New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியக் குறிப்புரை -பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாரின் ‘தொல்காப்பியக் குறிப்புரை’ என்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
தொல்காப்பியக் குறிப்புரை -பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாரின் ‘தொல்காப்பியக் குறிப்புரை’ என்
Permalink  
 


தொல்காப்பியக் குறிப்புரை

tholkaappiyam1(பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாரின் ‘தொல்காப்பியக் குறிப்புரை’ என்னும் நூல் பற்றிய கருத்துரை)

தமிழின் தொடக்ககால மொழிநூல் வல்லுநர்களில் முக்கியமான ஒருவர் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி சுப்பிரமணிய சாஸ்திரி ஆவார். ‘பிசாசு’ எனத் தம்மை அறிந்தவர்களால் ‘அன்போடு’ அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சாஸ்திரியாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பிருப்பதனால்தான் அவரது தொல்காப்பியக் குறிப்புரை பற்றிச் சில சொல்லலாம் எனக் கருதுகிறேன். இருப்பிடரீதியாக ஒன்றுபட்டவர்கள் என்பதற்கு அப்பால், வெவ்வேறு காலங்களில் என்றாலும், ஒரே கல்லூரியின் ஆசிரியர்கள் நாங்கள் என்னும் ஒற்றுமையும் இருக்கிறது.

முதன் முதலில் வெளிவந்தது, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்புதான். 1930ஜூலையில் இது வெளிவந்துள்ளது. இதில் அவருடைய பெயருக்குக்கீழ் Professor of Oriental Studies, Bishop Heber College, Trichinopoly (on leave), now Assistant Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. தமது முகவுரையிலும் அவர் சொல்கிறார்: “திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் காலேஜில் படிக்கும் பி.ஏ. மாணவர்க்கு கால்ட்வெல் துரை எழுதிய திராவிட பாஷையிலக்கணம் கற்பிக்க முதன்முதல் 1919-ம் வருஷத்தில் எனக்கு நேர்ந்தது. அவர் தமிழ்மொழியைப் பற்றிக் கூறுவன தமிழிலக்கண நூல்களிற் கூறியனவாறே உள்ளனவா என்பதை ஆராய 1920-ம் வருஷத்தில் தொடங்கினேன். நன்னூலில் இனவெழுத்து, சார்பெழுத்து முதலியவற்றைப் பற்றிய விஷயங்கள் ஒலிநூல்களுக்கு ஒத்திராமையின், தொல்காப்பியத்தில் எவ்வாறு கூறப்பட்டன என்று அறிந்துகொள்ளத் தொல்காப்பியம் படிக்கத் தொடங்கி எழுத்ததிகாரத்தைப் படித்து அதனில் எனக்குத் தோன்றிய விஷயங்களை பிஷப் ஈபர் காலேஜ் பத்திரிகையில் வெளியிட்டேன்…….சொல்லதிகாரத்தில் உள்ள விஷயங்களை செந்தமிழ்ப் பத்திரிகையில் 1927-ம் வருடமுதல் வெளியிட்டேன்” என அவர் கூறும்போது பிஷப் ஈபர் கல்லூரியில் பணிபுரிந்த செய்தி மட்டுமல்ல, எதற்காகத் தொல்காப்பிய ஆராய்ச்சியைத் தொடங்கினார், அதன் நோக்கம் என்ன என்னும் செய்திகளையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்து (பிஷப் ஈபர் கல்லூரி மூடப்பட்டபிறகு) 1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ‘தொல்காப்பிய எழுத்ததிகாரம்-குறிப்புரையுடன்’ நூலிலும், “இவ்வுரை எழுத எனக்கு உதவியோர் பலர். அவர்கள் பிஷப் ஹீபர் காலேஜில் கால்ட்வெல் இலக்கணம் படிப்பிக்க இடம்கொடுத்த அக்காலேஜ் பிரின்ஸ்பல் Rev.Allan F.Gardiner அவர்களும்…” எனச் சொல்கிறார். தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரை நூலில் அவரது பெயருக்குக்கீழ், Principal, Raja’s College of Sanskrit and Tamil Studies, Tiruvadi and Formerly Professor of Oriental Studies, Bishop Heber College, Tirchinopoly and Asst.Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. இதன் வாயிலாக அவர் பிஷப் ஹீபர் கல்லூரி மூடப்பட்ட பிறகு திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார் என்பதையும் அறியமுடிகிறது.

இவ்வாறு ஒரே நிறுவனத்தின் ஆசிரியர்கள் என்ற தொடர்பு மட்டுமல்லாமல் வேறொரு தொடர்பும் இருக்கிறது. நான் பிஎச்.டி ஆய்வு செய்ய மேற்கொண்ட தலைப்பு ‘தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு’. 1925ஆம் ஆண்டு முதலாக ஐம்பதாண்டுத் தமிழ்ப்பொழில் இதழ்களை நான் ஆராய முனைந்தபோது அதன் ஒன்பதாம்ஆண்டு இதழ்களில் மன்னார்குடி நா.சோமசுந்தரம் பிள்ளை என்பார் முனைவர் பி.எஸ்.சாஸ்திரியாருடைய தொல் காப்பியக் குறிப்புரைக்கு ஒரு விரிவான மறுப்புரை – ஏறத்தாழ ஓராண்டுக்காலம் எழுதியதனைக் காண நேர்ந்தது. அவற்றைப் படித்த அனுபவமும் இந்நூல்கள் பற்றிக் கட்டுரைக்குக் காரணமாக அமைந்தது.

இவ்விரண்டு நூல்களிலுமே தமது பாரம்பரியத்தைப் பற்றிய குறிப்பினை நூல் இறுதியில் சுப்பிரமணிய சாஸ்திரியார் தரும் முறை இன்றைய நோக்கில் சற்றே விசித்திரமானது. தொல் காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பின் இறுதியில், “கௌசிககுல திலகரும், வடமொழியில் பாஷ்யரத்நாவளி முதலிய நூல்கள் இயற்றியவரும், சப்ததந்த்ரஸ்வதந்த்ரருமான சொக்கநாத சாஸ்திரிகளின் புத்திரரும், ராமபத்ர தீக்ஷிதரின் மைத்துனரும், சாப்திகர க்ஷா என்ற உரைநூல் இயற்றியவருமான த்வாதசாஹயாஜி பால பதஞ்சலியின் பேரனுக்குப் பேரனும், பின்னங்குடி ஸ்வாமிநாத சாஸ்திரிகளின் மூத்தகுமாரனுமான சுப்பிரமணிய சாஸ்திரியால் எழுதப்பெற்ற தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு முற்றும்” என்ற வாசகம் காணப்படுகிறது.

தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரையின் இறுதியில் இதேபோல, “கௌசிககுலதிலகரும் சப்ததந்த்ரஸ்வதந்த்ரரும் பாஷ்ய ரத்நாவளீ, சப்தகௌமுதீ, தாதுரத்நாவளீ என்ற நூல்கள் இயற்றியவருமான சொக்கநாதமகிகளின் வழித்தோன்றலும், மங்களாம்பிகை ஸ்வாமிநாத சாஸ்திரிகள் இவர்தம் புதல்வனுமான வித்தியாரத்தினம் டாக்டர் சுப்பிரமணிய சாஸ்திரியால் இயற்றப்பட்ட குறிப்புரை முற்றும்” என்று உள்ளது.

சற்றே வித்தியாசமான இந்தக் குறிப்புகளால், மிகப் புகழ்பெற்ற வடமொழி நூலாசிரியரான சொக்கநாததீட்சிதர் அல்லது சொக்கநாதமகி என்பவரின் பாரம்பரியத்தில் வந்தவர் இவர், இவரது தாயார் பெயர் மங்களாம்பிகை, தந்தையார் ஸ்வாமிநாத சாஸ்திரிகள் என்பதை அறிந்துகொள்கிறோம்.

எழுத்ததிகாரக் குறிப்புரை நூலின் பின்னால் சேர்க்கப்பட்டுள்ள Works of Dr.P.S. Subrahmanya Sastri என்ற இணைப்பிலிருந்து அவர் History of Grammatical Theories in Tamil, Tolkappiyam Vol.1 Eluttatikaram with English Commentary, Tolkappiyam Vol.2 Part I Collatikaram with an Elaborate English Commentary, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் குறிப்புரை யுடன், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, தமிழ்மொழிநூல், தமிழ்மொழியிலக்கணம், திருக்குறட்குறிப்பு (Part I) ஆகிய நூல் களை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. ஒருவேளை இவற்றிற்குப் பின்னும் வேறு நூல்கள் எழுதியிருக்கலாம். அவை எனக்குத் தெரியவில்லை. மேலும் தொல்காப்பியத்தை சாஸ்திரியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்றும் அறிகிறோம்.

இந்நூல்களை அக்கால அறிஞர்கள் எப்படி மதித்துள்ளனர் என்பதற்குச் சில குறிப்புகளும் காணப்படுகின்றன. உதாரணமாக History of Grammatical Theories in Tamil நூலுக்கு லண்டனிலுள்ள பேராசிரியர் ஆர்.எல்.டர்னர், ‘Very valuable work’ என்று பாராட்டியிருக்கிறார். பாரிஸிலுள்ள பேராசிரியர் ஜூல்ஸ் பிளாக்கும் பாராட்டியிருக்கிறார். சிகாகோவின் மொழியியல் பேராசிரியர் லெனார்ட் புளூம்ஃபீல்டு, கோபன்ஹேகனிலிருந்த பேராசிரியர் ஹோல்கர் பெடர்சன் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். அதேபோலத் தொல்காப்பியம் ஆங்கில விளக்கவுரை நூலினையும் நார்வேயிலிருந்த பேராசிரியர் ஸ்டென் கோனோவும், எடின்பர்கிலிருந்த ஏ.பி.கீத்-உம் பாராட்டியிருக்கின்றனர். இவற்றால் அவருடைய நூல்கள் உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்களால் எப்படி மதிக்கப்பட்டன என்று தெரியவருகிறது.

tholkaappiyam2இங்கு எடுத்துக்கொண்ட நூல்களின் பெயரும் ‘தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்றும் ‘தொல்காப்பியம் எழுத்ததி காரம்-குறிப்புரையுடன்’ என்றும் சற்றே மாறுபட்டுள்ளன. குறிப்பு என்பதும் குறிப்புரை என்பதும் இக்கால நோக்கில் நோட்ஸ் என மதிப்பின்றிக் கருதப்பட்டாலும்,இக்குறிப்புரை அவ்வாறானதல்ல. சொல்லதிகாரக் குறிப்பின்கீழ் அவர் A critical Study of Collatikaram with all the available Commentaries என்று கூறுவதும், எழுத்ததிகாரக் குறிப்புரையின்கீழ், with an elaborate commentary என்றிருப்பதும் மிகப் பொருத்தமானவை. காரணம், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, நிசசயமாகவே ஒரு சிறந்த ஆய்வுநூலாகத் திகழ்கிறது; எழுத்ததிகாரக் குறிப்புரை முன்னூலின் அளவுக்கு ஆய்வுச் சிறப்புடன் அமையவில்லை என்பதோடு அவரே சொல்வது போல ஒரு விரிவான உரையாக அமைந்துள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில் வடமொழி மேற்கோள்களை தேவநாகரி எழுத்தில் தந்துள்ளார். எழுத்ததிகாரக் குறிப்பிலுள்ள வடமொழி மேற்கோள்கள் கிரந்த எழுத்தில் தரப்பட்டுள்ளன. இவற்றையும் நாகரி எழுத்திலேயே தந்திருப்பின் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

இவ்வாறே, சொல்லதிகாரக் குறிப்பில் பின்னிணைப்பாகச் சில குறியீடுகளின் விளக்கம் என்ற தலைப்பில் அதிவியாப்தி, அவ்வியாப்தி, அன்னியோன்னியாச்சிரயம், உத்தேசியம், விதேயம், வாக்கியபேதம், பிரவிருத்திநிமித்தம், அநுவாதம், புரோவாதம், யோகவிபாகம், ஸங்கதி, கிருதி, அதிகார சூத்திரம், நியம சூத்திரம், வாசகம், துயோதகம் என்ற சொற்களின் அர்த்தங்களை எடுத்துரைத்துள்ளார். இவை படிப்போர்க்கு மிக்க பயன்தருவனவாக அமைந்துள்ளன. எழுத்ததிகாரக் குறிப்புரையில் ஏனோ இவ்வாறு செய்யவில்லை.

தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரை எழுதிய நோக்கத் தினை சாஸ்திரியாரே தமது முகவுரையில் குறிப்பிடுகின்றார்: “இரண்டு உரைகள் இருக்க இக்குறிப்புரை எற்றுக்கு என எண்ணம் வரல் தகும். அவ்வுரைகாரர்கள் நூலாசிரியர் எக்காலத்துக்குமுள்ள மொழிக்கு இலக்கணம் கூறுகின்றாரென நினைத்து, சூத்திரக்காரருக்குப் பின்னர் வந்த வழக்குகளையும் அச்சூத்திரங்களில் சிலவற்றை மிகையெனக் கொண்டு அவற்றாற் கொள்ளுகின்றனர். சிற்சில விடங்களில் நூலாசிரியர் கருத்துக்கு மாறுபாடாகப் பொருள்கூறுகின்றனர். சில விடங்களில் மொழிநூல் வல்லோர் கொள்கைக்கும் அவரது கொள்கைக்கும் மாறுபாடுகள் உள”.

இக்குறிப்புரையில் முன்பின் சூத்திரங்களுக்கு இயைபு கூறுதலும், முன்னருள்ள சூத்திரங்களிலிருந்து எவை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுதலும், சூத்திரத்திற்குச் சூத்திரப்போக்கை யொட்டியும் மொழிநூல்வல்லோரின் கொள்கைக்கு மாறுபாடின்றியும் பொருள் கூறுதலும், முடிந்தவரை மிகையாற் பொருள் கொள்ளாது ஆசிரியர் வழக்காலும், உலகநியாயங்களாலும் பொருள்கொள்ளுதலும், உதாரணங்கள் முடிந்தவரை இந்நூலிலிருந்தும், சங்கச் செய்யுள்களிலிருந்தும் காட்டுதலும், உரைகாரர்களின் கொள்கையை யாய்தலும், வடமொழி நூலோடு ஒற்றுமை காட்டுதலும் ஆகிய பலவற்றைக் காணலாம். இவ்வுரை எழுதியதற்குக் காரணம்,

“எளிதில் எல்லோரும் தொல்காப்பியத்தைப் படிக்கவேண்டுமென்பதும், மாணாக்கர்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்பதும், நூலாசிரியர் அழகாக முற்கூறியதைப் பிற்கூறாது சாஸ்திரீய முறையிற் சூத்திரங்கள் இயற்றியதைக் காட்டவேண்டும் என்பதும், அவரது அறிவுமுதிர்ச்சியைப் பிறர்க்கு உணர்த்தவேண்டு மென்பதும் போன்றனவாம்.”

என்பதிலிருந்து ஆசிரியர் உரை எழுதிய நோக்கமும், காரணங்களும் தெளிவாகின்றன. இவற்றையே சொல்லதிகாரக் குறிப்பு வரைந்ததற்கான காரணங்களாகவும் கொள்ளலாம். சொல்லதிகாரக் குறிப்பில்,

“பண்டைநூல்கள் இயற்றிய நூலாசிரியரிடமும், உரைகள் இயற்றிய உரைகாரர்களிடமும் மிக்க பக்தியுடனும், கௌரவ புத்தியுடனும் இருக்கவேண்டும் என்பதோடு, அவர்கள் கொள்கையைத் தொல்காப்பியம் படிப்போர் நன்கு ஆராய்தல் வேண்டும் என்பதையும் அறிவிக்கவே இச்சிறுநூல் எழுதப்பட்டது”

என்கிறார். எழுத்ததிகாரக் குறிப்புரையில் கூறிய “எளிதில் எல்லோரும் தொல்காப்பியத்தைப் படிக்கவேண்டும், மாணாக்கர்களின் அறிவை வளர்க்க வேண்டும்” என்னும் பயன்வழிக் கருத்துகளை விட்டுப் பிறஅனைத்தையும் நாம் ஓர் ஆய்வுக்கான திட்டங்களாகவே கொள்ளலாம். இருநூல்களிலும் இவை அனைத்தையும் சாதித்திருக்கிறார் என்பதையும் நாம் காண இயலும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: தொல்காப்பியக் குறிப்புரை -பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாரின் ‘தொல்காப்பியக் குறிப்புரை’ எ
Permalink  
 


சொல்லதிகாரக் குறிப்பின் தொடக்கத்தில் ரா.ராகவையங்காரின் பாயிரம் அமைந்துள்ளது. இரண்டிலுமே ஆசிரியரின் முகவுரை இடம் பெற்றுள்ளது. சொல்லதிகாரக் குறிப்பின் முகவுரையில், தொல்காப்பியர் வடமொழி ப்ராதிசாக்ய நூல்களையும், யாஸ்கரது நிருக்தத்தையும் பிற இலக்கண நூல்களையும் நன்கறிந்தவர், தொல்காப்பியருக்கு முன்னால் தமிழிலக்கண ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கவேண்டும், தமிழ்மொழி வடமொழி இரண்டையும் நன்கு ஆராய்ந்து முன்னிருந்த இலக்கணங்களினும் சிறந்ததோர் இலக்கணம் எழுத முனைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறிப், பிறகு தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள வேற்றுமை களைப் பட்டியலிடுகின்றார். பின்னர் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கூறுகிறார். பிறகு தொல்காப்பியனார் சூத்திரஞ்செய்த முறை, சொல்லதிகாரச் சூத்திரங்களில் வழங்கப்பட்ட வடமொழிச்சொற்கள், அச்சொற்களின் மொழி பெயர்ப்பு, உரைகாரர்களைப் பற்றித் தோற்றிய செய்திகள் ஆகியவற்றைக் கூறுகின்றார். முப்பது பக்க அளவில் இம்முகவுரை சிறப்பாக அமைந்துள்ளது.

எழுத்ததிகாரக் குறிப்புரையின் முகவுரையில் தொல்காப்பியர் வரலாறு, எழுத்ததிகார உரையாசிரியர்கள் வரலாறு ஆகியனவே காணப்படுகின்றன. தொல்காப்பியர் வரலாறு கூறும்போது, அவரைப் பற்றிய சில கதைகளைக் கூறி அவை பொருந்தாமையைச் சொல்லிவிட்டு, “ஆசிரியர் தொல்காப்பியனாரைப் பற்றி இந்நூலிலிருந்து அறியப்படுவன ஈண்டுக் கூறப்படும்” என ஆய்வுமுறைப்படி செல்கிறார். சொல்லதிகாரக் குறிப்பில் சில குறியீடுகளின் விளக்கம், பொருட்குறிப்பு (Index) என்பன இறுதியில் காணப்படுகின்றன. எழுத்ததிகாரக் குறிப்புரையின் இறுதியில், சூத்திர முதற்குறிப்பகராதி, சூத்திரச் சொல்லகராதி, உரைச்சிறப்புச் சொல்லகராதி என்பன சிறப்பாக அமைந்துள்ளன.

உரையாசிரியர்தம் கொள்கைகளை ஆராய்தல் என்பதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் சுப்பிரமணிய சாஸ்திரியார். சான்றுக்கு ஓரிரண்டைக் காணலாம். கிளவியாக்கத் தொடக்கத் தில், ‘ஒவ்வோர் ஓத்துள்ளும் உணர்த்திய பொருள்’ எனப்பார்க்கும்போது, உரையாசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார் மூவர் கூற்றுகளையும் ஆராய்ந்து, “இவற்றுள் தெய்வச் சிலையார் கூற்றே மிகப் பொருந்தும்” என்று எடுத்துக் காட்டுகிறார். இருநூல்களிலுமே, நூல், உரைகள் இவற்றிலுள்ள பாடபேதங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார். உரைகளை ஆராய்ந்து செல்லும்போது ஆங்காங்குத் தம் கருத்துகளையும் சுட்டிச் செல்கின்றார். உதாரணமாக, குற்றியலுகரப் புணரியலின் ‘உயிரும் புள்ளியும்’ என்ற நூற்பாவின் உரையில்,

“குறிப்பினும் பண்பினும் இசையினும்தோன்றி நெறிப்படவாராக் குறைச்சொற் கிளவி என்றது உரிச்சொல்லைக்குறிக்கும் என்பது சொல்லதிகாரத்து உரியியல் முதற்சூத்திரத்தான் விளங்கும். குறைச்சொல் என்றதனால் பெயர், வினை இவற்றின் பகுதியே உரிச்சொல்லாம்”

எனத் தம் கருத்தைச் சொல்கிறார்.

இவ்வாறு தமது கருத்துரைக்கும் இடங்கள் பல நமது ஆராய்ச்சிக்குரியன. உதாரணமாக, இரண்டாம் நூற்பாவின் உரையில்,

“பண்டைக்காலத்தில் ஆய்தமென்றது ஓரிடத்திற் பிறவாது ஆறு இடங்களிற் பிறந்தது என்பதும், அக்காரணம் பற்றி அறுவகைப்பட்டது என்பதும் வெளிப்படை. அவ்வாறே குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அவற்றின் பற்றுககோடு பிறந்த இடங்களிற் பிறந்து பல்வகைப்பட்டன என்பதும வெளிப்படை” என்கிறார். இது ஆராயத்தக்கது. அதேபோல அளபெடை பற்றிக் கூறும்போது, “ஆசிரியர் தொல்காப்பியனார் ஆஅ, ஈஇ, ஊஉ என்றவிடத்தில் அ, இ, உ இவற்றையே அளபெடை என்ற குறியாற்கொண்டனர் என்பதும், அவற்றைத் தனியலியெழுத்தாகக் கொண்டனர் எனபதும் விளங்கும்” என்பதும் ஆராயத்தக்கது.

இதேபோலச் சொல்லதிகாரக் குறிப்புரையில், 66ஆம் நூற்பா (பெயரப்பயனிலை பற்றியது)வுரையில், இச்சூத்திரத்தானும் முற்சூத்திரத்தானும் உருபேற்றல், பயனிலை கோடல் என்பன பெயர்க்கு இலக்கணம் என்பது பெறப்பட்டது என்பர் உரைகாரர்கள். எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே (சொல்.155) என்று ஆசிரியர் சொல்லிலக்கணம் கூறினமை யானும், பெயர்ப்பொருளைக் குறிப்பதே பெயர் என்பது அக் குறியீட்டாற் பெறப்படுதலானும், பெயரியலிற் கூறிய பெயர்ச் சொற்கள் அனைத்தும் பெயர்ப்பொருளையே உணர்த்துகின்றமை யானும் அவ்வாறு கொள்ளவேண்டியது கடப்பாடின்று”என்கிறார். அதாவது உருபேற்பது பெயர்ச்சொல்லமைப்பிற்குக் கட்டாயமில்லை என்கிறார். இப்பகுதியை எழுதும்போதே அடிக்குறிப்பில், “உருபேற்றல் பெயருக்கு இலக்கணம் அன்று. இலக்கணமாயின், ஒருசொல், உருபேற்பின் பெயராகும் பெயராயின் உருபேற்கும் எனக் கூற வேண்டிவரும். அப்போது அன்னியோன்னிய யாச்சிரயம் எனும் குற்றம் வரும். ஆயினும் அவ்வாறு உரைகாரர்கள் கூறியது சுபந்தம் என்பதைப் பெரும்பான்மையும் பெயராக வடமொழியிலக்கணக்காரர் வழங்குவதை ஒட்டிப்போலும்; ப்ராதிபதிகமே உருபேற்றலால் வடமொழி யிலக்கணக்காரர்க்கு அக்குற்றம் வராது”என விளக்குகிறார். ஆயினும் இவ்விளக்கம் ஆராயப்பட வேண்டியதே.

இதேபகுதியில், பெயர்ப்பொருளைக் குறிப்பதே பெயர் என்னுமிடத்தில், அடிக்குறிப்பாக,

“மேற்கூறிய இலக்கணமும், த்ரவ்யாபிதாயகம் நாம் என்ற ருக்வேத ப்ராதிசாக்கிய வாக்கியமும் ஒப்பிடத்தக்கன”

என ஒப்பீடும் காட்டுகிறார்.

எழுத்ததிகாரக் குறிப்புரை இவ்விதம் அமையவில்லை. அதில் ஒரு நூற்பாவினைத் தந்தபிறகு, ‘பொருள்’ என்பதில் தாம் எவ்விதம் பொருள்கொள்கிறார் என்பதை அன்வயப்படுத்தல் வாயிலாகவும் பொழிப்புரை வாயிலாகவும் தந்துவிடுகிறார். பிறகு தக்க உதாரணங்கள் தருகிறார். அதற்குப் பிறகு தம்முடைய விளக்கம் ஏதும் தேவைப்படின் தருகிறார். இதன்பிறகு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரது உரையையும் சுருக்கமாகச் சொல்லி, அவற்றின்மீது தமது கருத்துரையையும் சுருக்கமாகக் கூறிச் செல்கிறார். இதனால் குறிப்புரை என்ற பெயர் இதற்குப் பொருந்துகிறது். கடைசியாக, உரைகளில் பாடபேதம் ஏதாவது இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். எனவே முற்கூறியபடி, எழுத்ததிகாரக் குறிப்புரை என்பது உரைவிளக்கமாகவும், சொல்ல திகாரக் குறிப்பு என்பது ஆராய்ச்சிக்கட்டுரை போன்ற அமைப்பி லும் உருவாகியிருக்கின்றன.

உரையாசிரியர்கள் கருத்தை ஆராயும் முறைக்கு ஒரு சான்றினைக் காணலாம். கிளவியாக்கம் சூத்திரம் 34 “மன்னாப்பொருளும் அன்னவியற்றே”. இதில் வரும் ‘மன்னாப் பொருள்’ என்ற சொல்லை ஆராய்கிறார் சாஸ்திரியார். “உரையாசிரியரும் சேனாவரையரும் மன்னாப்பொருள் என்பதற்கு இல்லாத பொருள் என்று பொருள்கொண்டனர். நச்சினார்க்கினியர், உலகத்து நிலையில்லாத பொருள் என்று பொருள்கொண்டு, அப்பொருள் கொண்ட ‘மன்னுக பெரும நிலமிசையானே’ ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ ‘மன்னாப்பொருட்பிணி முன்னிய’ என்ற மூன்று மேற்கோளும் அதற்கு யாக்கையும் நில்லாது என்ற உதாரணமும் காட்டிப் பிறகு ‘இல்லாப் பொருள்களும் எச்சவும்மை பெற்றவாறு காண்க’ என்று கூறினார். தெய்வச்சிலையார் நிலையாத பொருள் என்றே பொருள் கொண்டனர். எல்லாவுரையும் நோக்கின் மன்னாப்பொருள் என்பதற்கு நிலையாத பொருள் என்ற பொருளே பொருத்தமாகத் தோன்றுகிறது. உம்மையால் இல்லாப்பொருளை நச்சினார்க் கினியர் கொள்ளுவது சூத்திரப் போக்குக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை”.

இப்பகுதியில் அவரது தர்க்கரீதியான சிந்தனையையும் எளிய நடைப்போக்கினையும் காணஇயலும்.

இப்படி ஆராய்ந்த பிறகு தமது கருத்தினைச் சொல்லுகிறார்: “இச்சூத்திரக் கருத்துயாதெனின் ‘இவ்வுலகத்தில் ஒருவர் செல்வம் நிலையாது’ என்று சொல்லுமிடத்து, ஒருவர் செல்வமும் என்று செல்வம் என்பதற்குப்பின் உம்மை கொடுக்கவேண்டும் என்பதே. இவ்வாறு கொள்ளின் ‘அன்னவியற்றே’ என்பதற்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் என்பதே பொருளாகும்”.

சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய நடை பொதுவாக நல்ல தமிழ் நடையும், ஆங்காங்கு வடசொற்கள் இசைதலும் ஒருங்கே பெற்றிருப்பது ஆகும்.

பொதுவாக சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய சொல்லதிகாரக் குறிப்புரை பின்வருமாறு அமைகிறது. சூத்திரத்திற்குக் கீழ் முதலில் பாடபேதம் இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். பிறகு அச் சூத்திரத்தின் பொருளைப் பொதுவாக விளக்குமுகத்தான் அவதாரிகை என்ற பகுதியை ஒரு சில சூத்திரங்களுக்கு மட்டும் வைக்கிறார். பிறகு வரிசையாக உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், தெய்வச்சிலையார் போன்றோர் கருத்துகள் எடுத்துரைக்கப்படுகின்றன. அடுத்து ஒவ்வொரு உரையாசிரியரின் கருத்து வன்மை மென்மைகளும் ஆராயப்படுகின்றன. அவற்றிற்குள்ளும் பாடபேதம் இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். கடைசியாகத் தமது கருத்துகளை ஆதாரங்களுடனும் உதாரணங்களுடனும் சொல்லி முடிக்கிறார். தேவையான இடங்களில் அடிக்குறிப்புகளை மேற்கொள்கிறார்.

உதாரணமாக 11ஆம் நூற்பாவின் விளக்கத்தில்

“மயங்கல்கூடா, தம்மரபினவே என்ற இரண்டனுள் ஒன்றே போதும் என்று சேனாவரையர் வினாவெழுப்பிச் ‘சொல்லில் வழியது உய்த்துணர்வது’ என்று விடைகூறினர். இதன் கண் அடங்காத மரபினையும் அடக்கவேண்டி ‘தம்மரபினவே’ என்பதை யோகவிபாகம் செய்து பயன் கூறியிருக்கின்றனர்”

என சேனாவரையர் உரைகொள்ளும் முறை பற்றி எழுதும்போது, யோகவிபாகம் என்ற இடத்தில் அடிக்குறிப்பிட்டு “யோகவிபாகம் என்பது ஒரு சூத்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் நூற்புணர்ப்பு வகை” என விளக்கம் தருகிறார்.

சொல்லதிகாரக் குறிப்பிலும், எழுத்ததிகாரக் குறிப்புரையிலும் அவர் ஆண்ட நூற்களின் பட்டியலைச் சிறிது நோக்கலாம். சொல்லதிகாரக் குறிப்பில், வழக்கமான உரையாசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிஆயார், கல்லாடனார் உரைப் பதிப்புளோடு, வீரசோழியம், நன்னூல்,(மயிலைநாதர் உரை, விருத்தி யுரை, காண்டிகையுரை) ஆகியவையும் உள்ளன. இலக்கண விளககம, பிரயோகவிவேகம், தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி, கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் ஆகியவையும் சுட்டப்படடுள்ளன. கையாண்ட வடமொழிநூல்களாக, மூன்றுவேத ப்ராதிசாக்கியங்கள், யாஸ்க நிருக்தம், பாணினி அஷ்டாத்யாயீ, பாணினி சிக்ஷை, பர்த்ருஹரி வாக்கியபதீயம், ஹேலாரா ஹாராஜீயம் ஆகிய நூல்களையும் திருக்கோவையார், கம்பராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களையும் காணமுடிகிறது. எழுத்ததிகாரக் குறிப்புரையில் தமிழ்நூல்களில் நேமிநாதம், யாப்பருங்கல விருத்தி, இவை சேர்ந்துள்ளன. இவற்றோடு, செந்தமிழ்-புறநானூற்றுக் குறிப்பு, செந்தமிழ் தொகுதி 25 ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத நூல்களில் ருக்வேத சம்ஹிதை, தைத்திரீய சம்ஹிதை, பகவத் கீதை, மஹாபாஷ்யம், காமசூத்ரம், மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி, நாட்டிய சாஸ்திரம், வாமந காவ்யாலங்காரம், உத்தர ராமசரிதம், வாசஸ்பத்தியம் ஆகியவை மேலதிக நூல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், Philological works என்னும் தலைப் பில், Caldwell-comparative Grammar of Dravidian Languages, Burnell-On Aindra School of Grammarians, P.S.Subrahmanya Sastri – History of Grammatical Theories in Tamil. South Indian Inscriptions, Bishop Heber College Magazine 1925, Mac Donell’s Vedic Grammar ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய சமஸ்கிருத அறிவு தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே மொழிப்பயன்பாட்டினை அறிந்துகொள்ளப் பல இடங்களில் பயன்படுவதனைக் காணலாம். உதாரணமாக, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில், 111ஆம் நூற்பாவுக்கு (எனையுருபும் அன்னமரபின மானமிலவே சொன்முறையான) உரையெழு தும்போது,

“இச்சூத்திரத்தில் மானம் என்பதற்குக் குற்றம் என்று எல்லாவுரை களிலும் பொருள்கூறப்பட்டுள்ளது. மானம் என்பதற்குப் பிரமாணம் என்று பொருளேயன்றிக் குற்றமென்று பொருள் இருப்பதாகத் தெரியவில்லை; ஹாநம் என்ற வடமொழியின் தற்பவமாகிய ஆனம் என்பதற்கு, குற்றமென்று பொருளாம். ஆகவே ‘மெல்லெழுத்து மிகினுமானமில்லை’ (எழுத்.341) என்னுமிடத்து மெல்லெழுத்து மிகினும் மானமில்லை என்று பிரித்துப் பொருள்கொண்ட அச்சிட்டோர் இங்கும் ஆனம் என்று ஏட்டிலிருந்ததை மானம் என்று திருத்திக்கொண்டனரோ என்று கருதவேண்டியதாக இருக்கிறது” எனக்கூறி, அதற்கு அடிக்குறிப்பாக,

“சூடாமணி முதலிய நிகண்டுகளில் மானம் என்பதற்குக் குற்றம் என்ற பொருளிருக்கிறது எனச் சிலர் எண்ணலாம். அந்நிகண்டு களில் வடமொழிச் சந்தியைத் தவறாகப் பிரித்து வழங்கிய வேறு சொற்களும் காணப்படுதலின் அஃதொரு காரணமாகாதென்க” என்கிறார்.

இதனையே பின்னர் எழுத்ததிகாரக் குறிப்பிலும் வற்புறுத்தி, 32ஆம் நூற்பா (தம்மியல் கிளப்பின் எல்லாவெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மானமில்லை) உரையில்,

“மயக்கமானமில்லை என்றவிடத்து மயக்கம் மானம் இல்லை எனப் பதப்பிரிவு காட்டியுள்ளார் பதிப்பித்தோர். பிற்காலத்து நிகண்டுகளில் மானம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளிருத்தலின் அவ்வாறு செய்தனர் ஆகும். ஆனால் ‘மயக்கம் ஆனம் இல்லை’ என்ற பதப்பிரிவே தக்கதாகும். ஏனெனில் மானம், ஆனம் என்பன மாநம், ஹாநம் என்ற வடமொழிச் சொற்களின் தற்பவமாகும்; வடமொழியில் மாநம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளில்லை; ஹாநம் என்றதற்கே அப்பொருள் உண்டு”

எனக் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியத்தில எங்கெங்கெல்லாம் மானமில்லை என வருகின்றதோ அங்கெல்லாம் பிறழ் பிரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் அறிகிறோம். இம்மாதிரி வெளிச்சமூட்டும் இடங்கள் பலப்பல.

சொல்லதிகாரக் குறிப்பு நூலுக்கு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை எழுதிய மறுப்புகளைப் படிக்கும்போது அவை பெரும்பாலும் வெறுப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்பட்டனவாகவே எனக்குத் தோன்றியது. முதல் இருபது பக்கங்களைமட்டும் ஆராய்ந்து அவர் தந்திருந்த இருபது மறுப்புகளில் ஒன்றே ஒன்று மட்டுமே எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. “வினைக்கு வேற்றுமையுருபைச் சேர்ப்பின் அது பெயராய்த் தமிழில் ஆகின்றது; அவ்வாறு வடமொழியில் இல்லை” என்பதற்கான மறுப்புரைதான் அது. அநேகமாகப் பிற குறைகளெல்லாம் சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய நடை பற்றியனவே.

இவ்வாறு பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பும், எழுத்ததிகாரக் குறிப்புரையும் வளம் நிறைந்த, ஆழ்ந்த இலக்கண ஆய்வுக்குத் துணைசெய்யக் கூடிய சிறந்த படைப்புகளாக அமைந்துள்ளன. குறிப்பாக, சமஸ்கிருத இலக்கணக் கருத்துகளையும், தமிழ் இலக்கணக் கருத்து களையும் ஒப்பிட்டு ஆராய விரும்புவோர்க்கு இவை மிகச் சிறப்பான கையேடுகளாக உதவக்கூடியவை எனலாம்.

அதே சமயம் சாஸ்திரியார் சொல்லக்கூடிய எல்லாக் கருத்து களும் இன்றைய மொழியியல் நோக்கில்கூட ஒப்புக்கொள்ளத்தக்கவை அல்ல. அன்றன்றைய கருத்துவளர்ச்சியோடு இணைத்து நோக்கி நூல்களை மேம்படுத்தி நோக்கும் பணி இடையறாது நடக்க வேண்டிய ஒன்று. தமது காலத்தில் அதனை சாஸ்திரியார் நிறைவேற்றியிருக்கிறார். சாஸ்திரியாரது காலத்திற்குப் பின்னர் ஒப்பியல் மொழிநூலிலும், மொழியியலிலும், வரலாற்று மொழியியலிலும், ஏற்பட்ட கருத்து மாற்றங்களைக் கணக்கில்கொண்டு இன்றும் மொழி வல்லுநர்கள் இப்படிப் பட்ட குறிப்புரைகளை அல்லது விரிவான உரைகளை எழுத இயலும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard