அண்மைக் காலமாக புத்தர் சிலைகளும் அரசமரங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை நோக்கி வருவதாக பல குற்றச்சாட்டுகள் அச்சங்கள் தமிழ் ஊடகங்களினால் திட்டமிட்டு மிகைப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள உறவை முற்றாக நிராகரிக்கும் இச்செய்திகள், ஆய்வுகள் பெளத்தம் சிங்கள மக்களின் ஏகபோகமான மதமாகக் காட்டுகின்றனர். மருத்துவ கலாநிதியான எஸ் தியாகராஜா வரலாற்றுத்துறையிலும் பட்டம் பெற்றவர். இவர் தேசம் சஞ்சிகையில் எழுதிய தொடர் கட்டுரையின் சாரம்சத்தை இங்கு பதிவிடுகிறோம். (2003)
._._._._._.
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதச் சின்னங்கள் இருப்பதால் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறியாமை. மாறாகத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கி மு 500 முதல் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பௌத்த மதம் தமிழகத்தின் முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கியது. சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள், பிறப்பினால் மேல் சாதி – கீழ் சாதி எதுவும் இல்லையெனப் போதித்த பௌத்தத்தை இலகுவாக ஏற்றுக் கொண்டனர்.
நாகப்பட்டினம் சூடாமணி விகாரம்: தமிழகத்தில் பௌத்தமதம் தழைத்தோங்கிய மற்றொரு நகரம் நாகப்பட்டினமாகும். பல பௌத்த விகாரைகளைக் கொண்டிருந்த இப்பட்டினம் பிரசித்திபெற்ற சூடாமணி விகாரத்தைக் கொண்டிருந்தது. ஸ்ரீ விஜயத்து மன்னனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த விகாரம் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டு, மூன்று மாடிகளுடன் கோபுர வாசலையும் கொண்டிருந்ததாக லெய்டன் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
தொல்லியல் கண்டுபிடிப்புகள்: சமீப காலங்களில் காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்தமத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குரிய புத்தரின் கற்சிலைகளும், கி.மு.முதலாம் நூற்றாண்டிற்குரிய செப்புத் திருவுருவும் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.
மதுரையில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி எழுத்துக்கள் வரையப்பட்ட பௌத்த மதக்குகைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை யாவும் தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன.
சூடாமணி விகாரத்தின் கோபுரம்: கி.பி.10ஆம் நூற்றாண்டின் பின்னர் பௌத்தம் சிறிது சிறிதாகத் தனது ஆதிக்கத்தை இழந்து 13ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்து இல்லாமலே போய்விட்டது. சூடாமணி விகாரமும் ஆதரிப்பார் இல்லாது அழிவுற்ற நிலையை அடைந்துவிட்ட போதிலும் அதன் கோபுரம் 19ஆம் நூற்றாண்டு வரை உயர்ந்து நின்றது.
17ஆம் நூற்றாண்டின் சீன யாத்திரீகரான லின் கியு, நாகப் பட்டினத்துறையை அடைவதற்கு வெகு தூரத்திலிருந்தே இக்கோபுரத்தைத் தனது கப்பலிலிருந்து காணக் கூடியதாக இருந்ததைப் பதிவு செய்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த சூடாமணி விகாரமும், அதன் கோபுரமும் 1867ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிறிஸ்தவ சங்கத்தினரால் இடிக்கப்பட்டுத் தரை மட்டம் ஆக்கப்பட்டது.
பௌத்த மகாகாவியம்: தமிழ்நாட்டில் பௌத்தமதம் உன்னத நிலையை அடைந்திருந்த காலத்தில் மணிமேகலை, உதயணன் காதை, குண்டலகேசி, நீலகேசி, வீரசோழியம் ஆகிய காப்பியங்கள் தமிழ்ப்பௌத்தப் புலவர்களால் இயற்றப்பட்டன.
மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலைக்கு நிகரான இன்னொரு பௌத்த காவியம் உலகின் வேறெந்த மொழியிலும் இன்றுவரை உருவாகவில்லை என்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழர் நாகரீகத்தின் உச்சநிலையை எடுத்தியம்பும் காவியங்கள் என்றும் மேனாட்டு அறிஞர் அலெயின் டானியலு எடுத்து உரைக்கிறார். (Leidon Copper Plates இராஜராஜ சோழன் 1 வழங்கிய ஆனைமங்கலச் செப்பேட்டுச்சாசனம்.)
இன்று பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் சிங்களவர்களால் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி, உதயணன் காதை, வீரசோழியம் ஆகிய தமிழ்ப்பௌத்த காப்பியங்களுக்கு நிகரான ஒரு பௌத்தமத காவியத்தை இருபத்துமூன்று நூற்றாண்டுகளாகத் தரமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழ் பௌத்தஞானிகள் இயற்றிய பாளி மொழி இலக்கியங்கள்; தமிழகத்தைச் சேர்ந்த பௌத்த ஞானிகளும், துறவிகளும் பௌத்தமத மொழியான பாளி மொழியைப் பயின்று, அந்த மொழியிலேயே பல பௌத்த சமய இலக்கியங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். (இராசவேலு, க. திருமூர்த்தி, கோ. தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், சென்னை 1995.)
தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய பௌத்த கலாச்சாரத் தொடர்புகளை எடுத்துரைக்கும் உபாசக ஜனலங்கார (Upasaka Janalankara) என்ற பாளி நூலில் தமிழகத்தின் பௌத்த துறவிகளைப் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாளி இலக்கியங்களைப் பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. (தனபாக்கியம், ஜி. இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக்கலாச்சாரமும், சென்னை 2001. பக. 256-258.)
புத்தகோசர்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளிமொழியில் இயற்றினார்.
புத்த தத்தர்: உறையூரைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர், தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் மதுரத்த விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம் ஆகிய பௌத்த நூல்களை எழுதியுள்ளார். பின்னர் இவர் இலங்கைக்கு வந்து தங்கி இருந்த காலத்தில் ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம், ஆகிய நூல்களை இயற்றியபின் திரும்பி காவிரிப்பூம்பட்டினம் சென்றடைந்தார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் காளிதாசரின் பௌத்தப் பெரும்பள்ளியில் தங்கி அபிதம்மாவதாரம் என்ற காவியத்தை உருவாக்கினார். புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்தசங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆச்சாரிய தருமபாலர்: கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்தவர் ஆச்சாரிய தருமபாலர். இவர் இலங்கைக்கு வந்து அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ் உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து திரிபிடகத்திற்கு பதினான்கு உரைகளை எழுதியுள்ளார். ஆச்சாரிய தருமபாலர் பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்தவராவார். கந்தவம்சம் என்னும் நூல் இவர் இயற்றிய பௌத்த நூல்களை பட்டியலிட்டுச் சொல்கிறது.
அநிருத்த தேரர்: பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர். இவர் எழுதிய அபிதர்மார்த்த சங்கிரகம் என்ற பாளி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும்; படித்துப் பேணப்பட்ட பிரபல பௌத்த காவியம். பரமத்த வினிச்சயம், காமரூபப் பரிச்சேதம் ஆகியன இவர் எழுதிய மற்ற நூல்களாகும்.
காஸ்யப தேரர்: சோழநாட்டில் காவிரிப் பட்டினத்தைச் சேர்ந்த காஸ்யப தேரர் விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பௌத்த தர்ம உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பேணப்பட்ட இலக்கியங்களே.
இவ்வாறு தமிழ்நாட்டின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த ஞானிகளும், துறவிகளும் காலத்திற்குக் காலம் இலங்கைக்கு வந்து இலங்கையின் தேரவாத பௌத்த கோட்பாடுகளை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்த சம்பவங்களும், அதே போன்று இலங்கையின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த தேரர்கள் தமிழகத்தில் பரவியிருந்த மகாயான பௌத்தத்தை ஆதரித்து வந்த செய்திகளும் இலங்கையிலுள்ள பௌத்த பாளி நூல்களில் பொதிந்து கிடக்கின்றன.
இன்று இலங்கையில் பௌத்தம் சிங்கள மக்கள் கடைப்பிடிக்கும் மதமாக இருப்பினும், சரித்திர காலத்தில் பௌத்தம் தமிழ் மக்களின் முக்கியமான மதங்களில் ஒன்றாகவே இருந்தது. (சீனி. வேங்கடசாமி. பௌத்தமும் தமிழும், சென்னை 1978 )
கி.மு.400 முதல் கி.பி.600 வரை ஆயிரம் ஆண்டுகளாக பௌத்தம் தமிழகத்தில் பிரபல்யமான ஒரு மதமாக இருந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டின் பின்னரே சைவசமயக் குரவர்களும், நாயன்மார்களும் தோன்றி பௌத்தத்தை தமிழகத்திலிருந்து முற்றாக இல்லாதொழித்தனர்.
1. இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட கி.மு.200ம் ஆண்டிற்குரிய “பௌத்த சக்கரம்” என்றழைக்கப்படும் நாணயங்கள், தமிழகத்தின் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களே எனப் பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் இனம் காணுகின்றார்கள்.(Codrington,H.W. Ceylon Coins and Currency, Colombo, 1924)
2. கி.மு.300ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் கொற்கைப் பாண்டியர்கள் யானையைத் தங்கள் அரச சின்னமாகக் கொண்டிருந்தது அவர்களது பௌத்த மத சார்பைக் குறிப்பதாக நாணய இயல் வல்லுநர் லோவந்தால் கருதுகிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938 )
கி.பி.25ஆம் ஆண்டில் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை ஆரம்பித்த பின்னரே தங்கள் சின்னத்தை மீனாக மாற்றினார்கள். மீன் சின்னமும் பௌத்தமதச் சின்னமே என லோவந்தால் தெரிவிக்கிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938)
3. தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு இணையான ஒரு பௌத்த மத காவியம் இன்றுவரை உலகில் வேறு எந்த மொழியிலுமே உருவாகவில்லை என்பதே பல மேலைநாட்டு அறிஞர்களின் அபிப்பிராயம்.(Alain Danielou. Introduction to Maniekhalai The Dancer with the Magic Bowl, New York, 1989)
4. காவிரிப் பூம்பட்டினத்திலும், நாகைப் பட்டினத்திலும் நடைபெற்ற அகழ்வுகளில் காணப்பட்ட கிறீஸ்தவ காலத்திற்கு முற்பட்ட, பௌத்த விகாரங்களின் அடித்தளங்களும், பௌத்த ஸ்தூபிகளும், கருவூலங்களும், புத்தபிரானின் உருவச் சிலைகளும், தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக்காட்டுகின்றன. (நடன காசிநாதன்: பூம்புகாரும் அகழ்வாய்வும், சென்னை, 1999.)
இவ்வாறே கந்தரோடை அகழ்வுகளில் காணப்பட்ட பௌத்த மதச் சின்னங்கள் அக்கால மக்கள் மேற்கொண்ட மதச்சார்புகளை எடுத்துக் காட்டுகிறதேயன்றி வேறேதும் அர்த்தமில்லை. கந்தரோடையில் பௌத்த மதச் சின்னங்கள் காணப்படுவதால் அவ்விடத்தில் ஒரு காலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அபத்தமான வாதமாகும்.