New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை


Guru

Status: Offline
Posts: 24765
Date:
குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை
Permalink  
 


குமரி மாவட்டத்தின் வரலாறு என்பது எப்படி பாண்டிய நாட்டு வரலாற்றோடும், ஆய்வேள் நாடு எனப்பட்ட வேள் நாட்டின் (பின்னாளைய திருவிதாங்கோடு ராஜ்யம்) வரலாற்றோடும் பிணைந்துள்ளதோ, அது போன்றே நாடார் என்ற சாதிப் பட்டத்தின் பெயரால் அழைக்கப்படும் சான்றோர் சமூகத்தின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்துள்ளது. அண்மைக் காலமாக இக்கண்ணோட்டத்தில் குமரி மாவட்டத்தின் சமூக வரலாற்றை எழுதுகிற முயற்சிகள் தொடங்கியுள்ளன. பதிப்பிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் ஆழமாக ஆராயப்படாத ‘தம்பிமார் கதை’, அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட ‘ஓட்டக்காரன் கதை’ போன்ற நாட்டுப்புற – வில்லுப்பாட்டு இலக்கியங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி வரலாறு எழுதும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

அண்மைக் கால முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது Kanniyakumari – aspects and architects என்ற தலைப்பில் அமைந்த இம்மானுவேல் அவர்களின் நூலாகும். (இந்நூலில் ஓட்டக்காரன் கதைப்பாடல் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.) இம்முயற்சிகளில் கட்சி கட்டுதல், ஆதங்கம் கொள்தல் போன்ற சில குறைபாடுகள் இருப்பினும் இக்குறைபாடுகள் வட்டார வரலாறு எழுதும் முயற்சிகளில் மட்டும் காணப்படும் குறைபாடுகள் அல்ல. பொதுவாகவே இந்திய நாட்டின் சமூக வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தும்போது, இக்குறைபாடுகள் காணப்படுவது ஆச்சரியப்படத்தக்கதன்று. தனக்குரிய நியாயமான பங்கு மறுக்கப்பட்டதாகவும், தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் கருதும் ஒரு சமூகம் அல்லது சாதிக் குழு முனைந்து நின்று தனது வரலாற்று ஸ்தானத்தை நிலை நிறுத்தவும், தனது நிலைப்பாட்டினை முரசறைந்து வெளிப்படுத்தவும் முனையும்போது – குறிப்பாக அம்முனைப்பு வரலாறு எழுதும் முயற்சியாக வெளிப்படும்போது – இத்தகைய குறைபாடுகள் துல்லியமாகத் தெரிவது வியப்புக்குரியதன்று.

வரலாற்று ஆய்வாளர்கள் இத்தகைய போக்குகளில் இருந்து ஒதுங்கி நின்றுவிடவும் முடியாது; கோஷம் போடும் அரசியலில் கலந்துவிடவும் முடியாது. இந்நிலையில் வரலாற்று ஆய்வாளர்களால் என்ன செய்யப்பட இயலும், என்ன செய்யப்பட வேண்டும் – இது குறித்தக் குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றாய்வு தொடர்பான என்னுடைய ஆய்வுக் கருத்துகளை இங்கு எழுத விழைகிறேன்.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்த்தாண்ட வர்மன் வேணாட்டு (திருவிதாங்கோடு) அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நிகழ்ந்த பூசல்களை விவரிக்கின்ற ஒட்டக்காரன் கதையில் மாறச்சன், அனந்த பத்மநாபன் என்ற சான்றோர் குல வீரர்கள் முதன்மையான இடம்பெறுகின்றனர். அதேபோன்று மார்த்தாண்ட வர்மனுக்கு எதிரிகளான பப்புத் தம்பி, ராமன் தம்பி ஆகியோருக்குப் படைத்துணை புரிந்தவர்கள் வலங்கைச் சான்றோர் என்று தம்பிமார் கதைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்ட சான்றோர் குலப் பிரிவினர் ஆவர்.

தமிழக வரலாற்றில் வலங்கை, இடங்கைச் சாதிகள் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ள வரலாற்று அறிஞர்களுள் ஒருவருமே கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென் கோடியில் வலங்கைப் படைப் பிரிவு ஒன்று இருந்ததைப் பற்றி அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத் தலைநகரமாக உருவாகிவிட்ட சென்னை நகரில் வலங்கை இடங்கைச் சாதியினரிடையே பெரும் கலவரங்கள் நிகழ்ந்தமை குறித்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதியுள்ளவர்கள்கூடக் குமரி மாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த வலங்கைப் படைப்பிரிவு பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை.

வலங்கை, இடங்கை என்ற இரு சாதிப் பிரிவுகளுள் பல சாதியினர் அடங்கியிருந்தனர். இந்த இரண்டு பிரிவுகளும் போர் முறைகள் தொடர்பான சாதிப் பிரிவுகளே தவிர வேறு எந்த அடிப்படையிலும் இவை வலங்கை, இடங்கை என்று பிரிக்கப்படவில்லை. வலங்கைத் தளம், இடங்கைத் தளம் என்றே சோழர் காலக் கல்வெட்டுகளில் இவை குறிப்பிடப்படுகின்றன.1 தளம் என்பது படைத்தளம் என்ற பொருளுடையது. இடங்கைத் தளத்துச் சாதிகளைவிட வலங்கைத் தளத்தைச் சேர்ந்த சாதிப் பிரிவினர் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்டனர் என்பது வெளிப்படையான ஓர் உண்மையாகும். இவ்வாறு கருதப்படக் காரணம் வலங்கைப் படை என்பது முறையான பயிற்சிபெற்ற படை அதாவது முறைப்படியான இராணுவப் பிரிவு என்பதனாலும், அமைதிக் காலங்களில் விவசாயப் பணி போன்றவற்றையும் கவனிக்கின்ற குடிபடைகள் போலின்றி முழுநேரப் போர்ப்படையாக இருந்தமையாலும்தான் எனத் தோன்றுகின்றது.

அறப்போர் முறை, போர் வியூகங்கள், ஆயுதமின்றிப் போரிடும் அங்கப் போர் முறை போன்றவற்றைக் கற்பிக்கின்ற பரிக்கிரகங்கள் எனப்பட்ட போர் அவைகளில் (military academy) போர்ப் பயிற்சி அளிக்கின்ற உயர் வர்க்க அலுவலர்களே வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் எனப்பட்ட சோழ அரச குலத்தைச் சார்ந்த சான்றோர் என நாம் ஊகிக்க முடிகிறது. இத்தகைய பரிக்கிரகங்களில் பயிற்சி பெற்றவர்களுள் வன்னியர் என்ற சாதிப் பட்டம் பூண்ட கள்ளர் குலப் பிரிவினரும் இருந்தனர் எனத் தெரியவருகிறது. இன்று வன்னியர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படுகின்ற பள்ளி குலத்தவர் அல்லது காடவர் குலத்தவர் வேறு; வன்னியக் கள்ளர் வேறு. பல்லவ அரச குலத்தவருடன் தாய்வழி உறவுடைய காடவர் அல்லது பள்ளி குலத்தவர் இடங்கைப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். காடவர் என்ற சொல்லின் வடமொழி ஆக்கம்தான் வன்யர் என்பதாகும். இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர். இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.

கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய, சென்னை பாடியிலுள்ள திருவலிதாயம் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள, இரண்டாம் தேவராயர் கல்வெட்டில் விஜயநகர அரச அலுவலர்களான வன்னியர்கள், அவ்வூர்ப் பள்ளி குலத்தவர்க்குச் சில சலுகைகள் வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது. வன்னியர் என்ற சாதிப் பட்டம் நெருப்பு என்று பொருள்படும் வஹ்னி என்ற வடமொழிச் சொல்லிருந்து தோன்றியிருக்கலாம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும், அகம்படிய மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் முத்தரையர் சமூகத்தவர்கள் சின்ன வன்னியனார் என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர். தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)

வன்னியர் சாதிப் பட்டம் புனைந்த மேற்குறித்த கள்ளர், முத்தரையர் சாதிப்பிரிவினரும் பிற்காலச் சோழர் ஆட்சியில் வலங்கை உய்யக்கொண்டார் எனப்பட்ட சான்றோர் குலப் போர்ப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்ற படைவீரர்களே என்று கருத வேண்டியிருக்கிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சி ஏற்பட்டதன் விளைவாக இத்தகைய சான்றார் குலப் போர்வீரர்களும் கள்ளர் (வன்னியர்) சாதிப்பிரிவுப் போர்வீரர்களும் குமரி மாவட்டத்தில் குடியேறி நிலைப்படையில் இடம்பெற்றிருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு. பள்ளிவில்லிகள் எனப்பட்ட விற்படை வீரர்கள், வில்லவர்கள் (சேரர்) நாட்டில் குடியேற்றப்பட்டிருக்கக்கூடும் எனினும் அவர்கள் இடங்கைப் போர்ப் படையினராகவே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ அரசனின் பட்டப்பெயரோடு கூடிய தரணி விச்சாதிரத் தனு தம்பர் எனப்பட்ட விற்படை வீரர்களில் படையிலான் தமிழன் மாணிக்கன் என்பவன், சோழ நாட்டிலிருந்து குமரி மாவட்டத்தில் குடியேறிய ஒருவன் என்பது கி.பி. 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து ஊகிக்கப்படுகிறது. இத்தகையோருடனான மண உறவில் உருவானவர்கள் கள்ளச் சான்றார் பிரிவினர் எனலாம். கள்ளச் சான்றார் பிரிவினரை மேனாட்டார் என அழைப்பது, ஈச நாட்டுக் கள்ளர் (திண்டுக்கல் பகுதி) தொடர்பால் ஆகலாம்.

தம்பிமார் கலகத்தின்போது மார்த்தாண்ட வர்மா ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவிய படைப்பிரிவுத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்க இருவர் சான்றோர் குலத்தின் இத்தகைய கள்ளச் சான்றோர் பிரிவைச் சேர்ந்த மாறச்சன் மற்றும் அனந்த பத்மநாபன் ஆவர். அனந்த பத்மநாபன் பிராந்தன் சாணான் என்றும் அழைக்கப்பட்டார் என்றும் இது இழிவுத் தொனியுடன் கூடிய பெயர் என்பதனால் அப்பெயர் தவிர்க்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது சரியான கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறச்சன் என்ற பெயரும் சரி, பிராந்தன் சாணான் என்ற பெயரும் சரி, மிகப் பழமையான கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, குறிப்பாகச் சோழர்கள் ஆதிக்கம் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட காலகட்டத்தைச் சார்ந்த சில வீரர் பெயர்களின் வம்சாவளித் தொடர்பைக் காட்டுகின்றன என ஊகிக்க இடமுண்டு. எடுத்துக்காட்டாகச் சுசீந்திரத்திலுள்ள சோழன் தலைகொண்ட வீர பாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்2பொழியூர் நாட்டுப் பொழியூர் சேராந்தகப் பல்லவரையனாகிய மாறனாச்சன் என்பவர் சிவிந்திரர் மகாசபை வசம் முப்பது ஈழக் காசுகள் கொடுத்து நந்தா (அணையா) விளக்கொன்று எரிக்க ஏற்பாடு செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மாறன் ஆச்சன் என்ற பெயர் மாறன் ஆதிச்சன் என்பதன் திரிபாகவே இருக்க வேண்டும். ஆதித்தன் என்ற சொல் ஆதிச்சன், ஆயிச்சன், ஆய்ச்சன், ஆச்சன் என்று பல வடிவங்களில் சற்றொப்ப 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளிலேயே பயின்றுவருவது கல்வெட்டு ஆய்வாளர்கள் அறிந்த உண்மையாகும்.3 பொழியூர் நாடு என்பது ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திபசேகரபுரம் செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது. (இது பொழிசூழ் நாடு என்றும் வழங்கப்பட்டது.) அவ்வூரைச் சேர்ந்த மாறன் ஆச்சன் அல்லது மாறன் ஆதிச்சன் என்பவனின் குடும்பப் பெயரே மாறச்சன் எனத் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேற்குறித்த சுசீந்திரம் கல்வெட்டில் பல்லவரையன் என்ற பட்டம் மாறனாச்சனுக்கு இருந்திருப்பது தெரிய வருகிறது. ஆய்வேளிர் நாட்டிற்குத் தொண்டை மண்டலத்திலிருந்து திரையன் குலத்தவர்கள் குடிபெயர்ந்து வந்துள்ளார்கள் என்றும், இவர்கள் வேளாளர் குலப் பிரிவினராக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர் பார்வதிசேகரபுரச் செப்பேட்டுக் குறிப்புகளிலிருந்து (வரி. 67-73) ஊகிக்க முடிகிறது.4 சான்றோர் குலத்தவரின் பல்லவரையச் சான்றார் என்ற பிரிவு இலங்கையில் இருந்துள்ளது. சான்றோர் சமூகத்தின் இடைமட்ட, கீழ்மட்ட அடுக்குகளைச் சேர்ந்தவர்கள் பல்லவராயன் பட்டம் பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது. மாறனாச்சன் இத்தகைய – பள்ளிச் சான்றார் அல்லது கள்ளச் சான்றார் – பிரிவினராக இருக்கலாம்.

அனந்த பத்மநாபனைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட பிராந்தன் சாணான் என்ற பெயர் ஏளனமான பொருளுடையது என்றும், பிராந்தன் என்ற சொல் கிறுக்கன் என்ற பொருள்படும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பிராந்தன் என்ற பெயர் ஒரு வஞ்சப் புகழ்ச்சியாக (பழிப்பது போலப் புகழ்தல்) மகேந்திரப் பல்லவனுக்கு உரிய அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டது உண்மையே. அதாவது, மாத்தி யோசிப்பவன் (வித்தியாசமாகச் சிந்திப்பவன்) என்ற தற்போதைய அவசர யுகத் தமிழில் சொல்வது போன்ற பொருளில் இப்பட்டப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், பராந்தகன் என்ற பெயர் மாற்று அரசர்களுக்கு எமன் என்ற பொருளில் பாண்டிய மன்னர்களிடையேயும், சோழ மன்னர்களிடையேயும் வழங்கியுள்ளது.5] ஜடில பராந்தக நெடுஞ்செழியன், பராந்தக சோழன் என்ற பெயர்கள் வரலாற்று ஆர்வலர்கள் அறிந்தவையே. சோழ அரச குடும்பத்தில் மண உறவு கொண்ட மழவர் குலப் பெண்மணியான செம்பியன் மாதேவிக்குப் பராந்தகன் மாதேவடிகள் என்ற பட்டப்பெயர் உண்டு. இப்பெயர் சில கல்வெட்டுகளில் பிராந்தகன் மாதேவடிகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.6 எனவே, பிராந்தகன் என்ற பெயர் அனந்த பத்மநாபனுடைய குடும்பப் பெயராகத் தொடர்ந்து வந்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

சாணான் என்ற சொல் சான்றான் என்ற சாதிப் பெயரின் பேச்சு வழக்குத் திரிபே ஆகும். கி.பி. 10, 11, 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் ஈழச் சான்றான், இடைச் சான்றான், தலைவாய்ச் சான்றான், பார்ப்பாரச் சான்றான் போன்ற பல சான்றார் சாதிப் பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. பார்ப்பாரச் சான்றான் என்பது பிராம்மணர் குலப் பிரிவு அன்று. சான்றார் குலப் பிரிவே.7 மணவாளக்குறிச்சி பெரிய குளக்கரை எழுத்திட்டான் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள முதல் இராஜராஜ சோழனின் கி.பி. 1012ஆம் ஆண்டுக் கல்வெட்டில் வரி 15-16இல், “இவ்வழிவைப் பாப்பார சான்றாரேய் காத்தூட்டுவது இதன்றென்னி லைங்கழைஞ்சட்டுவிதாகவும்” என்ற வாசகம் உள்ளது. இவர்கள் நீர்ப்பாசனப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

சான்றார் என்ற சொல் சாதிப் பெயராகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும், ஈழவர் சமூகத்தில் ஒரு சாதிப் பட்டமாகவும் (சாந்நார்) பயன்படுத்தப்பட்டு வருவது பலரும் அறிந்த ஒன்றே. கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சேர்ந்த நெல்லை மாவட்டம் கீழப்பாவூர்ச் செப்பேடு ஒன்றில் அச்செப்பேட்டுக்குரியவர் பெயர் வேலன் சாணான் என்றே குறிப்பிடப்படுகிறது. இவர்கள் சான்றார் சாதியினரே ஆயினும், நாடாள்வார் என்ற பட்டம் புனைவதற்கு அனுமதிக்கப்படாத பிரிவினர்களாக இருந்திருக்க வேண்டும். அதாவது, சான்றார் பட்டம் பெற்றுச் சான்றார் சாதியினுள் ஈர்க்கப்பட்ட பள்ளி வன்யர் அல்லது கள்ளர் குலப் பிரிவினராகவும் இருக்க முடியும். இத்தகையோர் சோழர் ஆதிக்க காலத்தில் இப்பகுதியில் குடியேறிய படைப் பிரிவினருடன் மண உறவுகொண்டு உருவான வம்சத்தவராக இருக்கவும் வாய்ப்புள்ளது.

இனி, மலையான் சான்றார் அல்லது சேதிராயச் சான்றார்8 வரலாறு குறித்து ஊகிப்பதற்கு வசதியான குறிப்பு காலின் மெக்கன்சி சுவடிகளில் (சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி எண்: டி 2865) உள்ளது:

பாலக்காட்டு ராசாவானவன் ஒரு எள்வர்ணமாயிருந்த மலச்சியாகிய பாலக்காட்டுக் கமலையின் பேரில் மோகித்து புணர்ந்து அவனுக்கு சாதியீனம் வந்து சத்திரிக்கு பிறம்பா காட்டப்பட்டு பிறித்து மலையன் என்று அழைக்கப்பட்டான். அந்த பட்டம் இது வரைக்கும் தொந்தா சினையாய் நடந்து வருகிறது.

முற்காலத்தில் மலையரசர் எனப்படும் பழங்குடிக் காணிக்காரர்களுடன் மலையான் சான்றார்களுக்கு உறவு இருந்துள்ளது. மலையான் (சேதிராயர்) சான்றா குல இளைஞன் ஒருவனுக்கும், காணிக்காரர் குல கன்னிக்குமிடையில் ஏற்பட்ட நிறைவேறாத காதல் குறித்த வில்லுப்பாட்டு குமரி மாவட்டத்தில் வழக்கிலிருந்துள்ளது.

இது தொடர்பாக நாகர்கோயில் சரலூரில் செந்தீ. நடராசன் அவர்களால் கண்டறியப்பட்ட கி.பி. 1697ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு முதன்மை பெறுகிறது.9 கண்ணன்கரை கிராமத்தைச் சேர்ந்த எம்பெரும் பெரியான் என்பவருக்கு வேணாட்டு அரசர் வீர கேரள வர்மன், குலசேகர நாடான் என்ற பட்டத்தையும் அதிகாரத்தையும் அளித்த குறிப்பு இக்கல்வெட்டில் உள்ளது. குலசேகரன் என்பது குலத் தலைவன் என்ற நேர்ப்பொருளும், சேர அரச குலத் தலைவன் என்ற மறைமுகப் பொருளும் உடைய சொல்லாகும். நாடான் என்பது நாடாள்வான் என்ற சொல்லின் மரூஉ மொழியாகும். கண்ணன்கரை கிராமம் என்பது கள்ளச் சான்றார் பிரிவினர் போன்ற சான்றார் சமூகக் கீழடுக்கினர் நிறைந்து வாழும் ஊர். எனவே, இவ்வூரைச் சேர்ந்த கள்ளச் சான்றார் அல்லது மலையான் சான்றார் பிரிவினர் ஒருவருக்குச் சில அரசியல் நிர்ப்பந்தங்களுக்காகக் குலசேகர நாடான் என்ற பட்டம் கொடுத்துத் தனக்கு வலக்கரம் போன்ற ஓர் உயர் அலுவலராகவும், படைத் தலைவராகவும் வீர கேரள வர்மன் நியமித்துள்ளார். இது ஒரு முதன்மையான சமூக வரலாற்றியல் செய்தியாகும்.

இந்நிகழ்வு நடந்தேறுவதற்கு அரை நூற்றாண்டு முன்பு, கி.பி. 1645ஆம் ஆண்டில் நாகராஜா கோயிலில் உள்ள, தற்போது அனந்த கிருஷ்ணன் சன்னிதி என்று வழங்கப்படுகின்ற நாகர் திருவனந்தாழ்வார் சன்னிதிக்கு முகமண்டபம் ஏற்படுத்தி அம்முகமண்டபத் தூண் ஒன்றில் தம் உருவச் சிற்பம் ஒன்றையும் அமைத்து அதன் கீழ் தமது பெயரையும் ஓர் உள்ளூர்த் தலைமகன் பொறித்து வைத்துள்ளார். அவர் பெயர் குலசேகரப் பெருமாள் கொன்றைமாலை என்பதாகும். கொன்றைமாலை என்பது சான்றோர் குல வீரர்களுக்கு உரியது என்பது பதிற்றுப்பத்து (67:13-181) தெரிவிக்கின்ற செய்தியாகும். கொன்றைமாலை என்ற பட்டப்பெயர் சூடியிருந்ததைப் பார்க்கையில் இவர் இடை நாடார் அல்லது இடைச் சான்றார் பிரிவைச் சேர்ந்தவராகவோ ஆய் வேளிரின் சத்திரிய கிளையைச் சேர்ந்தவராகவோ இருக்க இயலும். (ஆய் வேளிரின் மருமக்கள் வழியினர் வேணாட்டு அரச வம்சத்தில் கலந்திருக்க வேண்டும்.) மேற்குறித்த குலசேகரப் பெருமாள் கொன்றைமாலை என்பவரின் பெயரில் பெருமாள் என்ற அரசபட்டமும் குலசேகரன் என்ற அரசகுலப் பெயரும் இடம்பெற்றிருப்பது புறக்கணிக்க இயலாத ஆதாரம் ஆகும். இவர் குறித்த கல்வெட்டில் ஆளுகின்ற வேணாட்டு அரசர் பற்றியோ ஆட்சி பற்றியோ எவ்விதக் குறிப்பும் இல்லாததிலிருந்து இவர் சுதந்திரமாகக் கோயில் திருப்பணிகள் மேற்கொள்கின்ற அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

குலசேகரப் பெருமாள் கொன்றைமாலையின் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்னர் குமரி மாவட்டத்தில் சாமிக்காட்டுவிளை என்ற ஊரில் வலங்கைச் சான்றோர் குலத்தவராகிய வெங்கலராசன் என்பவர் கோட்டை கட்டிக் குடியேறி வாழ்ந்துள்ளார். அரசமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அவருடைய முழுப்பெயர் வேலம்பாட்டி வெங்கல தேவ மகாராசா என்பதாகும். அவருடைய பூர்விகம் ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு அருகிலுள்ள வேலம்பாட்டி ஆகும். (அப்பகுதியில் வெங்கலராசா கண்டிகை என்ற ஊரும் உள்ளது.) இவருடைய பெயரிலுள்ள வெங்கல என்பது வெண்கலக் கோட்டை கட்டியதால் ஏற்பட்ட புகழ்மொழி எனக் கருதப்பட்டாலும், அது சரியான பொருள்கோடல் ஆகாது. வெங்கல் என்பது வெம்மையான மலை (igneous rock) அதாவது வேங்கட மலையைக் (திருப்பதி) குறிக்கும். இன்றும் ஆந்திரப் பகுதியில் வெங்கல்ராவ் என்ற பெயர் உள்ளதை அறிய முடிகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த தெலுங்குச் சோழர் வம்சத்தவராகிய வெங்கலராஜா திருநெல்வேலிப் பெருமாள் எனப்படும் வெட்டும் பெருமாள் பாண்டிய மன்னனின் படை வீரர்களான குண்டையன்கோட்டை மறவர்களுடன் போரிட்ட நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால் நடுகற் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.10 வெங்கலராஜா இறுதியில் வேணாட்டு அரசர் ராமவர்மாவுடன் (கி.பி. 1555) ஏற்பட்ட மோதலில் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தது மட்டுமின்றி நெல்லைச் சீமையிலுள்ள குரும்பூரில் குடியேறவும், மாறிவரும் அரசியல் சூழல்களை அனுசரித்து நடந்துகொள்ளத் தெரியாமல் வீழ்ந்துபடவும் நேர்ந்தது. வெங்கலராஜா கதை ஒரு சோகக்கதை நாயகனுக்குரிய அவலச் சுவையுடன் கூடிய கதையாக இருப்பதால் வெங்கலராஜன் காவியம் என்ற பெயரிலேயே குமரி மாவட்டச் சான்றோர் பிரிவினர் சிலரிடையே வில்லுப் பாட்டாகப் பாடப்பட்டும் வந்தது.

நாம் மேலே கண்ட கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களின் பின்னணியில் பார்க்கும்போது வலங்கை உய்யக்கொண்டார்கள், இடை நாடார் போன்ற நாடாள்வார் பிரிவுச் சான்றோர் குலத்தவர் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்ட வர்மனுக்கு எதிரணியில் நின்று தம்பிமார்க்கு உதவியாகப் போரிட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. அதே வேளையில் 1697ஆம் ஆண்டில் வீர கேரள வர்மன் சான்றோர் குலத்தின் வேறொரு அடுக்கினைச் சேர்ந்த நாடாள்வார் பட்டம் புனைந்துகொள்ள அனுமதிக்கப்படாதிருந்த கள்ளச் சான்றார் போன்ற பிரிவினரை தமது ஆட்சிக்குச் சாதகமாக திருப்பி அவர்கள் அரசியல் அந்தஸ்தை உயர்த்தியுள்ளார் என்பது எளிதில் ஊகிக்கப்படக்கூடிய உண்மையாகும். இதன் விளைவுதான் மார்த்தாண்ட வர்மன் காலத்தில் அனந்த பத்மநாபனும், மாறச்சனும் வேணாட்டு அரசியலில் முதன்மையான திருப்பங்கள் ஏற்படக் காரணகர்த்தர்களாக இருந்த நிகழ்வு ஆகும்.

சான்றோர் சமூகத்தவரின் உட்பிரிவுகளுக்குள் இருந்த முரண்பாடுகள் பல வரலாற்று நிகழ்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் காரணமாக இருந்துள்ளன. அதே வேளையில் குமரி மாவட்டச் சான்றோர் வரலாற்றில் வேறோர் ஆய்வுச் சிக்கலும் உள்ளது. அனந்த பத்மநாபன் பற்றிய ஆதாரங்கள் தேவையான அளவுக்குக்கூட வரலாற்று ஏடுகளில் இடம்பெறவில்லை. திருவிதாங்கோட்டு சமஸ்தான வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு அனந்த பத்மநாபன் பற்றிய ஆதாரங்கள் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து அரை நூற்றாண்டு காலம் கழிந்தபின்னரும், இது வரலாற்று அறிஞர்கள் பலரது கவனத்தை ஈர்க்காமல் இருக்கின்றது. அனந்த பத்மநாபன் செப்பேடு11 குறித்த விவரங்கள் குமரி மாவட்ட வரலாற்று ஆய்வாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதை ஒரு குடும்ப வரலாறாகவோ ஒரு சாதி உட்பிரிவின் வரலாறாகவோ மட்டும் பார்க்காமல் திருவிதாங்கோடு சமஸ்தான வரலாற்றின் ஒரு பகுதியாகவும் தமிழ்நாட்டுச் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டியது அவசியம். எனவே, இச்செப்புப் பட்டயமும் அனந்த பத்மநாபன் பற்றிய பிற ஆதாரங்களும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அனந்த பத்மநாபன் மார்த்தாண்ட வர்மனுக்குப் போர்க்கலை ஆசான் போலவும் அதாவது பணிக்கன் போலவும் படைத்துணை புரிந்தவராகவும் இருந்துள்ளார் என்பது உண்மை. ஆனால், தளவாயாய் இருந்தவர் அல்லர். அனந்த பத்மநாபன் காலத்திற்கு முன்னரே திருவிதாங்கோடு சமஸ்தானத் தளவாய் பதவிகளில் மறக்குல அகம்படிய நாயர்களும், தமிழ் வேளாளர்களும் இருந்துள்ளனர். ஏறுவாடி ராமையன் மிக விரைவில் எளிய நிலையிலிருந்து உயர்ந்து தளவாய்ப் பதவியை அடைகிறார். தளவாய் ராமையனுக்கும் அனந்த பத்மநாபனுக்கும் சுமுகமான உறவு இருந்திருக்க வாய்ப்பில்லை. அனந்த பத்மநாபனின் மரணம் ராமய்யன் தலைமையிலான நாயர் வேளாளர் சமூகத் தளவாய்களின் கூட்டணித் தூண்டுதலால் நிகழ்ந்ததா என்பது போன்ற விவரங்கள் வெறும் ஊகமாகவே உள்ளன. இவை பற்றி விரிவாக ஆராயப்படுவது அவசியம். அனந்த பத்மநாபனுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரெசிடெண்ட் மெக்காலே, ஜான் மன்றோ போன்றவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பறிபோயினவா அல்லது அதற்கு முன்னரே தர்மராஜா காலத்தில் கைவிட்டுப் போயினவா என்பது போன்ற சிக்கல்கள் உள்ளன.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் படைப்பிரிவுகளின் தன்மை, அவற்றில் எந்தெந்தச் சாதியினர் எத்தனை எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர், திப்பு சுல்தான் படையெடுப்பு, அதையொட்டி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ஆதிக்கம் போன்றவை ஏற்பட்ட பின்னர் இருந்த திருவிதாங்கோடு படைப்பிரிவுகளில் இடம்பெற்றிருந்தவர்களின் சாதிவாரி எண்ணிக்கை போன்றவற்றை முயன்று தேடி ஆராய்ந்தால் இத்தகைய சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். அத்தகைய புதிய தரவுகளின் அடிப்படையில்தான் குமரி மாவட்டச் சான்றோர் சமூகத்தவரின் தொடர்ச்சியான வரலாற்றை எழுத இயலும். குறிப்பாகக் கி.பி. 1820க்குப் பிறகு நிகழ்ந்த தோள்சீலைப் பிரச்சினைக்குச் சான்றோர் சமூக உள் முரண்பாடுகளும், அம்முரண்பாடுகளைப் பிறர் தத்தமது நலன்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் எந்த அளவுக்கு உந்துதலாக இருந்தன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும்.

இறுதியாக, ஆய்வின் அவல நிலையை உணர்த்தும் ஒரு செய்தி: சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மாவட்ட தேவஸ்வம் நீட்டுகள் (ஓலை ஆவணங்கள்) தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டன. கட்டுக்கட்டாக (ஒரு லாரிச் சுமை) வந்து சேர்ந்த அவை இன்றுவரை அட்டவணைப் படுத்தப்படக்கூட இல்லை. சான்றோர் சமூகத்தவருக்குக் குமரி மாவட்ட வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு என்ற உண்மை அண்மைக் காலங்களில் உணரப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கட்டுறுதி உள்ள ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் சரியான தரவுகளுடனும் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.

அடிக்குறிப்புகள்

[1] தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் – பாகம் 3, பகுதி 2, பக். 99-100, தி.நா. சுப்பிரமணியன், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, 1957.

[2] Travancore Archaeological Series, vol 3, part 1, no. 24.

[3] p. 393, Early Tamil Epigraphy, I. Mahadevan, CreA, 2003.

[4] பக். அ-17, பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999.

[5] மாறனாச்சன், சேராந்தக (சேரர்களுக்கு யமனான) பல்லவரையன் என்ற பட்டம் பெற்றிருந்தது ஒப்பிடத்தக்கது.

[6] கண்டாராதித்த தேவர் தேவியார் பிராந்தகன் மாதேவடிகள், திருமழபாடிக் கல்வெட்டு, South Indian Inscriptions, Vol 19, no. 167.

[7] பக். 159, வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113.

[8] சேதிராயச் சான்றார் தொடர்புடைய செப்பேடுகள் இரண்டு கண்டறியப்பட்டுள்ளன. கி.பி. 1500ஆம் ஆண்டுக்குரிய களக்காடு சேதிராயபுரம் செப்பேடு, கி.பி. 1884ஆம் ஆண்டுக்குரிய திருச்செந்தூர்ப் பகுதி கீரனூர் செப்பேடு.

[9] சரலூர் கல்வெட்டும் துளிர்விடும் சில அனுமானங்களும், செந்தீ. நடராசன், பழங்காசு காலாண்டிதழ், இதழ் எண் 13, ஜனவரி 2004.

[10] வெங்கல ராஜா பற்றிய விரிவான கட்டுரை: திண்ணை இணைய இதழ் (http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610267&format=html) 26/10/2006.

[11] தச்சன்விளை கே.பி. வரதராசன் அவர்கள் வசம் இருக்கின்ற செப்பேடு. 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard