரையிலிருந்து வரவழைத்தனர்? குஜராத்தில் லகுலீசர் என்பார் வேத ருத்திரனைப் பசுபதி என்ற பெயரில் வழிபடும் வழக்கத்துக்கு அடிகோலினார். பாசுபதச் சைவம் எனப்பட்ட இச்சமயம் அருகில் உள்ள நர்மதை நதிக்கரையில் பரவி இருந்திருக்க வேண்டும்.  மேலும் அக்காலத்தில் நர்மதை நதிக்கரை வேத நூற்கல்விக்கு ஒரு நிலைக்களனாக விளங்கி இருக்க வேண்டும் என்பது மேற்கல்வி கற்க விரும்பிய சங்கரர் அங்கு சென்றதிலிருந்து அறியப்படுகிறது. எனவே வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்க்க விரும்பிய சோழ அரசர்கள் இப்பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்க வேண்டும். 

லகுலீசரின் பிறந்த ஊராகிய காரவான் என்பதன் அடிப்படையில் இச்சமயம் காயாரோகணச் சைவம் எனப்பட்டது. தமிழ்நாட்டில் குடந்தை, நாகை, திருவொற்றியூர் ஆகிய மூன்று ஊர்களும் காயாரோகணத் தலங்கள் என அழைக்கப் படுவதிலிருந்து வந்தவர்கள் இம்மூன்று இடங்களில் முதன் முதலில் குடியேறி இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இவற்றில் முதல் இரண்டு இடங்கள் சோழ நாட்டில் உள்ளவை. மூன்றாவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தில் தான் அப்பகுதிகள்  பல்லவ நாடாகப் பெயர் பெற்றன.

தமிழ் நாட்டில், குறிப்பாகச் சோழ நாட்டில் அதற்கு முன் அந்தணர்கள் இல்லையா? இருந்தனர். ஆனால் அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று சைவ அந்தணர்களது எண்ணிக்கை மட்டும் சுட்டப் பட்டிருப்பதால் அறியலாம். பெரும்பான்மையான மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சிலர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது.

இந்த அந்தணர்கள் செய்தது என்ன? 

அம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை இந்த வடபுலத்து அந்தணர்கள் மேலும் கொண்டு செலுத்தினர். இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகளும் பரவின, கணபதி வழிபாடு, திருநீறு அணிதல் ஆகிய வழக்கங்களும் பரவின. 

வேதத்தைப் பரப்பினர். 

அம்மையார் காலத்தில் இல்லாத சிவன் என்ற பெயரும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் திருமூலர், அப்பர், சம்பந்தர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருப்பதிலிருந்து இக்காலத்தில் தமிழ்நாட்டில் யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியும் அதனுடன் இணைந்த சமகம் என்பதும் முதன்மைப் படுத்தப்பட்டன என்பதை அறிகிறோம்.

 

 

18.ஐந்தெழுத்து

அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து

தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய

அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட

கண்டத்தான் செற்பொற் கழல். (தி-10)

 

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே

எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய

கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த

அம்மானுக் காட்பட்ட அன்பு. (தி-16)

மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.

இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.

திரு.வி.க. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.

நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று இவை பொருள்படும்.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் எஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.

வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. இது, ‘நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும்’ என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. (அ-87) வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.

வடக்கிலிருந்து வந்த அந்தணர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடலான சமகம் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோருவது ஆகும். உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது.

சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராவிடினும் இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இது பிரசாரம் செய்யப்பட்டதால் மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது. சமணத்தை எதிர்த்து வைணவம் போரிட்டதாகச் சான்றுகள் இல்லை.

சிவன் என்னும் நாமம் ஏற்பட்டது எப்படி?

கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க நூல்களிலும் அம்மையார் பாடல்களிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.

சிவகதி அருள்பவர் சிவன்

முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று, காரைக்கால் அம்மையார் பாடல்களுக்குத் தான் எழுதிய உரையில் திரு.வி.கலியாணசுந்தரனார் கூறுகிறார். இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.

அம்மையார் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் ‘காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே’ என்கிறார். அவர் குறிப்பிடுவது முத்தி நிலையையே.

சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் தருவார் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார். (அ-29, 78)

இறைவன் காமனையும், காலனையும், முப்புரத்தையும் எரித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப்படுகிறார் அம்மையார். (அ-96)

இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார் என்பதை முன்னர்க் கண்டோம்.

இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும்.

“தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே” என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். (திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10)

பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே திருமூலர் பாடல்களிலும் தேவாரத்திலும் வந்துள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard